Sunday 29 April 2018

வேட்புமனுவை தாக்கல் செய்தார் தங்கராஜ்


ரா.தங்கமணி

ஈப்போ-
ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி வேட்பாளர் கி.தங்கராஜை எதிர்த்து பிகேஆர் சார்பில் சியா போ ஹிவான், பிஎஸ்எம் கட்சி சார்பில் சரஸ்வதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



கி.தங்கராஜ் பேராக் மாநில மஇகா செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முனைப் போட்டியில் கேமரன் மலை


ரா.தங்கமணி

கேமரன் மலை-
அண்மைய காலமாக அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்த கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இன்று தேசிய முன்னணி, பிகேஆர், பிஎஸ்எம் ஆகிய கட்சிகள் உட்பட ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது தேசிய முன்னணி வேட்பாளராக  மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், பிகேஆர் வேட்பாளரக வழக்கறிஞர் மனோகரன், பிஎஸ்எம் சார்பில் சுரேஸ் பாலசுப்பிரமணியம், பாஸ் கட்சியின் சார்பில் வான் மகாதீர், பெர்ஜாசா சார்பில் முகமட் தாஹிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மும்முனை போட்டியை எதிர்கொள்கிறார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி



பாகான் டத்தோ-

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி.

தேசிய முன்னணியின் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ ஸாயிட்டை எதிர்த்து பிகேஆர், பாஸ் ஆகிய கட்சிகள் தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

பிகேஆர் கட்சியின் வேட்பாளராக பக்ருராஸி அர்ஷாட், பாஸ் கட்சியின் வேட்பாளராக அப்துல் முனெய்ம் ஹசான் ஆகியோர் களம் காண்கின்றனர்.

'எம்ஜிஆர்' வேடமிட்டு வந்த சுயேட்சை வேட்பாளரின் மனு நிராகரிப்பு


ஜோர்ஜ்டவுன் -
இன்று நடைபெற்ற வேட்புமனுவின் போது 'எம்ஜிஆர்'  போல வேடமிட்டு வந்த  ஆடவரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

பயான் பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து உபான் சட்டமன்றத் தொகுதிக்கும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரா அம்மாசி.

ஆனால் கடந்த பொதுத் தேர்தலின்போது பத்து உபான் தொகுதியில் போட்டியிட்டு வைப்புதொகையை இழந்த ராஜேந்திரா அம்மாசி, தனது செலவீன அறிக்கையை தாக்கல் செய்யாததால் இம்முறை அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக பாயான் பாரு தேர்தல் ஆணையத்தின் அலுவலக அதிகாரி முகமட் ஜமில் முகமட் தெரிவித்தார்.

இன்று வேட்புமனு மையத்திற்கு வந்த ராஜேந்திரா அம்மாசி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான 'எம்ஜிஆர்' என அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரனை போல் வேடமிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்போ பாராட்டில் நேரடி மோதல்



புனிதா சுகுமாறன்

ஈப்போ-
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

பிகேஆர் கட்சியின் சார்பில் எம்.குலசேகரன் போட்டியிடவுள்ள நிலையில் தேசிய முன்னணி சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக செங் வெய் யீ போட்டியிடுகின்றார்.

தங்கராணியை எதிர்த்து சிவசுப்பிரமணியம், மோகராணி போட்டி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
அதிகமான இந்திய வாக்காளர்களை உள்ளடக்கிய புந்தோங் சட்டமன்றத் தொகுதியில்  மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேசிய முன்னணி வேட்பாளர் திருமதி தி.தங்கராணியை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பில் ஆதி.சிவசுப்பிரமணியமும் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் திருமதி மோகனராணியும் களமிறங்குகின்றனர்.
இம்மூவரும் இன்று காலை தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி


ரா.தங்கமணி

சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அங்கு தேசிய முன்னணி, பிகேஆர் ஆகியவற்றோடு பாஸ் கட்சியும் மோதுகிறது.

தேசிய முன்னணி  வேட்பாளராக டத்தோ வ.இளங்கோ, பிகேஆர் சார்பில் அ.சிவநேசன், பாஸ் கட்சி சார்பில் ஜெ.அப்பளசாமி ஆகியோர் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மும்முனைப் போட்டியில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக கலமிறங்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் டத்தோஶ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா  பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுடன் கடுமையன போட்டியை எதிர்கொண்டுள்ளார்.

டத்தோஶ்ரீ உஸ்னியை எதிர்த்து பிகேஆர் சார்பில் அஹ்மாட் பைசால் அஸுமு, பாஸ் கட்சியின் சார்பில் முகமட் சூல்கிப்ளி முகமட் ஸக்காரியா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்

உலுகிந்தா சட்டமன்றம்

உலுகிந்தா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ அமினுடின் முகமட் ஹனாஃபியா  களம் கண்டுள்ள நிலையில் பிகேஆர் சார்பில் முகமட் அராஃபாத், பாஸ் கட்சி சார்பில் முகமட் சாலே சைட் ஆகியோருடன் சுயேட்சை வேட்பாளராக எஸ்.முருகையா போட்டியிடவுள்ளார்.

மஞ்சோய் சட்டமன்றம்

மஞ்சோய் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக முகமட் ஸைட் முகமட் ஸைனால் அபிடின், பிகேஆர் வேட்பாளராக அஸ்முனி அவி, பாஸ் கட்சியின் சார்பில் முகமட் ஹஃபிஸ் சப்ரி ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

பிகேஆர் வேட்பாளர் சிவமலரின் வேட்புமனு நிராகரிப்பு


கோலசிலாங்கூர்-
புக்கிட் மெலாவத்தில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முனைந்த பிகேஆர் கட்சியின் வேட்பாளர் சிவமலர் கணபதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுபவர் அவ்வட்டாரத்தில் வசிப்பவராகவோ அல்லது அம்மாநிலத்தில் உள்ளவராக இருக்க வேண்டும் என கோலசிலாங்கூர் தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரி ரஹிலா ரஹ்மார் விவரித்தார்.

கோலசிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் சிவமலர் போட்டியிட முனைந்தாலும் அவரது அடையாள அட்டையில்  பகாங், ரவூப் பகுதியை வீட்டு முகவரியாக கொண்டுள்ளது என்றார் அவர்.

சிவமலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜுவாரியா சூல்கிப்ளி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

4 முனைப் போட்டியில் சுங்கை சிப்புட்



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி 4 முனை போட்டியை எதிர்கொண்டுள்ளது.

இன்று கோலகங்சார் நகர மண்டபத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலின்போது தேசிய முன்னணியின் வேட்பாளராக டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பிகேஆர் கட்சியின் சார்பில் கேசவன் சுப்பிரமணியம், பிஎஸ்எம் கட்சியின் சார்பில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பாஸ் கட்சியின் சார்பில் டாக்டர் இஷாக் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுவை சமர்பித்தனர்.

லிந்தாங் தொகுதி

லிந்தாங் சட்டமன்றத் தொகுதி மும்முனைப் போட்டி எதிர்கொண்டுள்ளது. இங்கு தேசிய முன்னணி, பிகேஆர், பாஸ் ஆகியவை போட்டியிடுகின்றன. தேசிய முன்னணி சார்பில் டத்தோ சூல்கிப்ளி ஹருண், பிகேஆர் கட்சியின் சார்பில் மஹ்டி ஹசான், பாஸ் கட்சியின் சார்பில் இஸ்ரான் பாஹ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜாலோங் தொகுதி

ஜாலோங் தொகுதியில் இம்முறை நேரடி மோதலை சந்தித்துள்ளது. இங்கு தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ டான் லியான் ஹோ, பிகேஆர் வேட்பாளராக லோ சீ யீ ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சுயேட்சைகள் இல்லாத போட்டி

கடந்த பொதுத் தேர்தலின்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கிய சூழலில் இத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக யாரும் களமிறங்கவில்லை. கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இது இருப்பதால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க பலர் தயக்கம் காட்டியுள்ளார்.

Saturday 28 April 2018

டான்ஶ்ரீ கேவியஸ் நீக்கம் சட்டவிதிகளுக்கு உட்பட்டதா? செபஸ்தியர் கேள்வி



புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மைபிபிபி கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளது நேர்மையற்றது எனவும் கட்சியின் தேசியத் தலைவரை நீக்கம் செய்ய தலைமைச் செயலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என ஈப்போ மைபிபிபி தொகுதித் தலைவர் இருதயம் செபஸ்தியர் த/பெ அந்தோணிசாமி கேள்வி எழுப்பினார்.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கடந்த 24ஆம் தேதி மத்திய செயலவை முடிவெடுத்துள்ளதாக கூறும் தலைமை செயலாலர் டத்தோ மோகன் கந்தசாமி, எதன்  அடிப்படையில் டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளீர்கள்?

கட்சியின் சட்டவிதிகளின்படி கட்சி தேசியத் தலைவரை தவிர மத்திய செயலவையை கூட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லாத நிலையில் தலைவரின் அனுமதியின்றி இந்த மத்திய செயலவையை கூட்டுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்யுமாறு தேசிய முன்னணி கேட்டுக் கொண்ட கடிதம் உள்ளதா?, தேசிய முன்னணி செயலாளரின் கடிதத்தை எப்போது பெற்றீர்கள், அதனை எங்களுக்கு காண்பிக்க முடியுமா? என செபஸ்தியர் வினவினார்.

ஒழுங்கு நடவடிக்கை பிரிவை அமைப்பதற்கு கட்சியின் மத்திய செயலவைக்கு அதிகாரம் உள்ள நிலையில் அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை எப்போது அமைத்தீர்கள்?, அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் யார்?

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்குமாறு ஒழுங்கு நடவடிக்கைக் குழு மத்திய செயலவைக்கு எப்போது முன்மொழிந்தது? என சராமாரியான கேள்விகளை தொடுத்த செயஸ்தியர், தேசியத் தலைவரின் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள தலைமைச் செயலாளருக்கு, ஒரு தலைவரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. தலைவரின் அனுமதியின்றி ஒரு நடவடிக்கையை அனுமதிப்பதும், செயல்படுத்தவும் முடியாது.

மேலும், மத்திய செயலவையுடன் கலந்தாலோசித்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் தேசியத் தலைவருக்கு உட்பட்டது ஆகும். சட்டவிதி அவ்வாறு இருக்க சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக டத்தோ லோக பால மோகனை தேர்வு செய்தது யார்?

டத்தோ லோக பால மோகனை வேட்பாளராக நியமிக்க மைபிபிபி தேசிய முன்னணிக்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியது? என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செபஸ்தியன் கேள்விகளை தொடுத்தார்.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியின் அனைத்துப் பதவிகளில் மட்டுமல்லாது உறுப்பினர் அந்தஸ்த்திலிருந்தும் நீக்கியது நியாயமானது அல்ல என செபஸ்தியர் உட்பட புந்தோங்கில் உள்ள 25 கிளைகளும் மத்திய செயலவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இறந்து போன நாராயணன் இன்னமும் வாக்காளரா? ஆராயப்படும் - தேர்தல் ஆணையர்



புத்ராஜெயா-
2003ஆம் ஆண்டு காலமான எம்.எம்.நாராயணன் நாயர் என்பவரின் பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்து  ஆராயப்பட்ட பின்னர் நீக்கப்படும் என மலேசிய தேர்தல் ஆணையர் டான்ஶ்ரீ முகம்மட் ஹாசிம் அப்துல்லா கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 2003ஆம் ஆண்டில் காலமான எம்.எம்.நாராயணன் நாயர் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து அவரின் மகள் தெலுக் ஆயர் தாவாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது அதில் தம்முடைய தந்தையின் பெயர் இல்லை என்றும் இவ்வாண்டு தந்தையின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை கண்டு போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த டான்ஶ்ரீ முகம்மட் ஹாசிம், நன்கு ஆராயப்பட்ட பின்னர் அந்த பெயர் நீக்கப்படும் எனவும் இவருடைய மரணம் தொடர்பாக தேசிய பதிவிலாகாவிடம் முழு விவரத்தை கண்டறியாமல் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்றார்.

மகாத்மா காந்தி கலாசாலைக்கு கணினி, மேசை - நாற்காலிகள் அன்பளிப்பு



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலைக்கு கணினிகள், மேசை - நாற்காலிகளை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி வழங்கினார்.

சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பரிவு துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதமர் துறையின் கீழ் வழங்கப்பட்ட இந்த கணினி, மேசை- நாற்காலிகள் மகாத்மா காந்தி கலாசாலைக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஶ்ரீ தேவமணி, ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் கல்வி நலனுக்காக மானியங்கள் மட்டுமின்றி தளவாடப் பொருட்களையும் மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது.

மாணவர்கள் தாம் முக்கியம் என்ற நிலையில் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளை ஒருபோதும் கைவிடாது என சுங்கை சிப்புட் தேமு வேட்பாளருமான டத்தோஶ்ரீ தேவமணி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி, சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன், கிளைத் தலைவர்கள் அப்துல் ஜபார், அசோக், தாஸ் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Friday 27 April 2018

டான்ஶ்ரீ கேவியசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதற்காக அங்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சேவைகளை மேற்கொண்டிருந்தார் டான்ஶ்ரீ கேவியஸ்.

அத்தொகுதி தனக்கு ஒதுக்கப்படவில்லை என்பதாலும் ஒதுக்கப்பட்ட சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்தார் அவர்.

ஆயினும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் தேசிய முன்னணியை மைபிபிபி கட்சி வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட டான்ஶ்ரீ கேவியஸ், அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் 'தேசிய முன்னணியுடனான நட்புறவு தொடரும்' என எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆயினும் மைபிபிபி ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் 'மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்ந்து விலகிக் கொண்டதாக' டான்ஶ்ரீ கேவியஸும், 'அவர் விலகவில்லை; ஒழுங்கு நடவடிக்கை பிரிவின் மூலம் நாங்கள்தான் அவரை நீக்கினோம்' என மைபிபிபி செயலவை உறுப்பினர்களும் அடுத்தடுத்து அறிவித்தனர்.

இந்நிலையில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்காக தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ள டான்ஶ்ரீ கேவியஸ், இனி என்ன செய்யப் போகிறார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

'14ஆவது பொதுத் தேர்தல் வரைக்கும் நான் மெளனம் காப்பேன்' என டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்துள்ளது  அவரின் அடுத்த  அரசியல் வியூகத்தை எட்டி பார்க்கச் செய்துள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் தேசிய முன்னணிக்கு ஆதரவாகவே இருப்பேன் என கேவியஸ் கூறியுள்ள போதிலும், அவர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைவாரா? ஆதரவாக களமிறங்குவாரா?, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவாரா? போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

எது எவ்வாறாக இருப்பினும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான மோதலை மட்டுமல்லாது எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் நிறைந்ததாகவும் அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

தொகுதி சீரமைப்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை கைவிட்ட மஇகா- சிவநேசன் சாடல்


ரா.தங்கமணி

ஈப்போ-
2008ஆம் ஆண்டில்  தோல்வி கண்டவுடன் தனது சேவை மையத்தை மூடி விட்டு சென்ற மஇகா இப்போதுதான் தனது சேவை மையத்தை தொடங்கியுள்ளது என  சுங்காய் சட்டமன்றத் தொகுதி ஜசெக வேட்பாளர் அ.சிவநேசன் சாடினார்.

1974இல் இருந்து 2008ஆம் ஆண்டு வரை இங்கு போட்டியிட்ட மஇகா  2008இல் தோல்வி கண்ட பின்னர் மக்களுக்கான சேவையை தொடராமல் சேவை மையத்தை இழுத்து மூடிவிட்டு சென்றனர்.

2004ஆம் ஆண்டு சுங்காய் தொகுதியில் போட்டியிட்டபோது தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய டத்தோ கணேசனிடம்  1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டேன். ஆனால் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் தேமு வேட்பாளர் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்றேன்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு தேர்தலில் மசீசவிடம் தொகுதியை பரிமாறி கொண்ட மஇகா, இங்குள்ள இந்தியர்கள் நலனுக்காக போராடாத மஇகா இப்போது மீண்டும் இங்கு போட்டியிட முனைகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பின்போது சீன, இந்திய வாக்காளர்களில் 6,000 பேரை பேராங்,சிலிம் ஆகிய தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்தது இங்குள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இந்த வாக்காளர்கள் இடமாற்றம் செய்வதற்கு மசீசவும் மஇகாவும் எதிர்ப்பு குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.

ஆனால்  இந்த வாக்காளர் மறுசீரமைப்பில் இந்திய வாக்காளர்கள் 21 விழுக்காடாக இருந்தது 12 விழுக்காடாக குறைந்தது. 54 விழுக்காடாக இருந்த சீன வாக்காளர்கள் எண்ணிக்கை  44 விழுக்காடாக சரிவு கண்டது.  மேலும் பெராங் தொகுதியிலிருந்து  4,40 மலாய் வாக்காளர்கள் சுங்காய் தொகுதிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த மறுசீரமைப்பை எதிர்த்து வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்டேன். அதன் விளைவாக 12ஆக சரிந்த இந்திய வாக்காளர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. அதேபோன்று 28 விழுக்காடாக இருந்த மலாய்க்காரர்கள் 12 விழுக்காடாக குறைந்துள்ளனர். 3 விழுக்காடாக இருந்த பூர்வக்குடியினர் 5.5 விழுக்காடாக உயர்வு கண்டனர். 54விழுக்காடாக இருந்த சீன சமூகத்தினர் தற்போது 63 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளனர்.

இந்த எல்லை மறுசீரமைப்பை எதிர்த்து நான் மட்டும் போராடவில்லையென்றால் சுங்காயிலுள்ள 8 மஇகா கிளைகள் சிலிம் பகுதியில் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும்.

இந்த 8 கிளைகளை காப்பற்ற முடியாத  மஇகாவா இத்தொகுதி மக்களை காப்பற்ற போகிறது. ஆகவே வரும் பொதுத் தேர்தலில் சுங்காய் வட்டார மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும் என்றார் சிவநேசன்.

சுங்கை சிப்புட்டில் கேசவன் - ஊத்தான் மெலிந்தாங்கில் மணிவண்ணன் ; பேரா பிகேஆர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பேரா மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை பிகேஆர் கட்சி இன்று அறிவித்தது.
5 நாடாளுமன்றத் தொகுதிகள், 14 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பேரா மாநில பிகேஆர் கட்சி தலைவர் டாக்டர் முகமட் நோர் அறிவித்தார்.

இதில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்.கேசவன், ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் ஜி.மணிவண்ணன், உலு கிந்தா சட்டமன்றத் தொகுதியில் முகமட் அராஃபாத் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பேரா பிகேஆர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதன் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது 'சுங்கை சிப்புட் இந்திய சமுதாய சமூக மேம்பாட்டு சங்கம்'


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள இந்திய மக்களுக்கு சமூகநல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 'சுங்கை சிப்புட் இந்திய சமுதாய சமூக மேம்பாட்டு சங்கம்' அண்மையில் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.

இங்குள்ள மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி புரிவதற்கு ஏதுவாக இந்த சங்கம் தொடங்கப்பட்டதாக கூறிய அதன் தலைவர் விஜயன், இதன் வழி மக்களுக்கு சமூக நலச் சேவைகளும் ஆக்ககரமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக சொன்னார்.

இச்சங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் டத்தோ சூல்கிப்ளி, அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் தங்களது  சேவைகளை மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் அந்த சமுதாயத்தின் வளர்ச்சி  ஆக்ககரமாக அமையும் என கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, ஜாலோங் தொகுதி தேமு வேட்பாளர் டத்தோ டான் லியான் ஹோ  இச்சங்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.  இந்நிகழ்வில்  சங்கத்தின் துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் லோகன் உட்பட இயக்கத்தினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை கைப்பற்றுவோம்- டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
பேரா மாநிலத்தில் டான்ஶ்ரீ கோ.இராஜுவுக்கு பின்னர் ஆட்சிக்குழு உறுப்பினராக யாரும் பதவி வகிக்காத அவலம் இந்த தேர்தலில் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. புந்தோங், சுங்காய், ஜெலாப்பாங் ஆகிய மூன்று தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதிகமான இந்திய வாக்காளர் உள்ள புந்தோங் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தல் முதல் மஇகா போட்டியிட்டு வருகிறது. இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகாவுக்கு இந்தியர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் புந்தோங் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள திருமதி தங்கராணியை இங்குள்ள வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

2008ஆம் ஆண்டோடு கைநழுவி போன ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியால் மீண்டும் மஇகாவுக்கு கிடைக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்று பதவி அதிகாரத்துடன் ஆளும் அரசாங்கத்தில் இடம்பெற்றால்தான் நமது சமுதாயத்திற்கான ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஈப்போ பாராட் மஇகா அலுவலகத்தில் மக்களை சந்தித்தபோது டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் புந்தோங் தேமு வேட்பாளர் திருமதி தங்கராணி, ஈப்போ பாராட் மஇகா தலைவர் டான்ஶ்ரீ கோ.இராஜு உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

'கை' சின்னத்தில் டாக்டர் ஜெயகுமார் போட்டி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பானை எதிர்த்தி பிஎஸ்எம் கட்சி சொந்த சின்னத்தில் களமிறங்கவுள்ளது.

கடந்த 2008, 2013 ஆகிய இரு பொதுத் தேர்தல்களில் கெ அடிலான் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுமார், இம்முறை கட்சியின் சொந்த சின்னமான 'கை' சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் பிஎஸ்எம் கட்சி இணைத்துக் கொள்ளப்படாததால் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருமுறை பதவி வகித்த டாக்டர் ஜெயகுமார் இம்முறை பிகேஆர் சின்னத்தின் போட்டியிடுவதற்கு பக்காத்தான் கூட்டணி 'பச்சை கொடி' காட்டவில்லை என அறியப்படுகிறது.

இத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக எஸ்.கேசவன் ஆகியோர் போட்டியிடும் சூழலில் பிஎஸ்எம் கட்சி சார்பில் டாக்டர் ஜெயகுமாரும் களம் காணவுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

டாக்டர் ஜெயகுமார் பக்காத்தான் கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட்டால் அது தேசிய முன்னணிக்கு 'வெற்றியாக' அமையலாம் என அரசியல் பார்வையாளர்களும் ஆதரவாளர்களும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 26 April 2018

மைபிபிபி விவகாரம்; கேமரன் மலையில் தேமுவின் வெற்றியை பாதிக்காது- டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் (வீடியோ இணைப்பு)


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மைபிபிபி கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல் கேமரன் மலை நாடாளுமன்றத்தில் தேசிய  முன்னணியின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அக்கட்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்தார். ஆனால் அவர் விலகவில்லை; நாங்கள்தான் நீக்கினோம் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரத்தில் எது உண்மை, பொய் என்பது இன்னும் விளங்கவில்லை. அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம் நீடிக்கிறது.

இத்தகைய ஒரு குழப்பமான சூழல் கேமரன் மலையில் தேசிய முன்னணியின் வெற்றியை பாதிக்காது. இவ்விவகாரத்தால் அங்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதால் தேசிய முன்னணி வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என இங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தேமு வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண:


சொந்த சின்னத்தில் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்- டாக்டர் ஜெயகுமாருக்கு இளங்கோ சவால்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளக மக்களுக்கு சேவை செய்தது உண்மையென்றால் இன்று தனது சொந்த கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட டாக்டர் மைக்கல் செயகுமார் தயக்கம் காட்டக்கூடாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து வலியுறுத்தினார்.

மக்களுக்கான சேவையை முன்னெடுப்பதே நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் பிஎஸ்எம் கட்சியினர் வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணையாத போதும் சொந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட  வேண்டும்.

'மக்களுக்காக சேவை செய்பவர்களே நாங்கள்தான்' என பிரச்சாரம் செய்து 2008ஆம் ஆண்டு வீசிய 'அரசியல் சுனாமியில்' சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றி கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் டாக்டர் ஜெயகுமார், இத்தேர்தலில் சொந்த கை சின்னத்தில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்.

