Monday, 3 August 2020

தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவர் நானா? டத்தோ அம்பிகா மறுப்பு

கோலாலம்பூர்-
தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவராக தாம் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் வதந்தி என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா தெரிவித்தார்.
இத்தகைய கூற்றில் உண்மையில்லை என்றார் அவர்.

எஸ்பிஆர்-இன் புதிய தலைவராக டத்தோ அம்பிகா பதவியேற்கவுள்ளதாக பெர்காசா அமைப்பின் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எஸ்பிஆர்-இன் தலைவராக பதவி வகித்த டத்தோ அஸிஸான் அஸார் ஹருண் அப்பதவியிலிருந்து விலகி ஜூலை 13ஆம் தேதி மக்களவை சபாநாகராக பதவியேற்றுக் கொண்டார்.

Thursday, 30 July 2020

பிஎன் கூட்டணியிலிருந்து அம்னோ விலகியது

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்)  கூட்டணியிலிருந்து அம்னோ விலகுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாஸ் கட்சியுடன் இணைந்து தேசிய முன்னணி அமைத்துள்ள முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இம்முடிவு அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து அம்னோ விலகினாலும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவர் என்று ஸாயிட் ஹமிடி மேலும் சொன்னார்.

Wednesday, 29 July 2020

மூன்று துறைகளில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இனி அந்நியத் தொழிலாளர்கள் மூன்று துறைகளில் மட்டுமே பணி புரிவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

கட்டுமானம்,விவசாயம், தோட்டத்துறை ஆகியவற்றில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்கள்  பணியாற்ற அரசாங்கம் அனுமதிக்கிறது என்று மனிதவள துணை அமைச்சர் அவாங் சலாஹுடின் தெரிவித்தார்.

ஏனைய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உள்ளூர் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் உற்பத்தி, சேவை துறைகளில் பெருமளவு பணியாற்றி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

வங்கிக் கடன் செலுத்தும் தவணைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்கள் தங்களது வங்கிக் கடனை செலுத்துவதற்கான தவணைக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

ஆனால் இந்த சலுகை  இவ்வாண்டு வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே ஆகும். வேலை இழந்தவர்கள், தற்போது வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதன் தொடர்பில் நிதியமைச்சர், பேங்க் நெகரா ஆளுநருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் அம்லபடுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் தங்களது வீடு, வாகன கடன் செலுத்தும் தவணை ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

SOP-ஐ பின்பற்றாத நஜிப் ஆதரவாளர்கள்; கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? பீதியில் மலேசியர்கள்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பின்போது திரண்ட ஆதரவாளர்கள் கோவிட்-19 பரவல் அச்சம் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் டத்தோஶ்ரீ நஜிப் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர்.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று  அரசாங்கம் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்ற தவறியுள்ளனர்.

இக்கூட்டத்தில் திரண்ட ஆதரவாளர்களிடையே சுய ஒழுக்கம் இல்லாதது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குன் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தனது கவலையை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்கெனவே கோவிட்-19 பாதிப்பு மீண்டு அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் மீண்டும் கோவிட்-19 அச்சம் நாட்டு மக்களிடையே தலை தூக்க தொடங்கியுள்ளது.

தற்போது இரண்டு இலக்கமாக இருக்கும் கோவிட்-19 பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக எட்டினால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) மீண்டும் அமலாக்கம் செய்யப்படும் என்று முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பெரும் திரளாக திரண்ட நஜிப்பின் ஆதரவாளர்களால் கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? மீண்டும் எம்சிஓ அமலாக்கம் காணுமா? என்ற பீதி மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளதை சமூக ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது.  

சட்டம் நடுநிலையாக செயல்படுகிறது- பிரதமர்

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்துறை நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை புலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

தனது நண்பருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனை வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் சட்டம் நிலைநாட்டப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.ஆயினும் டத்தோஶ்ரீ நஜிப் இத்தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யவிருக்கும் முடிவை அரசாங்கம் மதிக்கிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது என்பதை புலப்படுத்தும் வகையில் அனைவருக்கும் வழிவிடப்படுகிறது என்று அவர் சொன்னார்.தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது; நஜிப் ஆதங்கம்

கோலாலம்பூர்-

எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஊழல் குற்றச்சாட்டில் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்கு தொடர்ந்து போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி  நிறுவனம் தொடர்பில் தமது தரப்பு சார்பாக வாதிட்ட டான்ஶ்ரீ ஷாபி, வழக்கறிஞர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வாதிட்ட போதிலும் அதனை நிராகரித்து விட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. இருந்த போதிலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன் என்று அவர் சொன்னார்.

கூடிய விரைவில் தமது தரப்பு வாதத் தொகுப்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் தமது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிவேன் என்று நீதிமன்றத்தில் திரண்டிருந்த 100க்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்னதாக எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி மோசடி, கள்ளப்பணம் பரிமாற்றம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப்புக்கு  12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வெ.210 மில்லியன் அபராதமும் வழங்கி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


டத்தோஶ்ரீ நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை; வெ.210 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்-

வெ.42 மில்லியன் வெள்ளி மோசடி நிகழ்த்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  டத்தோஸ்ரீ நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பில் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் 72 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும் இச்சிறைத் தண்டனை ஒருசேர விதிக்கப்படுவதால் 12 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் கூறினார்.

மாதத்திற்கு இரு முறை காவல் நிலையத்தில் டத்தோஸ்ரீ நஜிப் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெ. 20 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி வெளியேறினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார் என கூறப்படுகிறது.


Tuesday, 28 July 2020

தேர்தலில் போட்டியிடலாம்; வாக்களிக்கலாம்- மேல் முறையீட்டு வழக்கில் டத்தோ சிவராஜ் வெற்றி

கோலாலம்பூர்-
தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த  வழக்கில் மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வெற்றி பெற்றார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் சிவராஜுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்தும் உத்தரவிட்டது  டத்தோஶ்ரீ கமாலுடின் முகமட் சைட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம்.

கேமரன் மலை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ சிவராஜ் பூர்வக்குடியினருக்கு கையூட்டு வழங்கியதன் குற்றச்சாட்டின் பேரில்  2018ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின்  முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று டத்தோ சிவராஜ்  வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, தமக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமை தமக்கு மீண்டும் வழங்கப்பட்டதில் பேரானந்தம் கொள்கிறேன்.

மேலும் இவ்வழக்கில் தமக்கு ஆதரவாக இருந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி கொள்வதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத நஜிப் ஆதரவாளர்கள்-டத்தோ நோர் ஹிஷாம் வேதனை

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் நிதி மோசடி வழக்கின் தீர்ப்பிற்காக இன்று நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்களால் சுகாதார தலைமை இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பெரும் திரளான ஆதரவாளர் கூட்டம் திரண்டது.

கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் நாட்டை தொற்றிக் கொண்டிருக்கும் சூழலில் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றாதது வேதனையளிக்கிறது என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கவலை தெரிவித்தார்.

பெரும் திரளானோர் திரண்ட கூட்டத்தில் சுய கட்டுப்பாடு யாரும் கடைபிடிக்காதது வேதனைக்குரியதாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

நஜிப் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்தில் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையில் தீர்ப்பில் நீதிபதி முகமர் நஸ்லான் முகமட் கஸாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.

42 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகங்களை எழுப்ப நஜிப் தவறி விட்டார்.

இதன் அடிப்படையிலேயே அரசு தரப்பு நஜிப் மீது வழக்கு தொடர முடிந்தது என்று நீதிபதி சொன்னார்.

அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளிலும் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மலேசியாவின் வரலாற்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் பிரதமராக டத்தோஶ்ரீ நஜிப் திகழ்கிறார்.

Monday, 27 July 2020

மலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்துரைகள் முன்மொழிவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஷா ஆலம், செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா ஆலயம் (மலைப்படி மாரியம்மன்) ஆலயம் அகற்றப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய நில அலுவலகத்திடம் வலியுறுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்வாலயம் விவகாரம் தொடர்பில் மத்திய நில அலுவலகம், ஆலய தரப்பு  உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.


முதலாவதாக, ஆலயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இரண்டாவதாக ஆலயத்தை அகற்றுவற்கு முன்னர் வேறு இடம் ஆலயத்திற்கு (செக்‌ஷன் 11இல் மட்டும்) மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டு என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தோட்டப்புற இந்தியர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயம் வெறுமனே அகற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.


இந்த மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணவே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முற்பட வேண்டாம், ஆலயம், தமிழ்ப்பள்ளி, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்

செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள மலைப்படி மாரியம்மன் ஆலயம் அந்நிலத்திருந்து அகற்றப்பட வேண்டும் என்று அண்மையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


Friday, 24 July 2020

வறுமைகோட்டில் வாழும் தாய்மார்களுக்கு ''கிஸ்'' அட்டைகள் வழங்கப்பட்டன

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வறுமை நிலையில் வாழும்  தாய்மார்களின் குடும்பச் சுமையை குறைக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  அறிமுகப்படுத்திய கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் எடுத்து வழங்கினார். 
கோத்தா கெமுனிங் பகுதியில் பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கும் வயதுக்கும் குறைவான பிள்ளைகளை கொண்டுள்ள தனித்து வாழும் தாய்மார்கள் கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட நிலையில் அவர்களில் தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வாயிலாக பதிந்து கொண்டவர்களில் 50 பேருக்கு இந்த கிஸ் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 

தாய்மார்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவியை பெறுபவர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் கோவிட்-19 எஸ்ஓபி-பின்பற்றி  இந்த 50 பேருக்கும் இரு கட்டங்களாக கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டன.