Sunday 27 September 2020

மஇகாவுக்கு பாடம் புகட்ட நினைத்தவர்கள் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டனர் – டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மஇகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் இன்று சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளனர் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவின் மீது அதிருப்தி கொண்ட இந்திய சமுதாயம் மஇகா வேட்பாளர்களை தோல்வியடைச் செய்தது. அந்த அரசியல் சுனாமியில் வீழ்த்தப்பட்டவர்களில் துன் ச.சாமிவேலுவும் ஒருவர் ஆவார்.

மஇகாவின் மீது கொண்ட கோபத்தால் துன் சாமிவேலுவை தோற்கடித்த சுங்கை சிப்புட் வாக்காளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித பலனையும் அனுபவிக்கவில்லை என்பதை அங்கு சென்று கண்டபோது நானே உணர்ந்திருக்கிறேன்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை வந்து சந்திக்காத நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தெரியாமல் மீண்டும் மஇகாவை தேடி வருகின்றனர்.

இத்தொகுதியில்  மஇகா தோல்வி கண்ட போதிலும் அங்குள்ளவர்களுக்கு சேவையாற்ற ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எங்கே மாயமானார்? என்பது தெரியவில்லை என்று இங்கு நடைபெற்ற கேபிஜே கூட்டுறவு கழகத்தின் விஸ்மா துன் சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.


இந்தியர்களுக்கான மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை கேபிஜே முன்னெடுக்கும்- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர்கள் சொந்த வீடுகளை கொண்டிருக்கும் வகையில் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சு வகுத்துள்ள வீட்டுடமை திட்டங்களில் பங்கு பெறுவதற்கு தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பரிந்துரை செய்யும் என்று அக்கழகத்தின் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

1977ஆம் ஆண்டு துன் ச.சாமிவேலு தலைமைத்துவத்தின் தோற்றுவிக்கப்பட்ட கேபிஜே எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பல வீட்டுடைமை திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சொந்த வீடுகளை பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை இக்கூட்டுறவுக் கழகம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, சுங்கை சிப்புட்டில் உள்ள தாமான் துன் சம்பந்தன், சிரம்பானில் தாமான் திவி ஜெயா, காஜாங்கில் தாமான் புக்கிட் முத்தியாரா, பகாங், ரவூப்பிலும் , பாடாங் செராயிலும், தெலுக் இந்தான், பத்து 6 பகுதியிலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஜொகூர், ஸ்கூடாயிலும், சுங்கை சிப்புட்டில் கிந்தா செளஜானா வீடமைப்புத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைந்துள்ள இதுபோன்ற வீடமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ள இக்கூட்டுறவுக் கழகம் மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை முன்னெடுக்கும் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சின் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையிலும் களமிறங்கவுள்ளது.

மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அது சொந்த வீடுகளை கொண்டிராத இந்தியர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்று இன்று கேபிஜே கூட்டுறவுக் கழகத்தி  விஸ்மா துன் ச.சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், கேபிஜே கூட்டுறவு கழகத்தின் செயலாளர் டத்தோ கோபாலகிருஷ்ணன் உட்பட அதன் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


பாடலாகவும் இசையாகவும் எஸ்பிபி வாழ்ந்து கொண்டிருப்பார்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்,

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு ஈடுஇணையற்றது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது  இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் நிலவே வா…..ஓராயிரம் நிலவே வா….என்னும் பாடலின் மூலம்  தன் திரை இசை பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பாலா பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின்  மனதை கொள்ளை கொண்டிருந்த நிலையில் மீண்டு வருவார் என்று அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த வேளையில் மீளாத்துயில் கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி்.பியின் திடீர் மரணம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 16 மொழிகளில்  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மக்களைத் தன் வசீகர குரலால்  கட்டிப் போட்ட எஸ்.பி.பியின் குரலை இனி நாம் கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

1946இல் பிறந்து 1970களில் இசைப் பயணத்தை  தொடங்கிய  எஸ்பிபி மலேசியாவிற்கு பலமுறை கலைநிகழ்ச்சிகளை படைக்க வந்துள்ளார். எஸ்.பி.பி-இன் பாடல்கள் என்றால் உயிரோட்டமாக இருக்கும் என்பதை நான் மட்டுமன்றி பலரும் அறிவர். 1980களில் இசைஞானி இளையராஜா இசையில் சுமார் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபி இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். எஸ்பிபியின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். எஸ்பிபியின் தங்கை எஸ்பி சைலஜா, மகன் எஸ்பிபி சரண், மகள் பல்லவி ஆகியோரும் சிறந்த பாடகர்களாவர் என்றால்  அது மிகையில்லை.

நான்கு தலைமுறையின் உன்னத கலைஞர் இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் அதனை ஏற்று கொள்ள மறுக்கிற்து. அவரின் உடலுக்குதான் மரணமே தவிர அவரின் குரலுக்கு அல்ல. அவர் நம்மோடு பாடலாகவும் இசையாகவும் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார். 

இந்த வேளையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாகவும்  மலேசிய ம.இ.கா, மலேசிய இந்தியர்கள், மலேசிய கலைஞர்கள் சார்பில் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இரங்கல் குறிப்பில்  குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி காணும் தொகுதிகளில் மஇகா போட்டியிடாது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

லிங்கா

சுங்கை சிப்புட்- 

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறலாம் என ஊகிக்கப்படும் நிலையில் தோல்வி காணக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிடாது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்தார்.

கடந்த காலங்களில் தோல்வி காணக்கூடிய சாத்தியங்கள் இருந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மஇகா போட்டியிட்டு தோல்வியை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.

ஆனால், இனி வரும் காலம் அப்படி இருக்காது. கூட்டணி கட்சிகளின் முடிவுக்காக மஇகா இனி தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காது.

தோல்வி காணக் கூடும் என சாத்தியகூறுகள் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகள் மஇகாவுக்கு ஒதுக்கப்படுமேயானால் அதை கட்சி ஏற்றுக்கொள்ளாது.இனி வெற்றி பெறுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு மஇகா செயல்படும் என சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் வேலை வாய்ப்பு திட்ட நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

Friday 25 September 2020

பாடும் நிலா-வின் மூச்சு ஓய்ந்தது- மரணித்தார் எஸ்பிபி

சென்னை-

தமிழ் துறையுலகில் பாடும் நிலவாக புகழ்பெற்று விளங்கி வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மரணமடைந்தார்.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பால் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே நேற்று உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் இன்று பிற்பகலில் அவரது உயிர் பிரிந்தது.

திரை இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 15 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தியை அடுத்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.

Thursday 24 September 2020

மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு; பங்கேற்று பயன் பெறுக! - டத்தோஶ்ரீ சரவணன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்- 

மனிதவள அமைச்சு சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண மக்கள் இனி மஇகா அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்விலும் கலந்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

சொக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னமும் உரிய தீர்வு காண முடியாமல் இந்திய சமுதாயத்தினர் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாகவே மனிதவள அமைச்சின் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடத்தப்படும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பொதுமக்கள் குறிப்பாக இந்திய சமுதாயத்தினர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று இன்று முதல் நாளாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மஇகா  துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

இன்றைய நிகழ்வில் 100க்கான பொதுமக்களுக்கு உயர்கல்வியை முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டத்தோஶ்ரீ சரவணனும் மனிதவள அமைச்சின் அதிகாரிகளும் தெளிவான விளக்கங்களை வழங்கினர். 



மஇகாவை சாடுவதை நிறுத்துங்கள்; காமாட்சிக்கு உஷா நந்தினி எச்சரிக்கை

கோ. பத்மஜோதி

கோலாலம்பூர்-

2 ஆண்டுகளுக்கு முன்பே தம்மை அவதூறாக பேசியவரை அப்போதே தண்டிக்காமல் அவ்விவகாரத்தை இப்போது அரசியல் சர்ச்சையாக்க முற்படுவதை சபாய் சட்டமன்ற உறுப்பினர் திருமதி காமாட்சி துரைராஜு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் மகளிர் பிரிவுத் தலைவி திருமதி உஷா நந்தினி வலியுறுத்தினார்.

பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுவதை  மஇகா மகளிர் பிரிவு ஒருபோதும் அனுமதிக்காது. பெண்களை இழிவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட  வேண்டியவர்கள் தான். திருமதி காமாட்சி துரைராஜு எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் மீது அவதூறு பரப்பப்படுவதையும் இழிவாக பேசுவதையும் மஇகா மகளிர் பிரிவு ஏற்காது. 

ஆனால் அதற்காக மஇகாவையும் மகளிர் பிரிவையும் தவறாக பேசுவதை நாங்கள்ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். 

தன்னை இழிவுப்படுத்தி பேசியவரை தண்டிப்பதற்குரிய வழிவகையை தேடாமல் மஇகா  மகளிரை இழிவாக பேசுவதுதான் ஒரு மாண்புமிகுவின் மாண்புக்குரிய அழகா?

பெண்களை இழிவுப்படுத்தும் அநாகரீகச் செயல் மஇகாவில் ஒருபோதும் அனுமதிப்படாது.  இன்று பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் காண்பதில் அடித்தளமிட்டதில் மஇகாவுக்கு பெரும் பங்குண்டு

பெண்கள் கல்வி உயர்ந்தவர்களாகவும்  பொருளாதார மேம்பாட்டிற்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்  உயர்மட்ட பதவி வகிப்பதற்கும் வித்திட்டது மஇகா தான். அதனை மறந்து காமாட்சி துரைராஜு பேசக்கூடாது.

தனிநபர் ஒருவரின் அநாகரீகச் செயலை கட்சியுடன் இணைத்து தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனையும் மகளிர் பிரிவையும் சாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை அவதூறாக பேசியவரை தண்டிக்க சட்ட நடவடிக்கை எடுங்கள்; அதை விடுத்து கட்சியை சீண்டினால் சட்டம் உங்கள் மேல் பாயும் என்று மஇகாவை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமதி காமாட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார் திருமதி உஷா நந்தினி.

Wednesday 23 September 2020

ஆட்சி அமைக்க மெஜாரிட்டி உள்ளது - அன்வார்

கோலாலம்பூர்-

புதிய அரசாங்கத்தை அமைக்க தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான நடப்பில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தமக்கு பெரும்பான்மை இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

Monday 21 September 2020

மக்கள் நல உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

கோத்தா கெமுனிங்-

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேன்டும் எனும் நோக்கில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் மக்கள் நல உதவித் திட்டங்கள் விளக்கமளிப்பும் பதிவு நடவடிக்கையும் நடைபெற்றது.

நேற்று இங்குள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தின் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு சார்புடைய பல்வேறு இலாகாக்களின் அதிகாரிகள் நேரடியாக வந்து மக்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வு குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு உதவித் திட்டங்களை  அமல்படுத்தியுள்ள போதிலும் இன்னும் பெரும்பாலானோர் அந்த உதவித் திட்டங்களை அறியாமலே உள்ளனர்.

குறிப்பாக பி40 வர்க்கத்தினருக்கு இந்த உதவித் திட்டங்கள் அவசியமானது என்ற போதிலும் வேலை பளு காரணமாக பலர் இத்தகைய உதவித் திட்டங்களை நழுவ விடுகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் விளக்கமளிப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உதவித் திட்டங்கள் குறித்த  விளக்கம் பெற்றதோடு தகுதியானவர்கள் அந்த உதவித் திட்டங்களில் பதிவு செய்து கொண்டனர் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஒரு சாரார் மட்டும் கலந்து கொள்ளாமல் மூவின மக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்று அவர் சொன்னார்.

ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP) , சமூக நல உதவி இலாகா (JKM), இ-காசே (E kasih) போன்ற மத்திய அரசின் உதவிகளும் சிலாங்கூர் மாநில குடிமக்கள் அறவாரியம் (YAWAS), சிறு வியாபாரிகளுக்கான புளூபிரிண்ட் திட்டம் (Blueprint), பரிவு மனை திட்டம் (Rumah Prihatin), மைசெல் (mySel),  முதியோர் பிறந்தநாள் பற்றுச்சீட்டு திட்டம் )SMUE), பெருநாள் கால பற்றுச்சீட்டு பதிவு திட்டம் (JSP)  உட்பட பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.

இதர படங்கள்:












‘ஹலால்’ முத்திரை குத்தப்படாதது ரத்தம் மட்டுமே- கணபதிராவ்

 ரா.தங்கமணி

கோத்தா கெமுனிங்-

ஓர் உயிரை காப்பாற்ற தானமாக வழங்கப்படுகின்ற ரத்தத்தில் மட்டுமே மதம்,சமய வேறுபாடுகளை கடந்து மனிதநேயம் போற்றக்கூடியதாக திகழ்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

நாம் ஒருமுறை வழங்கக்கூடிய ரத்த தானம் மூன்று பேரின் உயிரை காக்கக்கூடும் என்று சொல்கின்றனர். ரத்தத்திற்கு மட்டுமே மத, சமய வேறுபாடு சாயம் பூசப்படவில்லை.

குறிப்பாக ‘ஹலால்’ முத்திரை குத்தப்படாத ஓர் உயிர் காக்கும் கவசமாக விளங்குகின்ற ரத்தத்தை தானமாக வழங்க மக்கள் முன்வர வேண்டும். ஓர் உயிரை காக்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. அதற்கான சிறந்த வழிகாட்டியே ரத்ததானம் ஆகும்.

தற்போது மத்திய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழல் விபத்தில் சிக்குபவர்களுக்கும் உடனடியாக ரத்தம் தேவைபடுவோருக்கும் ஆபத்தானதாக அமைந்துள்ளது.

ஆதலால் பொதுமக்கள் ரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும். தங்களது இடங்களில் நடைபெறும் ரத்ததான முகாம்களில் பங்கேற்று ரத்த தானம் வழங்குவதை கடப்பாடாக கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்த ரத்ததான முகாமை ஏற்பாடு செய்த வேதாஸ் இந்திய உண்வகத்தினரை  வெகுவாக பாராட்டுவதாக அவர் மேலும் சொன்னார்.


Thursday 17 September 2020

தப்பு மேளம் இசையை முன்னெடுக்கும் தாமான் ஶ்ரீ மூடா, செந்தோசா இளைஞர்கள்

ரா.தங்கமணி

கிள்ளான் -

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான தப்பு மேளம் (பறை இசை ஆட்டம்) கலை முன்னெடுத்து வருகின்றனர் தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா இளைஞர்கள்.

பழைமை வாய்ந்த இந்த தப்பு  மேளம் கலையை பெரும்பாலானோர் மறந்து விட்ட நிலையில் அக்கலை போற்றி பாதுகாக்கும் முயற்சியில் களம் கண்டு வருகின்றனர் பாகமதிவாணன் தலைமையிலான குழுவினர்.

தாமான் ஶ்ரீ மூடா, தாமான் செந்தோசா பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி தப்பிசை குழுவை உருவாக்கி தற்போது இவ்வட்டாரத்தில் பிரபல இசை குழுவாக உருவெடுத்து வருவதாக அவர் சொன்னார்.

ஆலய திருவிழா, கலை நிகழ்வுகள் என பல இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தப்பு மேளம் வாசிக்க அழைப்புகள் வருகின்றன. இது தங்களின் குழுவை மேலும் வலுப்பெறச் செய்கிறது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்கின்றனர் என்று பலர் குறை கூறுகின்றனர். ஆனால் எங்களின் பாரம்பரிய இசையை மீட்டெடுக்கும் முயற்சிக்கு பெரும்பாலானோர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

திருவிழா உட்பட பல சமய நிகழ்வுகளுக்கும் எங்களை தாராளமாக அழைக்கலாம் என்று கிள்ளான், ஓம் ஶ்ரீ உத்திர காளியம்மன் தப்பு மேளம் குழுவின் தலைவர் பாகமதிவாணன் கேட்டுக் கொண்டார். 

தொடர்புக்கு; 016- 9464088 (மதி), 016- 5274700 (ரகு)

LTTE விவகாரம்: தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதே தெரியாதபோது எவ்வாறு ஆட்சேபிக்க முடியும்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

2014இல் தீவிரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை 3 மாதக் காலத்திற்குள் நீக்க விண்ணப்பித்திருக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்கப்பட முடியாத ஒன்றாகும் என்று டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் கருத்துரைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மலேசியாவில் எவ்வித அசம்பாவிதத்தையும் தீவிரவாதத் தாக்குதலையும் தொடுத்ததில்லை. அதன் அடிப்படையில் அவ்வியக்கம் தீவிரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தன்னை கடந்தாண்டு கைது செய்யும் வரை தெரியாது.

அதன் அடிப்படையிலேயே இவ்வாண்டு சொஸ்மா சட்டத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதப் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நீதிமன்றத்தை நாடினேன்.

ஆனால் 2014இல் தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்குள் ஆட்சேபம் செய்திருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

தீவிரவாதப் பட்டியலில் இவ்வியக்கம் இணைக்கப்பட்ட தகவலே தெரியாத நிலையில் எவ்வாறு அதனி எதிர்த்து ஆட்சேபம் செய்ய முடியும்? என்று சுங்கைம ்சிப்புட்டைச் சேர்ந்த பாலமுருகன் கேள்வி எழுப்பினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும்  இனிவரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை காரணம் காட்டி யாரும் சிறைவாசம் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கில் தன்னுடைய சட்டப் போராட்டம் தொடரும் என்று பாலமுருகன் குறிப்பிட்டார்.

தீவிரவாதப் பட்டியலிலிருந்து LTTE நீக்கம்: மனு தள்ளுபடி

கோலாலம்பூர்-

தீவிரவாதப் பட்டியலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை (LTTE) நீக்குமாறு டாக்சி ஓட்டுநரான வீ.பாலமுருகன் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014இல்  தீவிரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைக்கப்பட்டதை எதிர்த்து 3 மாதங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தற்போது அதனை நீக்குமாறு கோருவது ஏற்புடையதாகாது என்பதால் இந்த மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி மரியானா யாஹ்யா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர் எனும் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுதலையான பின்னர், பாலமுருகன் இவ்வழக்கை தொடர்வதட்கு உரிமையில்லாதவர் என இவ்வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர் ஒமார் குட்டி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனும் அடிப்படையில்  பாலமுருகன் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்களின் பொருளாதார ஈடுபாடு நாட்டை மீட்சியுறச் செய்யும்- டத்தோஶ்ரீ அஸாலினா

ரா.தங்கமணி

படங்கள்: வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலும் அதனால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கலையவும் பெண்கள் தொழில்துறைகளில் கால்பதிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் வலியுறுத்தினார்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதேபோல் வர்த்தக, தொழிலியல் துறைகளிலும் பெண்கள்  சாதனை புரிய வேண்டும்.

தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் மலேசியாவின் பொருளாதாரமு  பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதிலிருந்து நாடு மீண்டு வர பெண்களும் சொந்த வர்த்தக, தொழில் துறையில் ஈடுபட வேண்டும். இத்தகைய முயற்சி தங்களின் குடும்ப வருமானத்தை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் வழிவகுக்கும்.

பெண்கள் வர்த்தகத் துறையில் ஈடுபட விரும்பினால் அதற்கு வழிகாட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் துணை புரிகின்றன. அமானா இக்தியார், தெக்குன் போன்ற மைக்ரோ கடனுதவி திட்டங்களின் வாயிலாகவும் பெண்கள் தங்களது வர்த்தக வாய்ப்புகளுக்கு அடித்தளமிடலாம். 

ஏற்கெனவே பல்வேறு வர்த்தகத் துறைகளில் ஈடுபடும் பெண்கள் தங்களை இன்னும் மேம்படுத்ததிக் கொண்டு வர்த்தகத்துறையில் சாதனை புரிபவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்கள் சம்மேளனம் (மைக்கி) வழிகாட்டும் நடவடிக்கையை மேற்கொள்வது வரவேற்கக்கூடியதாகும் என்று அண்மையில் மைக்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண் தொழிலியல் முனைவர்களுக்கான ராக்கான் மைக்ரோ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியப் பெண்களையும் சிறந்த தொழில் முனைவர்களாக உருமாற்றும் மைக்கியின் நடவடிக்கைக்கு இந்தியப் பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதும் ராக்கான் மைக்ரோ திட்டத்தின் வழி அவர்களை வர்த்தகத் துறையில் ஊக்குவித்து மேலும் சிறந்தவர்களாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மைக்கியின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிரும் கலந்து கொண்டனர்.


ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘சொல்லி தொல’

கோலாலம்பூர்-

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 5, இரவு 8 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் சொல்லி தொல, புத்தம் புதிய உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடரைக் கண்டு களிக்கலாம். 

சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதே நேரத்தில் ஒளியேறும்.

உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீன்தாஸ் இயக்கத்தில் மலர்ந்த இவ்வுள்ளூர் நகைச்சுவைத் தொடர் 20 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. 

இத்தொடரில் யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின்,நவீன் ஹோ மற்றும் லோகன் உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். நகைச்சுவையுடன் கலந்த அமானுஷ்யக் கூறுகளை உள்ளடக்கிய சொல்லி தொல தொடர் நிச்சயமாக ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தனது அகால மரணத்திற்குப் பிறகு ‘ஆவிகளின் பரிமாணத்தில்’ (spirit dimension) நுழையும் இளைஞர் யுவாவைப் (யுவராஜ்) பற்றிய சுவாரஸ்சியமானக் கதையை இத்தொடர் சித்தரிக்கின்றது. 

பூமியில் வாழும் மனிதர்களைப் போலவே ஆவிகளுக்கும் ஓர் உலகம் இருப்பதைக் கண்டறிந்தப் பின் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். யுவா மற்றும் அவரது பிற வேடிக்கையான பேய் நண்பர்கள் எதிர்நோக்கும் சோதனைகள் மற்றும் இன்னல்கள் மயானத்தை மையமாகக் கொண்ட முக்கியக் கதையோட்டத்தை (crux of the plot) உருவாக்குகின்றன.

அனைத்து வாடிக்கையாளர்களும் எப்போது வேண்டுமானாலும் சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்களை ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.

உள்ளூர் அழகிப் போட்டியான ‘அழகின் அழகி 2020’-ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பு

கோலாலம்பூர்,

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 13, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் ​​அழகின் அழகி 2020, புத்தம் புதிய உள்ளூர் தமிழ் அழகிப் போட்டியைக் கண்டுக் களிக்கலாம்.

உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரிகிறது, அழகின் அழகி 2020. புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் மார்ட்டின் ஆர். சந்திரன் இயக்கத்தில் மலர்ந்த அழகின் அழகி 2020, 9  புத்தம் புதிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பிரபல உள்ளூர் திறன்மிக்க கலைஞர்களான பால கணபதி வில்லியம் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி இப்போட்டியைத் தொகுத்து வழங்குவர். அதுமட்டும்மின்றி, பங்குப்பெரும் 20 போட்டியாளர்களின் வழிகாட்டுனராக (mentor) சங்கீதா கிருஷ்ணசாமி திகழ்வார்.

போட்டியாளர்கள் நான்கு தகுதிச் (எலிமினேஷன்) சுற்றுகளைக் கடந்துச் செல்ல வேண்டும். தகுதிப் பெற்ற சிறந்த பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்ப்பர். முக்கிய உள்ளூர் கலைஞர்களான, டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் மற்றும் தனுஜா ஆனந்தன் ஆகியோர் அழகின் அழகி 2020 போட்டியின் நீதிபதிகளாவர்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அழகின் அழகி 2020 போட்டியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிறும் இரவு 9 மணிக்கு கண்டு களிக்கலாம். தவறவிட்ட அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.


‘கல்யாணம் 2 காதல்’ - புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர்

கோலாலம்பூர்-

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 1, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிப்பரப்பாகும் ​​கல்யாணம் 2 காதல், புத்தம் புதிய உள்ளூர் தமிழ் காதல் தொடரைக் கண்டு களிக்கலாம்.

புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் மலர்ந்த கல்யாணம் 2 காதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) பிரீமியராகும் முதல் உள்ளூர் காதல் தொடராகும். 22 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் மாகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி, பாஷினி சிவகுமார், ரவின் ராவ் சந்திரன், திருவல்லுவன், ரமிதாஸ்ரி, டிஷாலனி ஜாக் மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

தங்களது வாழ்க்கையில் பாக்கியநாதன் (மாகேந்திரன் ராமன்) மற்றும் மியாவின் (மலர்மேனி பெருமாள்) வருகைக்குப் பிறகு பல இடர்களை சந்திக்கக்கூடும் என்பதை அறியாமல் காதல் வயப்படும் ஹரிஷ் (யுவராஜ் கிருஷ்ணசாமி) மற்றும் சௌமியாவைப் (பாஷினி சிவகுமார்) பற்றியக் கதையைச் சித்தறிக்கின்றது ​​கல்யாணம் 2 காதல் தொடர் .

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் முழுவதும் கல்யாணம் 2 காதலின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.