Tuesday, 31 July 2018
சமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உணவகங்களில் வேலை வாய்ப்பு - முன்மொழிந்தார் சிவநேசன்
ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இங்குள்ள உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்கு பதிலாக சமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களை பணியில் அமர்த்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டு வரும் க்ரூ ஸ்கீல்ஸ் கல்னெரி ஆசியா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உள்ளூர் உணவகங்களில் பணியாற்றும் வகையில் உணவக உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான இணக்கம் காணப்பட்டால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு வெளிநாட்டு சமையல்காரர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என இக்கல்லூரியை பார்வையிட வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.
இங்கு சமையல் கலை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் வெறும் இந்திய உணவை மட்டும் சமைக்காமல் மலாய்க்காரர், சீனர் உணவு வகைகளையும் வெஸ்டர்ன் உணவையும் சமைக்கும் பக்குவத்தை கற்றுக் கொண்டுள்ளனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் சில வறுமை குடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவிநிதி வழங்கப்படுவதற்காக மாநில மந்திரி பெசாரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.
அண்மையில் உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்களை நியமிக்க வேண்டும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் விடுத்திருந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் பணியாற்றுவதை உறுதி செய்வது ஆக்கப்பூர்வமானதாகும் என அவர் சொன்னார்.
இக்கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சுப்பிரமணியம், இயக்குனர் கெர்ரி ப்ரியர், சமையல் கலை வல்லுநர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கல்லூரி நடவடிக்கைகளை விளக்கமளித்தனர்.
15 ஊராட்சி மன்றங்களில் 1,000 தெரு விளக்குகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவிப்பு
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
பேராக் மாநிலத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த இருள் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆயிரம் தெரு விளக்குகள் பொருத்தப்படும் என ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்.
இன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி பிரமணம் நிகழ்வுக்கு பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் மேற்குறிப்பிட்ட தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் இ.பிரிப்பெய்ட் வாகன பார்கிங் திட்டத்தை அமுல்படுத்தவிருப்பதாகவும் வாகனமோட்டிகளின் வசதிக்கேற்ப செல்போனிலேயே வாகனமோட்டிகள் தங்களின் பார்க்கிங் பணத்தை செலுத்திக்கொள்ள ஏதுவாக இ- பிர்பெய்ட் திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
இதனால் பார்க்கின் கூப்பனை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது என கூறிய அவர், மின்னியல் முறையிலான இத்திட்டல் வாகனமோட்டிகளுக்கு இலகுவானதாக இருக்கும் என சொன்னார்.
ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக 22 பேர் நியமனம்
புனிதா சுகுமாறன்
ஈப்போ
ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக இன்று 22 பேர் நியமனம் அதில் இருவர் இந்தியர்கள்
இன்று இங்குள்ள மாநில ஊராட்சி மன்ற ஆட்சி குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங், டத்தோ பண்டார் டத்தோ ஸம்ரி மான் ஆகியோர் முன்னிலையில் 27 மாநகர உராச்சி மன்ற உறுப்பினர்கள்ளும் பதவி பிரமணம் எடுத்துக்கொண்டனர்.
இதில் ஜசெக கட்சியைச் சேர்ந்த ஆ.கணேசன், பிகேஆர் கட்சியைச்ச் சேர்ந்த செல்வம் ஆகியோர் இந்தியர்கள் ஆவர்
மேலும் அரசு சார்பற்ற பொது இயக்கத்தை சேர்ந்த இருவருக்கான பதபி பிரமணம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் மரணச் சம்பவங்கள் ஏதுமில்லை- சிவநேசன்
ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்
ஈப்போ-
சிறார்களை பாதிக்கும் வாய், கை, கால் புண் நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேரா மாநிலத்தில் அதிகரித்துள்ள நிலையில் அதனால் எவ்வித மரணச் சம்பவங்களும் ஏற்படவில்லை என மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
7 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்களை பாதிக்கக்கூடிய இந்நோயினால் இம்மாநிலத்தில் அபாயகரமான சூழல் நிலவவில்லை எனவும் சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களைப் போன்று பள்ளிகளை மூடும் சூழ்நிலை ஏற்படவில்லை எனவும் அவர் விவரித்தார்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநிலத்திலுள்ள 15 மருத்துவமனைகளும் அரசாங்க கிளினிக்குகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நோயினால் பாதிக்கப்படும் சிறார்களை அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சிவநேசன் அறிவுறுத்தினார்.
இந்நோயை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ள சூழலில் அதற்கான போதிய மருந்தும் மருத்துவமனை கட்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள சிறார்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்டுத்த வேண்டும் எனவும் கை, கால்களில் தூய்மை பேணுவது உட்பட பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகளையும் கற்று தர வேண்டும் என இன்று CREW SKILLS Culinery school of Asia வளாகத்தை பார்வையிட வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
'மலாய்க்காரர்கள் வந்தேறிகள்'? மன்னிப்பு கேட்டார் குலசேகரன்
கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களை வந்தேறிகள் என தாம் கூறியதாக வெளிவந்த தகவலுக்கு மன்னிப்பு கோரினார் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்.
தான் வெளியிட்ட கருத்து தவறாக சித்திரிக்கப்பட்டதை அடுத்து அது பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. அந்த கருத்து மலாய்க்காரர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நீலாயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் மலாயாவில் கால்பதித்துள்ளனர். அதற்கு உதாரணம் லெம்பா பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு இந்தியர்கள் வந்தேறிகள் என சொல்லப்படுவதில் துளியும் அடிப்படையற்றது என தான் கூறிய செய்தி தவறான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட குளறுபடிக்கு மலாய்க்காரர்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குலசேகரன் தமதறிக்கையில் குறிப்பிட்டார்.
குற்றச்செயல்களில் இந்தியர்கள் ஈடுபடாமலிருக்க சமயப் போதனைகளை புகுத்துவோம்- தினகரன் கோவிந்தசாமி
ரா.தங்கமணி
ஈப்போ-
குற்றச் செயல்களில் இந்தியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் அதனை களைவதற்கு இளம் தலைமுறையினரை சமய போதனைகள் ஈடுபட வைக்க வேண்டும் என பேரா மாநில சட்டமன்ற சபாநாயகரின் இந்திய பிரதிநிதி தினகரன் கோவிந்தசாமி வலியுறுத்தினார்.
நமது சமயம் அன்பையும் அறத்தையும் போதிக்கக்கூடியதாகும். அன்பை செலுத்த வேண்டிய நாம் இன்று வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுவது சமயத்திற்கு முரணானதாகும்.
ஆகவே, சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபட வைக்க அவர்களது பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் நமது சமயம் வளர்ச்சி காண்பதோடு சமுதாயம் முன்னேற்றம் காணும் என இங்கு மஞ்சோங் வட்டார மலேசிய இந்து சங்க பேரவையின் திருமுறை ஓதும் போட்டியில் சிறப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வை சிறப்பாக புகழ்ந்து பேசிய தினகரன், மங்சோங் மாவட்ட மலேசிய இந்து சங்க வட்டாரப் பேரவையின் வளர்ச்சிக்காக 5,000 வெள்ளி நன்கொடையை அதன் தலைவர் பெரியசாமியிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் 15 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Monday, 30 July 2018
கிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் 'கல்வியால் உயர்வோம்' கல்வி பயிலரங்கு
புனிதா சுகுமாறன்
ஈப்போ
கிந்தா இந்திய சங்கத்தினர் ஏற்பாட்டில் டாக்டர் காடீர் இப்ராஹிம் வழிகாட்டலில் 2018ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர், பி.டி.3 மற்றும் எஸ்.பி.எம் பயிலும் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு இன்று இங்குள்ள கிந்தா இந்தியர் சங்க் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது
'கல்வியால் உயர்வோம்' எனும் தலைப்பிலான இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய கிந்தா இந்தியர் சங்கத்தின் செயலாளர் தி.கணேசன், கிந்தா இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு 3ஆவது ஆண்டாக நடைபெறுவதாகவும் இதைப்போன்ற நிகழ்வு மாணவர்களுக்கு தேர்வு காலகட்டத்தில் தங்களை எவ்வாறு தயார் நிலையில் வைத்துக்கொள்வது என்பதற்கு உருதுனையாக அமைகிறது என்றார்.
இதனிடையே, பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட உ.முத்துசாமி அதிகாரப்பூர்வ திறப்புரை செய்து வைத்ததோடு மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இப்பொழுதிருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உண்டு. நாளைய தலைவராக உங்களை உருவாக்க கல்வி மிகவும் அவசியம் எனவும் கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு தங்களை செதுக்கிகொள்ள வேண்டும் என்றார்
இந்நிகழ்வில் அறிமுக உரை நிகழ்த்திய பேராரிசிரியர் டாக்டர் காடீர் இப்ராஹிம், மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காணும் பொருட்டு எந்த ஒரு மாணவன் கஷ்டமான பாடத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கிறானோ அவனே நாளைய சாதனையாளராக திகழ்கிறான் என்றார்.
நிகழ்வில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்ருக்கும் தன்முனைப்பு வழிகாட்டலை மிகவும் தெளிவாக விவரித்தார்.
இந்நிகழ்வின், நிறைவுரையாற்றிய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம் விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் கண்டிப்பாக தேர்வு காலங்களில் அனைத்து மாணவர்களும் சிறந்த தேர்ச்சியை பெறலாம் என தமது உரையில் கூறினார்.
'கல்வியால் உயர்வோம்' நிகழ்வை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த கிந்தா இந்தியர் சங்கத் தலைவர் செளந்திர பாண்டியன், அவர்தம் செயலவை உறுப்பினர்கள் ஆகியோர்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தொழிலதிபர் டத்தோ ஏ.கே.சக்திவேல், அரசியல் பிரமுகர்களுக்கு சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்வில் 1,500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
தேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதிப்பு வெ.20 கோடியை எட்டலாம்- செயலாளர் குணசேகரன்
ரா.தங்கமணி
ஈப்போ-
17 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதிப்பு தற்போது 13 கோடியாக உள்ள நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் 20 கோடி வெள்ளியை எட்டலாம் என அதன் செயலாளர் குணசேகரன் நாச்சியப்பன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களை முன்னிலைபடுத்தி செயல்பட ஆரம்பித்த இக்கூட்டுறவுக் கழகம் தற்போது பல்வேறு முதலீடு, சொத்துடைமைகளிம் வாயிலாக பல கோடி வெள்ளி சொத்துகளை கொண்டுள்ளது
ராஜேந்திரன் வேம்படி தலைமையில் இயங்கும் இக்கூட்டுறவுக் கழகத்தின் மிகப் பெரிய வெற்றியாக கிளந்தான் மாநிலத்தில் 2,012 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு செம்பனை மரம் பயிரிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்று
தெமர்லோவில் 275 ஏக்கர் நிலம் உள்ளது.
இதுமட்டுமல்லாது நாடு தழுவிய நிலையில் பல்வேறு சொத்துகளையும் கட்டடங்களையும் கொண்டுள்ள இக்கூட்டுறவுக் கழகம், கடந்த காலங்களில் உறுப்பினர்களுக்கு 8 விழுக்காடு லாப ஈவை வழங்கி வந்தது. ஆனால் அதிகளவு லாபம் பெறப்படாததால் உறுப்பினர்களுக்கு கடந்தாண்டை போலவே 5 விழுக்காடு போனஸாக வழங்கப்படும் என இன்று நடைபெற்ற தேசிய பல்நோக்கு கூட்டுறவுக் கழகத்தின் 41ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
இக்கூட்டுறவுக் கழக உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மரண சகாய நிதி, உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதி, கடனுதவி திட்டம், மருத்துவ காப்புறுதி உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மேலும் இக்கூட்டத்தில் வாரிய இயக்குனர்களாக ராஜலெட்சுமி முருகையா, ராமலிங்கம் பெரியண்ணன், லோகநாதன் மருதமுத்து, சுகுமாறன் துரைசாமி, நாகராஜு சின்னசாமி ஆகியோருடன் மரணமடைந்த ஆறுமுகம் பழனியாண்டிக்கு பதிலாக சுப்பிரமணியம் தண்னீர்மலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் கூட்டுறவுக் கழகத்தின் வாரிய இயக்குனர்களும் ஊறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; மலேசிய பெண்மணி உட்பட 10 பேர் பலி
ஜகார்த்தா-
இந்தோனேசியா, லொம்பாக் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தில் மலேசியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் மரணமடைந்தார்.
இன்றுக் காலை 5.47 மணியளவில் 6.4 ரிக்டர் அளவு கோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகளும் கட்டடங்களும் மோசமான சேதமடைந்தன.
இதில் மலேசியாவைச் சேர்ந்த சித்தி நோர் இஸ்மாவிடா (வயது 30) எனும் பெண்மணி மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
மரணமடைந்த பெண்மணியின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன என கூறிய இந்தோனேசியாவுக்கான மலேசிய இணை தூதர் ஸம்ஸாரி சஹாரான், இங்குள்ள 150 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.
கடுமையான சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் 10 பேர் பலியானதாக இந்தோனேசிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுப்படவில்லை.
Sunday, 29 July 2018
சொஸ்மா அகற்றமா?: ஐஎஸ்ஏ ரத்து செய்தபோது நடந்தவற்றை எண்ணி பாருங்கள்- முன்னாள் ஐஜிபி
கோலாலம்பூர்
சொஸ்மா உட்பட பல்வேறு சட்டங்களை அகற்றும் முன்னர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) அகற்றப்பட்டபோது நடந்தவற்றை சீர்தூக்கி பார்க்க வேண்டும் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குற்றச் சட்டம் (சொஸ்மா), 1959 குற்றத் தடுப்பு சட்டம் (பொக்கா), பயங்கரவாத தடுப்பு சட்டம் 2015 (பொடா) ஆகிய சட்டங்களை அகற்றுவதற்கு முன் பின்விளைவுகள் ஆராயப்பட வேண்டும்.
ஐஎஸ்ஏ. அவசர கால சட்டம் ஆகியவற்றை ரத்து செய்தபோது நாட்டில் கடுமையாக குற்றங்கள் தலைவிரித்தாடின. ஒரு பகுதி தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கான ரகசிய கும்பல்கள் மோதி கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்தன.
சொஸ்மா, பொடா, பொக்கா போன்ற சட்டங்கள் அகற்றப்பட்டால் ஐஎஸ் உட்பட ஆயுதமேந்திய கும்பல்களின் பயங்கரவாதச் செயல்களை ஒடுக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதை ஆராய வேண்டும் என்றார் அவர்.
பயங்கரவாத சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் அவசியமானது என கருதுவதாக அவர் மேலும் சொன்னார்.
மக்களை அடக்கி, ஒடுக்கும் சோஸ்மா போன்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என கடந்த 22ஆம் தேதி பிரதமர் துன் மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, 28 July 2018
விடுதலைப் புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பா? வீண் குற்றச்சாட்டுகள் வேண்டாம்- கணபதி ராவ்
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
தமிழர்களுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுக்கும் பேராசிரியர் பி.இராமசாமி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாய்க் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டுகின்றனர்.
ஈழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூரங்களுக்கு எதிராக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே போர் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றே பேராசிரியர் இராமசாமி குரல் கொடுத்து வருகிரார்.
ஈழ மக்கள் மட்டுமல்லாது பிலிப்பைன்ஸ், மோரோ கிளர்ச்சி படையினர், ஆச்சே விடுதலை போராட்டக் குழுவினர் போன்றவற்றுக்கும் பேராசிரியர் இராமசாமி குரல் கொடுத்துள்ளார்.
அப்போதெல்லாம் இராமசாமியை விமர்சிக்காதவர்கள் இன்று ஸாகிர் நாய்க்கிற்காக வீண் பழி சுமத்துகின்றனர்.
ஹிண்ட்ராஃப் காலகட்டத்தின் போது போராடிய தலைவர்களான எங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தோம்.
பேராசிரியர் இராமசாமி மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என குறிப்பிட்ட கணபதி ராவ், ஹிண்ட்ராஃப் போராளிகள் இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றார் அவர்.
Thursday, 26 July 2018
'சொஸ்மா' சட்டத்தினால் உயிரும் சொத்துகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன- டத்தோஶ்ரீ நஜிப்
கோலாலம்பூர்-
பயங்கரவாத, குண்டர் கும்பல் நடவடிக்கையை துடைத்தொழிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தினால் மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.
2012ஆம் ஆண்டு அமலாக்கம் செய்யப்பட்ட சொஸ்மா சட்டத்தை அகற்றுவதனால் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைவிரித்தாடுவதோடு உலக நாடுகளின் நம்பிக்கையும் நமது நாடு இழக்கக்கூடிய சூழல் நிலவும்.
'சொஸ்மா' சட்டத்தின் வாயிலாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னரே அதில் சம்பந்தப்பட்டுள்ளோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்.
நாட்டின் பாதுகாப்புக்கு துணையாக உள்ள சட்டத்தை
அகற்றுவதனால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு யார் பொறுப்பேற்பது என டத்தோஶ்ரீ நஜிப் கேள்வி எழுப்பினார்.
மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ள சொஸ்மா சட்டத்தை அரசாங்கம் அகற்றும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு (இசா) பதிலாக சொஸ்மா சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சேவை அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்- தினகரன்
ரா.தங்கமணி
ஈப்போ-
கட்சியில் நீண்ட காலம் சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் இன அடிப்படையிலான நியமனம் குறித்து கேள்வி எழுப்புவது நியாயமற்றது என பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாமின் இந்திய விவகார சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.
மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் குறித்து சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன.
மலேசியர் எனும் அடிப்படையிலேயே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டது.
புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மலேசியராய் அனைவரும் வெற்றி கண்டோமே தவிர இன ரீதியில் பிரிந்து மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
மேலும், பல இன மக்களை கொண்ட கட்சிகள் நீண்ட காலமாக சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர் என தினகரன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தீபாவளி 'மக்களின் தீபாவளி'யாகக் கொண்டாடப்படும்- சிவசுப்பிரமணியம்
ரா.தங்கமணி
ஈப்போ-
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டம் இவ்வாண்டு 'மக்களின் தீபாவளி'யாக கொண்டாடப்படும் என பேரா மாநில இந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளர் ஆதி.சிவசுப்பிரமணியம் கூறினார்.
கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டதை போல இவ்வாண்டும் வர்த்தக நடவடிக்கைகள், கலை நிகழ்ச்சியுடன் இவ்வாண்டு தீபாவளி சந்தை நடத்தப்படும்.
இந்த தீபாவளி சந்தையில் அமைக்கப்படும் கூடாரங்களில் வியாபாரம் மேற்கொள்ள கடை உரிமையாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் அதை ஏற்க மறுத்தால் மட்டுமே பிறருக்கு கடைகள் வழங்கப்படும்.
மேலும், பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசாங்கத்தை கைப்பற்ற ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கடைகளின் வாடகை மிக குறைந்த விலையில் வழங்குவதற்கு ஈப்போ மாநகர் மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஸெஃபாயர் கால்பந்து அணிக்கு சிவசுப்பிரமணியம் ஆதரவு
ரா.தங்கமணி
ஈப்போ-
கால்பந்து துறையில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸெஃபாயர் கால்பந்து அணிக்கு தனது ஆதரவை வழங்கினார் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம்.
சம்பந்தன் கிண்ணம் உட்பட பல்வேறு கால்பந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள இவ்வணிக்கு 3,850 வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாக சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
புந்தோங் வட்டாரத்திலுள்ள இந்திய இளைஞர்கள் சமூக சீர்கேடுகளில் ஈடுபடாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபதற்கு ஏதுவாக இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
யோகநாதனை பயிற்சியாளராகவும் சரவணக்குமாரை அணியின் தலைவராகவும் கொண்ட இவ்வணி சிவசுப்பிரமணியத்தை சந்தித்து தங்களது நன்றியை புலபடுத்திக் கொண்டனர்.
Wednesday, 25 July 2018
'மாயாஜால வித்தை'யில் விருதுகளை குவிக்கும் மார்க் அரோன் தாஸ்
நேர்காணல் : ரா.தங்கமணி
ஈப்போ-
மாயாஜால வித்தை (Magic) என்றாலே அனைவருக்கும் ஒருவித சந்தோஷம் தானாகவே உருவாகி விடும். தன் கண் முன்னே நடப்பவை எல்லாம் உண்மைதானா? என்ற சிறு குழப்பத்துடனே நம்மை ஆச்சரியத்துடன் ரசிக்க வைக்கும் கலையே மாயாஜால வித்தையாகும்.
சிறு நிகழ்ச்சி முதல் திரைப்படங்கள் வரை 'மேஜிக்' என்றாலே அதன் மீது தனி கவனம் ஏற்பட்டு விடும். தமிழ்ப்படங்கள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் வரை காட்சிபடுத்தப்படும் மாயாஜால வித்தைகள் ரசனைக்குரியதாகும்.
ஆனால் நிஜத்தில் மாயாஜால வித்தைகளை அரங்கேற்றும் மாயாஜால வித்தகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவுதான். இக்கலையின் மீது ரசனை இருந்தாலும் அதில் ஈடுபாடு
கொண்டவர்கள் சிலரே ஆவர்.
அவ்வகையில் மாயாஜால வித்தையை உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரங்கேற்றி பல விருதுகளை வாங்கியுள்ள மார்க் அரோன் தாஸ் நிச்சயம் பாராட்டுக்குரியவர் ஆவார்.
பேராக், புந்தோங்கைச் சேர்ந்த மார்க் அரோன் தாஸ், அண்மையில் தெலுங்கானா, ஹைதராபாத்தில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் மாயாஜால வித்தைக்காக 2 விருதுகளை வென்றுள்ளார்.
மார்க் அரோன் தாஸுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
கே: மேஜிக் துறையில் ஈடுபடும் ஆர்வம் எவ்வாறு வந்தது?
ப: 20 வயதிலிருந்தே பல்வேறு கலைத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளேன். நடனக் கலைஞர், கோமாளி (Clown) ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்தேன். அச்சமயம் மாயாஜால வித்தைகளை கற்றுக் கொள்ளும் எண்ணம் வந்தது. அதனை முறையாக கற்று பல நிகழ்வுகளில் மாயாஜால வித்தைகளை அரங்கேற்றி வருகிறேன்.
கே: எத்தகைய நிகழ்ச்சிகளில் மேஜிக் கலையை அரங்கேற்றுவீர்கள்?
ப: பொதுவான நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மேஜிக் கலையை அரங்கேற்றலாம். பெரும்பாலும் திருமணம், பிறந்தநாள், திருவிழா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது மக்கள் ஒன்றுகூடும் பொது நிகழ்ச்சிகளில் கூட மாயாஜால வித்தையை அரங்கேற்றி வருகிறேன்.
ப: மாயாஜால வித்தையில் பல சிறப்புகள் உள்ளன. ஆனால் புறாவை பயன்படுத்தி நான் செய்யும் வித்தைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதற்காகவே ஒரு நிகழ்ச்சி படைப்பின்போது 'புறா மன்னன்' என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கே: மாயாஜால துறையில் நமது இந்தியர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
ப: மேஜிக் துறையில் முன்பு உள்ளதை விட இப்போது அதிகமானோர் அதில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள பலர் தங்களது திறமையை வெளிபடுத்தி கொண்டு வருகின்றனர்.
ஆனால் 'மேஜிக்' துறையை கற்றுக் கொண்டு உளப்பூர்வமாக செய்ய வேண்டும். ஏனெனில் மேஜிக் வித்தையை பார்க்கும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே முதல் வேலை. அதனை சரியாக செய்தால் தான் மக்கள் மத்தியில் நிலைபெற முடியும்.
கே: இத்துறையில் உங்களுக்கு துணையாக இருப்பது?
ப: இத்துறையில் நான் வெற்றி எனக்கு உறுதுணையாக இருப்பவர் எனது மனைவி திருமதி மங்களநாயகி. என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைப்பதோடு அதனை சிறப்பாக வழிநடத்திடவும் உறுதுணையாக இருக்கின்றார்.
கே: நீங்கள் கற்றுக் கொண்ட வித்தையை பிறருக்கு சொல்லி கொடுப்பதுண்டா?
ப: இன்னும் சொல்லிக் கொடுக்கவில்லை. இத்துறையில் இன்னும் நான் கற்றுக் கொள்ள அதிகம் உள்ளது. கொஞ்சமாக கற்றுக் கொண்டு எனக்கு தெரிந்த வித்தைகளை வெளிபடுத்தி வருகிறேன். ஆனால் இதில் இன்னும் அதிகமான வித்தைகள் உள்ளன. அதை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் பிறருக்கு கற்றுக் கொடுப்பது நியாயமாகாது என்பதால் தற்போது யாருக்கும் இக்கலையை சொல்லிக் கொடுப்பதில்லை.
கே: 'மேஜிக்' கலையில் நீங்கள் வாங்கியுள்ள விருதுகள்?
ப: மேஜிக் கலையில் ஈடுபட்டபோதெல்லாம் பலர் எனக்கு விருதுகளையும் சிறப்புகளையும் செய்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் 'புறா மன்னன்' விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் கடந்தாண்டு மும்பையில் 'அனைத்துலக விருது' வழங்கப்பட்டது. ஈப்போவில் பிரபலமான தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல் 'Perak 1st Magician' விருது வழங்கி சிறப்பித்தார்.
அதோடு ஜூலை 7,8 ஆகிய இரு தினங்கள் தெலுங்கானா, ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்துலக மாயாஜால வித்தகன் (international Magician), அனைத்துலக கண்கவர் கலைஞர் (International Gala Performer) ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் டத்தோ ஏ.கே. சக்திவேல், KYSS enterprise - Lepak, IDAM Malayasia (Indian Dance association,Perak) ஆகியோரும் பல்வேறு சிறப்புகளை செய்துள்ளனர்.
கே: மேஜிக் துறையில் உங்களது இலக்கு?
ப: மேஜிக் துறையில் ஈடுபட வேண்டும் என துடிக்கும் இளைஞர்களுக்கு அத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கும் மையம் ஒன்றை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளேன். இப்பயிற்சி மையத்தின் வழி இளைஞர்களை மேஜிக் துறையில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொள்வதோடு அவற்றை முழுமையாகவும் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான முயற்சியை தற்போது முன்னெடுத்துள்ளேன். கூடிய விரைவில் அந்த இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மேஜிக் துறையில் இன்னும் பல சாதனைகளை படைப்பதோடு மேஜிக் பயிற்சி மையத்தை அமைக்கும் எண்ணம் ஈடேற மார்க் அரோன் தாஸை 'பாரதம்' மின்னியல் ஊடகம் பாராட்டுகிறது.
மார்க் அரோன் தாஸை தொடர்பு கொள்ள: 014-6017430
2,000 ஏக்கர் நில விவகாரம்; தகவலை வழங்க மறுத்தால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்- ஆதி.சிவசுப்பிரமணியம்
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்திற்கான முறையான தகவல்களை ஒப்படைக்க மறுத்தால் இவ்விவகாரம் பிரதமர் துன் மகாதீரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என பேரா மாநில இந்திய விவகாரப் பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ள புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இம்மாநிலத்திலுள்ள இந்திய மாணவர்கள், தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்காக 2009இல் அப்போதைய மாநில அரசாங்கம் 2,000 ஏக்கர் நிலத்தை பேரா மாநில இந்திய மாணவர்கள் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திடம் வழங்கியது.
ஆனால் இந்நாள் வரையிலும் அந்த 2,000 ஏக்கர் நிலத்தின் மூலம் தமிழ்ப்பள்ளிகள் அடைந்த நன்மை எதுவுமே இல்லை. இந்நில விவகாரத்தில் என்ன நடந்துள்ளது என்ற தகவலை சம்பந்தப்பட்ட அறிவாரிய உறுப்பினர்கள் உரிய தகவலை வழங்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டிய நிதி தவறாக பயன்படுத்தப்படக்கூடாது எனும் நோக்கில் இது குறித்து கேள்வி எழுப்புவதாக கூறிய சிவசுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட வாரியக்குழு உறுப்பினர்கள் உரிய தகவலை வழங்க மறுத்தால் பிரதமர் துன் மகாதீரின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்படும்.
இந்திய சமுதாய பிரச்சினைகளை நானே கவனிப்பேன் என பிரதமர் மகாதீர் கூறியிருந்ததன் அடிப்படையில் இவ்விவகாரம் அவரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதோடு காவல் துறையிலும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திலும் (எம்ஏசிசி) புகார் செய்யப்படும் என்றார்.
விபரீதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முன்னர் சுமூகமான முறையில் இவ்விகாரத்தில் தீர்வு காண தாம் தயாராக இருப்பதாகவும் அறவாரிய உறுப்பினர்கள் இதனை உணர்ந்து துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
2,000 ஏக்கர் நில விவகாரம்; அலட்சியப்படுத்தினால் சட்ட நடவடிக்கை பாயும்- அறவாரிய உறுப்பினர்களுக்கு சிவநேசன் எச்சரிக்கை
புனிதா சுகுமாறன்
ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 2,000 ஏக்கர் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாரியக் குழுவினர் முறையான கணக்குகளை ஒப்படைக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக 2,000 ஏக்கர் நிலம் பேரா மாநில இந்திய மாணவர், கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலத்தில் செம்பனை பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபத்தை தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வழங்கப்பட்டது.
ஆனால் இந்நாள் வரையிலும் அந்த அறவாரியத்திலிருந்து தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக எவ்வித பங்கும் சென்றடையவில்லை.
14ஆவது பொதுத் தேர்தல் முன்பு வரை அந்நில விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தாலும் எவ்வித அதிகாரம் இல்லாமல் இருந்தோம். ஆனால் இப்போது மாநில ஆட்சி எங்கள் வசம் உள்ளது. அதன் அடிப்படையில் 2,000 ஏக்கர் நில விவகாரம் தொடர்பில் குரலெழுப்ப முழு அதிகாரம் உள்ளது.
யாரோ சிலர் சொந்தம் கொண்டாடவும் லாபம் சம்பாதிக்கவும் இந்த 2,000 ஏக்கர் நிலம் யார் வீட்டு அப்பன் சொத்தும் கிடையாது. இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி, இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம். அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் மாணவர்களை சென்றடைய வேண்டுமே தவிர சிலரின் கட்டுபாட்டுக்குள் அந்நிதி போய்விடக்கூடாது.
மாநில ஆட்சி மாற்றம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் இவ்வாரிய உறுப்பினர்கள் ஒருமுறை கூட தன்னை சந்தித்து அந்நில விவகாரம் தொடர்பில் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என குறிப்பிட்ட சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், தன்னை அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுஒருங்கிணைப்பு குழு சந்திப்புக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tuesday, 24 July 2018
இந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்
ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநில முஸ்லீம் அல்லாதோர், இந்திய விவகாரப் பிரிவுக்கு பொறுப்பாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என முஸ்லீம் அல்லாதோர் விவகாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்.
தன்னுடைய அரசியல் செயலாளராக சிவசுப்பிரமணியம் பணி தொடர்வார் என குறிப்பிட்ட அவர், கூடுதலாக முஸ்லீம் அல்லாதோர் விவகாரங்களையும் இந்தியர்களின் பிரச்சினைகளையும் கவனிப்பார் என்றார்
இன்று முதல் அவரின் பொறுப்பு நடைமுறைக்கு வருகிறது என பவுல் குறிப்பிட்டார்.
இப்பதவி நியமனம் குறித்து பேசிய சிவசுப்பிரமணியம், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீவிர கவனம் செலுத்தப்படும் அதே வேளையில் முஸ்லீம் அல்லாதோரின் (பிற சமயத்தினர்) விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்.
இந்தியர்கள் எதிர்நோக்கும் ஆலயம், தமிழ்ப்பள்ளி, நிலம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.
மாயாஜால வித்தையில் 2 விருதுகளை பெற்றார் மார்க் அரோன் தாஸ்
ரா.தங்கமணி
ஈப்போ-
அண்மையில் தெலுங்கானா, ஹைதராபாத்தில் மேஜிஷியன் அகாடமி (magician academy) ஏற்பாட்டில் நடைபெற்ற 2018 மாயாஜால (மேஜிக்) ஆசியா அனைத்துலக மாநாட்டில் பேரா, புந்தோங்கைச் சேர்ந்த மார்க் அரோன் தாஸ் 2 விருதுகளை பெற்றார்.
அனைத்துலக மாயாஜால வித்தகன் (International magician), அனைத்துலக கண்கவர் கலைஞர் (International gala performer) ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
மாயாஜால கலைத் துறையில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மார்க் அரோன் தாஸின் நேர்காணல் நாளை 'பாதரம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறவுள்ளது.
மண்டபங்களை நிர்மாணிப்பதை இலக்காகக் கொண்டு பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவு கழகம் செயல்படும்- நிறுவனர் டத்தோ ஏ.கே.சக்திவேல்
ரா.தங்கமணி
ஈப்போ-
அண்மையில் அமைக்கப்பட்ட பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவுக் கழகம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் பின் வரிசை முகம்மட் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த கூட்டுறவு கழகம் குறித்து விளக்கமளித்த அதன் நிறுவனர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், இதற்கு முன்னர் குடும்ப கூட்டுறவின் மூலம் செயல்பட்டு வந்தோம். ஆனால் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாம் எவ்வாறு பங்காற்ற போகிறோம் என கேள்வி எழுந்தபோது உதித்ததே இந்த கூட்டுறவு கழகம்.
பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவு கழகத்தின் மூலம் இந்தியர்களுக்கான திருமண மண்டபங்களை நிர்மாணிக்கும் இலக்கு கொண்டுள்ளோம்.
இந்நாட்டில் கூட்டுறவு கழகத்தின் மூலம் பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவ்வகையில் இக்கூட்டுறவு கழகத்தின் மூலம் திருமண மண்டபங்களை நிர்மாணிக்கும் இலக்கில் வெற்றி பெற முடியும்.
இந்தியர்களுக்கென மண்டபங்கள் இல்லையே என்ற குறையை போக்கும் வகையில் இக்கூட்டுறவு கழகம் மண்டபங்களை நிர்மாணிக்கும். இதற்கு முன்னர் குடும்ப கூட்டுறவு கழகத்தின் மூலம் சில முதலீட்டாளர்களின் உதவியோடு 5 மண்டபங்களை நிர்மாணித்துள்ளேன்.
அடுத்ததாக 6ஆவது மண்டபம் நிச்சயம் பேரா பொருளாதார கூட்டுறவு கழகத்தின் மூலம் நிர்மாணிக்கப்படும் என கூறிய டத்தோஶ்ரீ சக்திவேல், கூட்டுறவு கழக இயக்குனர்கள், உறுப்பினர்களின் ஆதரவோடு நிச்சயம் அது சாத்தியமாகும் என்றார்.
நேற்று முன்தினம் இங்குள்ள டத்தோஶ்ரீ டாக்டர் ஏ.கே.சக்திவேல் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் அறிமுக நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
மேலும், அடுத்தாண்டு நடைபெறும் முதலாவது கூட்டத்தில் இக்கூட்டுறவில் அங்கம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு நிச்சயம் 8 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும்.
இங்குள்ள பல கூட்டுறவு கழகங்கள் 100 ஏக்கர், 500 ஏக்கர் நிலம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் நாங்கள் 3 ஏக்கர் நிலத்தை மட்டுமே கேட்கிறோம். மண்டபத்தை கட்டுவதற்கு நிலம் மட்டும் ஒதுக்கினால் போதும் என இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் பின் வரிசை முகமட்டிடம் கோரிக்கை விடுத்தார்.
பேரா பொருளாதார முன்னேற்றக் கூட்டுறவு கழகத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய முகமட் அராஃபாட், இந்த கூட்டுறவு கழகத்தை அமைத்துள்ள டத்தோஶ்ரீ சக்திவேல், அவர்தம் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
நாட்டில் பல கூட்டுறவு கழகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல வெற்றி கண்டுள்ளன. சில தோல்வியை சந்தித்துள்ளன. நஷ்டத்தை பற்றி கவலைபடாமல் உங்களது திட்டங்களை வெற்றிகரமான செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இக்கூட்டுறவு கழகத்திற்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் இருக்கும் என குறிப்பிட்ட அவர், 3 ஏக்கர் நில கோரிக்கையை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அராஃபாட் கூறினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு கழகத்தின் வாரிய இயக்குனர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை களைய 'தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு' அமைந்தது
ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து ஆராய தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் நிலம், கட்டடம், அடிப்படை வசதியின்மை, மாணவர் எண்ணிக்கை சரிவு, கற்றல், கற்பித்தல் நடவடிக்கை போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய இக்குழு களப்பணியாற்றும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகள் மட்டுமல்லாது இடைநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கல்வி பிரச்சினைகளையும் இக்குழு கவனத்தில் கொள்ளும் என குறிப்பிட்ட அவர், மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாக்க இத்தகைய நடவடிக்கை அவசியமானது என்றார்.
மேலும், இந்த குழுவுக்கு கூடிய விரைவில் மாநில ஆட்சிக்குழுவின் அங்கீகாரம் கிடைப்பதற்கான வழிவகைகள் காணப்படும் என அவர் சொன்னார்.
சிவநேசனை ஆலோசகராகக் கொண்டு அமைந்துள்ள இக்குழுவின் தலைவராக க.குணசேகரன், துணைத் தலைவராக உ.முத்துசாமி, செயலாளராக பூபாலன், ஆரம்பப்பள்ளி விவகாரங்களுக்கு பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன், இடைநிலைப்பள்ளி விவகாரங்களுக்கு பேரா மாநில கல்வி இலாகா துணை இயக்குனர் (தமிழ்மொழி) சந்திரசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)