இந்த தயக்கம் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதேயே புலப்படுத்துகிறது. தனது சொந்த கட்சி, ஆதரவாளர்களே 'கை' சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தன்னுடைய 10 ஆண்டுகால சேவை என்னவென்பதை டாக்டர் ஜெயகுமார் உணர்வாரா?

தன்னுடைய 'மக்கள் சேவை'க்கு மக்களிடம்  ஆதரவு உள்ளது என டாக்டர் ஜெயகுமார் கூறுவது உண்மையானால் சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்டு உங்களது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்? என டாக்டர் ஜெயகுமாருக்கு இளங்கோ சவால் விடுத்தார்.

மைபிபிபி கட்சியின் இடைக்காலத் தலைவரானார் டத்தோஶ்ரீ மெக்லின்


பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவராக டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் செயல்படுவார் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி அறிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில் கட்சியின் முதன்மை உதவித் தலைவராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

டான்ஶ்ரீ கேவியஸ் விலகவில்லை; நீக்கப்பட்டார்- மைபிபிபி



பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விலகவில்லை. மாறாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என அக்கட்சியின்  தலைமைச் செயலாளர்  டத்தோ மோகன் கந்தசாமி கூறினார்.

கேவியஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் என்ற கடிதத்தை  இன்றுதான் மைபிபிபி கட்சி பெற்றது. ஆனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என 24ஆம் தேதி தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சோரிடம் வழங்கப்பட்டது.

தேசிய முன்னணிக்கும் மைபிபிபிக்கும் இடையிலான நல்லுறவை சிதைக்கும் வகையில் டான்ஶ்ரீ கேவியஸ் செயல்பட்டதாலும் அறிக்கைகள் விடுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கட்சியின் சட்டவிதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் கேவியசை கட்சியிலிருந்து நீக்குவதாக அவர் சொன்னார்.

இதற்கு முன், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர், கூட்டரசுப் பிரதேச மைபிபிபி தலைவர், பேராக் மாநில மைபிபிபி ஆலோசகர் ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக டான்ஶ்ரீ கேவியஸ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் வழி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்முனைப் போட்டியா? போட்டியிலிருந்து விலக ஆலோசிக்கிறேன் - டாக்டர் ஜெயகுமார்



சுங்கை சிப்புட்-
மும்முனைப் போட்டியின் வழி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு  எளிதில் வெற்றி கொள்வதை தவிர்ப்பதற்காக அங்கு பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள ஆலோசித்து வருவதாக டாக்ட்ர மைக்கல் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பானும் பிஎஸ்எம் கட்சியும் போட்டியிடுவது தேமுவுக்கு வெற்றி வாய்ப்பாக அமைவதை நாங்கள்  விரும்பவில்லை.

இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் பிகேஆர் சின்னத்தின் கீழ் மட்டுமே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ள நிலையில் பிஎஸ்எம் கட்சி இன்னும் அக்கூட்டணியில் இணையாததால் சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவெடுத்தது.

ஆயினும், இத்தேர்தலில் தனித்து நின்று வாக்குகளை பிரித்து அதன் மூலம் தேமு எளிதில் வெற்றி பெற வழிவகுக்க வேண்டுமா? என கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான்- பிஎஸ்எம் ஆகியவற்றுக்கிடையிலான போராட்டத்தில் தேசிய முன்னணி எளிதில் வெற்றி பெறுவதை கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. மேலும், சுங்கை சிப்புட்டை எதிர்க்கட்சி கைப்பற்ற வழிவகுத்த நாமே அதை தேசிய முன்னணியிடம் இழக்க காரணமாகக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதலால், இந்த தேர்தலில் மும்முனை போட்டியை ஏற்படுத்தாமல் விலகி நிற்பதற்கு ஆலோசித்து வருவதாக டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

மைபிபிபி கட்சி தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் டான்ஶ்ரீ கேவியஸ்



கோலாலம்பூர்-
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக  டான்ஶ்ரீ எம்.கேவியஸ் முகநூல், டுவிட்டர் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 23ஆம் தேதியிலிருந்து மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர், கூட்டரசுப் பிரதேச மைபிபிபி மாநிலத் தலைவர், பேரா மாநில மைபிபிபி ஆலோசகர் போன்ற பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு டான்ஶ்ரீ கேவியஸ் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்காமல் அங்கு மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தேமு வேட்பாளராக களமிறக்கப்பட்டதால் மைபிபிபி- தேமு இடையே சலசலப்பு மூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 25 April 2018

குறைகள் வேண்டாம்; பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - டத்தோஶ்ரீ தேவமணி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்து போன குறைகளை பற்றி பேசி கொண்டிருக்க வேண்டாம். இனி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவோம் என சுங்கை சிப்புட் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி குறிப்பிட்டார்.

கடந்த காலங்களின் நிகழ்ந்த தவறுகளை பற்றி இனி பேச வேண்டாம். அந்த தவற்றை மறந்து இனி அடுத்து வரும் காலங்களின் நமது எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்வதற்கான  நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வோம்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கும் தனக்கு இங்குள்ள மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என குறிபிட்ட டத்தோஶ்ரீ தேவமணி, கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் நடந்த சம்பவங்களை இனி பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறைகளை பேசி கொண்டு நேரத்தை வீணடிப்பதை விட, இந்த தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்து இனி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மக்கள் முற்பட வேண்டும் என டத்தோஶ்ரீ தேவமணி கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளிக்கூடப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் - தங்கராஜ் - (வீடியோ இணைப்பு)


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லையே' என்ற ஜெலாப்பாங் வட்டார மக்களின் ஆதங்கம்  நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதி தேமு வேட்பாளர் தங்கராஜ் கூறினார்.

அங்கு தமிழ்ப்பள்ளி இல்லையே என்கிற ஆதங்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற சூழலில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முதல் நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் சந்தை பகுதி, சீனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என பேரா தேசிய முன்னணி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்கராஜ்  இவ்வாறு கூறினார்.

வீடியோ இணைப்பு:




GE 14: பேரா தேமு வேட்பாளர்கள் அறிவிப்பு


ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்
ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு 24 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை பேரா மாநில தேசிய முன்னணி அறிவித்தது.

இன்று காலை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மஇகா வேட்பாளர்கள்

இத்தேர்தலில் மஇகா சார்பில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு டத்தோ எம்.சரவணன், சுங்காய் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, புந்தோங் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதிக்கு பேரா மஇகா செயலாளர் தங்கராஜு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


இரு தொகுதிகளில் டத்தோஶ்ரீ ஸம்ரி

பேராக் மந்திரி டத்தோஶ்ரீ ஸம்ரி இம்முறை இரு தொகுதிகளில் களமிறங்கவுள்ளார். லுமூட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பங்கோர் சட்டமன்றத் தொகுதியிலும் டத்தோஶ்ரீ ஸம்ரி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

மீண்டும் டத்தோஶ்ரீ உஸ்னி

தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில்  டத்தோஶ்ரீ உஸ்னியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது நிதியமைச்சராக பதவி வகித்த டத்தோஶ்ரீ உஸ்னி அனாட்ஸ்லா, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2016இல் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தின்போது நிதியமைச்சராக நியமிக்கப்படாததை அடுத்து அம்னோ பொருளாளர், பேராக் அம்னோ பொருளாளர், தம்பூன்  தொகுதி அம்னோ தலைவர் போன்ற பதவிகளை ராஜினாமா செய்தார்.

அனைத்து பதவிகளையும் துறந்துள்ள நிலையில் டத்தோஶ்ரீ உஸ்னி மீண்டும் தம்பூன் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவாரா? என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் மீண்டும் தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அம்னோவுக்கு கைமாறிய ஊத்தான் மெலிந்தாங்

கடந்த காலங்களில் மஇகா போட்டியிட்டு இத்தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என 'நம்பிக்கை' முகம் காட்டிய ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி இம்முறை அம்னோவுக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில் டத்தோ கைருடின் தர்மிஸி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மந்திரி பெசாரிடமிருந்து உறுதி கடிதம் பெற்றுக் கொண்ட துணைப் பிரதமர்
பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதி  வேட்பாளராக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான உறுதிக் கடிதத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் எடுத்து வழங்கினார்.