Sunday 27 January 2019

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி நிலத்தை உரிமையாக்கிக் கொள்வதா? வழக்கு தொடர்ந்தது வாரியக்குழு

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலத்தை தமது பெயரில் மாற்றிக் கொண்ட கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பள்ளி வாரியக்குழு நீதிமன்ற வழக்கை தொடுத்துள்ளது.

கடந்த 50  ஆண்டுகளாக (1959-209) பள்ளியின் மூன்று ஏக்கர் நிலம் பள்ளி பெயரிலேயே இருந்துள்ளது. ஆயினும் பள்ளி நில ஒப்பந்தம் காலாவதி ஆனதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பள்ளியின் நிலம் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளி வாரியக்குழுத் தலைவர் டாக்டர் செல்வம் செல்லப்பன் தெரிவித்தார்.

பள்ளி வாரியக்குழு 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போதிலும் இந்த நில ஒப்பந்த மாற்றம் 2012ஆம் ஆண்டில் நடந்துள்ளது. கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூன்று முன்னாள் செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த பரிமாற்றம் நடைபெற்றது.

பள்ளியில் நான்கு மாடி கட்டட மேம்பாடு துரிதப்படுத்துவதற்காக இந்த பரிமாற்றம் செய்யப்பட்டது என தரவுகள் இருந்தபோதிலும் எந்தவொரு கட்டட மேம்பாடு வேலைகளையும் விவேகானந்தா ஆசிரமம் மேற்கொள்ளவில்லை.

அதோடு, கடந்த 2012இல் கல்வி அமைச்சு  6 மில்லியன் வெள்ளியை மூன்று பள்ளிகளுக்கு (பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா இடைநிலைப்பள்ளி) ஆகியவற்றை வழங்கியதை வாரியக்குழு அறிந்துள்ளது.

1 வெள்ளி கட்டணத்தில் நடைபெற்றுள்ள நில பரிமாற்றம் முறையாக நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், பள்ளியின் நிலம் பள்ளிக்கே உரிமையாக்கப்பட வேண்டும். அதை ஒருபோதும் பிறர் உரிமை கொண்டாடக்கூடாது என்பதில் பள்ளி வாரியம் உறுதியாக உள்ளது.

2012இல் பள்ளியின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 6 மில்லியனிலுள்ள பகுதியை கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம் பள்ளிக்கே கொடுக்க வேண்டும் என இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமம், பெற்றோர் ஆசிரியர் சங்க மூன்று செயலவை உறுப்பினர்கள், சிலாங்கூர் மாநில நில உரிம பதிவு இலாகா ஆகிய 5 எதிர்தரப்பு வாதங்களுடன் இந்த நீதிமன்ற வழக்கு நடைபெறவுள்ளது.

மேலும், இவ்வழக்கில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் உடன் வழக்கு தொடுத்தவராக 12.2.2019இல் பள்ளி வாரியத்துடன் அனுமதி கோரியுள்ளனர் என்று செல்வம்  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வாரியக்குழு துணைத் தலைவர் ஆர்.ஜெகா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Monday 21 January 2019

பத்துமலை தைப்பூசம்: 16 லட்சம் பக்தர்கள் திரள்வர்

கோலாலம்பூர்-
நாளை மிக விமரிசையாக கொண்டாடப்படும் தைப்பூச விழாவை முன்னிட்டு பத்துமலை திருத்தலத்தில் 16 லட்சம் பக்தர்கள் கூடுவர் என அறியப்படுகிறது.

முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பக்தர் பத்துமலை திருத்தலத்தை நோக்கி படையெடுத்துளளனர்.

பத்துமலை திருத்தலம் உள்ளூர் மக்களை மட்டுமல்லாது வெளிநாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் இவ்வாண்டு பத்துமலைக்கு வருகை புரியும் பக்தர்களினெ எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Sunday 20 January 2019

'பரமபதம்' விளையாடும் விக்னேஷ் பிரபு


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனரான லெ.விக்னேஷ் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பரமபதம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்குறது.

பாரம்பரிய விளையாட்டான 'பரமபதம்' விளையாட்டை மையப்படுத்தி 4 இளைஞர்களிடையே நடக்கும் போராட்ட உணர்வை மர்மமும் திகிலும் நிறைந்த சுவாரஸ்யமான கதைகளத்தோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக விக்னேஷ் பிரபு கூறினார்.

தனது முதல் படமான 'சாதுரியன்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது படமான 'சாதுரியனு'க்கு நிதியுதவி அளிக்க மலேசிய திரைப்பட வாரியம் இணக்கம் கண்டுள்ளது.

கெடா மாநிலத்தில் உருவாகி தற்போது கோலாலம்பூரில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. இவ்வாண்டு பிற்பகுதியில் திரையீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தில் நாட்டின் முன்னணி கலைஞர்களான கே.எஸ்.மணியம், அகோந்திரன், உமாகாந்தன் உட்பட பல புதுமுக கலைஞர்களும் நடிக்கின்றனர்.

வின்கேஷ் பிரபுவுடன் இணைந்து அவரின் தம்பி தனேஷ் பிரபுவும் இப்படத்தின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

சாய் நந்தினி  மூவி வேர்ல்டு, டிரீம்ஸ்கைம்ஹோம் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களின் இணையுடன் டாக்டர் லட்சபிரபு இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் விக்னேஷ் பிரபுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை 'பாரதம்' மின்னியல் ஊடகம் கூறிக் கொள்கிறது.

Saturday 19 January 2019

செருப்பை கழற்றி 'பேயை' அடிக்கும் ஆடவர்- வைரலாகும் காணொளி/ வீடியோ இணைப்பு

ஈப்போ-
'பேய்' போன்ற ஒரு மர்ம உருவத்தை செருப்பை கழற்றி ஒருவர் அடிக்க முயலும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கம்பாரிலுள்ள தாமான் சஹாயா, தாமான் செஜாத்ரா ஆகிய பகுதிகளில் இந்த மர்ம உருவம் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும்  இது உண்மைச் சம்பவம் என்று இக்காணொளி குறித்து பேசியுள்ள ஆடவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மர்ம உருவம் வீட்டுக் கதவை தட்டுவதாகவும் அவ்வாறு தட்டும் போது கதவை திறக்கும் போது அந்த மர்ம உருவம் சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்குள் புகுந்து விடுவதாகவும் இதனால் மக்கள் யாரும் கதவை சட்டென்று திறக்க வேண்டாம் என்று அவ்வாடவர் குறிப்பிட்டுள்ளார்.

இது உண்மையோ? பொய்யோ?.. எவ்வாறு இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்போம்.

வீடியோ இணைப்பு:


தைப்பூச விழாவில் ஆலய வளாகத்தை குப்பை மேடாக்கலாமா? 'பூச்சாண்டி' குழுவினரின் 'கசக்கு நசுக்கு' விழிப்புணர்வு காணொளி

கோலாலம்பூர்
தைப்பூசத்தன்று இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னே வைக்கும் போது நம் உள்ளம் தூய்மையாகின்றது. அதேவேளையில் அந்த ஒவ்வொரு அடிக்குப் பின்னால் சிதறிக்கிடக்கும் குப்பைக் கூளங்கள் நம்மையும் நம் செயல்பாடுகளையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவிடுகிறதே என்ற கவலையும் பக்தியின் பக்கத்தில் கரும்புள்ளியாய் தொற்றிக்கொள்கிறது.

பக்தர்களும், சுற்றுப் பயணிகளும் அதிகமாக ஒன்று கூடும் இந்தப் புனிதத் தளத்தில் நம்மால் தூய்மையான தைப்பூசத்தைக் கொண்டாட முடியும் என்கின்றனர் விரைவில் திரையரங்கில் நம்மைக் காண வரும் ' பூச்சாண்டி' படக் குழுவினர்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவிக்கொண்டிருக்கும் 'கசக்கு நசுக்கு' எனும் 3 நிமிடங்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொளி, இந்த மலேசிய தமிழ் திரைப்படக் குழுவினரின் கூட்டு முயற்சியாகும். குப்பை மற்றும் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளையும் அதனை களைவதற்கான சில எளிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் காணொளியாகவே இது உள்ளது. அகன்ற பார்வையும், கூர்ந்த சிந்தனையும் ஆழ்ந்த செயல்பாடும் முருகனின் வேலை பிரதிபலிக்கின்றது. அவனை நோக்கி செல்லும் நமது செயல்பாடுகளும் அதுவாகவே இருக்க வேண்டும். நம்முடைய செயலே நாம் யார் என்பதை காட்டுகிறது.

தூய்மை பற்றிய தெளிவு நமக்கு அதிகமாகவே இருக்கின்றது, ஆனால் சில சமயங்களில் அதை செயல்படுத்தும்போது பல காரணங்களை முன்னிறுத்தி கடமையிலிருந்து தவறுகிறோம் என்பது உண்மையே.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது கடைப்பிடிக்கக்கூடிய எளிய தீர்வுகளை இயக்குனர் JK விக்கி அவர்களின் விழிப்புணர்வு வீடியோ எடுத்துரைக்கின்றது.

அது சேதத்தை குறைக்க உதவுகிறது. நெகிழிப் பைகளைத் தவிர்ப்பது, இயற்கையாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, குப்பை தொட்டிகளை சரியாக பயன்படுத்துவது, குப்பைத் தொட்டிகள் இல்லாத இடத்தில் அதற்கான மாற்று வழிகள் யாவை போன்ற பல யுக்திகளை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது.

மலேசிய நடிகர் லோகன், வானவில் சூப்பர் ஸ்டார் புகழ் கணேசன் மனோகரன், ஜகாட் திரைப்படத்தின் மெக்ஸிகோ கதாபாத்திர புகழ்  தினேஷ் சாரதி கிருஷ்ணன், புதுமுக நடிகை ஹம்சினி பெருமாள் ஆகியோர் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். இதனை  முகநூலில் Poochandi எனும் பெயரில் இருக்கும் பக்கத்தில் காணலாம்.

மேலும் YouTube - இல் https://www.youtube.com/watch?v=cLcKxJE7WIc இந்த இணைப்பில் ‘Kasakku, Nasukku - Alarming sign of ignorance at Thaipusam. Let's keep our Temples clean’ என்ற பெயரில் இந்தக் காணொளியைக் காணலாம்.
சிக்கலுக்கு தீர்வாக இருப்போம், சிக்கலாக அல்ல!

தைப்பூச இரதத்தை இழுக்க காளைகளுக்கு தடை - பேராசிரியர் இராமசாமி

ஜோர்ஜ்டவுன் -
தைப்பூச விழாவின்போது பினாங்கு கோவில் வீட்டிலிருந்து  புறப்படும் இரதத்தை காளை மாடுகளை பூட்டி இழுப்பதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தடை விதித்துள்ளது.

மாடுகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு பதிலாக பக்தர்களே அந்த இரதத்தை இழுக்கலாம் என்று அதன் தலைவரும் பினாங்கு துணை முதலமைச்சருமான  பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.

128 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோவிலிருந்து புறப்படும் இரதத்தை 7
கிலோ மீட்டர் தூரம் காளைகள் இழுத்துச் செல்வது அதனை வதைப்படுத்துவதாக விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆதலால், இரதத்தை பக்தர்களே இழுக்கலாம் எனவும் காளைகளை பூட்டி இரதத்தை இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அது சட்டப்படி குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Thursday 17 January 2019

திருடப்பட்டது தலைவர் பதவி; ரத்தானது கட்சி பதிவு - மனம் திறந்தார் கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரான எனது பதவி நள்ளிரவு வேளையில் திருடப்பட்டதன் விளைவாகவே இன்று அக்கட்சி தனது பதிவை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விவரித்தார்.

கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ஹோட்டல்களிலோ உணகவங்களிலோ அமர்ந்து தீர்மானிக்க முடியாது. அதற்கென்று சில சட்ட நெறிமுறைகள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கட்சியின் சட்ட விதிகளை மதிக்காமல் பதவி ஆசையில் சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சியின் விளைவு இன்று கட்சியை அழிவு பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.

கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களாக இருந்த டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் உட்பட 14 பேர் ஹோட்டலில் அமர்ந்து தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்து மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

மைபிபிபி கட்சியின் சட்டவிதிபடி கட்சி தலைவரை நீக்க வேண்டுமானால் அவசர பொதுக்கூட்டம் கூட்டியாக வேண்டும். அதன் பின்னரே புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கட்சியின் தலைவரை ஹோட்டலில் அமர்ந்து பதவியிலிருந்து நீக்க முடியாது. நானே விருப்பப்பட்டு அப்பதவியை வேறொருவருக்கு விட்டுக் கொடுக்க முடியாது. கட்சி பேராளர்களின் ஒருமித்த ஆதரவுடனே தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க முடியும்.

இத்தகைய சட்டவிதிகள் எதுவும் தெரியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட்டதால்தான் கட்சி பதிவு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.
குறிப்பு: டான்ஶ்ரீ கேவியசின் விரிவான விளக்கம் தொடர்ந்து இடம்பெறும்.

எம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையில் பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்


பெட்டாலிங் ஜெயா-
239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவுக்கு பயணித்த எம்எச் 370 விமானத்தை மலாக்கா நீரிணையின் அருகில் பார்த்ததாக 4 இந்தோனேசிய மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2014 மார்ச் 8ஆம் தேதி  காணாமல் போன இந்த விமானத்தை ஆச்சே எல்லையின் வட சுமத்ரா, பெங்கலான் சுசு பகுதிக்கு அருகில் பார்த்ததாக நான்கு மீணவர்களின் ஒருவரான ருஸ்லி குஸ்மின் (42) தெரிவித்தார்.

சம்பவத்தன்று நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பொறியை உயர்த்திக் கொண்டிருந்தபோது 2 கிலோ மீட்டருக்கு அப்பால் விமானம் ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இயந்திர சத்தம் கேட்கவில்லை. ஆனால் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்னர் கரும்புகை வெளியானதை கண்டதாக அவர் சொன்னார்.

239 பயணிகள், விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட எம்எச் 370 விமானம் காணாமல் போனதை அடுத்து நீண்ட நாள் தேடுதலுக்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.

Tuesday 15 January 2019

மஇகாவினரின் அரசியல் சுயநலமே கேமரன் மலையை கைநழுவச் செய்தது - கணபதிராவ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபிட்டு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மஇகா தலைவர்கள் சிலர் அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்த நடவடிக்கைககளாலேயே  கேமரன் மலையில் போட்டியிடாமல் ம இகா ஒதுங்கி கொண்டிருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

தங்களின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலையில் ம இகா போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு சீபில்ட் ஆலய மோதலை அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் காரணம் காட்டியுள்ளார்.

ஆனால் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டிய இவ்வாலய விவகாரத்தை தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக ஒரு போராட்டமாக மஇகா தலைவர்கள் மாற்றியதன் விளைவே ஆலய மோதலும் அதனை தொடர்ந்த ஓர் உயிரிழப்பும் ஆகும்.


இன்று அதன் பாதிப்பினால் மலாய்க்காரர்களின் வாக்குகளை பெற முடியாது என்பதால் தொகுதியை அம்னோவுக்கு கொடுத்துள்ளோம் என்று கூறும் மஇகா, அரசியல் சுயலாபத்தினால் தாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும்.

அதேபோன்றுதான் தற்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்திலும் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில தரப்பினர் இவ்விவகாரத்தை பூதாகரமாக உருவாக்க முற்படுகின்றனர்.

இப்போதுதான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது அவர்களது கூட்டணியில் இருந்த தலைவர்கள் இப்பிரச்சினைக்கு அப்போது ஒரு தீர்வையும் காண முற்படாதபோது இப்போது மட்டும் உரிமைக்காக போராடுவதாக சுயநல நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கின்றனர் என்று கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.

மைபிபிபி-இன் பதிவு ரத்து- ஆர்ஓஎஸ்

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்ஓஎஸ் எனப்படும் தேசிய சங்கங்களின் பதிவிலாகா இன்று ரத்து செய்துள்ளது.

கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள கடிதத்தின் நகல் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதன் தலைமை இயக்குனர் மஸ்யாத்தி அபாங் இப்ராஹிம் தெரிவித்தார்.

டான்ஶ்ரீ எம்.கேவியஸ், டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் என இரு பிரிவாக பிளவுபட்ட தரப்பினர் தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அது சாத்தியமாகாததால் கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் ஆர்ஓஎஸ்-இன் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மைபிபிபி கட்சியில் தலைமைத்துவப் போராட்டம் வெடித்தது.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடிதம் வழங்கினார். பின்னர் அதனை மீட்டுக் கொண்டார்.

அதே வேளையில் டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து விலக்கி விட்டதாக டத்தோஶ்ரீ மெக்லின் டி குருஸ் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்ததோடு தற்போது பிரதமர் துன் மகாதீருக்கும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

ஆயினும் மைபிபிபி கட்சி தேசிய முன்னணியில் நீடிப்பதாக டத்தோஶ்ரீ மெக்லின் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

இருமுறை மட்டுமே ரயில் சேவை; இவ்வளவு பெரிய ரயில் நிலையம் இருந்தும் என்ன பயன்?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கோலாலம்பூரிலிருந்து வருகை தரும் இதிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை துரிதமாக செயல்படாததால்   பல்வேறு சிரமங்களை தாங்கள் எதிர்கொள்வதாக சுங்கை சிப்புட் குடியிருப்பாளர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

கோலாலம்பூரிலிருந்து பாடாங் பெசார் நோக்கி செல்லும் இதிஎஸ் ரயில் காலை, இரவு நேரம் என இரு முறை மட்டுமே இங்கு பயணிகளை ஏற்றுவதற்கு நிறுத்தப்படுகிறது.

முன்பு நான்கு முறை இங்கு நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும் இப்போது இரு முறை மட்டுமே பயணிகள் ஏற்றுவதால் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்தை தங்களது நிறுத்த முனையமான தேர்ந்தெடுக்கின்றனர்.

தலைநகரில் வசிக்கும், பணியாற்றி வரும் எங்களது பிள்ளைகள்/உறவினர்கள் சுங்கை சிப்புட்டிற்கு வர வேண்டுமானால் ஈப்போ நிலையத்திலேயே இறங்க வேன்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.
ராமன்

இதனால் இங்கிருந்து ஈப்போவுக்கு  40 நிமிடங்கள் பயணம் செய்து அவர்களை ஏற்றி வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று  தாமான் துன் சம்பந்தனைச் சேர்ந்த நா.உ.இராமன் கூறினார்.

பொதுவாக வேலை நேரம் முடிந்த பின்னரே ரயில் பயணத்தை பலர் மேற்கொள்கின்றனர். ஆனால் காலையிலும் இரவிலும் மட்டுமே சுங்கை சிப்புட்டிற்கு ரயில் சேவை விடுவதால் ஈப்போவிவிலேயே பிள்ளைகள் இறங்கி விடுகின்றனர்.
மணிராஜா

இரவு எத்தனை மணி ஆனாலும் அவர்களை சென்று ஏற்றி வர வேண்டும். இல்லையேல் வாடகை கார் கட்டணமே 50 வெள்ளி வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று கி.மணிராஜா குறிப்பிட்டார்.

எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கோலாலம்பூரில் உள்ளனர். அவர்கள் இங்கு வர வேண்டுமானால் ஈப்போவில் இறங்கிய பின்னர் தான் இங்கு வர வேண்டியுள்ளது.  சுங்கை சிப்புட்டிற்கு நேரடி சேவை விட்டிருந்தால் அவர்கள் இங்கேயே இறங்கி கொள்வர் என்று மூதாட்டி சு.ஜானகி கூறினார்.
திருமதி ஜானகி

கோலாலம்பூரிலிருந்து தொடங்கும் ரயில் சேவை பிற்பகல் 1.00 மணிக்கும் இரவு 8.50 மணிக்கு மட்டுமே நிறுத்தப்படுகிறது. இதனால் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதைக் காட்டிலும் பெரும்பாலானோர் ஈப்போ ரயில் நிலையத்திலேயே இறங்கி விடுகின்றனர்.

சுங்கை சிப்புட்டை விட மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கோலகங்சார் ரயில் நிலையத்தில் 20 முறை ரயில் நிறுத்தப்படுகின்றபோது சுங்கை சிப்புட்டில் 4 முறை என ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியாதா? என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேள்வி எழுப்பினார்.
கி.மணிமாறன்

இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் ரயில் நிலைய அதிகாரிகளின் விளக்கத்தை மக்களுக்கு விளக்க வேண்டாம். மாறாக இருமுறை என உள்ள ரயில் சேவையை பல மடங்காக நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து அதிகாரிகள் 'தபால் ஊழியராக' கேசவன் நடந்து கொள்ளக்கூடாது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத்தான் அவரை தங்களின் பிரதிநிதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை மறந்து விட வேண்டும்.
எஸ்.கேசவன்

பல லட்சம் வெள்ளி செலவு செய்து கட்டிய ரயில் நிலையம் மக்களுக்கு பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக அமையவில்லையென்றால் வீணாவது மக்கள் பணம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

Monday 14 January 2019

செமினி தமிழ்ப்பள்ளி: அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர்- கணபதிராவ் குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் உரிமைக்காக போராடுகிறோம் என்ற கூறுகின்றவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்துகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

1.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைந்திருந்த இப்பள்ளிக்கு 3.8 ஏக்கர் நிலத்தை பெற்று கொடுத்தவன் நான். இப்பள்ளி அமைந்துள்ள நிலம் சைம் டார்பி மேம்பாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்ப்பள்ளி, ஆலயம், தேவாலயம், தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான நிலம் ஆகியவை ஒதுக்கப்பட்டது.

செமினி தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளி வாரியக்குழு கோரிக்கை விடுத்தது. ஆயினும் 3.8 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.  சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை வரவேற்கக்கூடியதுதான்.

ஆனால் நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் 6 ஏக்கர் நிலத்தில்தான் அமைந்துள்ளன என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. நில விவகாரம் தொடர்பில் பள்ளி வாரியக்குழுவினர் தொடர்ந்த வழக்கிலும் தோல்வி கன்டுள்ளனர்.

ஏற்கெனவே நில ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் தமிழ்ப்பள்ளிக்காக நில ஒதுக்கீடு செய்ய முற்பட்டால் அது ஆலயம், தேவாலயம் அல்லது தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு நிலத்தை வெகுவாக பாதிக்கும்.

முந்தைய காலங்களில் மாநில அரசாங்கம் பக்காத்தான் கூட்டணி வசம் இருந்த போதிலும் மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசமே இருந்தது.
அப்போதெல்லாம் இப்பள்ளி விவகாரம் தொடர்பில் போராட்டம் நடத்தாதவர்கள் இப்போது தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக உரிமை போராட்டம் என்ற பெயரில் அரசியல் சர்ச்சையை உருவாக்க முற்படுகின்றனர்.

வரும் செவ்வாய்க்கிழமை சைம் டார்பி மேம்பாட்டு நிறுவன தரப்பினருடன் சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இச்சந்திப்பின் மூலம் தீர்க்கமான முடிவு காணப்படும் என்பதை உறுதியாக கூற முடியாது. எத்தகைய வழியில் சுமூகமான தீர்வு காணப்பட முடியும் என்பது கலந்தாலோசிக்கப்படும் என்று பத்துமலையில் நடைபெற்ற தமிழன் உதவும் கரங்கள் நிகழ்வுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது கணபதிராவ் குறிப்பிட்டார்.

Sunday 13 January 2019

மகாதீர், அன்வாருக்கு முழு ஆதரவு- டான்ஶ்ரீ கேவியஸ்



கேமரன் மலை-
பிரதமர் துன் மகாதீருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் தனது ஆதரவு உண்டு என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

கடந்த கால தேசிய முன்னணி அரசாங்கம் இழைத்த பல்வேறு தவறுகளை சரி செய்ய துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு வழங்குகிறேன்.

அதனால் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து பின் வாங்கிக் கொண்டதாக டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.

அதோடு, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான எம்.மனோகரனுக்கு தனது ஆதரவை புலப்படுத்துவதாக கூறிய கேவியஸ், தமது தரப்பின் (மைபிபிபி) ஆதரவு வலுவாக இருக்கும் என்றார்.

இதற்கு முன்னர் கேமரன் மலை இடைத் தேர்தகில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக டான்ஶ்ரீ கேவியஸ் கடந்த வாரம்  அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 12 January 2019

நான்கு முனை போட்டியில் கேமரன் மலை இடைத் தேர்தல்


கேமரன் மலை-
இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள கேமரன் மலை இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜசெகவின் எம்.மனோகரன், தேசிய முன்னணி வேட்பாளராக ரம்லி முகமட் நோர், சுயேட்சை வேட்பாளர்களாக சலாவுடின் அப்துல் தாலிப், வோங் செங் யீ ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இன்று நடைபெற்ற வேட்புமனுவின் போது இந்நால்வரும் தங்களது மனுவை தாக்கல் செய்தனர்.

இத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவேன் என கூறிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 9 January 2019

அம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது- டத்தோ மோகன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக உள்ள மஇகாவை மட்டம் தட்டியே தன்னை பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ள முயலும் அம்னோ, எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் கருத்து தெரிவித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ம இகா போட்டியிட்டு வந்த அத்தொகுதியை தற்போது அம்னோ கோரியுள்ளது.

மஇகா மத்திய செயற்குழு அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுத் தர ஆதரவு வழங்கியிருந்தாலும் அத்தகைய முடிவை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிக்கவில்லை.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்கு அம்னோவின் தவறுகளும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளுமே காரணம். ஜெயித்து விடுவோம்; ஆட்சியை கைப்பற்றுவோம் என சொல்லியும் ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்டோம்.

இப்போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும்  அதே குருட்டு நம்பிக்கையை கொண்டுள்ளனர். ம இகாவினால் ஜெயிக்க முடியாது என மட்டம் தட்டும் அம்னோவினர், அங்கு போட்டியிட்டால் தான் வெற்றியா,
தோல்வியா? என்பது தெரிய வரும்.

அப்படியே இந்த தேர்தலில் தோல்வி கண்டாலும் இழக்க என்ன உள்ளது, ஆட்சி தான் மாறிவிடப் போகிறதா? அதிகாரம் தான் திரும்ப கிடைத்து விடப்போகிறதா? மஇகாவை மட்டம் தட்டியே பல தொகுதிகளை அம்னோ கைப்பற்றிக் கொண்டது. எடுத்துக் கொண்டதை அவர்களே வைத்துக் கொண்டுள்ளனர்.

மஇகாவை  மட்டம் தட்டுவதை காட்டிலுக் அம்னோவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும்.  மஇகாவில் இருந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அணி மாறவில்லை. ஆனால் அம்னோவினர் தான் அணி மாறுகின்றனர்.

இப்போது கேமரன் மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த பிரதிநிதி நிச்சயம் அணி மாறக்கூடும்.  இந்த விஷயத்தில் அம்னோ எவ்வளவு பட்டாலும் திருந்தாது என்று டத்தோ மோகன் கூறினார்.

கேமரன் மலை: மஇகாவிடமிருந்து தட்டி பறிக்கிறது அம்னோ


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இடைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவிடமிருந்து அம்னோவுக்கு கைமாறலாம் என அறியப்படுகிறது.

2004ஆம் ஆண்டு முதல் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வரும் மஇகாவுக்கு இந்த இடைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாமல்  அந்த வய்ப்பை அம்னோ தட்டி பறித்து கொள்கிறது.

இந்த தேர்தலில் மஇகா வேட்பாளரை விட தமது தரப்பு  வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என நம்பிக்கை கொண்டுள்ள அம்னோ அதற்கான முழு மூச்சாக களம் காண தயாராகிக் கொண்டிருக்கிறது.

வேட்பாளர் விவகாரத்தில் காணப்படும் இந்த இழுத்தடிப்பு நடவடிக்கையினால் வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் இத்தொகுதிக்கு அம்னோ வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

Monday 7 January 2019

மாமன்னர் பதவியிலிருந்து விலகினார் சுல்தான் முகமட் வி

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் வி தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டதாக இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவரின் இந்த பதவி விலகல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2016 டிசம்பர் 13ஆம் தேதி நாட்டின் மாமன்னராக பொறுப்பேற்ற சுல்தான் முகமட் வி, தனது ஈராண்டு கால பதவியின்போது தமக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆட்சியாளர்களும் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நான் போட்டியிடுவதால் மஇகா வேட்பாளரை களமிறக்க தேமு முயற்சிக்காது - டான்ஶ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராக களமிறங்கினால் அங்கு மஇகா போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்காது என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போதே கேமரன் மலையில் வேட்பாளராக களமிறங்க முயற்சித்தேன். அதற்காக நான்காண்டுகளாக கேமரன் மலையில்
கடுமையான உழைப்பையும் கொட்டினேன்.

ஆனால் தேசிய முன்னணி  எனக்கு அங்கு வாய்ப்பளிக்காமல் மஇகாவின் பாரம்பரியத் தொகுதி என கூறி மஇகா வேட்பாளரை களமிறக்கியது.

நான்காண்டுகள் நான் போட்ட கடுமையான உழைப்பின் காரணமாக எனக்கு அங்கு இன்னமும் ஆதரவு இருக்கின்றது என்ற நிலையில் வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளேன்.

நான் அங்கு வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளதால் நிச்சயம் அங்கு மஇகா வேட்பாளரை களமிறக்க தேசிய முன்னணி முனையாது.  நிச்சயம் அத்தொகுதியில் போட்டியிட அம்னோ கோரிக்கை விடுக்கலாம் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஶ்ரீ எம்.கேவியஸ் குறிப்பிட்டார்.

கேமரன் மலையில் போட்டியிடுகிறேன்- டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தாம் வேட்பாளராக களமிறங்குவதற்கு மைபிபிபி கட்சி உச்சமன்றம்  ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ள சூழலில் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறோம் என்பது வேட்புமனுவின்போது தெரிய வரும்.

கடந்த 4 ஆண்டுகளாக கேமரன் மலை தொகுதியில் சேவையாற்றியுள்ளதன் அடிப்படையில் தனக்கான வெற்றி வாய்ப்பு ஓரளவு காணப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

மைபிபிபி வரலாற்றில் முதன் முறையாக எந்தவொரு கட்சியின் நெருக்கடியும் இன்றி தன்னிச்சையான முறையில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்துள்ளோம் என்று இன்று நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு பின்னர் அவர் இவ்வாறு  சொன்னார்.


Saturday 5 January 2019

பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சேவை குறைக்கப்பட்டது - கேசவன் விளக்கம்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் செயல்பட்ட மின்சார ரயில் சேவை (இதிஎஸ்) அட்டவணை வெகுவாக குறைக்கப்பட்டதற்கு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம் என்று மலேசிய ரயில்வே நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் விவரித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் இதிஎஸ் பயண அட்டவணை குறைக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தோசித்தேன்.

இங்கிருந்து ரயில் சேவையை பெறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலேயே பயண அட்டவணை குறைக்கப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

அதேபோன்று கடந்த மக்களவை கூட்டத் தொடரிலும் இது தொடர்பில் குரல் எழுப்பியுள்ளேன். பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரு நாளைக்கு 4 முறை இயக்கப்பட்ட ரயில் சேவை இரு முறையாக மாற்றப்பட்டது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.

மேலும், இவ்வட்டாரத்தில் செயல்பட்டு வந்த டெலிகோம் மலேசியா (திஎம்) சேவை அலுவலகம் மூடப்பட்டது தொடர்பில் புகார்களை பெற்றுள்ளேன்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் கலந்துரையாடவிருப்பதாகவும் இந்த சேவை அலுவகம் திறக்கப்பட்டது தொடர்பிலான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும்  கேசவன் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண களப்பணி இறங்குவதில் தாம் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என கூறிய அவர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமது அலுவலகத்தை நாடலாம் என்று மேலும் சொன்னார்.

டெலிகோம் மலேசியா, இதிஎஸ் சேவை தொடர்பில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் விடுத்திருந்த செய்திக்கு பதிலளிக்கையில் கேசவன் இவ்வாறு கூறினார்.

சிகரெட் புகைத்தால் முதற்கட்டமாக வெ.500 அபராதம்- சுகாதார துணை அமைச்சர்

கேமரன் மலை-
உணவகங்களில் சிகரெட் புகைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி புகை பிடிக்கும் நபர்களுக்கு முதற்கட்ட அபராதத் தொகையாக வெ.500 விதிக்கப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்ரட் லீ புன் சாய் தெரிவித்தார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தலைகனத்துடன் நடந்து கொள்ளும் புகைப்படிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுகாதாரத் துறை அமலாக்க அதிகாரிகளால் முதல் முறையாக அபராதம் விதிக்கப்படும் நபர்கள் இரண்டு வாரங்களுக்குள் அபராத் தொகையை செலுத்த வேண்டும்.

அபராதத்தை செலுத்தத் தவறினாலும் மீண்டும் அதே தவற்றை செய்தாலும் 10 ஆயிரம் வெள்ளி வரைக்குமான அபராதமும்  ஈராண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார்.

ஜனவரி 1ஆம் தேதி முதல் உணவகம் மட்டுமல்லாது பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகோம் சேவை மையம் மீண்டும் செயல்பட கேசவன் களமிறங்குவாரா? - மணிமாறன் கேள்வி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் அமைந்திருந்த டெலிகோம் நிறுவனத்தின் சேவை மையம் மூடப்பட்டதால் இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இங்கு செயல்பட்டு வந்த  சேவை மையம் மூடப்பட்டதோடு கட்டணம் செலுத்த, சேவைகளை பெற கோலகங்சார் அல்லது ஈப்போ வட்டாரத்திலுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் இன்னமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது மக்களுக்கு மேலும் துன்பத்தை அளிக்கிறது.

14ஆவது தேர்தலுக்கு முன்னர் மஇகா இங்கு எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் துரிதமான சேவைகளை வழங்கியது. சுங்கை சிப்புட் ரயில் நிலையத்திலிருந்து  ஈடிஎஸ் எனப்படும் மின்சார ரயில் சேவை பயணத்திற்கான அட்டவணை கூட இங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது இங்கு ரயில் பயண அட்டவணை மாற்றப்பட்டு பயண நேரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த கேசவன் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்ற போதிலும் இதுபோன்ற மக்களுக்கு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண களமிறங்க வேண்டும் என்று மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

கேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளரானார் மனோகரன்

கோலாலம்பூர்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ஜசெகவின் எம்.மனோகரன்  அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் துன் மகாதீர் மனோகரனை வேட்பாளராக அறிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் நாம் வென்று காட்டுவோம் என பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்த்லின்போது கேமரன் மலையில் போட்டியிட்ட மனோகரன் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ சி.சிவராஜிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

Friday 4 January 2019

எரிபொருளின் புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம்

கோலாலம்பூர்-
எரிபொருளுக்கான புதிய விலை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை அறிவிக்கப்படலாம் என்று உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த புதிய எரிபொருளுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார் அவர்.

இவ்வாரம் சரிவு காணும் என எதிர்பார்க்கப்பட்ட எரிபொருளின் விலை பெட்ரோல் நிலைய உரிமையாளர்களின் கோரிக்கையினால் ஒத்திவைக்கப்பட்டது

சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை பிரதமர் துன் மகாதீர் செவிமடுத்துள்ள நிலையில் புதிய எரிபொருளுக்கான விலை அறிவிக்கப்பட்டவுள்ளது.

கேமரன் மலை தேமுவின் கோட்டை- பேரா ஜசெக

ஈப்போ-
தேசிய முன்னணியின் கோட்டையாக திகழும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை நிலைநாட்ட பக்காத்தான் ஹராப்பான் பாடுபடும் என்று பேரா ஜசெக தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

இடைத் தேர்தலை சந்தித்துள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை இதுவரை நாங்கள் கைப்பற்றியதே இல்லை. அது தேசிய முன்னணியின் கோட்டையாகவே கருதப்படுகிறது.

ஆயினும் 'புதிய மலேசியா' சித்தாந்தத்தின் கீழ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 26ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசாங்கக் குத்தகைகள் கட்சி தொகுதித் தலைவர்களுக்கா? அனுமதிக்க முடியாது

ஈப்போ-
அரசாங்க குத்தகைகள் பெர்சத்து கட்சியின் தொகுதி, கிளைத் தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் உதவித் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ரஷீட் அப்துல் ரஹ்மான் விடுத்திருக்கும் கோரிக்கையை பேரா ஜசெக (DAP) நிராகரித்துள்ளது.

இத்தகைய கொள்கை முந்தைய அரசாங்கமான தேமுவைச் சார்ந்தது. அதனை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைய விடக்கூடாது.

பக்காத்தான்  ஹராப்பானை மக்கள் வெற்றி பெறச் செய்ததே தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்பதால்தான்.  இது பக்காத்தான் ஹராப்பானின் கொள்கையும் அல்ல.

அரசாங்க குத்தகைகள் பெற விரும்புவோர் அதற்கு முறையாக விண்ணப்பித்து பொது டெண்டர் முறையின் கீழ் குத்தகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து தொகுதித் தலைவர்கள் என்பதால் குத்தகைகள் வழங்கப்படக்கூடாது என்று பேரா ஜசெகவின் தலைவர் ஙா கோர் மிங் கூறினார்.

மாமன்னர் குறித்து பொய்யான தகவல் - கடுமையான நடவடிக்கை தேவை

கோத்தா பாரு-
நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி குறித்து பகிரப்படும் பொய்யான தகவல் குறித்து சட்டத்துறைத் தலைவர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா  கேட்டுக் கொண்டார்.

மாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமட் வி விலகிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் வெளியான பொய்யான தகவல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வாகன நிறுத்துமிட கட்டண முறை சீராக்கப்பட வேண்டும்- ஆட்சிக்குழு உறுப்பினர்

ஈப்போ-
பேரா மாநிலம் முழுவதும் வாகன நிறுத்தத்திற்கான ஒரே கட்டண முறை கொள்கை இம்மாத பிற்பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்று வீடமைப்பு,  ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து, இஸ்லாம் அல்லாதோர் சமயப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டணம் ஒரே சீராக இல்லை. அதை நாம் ஒழுங்குபடுத்திய பின்னரே அமலாக்கம் செய்ய முடியும்.

உதாரணத்திற்கு, பத்துகாஜா மாநகர் மன்றம் ஒரு மணி நேர வாகன நிறுத்தத்திற்கு 60 காசு கட்டணம் விதிக்கிறது. அதே மஞ்சோங் மாநகர் மன்றம் ஒரு மணி நேரத்திற்கு 40 காசு கட்டணமாக விதிக்கிறது.

முதலில் வாகன  நிறுத்துமிட சீட்டுக்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாநில அரசின்  ஆட்சிக்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு  ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

'புகைக்காதீர்கள்' என சொன்ன பணியாளரை அறைந்த வாடிக்கையாளர்

ஷா ஆலம்-
உணவகத்தில் புகை பிடிக்கக்கூடாது என கூறிய பணியாளரை ஆடவர் ஒருவர் அறைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய நிலையில் உள்ள உணவகங்கள், பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி ஷா ஆலம், செக்ஷன் 25இல் உள்ள உணவகம் ஒன்றில்  மூன்று ஆடவர்கள் புகைத்து கொண்டிருந்த வேளையில் புகைக்க வேண்டாம் என கூறியதால் வாக்குவாதம் மூண்டது.

அப்போது ஓர் ஆடவர் அந்த பணியாளரை அறைந்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹாருடின் மாட் தாய்ப் கூறினார்.
இச்சம்பவத்தின்போது உணவகத்தில் இதர இரு பணியாளர்களும் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உணவக பணியாளர் காயமடையவில்லை. இதில் சம்பந்தப்பட்ட ஆடவர் தாமாகவே முன்வந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் விளக்கமளிக்குவாறு பஹாருடின் கேட்டுக் கொண்டார்.

6 மாதங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே; அபராதம் கிடையாது

புத்ராஜெயா-
பொது இடங்களில் சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாதங்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படாது என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முதல் ஆறு மாதங்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.