Thursday 8 February 2018

"ஊசி குத்தும் வலியைகூட தாங்காதவளுக்கு ஏன் இந்த கொடூர மரணம்?"- தாரணியின் தாயார் கண்ணீர் வேதனை



கோலாலம்பூர்-
"ஒரு ஊசி வலியைகூட தாங்கிக் கொள்ள முடியாத அவள், கொலை செய்யப்பட்டபோது என்ன வலியை அனுபவித்திருப்பாள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை" என்று காரில் படுகொலை செய்யப்பட்ட டி.தாரணியின் தாயார் எம்.லெட்சுமி வேதனையுடன் கூறினார்.

'எங்களை விட்டுச் செல்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம்' என தாரணியின் இறுதிச் சடங்கின்போது சவப்பெட்டியை விட்டு விலகாத அவர் கண்ணீர் வேதனையுடன் தெரிவித்தார்.

குடும்பத்தின் மூன்று பிள்ளைகளிம் இளையவரான தாரணி, அனைவருக்கும் மிக செல்லமானவளாக இருந்தாள் என கூறிய லெட்சுமி, 'இப்படி ஒரு காரியத்தை எப்படி செய்ய முடிந்தது, என் மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை இழைத்தவன் மிருகத்தை விட மோசமானவன்' என பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது அவர் கூறினார்.

சமீபகாலமாக அவர் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளதாக காணப்பட்டார். ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகளை உறவினரிடம் கூறியுள்ளாரே தவிர அதை விரிவாக சொல்லவில்லை.

அந்த உறவினர் நேற்று எங்களிடம் கூறியபோதுதான் அதனை நாங்கள் உணர்ந்தோம். வேலையிடத்தில் உள்ள பளுவை பற்றி தாரணி கூறியதால் அது குறித்து மேலும் கேள்வி எழுப்பவில்லை என உறவினர் சொன்னதாக லெட்சுமி கூறினார்.

திருமணத்தை பற்றி பேசும்போதெல்லாம் அதை தவிர்த்து வந்த தாரணி, எங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார்.

"எங்களுக்கு வயதாகி விட்டால் எங்களை நீ பார்த்துக் கொள்வாய் என சொல்லிக் கொண்டிருப்போம், ஆனால் இப்போது உன்னை முதலில் வழியனுப்பி வைக்கிறோமே" என இறுதிச் சடங்கின்போது கதறியபடியே அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் திருமதி லெட்சுமி,  தாரணியின் மூத்த சகோதரிகளான டி.சிவகாமி, டி.குணவதி ஆகியோர் இறுதி காரியங்களைச் செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை  திருமண கோரிக்கையை நிராகரித்ததால் 37 வயது மதிக்கத்தக்க ஆடவரால் படுகொலை செய்யப்பட்டார் தாரணி. தாரணியின் உடலை காரின் முன் இருக்கையில் கிடத்தியபடி டாமன்சாரா காவல் நிலையத்தில் சரணடைந்த அவ்வாடவனை போலீசார் கைது செய்து 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாரணியின் இறுதிச் சடங்கில் திரளானவர்கள் கலந்து கொண்டதோடு அவரது நல்லுடல் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்ப்பட்டது.

No comments:

Post a Comment