புனிதா சுகுமாறன்
ஈப்போ-
மின்சார கோபுரத்தின் கீழ் மாட்டுப் பண்ணையை வைத்துள்ள அதன் உரிமையாளரை அங்கிருந்து வெளியேறுமாறு டிஎன்பி அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கை மைபிபிபி புந்தோங் தொகுதித் தலைவர் செபஸ்தியன் தலையீட்டால் சுமூகமாக தீர்வு காணப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தாமான் மெர்டேக்கா பகுதியில் மாட்டுப் பண்ணை வைத்து சொந்த தொழிலை மேற்கொண்டு வந்த சந்திரன், அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என ஈப்போ தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி) நோட்டீஸ் அனுப்பியது.
பல்வேறு அரசாங்க இலாகாக்களின் அனுமதி பெற்று மாட்டுப் பண்ணையை நடத்தி வரும் தன்னை அங்கிருந்து வெளியேறுமாறு டிஎன்பி நிர்வாகம் பணித்துள்ளது அதிர்ச்சியளித்ததாகவும் இவ்விவகாரம் குறித்து செபஸ்தியன் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சந்திரன் தெரிவித்தார்.
சந்திரனின் பிரச்சினை குறித்து டிஎன்பி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக செபஸ்தியன் கூறினார்.
இந்த நிலத்திலிருந்து வெளியேறுமாறு மாவட்ட நில அலுவலகம் உத்தரவு பிறப்பித்த வேளையில் டிஎன்பி ஏன் நோட்டீஸ் அனுப்பியது, தற்போதைய நிலத்தில் மின்சார தூண்களை பொருத்துவதற்கு சந்திரன் விண்ணப்பித்த வேளையில் அதனை அங்கீகரித்து கட்டணம் பெற்று டிஎன்பி ஏன் மின்சார தூண்களை பொருத்தியது, மின் கோபுரத்தின் கீழ் பலர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இவரை மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஏன்? என்று செபஸ்தியன் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள டிஎன்பி அதிகாரிகள், அந்த நிலத்தை மாவட்ட நில அலுவலகம் ஈப்போ டிஎன்பி நிர்வாகத்திற்கு ஒதுக்கியுள்ளது எனவும், மின்சார தூண்களை பொருத்தியது தங்களுக்கு தெரியாது; அது குறித்து உயர் அதிகாரிகள் பதிலளிப்பர் எனவும், இங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோர் டிஎன்பி நிர்வாகத்திடமிருந்து தற்காலிக ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் எனவும் பதிலளித்தனர்.
இன்று டிஎன்பி அதிகாரிகள், ஈப்போ மாநகர் மன்றம், போலீஸ் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்பில், டிஎன்பி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மாட்டுப் பண்ணையை நடத்துவதற்கு சந்திரனுக்கு தடை இல்லை எனவும் சில விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
டிஎன்பி நிர்வாகத்தினர் முன்வைக்கும் நிபந்தனைகளை தாம் ஏற்பதாக சந்திரன் கூறியதை தொடர்ந்து இப்பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது என செபஸ்தியன் கூறினார்.
No comments:
Post a Comment