Thursday 29 November 2018

சீபில்ட் ஆலயம்; நிரந்தர தீர்வு காணும் வரை ஆலயம் உடைபடாது- மந்திரி பெசார் உறுதி


ஷா ஆலம்- 
ஆலய நிர்வாகம், மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கி இடையில் அணுக்கமான தீர்வு காணப்படும் வரையில் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைபடாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கையின் தீர்ப்பு இந்நாளில் கூறப்படும் நிலையில் ஆலயம் உடைபடாது. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வு காணும் வரையில்  இவ்வாலயம் உடைபடாது என வாக்குறுதி அளிக்கப்படும் சூழலில் இதற்கு நிரந்தரமான தீர்வு காண அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்
இவ்விவகாரத்தில் மாநில அரசாங்கம் 'நடுவராக' செயல்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்வாலயப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எவ்வித சட்டவிரோத பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்ற நிபந்தனை விதித்த அமிருடின் சாரீ, இவ்வாலய விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துடையாடல் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

சீபில்ட் ஆலய மோதல்; கூலிப்படையை ஏவியது வழக்கறிஞர்கள்- முஹிடின் யாசின்

கோலாலம்பூர்-

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆடவர்களை கூலிக்கு பணம் கொடுத்து ஏவிவிட்டது மேம்பாட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் ஆவர் என்று உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

கடந்த 26ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஆலயத்தில் திரண்டிருந்த இந்தியர்களை ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியது.

நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவான இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் நிறுவனம்  ஆலயத்தில் திரண்ட இந்தியர்களை விரட்டியடித்து ஆலயத்தை கைப்பற்றும் நோக்கில்  சுமார் 150,000 வெள்ளி கொடுத்து கூலிப் படையை ஏவியுள்ளது தெரியவந்துள்ளது.

50 பேருக்கு சுமார் 150 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை பேரம் பேசப்பட்டு இந்த அராஜகச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இவ்வாறு கூறினார்.
இந்தப் பணம் வழக்கறிஞர்களது என்று கருத முடியாது. இப்பணத்தை வழக்கறிஞர்கள் விநியோகம் மட்டுமே செய்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் வழக்கறிஞர் அல்லது மேம்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,இதில் யார் சட்டத்தை மீறியிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முஹிடின் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரரை இந்தியர்கள் தாக்கவில்லை; உதவியுள்ளனர்- வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலய மோதலில் படுங்காயமடந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்புப் படை வீரரை இந்தியர்கள் தாக்கவில்லை; மாறாக அவருக்கு உதவியுள்ளனர் என்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த 26ஆம் தேதி ஆலய வளாகத்தில் நடந்த மோதலையடுத்து, அன்று இரவு மீண்டும் ஏற்பட்ட சச்சரவில் தீயணைப்பு வாகனம் தாக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது, விபத்துக்குள்ளாகி கிடந்த முகமட் அடிப் முகமட் காசிம் என்ற தீயணைப்பு வீரரை  இந்தியர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவரை இந்தியர்கள் தாக்கினர் என பரவலாக பேசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளானதால் அவர் படுங்காயமடைந்தார்.

முகமட் அடிப்பை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இந்தியர்கள் வாகன உதவியை கோரி அவரை தூக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சீபில்ட் ஆலய மோதலை துரிதமாக விசாரிக்க வேண்டும்- மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இந்நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதோடு இது நாட்டின் அமைதியை சீர்குலைத்து விடும்.

இவ்விவகாரத்தில் குண்டர் கும்பலை ஏவி விட்டு இந்தியர்கள் மீது தாக்குத நடத்த மூளையாக செயல்பட்ட தரப்பினர் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவது அவசியமாகும்.

இந்த விவகாரத்தில் போலீசார் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காமல் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் மணிமாறன் இவ்வாறு கூறினார்.

இந்த போலீஸ் புகாரின்போது சுங்கை சிப்புட் மஇகா தலைவர் ராமகவுண்டர், துணைத் தலைவர் சேகரன் உட்பட கிளைத் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

சீபில்ட் ஆலய மோதல்; போலீசாரின் நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்


கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்தியர்கள் மீது குண்டர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ளக்கூடிய விவகாரம் அல்ல. இது நாட்டு மக்களிடையேயான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய விவகாரம் என்பதால் போலீசார் இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

மோதல் நடைபெற்ற அன்று சம்பவ இடத்திற்கு போலீசார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே வந்துள்ளனர் என அறியப்படுகிறது. ஆலயத்திற்கும் சுபாங் ஜெயா காவல் நிலையத்திற்கும் 2 கிலோ மீட்டர் தூரமே சுற்றளவே உள்ள நிலையில் ஏன் துரிதமான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது?

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்த்திருக்க முடியும். ஆனால் ஏன் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது? என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த மோதல் ஏற்படுவதற்கு மேம்பாட்டு நிறுவனமே காரணமாக இருக்கலாம் என சந்தேக்கிக்கப்படும் நிலையில் அது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.

இரு இனங்களுக்கிடையில் மோதல் போக்கை தூண்டி விட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இதில் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால் போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

அதோடு, இவ்வாலய மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் இளைஞர் வீரசிங்கம் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு மருத்துவ உதவிநிதியாக 5,000 வெள்ளியை வழங்கினார்.

Wednesday 28 November 2018

சீபில்ட் ஆலயத்தில் நுழைய முயன்றது கும்பல்- போலீசார் தடுத்து நிறுத்தினர்


சுபாங் ஜெயா-
200 பேர் கொண்ட கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்ட சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

100 பேர் அடங்கிய மலாய்க்கார கும்பல் ஒன்று ஆலயம் அமைந்துள்ள சாலையில் நுழைந்ததால் இந்த பரபரப்பு நிலவியது.

இரவு 11.15 மணியளவில் ஆலய வளாகத்தில் நுழைய முயன்ற அக்கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அமைதியான முறையில் பேரணி நடத்தவே நாங்கள் இங்கு வந்ததாக அக்கும்பல் தெரிவித்தது.

ஆயினும் போலீசார் அக்கும்பல் ஆலய வளாகத்தில் நுழைய மறுப்பு தெரிவித்ததோடு பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தினர்.நிரந்தர தீர்வு காணும் வரையில் ஆலயம் உடைபடாது- அமைச்சர் வேதமூர்த்தி


சுபாங் ஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வரை இவ்வாலயம்  எக்காரணம் கொண்டும் உடைபடாது; இடமாற்றம் செய்யப்படாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

சீபில்ட் ஆலய இடமாற்ற நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று அதிகாலை ஆலயத்திற்குள் நுழைந்த பிற இனத்தவர்கள் அடங்கிய கும்பல் ஒன்றினால் கலவரமாக வெடித்தது.

இந்தியர்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவானது.

மேம்பாட்டாளருக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு பெற்றிருந்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் சட்டத்துறைத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆலய இடமாற்ற விவகாரம்  தொடர்பில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி, ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவிடமும் கலந்துரையாடப்படும்.

இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ள மோதல் சம்பவத்தை கடுமையாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று இன்று ஆலயத்திற்கு வருகை தந்தபோது கூறினார்.

சீபில்ட் ஆலய மோதல்; புல்லுருவிகள் தப்ப முடியாது- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட  மோதலுக்கு காரணமாக புல்லுருவி ஒருபோதும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.

இந்தியர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே நிகழ்ந்த இந்த மோதலில் இனவாதமோ, மதப் பிரச்சினையோ காரணம் கிடையாது. மாறாக இது ஒரு குற்றச்செயல் மட்டுமே.

பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸ் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கும்.

போலீஸ்காரர்களும் பொது உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டதன் பேரில் குற்ற நடவடிக்கையின் அடிப்படையிலே போலீசார் இந்த மோதல் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தானுக்கு கொடுக்க விரும்பவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


கோலாலம்பூர்-
முந்தைய அரசாங்கம் எதிர்கொண்ட ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு கொடுக்க மஇகா விரும்பவில்லை என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் போராட்டம் எவ்வளவு கொடுமையானது என்பது எங்களுக்கு தெரியும். அதே போன்ற மற்றொரு பிரச்சினையை நடப்பு அரசாங்கத்திற்கு கொடுக்க விரும்பவில்லை.

ஆலயங்களில் நிலவும் இனவாதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி கண்டுள்ளார் என்று செனட்டர் வேதமூர்த்தியை குறைகூற விரும்பவில்லை.

நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் தனது ஆண்டு விழாவை கொண்டாடிய வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எத்தகைய வெறுப்பு அரசியலை உண்டாக்கினார்களோ அதேதான் இப்போது கிடைத்துள்ளது.

இச்சம்பவம் ஓர் இனவாத மோதல் கிடையாது என்று கூறிய அவர், கோயில் வளாகத்தில் திரண்டு சூழ்நிலையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று விக்னேஸ்வரன் மேலும் சொன்னார்.

ஆலய உடைப்பு நடவடிக்கைகளை கண்டித்து 2007 நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் பேரணி நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றது மலேசிய அரசியலில் மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டது.

பொறுமை காப்போம்- கணபதிராவ் வலியுறுத்து


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் அமைதிக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதகம் ஏற்படா வண்ணம் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த மோதல் சம்பவம் இந்தியர்களிடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வண்ணம் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன துவேஷக் கருத்துகள் பகிர்வதோ, மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ மக்கள் கைவிட வேண்டும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

என் ஆட்சியில் கூட இதுபோன்று நடந்ததில்லை- நஜிப் வேதனை

கோலாலம்பூர்-
என்னுடைய ஆட்சியில் கூட இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை. இப்போது நிகழ்ந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது என்று சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் குறித்து கருத்துரைத்த  முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியின்போது ஏதேனும் இடமாற்றமோ, மேம்பாட்டு திட்டமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளோ எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு மட்டுமே மேற்கொள்ளப்படும்.

மக்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையே சிறந்த முறையிலான தீர்வையே காணும் நடவடிக்கையே நாங்கள் முன்னெடுத்தோம்.

தற்போது சீபில்டு ஆலயத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் வேதனைக்குரிய ஒன்று என குறிப்பிட்ட அவர், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ள தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் பொறுமை காப்பதோடு, நாட்டின் அமைதியையும் இன நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நஜிப் மேலும் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஆலய மோதலை அரசியலாக அணுக வேண்டாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலை அரசியல் நோக்கத்தோடு அணுக வேண்டாம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசியலையும் தாண்டி இதை ஒரு கடுமையான குற்றச்செயலாக கருதுவதோடு நாட்டில் நிலவும் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்க முயலும் தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீபில்ட் மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்த் குண்டர் கும்பலினால் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இனவாத மோதலாகவும் அரசியல் நடவடிக்கையாகவும் கருத வேண்டாம்.

அரசியல் பகடைக்காயாக இவ்விவகாரத்தை கையாளாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், சீபில்ட் ஆயலத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரண நிதியாக 20 ஆயிரம் வெள்ளியை  டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.

சீபில்ட் ஆலய மோதல்; நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள்


கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலயத்திற்குள் புகுந்த குண்டர் கும்பலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மோதல் நாடு தழுவிய நிலையில் இந்தியர்களிடையே மிகப் பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை ஆலயத்தில் திரண்டிருந்த இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தியர்களிடையே அதிருப்தி அலை மேலோங்கியது.

ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து  அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட குண்டர் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

போலீஸ் புகார் செய்தவர்கள் சமூக ஊடகங்களில் அதை பதிவிட்டு இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீபில்ட் ஆலய எதிரொலி; ஓன் சிட்டி அலுவலகத்தின் மீது தாக்குதல்


ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒரு குண்டர் கும்பல் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

நேற்று அதிகாலை பிற இனத்தவர்கள் அடங்கிய குண்டர் கும்பல் பாரங் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு ஆலயத்தில் இருந்த இந்தியர்களை அடித்து காயப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்தியர்கள் அதிகமாக திரண்டு அந்த குண்டர் கும்பலை விரட்டியடித்தனர்.

இனக் கலவரம் போன்று உருவகப்படுத்திய இந்த சம்பவத்தினால் நேற்று இரவு மீண்டும் அதிகமான இந்தியர்கள் ஆலய வளாகத்தில் திரண்டனர்.
அதிகாலை 1.00 மணியளவில் ஒரு கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டும் தீயணைப்பு வண்டி மீது கற்கள் வீசியும் சேதப்படுத்தியது.

மேலும், அதிகாலை 2.00 மணியளவில் மற்றொரு கும்பல் ஆலயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓன் சிட்டி நிறுவனத்தின் அலுவலக கட்டடத்தை கற்கள் வீசி சேதப்படுத்தியது. இதில் அலுவலகத்தில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

ஆயினும், போலீசார் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

Tuesday 27 November 2018

சீபில்ட் ஆலய கலவரம்; அனைவரும் பொறுமை காக்க வேண்டும்- வேதமூர்த்தி


கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் குறித்து அனைத்துத் தரப்பினரும் பொறுமை  காக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் குறித்து  போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் டஷீட் இப்ராஹிமுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் போலீசாரும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

சீபில்ட் ஆலயத்தில் நுழைந்த கும்பல் ஒன்று இந்தியர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் உணர்ச்சி வசப்படாமல் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தங்களது நடவடிக்கையை துரிதப்படுத்துவர் என கூறிய  அவர், இது தொடர்பில் டான்ஶ்ரீ நோர் டஷீட் இப்ராஹிம்டம் வல்லியுறுத்தி உள்ளதாகவும் அவர் சொன்னார்.

வன்முறையை தூண்டியவர்கள் சட்டத்தின் பிடியில் தப்பக்கூடாது- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலயத்தில் நுழைந்து இந்தியர்களை தாக்கிய தரப்பினர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்வதில் தயக்கம் காட்டக்கூடாது.
அண்மையில் சிறிய கத்தியை வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறி இந்திய இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொல்லும்போது பாரங் கத்திகளையும் ஆயுதங்களையும் கொண்டு  இந்தியர்களை அச்சுறுத்திய தரப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் நாடகம் இன்றி இனங்களுக்கிடையிலான பதற்றத்தை ஏற்படுத்த முயலும் வகையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலே இது. இதற்கு நடப்பு அரசாங்கமும் போலீஸ் படையும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

சீபில்ட் ஆலய மோதல்; 7 பேர் கைது- போலீஸ்


சுபாங் ஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்த இந்த மோதலில் காயமடைந்து செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய ஐவர் கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் 18 வாகனங்களும் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதோடு கற்கள் வீசியெறிந்ததில் போலீசாரின் ரோந்து வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதலால் எந்தவொரு தரப்பினர் சட்டத்தை மீறி செயல்பட வேண்டாம்.

இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை களைவதற்கு கலக தடுப்பு போலீஸ் படையைச் சேர்ந்த 700 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதில் எவ்வித இன மோதல்களும் இல்லை என குறிப்பிட்ட அவர், சில தரப்பினருக்குள் ஏற்பட்ட கைகலப்பு விவகாரமே ஆகும் என்றார்.

குண்டர்களை ஏவி விட்டது யார்?- கணபதிராவ் ஆவேசம்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்துள்ள இரு தரப்புக்கு இடையிலான கைகலப்பில் பிற இனத்தைச் சேர்ந்த குண்டர்களை ஏவி விட்டது யார்? என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

இடமாற்றப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்த இவ்வாலயத்தில் நிர்வாகப் பிரச்சினை நிலவுவது உள்விவகாரமாகும். அது ஒரு ஒரு இனத்துக்குள் நிலவிய பிரச்சினை.

ஆனால் இவ்வாலயத்திகுள் அத்துமீறி நுழைந்த பிற இனத்தவர் நுழைந்து மோதலை உண்டாக்கியது ஏற்புடையது அல்ல. ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், அவர்களது சமய சுலோகங்களை கூறி நமது இந்தியர்களை தாக்கியது அநாகரீகமாகும்.

ஆலயத்தில் திரண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மீது கை வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த ஆலய விவகாரத்தில் பிற இனத்தவர்ர்கள் தலையிட்டது இந்நாட்டில் நிலவி வரும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தி சீர் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதோடு, இவ்விவகாரத்தை மிக கடுமையாக கருதி போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனங்களுக்கிடையிலான பதற்றத்தை ஏற்படுத்த யார் முயன்றாலும் அது கண்டிக்கப்பட வேண்டியாதாகும் என்று கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.

சீபிலட் ஆலயத்தில் மோதல்- பலர் காயம்: கார்களுக்கு தீ வைப்பு


ஷா ஆலம்-
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குள் புகுந்த சி ல தரப்பினரால் அங்கு கலவரம் மூண்டது.

ஆலயத்திற்குள் நுழைந்த பிற இனத்தவர்கள் தெய்வச் சிலைகளை அகறற முற்பட்டபோது இரு கும்பலுக்கிடையே கைகலப்பு மூண்டது.

அதிகாலை 2.00 பணயளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சிலர் படுகாயம் அடைந்தனர். 18 கார்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இவ்விவகாரம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகினற் நிலையில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது இந்தியர்கள் அதிருபதி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Saturday 24 November 2018

உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு


உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin)  ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது.  ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக (5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்குச் சுமார் 40 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அயல் நாடுகளில் தமிழ்ப் பணியாற்றும் பிறமொழியினைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழ்ப் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் என சுமார் 1200 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அயல்நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளியினைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பயிலும் சீன மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
இம்மாநாட்டினைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைக்க இசைவு அளித்துள்ளார்.  இம்மாநாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள்,  தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சியரங்கு ஆகியவையும் இடம்பெறும். இம்மாநாடு ஆறு அமர்வுகளாக நடைபெறும். தமிழக அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு மாநாட்டின் அமர்வுகளையும் நிகழ்வுகளையும் தொடங்கிவைப்பார்கள் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு. ஜெ. செல்வகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் தமிழ் வழி கல்வி, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் பாரம்பரியங்களை இனிவரும் சந்ததியினர் அறியும் வகையில் நிகழ்வுகள் அயலகத்தில் தமிழ் அரசியல் போன்றவைகள் அடையாளப்படுத்தப்படும். இந்நிகழ்வில் அயல்நாட்டில் உள்ள மாநில மத்திய தமிழ் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள் அரசியல் தலைவர்கள் துணை வேந்தர்கள் கல்வியாளர்கள் மேலும் தென்னிந்திய  திரைப்படத்துறையினர்,சின்னத்திரை நட்சத்திரங்கள்,மேடை கலைஞர்கள் ,பட்டிமன்ற பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் இந்நிகழ்வில் சாதனை தமிழன், தலைநிமிர்ந்த தமிழன் ,உலகத்தமிழன் போன்ற விருதுகள் வழங்கப்படவுள்ளன .இந்நிகழ்வில் கலந்துகொள்ள gotoorganisation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்தொடர்புக்கு whatsapp +60166167708

தீபாவளி உபசரிப்பு கலைநிகழ்ச்சியாக மாற்றம் கண்டது ஏன்?

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
புத்ராஜெயாவை கைப்பற்றிய பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முதன் முதலாக ஏற்பாடு செய்த தீபாவளி உபசரிப்பு கலை நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் தென்னிந்திய நடிகர்கள், கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல் மக்கள், மலேசிய கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

இந்நிகழ்வுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னர் இப்போது 'எக்ஸ்போ கிளேங்-சென்னை' நிகழ்ச்சி பெயர் மாற்றப்பட்டு அதில் பங்கேற்கும் சில உள்ளூர் கலைஞர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஏன் ஏற்பட்டது?
நாட்டின் கடன் பிரச்சினையை பெரிய விவகாரமாக பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தென்னிந்திய கலைஞர்களை பங்கேற்க செய்யும் நிகழ்ச்சி தேவைதானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்குகள் அளித்த நிலையில், தென்னிந்திய கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியால் இந்திய சமுதாயத்திற்கு மேம்பாடு கண்டுவிடுமா? என்பதற்கு பக்காத்தான் தலைவர்களே பதில் கூற வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தில் 48 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தின் இந்திய கிராமத் தலைவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிடும் வகையில் கிராமத் தலைவர்களின் நியமனம் அமைந்துள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

மலேசியாவில் அதிகமான இந்திய கிராமத் தலைவர்கள் நியமிப்பதில் சிலாங்கூர் முன்னிலை வகிக்கிறது. அதன் அடிப்படையில் இன்று 48 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஓர் உறவுப்பாலமாக  கிராமத் தலைவர்கள் திகழ்கின்றனர். அவ்வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் மக்கள் பிரச்சினைகளை அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அலுவலகம் கவனத்திற்குக் கொண்டுச் சென்று தீர்ப்பதில் கிராமத் தலைவர்கள் செயல்படுவார்கள்.

இன்றைய நியமனத்தில் பிகேஆர் கட்சியை சேர்ந்த  24 பேர், ஜசெவைச் சேர்ந்த 18 பேர், அமானா கட்சியைச் சேர்ந்த 5 பேர்,  பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆளும் மாநில அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாக
சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயல்படுகின்றனர். இடைத் தரகர்களாக யாரும் இங்கு செயல்படுவது கிடையாது.
ஆனால், கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் மஇகா, ஐபிஎப், மக்கள் சக்தி போன்ற கட்சிகள் இடைதரகர்களாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக கிராமத் தலைவர்களுக்கு 500 வெள்ளியிலிருந்து 700 வெள்ளியாக அலவன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு வருடாந்திர மானியமாக 10,000 வெள்ளி வழங்ககப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு அவர்கள் சிறந்த சேவையை வழங்க முடியும்.

அலவன்ஸ் உயர்வு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அமல்படுத்திய மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரிக்கு நன்றி கூறிக் கொள்ளும் வேளையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிராமத் தலைவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கணபதிராவ் சொன்னார்.

முஹிபா தொழில்பேட்டை சாலை சீரமைக்கப்பட்டது


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
வாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக விளங்கிய கம்போங் முஹிபா தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது.

கோலகங்சார் மாநகர் மன்றமும் மாவட்ட  பொதுப்பணி இலாகாவும் இந்த சாலை சீரமைத்துக் கொடுத்துள்ளது வாகனமோட்டிகளுக்கு மனநிறைவை அளிப்பதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

அதிகமானோர் பயன்படுத்தும் இச்சாலை குண்டும் குழியுமாக
வாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது என்று சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தேன்.

இப்போது இச்சாலை சீரமைக்கப்பட்டு வாகனமோட்டிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ள கோலகங்சார் மாநகர் மன்றம், மாவட்ட பொதுப்பணி இலாகா, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், மாநகர்  மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மணிமாறன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக மாவட்ட பொதுப்பணி இலாகா பொறியியலாளர் முகமட்
ஸம்ரி பின் அப்துல்லாவை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.

Friday 23 November 2018

நஜிப் ஆட்சியில் கூட இப்படி இல்லையே... பக்காத்தானுக்கு என்ன ஆனது?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
"மலேசியா மலேசியர்களுக்கே" என்று நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வரை மேடை போட்டு முழங்கிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் நடவடிக்கைகள் தற்போது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பக்காத்தான் ஹரப்பான் இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

வரும் 25ஆம் தேதி கிள்ளானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் தென்னிந்தி சினிமா நடிகர்களான விக்ரம், ஐஸ்வர்யா டுத்தா, யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல் இங்குள்ள இந்தியக் கலைஞர்களிடையே அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வெளிநாட்டு கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கம் என்ன? என்பதே கலைஞர்களின் கேள்வியாக உள்ளது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மலேசிய சுற்றுலா துறை உள்ளூர் கலைஞர்கள் புறந்தள்ளுவது ஏன்?

நாட்டின் கடன் 1 டிரில்லியன் வரை உள்ளது என கூறிய பல மக்கள் நலத் திட்டங்களை ஒத்தி வைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், வெளிநாட்டு கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சி படைக்கலாமா?

இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள் இலவசமாகவா பங்கேற்கின்றனர்? அவர்களுக்கு உரிய பணம் கொடுக்க தயாராக இருக்கும் போது நாட்டின் கடன் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையா?

கடந்த தேசிய முன்னணியின் ஆட்சியில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்திலான அரசு ஏற்பாடு செய்த தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் இப்போது பக்காத்தான் ஹரப்பான் அரசு ஏன் இப்படி செய்கிறது? என்ற கேள்வி எழுகிறது.

'வேதா- என்னை போல் ஒருவர்' - துன் மகாதீர்

செர்டாங்-
பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினர் நெருக்குதல் கொடுத்து வரும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை பிரதமர் துன் மகாதீர் தற்காத்து பேசியுள்ளார்.

'அவரும் என்னை போல் தான். கடந்த காலங்களில் பேசிய விவகாரத்தை இப்போது சர்ச்சையாக்கி பதவி விலகுமாறு நெருக்குதல் கொடுப்பது ஏற்புடையதாகாது.

முன்பு நானும் அம்னோவில் தான் இருந்தேன். இப்போது இங்கு இருக்கிறேன். அதனால் பக்காத்தான் ஹராப்பானில் இணைய முடியாது என கூறினால் அதை ஏற்க முடியாது.

அதே போன்றுதான் வேதமூர்த்தியும் 10 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய சூழலுக்கு ஏற்ப கருத்து தெரிவித்துள்ளார். இப்போது அவர் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளார்.

அப்போது அவர் கூறிய கருத்து முந்தைய காலங்களில் உள்ள சூழலை பொறுத்தது. அதை இப்போது சர்ச்சையாக்கி பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு பின்னர் டச்சு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் மலேசியாவில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர்களின் உரிமைகளும் சலுகைகளும் நசுக்கப்படுவதாகவும் வேதமூர்த்தி கூறியிருந்தது இப்போது சர்ச்சையாக மூண்டுள்ளது.

தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் - கேசவன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஜாலான் லிந்தாங், பேரா ஹைட்ரோ குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.

இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் 90 விழுக்காடு சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக கோலகங்சார் மாவட்ட அலுவலகத்தின் மூலம் தலா ஒரு குடும்பத்தினருக்கு 2,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி கொள்ளும் அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் இவர்களுக்கு வேண்டிய உதவிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று கேசவன் தெரிவித்தார்.

சிறார், மகளிருக்கு எதிரான சமூகச் சீர்கேடுகள்- விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது


கோலாலம்பூர்-
சிறார், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான சமூக சீர்கேடு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகளை களைவதற்கு நாடாளுமன்ர உறுப்பினர்கள், அரசு சார்பற்ற பொது இயக்கத்தினர் ஆகியோர் ஒருங்கிணந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறார், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோரை உட்படுத்திய சமூகப் பிரச்சினைகளே எனக்கு முதன்மையானது. அதில் எவ்வித விட்டுக் கொடுக்கும் போக்கையும் நான் கடைபிடிக்கப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

தீ விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும்- திருமதி செல்வி


சுங்கை சிப்புட்-
இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரா, சுங்கை சிப்புட் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் தலைவி திருமதி செல்வி ஆறுதல் கூறினார்.

இந்த தீ விபத்தில் வீடுகளை பறிகொடுத்த மூன்று குடும்பத்தினர் உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்துள்ளனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகள் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் என திருமதி செல்வி குறிப்பிட்டார்.

ஜாலான் லிந்தாங், பேரா ஹைட்ரோ குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்தது.