Sunday 31 December 2017

'கடுமையான தலைவலியில் பாதிக்கப்பட்டிருந்தார் திருமதி சுமதி'- உறவினர் தகவல்


ஜோகூர்பாரு-
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருமதி சுமதி, தனது 10 வயது மகளை கழுத்து நெறித்து கொண்ட பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் பல நாட்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது மகளை கழுத்து நெறித்து கொன்றுவிட்டு திருமதி சுமதி தற்கொலை செய்துக் கொண்டதை கண்டு பதறி போன கணவர் கிருஷ்ணகுமார் போலீசில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து பேசிய உறவினர் ஒருவர்,  'திருமதி சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது இவ்வாண்டு தொடக்கத்தில்தான் தெரிய வந்தது. அதற்காக அவர் பல சிகிச்சைகளையும் கீமோதெராபி சிகிச்சையும் மேற்கொண்டார். இதனால் கடுமையான தலைவலியில் அவதிபடுவதாக  என்னிடம் பலமுறை குறைபட்டு கொண்டார்' என கூறினார்.

திருமதி சுமதியின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டதாலும் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால் அவரின் 16, 19 வயதுடைய இரு மகன்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தம்போயிலுள்ள பேரங்காடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சுமதியின் கணவர் கிருஷ்ணகுமார், வீட்டின் மேல் மாடியில் உயிரற்ற மகளின் உடலை கண்டுள்ளார்.  அவரின் மனைவி ஜிம் அறையில் தூக்கு மாட்டிக் கொண்டதை கண்டு அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

'மக்களின் பார்வையில் இன்றைய ஊடகமும் நிருபர்களும்'புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'கத்தியை விட கூர்மையானது பேனா முனை' என்ற பழமொழி நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. ஊகடகத்தின் வலிமையை இதை விட சிறப்பாக யாருமே சொல்ல முடியாது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களாட்சி மாண்புடன் விளங்குவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அரசு அதனை செய்யத் தவறினால் தட்டிக் கேட்கும் முதல் ஆளுமையும் ஊடகத்திடமே உள்ளது.

ஒரு நாடு சுதந்திரத்தோடும் வெளிப்படைத் தன்மையுடனும் செயலாற்றுகிறது என்பதற்கு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திர தன்மையை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு இல்லாமலும் (சில விதிமுறைகள் உட்பட்டு) சர்வாதிகார நாட்டில் ஊடகங்கள் மீது அடக்குமுறை கையாளப்படுவதும் இயல்பானதே.

ஊடகங்களால் ஒரு புரட்சியை உருவாக்கவும் முடியும்; போரை நிகழ்த்தி காட்டவும் முடியும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அத்தகைய பொறுப்புணர்வுமிக்க  ஊடகத்துறை  இன்று எந்தளவு நம்பிக்கை பாத்திரமாக உள்ளது  என்பதே கேள்விக்குறியாகும்.

நமது நாட்டில் (மலேசியாவில்) அச்சு ஊடகங்களே மக்களிடம் பிரசித்தி பெற்றவையாக தற்போது திகழ்கின்றன. மின்னியல் ஊடகங்கள் அண்மைய காலமாகதான் இங்கு தலைதூக்குகின்ற என்ற நிலையில் இத்தனை ஆண்டுகளாக மக்களை கட்டிப் போட்ட அச்சு ஊடகங்கள் இன்று மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனவா?.

ஊடகங்களை பொறுத்தவரை பேனாவை கையில் ஏந்தி களமிறங்கும் நிருபர்களே மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கின்றனர். மக்களை அணுகி அவர்களின் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் நாளிதழில் இடம்பெறச் செய்யும் நிருபர்கள்  மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றனரா?, ஊடகங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் என்ன? 'பேனாக்காரன்' எனும் நிருபர்கள் புரட்சியாளர்களா- சந்தர்ப்பவாதிகளா?, நிருபர்கள்  எப்படி இருக்க வேண்டும்?, ஊடகங்கள் நடுநிலைபோக்கை கடைபிடிக்கின்றனவா?,  நிருபர்கள் மீது மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

இத்தனை கேள்விகளையும் உள்ளடக்கிய 'மக்களின் மனவோட்டங்கள்'  விரைவில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறவுள்ளது.

போலீஸ் அதிரடி; துப்பாக்கிச் சூட்டில் 3 ஆடவர்கள் பலிகோம்பாக்-
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என நம்பப்படும் மூன்று கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் ஜாலான் சுங்கை துவா, உலு யாம் பாரு பத்துகேவ்ஸ் பகுதியில்  நேற்று மாலை நிகழ்ந்தது.

பண்டார் பாரு செலாயாங்கிலுள்ள வர்த்தக மையத்திலிருந்து வெள்ளை நிற சுசூக்கி சுவிஸ்ட் ரகக் காரில் ஏறிச் சென்ற இவர்களை கோம்பாக் மாவட்ட போலீசார் சுற்றி வளைக்க முற்பட்டனர்.

போலீசாரை கண்ட சந்தேக நபர்கல் தங்களது வாகனத்தில் தப்பிக்க முயற்சித்துள்ளனர். 30 மணி நேர துரத்தலுக்கு பின்னர் பண்டார் பாரு செலாயாங்கிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்களை சுற்றி வளைத்த வேளையில் போலீசார்  சரணடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அச்சமயம் சந்தேக பேர்வழி ஒருவன் போலீசார் நோக்கி சுட்டான். வேறு வழியில்லாததால் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என சிலாங்கூர் மாநில குற்றவியல் புலனாய்வு பிரிவுத் தலைவர் எஸ்ஏசி  ஃபட்சில் அஹ்மாட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர்களின் காரை பரிசோதனை செய்ததில் பெரெட்டா வகை துப்பாக்கியும் இரண்டு பாராங் கத்திகளும் இருந்தன. சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்களிடம் அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் எனவும் அவர் சொன்னார்.

இம்மூவரும் சிலாங்கூரிலுள்ள வங்கிக்கு வெளியே நடந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைவர்கள் என சந்தேகிப்பதாகவும் இக்கும்பல் ஈடுபட்ட கொள்ளைச் சம்பங்களின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாண்டு மட்டும் வங்கிக்கு வெளியே 86 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதில் 8 மில்லியன் வெள்ளி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் இம்மூவர் உள்ளடங்கிய கும்பலின் கைவரிசையாக இது இருக்கலாம என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இக்கும்பல் சிலாங்கூர் மாநிலம் மட்டுமின்றி கோலாம்பூர், நெகிரி செம்பிலான் ஆகியவற்றிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிற்பகலில் ஷா ஆலமில் வங்கிக்கு வெளியே நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 100,000 வெள்ளி நஷ்டமானது என்றார் அவர்.

தேசிய முன்னணியின் வெற்றிக்காக தேர்தல் இயந்திரங்கள் முடுக்கிவிடப்படும்- டத்தோ சம்பந்தன்

ரா.தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய ஐபிஎப் கட்சி தனது தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடப்படுகிறது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதற்கேற்ப தேர்தலுக்கான ஆயத்த நிலை குறித்து கட்சி தொகுதித் தலைவர்களிடம் கலந்தாலோசிக்கப்படுகிறது.

தற்போது பேராக் மாநிலத்தில் 780 புதிய வாக்காளர்களை கட்சி பதிவு செய்துள்ளது. குடும்ப உறுப்பினர்களை வாக்காளர்களாக மாற்றும் நடவடிக்கையான இது, தேசிய முன்னணி வலுவான ஆதரவாக மாறும் என்பதில் ஐயமில்லை என நேற்று இங்குள்ள மாநில ஐபிஎப் அலுவலகத்தில் நடைபெற்ற மாநில தொகுதித் தலைவர்களுடனான சந்திப்பின்போது டத்தோ சம்பந்தன் குறிப்பிட்டார்.

மாநில தேர்தல் இயந்திரம் முதன் முதலாக தம்பூனில் தொடங்கப்படவுள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தேசிய  முன்னணியிடம் கோரியுள்ளோம். தேர்தல் எல்லை சீரமைப்பு முடிந்ததும் புதிய தொகுதிகள் அடையாளம் காணும்போது ஐபிஎப் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்

இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்ப்பள்ளிக்கு உதவி, மலேசிய இந்தியர்களுக்கான பெருவரைவு திட்டம், செடிக் நிதியுதவி, அடையாள அட்டை விவகாரத்திற்கு தீர்வு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தேசிய முன்னணிக்கான இந்தியர்களின் ஆதரவு நிலைபெற்றிட ஐபிஎப் கட்சி களப்பளி ஆற்றும் என குறிப்பிட்ட செனட்டருமான டத்தோ சம்பந்தன், பேராக் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி நிலைபெற கட்சி உறுப்பினர்கள் பாடுபடுவர் என்றார்.

இச்சந்திப்பில் பேராக் மாநில ஐபிஎப் கட்சி தலைவர் மாணிக்கம், செயலாளர் சங்கர் உட்பட செயலவையினரும் தொகுதித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Saturday 30 December 2017

புற்றுநோய் பாதிப்பு; மகளை கொலை செய்த பின் தாய் தற்கொலை

ஜோகூர்பாரு-
தனது 10 வயது மகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஓர் இந்திய  குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் ஜோகூர் பாரு, தாமான் ஸ்கூடாய் இண்டா எனுமிடத்தில் நேற்று இரவு நிகழ்ந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குடும்ப மாதான திருமதி சுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது மகள் அர்த்தினி கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான சுமதி இரவு 7.00 மணியளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதோடு சிறுமியின் கழுத்து பகுதியில் நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிவதாக ஜோகூர்பாரு துணை ஓசிபிடி சூப்பிரிடென்டண்ட் பே எங் லாய் தெரிவித்தார்.

பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால் அப்பெண்ணின் கணவரும் அவரின் 16, 19 வயதுடைய இரு மகன்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தம்போயிலுள்ள பேரங்காடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சுமதியின் கணவர் கிருஷ்ணகுமார், வீட்டின் மேல் மாடியில் உயிரற்ற மகளின் உடலை கண்டுள்ளார்.  அவரின் மனைவி ஜிம் அறையில் தூக்கு மாட்டிக் கொண்டதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான அவர், இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார் என அவர் சொன்னார்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் உள்ளூர் கலைஞர் 'புன்னகைப் பூ' கீதா


கோலாலம்பூர்-
பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர். ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குனர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “காவல்” திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு ‘இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக நடித்த மலேசியாவின் முதல் நடிகை” எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓர் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான 'காவல்' திரைப்படத்தில் தமிழ்த்திரைப்படவுலகில் நன்கு அறிமுகமான நடிகர் விமல், சமுத்திரகனி ஆகியோர்  நடித்திருந்தார்கள். இவர்களுடன் நம் உள்ளூர் கலைஞர் கீதா கதாநாயகி வலம் வந்த இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்களில் வெளியீடு கண்டது.

“மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இன்று எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த அங்கீகாரம் வெறும் பதிவு மட்டுமல்ல. என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் சமர்ப்பணமாகும். காவல் திரைப்படத்தில் கதாநாயகியாக என்னை அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கிய இயக்குனர் நாகேந்திரனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாகும். மேலும், இந்தக் கலையுலகில் பல சாதனைகளைப் படைத்து நடிப்புத் துறையில் ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்துவதோடு தமிழ்த்திரைப்படங்களில் என்னுடைய பயணத்தைத் தொடர்வேன்”, என்றார் கீதா.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஆகுவதற்கு முன்பு, புன்னகைப் பூ கீதா 2000-ஆம் ஆண்டுகளில் தன்னுடைய கலைப் பயணத்தை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளராக அறிமுகமானார். இவரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அதிகமான வசூலை ஈட்டி 175 நாட்களுக்கு திரையரங்களில் வெற்றி நடைபோட்டது. மேலும், மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் ‘இந்தியாவில் தமிழ் திரைப்படத்தை தயாரித்த மலேசியாவின் முதல் தயாரிப்பாளர்” எனும் அங்கீகாரமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, ‘குண்டக்க மண்டக்க’, ‘பட்டியல்’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘நர்த்தகி’  போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் ஆண்டில் கீதா மலேசியாவில் அதிக வசூலை ஈட்டிய உள்ளூர் தமிழ்திரைப்படங்களான ‘மைந்தன்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இவருடைய நடிப்புத் திறனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 8ஆவது எடிசன் விருது விழாவில் புன்னகைப்பூ கீதாவிற்கு ‘சிறந்த வெளிநாட்டு கலைஞர்’ விருது வழங்கப்பட்டது.

கீதா தற்போது புதியதொரு கதாப்பாத்திரத்துடன் குழந்தைகளை மையப்படுத்தி வெளிவரவுள்ள ‘சங்கு சக்கரம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மாரிசன் இயக்கத்தில் குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான கதையுடன் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ‘சங்கு சக்கரம்’ மலேசிய திரையரங்களில் வெளியீடு காணவுள்ளது.

அன்வாரின் விடுதலைக்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தல்? - வலுக்கும் ஆருடம்
ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் எதிர்க்கட்சித்  தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹமின் விடுதலைக்கு முன்னதாகவே நாட்டின்  14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என கருதப்படுகிறது.

ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறைத் தண்டனை பெற்று வரும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்தாண்டு மே மாதம் சிறையிலிருந்து வெளியாகிறார்.

அன்வார் விடுதலையாகி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர் மீதான விசுவாசத்தின் பேரில் வாக்காளர்களை கவர்ந்திழுக்க முடியும். இதுவே எதிர்க்கட்சி மீதான ஆதரவை பெருகச் செய்து விடும்.

அதோடு, எதிர்க்க்கட்சிக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஓர் இணக்கமான உறவையும் ஏற்படுத்துவதோடு தொகுதி பங்கீடு பிரச்சினைகள் தலைதூக்கா வண்ணம் சுமூகமான முறையில் அவற்றை கையாளும் தகுதி டத்தோஶ்ரீ அன்வாரிடம் உண்டு.

\இதனால் எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் பலம் வாய்ந்த கூட்டணியாக உருவெடுப்பதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது. டத்தோஶ்ரீ அன்வாரின் பிரச்சாரத்தால் வலுவான ஆதரவும் வெற்றி தருணமும் ஈட்ட முடியும்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றி பெறக்கூடாது என்பதில் தீவிரம் காட்டும் தேசிய முன்னணி டத்தோஶ்ரீ அன்வாரின் விடுதலைக்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தலை நடத்தி முடித்து விடும் என கருதப்படுகிறது.

அதன்படி பார்த்தால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஆருடம் வலுத்து வருகிறது.

உள்ளூர் வேட்பாளர்; இறைவன் ஆசீர்வதித்தால் நிறைவேறும்- டத்தோஶ்ரீ தேவமணி


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளுர் வேட்பாளர் களமிறங்குவது இறைவனின் ஆசீர்வாதமே. இறைவன் ஆசீர்வதித்தால் அது நடந்தேறும் என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் களமிறங்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.  உள்ளூர் வேட்பாளர் குறித்து கருத்து கேட்டபோது, வேட்பாளர் யார் என்பதை தேமு தலைமைத்துவம் முடிவு செய்யும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  உள்ளூர் வேட்பாளர் விவகாரமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்ற அவர், இறைவன் ஆசீர்வதித்தால் அது நடந்தேறும் என்றார்.

இது குறித்து சுங்கை சிப்புட்  தொகுதி மஇகா தலைவர் எம்.இளங்கோவனிடம் கேட்டபோது, இத்தொகுதியில் வேட்பாளராக களமிறங்க 4 பேரின் பெயர்களை தேமு தலைமைத்துவத்திடம் சமர்ப்பித்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் முன்பு தெரிவித்திருந்தார். அதில் உள்ளூர் மஇகாவினர் ஒருவரின் பெயரும் இருப்பதாக கூறினார்.

அவ்வகையில் உள்ளூர் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேட்பாளர் யாராக இருந்தாலும் தேமு வெற்றியை முன்னிறுத்தியே தொகுதி  மஇகா  களப்பணி ஆற்றும் என இளங்கோவன் குறிப்பிட்டார்.

மீண்டும் 'இயக்குனர்' அவதாரம்- தனுஷ் டுவிட்


சென்னை-
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்த தனுஷ் 'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இத்திரைப்படத்தின்  மூலம் வெற்றி இயக்குனராகவும் தனது முத்திரை பதித்தார் தனுஷ்.
இந்நிலையில்  தனது அடுத்த படத்தை பற்றி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் தனுஷ். ஶ்ரீ  தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தனது அடுத்த படத்தை இயக்குகிறார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தற்போது  'வடசென்னை', என்னை நோக்கி பாயும் தோட்டா', 'மாரி-2' ஆகிய படங்களிலும்

தான் அடுத்து இயக்கப்போகும் படத்தை பற்றி டுவிட்டரில்  பதிவிட்டுள்ள  தனுஷ், ''எக்ஸ்டிரானரி ஜர்னி ஆஃப் ஃபாகிர்'  என்ற ஆங்கில படத்தின் மூலம் ஹாலிவூட்டிலும் கால் பதிக்கின்றார்.

தீ விபத்து: கம்போங் பாருவில் 15 வீடுகள் தீக்கிரை


கோலாலம்பூர்-
இங்குள்ள கம்போங் பாருவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் 15 வீடுகள் எரிந்து தீக்கிரையாயின. இந்த தீச்சம்பவம் காலை 8.00 மணியளவில் வெளிநாட்டினர் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் ஏற்பட்ட தீயால் நிகழ்ந்தது.

காலை 9.30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தித்திவங்சா, ஹங் துவா, ஜாலான் துன் ரசாக், கிராமாட், பண்டார் துன் ரசாக் ஆகிய தீயணைப்பு,  நிலையத்திலிருந்து வந்த 24 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என தீயணைப்பு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

மும்பையில் விபரீதம்; துணி ஆலை தீ விபத்தில் 15 பேர் பலி


மும்பை-
மும்பையில்  செயல்படும் கமலா துணி ஆலையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15  பேர் பலியானதோடு 16 பேர் தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர்.

மும்பையில் பிரசித்திப் பெற்ற சேனாதிபதி மார்க், லோவர் பரேல் கட்டடத்தில் பின்னிரவு 12.30 மணியளவில்  துணி ஆலையின் மூன்றாவது மாடியில் தீப்பற்றியது. இதனை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலில் சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

தீப்புண் காயங்களுக்கு ஆளானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக மீட்புப்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தீச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Friday 29 December 2017

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் அன்பளிப்பு


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
அடுத்தாண்டு பள்ளிச் செல்லும் மாணவர்களுக்காக தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி), இகுய்டி நேஷனல் பெர்ஹாட் (இகுய்னெஸ்) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இங்குள்ள 7 தமிழ்ப்பள்ளிகள், 3 இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

பள்ளி செல்லும் மாணவர்களால் பெற்றோர்களுக்கு ஏற்படக்கூடிய சுமையை குறைக்கும் வகையில் வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

பிரதமர் துறை துணை அமைச்சரும் மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி இந்த புத்தகப்பைகளை மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.

சுங்கை சிப்புட் மஇகா கல்வி குழு பொறுப்பாளர்கள் சுண்முக வேலு, சுலைமான் ஆகியோர் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில்  சுங்கை சிப்புட் மஇகா தலைவர்  இளங்கோவன் முத்து, செயலாளர் கி.மணிமாறன், பேராக் மாநில டிஎன்பி வாரிய இயக்குனர் செல்வராஜு,  இகுய்னெஸ் அதிகாரிகள், பாடாங் ரெங்காஸ் மஇகா தொகுதித் தலைவர் சேகரன், சுங்கை சிப்புட் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி விஜயகுமாரி உட்பட கிளைத் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி மீதான 'அதிருப்தி' தேமுவை வெற்றியடையச் செய்யும்- டத்தோஶ்ரீ தேவமணி


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான வெற்றி வலுவாக உள்ளது என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயகுமார் நல்ல மனிதர். அவரை குறை சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே எதையும் மாற்றியமைத்து விட முடியாது.

எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் திகழ்வதால் இங்கு எவ்வித சேவையும் அவரால் மேற்கொள்ள முடியாது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவராக விளங்கும் அவர் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த அதிருப்தி வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும். அதனால் தேசிய முன்னணி பக்கம் மக்களின் ஆதரவு திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்களின் வலுவான ஆதரவு தேசிய முன்னணி ஆதரவாளரை வெற்றியடையச் செய்யக்கூடும் என இன்று எம்பிகேகே மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ தேவமணி இவ்வாறு கூறினார்.

மனிதத் தவறுகளால் வெள்ளப் பிரச்சினை; தீர்வு காண சிறப்பு கலந்துரையாடல் நடத்துக- டாக்டர் ஜெயகுமார் மகஜர்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு காரணம் அங்கிருந்த குட்டைகளை மூடி வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டதுதான் என குறிப்பிட்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், இங்கு ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் 8 குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்தது. ஆனால் இந்த சேதத்திற்கு குட்டைகளை மூடி வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொண்டு நீர் வேறெங்கும் செல்வதற்கான வழியில்லாததால் குடியிருப்புகளில் சேதத்தை ஏற்படுத்தியது.

ஆறுகளை அகலப்படுத்துவதாக சொல்லி ஆற்று மணலை அருகிலேயே கொட்டுவது, வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தாமல் கைவிடுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடுவது என மனிதத் தவறுகளினால் இன்று பல மக்கள் வெள்ளத்தின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், அரசுத் துறை, இலாகாக்களான மாவட்ட நில அலுவலகம்,  கோலகங்சார்  மாநகர் மன்றம், நீர்பாசன, வடிக்கால் அமைப்பு இலாகா ஆகியவற்றை கூட்டி பாதிக்கப்பட்ட மக்களுடன் சிறப்பு சந்திப்பு நடத்த வேண்டும். அதில் என்னை அழைத்தால் நானும் சில கருத்துகளை முன்வைப்பேன் என இன்று பேராக் மாநில அரசு செயலகத்தில் மகஜர் வழங்கும்போது டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி டாக்டர் ஜெயகுமார் வழங்கிய மகஜரை மந்திரி பெசாரின் அலுவலக சிறப்பு அதிகாரி அஸாட் பெற்றுக் கொண்டார்.

Thursday 28 December 2017

அறுவை சிகிச்சைக்குப்பின் விடா முயற்சியுடன் மீண்டும் போட்டிக்கு களமிறங்கும் ஜெய்


மிஸ்டர் சிலாங்கூர் 2017 பட்டத்தை கடுமையான பயிற்சிக்குப் பிறகு சாதனைப் படைத்தார் உடல் கட்டழகர் ஜெய் (வயது 20). தனது சிறு வயதில் உடல் கட்டழகர் பயிற்சியில் பல சாதனை படைக்க முயற்சி செய்து சமிபக்காலங்களில் பல சாதனைகளை படைத்துக் கொண்டு வருகின்றார்.

இப்போட்டியின்போது, எதிர்ப்பாராத நிலையில் தனது தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதன் பிறகு அவர் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டப்பின் மீண்டும் மிஸ்டர் மலேசியா 2018க்கு குறி வைக்கின்றார் ஜெய்.

அதற்கான முறையாக பயிற்சிகளை கடினமாகவும் தன்னம்பிக்கையுடனும் மேற்கொண்டு வருகின்றேன். இப்போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கு தென் கிழக்கு ஆசிய உடல் கட்டழகர் மற்றும் தேகக் கட்டுக்கான போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாகவும் அதற்கும் நான் குறி வைக்கிறேன் என இளம் கட்டழகர் ஜெய் கூறினார்.

இதனிடையே, இவர் இருமுறை மிஸ்டர் பாகங் பட்டத்தையும் மிஸ்டர் ஜிம் மலேசியா மற்றும் பல பட்டங்களை பெற்று குவித்து வருகிறார். உடல் கட்டழகர் மட்டுமில்லாது பகாங் மாநில முன்னால் கால்பந்து விளையாட்டாளராகவும் இவர் இருந்துள்ளார். “தெக்வாண்டோ” எனும் தற்காப்பு கலையில் கருப்பு வார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகங் மாநில விளையாட்டு மன்றத்தின் உடன் ஒப்பந்தத்தில் கையேழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகங் மாநில விளையாட்டு மன்றம் ஜெய்யின் பயிற்றுநராக 2013ஆம் ஆண்டு உலக கட்டழகுப் பயிற்றுநர் சோவி ஹசானை நியாமித்துள்ளனர். சோவி மற்றும் ஜெய் இருவரும் மிஸ்டர் மலேசியாவிற்கு 2018 பட்டத்தை வெல்ல தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். இவரது போட்டிக்கு பாராதம் மின்னியல் ஊடகத்தின் சார்பில் வாழ்த்துகள்.

'மீண்டும் பிரதமராக' துன் மகாதீர்; மலேசியர்கள் ஏற்பார்களா?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலே அடுத்தாண்டுக்கான சூடான, பரபரப்பான விவாதமாக உருமாறியுள்ள நிலையில் புத்ராஜெயாவை கைப்பற்றும் நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்)  வியூகமும் திட்டங்களும் வெற்றியை எட்டி பிடிக்க வழிவகுக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

புத்ராஜெயாவை கைப்பற்ற துடிக்கும் பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரே அக்கூட்டணியிம் வெற்றியை தீர்மானிக்க வல்லதாக அமைந்துள்ளது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அக்கூட்டணியின் பிரதமராக துன் டாக்டர் மகாதீர் முகம்மது பதவியேற்பதற்கக்கூடும்.
தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்திய துன் முகாதீர், இன்று தேசிய முன்னணியை எதிர்த்து எதிர்க்கட்சியின் கூட்டணியாக பிரதமராக களமிறங்குவதை எத்தனை மலேசியர்கள் ஏற்பர்?

துன் மகாதீர் சிறந்த தலைமைத்துவ பண்பாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தற்போதைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை எதிர்த்து, போர்க்கொடி தூக்கி, அம்னோவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, இன்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைமை பொறுப்பு ஏற்றுள்ள அரசியல் ஆளுமை அவரை மீண்டும் பிரதமர் பதவியேற்க வழிவகுக்குமா?

நாட்டின் மேம்பாட்டில் ஒப்பற்ற தலைவராக விளங்கிய துன் மகாதீரின் 'அரசியல் அதிகாரம்' இன்று எதிர்க்கட்சியை, ஆளும் கட்சியாக உருமாற்றிட முனைந்துள்ள நிலையில், இதனை மலேசிய வாக்காளர்கள் சாதனையாக ஏற்பார்களா, வேதனையாக பார்ப்பார்களா?

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அதிருப்தியும் நிலவுகின்ற சூழலில் பாக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு 'மகாதீர்' எனும் தனி மனிதரின் சாணக்கியம் எந்தளவு பங்காற்றும் என்பதே அனைவரின் கவனயீர்ப்பாகவும் அமைந்துள்ளது.

துன் மகாதீர்  மீண்டும் பிரதமர் ஆவதை அக்கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் பிரதிநிதிகளே விரும்பவில்லை என அறியப்படுகிறது.

ஆளும் கட்சியில் பிரதமராக இருந்து அக்கட்சிக்கு எதிராக இன்று எதிர்க்கட்சியை ஆளும்கட்சியாக உருமாற்ற முனையும் துன் மகாதீரை 'மீண்டும் பிரதமராக' மலேசியர்கள் ஏற்பார்களா?  இல்லையேல் பிரதமர் வேட்பாளராக புதியவர் ஒருவரை பக்காத்தான் கூட்டணி அறிவிப்பு செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லிம் கிட் சியாங்கிற்கு அறுவை சிகிச்சை; புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது


கோலாலம்பூர்-
ஜசெக மூத்தத் தலைவரும் கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங்கின் இடது கிட்னியில் இருந்த புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

'தனது தந்தைக்கு வழக்கமான பரிசோதனையில் அவரது இடது கிட்னியில் சிறிய கட்டி இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அது புற்றுநோயின் முதல்நிலை கட்டி என்பது தெரியவந்ததாகவும் அவரது புதல்வரும் ஜசெக பொதுச் செயலாளருமான லிம் குவான் எங் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் நலமுடன் உள்ளார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார்'. லிம் கிட் சியாங்கின் நாடாளுமன்றப் பணிகளை அவரது பிரதிநிதியான லிம் சியாம் லுவாங்கும் கேலாங் பாத்தா ஜசெக அலுவலகமும் கவனித்துக் கொள்ளும் என லிம் குவான் எங் மேலும் சொன்னார்.

ஜனவரி 3இல் தேமு உச்சமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம்?


கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றியை மீண்டும் கைவசப்படுவது தொடர்பில் அதற்கான திட்டங்களை வகுக்க தேசிய முன்னணியின் உச்சமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகல், வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கான வியூகங்கள், தீபகற்ப மலேசியாவில் தேமு சார்பில் எந்த தொகுதியில் எந்த பங்காளி கட்சியைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக களமிறக்குவது போன்றவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, தேமு உச்சமன்ற உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் ஜனவரி 12இல் தான் நடைபெறும் என சில தலைவர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது.

'திருடன்' என சந்தேகித்தில் ஆடவர் அடித்துக் கொலை; ஐவருக்கு தூக்கு- நீதிபதி தீர்ப்பு


கோலாலம்பூர்-
'திருடன்' என்ற சந்தேகத்தின்பேரில் ஓர் ஆடவரை அடித்துக் கொன்ற ஐந்து ஆடவருக்கு தூக்குதண்டனனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செந்தூல், தாமான் இந்தான் பைடூரி பகுதியிலுள்ள வி-க்ளம் ஸ்னூக்கர் மையத்தின் முன்புறம் கடந்தாண்டு மே 1ஆம் தேதி 'திருடன்' என சந்தேகப்பட்ட முகமட் யூசோப் அப்துல் காலீம் என்ற ஆடவரை கடுமையாக தாக்கி மரணம் விளைவித்ததாக அம்மையத்தின் பாதுகாவலரான எம்.யோகேஸ்வரன், இராணுவ அதிகாரிகளான முகமட் ஹைரூல் அப்துல்லா, லாரன்ஸ், ஸைடி ஸைனால், மேற்பார்வையாளரான சோங் காய் வேங் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த ஐவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி ஆணையர் முகமட் ஷாரீஃப் அபு சாமா தெரிவித்தார்.

"பொதுமக்களைப் போன்றே தாங்கள் அந்த ஆடவரை தாக்கி போலீசில் ஒப்படைக்க முயன்றதாக அந்த ஐவரும் கூறுவதை நீதிமன்றம் ஏற்காது" என கூறிய நீதிபதி, "ஒருவர் திருடனாகவே இருந்தாலும் அவரை அடித்துக் கொல்வது தவறாகும்" என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளான சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் உயிரிழந்தார்.

கார்- லோரி மோதல்: மனைவி கண்ணெதிரே கணவன் தீக்கிரை


ஜோகூர் பாரு-
டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான காரில் சிக்கிக் கொண்ட கணவர்,  மனைவியின்  கண்ணெதிரே தீக்கிரையான இங்கு நிகழ்ந்தது.
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் மூன்று வயது குழந்தை, 30 வயதான மனைவியுடன் வாகனத்தில் பயணித்த 29 வயது ஆடவர், லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் இருக்கையில் சிக்கிக் கொண்டார்.

காரில் தீ பரவ ஆரம்பித்ததும் பின்னருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணையும் குழந்தையும் பொதுமக்கள் மீட்டனர். இருக்கையில் சிக்கிக் கொண்ட ஆடவரை மீட்பதற்குள் தீ வேகமாக பரவியதால் ஆடவரை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, காரில் சிக்கி தீக்கிரையான அந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை நடத்துவதற்காக கூலாய் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது என தீயணைப்பு, மீட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்  அஸிஸான் அஸிஸ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் மளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என அவர் மேலும் சொன்னார்.

Wednesday 27 December 2017

டிச.31இல் அரசியல் முடிவை அறிவிப்பேன் - ரஜினிகாந்த்

சென்னை-
அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31ஆம் தேதி தனது முடிவை அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கம் திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை இன்று சந்தித்துள்ள ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.

போர் என்றால் அது அரசியல் தான் எனவும் யுத்தத்திற்கு சென்றால் ஜெயிக்க வேண்டும் எனவும் கூறியுள்ள ரஜினி, நான் அரசியலுக்கு வருவது புதிதல்ல; 1996ஆம் ஆண்டு முதலே அரசியலில் உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் ரசிகர்களை இறுதியாக சந்தித்த ரஜினிகாந்த்,  காலா படபிடிப்பு, மழை வெள்ளம் போன்ற காரணங்களால் ரசிகர்களை சந்திப்பதற்கு காலதாமதம் ஆகியுள்ளது என்றார்.

பல ஆண்டுகளாக ரஜினி அரசியலில் ஈடுபடுவாரா? என்ற எதிர்பார்ப்புக்கு டிசம்பர் 31ஆம் தேதி முடிவு காணப்படலாம்.

விவசாயிகள் நலன் காக்க சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துக; அ.சிவநேசன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்காய்-
காய்கறிகளை பயிரிடுபவர்களை விட அதை சந்தையில் விற்பனை செய்யும் இடைதர்கர்களே லாபம் அடைவதால் விவசாயிகளின் நலன் காக்கப்பட மத்திய, மாநில அரசுகளும் விவசாயம் சார்ந்த துறைகளும் சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

காய்கறிகளை பயிரிட்டு அதனை அறுவடை செய்யும் வரை விவசாயிகளே பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். உரம் விலையேற்றம், மழைக்காலங்களில் சேதம் என விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கான லாபத்தை அடையாத நிலையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசாங்கம் சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என அண்மையில் சுங்காய் விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்த விருந்துபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய சிவநேசன் இவ்வாறு கூறினார்.

நாணய மதிப்பு சரிவினால் உர மூட்டைகளின் விலையேற்றம் விவசாயிகளை வெகுவாக பாதித்தது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உர மூட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய இன்னலை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, 2018ஆம் ஆண்டு வரவு செலவு தாக்கலின்போது கூட விவசாயிகளுக்காக சிறப்பு மானியங்களோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரும் இன்னலுக்கிடையே தங்களது விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.

மேலும், ஃபாமா எனப்படும் மத்திய வேளாண்மை விற்பனை இலாகா மேற்கொள்ளும் சந்தை நடவடிக்கைகளில் இடைதரகர்களாக செயல்படும் விற்பனையாளர்களே பங்கேற்கின்றனர். அங்கு விவசாயிகள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

இத்தகைய சூழலில் சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டால் விவசாயிகள் மீதுதான் கோபம் திரும்புகிறது. விற்பனையாளர்களும் இடைதரகர்களுமே காய்கறிகளின் விலையை உயர்த்தி லாபம்  பார்க்கின்றனர். ஆனால் கடுமையாக உழைத்து பயிரிட்டு, விவசாயம் செய்யும் விவசாயிகளிகளின் நலன் காக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாததுதான் வேதனையான ஒன்றாகும் என சிவநேசன் தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மா ஹங் சூன், தேசிய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சியா யீ மோங் உட்பட 700க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

உலகை உலுக்கிய 'சுனாமி' பேரலை; 13 ஆண்டுகளை கடந்தும் நீங்காத துயரம்


ரா.தங்கமணி

2004ஆம் ஆண்டு யாருமே அறிந்திராத மிகப் பெரிய பேரழிவு சம்பவம் நிகழ்ந்ததென்றால் அது 'சுனாமி' பேரலை தாக்குதல்தான். டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியா, சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் 'சுனாமி' அலைகளை ஏற்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'சுனாமி' என்பதை யாருமே அறிந்திராத அக்காலகட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவில் விபரீதத்தை அறியும் முன்னரே லட்சக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்பட்டதுதான் இந்த பேரழிவின் உச்சக்கட்டமாகும்.

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ரம்மியமாக பார்த்து ரசிப்பதற்கும் கரையில் நின்று விளையாடுவதற்கும்  இதமான காற்றையும் உள்வாங்குவதற்கு மிக அமைதியாக வழிவிட்டு கொண்டிருந்த கடல் அலையில் இந்த கொடூர சீற்றம் இந்தோனேசியா மட்டுமல்லாது, இந்தியா, அந்தமான், நிக்கோபார் தீவுகள், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மியான்மார், மாலத்தீவு, சோமாலியா, தான்சானியா உட்பட பல நாடுகளை தாக்கியது.

சுனாமி தாக்குதலில் இந்தோனேசியாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர். அதே போன்று பல நாடுகளில் மக்கள் பலியானதோடு பெரும்பாலானோர் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர்.

உறவுகளை பறிகொடுத்த நிலையில் கண்ணீர் கடலில் தத்தளித்த மக்கள் உயிரற்ற பல உடல்களை மீட்டு ஒரே புதைக்குழியில் புதைத்த சம்பவங்களும் அன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருந்தன.

இந்த சுனாமி பேரலைக்குப் பின்னர் சிறிய, பெரிய அளவில் சுனாமி தாக்குதல் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தாலும் 2004இல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலே இன்றும் பலரது நினைவுகளில் நீங்காத துயரமாக நீடிக்கிறது.

சுனாமி தாக்குதல் நடந்து இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைகின்ற வேளையில் இன்னமும் அதன் சோகம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

மலேசிய கருணை அறவாரியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்களுக்கான காசோலை வழங்கப்பட்டது


சுங்கை சிப்புட்-
அடுத்தாண்டுக்கான பள்ளித் தவணைக் காலம் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், புத்தகப்பை, காலணி,பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை பொது இயக்கங்களும் அரசியல் கட்சியினரும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வகையில் வறுமை சூழலில் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், காலணி, புத்தகப்பை, காலுறை, உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான காசோலையை அண்மையில்  மலேசிய கருணை அறவாரியம் வழங்கியது.

இவ்வட்டாரத்தில் உள்ள 7 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 110 மாண்வர்களுக்கு இந்த காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையைக் கொண்டு அருகிலுள்ள தெ ஸ்டோர் பேரங்காடியில் அவர்களை இப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அறவாரியத்தின் உறுப்பினர்களாக 150 பேர் மாதந்தோறும் வழங்கும் நன்கொடையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான இத்தகைய நடவடிக்கைகம் மேற்கொள்ளப்படுகின்றன என அதன் தலைவர் குணாளன் சேகரன் தெரிவித்தார்.

இந்த அறவாரியத்தின் தோற்றுனர் இம்மானுவேல் ஜோசப்பின் வழிகாட்டல் மூலம் கூலிம், சுங்கைப்பட்டாணி, பினாங்கு, நிபோங் தெபால், பட்டவொர்த் உட்பட பல இடங்கள் மாணவர்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பள்ளி தொடங்கும்போது மாணவர்கள் புது ஆடை உடுத்தி புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனும் நோக்கில் பள்ளிச் சீருடை, புத்தகப்பை, காலணி போன்றவற்றை வழங்குவதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கத்தின்  சுங்கை சிப்புட்  தலைவர் ஜெயராமன், கோபாலன், கதிர்வேலு, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினர்.