Monday 30 September 2019

இணையத்தில் வெளியானது 'பிகில்' டீசர் - படக்குழு அதிர்ச்சி

சென்னை-
அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல்வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

‘பரமபதம்’ மலேசிய திரைப்படங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது; நடிகர் பாக்யராஜ்

கோலாலம்பூர்-
மலேசியத் தமிழ் திரைப்படங்களை பார்த்திராத தன்னை, மலேசிய திரைப்படங்களின் மீது கவனத்தை திருப்பியுள்ளது ‘பரமபதம்’ திரைப்படம் என்று நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
இந்தியாவை அடுத்து அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற மலேசியாவில் தற்போது தமிழ்த் திரைப்படத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது.
மலேசிய திரைப்பரங்களை நான் பார்த்ததில்லை. 

ஆனால், தற்போது இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ‘பரமபதம்’ திரைப்படத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘பரமபதம்’ திரைப்படம் தம்முடைய கவனத்தை மலேசியத் திரைப்படங்களின் மீது திருப்பியுள்ளது. 

இளம் இயக்குனர் விக்னேஷ் பிரபு, அவர்தம் குழுவினரின் பெரும் முயற்சியில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘பரமபதம்’ திரைப்பட முதல் காட்சியை நிச்சயம் காண்பேன். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைய தம்முடைய வாழ்த்துகள் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார்.

Saturday 28 September 2019

பிரதமர் பதவியில் இன்னும் 3 ஆண்டுகள் - துன் மகாதீர்

நியூயார்க்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகவிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
பிரதமர் பதவிக்கு பொருத்தமானர் அடையாளம் காணப்படுவார் எனவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே பதவி ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இப்போது ஒரு நாள் 18 மணிநேரம் உழைப்பதாக கூறிய அவர், அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதற்குள் தகுதியான ஒருவர் அடையாளம் காணப்படுவார் என்றார்.





Thursday 26 September 2019

மரபு கவிதையே தமிழிலக்கியத்தின் வேர்

தஞ்சோங் மாலிம்-
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் தொடர்முயற்சியாகத் தேசிய அளவிலான  நல்லார்க்கினியன் மரபு கவிதைப் பரிசளிப்பு விழா  இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.

மலேசிய நாட்டில் தமிழ்மொழி செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின் புனைப்பெயரான நல்லார்க்கினியன் பெயரில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விழாவின்  விபரங்கள் பின்வருமாறு:
       
திகதி      :    5 அக்டோபர் 2019 2019
       
நேரம்        : மாலை 3.00 - மாலை 6.00 மணி வரை
       
இடம்       : மைய அரங்கம், பழைய வளாகம், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்
 (AUDITORIUM UTAMA, KAMPUS SULTAN ABDUL JALIL SHAH,UPSI.)

இவ்விழாவில் நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப்  பரிசளிப்பும் மூத்த மரபு கவிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக்குழுவினர் அன்போடு அழைக்கின்றோம்.

இவ்விழா குறித்த மேல் விவரங்கள் அறிய  நிகழ்ச்சியின் இயக்குநரைத்  தொடர்பு கொள்ளவும்.

சரண்ராசு : 010 4643476
வினோதினி : 010 346 6822

Saturday 21 September 2019

இந்திய பெண்களுக்கான கைவினை ஆபரணங்கள் தயாரிக்கும் பயிற்சி பட்டறை

ஜெராம்-
கைத்தொழிலை கற்றிருந்தால் வாழ்க்கையில் கவலை இல்லை என்பது பழமொழி.வீட்டிலிருந்தபடியே கைத்தொழில் கற்றுக்கொண்டு பெண்களும்  தங்களது குடும்பத்தின்  பொருளாதார மேம்பாட்டிற்கு சிறந்த பங்காற்ற முடியும்.
அதன் அடிப்படையில் அண்மையில் பெண்களுக்கான கைவினை ஆபரணங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை மிகச் சிறப்பான முறையில் ஜெராம் தாமான் ஜாத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை சிலாங்கூர் மாநில திறன் மற்றும் புத்தாக்க கழகம் (Persatuan Kemahiran & Inovasi Selangor), ஜெராம் சட்டமன்ற  திறன்மிக்க மகளிர் மையம் (Pusat Wanita Berdaya Dun Jeram) ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் குறைந்த வருமானத்தை பெறும் வர்க்கத்தைச் சார்ந்த 35 பெண்கள்  கலந்துகொண்டு பலன் அடைந்தனர்.
இந்நிகழ்வினை சிலாங்கூர் இன்று  நாளிதழின் தலைமையாசிரியர் குணசேகரன் குப்பன் அவர்கள் அதிகாரபூர்வமாக திறப்புரையாற்றி தொடக்கி வைத்தார். மேலும் இப்பட்டறைக்கு ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முகமது சைட் பின் ரோஸ்லி சிறப்பு வருகை  புரிந்து பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
அவர் தமதுரையில் இந்திய சமுதாயத்திற்கு இம்மாதிரியான பயிற்சி பட்டறைகளின்வழி வருமானத்தை பெருக்கி கொள்ள வாய்ப்புகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு தனது பிளவுபடாத ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்தார்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி, பயிற்சி பட்டறை ஏற்பாட்டில் பங்கெடுத்துக்கொண்ட ஜெராம் இந்திய சமூக பொதுநல ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அருள்மாறனுக்கு   தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

Sunday 15 September 2019

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவின் தந்தை வீரமன் காலமானார்

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவின் தந்தை வீரமன் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 12.30 மணியளவஇயற்கை எய்தினார்.

அன்னாரின் நல்லுடல் அவரின் சொந்த ஊரான தெலுக் இந்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை 16ஆம் தேதி காலை 11.00 மணிக்கு 367, லோரோங் 9, கம்போங் கெரிந்தினா, தெலுக் இந்தான் எனும் முகவரியில் நடைபெறும்.

தந்தையின் பிரிவால் துயருறும் கணபதிராவ், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராய்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Friday 13 September 2019

புகைமூட்டம்; கிள்ளானில் 3 பள்ளிகள் மூடப்பட்டன

ஷா ஆலம்-
காற்று தர குறியீடு  ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதால் கிள்ளான் வட்டாரத்தில் மூன்று பள்ளிகள் இன்று மூடப்பட்டன.
ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி, ஜாலான் கெபுன் தேசிய பள்ளி, ஜாலான் கெபுன் இடைநிலைப்பள்ளி ஆகியவை மூடப்பட்ட பள்ளிகள் ஆகும்.

நாடு தற்போது புகை  மூட்டப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில் காற்றின் தரக் குறியீடு 200ஐ எட்டினால் பள்ளிகள் மூடப்படும் என்ற நிலையி இப்பள்ளிகளை உடனடியாக மூட கல்வி அமைச்சு உத்தரவிட்டது.

‘இனவாத கட்சி’ ஜசெக; மீட்டுக் கொள்வாரா மகாதீர்? – ஸாயிட் சவால்

கோலாலம்பூர்-
ஜசெகவை இனவாத கட்சி என முத்திரை குத்திய துன் மகாதீர் அதனை மீட்டுக் கொள்வாரா? என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி சவால் விடுத்தார்.
அம்னோவும் பாஸ் கட்சியும் ஒத்துழைத்து செயல்படும் முன்னர் அம்னோவை  ‘காஃபிர்’ என கூறிய பாஸ் கட்சி அதனை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஸாயிட் ஹமிடி, ஒரு காலத்தில் ஜசெகவை இனவாத கட்சி என முத்திரை குத்திய துன் மகாதீர் அதனை இன்னமும் மீட்டுக் கொள்ளவில்லை.

முன்பு ஜசெகவை கடுமையாக எதிர்த்து வந்த துன் மகாதீர் இப்போது அதனுடன் ஒட்டி உறவாடுவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Thursday 12 September 2019

15ஆவது பொதுத் தேர்தல்; வெற்றி எளிதானதல்ல; துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவது அவ்வளது எளிதானது அல்ல என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பி ஊழலே முக்கிய கருவாக இருந்தது. அவரை விலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே பக்காத்தான் ஹராப்பான் மகத்தான வெற்றி பெற்றது.

ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலில் நமது அடைவுநிலையை வைத்து பரப்புரை நிகழ்த்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும். எனவே பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு நாம் அனைவருமே பாடுபட வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

Wednesday 11 September 2019

பெர்க்கிலி உணவகம் இடிக்கப்பட்டது- கிள்ளானில் பரபரப்பு

கிள்ளான் -
கிள்ளானில் மிகவும் பிரசித்தி பெற்ற பெர்க்கிலி இந்தியர் உணவகம் நேற்றிரவு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட நில அலுவலகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி உணவகம் கட்டப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட நில அலுவலகம் அதனை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கியது.

உணவகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதன் உரிமையாளர்  தொடர்ந்த வழக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து கிள்ளான் மாவட்ட அலுவலகம அதனை இடிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தது.

அதன் அடிப்படையில் நேற்றிரவு 10.30 மணியளவில் உணவகத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கி அதகாலை 2.00 மணியளவில் நிறைவடைந்ததது.

இதனிடையே, பெர்க்கிலி உணவகம் இடிக்கப்படும் தகவலை அறிந்து சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டதை அடுத்து பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ், அமலாக்க அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

ராகாவின் ரசிகர்களுக்கு ‘தமிழ் பேசி காசை அள்ளு’ போட்டி

கோலாலம்பூர்-
இன்று 10-ஆம் தேதி தொடக்கம் தங்களுடைய ரசிகர்களுக்காக ராகா ‘தமிழ் பேசி காசை அள்ளு’ எனும் போட்டியை வானொலியில் ஏற்றி நடத்தி ரொக்கப் பரிசு வழங்கவுள்ளது.
இப்போட்டியில் கலந்து கொண்டு ரொக்கப் பரிசைத் தட்டிச் செல்ல விரும்புவார்கள், காலையில் சுரேஷ் மற்றும் அகிலா படைக்கும் கலக்கல் காலை நிகழ்ச்சியில் இணைந்து, அவர்கள் வழங்கும் கடவுச்சொல்லைக் கொண்டு இப்போட்டியில் பங்கேற்கலாம். பிறகு, ராகாவுடன் காலை முதல் இரவு வரை இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும். 

அழைத்து அறிவிப்பாளர்களுடம் அந்தக் கடவுச்சொல்லைச் சொல்லி ‘தமிழ் பேசி காசை அள்ளு’ போட்டியின் அடுத்தச் சுற்றுக்குச் செல்லலாம். அதன் பிறகு, அறிவிப்பாளர்கள் கொடுக்கும் 3 சொற்களைக் கொண்டு 30 வினாடிக்குள் ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தி சிறப்பான வாக்கியத்தை வழங்கும் போட்டியாளர்களுக்கு ரிம.200 வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெற்றிப் பெறும் போட்டியாளர்கள் ரிம.150 மதிப்புள்ள சுவாமி சிவானந்த ஹம்பர் பரிசு பொருட்களையும் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது.

மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Saturday 7 September 2019

சீபில்ட் ஆலய மோதல், உயிரிழப்பு நான் காரணமா? வேடிக்கையானது- கணபதிராவ் விளக்கம்

ஷா ஆலம்-
சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலை அடுத்து தீயணைப்பு வீரர் ஒருவரின் உயிரிழப்புக்கு தாம் காரணம் என குற்றஞ்சாட்டப்படுவது வேடிக்கையானது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜசெக, பக்காத்தான் தலைவர்கள் சிலரை ‘இனவெறியர்கள்’ என்று குற்றஞ்சாட்டியுள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டி, எங்களை இனவெறியர்கள் என்று குற்றஞ்சாட்டி எங்களையே ஆயுதமாகக்  கொண்டு அரசியல் நடத்தி வரும் அம்னோகாரர்கள், இன்னமும் அதே பாணியையே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இனப் பிரிவினையை தூண்டுகிறது என அடுக்கடுக்கான பொய்களை சொல்லி மக்கள் மனதில் நஞ்சை விதைத்து வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான கருத்துகளை அஸ்ராஃப் வஜ்டி வெளியிட்டு வருகிறார். அதில் என்னை பற்றியும் சில அவதூறுகளை பரப்பியுள்ளார்.

சீபில்ட் ஆலய விவகாரத்தில் நான் இனவாதத்தை தூண்டிவிட்டு தீயணைப்பு வீரரின் உயிரிழப்பு காரணமாக இருந்தேன் என்று அஸ்ராஃப் வஜ்டி கூறியுள்ளார். இவ்வள்வு நாட்கள் இவர் கோமாவில் இருந்தார் போல்.

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு மூலக் காரணம் ஆலயத்திற்குள் அத்துமீறி 
நுழைந்த 50 பேர் கொண்ட கும்பல்தான். அவர்கள்தான் இந்த பிரச்சினையை கலவரமாக திசை திருப்பியவர்கள். திட்டமிட்டே கூலி கொடுத்து சில தரப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இதனை கடந்த 28 நவம்பர் 2018இல் உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினும் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

பிரதமர், பக்காத்தான் தலைவர்களும் இந்த பிரச்சினைக்கு மூலக் காரணம் சம்பந்தப்பட்ட அந்த குண்டர் கும்பல்தான் என கூறும் நிலையில் அந்த பிரச்சினைக்கு நான் எப்படி காரணமாவேன்?

சில கும்பல் செய்த அட்டூழியத்தை தடுப்பதற்கும் ஆலயத்தை பாதுகாக்கவுமே அங்கு மக்கள் கூடினரே தவிர யாருடைய தூண்டுதலின் பேரிலும் அல்ல.
அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்த குணடர் கும்பல் குறிப்பிட்ட வார்த்தையை கூறி அத்துமீறி ஆக்கிரமிக்க நினைத்ததை இனவாதத்தை தூண்டும் நோக்கம் என்று கருதாமல் வேறு எப்படி குறிப்பிடுவது? விருந்துக்கு வந்தவர்கள் என்றா கருத முடியும்?

தன் மீது பொய்களை அள்ளி தெளித்த அந்த குண்டர் கும்பலின் அத்துமீறலை மட்டும் குறிப்பிட மறந்து விட்டார்.

மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகளுக்கு ஜசெக குரல் கொடுத்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்த பல முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளோம்.

தாபோங் ஹாஜி முறைகேடு, பெல்டா பிரச்சினை, 1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி முறைகேடு, நாட்டின் கடன், இந்தியர் விசுவாசம், சீனர்களை ‘விருந்தாளி’ என குறிப்பிட்ட ஸாகீர் நாய்க், ஈப்போவில் இந்து ஆலயத்தில் சிலைகளை உடைத்த இந்தோனேசிய ஆடவனின் செயலை கண்டிக்காத அம்னோவும் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டியும் ஜசெகவையும் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களை குறை சொல்ல தகுதியற்றவர்கள்.


உங்களின் இனவாத அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால்தா கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் உங்களை தோல்வியடையச் செய்தனர். மக்கள் ஏன் அம்னோ, அதன் கூட்டணி கட்சிகளை  புறக்கணித்தனர் என்ற உண்மையை விளங்கி கொள்ள வேண்டும். அதை விடுத்து இன்னும் இனம், மதம் சார்ந்த விவகாரங்களை எழுப்பிக் கொண்டு மலேசியர்களிடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர் குலைக்க வேண்டாம் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

Friday 6 September 2019

மீண்டும் பகிரப்பட்ட அமைச்சரை உள்ளடக்கிய ஆபாச காணொளி

கோலாலம்பூர்-

பொருளாதார விவகஅர அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை உட்படுத்தியதாக கூறப்படும் 6 ஆபாச காணொளி தொகுப்புகள் இன்று வாட்ஸ் அப் புலனத்தின் வழி பகிரப்பட்டன.
Video Terkini Azmin (Azmin’s latest video)'  எனும் பெயகர் கொண்ட புலனத்தில் இன்று அதிகாலை 3.35 மணியளவில் அந்த காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

3 நிமிட காட்சிகளை உள்ளடக்கிய அந்த காணொளி தொகுப்பு பகிரப்பட்ட புலனத்தில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி அஹ்மாட், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், அம்னோ செயற்குழு உறுப்பினர் லொக்மான் நோர் அடாம் ஆஜியோர் உட்பட 80 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஸ்மின் அலியை உட்படுத்தியதாக கூறப்படும் ஆபாச  காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு நாட்டின் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இனவாதத்தை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பது அம்னோதான் - ஆனந்த் பதிலடி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டு மக்களிடையே இன பதற்றத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய நினைப்பதி அம்னோவுக்கு நிகர் அம்னோ தான் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

நாட்டின் 62ஆவது சுதந்திரம் தினக் கொண்டாட்ட குதூகலிப்பு அடங்குவதற்குள்ளேயே இன ரீதியிலான கருத்துகளை வெளியிட்டுள்ளார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டி கூறியுள்ளார்.

அதிலும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், ஒற்றுமை துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி உட்பட பல ஜசெக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீது இன ரீதியிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் நாட்டு மக்களிடையே இன பதற்றத்தை உண்டாக்க முயல்கின்றார்.

60 ஆண்டுகால ஆட்சியை இழந்து அதிகாரம் கைவிட்டு போன நிலையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி வரும் அஸ்ராஃப் வஜ்டி, இனவாதத்தை தூண்டி விடுவது அம்னோதான் என்பதை உணர வேண்டும்.

இனவாதத்தை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைப்பதில் அம்னோவுக்கு நிகர் அம்னோதான் என்பதை அஸ்ராஃப் வஜ்டி உணர்ந்து பேச வேண்டும் என்று ஆனந்த் வலியுறுத்தினார்.

Thursday 5 September 2019

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்; பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார் கல்வி அமைச்சர்

புத்ராஜெயா-
யூபிஎஸ்ஆர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று 
பெற்றோர்களை கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் கேட்டுக் கொண்டார்.
நாடு தழுவிய நிலையில் இன்று 445,641 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வை எழுதுகின்றனர். 
மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க நேரிடலாம்.  அழுத்தம் கொடுப்பது சிறந்த நடைமுறை ஆகாது. 
ஆதலால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் அறிவுறுத்தினார்.

புத்ராஜெயா பிரிசிண்ட் 8(1)இல் உள்ள தேசியப்பள்ளியை பார்வையிட்டபோது மஸ்லீ மாலேக் இவ்வாறு கூறினார்.

கோத்தா கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கதை சொல்லும் போட்டியும் சுகந்திர தினக்கொண்டாட்டமும்

ஷா ஆலம்-
கோத்தா கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் கதை சொல்லும் போட்டியும் சுகந்திர தினக்கொண்டாட்டமும் விமரிசையாக நடந்தேறியது என்று ஆலய துணை செயலாளரும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவருமாகிய முருகன் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.

முதன் முறையாக இப்பகுதியில் வசிக்கும் இந்து பக்தர்களின் பிள்ளைகளுக்கு என்று கதை சொல்லும் போட்டியை ஆலய நிர்வாகம் நடத்த திட்டமிட்டது காரணம் கதை சொல்லும் திறன் சிறு வயதினில் இருந்தே ஊக்கப்படுத்தினால்த்தான் கல்லூரி படிப்பை முடிந்த பிறகு தொழில் சார்ந்த நிருவனங்களுக்கு செல்லும் போது நேர்முக தேர்வின் போது இத்தகைய ஆற்றல்கள் பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுங்கை ரெங்கம், எமரால்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்களும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிள்ளைகளும் இந்த கதை சொல்லும் போட்டியில் கலந்துக்கொண்டு பல பரிசுக்களையும் தட்டி சென்றனர்.

ஆலயம் பல தொண்டூழியச் செயல்களில் அதிகம் ஈடுபட்டு வந்தாலும் நாளைய தலைமுறைகளுக்கான திறனை வளர்க்கும் காரியங்களிலும் அதிகம் கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் கணபதி ராவ் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசுக்களையும் நற்சான்றிதல்களையும் எடுத்து வழங்கினார்.
அவருடன் ஆலய தலைவர் டத்தோ நாதன் சுப்பையா,சமூகச் சேவையாளர்கள்,ஆலய தொண்டூழிய படையினர்,பக்தர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை விவர்சியாக நடத்திக்கொடுத்தனர்.

அதோடு,சுதந்திர  தினத்தை போற்றும் வகையில் அனைவரும் கொடி அசைத்து தேசிய கீதமும் பாடினர்.

Wednesday 4 September 2019

துணிகளை ஏற்றிச் சென்ற லோரி தீ பிடித்தது

ஈப்போ-

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் துணிகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று தீபிடித்து எரிந்தது.

ஈப்போ நோக்கி செல்லும் மெனோரா சுரங்கத்திற்கு அருகில் நேற்று மாலை 7.35 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இரவு 10.45 மணியளவில் தீயை  முழுமையாக அணைத்தனர்.

தீ பிடித்த லோரி 80 விழுக்காடு எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தினால் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் வாகன் நெரிசல் ஏற்பட்டது.

Sunday 1 September 2019

வரலாற்று கறுப்பு அத்தியாயத்தின் முன்னுரையே 'சுதந்திரம்'

ஆக்கம்: கி: மணிமாறன்

'மெர்டேக்கா..... மெர்டேக்கா......மெர்டேக்கா.....'

ஆகஸ்ட் 31... இன்று அனைத்து மலேசியர்களின் தாரக மந்திரமாக திகழ்கிறது 'மெர்டேக்கா' எனும் வாசகம். இது வெறும் வாசகம் அல்ல. ஆதிக்ககாரர்களின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பிய நமது முன்னோர்களின் கறுப்பு அத்தியாயத்தை பதிவு செய்துள்ள கறை படிந்த வரலாற்றின் முன்னுரையே ஆகும்.
பிரிட்டிஷாரின் பிடியிலிருந்த நாட்டை மீட்டு சுதந்திர உணர்வுடன் வாழ வேண்டும் என்று விரும்பிய பல ஆத்மாக்கள் முன்னெடுத்த விடுதலை போராட்டம்  வலிகளையும் கொடுமைகளையும் தன்னகத்தே புதைத்து கொண்டுள்ளது.
பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் கிடைக்கப் பெற்ற விடுதலையை (சுதந்திரம்) இன்று நாம் எளிமையாக கருதுகிறோம். அதன் விளைவே அவ்வப்போது எழுப்பப்படுகின்ற இன விவகாரங்கள் ஆகும்.

இன ரீதியில் பிரிந்து நின்றால் அது பலவீனம்; 'மலேசியராய்' நாம் ஒன்றிணைந்து நிற்பதுவே நமது பலம்.
சுதந்திர போராட்டத்தின் கறுப்பு அத்தியாயத்தை மறந்து விடாமல் முன்னோர்களின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்வோம்.  அதுவை நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை.