Wednesday 21 February 2018

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 36 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்


ஈப்போ-
கொலை குற்றம் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் குண்டர் கும்பலைச் சேர்ந்த 36 பேர்  இன்று ஈப்போ மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு 'டத்தின்ஶ்ரீ' பட்டம் கொண்ட  ஒரு பெண் வர்த்தகரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

20 முதல் 60 வயது மதிக்கத்தக்க இந்த 36 பேரில் 26 பேர் பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாகவும் எஞ்சிய 10 பேர் கெடா, பொக்கோக் செனா, மலாக்கா, சுங்கை ஊடாங், பத்துகாஜா, தைப்பிங் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டனர் என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்னா ஹசான் தெரிவித்தார்.

இந்த 36 பேரில் ஒருவர் 'டத்தோ' அந்தஸ்து கொண்டவர் என கூறிய அவர், ஜனவரி 27 முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 2012 சட்டம் பாதுகாப்பு குற்றப் பிரிவு (சிறப்பு நடவடிக்கை) செக்‌ஷன் 4(5)இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.

குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இவர்கள் மீது குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 130v குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றார் அவர்.

இதனிடையே, இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களும் குடும்ப உறுப்பினர்களும் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment