Friday 31 May 2019

‘கிம்மா இருந்தாலும் மஇகாவை மறந்துடாதீங்க’- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
கிம்மா போன்ற கட்சி உங்களை பிரதிநிதிப்பதற்கு இருந்தாலும் மஇகாவை மறந்து விட வேண்டாம் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்திய முஸ்லீம் சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.

மஇகாவின் முன்னேற்றகரமான வளர்ச்சி பாதையில் இந்திய முஸ்லீம் சமூகத்தினரின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. முஸ்லீம் சமூகத்தினர் ஆதரவு மஇகாவுக்கு இன்னும் ஆழமானதாக அமைந்திட வேண்டும்.

முன்பு மஇகாவின் மிகப் பெரும் பலமாக முஸ்லீம் சமூகத்தினர் திகழ்ந்தனர். டான்ஶ்ரீ உபைதுல்லா போன்ற பல இந்திய முஸ்லீம் தலைவர்கள் மஇகாவின் இமாலய வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

இந்திய முஸ்லீம் சமூகத்தினரின் பங்களிப்பை நீக்கி மஇகாவின் சரித்திரத்தை எழுதி விட முடியாது. அந்தளவுக்கு இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் மஇகாவுக்கும்  நெருக்கமான உறவு உண்டு.

மத ரீதியில் வேறுபட்டிருந்தாலும் தமிழ் மொழியால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இன்னும் சொல்லப் போனால் இந்திய முஸ்லீம் சமூகத்தினரிடையேயான தமிழ் மொழி எங்களுக்கு ஒரு முன்னுதராணமாகும்.

இந்திய முஸ்லீம் சமூகத்தினரை பிரதிநிதிப்பதற்காக ‘கிம்மா’ கட்சி இருந்தாலும் மஇகாவை மறந்து விட வேண்டாம்.  அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் மஇகா இந்திய முஸ்லீம் சமூகத்தினரையும் மறந்து விடாது  என நேற்று மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில்  உரையாற்றும்போது மேலவை தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மத்திய செயலவை இடம்

மஇகா மத்திய செயலவையில் முன்பு முஸ்லீம் சமூகத்தினர் இடம்பெற்றிருந்த நிலையில் சில ஆண்டு காலமாக அவர்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறாதது பெரும் ஆதங்கமாக உள்ளது.

அந்த ஆதங்கத்தை போக்கும் வகையில் கூடிய விரையில் இந்திய முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மஇகா மத்திய செயலவை இடம்பெறுவார். நியமிக்கப்படும் நபர் யார்? என்பது பிறகு முடிவு செய்யபடும் என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ சைட் இப்ராஹிம், ம இகாவின் உதவித் தலைவர்கள் டத்தோ தோ.முருகையா, டத்தோ சி.சிவராஜ், தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.அசோஜன், நிர்வாகச் செயலாளார் டத்தோ ஏ.கே.ராமலிங்கம், டத்தோ ப.கமலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் ‘Jom Shopping Perayaan’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
விரைவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை வசதி குறைந்த முஸ்லீம் அன்பர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனும் அடிப்படையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில அரசின் ‘Jom Shopping Perayaan’ எனும் திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு  கெமுனிங் உத்தாமாவில் உள்ள ஜெயண்ட் பேரங்காடியில் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில் 450 முஸ்லீம் அன்பர்களுக்கு இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

நோன்புப் பெருநாளை அனைத்து முஸ்லீம் அன்பர்களும் கொண்டாடி மகிழும் வேளையில் வசதி குறைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பெருநாள் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள இந்த பற்றுச்சீட்டு பேருதவியாக இருக்கும் என்பதன் அடிப்படையில் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday 30 May 2019

12 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின; இருவர் படுகாயம்

நீலாய்-

12 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மதியம் 5.30 மணியளவில் இங்கு ஜாலான் பாத்தாங் பெனார் கிலோமீட்டர் 6.6 இல் நிகழ்ந்த இச்சாலை விபத்தில் 7 வாகனங்கள், 2 எம்பிவி கார்கள்,  லோரி,  டெக்சி, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இவ்விபத்து குறித்து போலீஸ், தீயணைப்புப் படை விசாரித்து வருகிறது.

Wednesday 29 May 2019

சட்டவிரோதமான கழிவுகள் இறக்குமதி; சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்படும்

போர்ட்கிள்ளான் -

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள 60 கொள்கலனில் உள்ள குப்பைகள்  அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று  எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.

கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த 60 கொள்கலன்களும் கண்டறியப்பட்டதாகவும் இதில் 450 மெட்ரிக் டன் அடங்கிய 10 கொள்கலன்கள் சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சவுதி அரேபியா, வங்காளதேசம், ஐக்கிய சிற்றரசு, ஆகிய நாடுகளைச் சேர்ந்ததாகும்.

இன்று கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 123 கொள்கலன்களில் 
சோதனை செய்யப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கழிவுப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

450 மெட்ரிக் டன் அடங்கிய 10 கொள்கலன்களை இன்னும் 14 நாட்களுக்குள் தத்தம் நாடுகளுக்கு அனுப்ப வேண்டிம் என்று அதனை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் குப்பைகளை கொட்டுவதற்கு மலேசியா ‘குப்பை நாடல்ல’. குப்பைகளை யார் இங்கு அனுப்பினாலும் திரும்ப நாங்கள் அனுப்புவோம். அதில் மிக உறுதியாக உள்ளோம். மிகச் சிறிய நாடாக இருந்தாலும் அதனை எதிர்த்து போராடுவோம். வளர்ந்த நாடுகள் எங்களை அவமதிக்க விடமாட்டோம். சட்டவிரோதமான முறையில் இங்கு கழிவுகளை  இறக்குமதி செய்யும் தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெறுகிறாரா முகமட் அராஃபாட்?

ரா.தங்கமணி


ஈப்போ-
பேரா மாநில ஆட்சிக்குழுவில் அதிரடி மாற்றம் நிகழக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் புதிய ஆட்சிக்குழுவில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது.
அண்மையில் பேரா மாநில ஆட்சிக்குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்படக்கூடும் என்ற பேச்சு பரவலாக எழுந்த நிலையில் தற்போது ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள அப்துல் அஸிஸ் பாரி, அப்துல் யுனுஸ் ஜமாரி ஆகியோர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஆட்சிக்குழு சீரமைக்கப்படும் வேளையில் முகமட் அராஃபாட் புதிய ஆட்சிக்குழுவில் இடம்பெறக்கூடும் என நம்பப்படுகிறது.

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் ஆட்சிக்குழுவை மாநில மந்திரி பெசார் முகமட் அஹ்மாட் பைசால் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 28 May 2019

டோல் அகற்றம்; அரசுக்கு நிதிச் சுமையே- பிரதமர்

கோலாலம்பூர்-
நாட்டிலுள்ள டோல்களை அகற்றினால் அது அரசாங்கத்திற்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தி விடும் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலை டோல்களை அகற்றினால் அரசாங்கத்திற்கு வெ. 3,000 கோடி  செலவாகும். அந்த தொகையை நாட்டின் கடனை அடைக்க பயன்படுத்தலாம். அரசாங்கத்தின் நிதிச் சுமையும் இதனால் குறையும்.

டோல் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. ஆயினும் இப்போதைக்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இரண்டாம் ஆண்டில் காலடி வைத்துள்ள நடப்பு அரசாங்கம் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மூத்த ஆலோசகர் மன்றத்தின் தலைவர் துன் டாய்ம் ஸைனுடின் கூறியிருந்தது தொடர்பில் மகாதீர் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் டோல் கட்டணம் அகற்றப்படும் என்பதும் உள்ளடங்கும்.

தலைமைச் செயலாளர் அசோஜன்; நிர்வாகச் செயலாளர் ராமலிங்கம்; ம இகாவில் அதிரடி


கோலாலம்பூர்-
மஇகாவின் தலைமைச் செயலாளராக டத்தோ எஸ்.அசோஜனும்  நிர்வாகச் செயலாளராக ஏ.கே.இராமலிங்கமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இவ்விருவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.

தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த டத்தோஶ்ரீ எஸ்.வேள்பாரி சொந்த தொழில்களில் தீவிரம் காட்டவிருப்பதால் அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து டத்தோ அசோஜன் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன்பு கட்சியின் நிர்வாகச் செயலாளராக அவர் பதவி வகித்து வந்தார்.

டத்தோ அசோஜன் வகித்து வந்த பதவிக்கு மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே.இராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விசாரணைக்கே விட்டு விடுவோம்

கோலாலம்பூர்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன்  மீதான பாலியல் புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொள்வர் என்று பிகேஆர் தலைமைத்துவ மன்றம் அறிவித்துள்ளது.
கேசவன் மீது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆயினும் இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதால் போலீசாரின் விசாரணைக்கே இதனை விட்டு விடுவோம்.

இக்குற்றச்சாட்டின் உண்மை நிலையை போலீசார் கண்டுபிடிக்கப்படும். இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கேசவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மறுத்த அவர், அப்பெண்ணுக்கு எதிராக போலீஸ் புகார் செய்துள்ளார்.

தூக்கில் தொங்கினார் மியன்மார் பெண்; ஈப்போவில் சம்பவம்

ஈப்போ-
தூக்கில் தொங்கிய நிலையில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேடான் ஈப்போ கடை  வீடொன்றில் நிகழ்ந்தது.

அப்பெண்ணின் அடையாள ஆவணம் எதுவும் காணப்படவில்லை என்றும் அப்பெண்ணின் கணவர் என  சந்தேகிக்கப்படும் ஆடவரை கைது செய்துள்ளதாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக பெய்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

Friday 24 May 2019

பாஜக அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி

டெல்லி-

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

524 பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் பாஜக 325 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தனி பெரும்பான்மையை கொண்டுள்ள பாஜக ஆட்சியமைக்கும் சூழலில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 90 மற்ற கட்சிகள் 105 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆற்றில் விழுந்த ஷாலினியின் சடலம் மீட்பு


தெலுக் இந்தான்-
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாசீர் பூத்தே, பிஞ்சி ஆற்றில் தவறி விழுந்த இளம்பெண் வி.ஷாலினியின் சடலம் சம்பவ இடத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் தெலுக் இந்தான், ஜெத்தி கம்போங் பஹாகியாவில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று காலை 6.05 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் சடலத்தை கைப்பற்றினர்.

கடந்த 20ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ஷாலினி, ஒரு விபத்தில் சிக்கிய பின்பு நிலைதடுமாறி பாசீர் பூத்தே, பிஞ்சி ஆற்றில் விழுந்தார்.

கைப்பற்றப்பட்ட ஷாலினியின் சடலம் சவப்பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தீயணைப்புப் பேச்சாளர் கூறினார்.

மோடியா? ராகுலா?- இந்தியாவின் புதிய பிரதமர் யார்?

டெல்லி-

அண்மையில் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி முதல் (இந்திய நேரப்படி) நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான முடிவு இன்று அறிவிக்கப்படும் நிலையில் இந்தியாவை ஆளப் போகும் புதிய பிரதமர் யார்?என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மேலோங்கியுள்ளது.

இன்றைய தேர்தல் முடிவில் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்பது பாஜகவின் நரேந்திர மோடியா? காங்கிரஸின் ராகுல் காந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday 23 May 2019

கோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்தது; 3 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்

கோலாலம்பூர்-

கோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 3 இந்தோனேசிய தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.

அதிகாலை 1.13 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்ட இரு தொழிலாளர்களை மீட்ட வேளையில் மற்றொரு தொழிலாளரை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday 22 May 2019

இந்திய பாராளுமன்றத் தேர்தல் நிலவரங்களை கொண்டு வரும் சன் நியூஸ் (204)

கோலாலம்பூர்,
 இன்று மே 22
ஆம் தேதி தொடக்கம் 26ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ சன் நியூஸ் (அலைவரிசை 204) கொண்டு வரவுள்ளது.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இந்த அலைவரிசையை எந்தவொரு கூடுதல் கட்டணமின்றி இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்த அண்மைய நிலவரங்களைப் பெற்று கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் மிகப் பெரிய ஊடக நிறுவனமான சன் நெட்வார்க் கீழ் இயங்கும் சன் நியூஸ், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு மிக விரிவான 2019 இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் மற்றும் சர்வதேச செய்திகளை ஒளிபரப்பவுள்ளது.

பல சவால்களுக்கு இடையே ஏப்ரல் 11 முதல் மே 19 வரை கட்டம் கட்டமாக இந்திய பாராளுமன்ற பொது தேர்தல் முடிவடைந்து, வரும் மே 23-ம் திகதி அதன் முடிவுகள் வெளிவர உள்ளன.
மே 26-ஆம் தேதிக்குப் பிறகு ஆஸ்ட்ரோவில் சன் நியூஸ் (அலைவரிசை 204) கிடைக்காது.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Friday 17 May 2019

பிடிபிடிஎன் கடனாளிகளுக்கு பயணத் தடையா? மக்கள் நிராகரிப்பர்- டத்தோஶ்ரீ அன்வார்

பாங்கி-

பிடிபிடிஎன் கடனாளிகள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கும் பரிந்துரையை மக்கள் நிச்சயம் நிராகரிப்பர் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிடிபிடிஎன் கடனை திரும்பச் செலுத்தாதவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புத்ராஜெயா கொண்டு வரும் இந்த பரிந்துரையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கடனுதவி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் அழுத்தம் கொடுக்கலாமா? என்று அவர் சொன்னார்.

பிடிபிடிஎன் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஏதுவான இலகுவான நடைமுறையை அமல்படுத்தலேமே என்ற மக்களின் கருத்து மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி நடைபெறும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை. சில திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. சில திட்டங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில ஆட்சியை கைப்பற்றிய அப்போதைய மக்கள் கூட்டணி (இன்று நம்பிக்கைக் கூட்டணி)அரசின் கீழ் பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்தன.
அப்போது எதிர்க்கட்சியாக திகழ்ந்தபோதிலும் பிற மாநில அரசுக்கும் மத்திய  அரசுக்கும் முன்னோடியாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளங்கும் வகையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அமலில் 19; ஆய்வில் 14

அந்த திட்டங்களில் தற்போது 19 திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்றும் 14 திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

இலவச பேருந்து, சிலாங்கூர் மனை திட்டம், வாடகை மூலம் சொந்த வீட்டை பெறும் திட்டம், தோட்டப்புற மாணவர்களுக்கான திட்டம், ஹிஜ்ரா கடனுதவி, வர்த்தகளுக்கான மைக்ரோ கடனுதவி திட்டம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, ஏழ்மையில் உள்ளவர்களுக்கு வியாபாரப் பொருட்கள் வழங்கும் திட்டம் உட்பட 19  திட்டங்கள் இன்னும் அமலில் உள்ளன.

அதே போன்று இலவச குடிநீர், கிஸ் திட்டம், மருத்துவ அட்டை திட்டம், முதியோர் உதவி நலத் திட்டம் போன்ற 14 மக்கள் நலத் திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட  திட்டங்களில் மறு ஆய்வுக்கு உட்படுத்து இயல்பான ஒன்றுதான். அப்போதுதான் அதன் அடைவு நிலை, சாதக, பாதகமான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

முதியோர் உதவி நலத் திட்டம் (Skim Mesra Usia Emas)
சிலாங்கூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மரண சகாய உதவி நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக மக்கள் மத்தியில் பல்வேறு அதிருப்தி அலைகள் எழுந்து வருவதை நான் அறிவேன்.

ஆனால் அது மரண சகாய உதவி நிதி என்பதை விட முதியோருக்கான உதவி நலத் திட்டம் 
என்பதே சரியானதாகும். இதற்கு முன்பு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு 2,500 வெள்ளி கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தங்களின் மரணத்திற்கு பின்னர் செய்யும் உதவியை  நாங்கள் அனுபவிக்க முடியாது என்ற முதியோர் பலர் மந்திரி பெசாரிடம் கோரிக்கை விடுத்ததன் வாயிலாக மரண சகாய நிதி Jom Shopping Raya திட்டமாக மாற்றம் கண்டுள்ளது.

இதன்வழி SMUE- திட்டத்தில் பதிந்துள்ள முதியோருக்கு அவரவர் பெருநாள் காலங்களின்போது 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும். அதனை அவர்கள் தங்களின் தேவைகேற்ற பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இருந்தபோதிலும் இத்திட்டம் குறித்து மக்களின் கருத்துகள் ஆராயப்படும் எனவும் இத்திட்டம் மக்களின் நலத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

தாதியர் கொலை; சந்தேகத்தின் பேரில் நைஜீரிய, பாகிஸ்தான் நாட்டவர்கள் தடுத்து வைப்பு

சைபர்ஜெயா-

இங்குள்ள அடுக்குமாடி ஒன்றில் கழுத்திலும் நெஞ்சிலும் குத்தப்பட்டு  கொலை செய்யபட்ட நிலையில் காணபட்ட செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதி சித்தி கரினா முகமட் கமாருடின் காணப்பட்டார்.

கொலை சம்பவம் தொடர்பில் சித்தி கரீனாவின் மரணத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் தெரிவித்தார்.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணிசெராஸ், தாமான் டாமாய் இண்டாவின் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த  ஆடவர் ஸ்தாப்பாக், தாமான் ஶ்ரீ ரம்பாயில் கைது செய்யப்பட்டார்.

கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இவ்விருவரும் சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு  செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் நைஜீரிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

பத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களுக்கு பயங்கரவாத மிரட்டல்; பாதுகாப்பு தீவிரம்

கோலாலம்பூர்-

பத்துமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் உட்பட 3 ஆலயங்களுக்கு பயங்கரவாத மிரட்டல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்வாலயங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 4 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதன் விளைவாக இந்து வழிபாட்டு தலங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது தெரிய வந்தது.

சீபில்ட் ஆலய கலவரத்தின்போது தீயணைப்பு வீரர் முகமட் அடிப் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்கள் உட்பட சில பிரமுகர்களையும் படுகொலை செய்ய திட்டமிட்டதாக நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, பத்துமலை திருத்தலம், ஜாலான் துன் எச்.எஸ்.லீ. ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வருபவர்களின் கைப்பைகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது.  ஆலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Thursday 16 May 2019

தேடப்படும் 3 பயங்கரவாதிகள் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர்- ஐஜிபி

கோலாலம்பூர்

சீபில்ட் ஆலய கலவரத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக வெடிதாக்குதல் நடத்த திட்டமிட்ட நான்கு நபர்களுடன் தொடர்புடைய மேலும் 3 நபர்கள் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர் என்று சந்தேகிப்பதாக அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் வழிபாட்டுத் தலங்களிலும் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக காரணம் காட்டி முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்ய திட்டமிட்ட இந்நால்வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மே 5 முதல் 7ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வாயிலாக இந்நால்வரும் கைது செய்யப்பட்டனர். ஆயினும் இந்நால்வருடன் தொடர்புடைய மூவர் இன்னமும் நாட்டில்தான் பதுங்கியுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பீடோங், கெடாவைச் சேர்ந்த ஷாஸானி மஹ்சான், முகமட் நூருல் அமின் அஸிஸான், இறுதியாக பந்திங்கில் வசித்து வந்த பாதிர் திர் எனும் இந்தோனேசியப் பிரஜை  ஆகியோரே தேடப்படும் நபர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்து வெடிகுண்டு கருவிகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது சிரியாவில் இருக்கும் மலேசிய தீவிரவாதி ஒருவன் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த குழுவினரை இயக்கி வந்துள்ளான் என்று அவர் மேலும் சொன்னார்.

மலேசியாவின் மக்கள் தொகை; பெண்களை விட ஆண்களே அதிகம்

கோலாலம்பூர்-

மலேசியாவில் உள்ள மக்கள் தொகை 3 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது.  இது 2019ஆம்  ஆண்டின் முதல் காலாண்டிற்கான பதிவு ஆகும். 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை தற்போது 1.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்த 3 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகையில் 2 கோடியே 93 லட்சத்து 10 ஆயிரம் பேர் குடியுரிமை கொண்டவர்கள் என்றும் 33 லட்சத்து 10 ஆயிரம் பேர் குடியுரிமை இல்லாதவர்கள் என்றும் தலைமை புள்ளியியலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் கூறினார்.

இந்த எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். 100 பெண்களுக்கு 107 ஆண்கள் என்ற விகிதாசாரத்தில் இது உள்ளது.  மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 1 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரமாகவும்  பெண்கள் 1 கோடியே 58 லட்சமாகவும் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான தேதி கலந்தாலோசிக்கப்படுகிறது- அன்வார்

பாங்கி-
நாட்டின் 8ஆவது பிரதமராக தாம் நியமனம் செய்யப்படுவதற்கான தேதி பிரதமர் துன் மகாதீருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த பதவி நியமனத்திற்கான தேதி சுமூகமான முறையில் கலந்தாலோசிக்கப்படுகிறது. தனக்கான பதவியை ஒப்படைக்கும் நேரம் வரும்போது துன் மகாதீர் அதற்கு வழிவிடுவார் என்பதால் அதில் எவ்வித பிரச்சினையும் தனக்கில்லை என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Wednesday 15 May 2019

வாக்கு அளித்ததில் எந்த தவறும் செய்யவில்லை - சிவகார்த்திகேயன் விளக்கம்

சென்னை-
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறுகையில் "வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையை காண்பித்தேன். வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லை என்றார்கள். ஆனாலும் வாக்களிக்க அனுமதித்தார்கள். அதன்பேரில் வாக்களித்துவிட்டு திரும்பினேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறல்ல. அது என் பிரச்னையும் அல்ல. எந்த அதிகாரியும் என்னிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறவும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம்; மலேசியத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பு

கோலாலம்பூர்-
மலேசியத்  தமிழர்களிடையே சினிமாத்துரை மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிக‌ரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் உள்ளூர் படைப்புகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது. 

அந்த வகையில் நம் நாட்டிலுள்ள உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கி புதுமையான படைப்புகளை வரவேற்க ஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம் இவ்வாண்டும் இடம்பெறவுள்ளது.

வரும் மே 17-ஆம் தேதிக்குள் ஆர்வமுள்ள  தயாரிப்பு நிறுவனங்கள் ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள ஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

அதை வேளையில், திகில், மர்மம் மற்றும் அறிவியல் சார்ந்த கதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் டெலிமூவியாகத் தயாரிக்கும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ வானவில் வழங்கவுள்ளது.  இந்த டெலிமூவிகள் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my/telemovieproposal என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Tuesday 14 May 2019

முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்க முயன்ற 4 பயங்கரவாதிகள் கைது- ஐஜிபி

கோலாலம்பூர்-

சீபில்ட் ஆலய கலவரத்தின்போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப்  முகமட் காசிம் மரணத்திற்கு பழி தீர்க்கும் வகையில் முஸ்லீம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு ஆடவர்களை புக்கிட் அமான் தீவிரவாத துடைத்தொழிப்பு சிறப்பு படையினர் கைது செய்தனர்.
மே 5 முதல் 7ஆம் தேதி வரை திரெங்கானு, கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் உள்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர், ரோஜிங்யாவைச் சேர்ந்த இருவர், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் இவ்வாடவர்கள் தாக்குதல் நடத்தி பல தனிநபர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது இந்த கைது நடவடிக்கையின் வழி தடுக்கப்பட்டுள்ளது.

முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்கும் வகையில் ரமடான் மாதத்தின் முதல் வாரத்தில் தாக்குதல் நடத்த இந்த குழு தயாராகி வந்தது என அவர் மேலும் சொன்னார்.

புதிய துணை ஐஜிபி-ஆக டத்தோ மஸ்லான் நியமனம்

புத்ராஜெயா-

புக்கிட் அமான் வர்த்தக, குற்றப்புலனாய்வு பிரிவின் இயகுனராக பணியாற்றி வந்த டத்தோ மஸ்லான் புதிய துணை ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 17ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற டான்ஶ்ரீ நோர் ரஷீட்டுக்கு பதிலாக இவரின் நியமன அமைந்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் டத்தோ மஸ்லானின் பணி நியமனம் நடப்புக்கு வந்துள்ளது.

அவருக்கான பணி நியமனக் கடிதத்தை உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில் வழங்கினார்.


Saturday 11 May 2019

பிரதமர் பதவி; சுமூகமாக நடைபெறாவிட்டால் அரசியலிலிருந்து விலகுவேன் - லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்-

வாக்குறுதி அளித்தபடி பிரதமர் பதவியை துன் மகாதீர் அன்வாரிடம் ஒப்படைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

பதவி ஒப்படைப்பு சுமூகமாக ஒப்படைக்கப்படும் எனவும் முன்னதாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படாது எனவும் அம்னோவின் இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசானின் கூற்றுக்கு அவர் பதிலளித்தார்.

இந்த சவாலில்  முகமட் ஹசான் வெற்றி பெற்றால் 15ஆவது பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

சண்டக்கான் இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய முகமட் ஹசான், வாக்குறுதி அளித்தபடி துன் மகாதீர் பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைக்க மாட்டார் எனவும் அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு வழிவிடப்படும் என்று கூறியிருந்தார்.

நஜிப், ரோஸ்மாவின் விருதுகளை மீட்டுக் கொண்டது சிலாங்கூர் அரண்மனை

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் விருதுகளை சிலாங்கூர் அரண்மனை  மீட்டுக் கொண்டது.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற வழக்கை இவ்விருவரும் எதிர்கொண்டிருப்பதால் விருதுகள் மீட்டுக் கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ முகமட் அமின் அஹ்மாட் அஹ்யா தெரிவித்தார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட ‘டத்தோஶ்ரீ’ விருதும் ரோஸ்மாவுக்கு வழங்கப்பட்ட ‘டத்தின் படுக்கா ஶ்ரீ’ விருதும்  மே 6ஆம் தேதி மீட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

‘மகாதீரிசம்’ செய்த மாயாஜாலம்; PH சாதித்ததா? சோதித்ததா?- பகுதி -3

ரா.தங்கமணி

ராண்டை கடந்து விட்ட நம்பிக்கைக் கூட்டணிக்கு (பக்காத்தான் ஹராப்பான்) முதலில் நமது வாழ்த்துகள். உலக வரலாற்றில் நீண்ட காலமாக ஒரு கூட்டணியே ஆட்சி செய்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தை நம்மாலும் நிகழ்த்த முடியும் என்று 60 ஆண்டுகால தேசிய முன்னணிக்கு விடை கொடுத்து நம்பிக்கைக் கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமரச் செய்த வாக்காளன் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
வாக்காளனை மீறி நாம் ஒருபோதும் ஆட்சி பீடத்தின் அதிகாரத்தை கைப்பற்றியிருக்க முடியாது என்ற நன்றியுணர்வு நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இந்த தவணை முழுவதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு
ஆட்சி மாற்றம் எப்படி சாத்தியமானது?
2018 மே9இல் நிகழ்ந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி கட்டிலில் இருந்து தேசிய முன்னணி இறக்கப்பட்டு நம்பிக்கைக் கூட்டணி ஏற்றப்படுவதற்கு முழு முதல் காரணம் பிரதமர் துன் மகாதீர் எனும் ‘அரசியல் ராஜ தந்திரி’ ஒருவரே அன்றி வேறெதுவும் இருந்து விட முடியாது.
தேசிய முன்னணியின் ஆட்சியில் 4ஆவது பிரதமராகவும் 22 ஆண்டுகள் மலேசியாவை வழிநடத்தியவராகவும் திகழ்ந்த துன் மகாதீர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தலைமையேற்றதே இந்த வெற்றிக்கு அடித்தளம் ஆனது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கீழ் பொதுவான சின்னத்தில் அதில் இடம்பெற்றுள்ள பெர்சத்து, பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் எத்தனித்தபோது பொது சின்னம் மறுக்கப்பட, பிகேஆர் கட்சியின் சின்னத்தின் கீழ் இக்கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிட முடிவெடுத்ததே மகாதீரின் சாணக்கியதனத்தை வெளிபடுத்தும்.
தன்னை வீழ்த்துவதற்கென்று உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வென்று மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பதே ஒரு  சாதனைதான். அதுவும் 93ஆவது வயதில் மலேசியாவின் 7ஆவது பிரதமராக பதவியேற்றிருப்பதே உலக சாதனையாகும்.
தனது 93ஆவது வயதிலும் கூட நாட்டின் கரை புரண்டோயுள்ள ஊழலை வேர்றுக்க களம் கண்ட துன் மகாதீரை பாராட்டியே ஆக வேண்டும்; அதற்காக அவருக்கு துணை நின்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்களுக்கும்  மாண்புமிகுகளுக்கும் வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.
சாதித்ததா? இல்லையா?
இந்த ஓராண்டு காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சாதிக்கவில்லையா? என்ற வாதத்தை முன்வைத்தால் சாதனைகள் நிச்சயம் அதற்குள் அடங்கும்.
நாட்டின் கடனை அடைப்பதற்காக நிதி திரட்டியது, ஊழல் புரிந்தவர்கள் மீது வழக்கு, பெரு திட்டங்களின் செலவீனங்களை குறைத்தது போன்ற திட்டங்களை முன்னெடுத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சாதனை என்றே கூறலாம்.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டும் மலேசியர்களை திருப்திப்படுத்தி விடாது என்பதை தலைவர்களும் நிச்சயம் உணர்ந்திருப்பர்.
தேர்தல் காலத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு அது நிறைவேற்றப்படாமல் போகும்போதே அதிருப்தி மேலோங்கியது. அதுதான் இன்றைய ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு சரிவு கண்டிருப்பதும் ஆகும்.
யார் குற்றம்?
மலேசியர்களில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர்  மட்டுமே வசதி வாய்ப்போடு வாழும்போது வசதி குறைந்த ஏனைய மக்கள் அரசாங்கத்தின் தயவையே நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கையின் விடியலாக அமைந்ததே தேர்தல் வாக்குறுதியாகும்.
ஓராண்டை கடந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியும் அதனால் எழும் கோபத்திற்கும் மக்களை குறை சொல்ல முடியுமா? அல்லது நாட்டின் நிதி வளத்தை காரணம் காட்டி வாக்குறுதிகளை செய்ய முடியாமல் தவிக்கும் அரசாங்கத்தை பழிக்க முடியுமா?
நாளை தொடரும்….

இதன் முந்தைய பாகங்களை படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ அழுத்தவும்

ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா? -பகுதி 1
https://www.mybhaaratham.com/2019/05/1.html


ஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித்ததா? சோதித்ததா?- பகுதி -2

https://www.mybhaaratham.com/2019/05/2.html