Thursday 31 August 2017

ஈப்போவில் களைகட்டியது 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி
ஈப்போ-
நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் தலைநகரில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் பேராக் மாநிலத்தின் ஈப்போ மாநகரில் தேசிய தினக் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநில சுல்தான் நஸ்ரின் முஸுடின் ஷா, ராஜா பெர்மாய்சூரி பேராக் துவாங்கு ஸாரா சலீம் ஆகியோர் முன்னிலையில் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் கொண்டாட்டப்பட்டது. மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி ஆகியோர் இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
இங்குள்ள நகர மண்டபத்தின் முன்பு பல்வேறு பள்ளிகள், அரசு துறைகள், பாதுகாப்புப் படையினர் உட்பட பல்வேறு தரப்பினரின் அணிவகுப்புகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த சுதந்திர தின விழாவை கண்டு களித்தனர்.

சுதந்திர தின அணிவகுப்புக்கு பின்னர் சுதந்திர தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு சான்றிதழும் வெகுமதியும் சுல்தான் நஸ்ரின் ஷா வழங்கினார்.
அவ்வகையில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பான அலங்கரிப்பை மேற்கொண்ட சுங்கை சிப்புட், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மூன்றாவது பரிசை வென்றது. நற்சான்றிதழையும் வெகுமதியையும் பள்ளிஆசிரியர்கள் சுல்தானிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ராஜா மூடா,  ராஜா ஹீலிர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


கோலாகலமாக நடந்தேறியது 60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர்-
'என் நாடு ஒரே உள்ளம் ஒரே உணர்வு' எனும்  கருப்பொருளோடு டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர  தினக் கொண்டாட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு களித்தனர்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் வி முன்னிலையில்  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி உட்பட அமைச்சர்களின் பங்கேற்ற சுதந்திர தின  விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக 1957ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தபோது முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றிய அரச மலேசிய கடற்படையின் முன்னாள் படையினர் லெப்டனன்ட் கமாண்டர்  முகமட் ஷாரீஃப் கலாம், கமாண்டர் ஓலிவர் கல்வெட்ர சாமுவேல் ஆகியோர் தேசியக் கொடிகள்  ஏந்தி வர தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
நாட்டின் முக்கிய துறைகள், அடையாள அணிவகுப்புகள் மக்களின் வெகுவாக கவர்ந்திழுத்தன. நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த தேசிய அணிவகுப்பில் மாணவர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், 2017 சீ போட்டி விளையாட்டாளர்கள், பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

1957ஆம் ஆண்டு நாடு சுதந்திமடைந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

நாட்டின் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் வீ.தி.சம்பந்தன், துன் ஜுங்கா அனாக் பெரிங், துன் டத்து முஸ்தாபா டத்து ஹரூண் ஆகிய தலைவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டும் தலையில்  மெர்டேக்கா வாசகங்கள் அடங்கிய மஞ்சள் வண்ண துணியை அணிந்து கொண்டு தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

Wednesday 30 August 2017

சோமெல் மாஜு பாலர் பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சோமெல் மாஜு பாலர் பள்ளி மாணவர்களிடன் தேசிய தினக் கொண்ட்டாட்டம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இங்கு தாமான் முஹிபா ஜெயாவில்  பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பாலர் பள்ளியில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் ம இகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் கலந்து கொண்டார்.
நாட்டுக்கு சிறந்த குடிமக்களை உருவாக்குகின்ற மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடமே உண்டு.  மாணவர்களிடையே தேசப்பற்றை விதைப்பது ஆசிரியர்களின் கடமையாகும் என அவர் சொன்னார்.
பாலர் பள்ளி உரிமையாளர் கணேசன், பள்ளி வரலாற்றையும் மாணவர்களுக்கான போதனா முறையையும்  விவரித்தார்.
இந்நிகழ்வில் பாலர் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேசியக் கொடிகள் டத்தோ சக்திவேல் எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா  தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பள்ளிகளில் தேசியக் கொடிகள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்வு அண்மையில் இங்கு நடைபெற்றது.

சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள  டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி, மகாத்மா காந்தி கலாசாலை ஆகிய இரு தமிழ்ப்பள்ளிகளுக்கு மஇகாவின் கெளரவச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் நேரடி வருகை புரிந்து தேசியக் கொடிகளை வழங்கினார்.
இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அதற்கேற்ப அவர்களிடையே தேசப்பற்றை விதைக்க வேண்டிய அவசியமானதாகும். அதனடிப்படையிலேயே தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக டத்தோ சக்திவேல் குறிப்பிட்டார்.

தேசிய தினக் கொண்டாட்டம் ஆடம்பரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடப்படாமல் இதுபோன்ற எளிய நடவடிக்கைகளின் மூலமாகவும் தேசப் பற்றை விதைக்க முடியும் என்றார் அவர்.

இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசியக் கொடிகளை வழங்கும் நிகழ்வு எங்கோர் தமிழ்ப்பள்ளி, சாலாக் தமிழ்ப்பள்ளி, சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி, எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, பேராக் மாநில அரசாங்கத்தின் சார்பில் மாநில மந்திரி பெசாரின்  ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ வழங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், தலைமையசிரியர்கள் வீரமுத்து, திருமதி சாந்தகுமாரி, கவுன்சிலர் லெட்சுமணன் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

Tuesday 29 August 2017

பாஸ் உடன் பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைக்காது

கோலாலம்பூர்-

பாஸ் கட்சியுடனான உறவை பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்பு நல்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில்  மும்முனை போட்டி நிலவலாம் என கருதப்படுகிறது.

4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி, பாஸ் ஆகியவற்றுடன் பக்காத்தான் ஹராப்பான் மோதவுள்ளதால் மும்முனை போட்டி நிலவுக்கூடும் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துரைத்த பக்காத்தான் ஹராப்பானின் அவைத் தலைவர் துன் மகாதீர் முகமது, மாநிலத் தலைவர்களை நியமனம் செய்வதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்' என கூறினார்.

இந்தியர்களின் உரிமைக்குரல் மஇகா மட்டுமே

ரா.தங்கமணி

கோலகங்சார்-
மஇகா மட்டுமே இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் உரிமைக்குரலாக விளங்க முடியும். ஆதலால் இந்தியர்கள் மஇகாவை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என ஈப்போ பாராட், செத்தியா பேராக் மஇகா கிளைத் தலைவர் டாக்டர் வ.ஜெயபாலன் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினரால் இந்திய சமுதாயத்திற்கு எத்தகைய சேவையையும் வழங்க முடியாது. ஏனெனில் அவர்கள் பிறர் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டிருப்பதால் அவர்களால் எதையும் செய்ய முடியாது.

நானும் கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்தவன்தான். ஆனால் அங்கிருந்து  இந்தியர்களுக்கு சேவையாற்ற முடியவில்லை. அதனால்தான் கடந்த ஜனவரி மாதம் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர்  எஸ்.சுப்பிரமணியம் முன்னிலையில் மஇகாவில் இணைந்தேன்.

எதிர்க்கட்சியில் இந்தியர்கள் இருந்தாலும் அவர்களால் இந்தியர்களுக்கு ஆக்ககரமான சேவைகளை வழங்க முடியாது. அவர்களும் நல்லவர்கள்தான். ஆயினும் அவர்களால் இந்திய சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியாது.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் பல்வேறு கட்சிகளில் பரிணமித்திருக்கலாம்.
ஆனால் அனைத்து இந்தியர்களின் உரிமைக்குரலாக மஇகா மட்டுமே எதிரொலிக்கும் என  அண்மையில் இங்கு கோலகங்சார் இந்தியர் சங்க கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றுகையில் டாக்டர் ஜெயபாலன் இவ்வாறு கூறினார்.

கோலகங்சார் இந்தியர் சங்க புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கோலகங்சார்-
கோலகங்சார் இந்தியர் சங்கத்தின் புதிய மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 80 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோலகங்சார் இந்தியர் சங்கம் சொந்த மண்டபத்தைக் கொண்டு சிறப்பாக இயங்கி வந்தததோடு மக்களுக்கான சேவையும் முன்னெடுத்தது.

அண்மையில்  இந்து நடைபெற்ற பூஜைக்கு பிறகு  இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட டத்தோ மு.பூபாலன் முதல் கல்லை எடுத்து வைத்தார்.

இந்த மண்டபம் பழுதடைந்த காரணத்தால் புதிய மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பஞ்சாட்சரம் பொன்னுசாமி தெரிவித்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற இத்தொகுதி இடைத் தேர்தலில் புதிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக் 11 லட்சம் வெள்ளி மானியத்தை ஒதுக்கீடு செய்தார்.
அதற்கேற்ப பழைய மண்டபம் இருந்த இடத்தில் புதிய மண்டபத்தை கட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் இதன் நிர்மாணிப்புப் பணி பூர்த்தியாகும் என  அவர் சொன்னார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோலகங்சார் தொகுதி மஇகா தலைவர் செல்வராஜா, பழனியப்பன், நாராயணன், விகே தம்பி, டாக்டர் வ.ஜெயபாலன், டத்தின் டாக்டர் உமா,  கட்டடக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.சந்திரன், பொறியியல் ஆலோசகர் செல்வநேசன், குத்தகையாளர் வோங், கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரி இராமச்சந்திரன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் உட்பட சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'சிதம்பர'த்தில் ஒன்றாக வந்தோம்; இன்று சிதறி கிடக்கின்றோம்

- ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
காடாக கிடந்த மலையக நாட்டை திருத்தி செல்வம் கொழிக்கும் நாடாக உருமாற்றிய பெருமை இந்தியர்களையும் சேரும். இந்நாட்டை திருத்துவதற்காக 'சிதம்பரம்' கப்பலில் வந்த நாம் (இந்தியர்கள்) இன்று பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றோம் என்பது வேதனையான ஒன்றாகும் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழா இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர நாளில் ஒற்றுமையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம் சிதறி கிடக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகளாகவும், பொது இயக்கங்களாகவும் சிதறி கிடக்கின்ற நாம், நமது வரலாற்றை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் கிடந்த மலையக நாட்டை  வளம் கொழிக்கும் நாடாக உருமாற்ற வேண்டி அன்று 'சிதம்பரம்' கப்பலில் நமது முன்னோர்கள் ஒன்றாக  வந்திறங்கினர்.

அன்று உழைப்பதற்காக வரும்போது யாரிடமும் எவ்வித பிரிவினைவாதமும் இல்லை. ஒன்றாக இருந்து காடாக கிடந்த நாட்டை திருத்தினர். ஒற்றுமையாக இருந்ததன் விளைவாக ஒரு 'காடு' நாடாக உருவெடுத்தது.

இந்த நாட்டை உருவாக்குவதில் நமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்தின் விளைவுதான் இன்று நாம் அனுபவிக்கும் குடியுரிமையும் சலுகைகளும். ஆனால் அந்த முன்னோர்கள் கட்டிக் காத்த ஒற்றுமையை மறந்து இன்று ஆளுக்கொரு திசையாக பயணித்துக் கொ ண்டிருக்கிறோம் என இங்கு நடைபெற்ற 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றுகையில் மணிமாறன் தெரிவித்தார்.
நமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அரசியல் பலம் மிக முக்கியமானதாகும். ஆனால் அரசியல் ரீதியில் பல்வேறு கூறுகளாக பிரிந்து சிதறி போயுள்ளோம். அதே போன்று பொது இயக்கங்களின் வாயிலாகவும் நம்மிடையேயான பிரிவினை வெளிச்சம் போட்டு  காட்டியுள்ளது.

சிதறி கிடக்கின்ற நாம் மீண்டும் ஒற்றுமையை வலுபடுத்தும் வகையில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில் அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய நல்லவற்றை இப்போதே விதைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சுங்கை குருடா இளைஞர் இயக்கம், சுங்கை சிப்புட் இளைஞர் மன்றம், மலேசிய தமிழ் மணிமன்றத்தின் சுங்கை சிப்புட் கிளை, சுங்கை சிப்புட் மஇகா கிளைகள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, அமுசு.பெ.விவேகானந்தன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் போலீஸ் துறையில் ஓசிபிடியாக பணியாற்றிய டத்தோ தம்பி பிள்ளை, அமரர் அமுசு.பெரியசாமி பிள்ளை உட்பட பல்வேறு தரப்பினருக்கு 'சுதந்திர திலகம்' (Tokoh Merdeka) விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் வட்டார துணை ஓசிபிடி அ.பரமேஸ்வரன், டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி ராமசந்திரன், சுங்கை சிப்புட் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி விஜயகுமாரி உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பிஐசிசியின் புதிய தலைவரானார் சுல்தான் அப்துல் காடீர்

- ரா.தங்கமணி
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபையின் (பிஐசிசி) புதிய தலைவர் சுல்தான் அப்துல் காதீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இச்சபையின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்ற நேற்று நடைபெற்ற வேளையில் 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரைக்குமான புதிய நிர்வாகத்திற்கான தேர்தல் சபையின் பணிமனையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், உதவி செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதவித் தலைவர், கெளரவச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே போட்டி நிலவியது.
தலைவராக சுல்தான் காடீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ரவிச்சந்திரன், உதவிச் செயலாளராக கணேசன், பொருளாளராக சாம்பசிவம், செயலவை உறுப்பினர்களாக பல்ஜிட் சிங், டாக்டர் ராஜாகிருஷ்ணன், லீலாவதி, பாலசந்திரன், வினிஜா, மணிமாறன், முனியம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உதவித் தலைவர் பதவிக்கு ஜோன் திவ்யநேசன், திருமதி சுகந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 24 வாக்குகளை பெற்ற  ஜோன் திவ்யநேசன் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமதி சுகந்திக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கெளரவச் செயலாளர் பதவிக்கு அசோகனும் ஜேக் விக்டரும் போட்டியிட்டனர். இதில் 25 வாக்குகள் பெற்ற அசோகன் கெளரவச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜேக் விக்டருக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட வழக்கறிஞர் மதியழகன் தெரிவித்தார்.

மேலும், கணக்காய்வாளர்களாக சூல்கிப்ளி, யோகேஸ்வரன் ஆகியோரும் அறங்காலவர்களாக அமுசு ஏகாம்பரம், உதயசூரியன், சந்திரன் ஆகியோரை தலைவர் சுல்தான் காடீர் அறிவித்தார்.
இதனிடையே, கடந்த நான்கு ஆண்டுகளாக இச்சபையில் தலைவராக செயல்பட்ட மு.கேசவன், புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு இன்னும் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இங்குள்ள வணிகர்களின்  மேம்பாட்டுக்கு வித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த 4 ஆண்டுகளில் கேசவன்  மேற்கொண்ட சேவைகளை பாராட்டும் வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் அவருக்கு சிறப்பு செய்ததோடு நினைவுப் பரிசும் வழங்கினார்.

Monday 28 August 2017

‘ராகாவின் ஸ்டார்’வெற்றி மகுடத்தை வென்றார் திவேஸ்


ராகாவின் ஸ்டார்இறுதிச் சுற்றில் திவேஸ் தியாகராஜா முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார்.

இந்த இறுதிச் சுற்றில் அருள்வேந்தன் மனோகரன், நிமலன் கிருஷ்ணன், சபேஷ் மன்மதன், அணு ரஞ்சினி அன்பழகன் மற்றும் திவேஸ் தியாகராஜா ஆகியோர் களமிறங்கினார்கள்.

இந்த 5 போட்டியாளர்களும், 5 மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து 5 நாட்களில் ஒரு பாடலை உருவாக்கும் பணி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜெய், லாரன்ஸ் சூசை, டி.ஜே. கன், சுந்தரா மற்றும் ஜித்திஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டியாளருடன் இணைந்து பணியாற்றினார்கள்.

இசையமைப்பாளர்களின் இசையில் உருவாக்கப்பட்ட அந்த பாடலைப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பாடினார்கள். 


சவால்மிக்க இப்போட்டியின் இறுதியில் திவேஸ் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் நிலை வெற்றியாளரான சபேஷ் ரிம 2,000 ரொக்கமும் மூன்றாம் நிலை வெற்றியாளரான நிமலன் ரிம 1,000 ரொக்கத்தையும் தட்டிச் சென்றார்கள்.

அதை வேளையில், இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறும் முதல் 5  போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி  ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டி.எச்.ஆர் ராகா கலை நிகழ்ச்சியில் பாடவுள்ளார்கள்.




இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக நம் நாட்டின் புகழ்பெற்ற பாடகர்கள் பிரீதா பிரசாத், சித்தார்த்தன் மற்றும் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா பணியாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ராம், ரேவதி, கவிமாறன், சுரேஷ், அகிலா, ஷாலு, ஜெய் மற்றும் யாசினி மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். 

மேலும், இப்போட்டியின் இறுதிச் சுற்று டி.எச்.ஆர். ராகா வானொலியின் முகநூல் வாயிலாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 25 August 2017

'அணைந்தது ஒரு சுடரொளி' நன்நெஞ்சங்களின் அனுதாபம்



-புனிதா சுகுமாறன்

'பிறப்பால் நான் தமிழன், மதத்தால் நான் முஸ்லீம்' என்ற இலக்கண கோட்பாட்டோடு வாழ்ந்து மறைந்தவர் 'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீம். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

அன்னாரின் மறைவு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். அவரின் மறைவு தமிழுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடம் ஆகும் என பலர் தங்களது அனுதாபத்தை தெரிவித்தனர்.
கி.மணிமாறன், சுங்கை சிப்புட்.

'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீமின் மரணத்தால் தமிழுக்கு ஒரு  வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மொழி, இனம் ஆகியவற்றுக்கு சேவையாற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.  தமிழ்மொழி வாழும் காலம்வரை அன்னாரின் புகழும் என்றும் நிலைத்திருக்கும்.

சுஷ்மிதா முருகன்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

ஜெயசீலன் ராஜு

சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்களின் ஆத்ம சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிராத்திப்போம். அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கார்த்திக் சந்திரன், சுங்கை சிப்புட்.

மண்டியிடாத தன்மான தமிழன்....
மண்ணின் மைந்தனாய் மாறினார்....
மதத்தால் நான் இஸ்லாமியர்....
பிறப்பால் நான் தமிழன் என்றார்....
சொன்ன சொல்லிற்கு உயிரூட்டினாய்....
தாய் தமிழைத் தாலாட்டினாய்....
தமிழ்ப்பள்ளியின் உண்மையான காவலன்....
தமிழினத்தின் நிகரில்லா தலைமகன்....
ஆழ்ந்த நித்திரை கொண்டார்....
காலன் உன்னை காவு வாங்கினான்....
எங்களை போன்று அவனும் உன் ரசிகன்....
இன்று நீர் புதைக்கப்படுகிறாய்....
என்றும் தமிழினத்தின் விதையாய்....
எங்கள் நினைவில் நிலைத்திருப்பாய்....
கண்கள் குளமானது குரல் தளர்ந்தது....
இனி என்றும் உன் நினைவே எங்களுக்கு....

டாக்டர் புனிதன்

டத்தோ ஹாஜி தஸ்லிம்!
நமது முகவரி!
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமயத்தின் வலிமை
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள்ளே தாங்கும்,
டத்தோ ஹாஜி தஸ்லீம் குணம்!
யாரிடம் கிடைக்கும்?

டத்தோ ஹாஜி தஸ்லீம் மரணம்,
சொல்லமுடியாத ,இழப்பு!
இந்த இழப்புக்கு,பதில் ஏதுமில்லை,
சொல்வதற்கு வார்த்தைகளில்லை!

மறைந்தது உடல் தான்.
டத்தோ ஹாஜி தஸ்லீம் எண்ணமெல்லாம்,
நம்முடன் தான் !

தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நாம் அர்த்தமாக்குவோம்!
எங்களது  ஆழ்ந்த அனுதாபங்கள்!

முரளி கண்ணன்

'சமுதாயச் சுடர்' ஹாஜி தஸ்லீம் மறைந்தார், மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த ஒரு ஜாம்பவனாக அவர் திகழ்ந்தார். தனது கொள்கையில் ஒரு தீவிர போராட்டவாதியாக விளங்கினார்.'இண்டர்லோக்' நாவல் போராட்டத்தில் அவர் முன்னெடுத்த போராட்டங்கள் என்றும் மறக்க முடியாததாகும். ஒரு மிகச் சிறந்த ஆன்மாவை நம் சமூகம் இழந்து தவிக்கிறது.

சுங்கை சிப்புட்டில் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி
நாட்டின் 60ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மெர்டேக்கா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுங்கை குருடா இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் மாவட்ட இளைஞர் மன்றம், சுங்கை சிப்புட் மஇகா கிளைகள், சுங்கை சிப்புட் தமிழ் மணிமன்றம் ஆகியவற்றின் இணை ஆதரவில் நாளை 26ஆம் தேதி சனிக்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணிமுதல் 1.00 மணி வரை சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் மருத்துவப் பரிசோதனை, ரத்ததான முகாம், பல் பரிசோதனை, மார்பக பரிசோதனை,  பள்ளி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, மரக்கன்றுகள் நடவு செய்தல், வாக்காளர் பதிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்வை இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார் என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

அதோடு இரவு 7.00 மணிக்கு மேல் இங்குள்ள கோலகங்சார் மாநகர் மன்ற மண்டபத்தில் சுதந்திர தின கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சில முக்கிய பிரமுகர்களுக்கு 'சுதந்திர திலகம்' (Tokoh Merdeka) விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு இந்தியா, தெற்காசிய சிறப்பு கட்டமைப்பு தூதர் டத்தோஶ்ரீ உத்தாமா எஸ்.சாமிவேலு, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, ஜாலோங் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் எனவும் இவ்வட்டார மக்களிடையே சுதந்திர பற்றை மேலோங்கச் செய்ய வேண்டும் எனும் ரீதியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் வட்டார பொது மக்கள்  இந்நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளுமாறு மணிமாறன் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வு குறித்த காணொளி கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியும் பரபரப்பான விற்பனையும்

புனிதா சுகுமாறன்
ஈப்போ-
இந்துக்கள் கொண்டாடும் பெருவிழாக்களில்  விநாயகர் சதுர்த்திக்கும் முக்கிய இடமுண்டு. 'முதற்கடவுள்' என வணங்கப்படுகின்ற விநாயகப் பெருமானுக்கு 'சதுர்த்தி விழா' இன்று 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகப் பெருமான் அவதரித்த நாளையே 'விநாயகர் சதிர்த்தி' என கொண்டாடுகிறோம். விநாயகப் பெருமான் குழந்தைகளின் கடவுள் எனலாம். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே உருவாக காட்சியளிக்கும் விநாயகப் பெருமான்,
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் எளிமையான கடவுள் ஆவார்.
எளிமையான முறையில் வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வழங்குபவர்.
விநாயகர் சதுர்த்தியன்று அருவக்கு விருப்பமான அருகம்புல் மாலை, மோதகம், கொழுகட்டை, கரும்பு, இனிப்பு பலகாரங்கள் என பலவற்றை படையலிட்டு வணங்கி வழிபடுவர்.
இதனை முன்னிறுத்தியே பல கடைகள் தங்களது வியாபாரத்தை துரிதமாக செயல்படுத்துவர். ஈப்போ, லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ள பூக்கடைகளில் அருகம்புல் மாலைகள் இப்போதே ஜொலிக்க தொடங்கிவிட்டன.
அதேபோன்று இந்தியர்கள் அதிகம் வாழ்கின்ற புந்தோங் வட்டாரத்திலும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடியாப்பம் வியாபாரிகளின் கை பக்குவத்தில்  கொழுகட்டை, மோதகம் ஆகியவை பரபரப்பான விற்பனைக்கு தயாராக உள்ளன.