Thursday 28 March 2019

ராகாவின் நடன சூறாவளி : பிரித்தா, லக்ஷிதா வெற்றி



மலேசியாவிலுள்ள குழந்தைகளின் நடனத் திறமையைக் கண்டறிய அண்மையில் சுபாங் மைடின் பேராங்கடியில் நடைபெற்ற ராகாவின் நடன சூறாவளி மாபெறும் இறுதிச் சுற்றில் பிரித்தா பரமானந்தம் மற்றும் லக்ஷிதா சத்திய கண்ணன் வெற்றி வாகை சூடினார்கள்.

6 முதல் 8 வயது மற்றும் 9 முதல் 11 வயது என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தேர்தெடுக்கப்பட்ட 20 போட்டியாளர்களும் ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 15 பாடல்களிலிருந்து ஒரு பாடலை தேர்தெடுத்து அதனைச் சுமார் 2 நிமிடங்களுக்கு நடனமாடினார்கள். பிறகு, அடுத்தச் சுற்றுக்கு தயாராக போட்டியாளர்களுக்கு என்ன பாடல் என்று மேடையில் வழங்கப்பட்டது.


இரண்டாம் சுற்றின் சவால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடலில், இப்போட்டியின் ஏற்பாடு குழு குறிப்பிட்ட பாடல் பகுதியை ஒலியேற்றினர்கள். அப்பாடலுக்கு போட்டியாளர்கள் 2 நிமிடங்களுக்கு நடனமாட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இரண்டுச் சுற்றிலும் மிகச் சிறப்பாக நடனமாடினார்கள்.

ராகாவின் நடன சூறாவளி இறுதிச் சுற்றின் அறிவிப்பாளர் ஆனந்தா, நடிகர், பாடகர், தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட டேனிஸ் குமார் மற்றும் ஒடிசி நடனக் கலைஞர் சிவகாமி நடுவர்களாக பணியாற்றினார்கள்.   

ஒவ்வொரு பிரிவின் முதல் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே வெ.2,000 ரொக்க பரிசு, வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இப்போட்டியில் களமிறங்கிய அனைத்து போட்டியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Wednesday 27 March 2019

ஈப்போ நிருபர் சந்திரசேகர் காலமானார்

ஈப்போ-
தமிழ்ப் பத்திரிகை துறையில் நன்கு அறிமுகமான நிருபர் ப.சந்திரசேகர் இன்று தம்முடைய இல்லத்தில் காலமானார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பத்திரிகை துறையில் பணியாற்றி வந்த சந்திரசேகர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் பணியாற்றியிருப்பதோடு மக்கள், சமூக, அரசியல் தலைவர்களுடன் அணுக்கமான உறவை கொண்டிருந்தார்.

தமிழ் ஊடகத்துறையில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள சந்திரசேகரின் அகால மரணம் ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thursday 21 March 2019

மாஸ் விற்பனையா? பரிசீலிக்கப்படும் – துன் மகாதீர்

கோலாலம்பூர்-

நாட்டின் தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனத்தை வாங்குவதற்கு பல உள்ளூர், வெளியூர் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது கூறினார்.

மாஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு பல தரப்பினர் முன்வந்துள்ள நிலையில் அதனை நாம் ஒதுக்கிட முடியாது (விற்பனைக்கு). எத்தகைய தரப்பினராக இருந்தாலும் அதனை விற்கலாமா? வேண்டாமா? என்பது முதலில் ஆராயப்படும்.

மாஸ் இன்னமும் நட்டத்தில் தான் உள்ளது. அதற்கு சிறந்த வழி அதனை விற்பனை செய்வதே ஆகும் என்று அவர் சொன்னார்.


காதலியுடன் தகராறு; தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார் இளைஞர்

லுமூட்-

காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்திய இளைஞர் ஒருவர் தனக்கு தானே கொளுத்திக் கொண்ட சம்பவம் சித்தியவானில் அரங்கேறியுள்ளது.
21 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் தன்னை தானே தீவைத்துக் கொண்ட சம்பவத்தில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மஞ்சோங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹனிப் ஒத்மான் தெரிவித்தார்.
அவ்வாடவர் தீயிட்டு கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான வேளையில் அக்காணொளியில் உரையாடும் தரப்பினரின் உரையாடல்கள் ஆய்வுகுட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.


Saturday 16 March 2019

பேரா ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எல்லை கடந்த மனிதநேய நடவடிக்கை

எஸ்.லிங்கேஸ்வரன்

ஈப்போ, மார்ச் 15-
மனிதநேயத்தை நிலைநாட்டுவதற்கு எல்லைக்கோடு தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஈப்போ மாநகர் மன்றமும் பேரா மாநில ஊடகவியலாளர் சமூகநல, விளையாட்டு மன்றமும் இணைந்து லங்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சமூகநல நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பெருநிறுவனங்களின் சமூகக் கடப்பாடு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக லங்காவிக்கு பயணம் மேற்கொண்ட ஈப்போ மாநகர் மன்றத்தினருடன் பேரா மாநில ஊடகவியலாளர்களும் பங்கு பெற்றனர்.

இது குறித்து கருத்துரைத்த ஈப்போ மாநகர் மன்றத்தின் பொது உறவு அதிகாரி முகமட் ஷரிஸால் அஸ்மி, இருவழி உறவை மேம்படுத்திக் கொள்ளும் அதே வேளையில்  நோர் காசே ஆதரவற்ற சிறார்களுக்கு உதவிடும் நோக்கில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்பட்டன.

அதன் அடிப்படையில் ஆதரவற்ற சிறார்களுடன் பொழுதை கழித்தோடு அவர்களுக்கான உணவும் அம்மையத்திற்கு நன்கொடையும் வழங்கப்பட்டது.

சிஎஸ்ஆர் நடவடிக்கையின் வழி எல்லை கடந்த மனிதநேயத்தை ஊக்குவிப்பதோடு அந்த மனிதநேயத்தை ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று மன்றத்தின் தலைவர் ரோஸ்லி மன்சோர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய ஈப்போ மாநகர் மன்றத்தினர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் பேரா மாநிலத்தில் செயல்படும் பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நிருபர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 13 March 2019

எஸ்டிபிஎம் தேர்வில் 3.5% சிறப்பு தேர்ச்சி பெற்றார் சத்தியசீலன்

காஜாங்-

நேற்று வெளியான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளில்  காஜாங் , சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் சத்தியசீலன் சிவசுந்தரம் 3.5 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

காஜாங் தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற இவர், செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் தமது  கல்வியை தொடர்ந்தார்.
தொடர்ந்து தாம் உயர்கல்வி பயிலவிருப்பதாகவும் ஒரு பட்டதாரி ஆசியராக உருவெடுக்க வேண்டும் என்பதே தமது எதிர்கால ஆசை எனவும் சத்தியசீலன் கூறினார்.

தமது இந்த சாதனைக்கு துணையாக இருந்த பெற்றோர் சிவசுந்தரம் – பவாணி, ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற சத்தியசீலன் வாழ்வில் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று ஷா ஆலமைச் சேர்ந்த  தாத்தா சாமிநாதன் – பாட்டி கலைவாணி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்து சமயத்தை இழிவுப்படுத்திய ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா-
இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றிருந்த பேஸ்புக் பயனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“Zamri Bin Abd Razak” எனும் இந்த பேஸ்புக் அகப்பக்கத்தின் உரிமையாளர் இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றம் செய்ததால் இன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 23இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு   52 வயதான அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் சமயம் சார்ந்த உணர்வை தூண்டக்கூடிய கருத்துகளை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Wednesday 6 March 2019

அஸ்மினின் கூற்று தனிபட்ட கருத்தாகும்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

பூமிபுத்ராவினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்ற பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியின் கூற்று அவரது தனிபட்ட கருத்தாகும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் இனவாத கொள்கையை பின்பற்றாது. உதவிகள் தேவைபடும் அனைத்து மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அது அவரின் தனிபட்ட கருத்து. பூமிபுத்ராவினரின் தேவைகளை பக்காத்தான் ஹராப்பான் ஒதுக்கி வைக்காது. அதே வேளையில் இன ரீதியிலான கொள்கைகளை காட்டிலும் மக்களின் கொள்கைகளே முன்னிறுத்தப்படும். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இன ரிதியிலான அம்சங்களை நெருங்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.

செமினி இடைத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் அடைந்த தோல்வியை அடுத்து பூமிபுத்ராவினருக்கான வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்று அஸ்மின் அலி கருத்து தெரிவித்திருந்தார்.


மஇகாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் ஐபிஎப்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தேசிய முன்னணியின் கூட்டணியில் இருந்து மஇகா வெளியேறும் பட்சத்தில் அவ்விடத்தை ஐபிஎப் கட்சி பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தேமுவுக்கு ஆதரவாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசம் காட்டி ஆதரவளித்து வந்துள்ள ஐபிஎப் கட்சி, தேமுவின் பங்காளி கட்சியாக இடம்பெற பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளது.

ஆனால் அதற்கான கதவு திற்க்கப்படாத நிலையில் தோழமைக் கட்சியாக மட்டுமே நீடித்து வந்த நிலையில் மஇகா தேமு கூட்டணியிலிருந்து வெளியேறுவதன் மூலம் ஐபிஎப் கட்சி அக்கூட்டணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேமு கூட்டணியை விட்டு பல கட்சிகள் விலகி விட்ட நிலையில் சுதந்திர காலத்தின்போதே ஒரே கூட்டணியாக செயல்பட்ட மஇகா, மசீச ஆகியவை அம்னோவை விட்டு தற்போது பிரிந்திருக்கின்றன. 

மார்ச் 7இல் திரையீடு காண்கிறது 'குற்றம் செய்யேல்' திரைப்படம்

கோலாலம்பூர்-
ஆஸ்ட்ரோ வானவில், சினி சத்திரியா நிறுவனம் தயாரிப்பில் நம் உள்ளூர், தமிழ்நாடு கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் வரும் மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவிலுள்ள 50 திரையரங்களில் வெளியிடூ காணவுள்ளது. 

டாக்டர் செல்வமுத்து தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக இயக்குநர் வெங்கடேஷ், மலேசிய இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

 ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் குண்டர் கும்பல் பற்றிய ஒரு கதையாகும். கல்லூரி மாணவ இளைஞர்கள் சிலருக்கு அக்கல்லூரி நிர்வாகம் இரண்டு பிரிவுகளாக ஆய்வு வேலை ஒன்றை வழங்குகிறது. இதில் ஓர் இளைஞர் குழுவினர் குண்டர் கும்பல் குறித்து ஆய்வு நடத்த செல்கின்றனர். இந்நிலையில் மற்றொரு குழு  காவல்துறை குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த சூழலில் உண்மையான காவல்துறை குண்டர் கும்பலையும் அதன் நடவடிக்கைகளையும் எப்படி கையாண்டு தீர்வு காண்கின்றது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

இத்திரைப்படத்தில் தமிழக கலைஞர் மெட்டி ஒலி போஸ் வெங்கட், விஜித், கலக்க போவது யாரு தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா, ஷான், சாம், சாரதி, பிரேம், ரவி, நத்ராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

60 நாட்களில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இந்திய மட்டுமின்றி நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் படக்குழு இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அதை வேளையில், இத்திரைப்படத்தில் அர்வின் ராஜ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 3 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில் பிபரல பின்னணிப் பாடகர் கானா பாலா பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியிட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

குற்றம் செய்யேல்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam முகநூல் அகப்பக்கத்தை நாடுங்கள். 

Tuesday 5 March 2019

புதிய கூட்டணிக்காக தேமுவிலிருந்து விலகிய மஇகா, மசீச

கோலாலம்பூர்-
அம்னோவினரின் இனவாத கருத்துகளால் அதிருப்தி அடைந்திருந்த மஇகா, மசீச ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோன் ஆகிய இருவரும் இன்று விடுத்த கூட்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

அம்னோவினரிடையே நிலவும் இனவாதப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் தேசிய முன்னணி கூட்டணியில் நீடிப்பது சாத்தியமற்ற ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இக்கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்குவதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் அண்மையில் தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகள் குறித்தி இனவாத கருத்துகளை தெரிவித்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

Monday 4 March 2019

'மகாதீரிச'த்தை வீழ்த்துமா 'போஸ் கூ'?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது சுனாமியாக எழுந்து சுழன்றடித்த 'மகாதீரிசம்' எனும் முழக்கத்தை இன்றைய 'போஸ் கூ' முழக்கம் சிதறடித்துள்ளது.

60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு அன்று எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணி 'மகாதீரிசத்தை' ஓர் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

துன் மகாதீரால் மட்டுமே தேமுவை வீழ்த்த முடியும் என்ற உண்பையின் அடிப்படையில் அக்கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் பிரதமர் பதவி மகாதீருக்கு தாரை வார்க்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் என்ற தோரணையில் இன்றைய நம்பிக்கை கூட்டணியின் ஆட்சி அதிகாரம் யாவும் துன் மகாதீர் வசமே வீழ்ந்து கிடக்கும் நிலையில் 9 மாதங்களில் மக்களின் அதிருப்தி அலையை இக்கூட்டணி சம்பாதித்ததன் விளைவுதான் கேமரன் மலை, செமினி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கான காரணம் ஆகும்.

'மகாதீரிசத்தால்' கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை கூட்டணி ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஆயுதமாக 'போஸ் கூ' சுலோகம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை குறிக்கும் வகையில் பெலும் பரப்புரையாக மாறியுள்ள 'போஸ் கூ' சுலோகம் ஏற்படுத்தியுள்ள தாக்கமாகவே செமினியில் தேமு வெற்றி அமைந்துள்ளது.

'Malu Apa BosKu' என தொடங்கப்பட்ட இந்த பரப்புரை குறித்து பிரதமர் துன் மகாதீர் கூட விமர்சனம் செய்திருந்தார்.

தமது ஆட்சி காலத்தின்போது 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள டத்தோஸ்ரீ நஜிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடங்கப்பட்டதே ‘Malu Apa Bossku' பிரச்சாரம் ஆகும்.

இன, மதவாத அரசியலில் வெற்றி பெற்றுள்ளது தேமு- கணபதிராவ்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அடைந்துள்ள வெற்றி அம்னோவின் இனவாதத்திற்கும் பாஸ்  கட்சியின் மதவாதத்திற்கும் கிடைத்த  வெற்றியாக கருதப்படுகிறது. அதே வேளையில் தேர்தல் நேரத்தின்போது நம்பிக்கை கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் மக்களிடையே எழுந்த அதிருப்திக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் அம்னோ,  பாஸ் கட்சிகள் இத்தேர்தலில் ஒன்றிணைந்ததால் இந்த வெற்றி கிட்டியுள்ளது.

இவ்விரு கட்சிகளும் இனவாதத்தை தூண்டிவிட்டு அதில் வெற்றியை நிலைநாட்டி கொண்டுள்ளன. ஆயினும் நம்பிக்கை கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இன்றளவும் நிறைவேற்றப்பட்டது மக்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாம் ஒரு போதும் தவறக்கூடாது. அதை நிறைவேற்றுவதில் சாக்குப்போக்குகளை சொல்லக்கூடாது.

மக்கள் நம் மீதும் நாம் வழங்கிய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைத்துதான் 14ஆவது பொதுத்தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை ஆளும் அதிகாரத்தை வழங்கினர்.

மக்களுக்கு வணங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை தீர பரிசீலிக்க வேண்டுமே தவிர காரணங்களை அடுக்கிக்கொண்டே போகக்கூடாது.

மக்களின் அதிருப்தி அலை இன்னும் மோசமான சூழலை எட்டும் முன் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் மேலும் தெரிவித்தார்.


Sunday 3 March 2019

செமினி இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி; மக்கள் விடுத்திருக்கும் புதிய செய்தி?- பக்காத்தான் தலைவர்கள்

செமினி-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அடைந்துள்ள தோல்வியானது மக்கள் விடுத்திருக்கும் 'புதிய தகவலாக' கருதுகிறோம் என்று அதன் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர், இந்த தோல்வியானது மக்கள் எங்களுக்கு விடுத்திருக்கும் புதிய தகவலாகவே கருதுகிறோம்.

எங்களது தோல்விகளையும், இயலாமையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான ஒரு களமாக இந்த தேர்தலில் மக்கள் எங்களை தண்டித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இந்த தவறுகளும் இயலாமையும் தோல்விகளும் திருத்தி கொள்ளப்படுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று கெடா மாநில மந்திரி பெசாருமான டத்தோஶ்ரீ முக்ரிஸ் குறிப்பிட்டார்.

அதோடு, பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகையில், செமினி இடைத்தேர்தல் தோல்வி பக்காத்தான் கூட்டணி மக்கள் புகட்டியுள்ள பாடமாக கருதப்படுகிறது.

பொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததே இந்த தோல்விக்கான அடித்தள காரணம் ஆகும். நிச்சயமாக இது பக்காத்தான் கூட்டணிக்கு மக்கள் விடுத்திருக்கும் தொடக்க நிலை அறிவிப்பாகும்.

இத்தேர்தலின் தோல்வி குறித்து நிச்சயம் சுய பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகள் மீதான கருத்துகளும் கலந்தாய்வு செய்யப்படும் என்றார் அவர்.

செமினி இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹராப்பானை தோற்கடித்தது தேசிய முன்னணி

செமினி-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செமினி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தோற்கடித்து அத்தொகுதியை கைப்பற்றியது தேசிய முன்னணி.

தேசிய முன்னணி வேட்பாளர் ஸக்காரியா ஹபாஃபி 19,780 வாக்குகளை பெற்ற நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் அய்மான் ஸைனாலி 17,866 வாக்குகள் பெற்றார்.

1,914 வாக்குகள்  வித்தியாசத்தில் தேசிய முன்னணி இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், பிஎஸ் எம் வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் 847 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் குவான் சே ஹெங் 725 வாக்குகளும் பெற்றனர்.

செமினி இடைத்தேர்தல்; வாக்களிப்பு தொடங்கியது

செமினி-
செமினி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் கடுமையான பலபரீட்சையாக அமைந்துள்ள இந்த இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக முகமட் அய்மான் ஸைனாலி, தேமு வேட்பாளராக ஸக்காரியா ஹனாஃபி, பிஎஸ்எம் கட்சி வேட்பாளராக நிக் அஸிஸ் அஃபிக் அப்துல், சுயேட்சை வேட்பாளராக குவான் சே ஹெங் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.