Sunday 30 September 2018

சுனாமி தாக்குதல்; மரண எண்ணிக்கை 100ஐ தாண்டும்

ஜகார்த்தா-
இந்தோனேசியாவை நேற்று உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலு நகரம், டொங்கலா, சுலாவேசி தீவு ஆகியவற்றை உலுக்கிய சுனாமி தாக்குதலில் 96 பேர் உயிரிழந்துள்ளதோடு 350க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய  உதவி, மீட்பு நடவடிக்கை அமைப்பு (BASARNAS) தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி தாக்குதலில் மக்களின் வீடுகள், கிடங்கு, உடைமைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து சுமத்ரா தீவின் பல இடங்களில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டன.

ஆனால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பலு நகர் எப்போதும் நிலநிடுக்கம் காணாத இடமாக கருதப்பட்டதால் இங்கு சுனாமி எச்சரிக்கை பொருத்தப்படவில்லை என பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலின்போது சிறப்பு விடுமுறை வழங்குக- சுரேஸ் குமார் வலியுறுத்து

போர்ட்டிக்சன் -
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலின்போது  மாநில மக்களுக்கு சிறப்பு விடுமுறையாக மாநில மந்திரி பெசார் அறிவிக்க வேண்டும் என்று அத்தொகுதியின் பிகேஆர் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஸ் குமார் வலியுறுத்தினார்.

இங்குள்ள அதிகமான வாக்காளர்கள் வெளியிடங்களில் வேலை செய்வதால் இந்த விடுமுறை கோரப்படுகிறது.

வாக்களிப்பு தினம் சனிக்கிழமை நடைபெறுவதால் அன்றைய தினம் வெளியிடங்களில் வேலை செய்வதால் வாக்களிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம். குறிப்பாக சிரம்பான், செப்பாங், கேஎல்ஐஏ போன்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 மணி நேர அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சுரேஸ் குமார்

75,000 வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின்போது அங்குள்ள மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பினாங்கு மாநில முதல்வராக இருந்த லிம் குவான் எங் சிறப்பு விடுமுறையை அறிவித்தார்.

அதேபோன்று வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள போர்ட்டிகசன் இடைத்தேர்தலை முன்னிட்டு நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருண்  வழங்க வேண்டும் என்று சுரேஸ் குமார் கோரிக்கை விடுத்தார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் 7. முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து 6 பேர் களமிறங்கியுள்ளனர்.

அன்வாரின் வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா?


போர்ட்டிக்சன் -
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தொகுதி மக்களுக்காக சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அதிகரிப்பது, போர்ட்டிக்சன் கடற்கரையை தூய்மைபடுத்துவது, சுற்றுலா தலமான இங்குள்ள மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவையே அன்வார்  வழங்கியுள்ள வாக்குறுதிகள் ஆகும்.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் மக்களிடம் உரையாற்றுகையில் அன்வார் இந்த வாக்குறுதிகளை வழங்கினார்.

7 முனைப் போட்டியில் போர்ட்டிக்சன் இடைத்தேர்தல்


சிரம்பான் -
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.

இதில் 8  பேர் வேட்புமனுத் தாக்கலில் 8 பேர் மனு தாக்கல செய்ததில் ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நஸாரி மொக்தார், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ  இசா அப்துல் சமாட், சுயேட்சை வேட்பாளர்கள் லாவ் செக் யான், ஸ்டீவ் சான், கீ சின் யுவான்,  முகமட் சைபுல் புகாரி அஸ்லான், ஏ.ராஜேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு 7 முனைப் போட்டி நிலவுகிறது.

Saturday 29 September 2018

இந்தோனேசியாவில் பூகம்பம்; சுனாமி தாக்கியது (வீடியோ)


ஜகார்த்தா-
இந்தோனேசியாவை இன்று உலுக்கிய வலுவான பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது.

ரிக்டர் அளவுகோளில் 7.5ஆக பதிவான நிலநடுக்கம் தெற்கு நகரை மையம் கொண்டிருந்தது.

அதி சக்தி வாய்ந்த இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து பலு நகரை சுனாமி பேரலைகள் தாக்கின.

இந்நகரை சுனாமி பேரலைகள் தாக்கும் வீடியோ காணொளியில் மக்கள் பயந்து ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

வீடியோ இணைப்பு:


பாரதம் இ-பேப்பர் 29.9.2018







Tuesday 25 September 2018

பாரதம் இ-பேப்பர் 25.9.2018


போர்ட்டிக்சன்; இடைத் தேர்தலை புறக்கணித்தது தேமு

கோலாலம்பூர்-
போர்ட்டிக்சன் இடைத் தேர்தலை புறக்கணிப்பதால் அதில் தனது வேட்பாளரை களமிறக்கவில்லை என தேசிய முன்னணி இன்று அறிவித்தது.

வரும் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து வேட்பாளரை  களமிறக்கவில்லை என இன்று கூடிய தேமு உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

45 நிமிடங்களில் மைகார்ட்; அறிமுகம் கண்டது நடமாடும் பேருந்து சேவை



புத்ராஜெயா-
தேசிய பதிவு இலாகாவின் (ஜேபிஎன்)நடமாடும் பேருந்து சேவையின் வாயிலாக, 45 நிமிடங்களில் அடையாள அட்டையைத் தயார்ப்படுத்தப்படும் என இதன் தலைமை இயக்குனர் டத்தோ முகமட் ரஷின் அப்துல்லா தெரிவித்தார்.

இச்சேவையின் வாயிலாக மைகார்டை  கிட்டத்தட்ட 45 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். மைக்கார்டுக்கு விண்ணப்படும் செய்து உடனே அந்த ஆவணப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணம் செய்து 5 நாட்களுக்குப் பின்னர் தங்களின் அடையாள அட்டையை எந்தப் ஜேபிஎன் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த நடமாடும் பேருந்து சேவைத் திட்டம் கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

டோக்கியோ,- 
ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு (Rygu) என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுஸா 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது.

இந்நிலையில்,  ஹயபுஸாவில் பொருத்தபட்டிருந்த MINERVA-II 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் விண்கல் மீது கடந்த சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக தரையிறக்கியதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. விண்கல்லில் ஆளில்லா ரோவர்களை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும்.

இதன் விண்கல் மீது  முதல் முறையாக ஆளில்லா ரோவர்களை தரையிறக்கிய நாடு எனும் வரலாற்று சாதனையை ஜப்பான் தனதாக்கி கொண்டது.

விண்கல்லில் தரையிறங்கிய ரோவர்கள், அங்கு எடுத்த புகைப்படங்களை ஜாக்ஸா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன்-
அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது. இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன. 

மாலத்தீவு அதிபர் தேர்தல்: இப்ராஹிம் முகமது வெற்றி


மாலி- 

மாலத்தீவில் எதிர்கட்சியின் இப்ராஹிம் முகமது 58.3  விழுக்காடு வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தெற்காசிய நாடான, மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்.,23இல் நடந்தது. ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராஹிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

 வாக்குப்பதிவு நிறைவடைந்தபின் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் எதிர்க்கட்சியின் இப்ராஹிம் முகமது 58.3 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகளும், யாமீன் 95,526 வாக்குகளும் பெற்றுள்ளனர். 


செய்தியாளர்களைச் சந்தித்த இப்ராஹிம் முகமது வெற்றி குறித்து தெரிவிக்கையில், மக்களின் விருப்பத்தை மதித்து, மென்மையாகவும், சமாதானமாகவும் அதிகாரத்தை மாற்ற யாமீனை அழைப்பதாக தெரிவித்தார்.

தான்சானியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு


உகாரா:

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அதற்குள் படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் 4 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் 2 பேரை மட்டும் உயிருடன் மீட்டு வந்தனர். படகில் 200 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டனர். இதனால் எடை அதிகரித்து பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

படகு மூழ்கி விபத்துக்கு காரணமாணவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். இன்னும் பலர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது. எனவே அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் ஏரிக்கரையில் காத்து கிடக்கின்றனர்.

புகைப்படக் கலைஞராக மாறிய பிரதமர் மோடி



காங்டாக்-
பிரதமர் மோடி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் உடையவர். உலகத் தலைவர்களுடனான சந்திப்பின் போது எடுக்கப்படும் போட்டோக்கள் நன்றாக வர வேண்டும் என அக்கறை எடுத்துக்கொள்வார். இதனால், பொதுக்கூட்டங்கள், சந்திப்புகளில் பங்கேற்கும் போது கேமராக்கள் எங்கு உள்ளது என பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும் என அவரை பற்றி பலர் சமூக வளைதளங்களில் கருத்துக்களை பகிர்வதும் உண்டு.

இந்நிலையில், தான் எடுத்த போட்டோக்களை ட்விட்டரில் பதிவிட்டு புகைப்படக் கலைஞராக மாறியுள்ளார் பிரதமர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சுமார் 605 கோடி ரூபாய் செலவில் பாக்யாங் நகரில் கட்டப்பட்டுள்ள அம்மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை அவர் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். 

இதற்காக சிக்கிம் மாநிலம் சென்றுள்ள பிரதமர், செல்லும் வழியில் இயற்கை எழில்கொஞ்சும் மலைகளை அவரே கேமராவில் போட்டோ எடுத்துள்ளார். அவ்வாறு அவர் எடுத்த 4 போட்டோக்களை ‘ சாந்தம் மற்றும் அற்புதம்’ எனக் குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த மாதம் தொடங்குகிறது ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

சென்னை-

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதி,  11ஆம் தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

எனவே அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்; 100 தொகுதிகளில் போட்டி



புதுடெல்லி-
டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பல முக்கிய மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல் அமைச்சருமான கெஜ்ரிவால் அண்மையில் அரியானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருக்கிறது. இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த வெற்றி கிடைத்துவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளுடன் எங்களால் பேரம் பேச முடியும்.

டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. உத்தரபிரதேசம், குஜராத்,  இன்னும் சில மாநிலங்களிலும் எங்கள் கட்சி போட்டியிடும். இதேபோல் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 4 பேர் வெற்றி கண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

கேரளாவை மீண்டும் கனமழை






புதுடில்லி : 
வெள்ளத்தில் இருந்து மீண்டு நிம்மதியடைந்த கேரளாவில், சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான "யெல்லோ அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
செப்.25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை கேரளாவின் பத்தினம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை மறுநாள் பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பரமபத விளையாட்டில் ஜெயிப்பாரா த்ரிஷா

சென்னை-
நடிகை நயன்தாரா மாயா என்ற படத்தில் பேயாக நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் சோலோ ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டினார். அதன் பிறகு அவர் நடித்த அறம் வெற்றி பெற்றது. டோரா ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. கோலமாவு கோகிலாவும் வெற்றி பெற்றது.

நயன்தாரா போன்று சோலோவாக நடித்து வெற்றி பெற வேண்டும் என்பது த்ரிஷாவின் ஆசை. இதற்காக நாயகி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன் பிறகு மோகினி படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெறவில்லை. தற்போது கர்ஜனை, 1818 என்ற படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

இதுதவிர அவர் நடிக்கும் மற்றொரு சோலோ ஹீரோயின் படமான பரமபத விளையாட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் த்ரிஷா பேயாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் நயன்தாரா நடித்த மாயா படத்தின் பர்ஸ்ட்லுக் போன்றே அமைந்திருக்கிறது. மாயா போன்று பரமபத விளைட்டு வெற்றி பெறுமா? சோலோ ஹீரோயினாக த்ரிஷா வெற்றி பெறுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

Saturday 22 September 2018

பாரதம் இ-பேப்பர் 22.9.2018

தீபாவளிச் சந்தை கடைகளுக்கானக் கட்டணம் வெ.1,000 மட்டுமே- சிவசுப்பிரமணியம்

ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ லிந்தியாவில் அமைக்கப்படவுள்ள தீபாவளிச் சந்தைக்கான கடைகளின் விலை 1,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என புந்தோங் சட்டமன்ற உறுப்பினடர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 4,000 வெள்ளி வரை விற்கப்பட்ட தீபாவளி கடைகள் இன்று மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பரிசாக இம்முறை மிக குறைந்த விலையில்  தீபாவளி கடைகளை வழங்கப்படுகிறது.

இந்த தீபாவளிச் சந்தை அக்டோபர்  20ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் இதில் பலவிதமான கடைகள் அமைக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

இந்த நாட்களில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்கான முழு பொறுப்பையும் மாநில அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது என நேற்று மாநில அரசு செயலகத்தில்  நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கடைகளை பெற விரும்புவோர் ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்தை நாட வேண்டும் என கூறிய அவர்,கடைகளுக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,000 வெள்ளியை விட கூடுதலாக யார் வசூல் செய்தாலும் தம்மிடம் புகார் தெரிவிக்கும்படி சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது என்றார் அவர்.

ஈப்போ மாநகர் மன்ற செயலாளர் ஸக்குவானுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் பல்வேறு பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.