புத்ராஜெயா-
பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ள 'பத்மாவத்' (பத்மாவதி) திரைப்படம், இஸ்லாமிய மத உணர்வை தூண்டக்கூடியதாக அமைந்துள்ளதால் அப்படத்திற்காக தடை நிலைநிறுத்தப்பட்டுள்ளது என தேசிய தணிக்கை வாரிய (எல்பிஎஃப்) தலைவர் முகமட் ஸம்ரி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
இப்படம் இங்கு மத ரீதியிலான உணர்வுகளை தூண்டக்கூடியதாக அமைந்துள்ளதால் அதனை பாதுகாக்கும் பொருட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு படத்தை தணிக்கை செய்யும்போது அதன் கதை நகர்வு, கதாபாத்திரங்கள், காட்சிகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இஸ்லாமிய மத உணர்வுகளை தூண்டக்கூடியதாக இப்படத்தின் கதை நகர்வு அமைந்துள்ளதே இப்படத்திற்கான தடை விதிப்புக்கு முதன்மை காரணம் ஆகும்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய மத தலைவர் சுல்தான் அலாவுதீன் கதாப்பாத்திரம் எதிர்மறையான அறநெறிகளைக் கொண்டதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதாப்பாத்திரம் இங்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதோடு பார்வையாளர்களின் எதிர்ப்புக்கும் ஆளாக்கப்படும் என்றார் அவர்.
தேசிய தணிக்கை வாரியக்குழு இருமுறை இப்படத்தை பார்த்த பின்னர் அதனை தடை செய்யும் முடிவுக்கு வந்தது என ஸம்ரி கூறினார்.
கடந்த 26ஆம் தேதி உலகமெங்கும் திரையீடு கண்ட 'பத்மாவத்' திரைப்படத்திற்கு எல்பிஎஃப் தடை விதித்ததை எதிர்த்து அதன் விநியோகஸ்தர் நிறுவனம் உள்துறை அமைச்சின் மேல் முறையீடு செயல்குழுவிடம் முறையீடு செய்திருந்தது.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சஹிட் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment