Wednesday 28 February 2018

"அரசியல் சூழல் முழுவதுமாக மாறியுள்ளது"; சேவை செய்பவர்களையே 'மக்கள் பிரதிநிதியாக' வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பர் - டான்ஶ்ரீ கேவியஸ்


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

கேமரன் மலை-
2004ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருந்த சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு என்பதை தேசிய முன்னனியின் உறுப்புக் கட்சிகள் உணர வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.

மலேசிய அரசியல் சூழல் 2004ஆம் ஆண்டு வரை தேசிய முன்னணிக்கு பிரகாசமான வாய்ப்பாகவே இருந்தது. ஆனால் 2004ஆம் ஆண்டு அதன் பிரகாசம் குன்ற தொடங்கியது.

2008, 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு எதிர்பான ஒரு சூழலையே நாம் உணர முடிந்தது. இன்றைய சூழலில் அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை உணர வேண்டும்.

மக்களின் மனநிலையில் இன்று பலவாறாக மாறிவிட்டது. தங்களுடைய  'மக்கள் பிரதிநிதி' யார் என்பதை மக்கள் சிந்தித்து தேர்ந்தெடுக்கக்கூடிய காலமாக தற்போதைய அரசியல் சூழல் மாறிவிட்டது.

மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுபவர்களையே இன்றைய 'வாக்காளர்கள்' விரும்பக்கூடிய சூழலில் அலுவலகங்களில் உட்கார்ந்துக் கொண்டு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பதால் மட்டும் வாக்காளர்களை கவர்ந்து விட முடியாது.

அதிலும் குறிப்பாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி சேவையாற்றுபவர்களாலேயே இத்தொகுதியை வென்றெடுக்க முடியும். அதை விடுத்து வெறும்  திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களால் மண்ணை மட்டுமே கவ்வ முடியும்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி ஜெயிக்க வேண்டுமென்றால் 'நானே சிறந்த வேட்பாளர்' என விவரித்த டான்ஶ்ரீ கேவியஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு சேவையாற்றி வரும் தனக்கு மக்களின் ஆதரவு வலுவாக உள்ளது.

என்னை தவிர வேறு யாராலும் சிறந்த வேட்பாளராக இங்கு களமிறங்க முடியாது; ஜெயிக்கவும் முடியாது என 'மை பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின்போது அவர் தெரிவித்தார்.

இவருடனான சிறப்பு நேர்காணல் நாளை முதல் 'மை பாரதம்' மின்னியல் அகப்பக்கத்தில் இடம்பெறும்

பிஐசிசி ஏற்பாட்டில் 132 மகளிருக்கு சமையல், தையல் பயிற்சிகள்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேராக் இந்திய வர்த்தக சபை  (பிஐசிசி) அண்மையில் முன்னெடுத்த பயிற்சி திட்டங்களின் வழி 132 மகளிர்கள் பயனடைந்துள்ளனர்.

மகளிர் மேம்பாட்டு இலாகாவுடன் இணைந்து பிஐசிசி மேற்கொண்ட தையல்,
சமையல் பயிற்சிகள் 132 பேருக்கு வழங்கப்பட்டது.

அதில் 12 பேர் தையல் பயிற்சி 6 மாத காலத்திற்கு வழங்கப்பட்டது எனவும் 120 பேர் சமையல் பயிற்சியை கடந்த 3 மாதங்களாக பயிற்சியை மேற்கொண்டனர் எனவும் அதன் தலைவர் சுல்தான் அப்துல் காதீர் தெரிவித்தார்.

இங்குள்ள பிராக்சிஸ் கல்லூரியில் வழங்கப்பட்ட பயிற்சியின் மூலம்
இவர்கள் சமையல், தையல் பயிற்சிகளை முழுமையாக கற்றுக் கொண்டுள்ளதோடு அதனை சுயத் தொழிலாகவும் மேற்கொள்ளும் திறனை பெற்றுள்ளனர்.

தங்களின் பகுதி நேரத் தொழிலாக கூட இப்பெண்கள் இதில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என கூறிய அவர், இவர்களின் பயிற்சிகாக மகளிர் மேம்பாட்டு இலாகா வழங்கிய நிதி போதவில்லை எனவும் சில நடவடிக்கைகளுக்கு பிஐசிசியே செலவு செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிஐசிசி மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஆக்கப்பூர்வமானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருப்பதால் அடுத்த நிகழ்வுகளுக்கு மகளிர் மேம்பாட்டு இலாகா கூடுதல் நிகழ்வை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அண்மையில் பிராக்சிஸ் கல்லூரியில் நடைபெற்ற சமையல் கலை பயிற்சி இறுதிச் சுற்று நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்நிகழ்வில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிஐசிசி முன்னாள் தலைவர் கேசவன், பேராக் குடும்ப, மகளிர்
மேம்பாட்டுத் துறை  இயக்குனர் கெளரம்மா, உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday 27 February 2018

மின்கோபுரத்தின் கீழ் மாட்டுப்பண்ணை; வெளியேறுமாறு டிஎன்பி நோட்டீஸ்- செபஸ்தியன் தலையீட்டால் பிரச்சினைக்கு சுமூக தீர்வு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மின்சார கோபுரத்தின் கீழ் மாட்டுப் பண்ணையை வைத்துள்ள அதன் உரிமையாளரை அங்கிருந்து வெளியேறுமாறு டிஎன்பி  அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கை மைபிபிபி புந்தோங் தொகுதித் தலைவர் செபஸ்தியன் தலையீட்டால் சுமூகமாக தீர்வு காணப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தாமான் மெர்டேக்கா பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து சொந்த தொழிலை மேற்கொண்டு வந்த சந்திரன், அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என ஈப்போ தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி) நோட்டீஸ் அனுப்பியது.

பல்வேறு அரசாங்க இலாகாக்களின் அனுமதி பெற்று மாட்டுப்  பண்ணையை நடத்தி வரும் தன்னை அங்கிருந்து வெளியேறுமாறு டிஎன்பி நிர்வாகம் பணித்துள்ளது அதிர்ச்சியளித்ததாகவும் இவ்விவகாரம் குறித்து செபஸ்தியன் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சந்திரன் தெரிவித்தார்.

சந்திரனின் பிரச்சினை குறித்து டிஎன்பி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக செபஸ்தியன் கூறினார்.

இந்த நிலத்திலிருந்து வெளியேறுமாறு மாவட்ட நில அலுவலகம் உத்தரவு பிறப்பித்த வேளையில் டிஎன்பி ஏன் நோட்டீஸ் அனுப்பியது, தற்போதைய நிலத்தில் மின்சார தூண்களை பொருத்துவதற்கு சந்திரன் விண்ணப்பித்த வேளையில் அதனை அங்கீகரித்து கட்டணம் பெற்று டிஎன்பி ஏன் மின்சார தூண்களை பொருத்தியது, மின் கோபுரத்தின் கீழ் பலர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இவரை மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஏன்? என்று செபஸ்தியன் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள டிஎன்பி அதிகாரிகள், அந்த நிலத்தை மாவட்ட நில அலுவலகம்  ஈப்போ டிஎன்பி நிர்வாகத்திற்கு ஒதுக்கியுள்ளது எனவும், மின்சார தூண்களை பொருத்தியது தங்களுக்கு தெரியாது; அது குறித்து உயர் அதிகாரிகள் பதிலளிப்பர் எனவும், இங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோர் டிஎன்பி நிர்வாகத்திடமிருந்து தற்காலிக ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் எனவும் பதிலளித்தனர்.

இன்று டிஎன்பி அதிகாரிகள், ஈப்போ மாநகர் மன்றம், போலீஸ் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பில், டிஎன்பி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மாட்டுப் பண்ணையை  நடத்துவதற்கு சந்திரனுக்கு தடை இல்லை எனவும்  சில விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

டிஎன்பி நிர்வாகத்தினர் முன்வைக்கும் நிபந்தனைகளை தாம் ஏற்பதாக சந்திரன் கூறியதை தொடர்ந்து இப்பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது என செபஸ்தியன் கூறினார்.

பலகாரங்களை வியாபாரம் செய்யும் சாந்திக்கு உதவிட சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு முன்வந்தது


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தாமான் லிந்தாங் பகுதியில் பல மாதங்களாக பலகாரங்களை வியாபாரம் செய்து வரும் திருமதி ரா.சாந்தி வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு  உதவிக்கரம் நீட்ட முன்வந்தது.

இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்கு ஏதுவாக யயாசான் பினா உபாயாவின்  உதவியை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அதன் தலைவர் மு.நேருஜி தெரிவித்தார்.

தற்போது நிறுவனப் பதிவை  மேற்கொள்ளுமாறும் அதற்கு பிறகு அரசு இலாகாக்களின் வழி சில உதவிகளை மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

சொந்த வியாபாரத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள முடியும் என முயற்சிப்பவர்களுக்கு மஇகா இளைஞர் பிரிவு என்றுமே துணை நிற்கும் என பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான நேருஜி குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கையின்போது சுங்கை சிப்புட்  மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு   துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன், செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் லெட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Monday 26 February 2018

தமிழ் திரையுலக 'மயிலு ' ஶ்ரீதேவி மரணம்; தலைவர்கள், நடிகர்கள் அனுதாபம்
புதுடெல்லி-
தமிழ், இந்தி உட்பட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தது திரைப்பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் 'மயிலாக' மனதில் உலா வந்ஹ ஶ்ரீதேவி 'மூன்றாம் பிறை', 'வாழ்வே மாயம்' உட்பட பல திரைப்படங்களில் ரஜினி, கமல்ஹாசன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்து புகழின்  உச்சியை அடைந்தார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதிலிருந்து விலகியிருந்த நடிகை ஶ்ரீதேவி, 'இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் நேற்று துபாயில் நடைபெற்ற உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானர்.

நடிகை ஶ்ரீதேவியின் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், "ஸ்ரீதேவி மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பேரிழப்பாகும். மூன்றாம் பிறை, லம்ஹே, இங்க்லீஸ் விங்லீஸ் ஆகிய படங்களில் அவர் நடித்தது மற்ற நடிகர்களுக்கான முன்னுதாரணமாக இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஸ்ரீதேவியின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரையுலகில் பண்முக திறமையை வெளிக்காட்டியவர். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மறக்கமுடியாத நினைவலைகளை பதிவு செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என இரங்கலை பதிவு செய்தார்.

நடிகர்கள்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் பாரதிராஜா, நடிகைகள் கெளதமி, திரிஷா, பிரீத்தா ஜிந்தா, பிரியங்கா சோப்ரா உட்பட  பலர் டுவிட்டர் மூலம் தங்களது அனுதாபத்தை  தெரிவித்துக் கொண்டனர்.

நிலப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள எங்களை மந்திரி பெசார் சந்திக்காதது ஏன்? மக்கள் ஆவேசம்சுங்கை சிப்புட்-

பல ஆண்டுகளாக நிலப் பிரச்சினையை வரும் மக்கள் 'எங்களின் பிரச்சினை மந்திரி பெசார் தீர்வு காணாதது ஏன்?' என ஆசேவக் குரல் எழுப்பியுள்ளனர்.

இங்குள்ள 8 கம்பங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக நிலத்திற்கும் வீடுகளுக்கும்  போராடி வரும் நிலையில் இன்னமும் அப்பிரச்சினைக்கு தீர்வு காணாதது குறித்து தங்களது ஆதகங்களை வெளிபடுத்தினர்.

இங்குள்ள கம்போங் பேராக் ஹைட்ரோ, கம்போங் பஹாரி, கம்போங் கோபால், கம்போங் வீராசாமி, கம்போங் ஜாலான் லிந்தாங், கம்போங் பெலாக்காங் சிங் சோங்,  கம்போங் சுங்கை பூலோ,கம்போங் பெங்காலி போன்ற குடியிருப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தங்களது போராட்டத்திற்கு எப்போது தீர்வு காணப்படும் என வினவினர்.

இன்று பேராக் ஹைட்ரோ குடியிருப்புப் பகுதியில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களான குடியிருப்பாளர்கள் கல்யாணகுமார், கணேசன், திருமதி தேவி உட்பட பலர், தங்களின் நிலப்பிரச்சினை குறித்து மந்திரி பெசாரின் கவனத்திற்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளோம்.

ஆனால் இன்னமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் காலதாமதம் செய்யும் மாநில மந்திரி பெசாரின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் காலங்களில் மட்டுமே எங்களின் பிரச்சினை குறித்து இனிப்பான வாக்குறுதிகளை வழங்கியவகள் அதன் பிறகு எங்கள் பக்கமே திரும்பி பார்க்கவ்வில்லை  என அவர்கள் கூறினர்.

எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், நாங்கள் சொந்த இல்லங்களில் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதற்கும்வழியில்லாமல் பெரும் வேதனையுடனே தவித்துக் கொண்டிருக்கிறோம் என பல குடியிருப்பாளர்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

மேலும் இங்குள்ள மக்களின் நிலப்பிரச்சினை குறித்து மாநில மந்திரின் கவனத்திற்கு 10க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளோம். ஆனால் எந்தவொரு கடிதத்திற்கும் இன்னமும் ஆக்ககரமான நடவடிக்கை இல்லை என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

தனியார் நிலங்களில் வாழும் மக்கள் எந்நேரத்திலும் அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பதோடு பலர் அரசாங்க நிலத்தில் குடியிருந்தும் இன்னமும் பிரச்சினைக்கு தீர்வில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதற்கு பேராக் மாநில மந்திரி பெசார் துரிதமாக செயல்பட்டு தீர்வு காண முற்பட வேண்டும்.

இல்லையேல் மக்களின் மாவட்ட நில அலுவலம் முன்பு மிகப் பெரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என அவர் சொன்னார்.

இந்த சந்திப்பில் பல்வேறு கிராமங்களின் குடியிருப்பாளர்களும் பிஎஸ்எம் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Sunday 25 February 2018

அனுபவமும் நுணுக்கமுமே ஒரு துறையில் நம்மை மிளிர வைக்கும்- அறிவிப்பாளர் ஜீவன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒரு துறையில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் நமது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்கிறார் சஹாரா ஒலி, ஒளியமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜீவன்.

ஏற்றம், இறக்கம் நிறைந்ததே சொந்த தொழில். அதில் நமது உழைப்பும் முயற்சியும் பொறுத்தே வெற்றி அமைகிறது. ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் அதன் நுணுக்கங்களை அறிந்து கொண்டு செயலாற்றுவதே சிறப்பானதாக அமையும் என்கிறார் அவர்.

ஒலி, ஒளியமைப்பு துறையில் மட்டுமல்லாது அறிவிப்பாளர் பணியிலும் மிளிரும் ஜீவனுடன் 'பாரதம்' மின்னியல் ஊடகம் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கே: உங்களை பற்றி?

ப: பள்ளி வாழ்க்கை முடிந்த பின்பு கொஞ்ச நாள் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு வாழ்க்கையை நகர்தத வருமானம் வேண்டுமென கொஞ்ச நாள் கெந்திங் பகுதியில் பணியாற்றினேன். அதன் பிறகு மனைவி, பிள்ளைகள் ஈப்போவில் இருப்பதால் ஒரு கட்டாயத்தின் சூழலில் ஈப்போவுக்கே வந்துவிட்டேன்.

இங்கு வந்தவுடன் ஒரு பஞ்சாபி நண்பர் அறிமுகத்தோடு நாங்கள் இருவரும் ஒலி, ஒளியமைப்பு பணியை சிறிதாக ஆரபித்து அதன் பிறகு அதில் முழுமையாக ஈடுபட தொடங்கினோம்

 படிபடியாக ஒலி, ஒளியமைப்பு சிஸ்டத்தை முறையாக தொடங்கி எனக்கு கீழ் 5 வேலையாட்கள், 2 லோரிகளுடன் மலேசிய முழுவதும் உள்ள நிகழ்வுகளில் அசத்தி வருகிறோம் என்று கூறுவதில் மிகையாகாது.

கே: இந்த  துறையில் ஈடுபட   எவ்வாறு ஆர்வம் வந்தது? 

ப: சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனது 10ஆவது வயதில்  என் அண்ணன் நடராஜாவுடன்  கலைமகள் ஆட்ஸ் இசைக்குழுவில் இணைந்து  அனுபவம் பெற, பின்பு  அதுவே இப்போது எனது பணியாக மாறிவிட்டது.

கே: ஒலி. ஒளியமைப்பு துறையில் நீங்கள் ஈடுபட்ட பிறகு உங்கள் வாழ்க்கை தரம் எவ்வாறு மாறியது?
மனைவியுடன் ஜீவன்...
: தொடக்கத்தில் 200 வெள்ளி, 250 வெள்ளி என தொடங்கிய ஒலி, ஒளியமைப்பு பணி,  இன்று படிபடியாக முன்னேற்றம் கண்டு வருமானம் ஈட்டும் தொழிலாகவும் உருமாற்றி கொண்டேன்.   பின்பு அறிவிப்பாளராகவும் வலம் வர தொடங்கினேன்.

சில சமயங்களில் சொந்த தொழில் என்றாலே ஏற்றம், இறக்கம் இருக்கத்தானே செய்யும். அதையும் தாண்டி ஒலி, ஒளியமைப்புத் துறையில் பயணிக்கின்றேன்.

இப்போது உள்ள காலகட்டத்தில் அடுத்தவரிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட நமக்கு தெரிந்த தொழிலில் முன்னேற்றம் காண்பதே சிறப்பு

கே: இந்த துறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்ல வருவது?

ப: நான் இந்த ஒலி, ஒளியமைப்பு துறைக்கு  வருவதற்கு முன்பு ஈப்போவில் இத்துறை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட பிறகு சிலவற்றை  தவிர்த்து,  மக்கள் விரும்பும் வண்ணத்தில் ஒலி ஒளியமைப்பு,  அறிவிப்புகளை புதிய சிந்தனையில், புதிய அணுகுமுறைகளை கையாண்டேன்.

அந்த நடவடிக்கையே  இன்று சஹாரா
என்டெர்டெய்ன்மென்ட்  ஒலி, ஒளியமைப்பு புகழ்பெற்று விளங்குவதற்கு காரணமாகும்.  இதைப்பொன்று மற்றவர்கள்களும் கையாண்டு வந்தால் அனைவரும் சிறப்பான முறையில் இந்த துறையில் மிளிரலாம்.

  - தொடரும்....-

முன்னாள் பத்திரிகையாளர் சுப்பிரமணியம் காலமானார்

கம்பார்-
பேராக், கம்பார் வட்டார 'தமிழ் நேசன்' முன்னாள் நிருபர்  டி. சுப்பிரமணியம் இன்று  அதிகாலை காலமானார்.

தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் நிருபராக   பணியாற்றிய அமரர் சுப்பிரமணியம்  அண்மைய காலமாக நோய்வாய்பட்டு கிடந்த நிலையில் சிகிச்சைக்காக ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நிருபராக மட்டுமின்றி கம்பார் தொகுதி மஇகா செயலாளராகவும் கம்பார் மாவட்ட மன்ற உறுப்பினராகவும்  சேவையாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 2.00 மணிக்கு எண்.27, ஜாலான் 5, தாமான் ஶ்ரீ மாஸ், கம்பார் எனும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கேமரன் மலை மஇகாவுக்கே; பேசுவதற்கு ஏதுமில்லை- டத்தோஶ்ரீ சுப்ரா


செர்டாங்-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடும். தேசிய முன்னணியின் (தேமு) பங்காளி கட்சிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

'அத்தொகுதி மஇகாவுடையது என்பதை முன்கூட்டியே தெரிவித்து விட்டோம். பேசுவதற்கு ஏதுமில்லை'  என நேற்று  மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு, கர்னிவெல் 2018ஐ தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்தார். ஆனால் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் ஜசெக வேட்பாளர் எம்.மனோகரனை 462 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2015இல் மஇகாவிலிருந்து டத்தோஶ்ரீ பழனிவேல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதி சுயேட்சை தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய எவ்லின் ஆங் உயிர்காப்பு இயந்திரத்தை நிறுத்திட குடும்பத்தினர் முடிவு


கோலாலம்பூர்-

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எவ்லின் ஆங்கின் உயிர்காப்பு இயந்திரத்தை நிறுத்தி விட அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடட்ந்த நெடுந்தூர ஓட்ட போட்டியின்போது எவ்லின் ஆங் உட்பட மூவர் காரினால் மோதி தள்ளப்பட்டனர்.

இத்தனை நாட்களும் மருத்துவமனையில் சுயநினைவின்றி  இருந்த வந்த எவ்லின் ஆங்கின் உயிர்காப்பு இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்திட குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அவர் மூளை சாவடைந்து விட்ட நிலையில்  உடல் உறுப்புகள் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்டது. உடல் செயல்படவில்லை என்பதை இதயம் உணரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவர்கள் கூறினர் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கு பின்னர் 11 முறை அவருக்கு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. அவருடைய மூளையில்  ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. எலும்புகளில் கடுமையான முறிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களில் மட்டும் அவருக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவரின் ஆலோசனைபடி உயிர்காப்பு இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்து அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுக்க முடிவு செய்து விட்டோம் என குடும்பத்தினர்  வேதனையுடன் குறிப்பிட்டனர்.

எவ்லின் குடும்பத்தினரின் இந்த முடிவு மலேசியர்களின் மத்தியின் கடுமையாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, எல்வின் ஆங் உட்படமூவரை மோதி தள்ளிய 27 வயதான
தியோ தியோன் லிம் மீது கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 24 February 2018

குமாரி தமிழரசியின் 'வாழ்வின் சுடரொளியே... கல்வி' பாடல் (வீடியோ இணைப்பு)

புனிதா சுகுமாறன்

ஈப்போ- 
பேராக், கிரியான், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி ஆசிரியை குமாரி தமிழரசியின் 'வாழ்வின் சுடரொளியே... கல்வி வாழ்வின்  சுடரொளியே' எனும் பள்ளி பாடலை உருவாக்கியுள்ளார்.

தமிழ்ப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் பள்ளி பாடலை எளிமையாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்திட வேண்டும் எனும் நோக்கில் இந்த பள்ளி பாடலை அவர் உருவாக்கியுள்ளார்.

மலேசியாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜெய் இசையமைப்பில் ஆசிரியை தமிழரசி பாடல் வரிகள் எழுதியுள்ள பாடல் மெல்லிசை கானத்தில் தமிழ் உணர்வை தூண்டுவதாக அமைந்துள்ளது.

பாடல் வீடியோ கீழே  இணைக்கப்பட்டுள்ளது...'வாழ்வின் சுடரொளியே... கல்வி' - பள்ளி பாடலில் 'இசை புரட்சி' நிகழ்த்தியுள்ளார் குமாரி தமிழரசி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
"மெட்டுப் போடு மெட்டுப் போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு"  என்ற பாடல் வரியை கேட்காதவர்கள் யாருமே இங்கு இருக்க முடியாது. அதே போன்றுதான் எத்தகைய பாடலும் புது மெட்டில் அமைந்தால் அதன் ரசனை தனி உலகத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.

தற்போது அனைத்து இடத்திலும் 'இசை புரட்சி' நிகழ்த்தப்பட்டு வருகிறது. மனதை வருடிச் செல்வது இசை மட்டுமே என்ற ரீதியில் திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ் வாழ்த்தும்  தனி பாடலும் தற்போது  உருமாற்றம் கண்டு வருகிறது.

என்ன வரி, அதன் அர்த்தம் என்னவென்றே புரியாத பாடல்களுக்கெல்லாம் தற்போது சிறார்கள் தலையாட்டிக் கொண்டு ரசிக்கும் வேளையில் பள்ளிகளில் இசைக்கப்படுகின்ற 'பள்ளி பாடல்' ரசனை மிகுந்ததாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் அமைந்திட வேண்டாமா?

'பள்ளி பாடல்' கூட தனது பள்ளியின் அடையாளத்தை நிலைநாட்டிட வேண்டும் என்ற வேட்கையோடு தனது பள்ளிக்கான ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளார் ஆசிரியை குமாரி தமிழரசி முனியாண்டி.

பேராக், பாரிட் புந்தார், கிரியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் குமாரி தமிழரசி, 'வாழ்வின் சுடரொளியே... கல்வி வாழ்வின் சுடரொளியே' எனும் பாடலை உருவாக்கியுள்ளார்.

இப்பாடல் உருவாக்கம் குறித்து 'பாரதம்' மின்னியல் ஊடகத்துடன் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆறுமுகம் தமிழ்ப்பள்ளியில் தமிழாசிரியராக மட்டுமல்லாமல் துணைப் பாடமாக இசைக்  கல்வியையும் மாணவர்களுக்கு போதித்து வருகிறேன். ஆசிரியராக பணிபுரிந்து வந்த சில நாட்களிலேயே இப்பள்ளிகென தனிப் பாடல் உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.

பள்ளி பாடல் என்பது தனித்துவமிக்க அடையாளமாக கருதப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. இது நான் கண்ட உண்மையாகும். இதனாலேயே இப்பள்ளிக்கான பாடலை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டேன்.
அதற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா. சுப்பிரமணியம் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினார்.

அதற்கேற்ப புதிதாக உருவாக்கம் காணும் பாடலுக்கான வரியை நானே எழுதினேன். இந்த பாடலின் இசை சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதால் இந்நாட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெய் இசையில் பாடலை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கோலாலம்பூரில்தான் இப்பாடல்  பதிவு நடைபெற்றது.

பள்ளியின் பாடலை எழுதும்போது எங்கள் பள்ளிக்கான கருப்பொருளோடு தொடங்கினேன். 'வாழ்வின் சுடரொளியே... கல்வி...' என தொடங்கும் பாடலை முதலாம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் எளிதில் புரிந்து, பாடும் வகையில் இருக்கும் வகையில் எழுதினேன்.

சென்ற வருடம்  பள்ளி பரிசளிப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக இந்த பள்ளி பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இனிவரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிக்கான அடையாளமாக  'பள்ளி பாடல்'
திகழ்ந்திட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பள்ளியும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்கிறார் குமாரி தமிழரசி.


குமாரி தமிழரசியின் 'இசை புரட்சி'  பல தமிழ்ப்பள்ளிகள் உருவெடுத்திட 'பாரதம்' மின்னியல் ஊடகம் வாழ்த்துகிறது.

வசந்தபிரியா விவகாரம்; ஆசிரியர் மீது கல்வி இலாகா இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - டேவிட் மார்ஷல்


ஜோர்ஜ்டவுன்-
மாணவி வசந்தபிரியா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது பினாங்கு மாநில கல்வி இலாகா இன்னும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியரின் கைப்பேசியை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டாம் படிவ மாணவி வசந்தபிரியா கடந்த ஜனவரி 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இம்மாதம் 1ஆம் தேதி மரணமடைந்தார்.

வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தகவல்களுக்கான காத்திருப்பதாக மாநில கல்வி இலாகா கூறுகிறது.

நிரந்தர வழிகாட்டி செயல்முறையின் (எஸ்ஓபி) கீழ் மாநில கல்வி இலாகா சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்க எடுக்கலாம் என நம்புகிறோம்.
ஆனால் எதற்காக போலீசாரின் அறிக்கைக்காக கல்வி இலாகா காத்துக் கொண்டிருக்கிறது?

இவ்விவகாரம் தொடர்பில் கல்வி இலாகாவின் நடவடிக்கைகளை அறிய விரும்புகிறோம். ஆசிரியரின் நடவடிக்கையில் தவறு நடந்துள்ளதை கண்டறிந்தால் எங்களுக்கு அது தொடர்பில் தெரிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக டேவிட் மார்ஷல் மேலும் கூறினார்.

வசந்தபிரியா மரணம்; சிசிடிவி காட்சியின் உள்ளடக்கங்களை காண விரும்புகிறோம்- தந்தை முனியாண்டி


நிபோங் தெபால் -
மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவு செய்யபட்டுள்ள காட்சியின் உள்ளடக்கங்களை அறிய விரும்புவதாக சிறுமியின் தந்தை ஆர்.முனியாண்டி தெரிவித்தார்.

ஆசிரியரின் கைப்பேசியை மாணவி வசந்தபிரியா திருடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதனை மறுத்த முனியாண்டி, எங்கள் மகள் கைப்பேசியை திருடியதாக கூறப்படுவதில் உண்மை இருக்காது. ஏனெனில் அவள் அவ்வாறு செய்யமாட்டாள்.

ஆயினும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் காட்சியை குடும்பத்தினர் காண விரும்புகின்றனர். அதன் உள்ளடக்கத்தை அறிய விரும்புகிறோம் என அவர் கூறினார்.

இதனிடையே, சிறுமி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்துவதற்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்ற அவர், இதன் மூலம் உண்மை வெளிக்கொணரப்படும் என நம்புகிறேன் என்றார்.

வசந்தபிரியாவின் மரணம் வீட்டில்  அனைவரிடத்திலும் கடினமாக சூழலையே உருவாக்கியுள்ளது. அவளை ஒருநாளும் நினைக்காமல் இருப்பதில்லை.

இந்த மரண நீதி விசாரணையின் மூலம் உண்மையிலே என்ன நடந்தது என்பது தெரிய வெளிக்கொணரப்பட வேண்டும் என முனியாண்டி கூறினார்.

மாணவி வசந்தபிரியா மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்பட அட்டெர்ஜி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் விசாரணையை தொடங்குவதற்கான தேதிக்காக காத்திருப்பதாகவும் பினாங்கு போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் வரை போலீஸ்காரர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகள் முடக்கம்கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அரச மலேசிய போலீஸ் படையினர் விண்ணப்பித்திருந்த விடுமுறைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நிர்வாக இலாகாவின் இயக்குனர் ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் கஃபார் ரஜாப் தெரிவித்தார்.

புதன்கிழமை தொடங்கி மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை இந்த விடுமுறை முடக்கம் அமலில் இருக்கும் என  தெரிவித்த அவர், இது உய்ரமட்ட தலைவர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அதோடு பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு உள்நாட்டு
பயண விடுமுறைகள் உட்பட அனைத்து விடுமுறைகளும் முடக்கப்படும். ஆனால் புக்கிட் அமான் இயக்குனர்களின் வேலை தொடர்பான பயணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்தை ஏமாற்றுவது எதிர்க்கட்சித் தலைவர்களா? உண்மையை திரித்து கூற வேண்டாம்- அ.சிவநேசன்


புகழேந்தி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்ம் இவ்வேளையில் எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்கள் மீது புழுது வாரி தூற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குற்றஞ்சாட்டினார்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை தேசிய முன்னணி அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை ஆட்சி புரிந்து வருகின்றது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட 'அரசியல் சுனாமி' காரணமாகவே சில சிலாங்கூர், பினாங்கு உட்பட சில மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஆட்சி அமைக்க வழிவகுக்கப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என தமிழ் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்படுகின்றது. எதிர்க்கட்சியினரை சாடுவது மட்டுமல்லாது எதிர்க்கட்சியினரின் செய்திகளையும் புறக்கணிப்பு செய்யும் சூழலில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

துன் மகாதீர், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் பிரதமர், துணைப் பிரதமராக பதவி வகித்தபோது சில ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டபோது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டன.

ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடும் ஊடகம் மீது சட்டநடவடிக்கை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. சட்ட நடவடிக்கை எடுப்பதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் சட்ட நடவடிக்கையை தவிர்க்கிறோம். ஆனால் ஓர் இந்தியர் என்ற முறையில் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.

இந்திய சமுதாயத்தை 60 ஆண்டுகளாக ஆள்வது ஜனநாயக செயல் கட்சி அல்ல (டிஏபி). 18.3.1966இல் பதிவு  செய்யப்பட்ட ஜசெக 2008ஆம் ஆண்டு வரை ஆளும் கட்சியாக மாறியது கிடையாது.

இந்திய சமுதாயத்திற்காகவும் தமிழ்மொழிக்காகவும் போராடியவர்கள் ஜசெக தலைவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட ஊடகம் மறந்து விடக்கூடாது. தமிழரல்லாத ஒருவரை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஜசெகவின் மூத்தத் தலைவர்களான வி.டேவிட், பி.பட்டு ஆகியோர் 'இசா' (ISA) சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இப்போது இருப்பதுபோல் அன்று 100க்கான இந்திய பொது இயக்கங்கள் கிடையாது. இந்தியர்களுக்காகவும் தமிழுக்காகவும் அப்போதே குரல் கொடுத்தவர்கள் ஜசெக இந்தியத் தலைவர்கள் ஆவர்.

நாட்டில் உருவெடுத்துள்ள மதமாற்றப் பிரச்சினைக்கு எதிராக இன்றும் குரல் கொடுப்பது மட்டுமல்லாது சட்ட நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பது ஜசெக இந்தியத் தலைவர்கள் தான்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்டத்தையே இந்நாடும் பின்பற்றியது. பல இன மக்களை கொண்ட இந்நாடு மதசார்பற்ற நாடாக  திகழ்ந்திட வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே துங்கு அப்துல் ரஹ்மான், துங்கு ஓன் ஜபார் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்தினர்.

அப்போதெல்லாம் ஷரியா சட்டம் இந்நாட்டில் கிடையாது, ஆனால் அதை ஆளும் தேசிய முன்னணி கொண்டு வரும்போது கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா அதனை எதிர்க்காதது ஏன்?

மதமாற்றப் பிரச்சினையால் திருமதி இந்திரா காந்தி உட்பட பலர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என்பதை மறந்து விட வேண்டாம். திருமதி இந்திரா காந்தி வழக்கறிஞராக இருந்து சட்ட உதவிகளை வழங்கிய எம்.குலசேகரன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

அதுமட்டுமல்லாது, உக்ரேய்ன் பல்கலைக்கழகத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் பயில்கின்றனர் என தெரிந்தும் அந்த பல்கலைக்கழக சான்றிதழ் அங்கீகரிக்கப்படாது என மலேசிய அரசாங்கம் அறிவித்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள் தான். இவ்விவகாரம் தொடர்பில் உக்ரேய்ன் தூதருடன்  நடத்தப்பட்ட சந்திப்பில் ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், எம்,குலசேகரன் ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். அப்போது மருத்துவ படிப்பின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை, மலேசிய அரசாங்கம்தான் ரத்து செய்தது என்றார். அப்போது ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மஇகா இந்த தடைக்கு எதிராக எத்தகைய போராட்டங்களை நடத்தியது?

அதேபோன்று ஆறுமுகம் பிள்ளை பயிற்சி பள்ளியை அரசாங்கம் எடுத்துக் கொண்டபோது அதற்கு எதிராக குரல் கொடுத்தது நாங்கள்தான்.

இப்படி இந்திய சமுதாயத்தின்  ஒவ்வொரு இன்னல்களுக்கும் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள இந்தியத் தலைவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக பேராக் மாநில
ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன் குறிப்பிட்டார்.

Friday 23 February 2018

வேட்பாளர் அறிவிப்பில் காலதாமதம்; மஇகா பின்னடைவை எதிர்நோக்கலாம்?


ரா.தங்கமணி

ஈப்போ-
வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நிலவுவதால் மஇகா போட்டியிடும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக்கபட்டு வருவதாக அறியப்படுகிறது.

வரும் 14ஆவது பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படலாம் என்ற நிலையில் மஇகா போட்டியிடும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறக்கப்படுபவர் யார்? என்பது இன்னும் மூடுமந்திரமாகவே உள்ளது.

தேசிய முன்னணியில் உள்ள அம்னோ, மசீச, கெராக்கான் போன்ற கட்சிகள் கூட தாங்கள் போட்டியிடும் தொகுதிகள், களமிறக்கப்படும் வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறிந்து களத்தில் இறக்கியுள்ளது. இன்னும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தும் உள்ளனர்.

இந்நிலையில் மஇகா சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிக்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் மஇகாவின் இத்தகைய போக்கினால் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகிக் கொண்டே இருக்கிறது.

வேட்பாளர்களை வைத்தே மஇகாவின் வெற்றி உறுதி செய்யப்படும் என்ற போக்கு நிலவும் தற்போதைய சூழலில் மஇகா இன்னமும் வேட்பாளர்களை கண்டறிந்து களத்தில் இறக்காதது மிகப் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின்போது மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தபிரியா மரணம்: மரண நீதி விசாரணைக்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதிஜாவி-
தற்கொலைக்கு முயற்சித்து மரணத்தைத் தழுவிய மாணவி வசந்தபிரியாவின் மரண நீதி விசாரணைக்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இதனை உறுதிபடுத்திய பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன், இந்த அனுமதி கடந்த வாரம் தங்களுக்கு கிடைத்ததாகவும் மரண விசாரணை தொடங்குவதற்கான தேதிக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க 30 பேர் அழைக்கப்படுவர் எனவும் இந்த மரண விசாரணை பொதுவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியரின் கைப்பேசியை திருடியது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியா, கடந்த மாதம்  24ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆயினும் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி வசந்தபிரியா மரணமடைந்தார்.

நிபோங் தெபால் தேசிய இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த வசந்தபிரியா, தற்கொலைக்கு முயன்றதற்கு முன்னர் 'தான் அந்த கைப்பேசியை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு நிரபராதி எனவும்' கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமிய நடனப்போட்டியில் கிரேட் எண்ட் கோல்ட் வெற்றி வாகை சூடினர்!


ஒரு காலத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட கிராமிய நடனங்கள் இருந்த வேளையில் தற்பொழுது 20க்கும் மேற்பட்ட நடனங்கள் மட்டுமே உள்ளது. அதனை நமது இளைய சங்கதியினர்கள் வளர்க்க வழிவகுக்கும் வகையில் மலேசிய கலை உலகம் கிராமிய நடனப் போட்டியினை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நவின காலத்தில் கிராமிய பாடல்களும் நடனங்களும் மறைந்து வருகின்ற வேளையில் மலேசிய கலை உலகம் அண்மையில் ஆடவரலாம் 2.0. எனும் கிராமிய நடனப் போட்டி இங்குள்ள டெம்பல் ஆஃப் பைன் ஆர்டஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கிராமிய நடனத்திற்கு நம் ஆதரவு வழங்க வேண்டும். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அறிது, ஆனால் அப்படி அமையும் இதுபோன்ற வாய்ப்புகளை சரியான முறையில் நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளின் வழி வளரும் என நிகழ்வில் சிறப்பு வருகையாளர் டத்தோ தி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக உள்ளூர் கலைஞரும் கிராமிய நடனக் கலைஞர் பறவை முனியம்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசிய கலை உலகம் எஸ்.பி. பிரபா மற்றும் நாட்டின் மூத்தக்கலைஞர் கே.எஸ். மணியம் வழங்கிச் சிறப்பித்தனர்.

ஆடவரலாம் 2.0. நல்ல திட்டம். நம் கலை கலாச்சாரமும் பண்பாடும் வளர வாய்ப்புள்ளது. நம் கலை கலாச்சாரங்கள் தமிழ்ப்பள்ளிகளில் வளர இத்திட்டத்தை கொண்டுச் சென்றால் அதற்க்கு நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன் என தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நாட்டின் கலைத்துறை மிகப்பெரிய பரிணாமங்கள் கண்டு வருகின்றன. மேலும், 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு சினிமாவுக்கு ஈடாக நம் நாட்டு சினிமா அமையும் என்பதில் ஐயமில்லை என மலேசிய கலை உலகம் அதிகாரப்பூர்வ காணொளியை தொடக்கி வைத்த பின்னர் அவரது முடிவுரையில் கூறினார்.


இப்போட்டியில் ஐந்தாவது இடத்தை ஸ்வாகர் டன்ஸர், நான்காவது இடத்தை ரியான ஆர்ட்ஸ், முன்றாவது இடத்தை அபிநேய தென்றல், இரண்டாவது இடத்தை கேவியஸ் கிரியேசன்ஸ், முதலாம் இடத்தை கிரேட் என்ட் கோல்ட் தட்டிச் சென்றனர். 

வெற்றியாளர்களுக்கு பரிசுகளை நிகழ்வின் சிறப்பு வருகையாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எடுத்து வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வை தமிழ்வாணி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மேலும், ஐந்தாம் ஆறாம் இடத்தை வென்ற குழுவினர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினர். முன்றாம் இடத்தை வென்ற குழுவினருக்கு ரிம.1000 வெள்ளியும், இரண்டாம் நிலையை வென்ற குழுவிற்கு ரிம.2000 வெள்ளியும், முதல் நிலை வெற்றியாளருக்கு ரிம.3000 வெள்ளியும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், முதல் நிலை வாகை சூடிய கிரேட் எண்ட் கோல்ட் குழுவினருக்கு வெற்றி கேடயமும் மர்ம பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு செனட்டர் டத்தோ தி.மோகன், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன், இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பார் அமைப்பின் தலைவர் டத்தோ சந்திரகுமணன், உள்ளூர் கலைஞர் தமிழ்செல்வம், உள்ளூர் கலைஞர்கள், தயாரிப்பாளர்களும் பொதுமக்களும் கலந்துச் சிறப்பித்தனர்.

அறிவிப்பாளர் பணியில் 'மக்கள் கவர்ந்த நாயகன்' ஜீவன்


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
ஒவ்வொரு இனிய நிகழ்வுகளும் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தால்தான் அந்த இடமே மிகவும் கலகலப்பாக காணப்படும். திருமணமாகட்டும், பிறந்தநாளாகட்டும், ஏன் ஆலய திருவிழா என்றால் கூட கலகலப்பு கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பு ஒலி, ஒளியமைப்பு கலைஞரையே (DJ) சாரும்.

ஒலி, ஒளியமைப்பு, அறிவிப்பாளர் பணியை அவ்வளவு எளிதில் யாராலும் கையாள முடியாது. அதன் நுணுக்கங்களை அறிந்தவர்களே அதனை திறம்பட வழிநடத்த முடியும் என்ற நிலையில் நிகழ்வுக்கு வரும் கூட்டத்தினரை தன் வசம் ஈர்ப்பதிலும் அவர்கள் திறமையாளர்களாக விளங்கிட வேண்டும்.

அவ்வகையில் ஈப்போ வட்டாரத்தில் நன்கு ஒலி, ஒளியமைப்பு,  அறிவிப்பாளர் பணியை நன்கு செய்வதில் புகழ் பெற்று விளங்குகிறார் டிஜே ஜீவன்.

சஹாரா ஒலி, ஒளியமைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமல்லாது, அறிவிப்பாளர் பணியை திறம்பட கையாளும் ஜீவன், மக்கள் விரும்பும் வண்ணம் திறமையாக,புதுமையான முறையில் மேற்கொண்டு வருகிறார்.

அறிவிப்பாளர் பணி மட்டுமல்லாது முன்பு மோட்டார் பந்தய வீரராக திகழ்ந்த ஜீவனுடனான சிறப்பு சந்திப்பு விரைவில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தின் இடம்பெறும்.

'மிகப் பெரிய மக்கள் தொகை மலேசியாவுக்கு தேவைபடுகிறது'- பிரதமர் நஜிப்


கோலாலம்பூர்-
'மலேசியாவுக்கு மிகப் பெரிய மக்கள் தொகை தேவைபடுகிறது. ஆதலால் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த வயதில் உள்ள மலேசியர்கள் தொடர்ந்து பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள்' என பிரதமர் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவுறுத்தினார்.

வழக்கமாக நாட்டின் பொருளாதார முதிர்ச்சி பிறப்பு விகிதத்தை குறைக்கும். அதே போன்றதொரு சூழலைதான் மலேசியா எதிர்நோக்கியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு நாட்டுக்கு அவசியமாகிறது என்பதால் பிள்ளைகளைம் பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்த மலேசியர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கேற்ப அமானா டானா அனாக் மலேசியா 2050 அல்லது ஏடாம் 50 திட்டங்கள் மலேசியர்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக  பிரதமர் நஜிப் குறிப்பிட்டார்.

புது மெட்டில் 'பள்ளி பாடல்'; ஆசிரியை தமிழரசியின் புது முயற்சி

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பள்ளிகளில் 'பள்ளி பாடல்' இசைக்கப்படுவது வழக்கமாக உள்ள ஒன்றுதான். ஆனால் பள்ளி பாடல் கூட காலத்திற்கேற்ற உருமாற்றத்தை அடைந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் கூட மெல்லிசை கீதத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது ஒருகாலம். ஆனால் தற்போதைய திரைப்படப் பாடல்கள்  எல்லாம் மேற்கத்திய பாணியில், நாடி நரம்புகளை உற்சாகமடையச் செய்யும் வகையில் உருமாற்றம் கண்டுள்ளன.

'இசை புரட்சி'  திரைப்படங்களில் மட்டுமல்லாது  தனி பாடல் (சிங்கிள் டிராக்), தமிழ் வாழ்த்து என பலவற்றை கடந்து வந்துள்ள நிலையில்  பள்ளிகளில் ஒலிக்கக்கூடிய 'பள்ளி பாடலிலும்' இடம் பெற வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது ஆசிரியை குமாரி தமிழரசியின் முயற்சி.

தனது பள்ளி பாடல் புதிய மெட்டுடன்  இனிமையான வரிகளுடன் அமைந்திட வேண்டும் என ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் இவர்.

பேராக், கிரியான், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியை தமிழரசி, 'வாழ்வின் சுடரொளியே' என தொடங்கும் பாடலை உருவாக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜெய் இசையில் புதிய மெட்டு, புது வரியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளி பாடல் உருவாக்கம் குறித்து ஆசிரியை தமிழரசியுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பு நாளை 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறும்.

பிஐசிசி ஏற்பாட்டில் 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, வர்த்தகம்' இலவச பயிற்சி பட்டறை


ரா.தங்கமணி

ஈப்போ-

பேராக் இந்தியர் வர்த்தக சபையின் (பிஐசிசி) ஏற்பாட்டில் இளைஞர்கள், மாணவர்களுக்கான 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, வர்த்தகம்'  ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய  இலவச பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 10,11 ஆகிய தேதிகளில்  காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை ஈப்போ, யுக் சோய் சீன இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறையை அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் வழிநடத்தவுள்ளார் என பிஐசிசி தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதீர் தெரிவித்தார்.

மாணவர்கள், இளைஞர்களின் 'கனவு நாயகனான' இந்தியாவின் முன்னாள் அதிபரும், அணு விஞ்ஞானியுமான  ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10 கோட்பாடுகளை உள்ளடக்கி இப்பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது.
வேலை வாய்ப்பே இல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயின்று இன்று அந்த துறையே இந்திய நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு பெறச் செய்தவர் ஏபிஜே அப்துல் கலாம். அதேபோல இளைஞர்களும் மாணவர்களும் தங்களுக்கான வாய்ப்புகளை தேடி கொண்டிருப்பதை விட வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற 'தேடலை' விதைப்பதாக இப்பயிற்சி அமையவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் புரவலராக மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் திகழ்கின்றார். அதேவேளையில் மஇகா உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

15 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்ற நிலையில் தங்களை வருகை உறுதி செய்வதற்கு இறுதி நாள் 5.3.2018 ஆகும்.

இப்பயிற்சிகளில் பங்கேற்பவர்கள் 05-255 5558 / 016-255 8558 / 017- 724 2558  என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவும் piccperak@hotmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவுக் தங்களது உறுதி செய்து கொள்ளுமாறு ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் தெரிவித்தார்.

மலைப் பாதையிலிருந்து கவிழ்ந்தது பேருந்து; 44 பேர் பலி


லீமா-
பயணிகளை ஏற்றிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று மலைப் பாதையிலிருந்து தென் பெருவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.

மலைப்பகுதியிலிருந்து 80 மீட்டர் பள்ளத்தில் (260 அடி) இந்த பேருந்து கவிழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், தீயணைப்பு, மீட்புப் படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கமானா சிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 11 பேர் ராணுவ ஹெலிகாப்டரின் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் 35 பேர் மரணமடைந்தனர் என உள்துறை அமைச்சகம் டுவிட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அரேகியுபா போலீஸ் தலைவர்  ஜெனரல் வால்டர் ஒர்டிஸ் 44 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.