Friday, 29 June 2018

சொஸ்மா சட்டம்; மறு ஆய்வு செய்க - மலேசியத் தமிழர் குரல் கோரிக்கை

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் 'பிணை'யில் வெளியே வர முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்படுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ள 'சொஸ்மா' சட்டத்தை நடப்பு அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என மலேசியத் தமிழர் குரல் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் 31.7.2012  முதல் 22.2.2017 வரை அனைத்து இனங்களையும் சார்ந்த 979 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டர் கும்பல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அதன் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.

ஐ.எஸ்.ஏ. எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிணையில்  வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

கொலை செய்பவர்களுக்கு கூட 'பிணை' வழங்கப்படும்போது  இவர்களுக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கம் இதனை ஒரு முக்கிய பிரச்சினையாக கருத வேண்டும் என்றார்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் 'பிணை'யில் வெளியே வர முடியாததால் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை பக்காத்தான்  ஹராப்பான் கூட்டணி உணர வேண்டும் என்றார் அவர்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேராவில் கைது செய்யப்பட்ட 36 பேரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 28 June 2018

நான் உங்களின் வேலைக்காரன்; கடமையிலிருந்து தவற மாட்டேன் - கேசவன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

'நான் உங்களின் வேலைக்காரன், உங்களுக்கு சேவை செய்யவே என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அந்த கடமையிலிருந்து தாம் ஒருபோதும் விலகி விட  மாட்டேன்'  என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை எனக்கு கொடுத்துள்ளீர்கள். இதனை நான் வெற்றியாக கருதுவதை விட உங்களுக்கு பணியாற்ற எனக்கு இடப்பட்ட கட்டளையாகவே கருதுகிறேன்.

மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படும் என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களை இங்கு கொண்டு வர முடியும், அதனால் மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு மேம்பாடு காணும் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னரே நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என சுங்கை சிப்புட், மலேசிய இந்து சங்கம், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்  சார்பில் நடத்தப்பட்ட 'அன்னையர்/ தந்தையர் தின விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

மேலும், பிள்ளைகளின் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் பெற்றோர் அவர்களின் எதிர்காலத்திற்கு  தேவையான திட்டங்களையும் வகுத்து வருவது பாராட்டுக்குரியது.

திட்டமிடல் இல்லாமல் எதனையும் ஆக்கப்பூர்வமாக செய்ய முடியாது. அவ்வகையில் ஒரு பிள்ளையை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது.  பெற்றோரின் திட்டமிடலும் வழிகாட்டலுமே பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவெடுக்க துணை புரிகிறது.

பெற்றோரின் வழிகாட்டலில் சிறந்து விளங்கும் பிள்ளைகள் தாங்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களை கைவிடக்கூடாது என்பதையும் உணர வேண்டும் என கேசவன் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் சிறந்த அன்னை, தந்தையர் ஐவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதோடு பகாங், முவாட்ஸம் ஷா கல்லூரியில் கணக்கியல் துறையில் பயிலும் மாணவி கார்த்தினிக்கு சுங்கை சிப்புட் இந்து சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் 'ஶ்ரீகாசி' ஜெயராமன், ஆலயத் தலைவர் கோபாலன், அமுசு. ஏகாம்பரம்  உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்- மணிமாறன் வலியுறுத்து


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மஇகாவின் கட்சித் தேர்தலில் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசியத் தலைவர் பதவிக்கு ஏகமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள கட்சி தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று தாப்பா நாடாமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் மேலவை உறுப்பினர் டத்தோ டி.மோகன், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் ஆகியோர் கட்சியின் உதவித் தலைவர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்  எனவும் மணிமாறன் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த பின்னடைவை சரி செய்து கட்சியை மீண்டும் வலுவானதாக உருவாக்கவும் இளைஞர்களின் ஆதரவை பெருமளவு பெறவும் இந்த ஆக்ககரமான ஆலோசனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மணிமாறன் குறிப்பிட்டார்.

'இனவாத அரசியல்' இனியும் தலை தூக்குமா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகின்ற நிலையில் தேசிய அரசியல் நீரோட்டம் இன்னமும் பரபரப்பான சூழலையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மே 9ஆம் தேதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வந்த தேசிய முன்னணியை 'வீட்டுக்கு அனுப்பி' ஆட்சியை கைப்பற்றியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.

இந்த கூட்டணியின் வெற்றி எதிர்பாராத ஒன்று என்ற நிலையில்  மாற்றத்தை விரும்பிய மலேசியர்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றியாகவே இது கருதப்படுகிறது.

இனவாத ரீதியிலான  கட்சிகளைக் கொண்டு 'இன அரசியல்' நடத்திய தேசிய முன்னணியை தூக்கி எறிந்த மக்கள் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளனர்.

நம்பிக்கைக் கூட்டணியில் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே பல இன கட்சிகளைக் கொண்ட நம்பிக்கைக் கூட்டணி மலேசியர்கள் வாக்களித்துள்ளனர்.

இனவாத அரசியலை மலேசியர்கள் வெறுக்க தொடங்கி விட்டனர் என்ற உண்மையின் வெளிபாடாகவே மலாய்க்காரர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அம்னோவின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கைரி ஜமாலுடின், அம்னோவின் கதவுகள் அனைத்து இனத்தவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இனவாத ரீதியிலான கட்சிகளால் தாங்கள் சார்ந்துள்ள இனத்தின் மேம்பாட்டையும் நலனையும் உறுதி செய்யாதபோது அதனால் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்பதை 2008ஆம் ஆண்டு தேர்தலிலேயே மக்கள் உனர்த்தி விட்டனர்.

ஆனால் அதில் சுதாகரித்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினால் தேசிய முன்னணி கூட்டணியில் மிகப் பெரிய கட்சியாக விளங்கிய மஇகா, மசீச இந்தியர்கள், சீனர்களின் ஆதரவை இழந்ததோடு அதனால் அம்னோவும் தனது அதிகாரத்தை இழந்து நிற்கிறது.

சமத்துவமிக்க நாடாக உருவாக இனி மலேசியா தன்னை தயார்படுத்திக் கொள்ள முனையும் நிலையில் இனவாத ரீதியிலான கட்சிகள் இனி என்ன செய்யும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆர்டிஎம்- பெர்னாமா ஒருங்கிணைப்பு; பரிசீலிக்கப்படுகிறது - அமைச்சர் கோபிந்த் சிங்


கோலாலம்பூர்-
செலவீனங்களை குறைக்கும் வகையில் ஆர்டிஎம் எனப்படும்  மலேசிய வானொலி, தொலைகாட்சி நிறுவனத்தையும் பெர்னாமாவையும் இணைக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த இரு நிறுவனங்களையும் இணைப்பதன் மூதல் கிடைக்கும் சேமிப்பு பணத்தைக் கொண்டு இன்னும் புதுமையான, ஆக்ககரமான உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்.

இதன் தொடர்பில் சிலர் மதிப்பீடுகளை செய்து வருகின்றனர். அவர்களின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

மேலும், பெர்னமாவின் கீழ் இயங்கும் 24 மணி நேர செய்தி அலைவரிசையை விற்பது தொடர்பில் எவ்வித திட்டமும் இப்போது இல்லை என அவர் மேலும் சொன்னார்.

நஜிப் வீட்டில் கைப்பற்ற பணம், பொருட்களின் மதிப்பு வெ.1 பில்லியன் - டத்தோஶ்ரீ அமர் சிங்

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மீட்கப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு 1.1 பில்லியன் வெள்ளியை தாண்டும் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர் டத்தோஶ்ரீ அமர் சிங் இஷார் சிங் தெரிவித்தார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் கடந்த சோதனை மேற்கொண்ட போலீசார் பணம், விலையுயர்ந்த நகைகள், கை கடிகாரம், கைப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அவற்றை மதிப்பீடு செய்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு வெ. 900 மில்லியன் முதல் வெ.1.1 பில்லிய்ன் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்.

இதில்  37 வகையான 567 கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டது மலேசிய வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல் ஆகும். அனைத்து கைப்பைகளின் மதிப்பு 51.3 மில்லியன் வெள்ளியாகும். இதில் 'பிஜியான்' வகையைச் சேர்ந்த ஒரு கைப்பை விலை மட்டும் 1.6 மில்லியன் வெள்ளியாகும்.

தாமான் டூத்தாவில் உள்ள நஜிப்பின் வீட்டில் 35 பைகளில் கைப்பற்ற 26 வகையான நோட்டுகளின் மொத்த மதிப்பு வெ.116.7 மில்லியன் ஆகும்.

மேலும், 25பைகளில் கைப்பற்றப்பட்ட சங்கிலி, கை வளையல், தோடு, ஆடை ஊசி, தலைப்பாகை ஊசி, மோதிரம் என  12,000 வகையான  தங்க நகைகளின் மதிப்பு வெ. 440 மில்லியன் ஆகும். இதில் வெ. 6.4 மில்லியன் மதிப்புடைய  ஒரு சங்கிலியும் உள்ளடங்கும்.

இதில் கைக்கூலி ஊதியம் சேர்க்கப்படவில்லை என்பதோடு சந்தை விலையில் 50% முதல் 100% குறைவாக வாங்கப்பட்டுள்ளது. இதை அனைத்தையும் சேர்த்தால் அதன் மொத்த மதிப்பு வெ.660 மில்லியன் முதல் வெ.880 மல்லியன் வரை இருக்கும்.

100 வகையான 423 கைகடிகாரங்களின் மதிப்பு வெ. 78 மில்லியன் ஆகும். அதோடு 234 மூக்குக் கண்ணாடியின் மதிப்பு வெ. 374,000 ஆகும் என அவர் சொன்னார்.

150 போலீஸ்காரர்கள், நிபுணர்களைக் கொண்டு 8 சிறப்பு குழுக்களை உருவாக்கி கடந்த மே 21 முதல் ஜூன் 21 வரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

பேங்க் நெகாராவைச் சேர்ந்த 22 அதிகார்களைக் கொண்டு பணம் எண்ணும் 6 இயந்திரங்களின் உதவியுடன் 3 நாட்களாக மொத்த பணத்தையும் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இவ்வளவு நாள் காலதாமதம் ஏற்பட்டது என குறிப்பிட்ட அவர், இப்போது நஜிப் கைது செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பப்பட்ட போது 'அதனை நாங்கள் செய்ய மாட்டோம்' என்றார்.

ஆயினும், பண மோசடி எதிர்ப்பு சட்டம், 2001 பயங்கரவாத நிதி ஒழிப்பு,  சட்டவிரோத நடவடிக்கை வருவாய் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள டத்தோஶ்ரீ நஜிப், அவரது துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரை போலீசார் அழைப்பர் என அவர் சொன்னார்.

கைப்பற்ற பணம், நகைகள் யாவும் பேங்க் நெகாராவில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, 27 June 2018

பக்காத்தான் தலைவர்களுடன் பணியாற்ற முடியாவிடில் பதவி விலகுவேன் - துன் மகாதீர்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுடன் சுமூகமாக பணியாற்றுவதில் தோல்வி கண்டால் தாம் பதவியிலிருந்து விலக நேரிடும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மட் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள பக்காத்தான் ஹராப்பானின் பிரதமராக துன் மகாதீர் பதவியேற்று செயலாற்றி வருகிறார்.

இதனிடையே, தமக்கும் பக்காத்தான் கூட்டணி தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்களுடன்  தொடர்ந்து தம்மால் பணியாற்ற முடியாது என்ற சூழல் ஏற்படும்போது உடனடியாக தாம் பதவி விலக நேரிடும் என 'சேனல் நியூஸ் ஆசியா' எனும் சிங்கை தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

ஆயினும் 'முன்பி தாம் பிரதமராக இருந்தபோது தம்மை பலர் எதிர்த்த போதிலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், தாம் இப்போது அவ்வாறு செய்ய முடியாது' என இதற்கு முன்பு 22 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் இவ்வாறு சொன்னார்.

அமைச்சராகிறார் சேவியர் ஜெயகுமார் - துணை அமைச்சராகிறார் சிவராசா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அடுத்த வாரம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இரு கூடுதலாக இரு  இந்தியர்கள் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமர் துன் மகாதீர் தலைமையில் அமையவுள்ள இந்த அமைச்சரவையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் நீர், நில, இயற்கை வள அமைச்சராகவும்  சிவராசா ராசையா கிராமப்புற, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராகவும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என இன்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில் ஜசெகவைச் சேர்ந்த எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும் கோபிந்த் சிங் டியோ தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைக்க இந்தியர்கள் அளித்த ஆதரவுக்கு ஏற்ப அமைச்சரவையில் முன்பை விட கூடுதலான பதவி வழங்கப்படும் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

யுனிசெம் நிறுவனம் வெ. 5 லட்சம் வழங்கியது

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் கடனை அடைப்பதற்காக யுனிசெம் நிறுவனம் (Unisem (M) Sdn.Bhd.) 5 லட்சம் வெள்ளி நன்கொடை வழங்கியது.

இன்று மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமுவிடம் இதற்கான காசோலையை அந்நிறுவனத்தின் தலைவர்  ஜோன் சியா சின் ஸெட் வழங்கினார்.

காசோலையை பெற்று கொண்ட மந்திரி பெசார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் இயங்கும் யுனிசெம் நிறுவனம் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும் என்றார்.

தாபோங் ஹராப்பான் திட்டத்திற்கு பேரா அரசின் மூலமாக 5 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என மேலும் கூறினார்

ஜூலை 2இல் அமைச்சர்கள் பதவியேற்பு

கோலாலம்பூர்-
ஆட்சி அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின்  இதர 15 அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் பதவியேற்பு ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் என இஸ்தானா நெகாரா அறிவித்துள்ளது.

பதவியேற்கவிருக்கும் அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் பட்டியலை கடந்த ஜூன் 20ஆம் தேரி பிரதமர் துன் மகாதீரிடமிருந்து மாமன்னர் சுல்தான் முகமட் வி பெற்றதாக அரண்மனை நிர்வாகி டத்தோ வான் அஹ்மாட் தஹ்லான் தெரிவித்தார்.

பிரதமர் சமர்பித்த பெயர் பட்டியலுக்கு மாமன்னர் ஒப்புதல் வழங்கியதாக ஜூன் 22ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாமன்னருக்கு எதிரான, தவறான விஷயங்களை ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் துன் மகாதீரின் அமைச்சரவையில் 29 அமைச்சர்கள் இடம்பெறும் நிலையில் இதற்கு முன் 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களின் அடையாள ஆவணப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்- சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் தீராத பிரச்சினையாக இருக்கின்ற குடியுரிமை பிரச்சினைக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகளில் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சினையும் ஒன்றாகும்.

பக்காத்தான் கூட்டணி தற்போது மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டையை நீல நிற அடையாள அட்டையாக மாற்றுவதற்கு இலக்கு கொண்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு ஒரு குழுவாக இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

100 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண முடியும் என நம்புகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு, இலாகாக்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று சேவியர் ஜெயகுமார் மேலும் சொன்னார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்சி கவிழலாம்- டத்தோஶ்ரீ ஸாயிட்

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழும் என அம்னோவின் இடைக்கால தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பல பிளவுகள் தற்போது ஏற்பட்டுள்ளன. இந்த பிளவுகளால் பக்காத்தான் ஆட்சி கவிழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆதலால் 15ஆவது பொதுத் தேர்தல் வரை இந்த கூட்டணி ஆட்சி நிலைக்காது என அம்னோவின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

Tuesday, 26 June 2018

டிங்கி ஒழிப்பு; முன்னோட்ட பரிசோதனையில் ரசாயன கலவையற்ற மருந்து- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் நிலவும் டிங்கி காய்ச்சல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசாயன கலவையற்ற கொசு ஒழிப்பு மருந்து பயன்படுத்துவது பரிசோதனை முறையில்  முன்னெடுக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக தற்போது தெளிக்கப்படும் மருந்து ரசாயன  கலவை மிகுந்தது என்பதோடு அதனை வீட்டிற்கு வெளியே மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன கலவையால் வீட்டிற்குள் மருந்து தெளிப்பதில்லை.

இந்நிலையில் ரெவோகனிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரசாயன கலப்பில்லாத கொசு ஒழிப்பு மருந்தை சோதனை முறையில் மேற்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.

தற்போது டிங்கி காய்ச்சல் அதிகம்  உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதியில்  இந்த மருந்தை பயன்படுத்தப்படவுள்ளது. இம்மருந்தை தெளிப்பதன் மூலம் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றால் அனைத்து இடங்களிலும் இம்மருந்தை தெளிப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினராக சிவநேசன் தெரிவித்தார்.

கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவு குறைந்துள்ளது. இவ்வாண்டு தொடக்கம் 2018 மே 19 வரை 1,1,97 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதே காலாண்டில் கடந்தாண்டு 3,295 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

டிங்கி ஒழிப்புக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து கலவையில் டீசல் எண்ணெய் கலக்கப்படுவதால் அது சிறப்பானதாக கருத முடியாது. ரசாயன கலப்பற்ற இந்த 'ரெவோகெனிக்ஸ்' மருந்து பயன்படுத்துவதால் வீட்டிற்கு வெளியில் மட்டுமல்லாது  வீட்டுக்குள்ளேயும் பயன்படுத்தலாம்.

டிங்கி ஒழிப்பிற்காக தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படும் நிலையில் சோதனை முன்னோட்டமாக இங்கு பரிசோதிக்கப்படும் எனவும் சாதகமான சூழல் நிலவினால் தற்போதைய மருந்துக்கு பதிலாக இதனை பயன்படுத்த சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

புதிய சாதனை; வெ. 108 மில்லியனை எட்டியது 'மலேசிய ஹராப்பான் நிதி'

புத்ராஜெயா-
நாட்டின் கடனை அடைப்பதற்காக தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கான நன்கொடை 100 மில்லியன் வெள்ளியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த மே 30ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மலேசியர்கள் மத்தியில் பலமான ஆதரவு பெருகியதோடு இன்றுடன்  27 நாட்களில் 108,215,946,39 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக நேற்று மட்டும் 15.5 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது மலேசிய நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஃபினாஸின் நிதி விநியோகம் சீரமைப்பு செய்யப்பட வேண்டும்- அமைச்சர் கோபிந்த் சிங்

பெட்டாலிங் ஜெயா-
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில்  (ஃபினாஸ்) மிகப் பெரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது மட்டுமல்லாது அதன் அடித்தளம் முழுவதும் சீரமைக்கப்படுவது அவசியம் என தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது மிக முக்கியமானதாகும்.

நிதி விநியோகம் செய்யப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதை காண முடிகிறது எனவும் அது தொடர்பில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு ஒழுங்காக, சீரான முறையில் நிதி  விநியோகம் செய்யப்படுவது மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளில் முதன்மையானதாகும்.

திரைப்படத் துறையில் ஈடுபடவிருக்கும் புதியவர்களின் நிலையை உணர்ந்திருப்பதாகவும் அவர்களுக்கு உதவிடும் வகையில் முன்னெடுக்கப்படும் சீரமைப்புகளின் வழி நிதி விநியோகம் முறையாக அவர்களை சென்றடைவது உறுதிபடுத்த வேண்டும் என இன்று பெட்டாலிங் ஜெயா, ஜாலான் உத்தாரவில் உள்ள பினாஸ் அலுவகத்திற்கு வந்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.

மைக்கா ஹோல்டிங்ஸ் உட்பட பல முறைகேடுகள் விசாரிக்கப்படும் - அமைச்சர் குலசேகரன்

கோலாலம்பூர்-
மைக்கா ஹோல்டிங்ஸ் உட்பட நஷ்டத்தை எதிர்நோக்கிய 100 மில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டங்களில் முறைகேடு புரிந்த மஇகா தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என அவர் 'மலேசியா கினி' மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

'கொலை, நிதி முறைகேடு, ஏமாற்று, பித்தலாட்டம்,  ஆலயங்களில் தவறான நிர்வாகம்,  பண வெளியேற்றம் உட்பட பல்வேறு விவகாரங்களுக்கு விடை காணப்படும் என மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.

மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம், சட்டத்துறை தலைவர் அலுவலகம், போலீஸ் ஆகியவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இது முறையாக நடைபெறவில்லையென்றால் இவ்விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படும். கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு இப்போது எத்தகைய தீர்வினை காண முடியும் என்பதை பொறுத்திருந்து காண்போம் என அவர் மேலும் கூறினார்.

1980ஆம்  ஆண்டில் மைக்கா ஹோல்டிங்சை மஇகா தொடகியபோது அதில் ஏழ்மையிலான பலர் முதலீடு செய்தனர்.  55,000 உறுப்பினர்களை கொண்ட மைக்கா ஹோல்டிங்ஸ் திட்டத்தில் 106 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்நிறுவனம் சரியாக நிர்வகிக்காத காரணத்தால் தோல்வி அடைந்ததோடு பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் எவ்வித லாபமும் இல்லாமல் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

பத்துமலையில் அமைதி பேரணி; போலீஸ் விசாரிக்கும்

கோலாலம்பூர்-
பத்துமலை திருத்தல வளாகத்தில் நடத்தப்பட்ட அமைதி பேரணி குறித்து போலீஸ் விசாரணை நடத்தும் என கோம்பாக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் தெய் கொங் செங் கூறினார்.

அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றில் ஏற்ட்டில் நேற்று நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் 200 ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி பேரணி தொடர்பான விவகாரத்தை செக்‌ஷன் 9 (5) அமைதி
பேரணி 2012இன் கீழ் விசாரிக்கப்படும் என அவர் சொன்னார்.

பத்துகேவ்ஸ் ஆலயத்தின் முன்பு அமைதி பேரணி நடத்துவதற்கு ஆலய நிர்வாகம் இடைக்கால தடையுத்தரவு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

25 முறை துப்பாக்கிச் சூடு; யாரும் காயமடையவில்லை- போலீஸ்

கோலாலம்பூர்-
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள்  25 முறை துப்பாக்கி தோட்டாக்களை பிரயோகித்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என கோலாலம்பூர் குற்றவியல் விசாரணை பிரிவி தலைவர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இங்கு புக்கிட் பிந்தாங்கிலுள்ள பொழுதுபோக்கு மையத்தின் அருகில் நேற்று இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட புரிந்துணர்வு இல்லாமையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொழுதுபோக்கு மையத்திலிருந்து 30 மீட்டரில் உள்ள வாகன நிறுத்துமிட பகுதியில் 25 முறை துப்பாக்கி தோட்டாக்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அச்சமயம் அந்த மையத்தின் நுழைவாயிலும் வரவேற்பரையிலும் பணியாளர்களே இருந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் யாரும்  காயமடையவில்லை என குறிப்பிட்ட அவர் மேலும் சொன்னார்.

Sunday, 24 June 2018

பிபிபிஎம் கட்சியில் இணைவது சாதாரண ஒன்றல்ல- பேரா மந்திரி பெசார்

ஈப்போ-
பெர்ச்சத்து கட்சியில் இணைவது சாதாரண ஒன்றல்ல. கட்சியில் இணைத்துக் கொள்ளும் முடிவு கட்சியின் தலைமைத்துவத்தை பொறுத்தது பேரா மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.

பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்து வெளியேறி பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அஸுமு ஃபைசால்  கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொள்வது கட்சியின் தலைமைத்துவம் பொறுத்தது. பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பிபிபிஎம் கட்சியில் சேர்வது தலைமைத்துவத்தை சார்ந்தது, உறுப்பினர் விண்ணப்பத்தை கட்சி தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைப்போம்.

அந்த விண்ணப்பத்தை ஏற்பதும் நிராகரிப்பது கட்சித் தலைவர்களின் முடிவை பொறுத்தது ஆகும் என பாடாங் தஞ்சோங் ரம்புத்தானில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

நில ஒதுக்கீடு நிச்சயம் செய்து தரப்படும் - சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் மேம்பாட்டுக்காக நில ஒதுக்கீடு செய்யப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

இந்த கூட்டுறவுக் கழகம் மிகச் சிறப்பாக இயங்கி வருவதோடு தனது உறுப்பினர்களுக்கு லாப ஈவு தொகையை வழங்கி வருகிறது. சிறிய கழகமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று இந்த கூட்டுறவு கழகம் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் இதற்கு நிலம் ஒதுக்காத தேமு அரசாங்கம் வெறும் தொகுதி அளவிலேயே செயல்படும் தேசிய பள்ளியின் கூட்டுறவு கழகத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.

தொகுதி அளவிலே செயல்படும் கூட்டுறவு கழகத்திற்கு 500 ஏக்கர் ஒதுக்க முடிந்த தேமு அரசாங்கம் மாநில அளவில் செயல்படும் பேரா மாநில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்திற்கு நிலம் ஒதுக்காதது ஏன்?
இந்த கூட்டுறவுக் கழகம் இன்னும் சிறப்புடன் செயல்படுவதற்கு ஏதுவாக மாநில அரசு நிலம் ஒதுக்குவதற்கு பரிந்துரை செய்வதாக கூறிய சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், இந்த கழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 15 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படும் என இன்று நடைபெற்ற இக்கூட்டுறவுக் கழகத்தின் 54ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டுறவுக் கழகத்தின்  வளர்ச்சிக்கு ஏதுவாக மாநில அரசு நிலம், மானியம் வழங்க வேண்டும் என அதன் தலைவர் ஆர்.பி.ஜெயகோபாலன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிகழ்வில் பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் சுப.சற்குணன், கூட்டுறவுக் கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஜுனியர் கராத்தே போட்டியில் அதிக இந்திய இளைஞர்கள் பங்கேற்பு

புனிதா சுகுமாறன்

ஈப்போ:
21 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான 28ஆவது தேசிய  ஜூனியர்  கராத்தே போட்டி நேற்று தொடங்கி 24 ஆம் தேதி வரை இங்குள்ள அறிவியல் சுகாதார கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

ஜூனியர்கான கராத்தே போட்டியில் அதிக இந்திய இளைஞர்கள் தேசிய ரீதியாக இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

அவ்வகையில் இப்போட்டியில் பங்கேற்ற  பேராக் அணி 1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் வென்று  வாகை சூடியுள்ளது.





தேமுவிலிருந்து விலகியது கெராக்கான் கட்சி


கோலாலம்பூர்-
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பார்ட்டி கெராக்கான் மலேசியா (கெராக்கான்) இன்று அறிவித்துள்ளது. இக்கூட்டணியிலிருந்து வெளியேறி சுயேட்சை கட்சியாக செயல்படவிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெராக்கான் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவதுபொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியாக மாறியுள்ள சூழலில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுயேட்சை கட்சி எனும் நிலையில் இனி மக்களுக்காக குரல் கொடுக்கவும் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்ததை செய்ய கெராக்கான் கட்சி செயல்படும்.

சுமூகமான முறையில் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் கெராக்கான் கட்சி, சுயேட்சை கட்சி எனும் நிலையில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்துடன் கலந்து பேசி செயலாற்றும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்னமும் எதிர்க்கட்சியாய் செயல்பட முனையாத 'தேசிய முன்னணி'?

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து 2 மாதங்களை கடக்கின்ற நிலையில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பல அதிரடி திட்டங்களை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

ஆனால் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக மாறியுள்ள தேசிய முன்னணி இன்னமும் தன்னை எதிர்க்கட்சியாக தயார்படுத்த தொடங்கவில்லை என்றே தற்போதைய நிலை உணர்த்துகிறது.

பொதுத் தேர்தலில் வாங்கிய பலமான 'அடி'க்கு பின்னர் தேசிய முன்னணி கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. 13 கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியில் தற்போது 4 கட்சிகள் (அம்னோ,மஇகா, மசீச, கெராக்கான்) மட்டுமே உள்ளன.

இதில் அம்னோவும், மஇகாவும் தற்போது கட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

வரும் 30ஆம் தேதி அம்னோவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதால் இதில் போட்டியிடுகின்ற முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, முன்னாள் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஜூலை மாத இறுதியில் மஇகாவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதால் யார் போட்டியிடுவர், யாரை ஆதரிப்பது போன்ற கேள்விகளுக்கு மத்தியில் மஇகாவினர் மூழ்கிக் கிடக்கின்றனர்.

மஇகாவின் நடப்பு தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் கட்சி தலைவர் பதவியை தற்காக்கப் போவதில்லை என முன்பு அறிவித்ததால் கட்சி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்து, அதற்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கட்சி தேர்தலை மையப்பட்டு இவ்விரு செயல்படுவதாலும் மசீசவும் கெராக்கானும் சில சமயங்களில் மட்டுமே குரல் கொடுப்பதாலும் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய தேசிய முன்னணி 'இன்னமும் அதற்கு தயாராகவில்லை' என்றே கருதப்படுகிறது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் கூட்டணி பொதுத் தேர்தல் முடிந்த கையோடு தான் ஒரு வலுவான எதிர்க்கட்சி என்பதை உறுதிபடுத்தும் வகையில் பல பதிலடி தாக்குதல்களையும் திட்டங்களையும் மேற்கொண்டன.

ஆனால் தற்போது எதிர்க்கட்சி கூட்டணியான தேசிய முன்னணி இன்னமும் தாம் 'ஆளும் கட்சி' என்ற நிலையிலேயே செயல்பட்டு வருவதோடு அதன் நடவடிக்கைகள் எதிர்க்கட்சியின் வேகத்தை பிரதிபலிக்கவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

18 வயதில் வாக்களிக்கும் உரிமை - துன் மகாதீர் பரிந்துரை

புத்ராஜெயா-
மலேசியர்களின் வாக்களிக்கும் வயது வரம்பை 21இல் இருந்து 18ஆக குறைக்கும் பரிந்துரையை பிரதமர் துன் மகாதீர் முகம்மது முன்வைத்துள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணியை வீழ்த்துவதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகும்.

இந்நிலையில் வாக்களிக்க தகுதி பெறும் வயது வரம்பு 21இல் இருந்து 18ஆக குறைப்பதன் மூலம் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்கு ஆக்ககரமானதாக இருக்கும் என துன் மகாதீர் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில்கூட வாக்களிக்க தகுதி பெறும் வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்  நமது நாட்டில்தான் 21 வயதை எட்டியவுடன் ஒருவர் வாக்களிக்க உரிமை பெறுகின்றார்.

பிரதமர் துன் மகாதீரின் இந்த பரிந்துரையை பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளதோடு இத்திட்டம் இளைஞர்களிடமும் சிறந்த வரவேற்பை பெறலாம்.

அமைச்சர் பெயர் பட்டியலில் ஙா கோர் மிங் பெயர் விடுபட்டது?

ஈப்போ-
அடுத்த வாரத்தில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங்- இன் பெயர் விடுபட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

பிரதமர் துன் மகாதீர் மாமன்னர் சுல்தான் வி- இடம்  சமர்ப்பித்துள்ள 15 அமைச்சர்களின் பெயர் பட்டியலில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான ஙா கோர் மிங்-இன் பெயர் இடம்பெறவில்லை.

இன ரீதியிலான கருத்துகளை முன்பு கூறியிருந்ததன் விளைவாக அவர் பெயர் விடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Saturday, 23 June 2018

சிவகுமாரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் பாஸ்கரன்

பத்துகாஜா-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீ.சிவகுமாரை பத்துகாஜா சிறைச்சாலை முதன்மை அதிகாரி பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இன்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

எலி சிறுநீர் துர்நாற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்; தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
எலி சிறுநீர் துர்நாற்றத்துடன் கல்வி பயிலும் அவலநிலை நீடிக்கும்  ஆயர் தாவார், கொலம்பியா தமிழ்பள்ளியில் பரிசோதனை நடத்துமாறு மாநில சுகாதார இலாகாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த புதன்கிழமை இப்பள்ளிக்குச் சென்றபோது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள எலி சிறுநீர் நுர்நாற்றத்தில் நம் பிள்ளைகள் பயில்வது கொடுமையான ஒன்றாகும்.

இப்பள்ளியில் காலடி வைத்த உடனேயே இந்த துர்நாற்றத்தை உணர்ந்ததாகவும் தம்மாலேயே சில நிமிடங்கள் சகித்து கொள்ள முடியாத நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களின் நிலையை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் 60 மாணவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் பள்ளியில் பரிசோதனை நடத்துமாறு மாநில சுகாதார இலாகாவை கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட சிவநேசன், தமிழ்ப்பள்ளிகள், மாணவர்களின் நலனில் தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களின் கல்வி பாதிப்பு மட்டுமல்லாது சுற்றுச்சூழல், கட்டமைப்பு பாதிப்புகளையும் கவனித்து அவற்றுக்கு தீர்வு காண முற்படுவதாக கூறினார்.

1எம்டிபி பண பரிமாற்றம்; நஜிப் பொய்யுரைக்கிறார் - துன் மகாதீர்


கோலாலம்பூர்-
1எம்டிபி பண பரிமாற்றம் தன்னுடைய சொந்த கணக்கில் நடைபெற்றது பற்றி தனக்கு தெரியாது என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறுவது முற்றிலும் பொய்யாகும் என பிரதமர் துன்  மகாதீர் முகம்மது கூறினார்.

தன்னுடைய சொந்த வங்கி கணக்கில் என்ன நடக்கிறது என பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர் கூறுவது அவரின்  நிர்வாக சீர்கேட்டையே புலப்படுத்துகிறது.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் அவர் பொய்யையே கூறி வருகிறார். முன்பு சவூதி அரசரால் இந்த பணம் கொடுக்கப்பட்டது என கூறினார், இப்போது தனக்கு எதுவும் தெரியாது என முன்னுக்கு பின் முரணாக கூறுகிறார்.

எல்லா ஆவணங்களிலும் அவரின் கையெழுத்து மட்டுமே உள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என கூறும் நஜிப்பின் பொய் கூற்றுகள் அவரின் ஊழல் தொடர்பை வெளிபடுத்துகிறது என துன் மகாதீர் மேலும்  சொன்னார்.