Thursday 31 October 2019

எல்டிடிஇ: 12 பேர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது செஷன்ஸ்  நீதீமன்றத்தில் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட 12 பேரில் இருவர் மீது புதிதாக குற்றம்சாட்டப்பட்டது.

விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது, அந்த இயக்கம் சார்ந்த பொருட்களை  வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.



பென்னி தயால்- ஆண்ட்ரியா கலக்கும் ‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரேனா குளோபல் இன்டர்நேஷனல் ஏற்பாட்டில் தமிழ்த் திரைப்பட பாடகர்கள் பென்னி தயால்- ஆண்ட்ரியா ஆகியோரின் இசை படைப்பில் மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
டத்தோ ஈஸ்வரன் பெருமாள் வழங்கும் இந்த இசை வரும் டிசம்பர் 21ஆம் தேதி செராஸ் பிஜிஆர்எம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒரு மாறுபட்ட இசை நிகழ்ச்சியாக இது அமையும் என கூறிய பென்னி தயால், நான்கு மணி நேரமும் முழுக்க முழுக்க ரசிகர்களை கொண்டாட்டம் போட்ட வைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ் நாட்டு கலைஞர்கள் மட்டுமல்லாது உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையி ஹேவொக் பிரதர்ஸ் நவீன் – மதன் ஆகியோரும் இதில் இசை விருந்து படைக்கவுள்ளனர்

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக கூறிய டத்தின் தீபா, இனி தொடர்ந்தாற்போல் பல நிகழ்ச்சிகளை படைக்க அரேனா குளோபல் இண்டர்நேஷனல் திட்டம் வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.

‘மாஸ் ஆப் பேட்ட ராப்’ இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் அரோனா குளோபல் இண்டர்நேஷனலின் அகப்பக்கம், முகநூல் பக்கத்தை நாடலாம்.

ADVERTISEMENT

Wednesday 30 October 2019

எல்டிடிஇ: பாலமுருகன், அர்விந்த் தடுப்பு காவல் நீடிப்பு

ரா.தங்கமணி

கோலகங்சார்-
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த  இரு ஆடவர்கள் இன்று காலை கோலகங்சார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்,
விடுதலைப்புலிகள் இயக்கம் சார்ந்த உபகரணப் பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக டாக்சி ஓட்டுனர் பாலமுருகனும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பொறியாளர் அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தன் பேரில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப இவ்விருவர் மீதான விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்
நீதிபதி நோராய்னி.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    

Sunday 27 October 2019

தீபாவளி திருநாளை ஒன்றுகூடி கொண்டாடுவோம்- கணபதிராவ்

ஷா ஆலம்-
தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் தீபாவளி திருநாள் இந்துக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மை பயப்பதாக அமைந்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் ஒற்றுமையை கடைபிடித்து அனைத்து மக்களுடன் சகிப்புத்தன்மையுடனும் சகோதரத்துவத்துடனும் பழகி வருகின்றனர்.

முந்தைய காலங்களில் தீபாவளி பெருநாட்களின்போது அருகிலுள்ள பிற இன மக்களுடனும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழ்ந்தோம். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இந்தியர்கள் இந்த பெருநாளில் அனைத்து மக்களுடனும் அன்பை பரிமாறிக் கொள்வோம்.

அதோடு, ஆடம்பரச் செலவுகள் ஏதுமின்றி ‘விரலுக்கேற்ற வீக்கம் போல’ சிக்கனமான முறையில் தீபாவளி பெருநாளை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடி மகிழ்வோம்.

அனைவரின் வீட்டிலும் பிரகாசிக்கும் தீப ஒளி போல் அனைவரின் மனதிலும்
மகிழ்ச்சியும் குதூகலமும் என்றும் நிலைபெற்றிருக்க வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
ADVERTISEMENT

பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் காலத்தை பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் தீர்மானிக்கும்

கோலாலம்பூர்-
தாம் பிரதமர் பதவியில் நீடித்திருப்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தீர்மானிக்கும் என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் தாம் பிரதமர் பதவியை ஏற்பது குறித்து இவர்கள் தான் முடிவெடுத்தனர். தாம் இப்பதவியில் எவ்வளவு நாட்கள் நிலைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இவர்களுக்கே உள்ளது என்று அவர் சொன்னார்.

இன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தவணை முழுமைக்கும் தாம் பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு முழு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளது அவர்களது தனிபட்ட கருத்தே ஆகும் என்றார் அவர்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமர் பதவியில் துன் மகாதீர் நீடித்திருப்பதற்கு முழு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்தனர்.

Advetisement



Thursday 24 October 2019

தாமான் ஶ்ரீ மூடா இந்திய வர்த்தக சங்கத்தின் 11-ஆம் ஆண்டு தீபாவளிச் சந்தை

ஷா ஆலம்-
தாமான் ஶ்ரீ மூடா இந்தியர்கள் வர்த்தக சங்கத்தின் 11 ஆம் ஆண்டு தீபாவளி சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
தீபாவளி சந்தையானது 12 அக்டோபர் முதல் 25 அக்டோபர் வரை நடைபெற உள்ளதுடன் இந்தியர்களுக்கு தேவையான பல பொருட்கள் அங்கே விற்கப்படும் என்று அச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

அதிகமான இந்தியர்கள் ஶ்ரீ மூடா, அதன் சுற்று வட்டாரங்களில் வசிக்கின்றனர்,அவர்கள் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கிள்ளான் லிட்டல் இந்தியாவிற்கு செல்லும் நிலை இருப்பதால் அவர்களின் சுமைகளை குறைக்க இங்கே ஒவ்வரு வருடமும் தீபாவளி சந்தை போடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால் இப்பகுதியில் உள்ள இந்தியர்கள் பொருளாதார உயரும் என்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை சங்கமே செய்து தந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியை வர்த்தகம் சார்ந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஷியா இஸ்மாயில்  குத்து விளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் என்பதுடன் சங்கத்தினர் சிறப்பாக செயலாற்றுகின்றனர் இவர்களின் முயற்சிக்கு நான் வற்றாத ஆதரவை தருகின்றேன். மேலும் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரவும் தயாராக இருப்பதுடன்,கூடாரம்,பெர்மிட், ஊராட்சி மன்றத்தின் செலவினங்களை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் கடைக்கார்கள் எந்த ஒரு பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும்அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்  தமதுரையில் முழுக்க முழுக்க அனைத்து கடைகளும்  பி-40 நிலையை கொண்டவர்களுக்கும்   தனித்து வாழும் தாய்மார்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது என்றும் இத்தீபாவளி சந்தை பதினோராம் ஆண்டு நடைபெறுவதாகவும் முழுக்க முழுக்க இந்தியர்களுக்கான ஒரு சந்தையின் வாய்ப்பு திட்டமாகவும் அமைகிறது என்று அவர் கூறினார்.

 இவ்வாய்ப்பினை மேலும் ஓர் ஊக்குவிப்பாகவும் தொழில் வாய்ப்புகளுக்கு ஒரு தளமாகவும் இருப்பதாக அவர் கூறினார். சித்தம் திட்டத்தின் மூலம் அனைத்து வணிகர்களுக்கும் உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளதாக கூறினார். மேலும் வணிகர்கள் தாமாகவே முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

‘ராட்சசன்’ பாணியில் சஸ்பென்ஸ் திரில்லர் ‘யாழி’; ஆனால் கொலை களம் அல்ல!

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் மலரவுள்ளது ‘யாழி’ தொடர். இயக்குனர் ரவிவர்மா விக்ரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில் கவிதா தியாகராஜன்வினோஷான்நிவாதரன் உட்பட பல முன்னணி கலைஞர்களும் நடித்துள்ளனர். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் இத்தொடரில் கதாநாயகியின் தம்பி காணாமல் போய் மீண்டும் குடும்பத்தினரிடம் திரும்பி சேர்ந்து தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னையை மாற்றி கொள்கிறாரா இல்லையா என்பது கதையாகும்.
கடந்தாண்டு ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பான ‘ராட்சசன்’ திரைப்டம் பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றதை இவ்வாண்டு ஆஸ்ட்ரோவின் முயற்சியில் திரில்லர் பாணியில் ‘யாழி’ தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை தெரிவித்தார்.

சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பம், சென்டிமெண்ட், சஸ்பென்ஸ் என ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘யாழி’ தொடர் இன்று 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை இரவு 9.00 மணிக்கு வானவில்லில் (அலைவரிசை 201) ஒளியேறவுள்ளது.

யாழி’ தொடரில் நடித்துள்ள கலைஞர்களின் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
கவிதா தியாகராஜன்
யாழி’ தொடரில் ஆர்.வி.செளமியா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். 10 வருடங்களாக காணாமல் போன தம்பியை தேடும் கனமான பாத்திரத்தில் நடித்துள்ளேண். அம்மா, தம்பி என குடும்ப உறவுகளை சூழந்த பிரச்சினையில் காணாமல் போன தம்பியாக வருபவர் உண்மையில் என் தம்பிதானா? என சஸ்பென்சாக கதை நகர்கிறது. இதற்கு முன்பு பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இந்த தொடரில் ஏற்றுள்ள கதாபாத்திரம் நிச்சயம் தனது கேரியரில் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மாறுபட்ட கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களை கவரச் செய்யும்.

வினோஷன்
யாழி’ தொடரில் காணாமல் போன தம்பி சஞ்சய்-ஆக நான் நடித்துள்ளேன். இந்த தொடர் சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்தது என்றால் குற்ற்ச்செயல், வன்முறை நிறைந்தது அல்ல. குடும்ப உறவுகளை சித்தரித்து அந்த உறவுகளுக்கு நிகழும் பாசப் போராட்டமே சஸ்பென்சாக அமைந்துள்ளது. இன்றைய ரசிகர்கள் ஒரு திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கிறார்களோ அவை அனைத்தும் இந்த தொடரில் உள்ளது.

கே.நிவாதரன்
யாழி’ தொடர் தீபாவளி திருநாளாக மலேசிய ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அக்கா, தம்பி ஆகிய இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டத்தில் தனது கதாபாத்திரம் வலிமை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுபாஷினி அசோகன், சுதாகர், கலைவாணி, குணசேகரன் உட்பட பல கலைஞர்கள் நடித்துள்ள ‘யாழி’ தொடரை மலேசிய ரசிகர்கள் கண்டு களிக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர்.

சிறையில் கணவர்; தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது- சாமிநாதனின் மனைவி வேதனை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என குற்றஞ்சாட்டி தமது கணவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் கரைகிறது மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் துணைவியார் திருமதி வீ.உமாதேவி கூறினார்.
இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக மலாக்கா மாநிலத்தில் ஏற்பாடு செய்ய தமது கணவர் திட்டமிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் அவரை தடுத்து வைத்துள்ளனர்.

தீபாவளி ஏற்பாட்டை உடனிருப்பவர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அம்மாநிலத்திற்கே தலைவராக திகழ்ந்தவர் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் அதிருப்தி நிலையிலே உள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என குற்றச்சாட்டப்பட்டுள்ள தமது கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் மோசமான நிலையில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்த அவரின் உடல்நலம் குறித்து தாம் கவலை கொள்வதாக கூறிய உமாதேவி, தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்; தவறு புரிந்திருந்தால் உரிய தண்டனை கொடுங்கள். அதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால், ஆதாரம் இருப்பதாக சொல்லி தங்களது தற்காப்பு வாதத்தை கூட புரிய முடியாமல் அவரையும், பிறரையும் அடைத்து சிறையில் வைத்திருப்பது கொடுமையிலும் கொடுமையானது என்று புக்கிட் அமான் முன்புறம் பதாகை ஏந்திய திருமதி உமாதேவி கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தும் ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. இந்த ஒன்றுகூடலில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ,பொது இயக்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானோர் வந்திருந்தனர்.

எல்டிடிஇ விவகாரம்; ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துக- கணபதிராவ் ஆவேசம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மாண்புமிகுகள் உட்பட அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி முறையான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணை ஏதுமின்றி 28 நாட்கள் சிறையில் தடுத்து வைக்க சட்டம் வகை செய்கிறது,

ஆனால் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்படுவது அவர்கள் தரப்பு நியாயத்தை வெளிகொணர்வதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதியில் ‘சொஸ்மா’ சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் இன்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த மாண்புமிகுகளே இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

இதற்கு முன் ஹிண்ட்ராஃப் போராட்டத்தின்போது 495 நாட்கள் ‘இசா’ சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அதன்  வலியும் வேதனையும் முழுமையாக அறிந்தவன் நான்.

தங்களது தரப்பு நியாயத்தை கூட தெரிவிக்க முடியாமல் சொஸ்மாவின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்துக. ஆதாரம் இருந்தால் தண்டனை வழங்குக. அதனை யாரும் கேள்வி எழுப்பப் போவதில்லை. அதை விடுத்து மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கும் வகையில் சட்டம் பாய்ச்சப்படுவது கொடுமையானது என்று நேற்று புக்கிட் அமான் நுழைவாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தும் ஒன்றுகூடலில் கலந்து கொண்டபோது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட 12 பேர் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Wednesday 23 October 2019

12 பேரின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுகூடல்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் 'சொஸ்மா' சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுகூடல் நடத்தப்பட்டது

இன்றிரவு புக்கிட் அமான் தலைமையக வாசலில்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, பொதுமக்கள் திரண்டனர்.

சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தவறு புரிந்திருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துக; ஆதாரம் இருந்தால் தண்டனை வழங்குக. அதை விடுத்து மனித உரிமை மீறலாக கருதப்படும் சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று  ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கொட்டும் மழையையும் கருதாமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு 12 பேரையும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஆஸ்ட்ரோவில் களைகட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்


கோலாலம்பூர்- 
இவ்வாண்டு தீபாவளிக்கு அனைத்து மலேசியர்களும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ என்ஜோய் மற்றும் ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாகக் கண்டு மகிழலாம்.
அவ்வகையில், ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (அலைவரிசை 231)-இல் புத்தம் புதிய உள்ளூர் நிகழ்ச்சிகள் ஒளியேறவுள்ளது. 

பாரம்பரிய மற்றும் இந்தியர்களின் உணவுகளைத் தயாரிக்கும் வழிமுறைகளைக் காட்டும் சமையல் நிகழ்ச்சி, தீபாவளி அனல் பறக்குது
கவிதா தியாகராஜன், வினோஷன் மற்றும் நிவதாரன் நடிப்பில் மர்ம நிறைந்த தொடர் நாடகம், யாழி; பாலகணபதி, சங்கீதா கிருஷ்ணசாமி, சசி குமார் மற்றும் அருண் நடிப்பில் நகைச்சுவை நாடகம், அடாவடி தீபாவளி; ஸ்ரீ சோனிக் மற்றும் காயத்ரி தொகுத்து வழங்கு  Savalukku Ready Ah கேம் ஷோ; மலேசியா முழுவதும் உள்ள சிறந்த உணவகங்களில் எடுத்து காட்டும் பக்கா லோக்கல்; மலேசியர்களை நேர்காணல் செய்து யார் சிறந்த நடிகர் என ஆராயும்  யார் உங்க கோலிவுட் கிங் போன்ற நிகழ்ச்சிகள் அடங்கும்.

அதோடு, உள்ளூர் திரைப்படங்களான வெடிகுண்டு பசங்க, அழகிய தீ, திருடாதே பாப்பா திருடாதே மற்றும் சட்ட; Lock-up குழுவினர்களின் இசைப் படைப்புகள் கொண்ட Lock-up Live Concert; இளம் இயக்குனர் மதன் இயக்கத்தில் வெளிவந்த Love in 12 hours எனும் குறும்படம்; பாலகணபதி தொகுத்து வழங்கும் ரசிக்க ருசிக்க சீசன் 5-இல் மலேசியாவிலுள்ள சிறந்த வாழை இலை உணவுகள் கொண்ட உணவகங்கள் காட்டும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என ஆகிய உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம்.

அக்டோபர் 21-ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 20-ஆம் தேதி வரை என்ஜோய் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ தங்கத்திரை (அலைவரிசை 241) வாங்கும் போது ரிம 5 கழிவு அனுபவிக்கலாம். இதன் மூலம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சிந்துபாத், சிவகார்த்திகேயன், சத்யராஜ், தர்சன் ஆகியோர் நடித்துள்ள கனா, மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக் கலகலப்பாகக் காட்டும் திரைப்படம் சிக்சர், நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடிப்பில் கழுகு 2 மற்றும் இயக்குனர் ராஜு விஸ்வாந்த் இயக்கத்தில் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகிபாபு நடித்த லீசா ஆகிய திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.

ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, கூறுகையில், “தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் கலைஞர்களை உருவாக்குவதில் தொடர்ந்து ஆஸ்ட்ரோ கடமைப்பட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு தீபாவளிக்கு ஆறு புத்தம் புதிய நிகழ்ச்சிகளான தீபாவளி அனல் பறக்குது, யாழி, அடாவடி தீபாவளி, Savalukku Ready Ah, பக்கா லோக்கல் மற்றும் யார் உங்கா கோலிவுட் கிங் எனும் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளோம். 

அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வெளியூர் நிகழ்ச்சிகளோடு டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை ராகா, ஆஸ்ட்ரோ உலகம் மற்றும் கோ ஷோப் வாயிலாக எதிர்பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வழங்குவோம்”, என்றார்.  

அடாவடி தீபாவளி நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பால கணபதி வில்லியம், கூறுகையில், “பெரும்பாலும் நம்முடைய தீபாவளி கொண்டாட்டங்களில் ஆஸ்ட்ரோ ஒரு பகுதியாகும். நகைச்சுவை நிறைந்த அடாவடி தீபாவளி எனும் தலைப்பில் தொலைக்காட்சி நாடகத்தின் மலேசியர்களுக்கு வழங்குவதற்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு, அடாவடி தீபாவளி எனும் அதே பெயரில் வெளிவந்த ஆஸ்ட்ரோவின் இவ்வாண்டும் தீபாவளியின் தீம் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகவுள்ளது. இந்நாடகத்தில் பிரபல நம் உள்ளூர் கலைஞர்களான சங்கீதா, சத்தியா, சசி குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியத்தில் பெருமைக் கொள்கிறேன். அதோடு, வளர்ந்து வரும் கலைஞர்களான ஹேமா, சுபாஷினி மற்றும் அருண் இந்நாடகத்தில் நடித்துள்ளார்கள். மலேசியர்கள் இந்நாடகத்தை விரும்பி பார்ப்பார்கள் என்றும் மலேசிய கலையுலகம் வளர அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்”.   

Savalukku Ready Ah மற்றும் பக்கா லோக்கல் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர், ஸ்ரீ சோனிக், கூறுகையில், “ஆஸ்ட்ரோவில் தொடர்ந்து இரண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும். அதே போல் பிற உள்ளூர் கலைஞர்களுக்கும் இவ்வகையான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்”, என்றார்.

சமூக வளத்தளங்களில் 2 மில்லியன் பார்வையார்களைக் கொண்ட ஆஸ்ட்ரோ உலகம், முதல் முறையாக “Deepavali Then and Now” எனும் தலைப்பில் அன்று மற்றும் இன்று எவ்வாறு தீபாவளி கொண்டாடப்பட்ட தகவலை உள்ளடக்கிய நான்கு அத்தியாயங்கள் கொண்ட தீபாவளி குறுந்தொடர் காணொளிகள் தயாரித்துள்ளது. அதோடு, 2018-ஆம் ஆண்டின் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் போட்டியாளர் லாச்மேன் இசையில் அன்பின் ஒளி எனும் தீபாவளி பாடலில் நம்முடைய உள்ளூர் கலைஞர்களும் கலர்ஸ் அறிவிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி, தீபாவளி குறித்த 20 காட்டுரைகள் மற்றும் 40 சமையல் காணொளிகள் astroulagam.com.my/AnbinOli அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம்.  

மேலும், இவ்வாண்டு தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை கோ ஷோப் வாயிலாக குறிப்பிட்ட பொருட்களுக்கு குறைந்தபட்சம் ரிம 120-க்குப் செலவு செய்தால் 10% கழிவு அனுபவிக்கலாம். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கோ ஷோ நிகழ்ச்சியின் நேரலையை ஒவ்வொரு நாளும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் மதியம் 12 அல்லது மாலை 5.30 மணிக்கு மற்றும் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசை 231-இல் வீட்டிற்குத் தேவையான அடிப்படை பொருட்களின் தகவல்களைப் பெற்று கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு, goshop.com.my அகப்பக்கம் அல்லது கோ ஷோப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

இதைத் தவிர்த்து, வறுமையில் கஷ்டப்படும் ஜந்து குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் ராகா கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் சமையல் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மாவு எனத் தங்களுடைய ரசிகர்களிடமிருந்து பெற்று அக்குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதுமட்டுமின்றி,  ஜெய் இசைமைப்பில் “வந்தாச்சு நமக்கு தீபாவளி” எனும் தலைப்பில் இவ்வாண்டுக்கான தீபாவளி பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள். SYOK செயலி வாயிலாக மலேசியர்கள் ராகாவை எங்கு இருந்தாலும் எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்டு மகிழலாம். 

ஆஸ்ட்ரோ தீபாவளி நிகழ்ச்சிகள் குறித்த மேல் விவரங்களுக்கு, www.astroulagam.com அகப்பக்கத்தை வலம் வருங்கள்.

Tuesday 22 October 2019

ஆயுதப் போராட்டம் தமிழீழத்திற்கு விடியலாகாது- இராமசாமி

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
ஆயுதப் போராட்டம் தமிழீழத்திற்கு ஒருபோதும் விடியலாக அமைந்திடாது என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விவரித்தார்.

ஆயுதத்தின்  வழி தங்களின் இன உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளின் ஆதரோடு இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை அழித்தொழித்ததாக கூறியது.

அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் செயல் நடவடிக்கைகள் 10 ஆண்டுகளாக செயலற்று கிடக்கிறது.

தமிழீழத்தை மலரச் செய்வதற்காக மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் உருவாகும் என்பது தற்போது சாத்தியதில்லாத ஒன்று.

அதோடு, ஆயுதப் போராட்டத்தின் தமிழீழத்திற்கான விடியலாக அமைந்து விடாது. ஆயுதப் போராட்டத்தை காட்டிலும் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் தமிழீழம் மலர்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று அவர் மேலும் விவரித்தார்.

எல்டிடிஇ: மஇகாவின் சட்ட உதவியை தவறாகக் கொள்ள வேண்டாம் - பாஸ்

கோலாலம்பூர்-
விடுதலைப் புலிகள் தொடர்பு கொண்டிருந்தவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் மஇகாவின் நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அவர்கள் குற்றம் புரிந்தார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்க விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் மஇகா உதவ முன்வந்திருப்பது வரவேற்கக்கூடியதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டின் கீழ் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு மஇகா சட்ட உதவியை வழங்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்தார்.

என் பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது - பேராசிரியர் இராமசாமி

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
இந்நாட்டின் குடிமகனான எனக்கு பேச்சுரிமை உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. ஆயினும் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
அண்மையில் ரவாங்கில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கை பிரஜை உட்பட இரு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து 'புதிய அரசாங்கம்; பழைமைவாத போலீஸ்' எனும் தலைப்பில் கருத்து பதிவிட்டிருந்தேன்.  இதன் தொடர்பில் விளக்கம் கேட்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமது கருத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

இந்நாட்டு குடிமகனான எனக்கு பேச்சுரிமை சுதந்திரம் உள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. 'நான் தீவிரவாதியா? மிதவாதியா?' என்ற தலைப்பில் கூட கருத்து பதிவிட்டிருந்தேன்.

நாட்டின் தற்போதைய சூழலில் பேச்சுரிமை பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது. அநீதிக்கு எதிரான எனது குரல்வளையை யாரும் நெரிக்க முடியாது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பேராசிரியர் இராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

இன்று காலை இராமசாமிக்கு ஆதரவாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, செராஸ் நகராட்சி மன்ற உறுப்பினர் சி.நனபாலன் உட்பட திரளானவர்கள் புக்கிட் அமான் முன்புறம் திரண்டனர்.

Monday 21 October 2019

இந்திய இளைஞர்களுக்கான 'யெஸ்' திட்டம்

ஷா ஆலம்-
இந்திய இளைஞர்களை சொந்த தொழில் துறையில் முன்னேற்றம் காணும் செய்யும் வகையில் மித்ராவும் சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்கள் ஏற்பாட்டில் 'யெஸ்' (YES) திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி40 பிரிவைச் சேர்ந்த, வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களை பல்வேறு துறைகளில் திறன்மிக்கவர்களாக உருவாக்க இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Entrepreneurship in Mobile Device and Security Technician, Entrepreneurship in Electrical and Domestic Plumbing, Entrepreneurship in Electrical and Domestic Air Conditioning Installation and services Technician ஆகிய துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சிக்கான நேர்முகத் தேர்வு  நாளை 21ஆம் தேதி காலை 8.15 மணிக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில் நடைபெறவுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

Saturday 19 October 2019

தெக்குன் கடனுதவித் திட்டத்தில் எஞ்சியிருக்கும் வெ.12 மில்லியன் – கணபதிராவ் ஆதங்கம்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்தில் உள்ள தொழில்முனைவர்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தெக்குன் கடனுதவி திட்டத்தில் 12 மில்லியன் வெள்ளி எஞ்சியிருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 மில்லியன் வெள்ளியில் 8 மில்லியன் வெள்ளி மட்டுமே தெக்குன் கடனுதவித் திட்டத்திலிருந்து இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களிடமிருந்து முறையான விண்ணப்பங்கள் வராரதே இந்த நிதி அதிகமாக செலவிடப்படாதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டும் முறையாக செலவிடப்படாதது ஏமாற்றமே ஆகும். 
மித்ராவுக்கு ஒதுக்கிடு செய்யப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது என்ற தகவல்  இன்னும் தம்மிடம் கிடைக்கப்படவில்லை. இந்தியர்களுக்கு செலவிடப்படாத இந்நிதி  மீண்டும் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.

இவ்வாண்டு பட்ஜெட் அறிவிப்பிலும் இந்திய சமுதாயத்திற்கு பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தெக்குன் கடனுதவி, மித்ரா ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடுகள் இந்திய சமுதாயத்தை முழுமையாக சென்றடைவதற்கு ஏதுவாக பல்வேறு பொருளாதார நிபுணர்களை ஒன்றிணைத்து  2020 பட்ஜெட் விளக்கமளிப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாளை 19ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்திய சமுதாய பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 2020 பட்ஜெட் தொடர்பான அனுகூலங்களையும் சந்தேகத்திற்கான தெளிவையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

Friday 18 October 2019

21 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி- கணபதிராவ் வழங்கினார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில் 21 மாணவர்களுக்கு 91,333 வெள்ளி மதிப்புடைய காசோலைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வழங்கினார்.
கடந்தாண்டில் 100 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிதி இவ்வாண்டு 152 மாணவர்களாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் நான் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் முன்னெடுத்து வரும் நடவடிக்கையாகும்.

இந்திய மாணவர்களுக்கான கல்வி நலத் திட்டங்களுக்கு சிலாங்கூர்  மாநில அரசாங்கம் தனியாக நிதி வழங்குவதில்லை. மாறாக, நான் ஆட்சிக்குழு உறுப்பினராக  பொறுப்பேற்றது முதல் நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படும் வீண் செலவுகளை குறைத்து அதன் மூலம் சேமிக்கப்படும் நிதி இம்மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாண்டில் மட்டும் இந்திய மாணவர்களின் கல்வி உதவி நிதியாக 10 லட்சம் வெள்ளிக்கு மேல் வழங்கியிருப்பதாக கூறிய அவர், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணமாக 3,500 பேருக்கு தலா வெ.300 வழங்கப்படுவதாக சொன்னார்.
இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு மட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்கும் மாநில அரசாங்கம் மானியங்களை வழங்கி வருகிறது என கணபதிராவ் மேலும் சொன்னார்.

Thursday 17 October 2019

பாட்டாளி மக்களின் போராளி டத்தோ சம்பந்தன் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
பாட்டாளி மக்களின் வாழ்வாதார உயர்வுக்காக பாடுபட்டவர் டத்தோ எம்.சம்பந்தன். இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு மேலவையில் குரல் கொடுத்த தலைவர் அவர் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல போராட்டங்களுக்கு  மத்தியில் தன்னை தலைவரான உருவாக்கிக் கொண்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒலித்த சம்பந்தன் தன்னை ஒரு சிறந்த தலைவராகவே உருவாக்கிக் கொண்டார்.

ஐபிஎப் கட்சியில் இணைந்து அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனின் உற்ற  தோழனாகவும் சமுதாயப் போராளியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஐபிஎப் கட்சியை ஒரு வலுவான கட்சியாக உருவாக்க டத்தோ சம்பந்தன் அயராது பாடுபட்டார். தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக ஐபிஎப் உருவாவதற்கு பல நடவடிக்கைகளை அவர் தீவிரமாக மேற்கொண்டிருந்தார்.

அன்னாரின் திடீர் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.