புனிதா சுகுமாறன்
ஈப்போ-
விழா காலங்களிலும் ,திருமண வைபவங்களிலும் முக்கியமாக தேவைப்படுவது அழகான பூ மாலைகள்தான். அதன் அடிப்படையில் இங்குள்ள புந்தோங் வட்டாரத்தில் மாலை வியாபாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் வியாபாரி திருமதி லெட்சுமி நாயர் தனது பூ மாலை வியாபாரம் குறித்து விவரிக்கிறார்.
கடந்த 33 ஆண்டுகளாக இந்த பூ மாலை வியாபாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் 365 நாட்களும் ஓய்வில்லாமல் வியாபாரம் மேற்கொள்வதாகவும் கூறும் அவர், வருமானப் பற்றாக்குறையை சமாளிக்க இந்த வியாபாரம் தொடங்கியதாக கூறுகிறார்.
கணவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த போதிலும் குடும்ப வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 3 பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஏற்பட்ட பணப் பிரச்சினையை சமாளிக்க்ல மாமியார் செய்து வந்த பூ மாலை கட்டும் வியாபாரத்தில் நானும் எனது கணவரும் ஈடுபட்டோம்.
அன்றைய காலகட்டத்தில் மல்லிகை பூ, சாதாரண மாலைகளை தொடுத்து வந்தோம். அப்போது மக்கள் கொடுத்த ஆதரவின் மூலம் வியாபாரத்தில் லாபம் பார்த்தோம்.
நாளடைவில் பல புதுவிதமான டிசைன்களில் மாலை கட்டுவதை கற்றுக் கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு மாலைகள், பூச்செண்டு, மலர் வளையம் ஆகியவற்றை வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.
இந்த பூ மாலை கட்டும் வியாபாரம் வந்த லாபத்தைக் கொண்டு மூன்று பிள்ளைகளையும் பட்டதாரியாக உருவாகியுள்ளதோடு பிடிபிடிஎன் கடனுதவி பெறாமல் எனது உழைப்பால் அவர்களை படிக்க வைத்து பட்டதாரியாக உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன் என்கிறார் திருமதி லெட்சுமி.
மேலும் தான் கற்றுக் கொண்ட கைத்தொழில் தன்னுடன் அழிந்து விடாமல் இருக்க தனித்து வாழும் தாய்மார்களுக்கும் பூ மாலை கட்டுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாக கூறும் திருமதி லெட்சுமி, விழா காலங்களிலும் அவசர தேவைகளுக்கும் பூ மாலை வேண்டுபவர்கள் தன்னை நாடலாம் என்கிறார்.
இன்றைய காலசூழலில் ஒரு வேலையில் சம்பாதிக்கும் வருமானம் மட்டும் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது. கைத்தொழில் நமக்கு கிடைத்த வரபிரசாதம். அதனை மகளிர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடுமையான உழைப்பு இருந்தால் பணம் ஒரு பிரச்சினையாக நமக்கு அமையாது. ஆதலால் கைத்தொழிலை கற்றுக் கொள்ள தயக்கம் காட்ட வேண்டாம் என்கிறார் இவர்.
இவ்வேளையில் செடிக் அமைப்பின் மூலம் கைத் தொழில் பயிற்சிக்கு வாய்ப்பளித்த கூட்டரசுப் பிரதேச மஇகா மகளிர் பிரிவு தலைவி திருமதி லெட்சுமி நடராஜனுக்கும் மலேசிய அபிராம் இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் நன்றி கூறி கொள்வதாக திருமதி லெட்சுமி கூறினார்.
பூ மாலைகளின் தேவைகளுக்கு தொடர்பு கொள்ள: 05-2535891, 016-2025891, 016- 5535891 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment