Wednesday 7 February 2018

மாணவி வசந்தபிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணை "எஸ்.ஓ.பி." நடைமுறையை பின்பற்றியுள்ளதா? - தங்கராணி கேள்வி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பள்ளியில் வகுக்கப்பட்டுள்ள செயல் நடைமுறை வழிகாட்டியை பின்பற்றியிருந்தாலே மாணவி வசந்தபிரியாவை இழக்கும் ஓர் அவலநிலை ஏற்பட்டிருக்காது என மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவி திருமதி தங்கராணி வலியுறுத்தினார்.

ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில்  மாணவி வசந்தபிரியாவை தனி அறையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதால் மன உளைச்சலுக்கு  ஆளான மாணவி வசந்தபிரியா தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தார்.

மாணவி வசந்தபிரியாவை விசாரணை மேற்கொண்ட விதமே தற்போது பெரும் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எஸ்.ஓ.பி எனப்படும் பள்ளி செயல் நடைமுறை வழிகாட்டியை சம்பந்தப்பட்ட ஆசிரியை பின்பற்றினாரா? என்ற கேள்வி எழுகிறது.

இதனை முறையாக பின்பற்றியிருந்தால் மாணவி வசந்தபிரியா தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. மாணவி வசந்தபிரியா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை எஸ்.ஓ.பி. வழிகாட்டியை முறையாக பின்பற்றியுள்ளாரா? என்பதை கல்வி அமைச்சு, கல்வி இலாகா ஆகியவை முழுமையாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனிடையே, சிறுமி வசந்தபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமா தங்கராணி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment