Monday 5 February 2018

வசந்தபிரியா மரணம்; ஆசிரியை மீதான நடவடிக்கை அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும்- கல்வி இலாகா

பட்டவொர்த்-
மாணவி வசந்தபிரியா தற்கொலை மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியை  பள்ளியின் நிரந்தர செயல் நடைமுறையை வழிகாட்டியை (எஸ்.ஓ.பி) மீறியிருக்கிறார் என்பது கல்வி இலாகா மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில கல்வி இலாகாவின் துணை தலைமை இயக்குனர் முகம்மட் ஜமில் முகமட் தெரிவித்தார்.

நிபோங் தெபால் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வசந்தபிரியா, ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசியை திருடிதற்காக விசாரிக்கப்பட்டதில் மன உளைச்சலுக்கு ஆளாகி  வீட்டின் அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆயினும் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் நடவடிக்கை குறித்து கல்வி இலாகா விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

கல்வி இலாகாவின் இந்த விசாரணையில் போலீஸ் சம்பந்தப்படவில்லை என விளக்கிய அவர், கல்வி அதிகாரிகளின் குழு இறுதி முடிவெடுக்கும் என்றார் அவர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில்  சம்பந்தப்பட்ட ஆசிரியை மிகுந்த வேதனை அடைந்திருப்பதாகவும் பொதுமக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளால் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாகவும் முகமட் ஜமில் கூறினார்.

No comments:

Post a Comment