Sunday, 4 February 2018
'முகமட் ரிடுவானை கண்டறிய முடியாவிட்டால் பதவி விலகுங்கள்' - ஐஜிபிக்கு லிம் கிட் சியாங் கோரிக்கை
ஈப்போ-
திருமதி இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா, அவரது மகள் பிரசன்னா டிக்ஷா ஆகியோர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாவிட்டால் போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் பதவி விலக வேண்டும் என ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தினார்.
"அனைத்து ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆயினும் முகமட் ரிடுவானை கண்டுபிடிக்காமல் பிரசன்னா டிக்ஷாவை அவரது தாயாரிடம் ஒப்படைக்காமல் போலீசார் நடந்து கொள்வது ஏன்? என்பதுதான் எனக்கு புரியவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக தெளிவாக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அவரால் (முகமட் ஃபுஸி ) ஏற்க முடியாது என்றால் அவரால் ஐஜிபியாக இருக்க முடியாது என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
'தீவிரவாதிகளை வேட்டையாடுவதையும் அவர்களுக்கு எதிராக போராடுவதையும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாதாரண குடிமகனான ஒருவரை கண்டறிய முடியவில்லை என்பது எப்படி சாத்தியமாகும்? என 76 வயதான லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரம் தொடர்பில் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.
ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட திருமதி இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளின் மதமாற்றம் செல்லுபடியாகாது எனவும் அவர்களின் மதமாற்றம் ரத்து செய்யப்படுவதாகவும் கடந்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment