செர்டாங்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடும். தேசிய முன்னணியின் (தேமு) பங்காளி கட்சிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
'அத்தொகுதி மஇகாவுடையது என்பதை முன்கூட்டியே தெரிவித்து விட்டோம். பேசுவதற்கு ஏதுமில்லை' என நேற்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, கர்னிவெல் 2018ஐ தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்தார். ஆனால் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் ஜசெக வேட்பாளர் எம்.மனோகரனை 462 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2015இல் மஇகாவிலிருந்து டத்தோஶ்ரீ பழனிவேல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதி சுயேட்சை தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment