Friday, 23 February 2018
பிஐசிசி ஏற்பாட்டில் 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, வர்த்தகம்' இலவச பயிற்சி பட்டறை
ரா.தங்கமணி
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபையின் (பிஐசிசி) ஏற்பாட்டில் இளைஞர்கள், மாணவர்களுக்கான 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, வர்த்தகம்' ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய இலவச பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.
வரும் மார்ச் 10,11 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை ஈப்போ, யுக் சோய் சீன இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறையை அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் வழிநடத்தவுள்ளார் என பிஐசிசி தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதீர் தெரிவித்தார்.
மாணவர்கள், இளைஞர்களின் 'கனவு நாயகனான' இந்தியாவின் முன்னாள் அதிபரும், அணு விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10 கோட்பாடுகளை உள்ளடக்கி இப்பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது.
வேலை வாய்ப்பே இல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயின்று இன்று அந்த துறையே இந்திய நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு பெறச் செய்தவர் ஏபிஜே அப்துல் கலாம். அதேபோல இளைஞர்களும் மாணவர்களும் தங்களுக்கான வாய்ப்புகளை தேடி கொண்டிருப்பதை விட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற 'தேடலை' விதைப்பதாக இப்பயிற்சி அமையவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரவலராக மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் திகழ்கின்றார். அதேவேளையில் மஇகா உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
15 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்ற நிலையில் தங்களை வருகை உறுதி செய்வதற்கு இறுதி நாள் 5.3.2018 ஆகும்.
இப்பயிற்சிகளில் பங்கேற்பவர்கள் 05-255 5558 / 016-255 8558 / 017- 724 2558 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவும் piccperak@hotmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவுக் தங்களது உறுதி செய்து கொள்ளுமாறு ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment