Saturday 31 August 2019

மூவின மக்கள் போராட்டத்தின் அடையாளமே 'சுதந்திர தினம்' - கணபதிராவ்

ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள மூவினங்களின் போராட்டத்தின் அடையாளமே 'சுதந்திர தினம்' ஆகும். ஆதலால் இந்நாட்டிலுள்ள மக்களின் தியாகத்தை யாரும் கேள்வி எழுப்பக்கூடாது.
நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை  கொண்டாடும் இவ்வேளையில் இந்த சுதந்திரம் சாதாரணமாக கிடைத்து விடவில்லை.

பலரது போராட்டங்களின் வலியிலும் சிந்திய குருதியிலும் தான் நமது சுதந்திர தாகம் நிஜமானது. இப்போராத்தில் இனம், மதம், மொழி கடந்து மலேசியராய் ஒன்றுபட்டதன் விளைவாலே சுதந்திரம் கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சிலர் குந்தகமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

சிலரின் விரும்பதகாத இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் 'மலேசியர்' என்ற உணர்வோடு அனைத்து இன மக்களும் ஒருமித்த கருத்தோடு ஒன்றிணைந்து 'புதிய மலேசியா'வின் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தமது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Friday 30 August 2019

அமைச்சரவையில் அன்வார்? இடமில்லை- துன் மகாதீர்

புத்ராஜெயா-

பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள இடம் காலியில்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றமோ புதிய நியமனமோ இப்போது இல்லை என்று கூறிய அவர், அமைச்சரவையிலிருந்து யாரும் பதவி விலகாததால் இப்போது இடம் காலியில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

பதவி ஒப்படைப்பு தொடர்பில் தொடர்ந்து அதிகரித்து அழுத்தங்களை அடுத்து டத்தோஶ்ரீ அன்வார் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்திய கல்லூரி மாணவர்கள் கணபதிராவை சந்திந்தனர்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
மலேசியாவுக்கு குறுகிய கால கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா, சென்னை கலை கல்லூரி, Auxilium கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவைச் சந்தித்தனர். 
Royal Commonwealth அமைப்பும் Audacious Dreams Foundation அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை, தாம் வகிக்கும் பதவிகளின் பொறுப்புகள் ஆகியவற்றை கணபதிராவ் விவரித்தார்.

அதோடு, இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான வர்த்தக உறவுகள், வர்த்தக வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிக தொடர்பு,  மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சூழல் போன்றவற்றை எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆய்வுக்காக சிலாங்கூர் மாநிலத்தை தேர்ந்தெடுத்ததற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு செயலகத்திற்கு வருகை தந்த இம்மாணவர்கள், பேராசிரியர்களுக்கு மாநில துணை சபாநாயகர் டார்கட் டரோயா அல்வி சட்டமன்ற அவை நடைமுறைகளை விவரித்தார்.

தினேஷ் கஜேந்திரன் தலைமையில் 44 பேர் (பேராசிரியர்கள் உட்பட) இந்த கல்வி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள இவர்களின் கல்வி சுற்றுலா பயணம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை அமையவுள்ளது. 

மேலும். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய கிராமத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


Thursday 29 August 2019

முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை- இந்தியர்கள் தவறவிடக்கூடாது- வேதமூர்த்தி

புத்ராஜெயா-

குறைந்த வருமானம் பெறுவோர் தங்களின் முதல் வீட்டை வாங்குதவற்காக தேசிய வங்கி(பேங்க் நெகாரா) அறிவித்துள்ள நிதிச் சலுகையை சம்பந்தப்-பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளர்.
இதன் தொடர்பில் 2019 ஜனவரி 2-ஆம் நாள் 1 பில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தது. மாதம் 2,300-க்கும் குறைவான ஊதியம் பெறுவோர், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள முதல் வீட்டை வாங்குததற்கு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்பொழுது, தேசிய வங்கி இந்தத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தியுள்ளது. இதன்படி, குடும்ப வருமானம் 4,360 வெள்ளி வரை பெறுவோர் மூன்று இலட்ச வெள்ளி மதிப்பிலான முதல் வீட்டை வாங்குவதற்கு முயற்சிக்கலாம். 2019 ஆகஸ்ட் 21-ஆம் நாள் தேசிய வங்கி அறிவித்துள்ள இந்த நடைமுறை 2019 செப்டம்பர் 1-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.
வீடு வாங்குதன் தொடர்பில் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தம், நிதி விண்ணப்பம், முன்பணம் செலுத்துதல், வீட்டுக் காப்புறுதி உள்ளிட்ட நடைமுறைச் செலவினத்திலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் மேல் விவரம் அறிய கீழ்க்காணும் இணையப் பக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.
எனவே, குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் முதல் வீட்டை வாங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் எம்..பி. கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday 27 August 2019

ஆலயங்களுக்கு மானியம்; உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வி நிதி- கணபதிராவ் வழங்கினார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள ஆலயங்களுக்கும் உயர்கல்வி பயிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று மானியங்களை வழங்கினார்.

இவ்வாண்டு ஐந்தாவது முறையாக 30 கோயில்களுக்கு வெ. 210,000 மதிப்புள்ள மானியங்களை சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களிடம் கணபதிராவ் வழங்கினார். அதேபோன்று 6ஆவது முறையாக உயர்கல்வி பயிலும் 19 மாணவர்களுக்கு வெ.93,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கணபதிராவ், ஆலயங்களுக்கு மானிய ஒதுக்கீடு வழங்குவது அவர்களின் சேவை அடிப்படையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. பெரிய ஆலயங்களை கொண்டிருப்போருக்கு குறைந்த மானியங்களும் சமயம் சார்ந்த அமைப்புகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்வது அவரவர்களின் சமய நடவடிக்கைகளை பொறுத்ததே ஆகும்.

அதனால் கூடுதலாக நிதி வழங்கப்பட்ட அமைப்புகளுக்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்ற தோரணையை உருவாக்கி அதில் சிலர் குளிர் காய முயலலாம். மானியம் வழங்கப்படும் அனைவரையுமே சமமாகத்தான் கருதுகிறேன். அதில் சில திட்டங்களுக்கு கூடுதலான நிதி தேவைபடுவதால் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர எனக்கும் அந்த அமைப்புக்கும் தொடர்பு கொண்டிருப்பதால் அல்ல.

அதேபோன்றுதான் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கூட வீண் செலவுகளை குறைத்து சிக்கனப்படுத்துவதன் வாயிலாக வழங்கப்படுகிறது. பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் செய்யப்படும் வீண் செலவுகளை குறைத்து அந்த நிதியை இதுபோன்ற ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று கணபதிராவ் மேலும் தெரிவித்தார்.

‘தெலுங்கன்’ என்பதால் பந்தாடலாமா? தமிழ் நாளிதழின் ஊடக தர்மத்தை கேள்வி எழுப்பினார் கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தான் ஒரு ‘தெலுங்கன்’ என்பதால் தம் மீது தொடர்ந்து பல்வேறு அவதூறுகளை பரப்பி வரும் தமிழ் நாளிதழ் ஒன்றை (பெயர் குறிப்பிடவில்லை) கடிந்து கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், ஊடக தர்மத்தை மீறி செயல்படலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக தாம் பதவியேற்றது முதல் எவ்வித இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினருக்கும் உரிய சேவையை வழங்கி வருகின்றேன்.

ஆனால், தாம் ஒரு ‘தெலுங்கு’ வம்சாவளியைச் சேர்ந்ததாலும் சம்பந்தப்பட்ட நாளிதழ் தரப்பினர் சார்ந்த சாதியையும் சாராததாலும் தம்மீது தொடர்ந்து அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் திணிக்கப்படுகின்றன.

எத்தரப்பையும் சார்ந்திராமல் நடுநிலை போக்கோடு செயல்பட வேண்டியதே ஓர் ஊடகத்தின் அடிப்படை தர்மமாகும். ஆனால், சில தரப்பினர் மீதான விசுவாசத்தை புலப்படுத்துவதற்காக தம் மீது புழுதி வாரி தூற்றும் செயலையே அந்நாளிதழ் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் அந்நாளிதழின் ஊடக தர்மமா?

ஏழை மாணவர்களுக்கான உதவிகள், ஆலயங்களுக்கான மானிய ஒதுக்கீடு, தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவித் திட்டம் என பல்வேறு சேவைகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

நான் செய்யும் சேவைகளை பிரசுரிக்க தயக்கம் காட்டும் அந்நாளிதழ், தம்மீது குற்றம் காண்பதிலும் அவதூறு பரப்புவதிலும் மட்டுமே முனைப்பு காட்டுகிறது.

தாம் ‘தெலுங்கன்’ என்ற போதிலும் பிறரை புறந்தள்ளி தள்ளி வைத்ததில்லை. சேவை என்று வரும்போது அனைவரையும் சமமாகவே கருதுகிறேன். இதில் எவ்வித பாகுபாட்டையும் காட்டியது இல்லை என்று கணபதிராவ் தெரிவித்தார்.

Monday 26 August 2019

பக்காத்தான் கூட்டணியின் ஆயுள் கொஞ்ச காலமே- டத்தோஸ்ரீ ஸாயிட்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் அதன் ஆயுட்காலம் கொஞ்ச காலமே என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதை நிறைவேற்றுவதில் தவறியதால் மக்களின் வெறுப்புக்கு  ஆளாகியுள்ளது.

இதன் காரணமாக அக்கூட்டணியை ஆதரித்தவர்கள் மீண்டும் தேமுவின் ஆதரவாளராக மாறி வருகின்றனர்.

15ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் நாம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம். ஆதலால் இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு மஇகா உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

15ஆவது பொதுத் தேர்தல் நமக்கான தேர்தல். ஆதலால் இப்போதே களமிறங்கி பணியாற்றுங்கள் என்று மஇகாவின் 73ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்து உரையாற்றியபோது டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.

'காட்' விவகாரம்: ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்; தீர்வு காண்கிறோம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள 'காட்' விவகாரத்திற்கு உரிய தீர்வு காண முடியவில்லையென்றால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். அதற்கான தீர்வை நாங்கள் காண்கிறோம் என்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.
தாய்மொழிப் பள்ளிகளில் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 'காட்' அரேபிய மொழியை அடுத்தாண்டு முதல் அமல்படுத்த பக்காத்தான் அரசாங்கம் முனைப்பு காட்டுகிறது.

அத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் அத்திட்டத்தை அறிமுகம் செய்ததே தேசிய முன்னணி அரசாங்கம்தான் என பழி போடுகின்றனர்.

தேசிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்த பல திட்டங்களை மாற்ற தெரிந்த பக்காத்தான் அரசாங்கத்திற்கு 'காட்' திட்டத்தை மாற்ற, நிராகரிக்க தெரியாதா?
ஜிஎஸ்டியை எஸ்எஸ்டியாகவும் பிரிம் திட்டத்தை பிஎஸ்எச் திட்டமாகவும் மாற்றியது பக்காத்தான் அரசாங்கம்.

ஆனால் 'காட்' அரேபிய மொழி திட்ட அமலாக்கத்தில் தீர்வு காண தெரியாமல் மக்களை குழப்பி கொண்டிருப்பதை விட ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். அதற்குரிய தீர்வை நாங்கள் காண்கிறோம் என்று விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Saturday 24 August 2019

'புரட்சி' பேரணி ஏற்பாட்டாளர்கள் கைது

கோலாலம்பூர்-
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழி திணிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட 'புரட்சி' பேரணி ஏற்பாட்டாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று பிரிக்பீல்சில் நடத்தப்பட்ட ' புரட்சி' பேரணிக்கு உரிய அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில் இதன் ஏற்பாட்டாளர்களான உமாகாந்தன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

'புரட்சி' பேரணி நடத்தப்பட்டது தொடர்பிலான விளங்கங்களை பெறவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அரிஃபை தராவே தெரிவித்தார்.

இந்த பேரணியில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் சுமூகமான முறையில் நடந்தேறியது என்று அவர் மேலும் சொன்னார்.

'ஜாவி' எதிர்ப்புப் பேரணி; பெரும் திரளானோர் திரண்டனர்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தமிழ், சீனப்பள்ளிகளில் 'ஜாவி' எழுத்து அமலாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 'புரட்சி' பேரணி நடத்தப்பட்டது.
பிரீக்பீல்ட்ஸ், நீருற்று வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் பெரும் திரளானோர் திரண்டனர்.

தாய்மொழிப்பள்ளிகளில் 'ஜாவி' எழுத்தை அரசாங்கம்  திணிக்க நினைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நடைபெற்ற பேரணியில் திரண்டவர்கள் வலியுறுத்தினர்.

ஸாகீர் நாய்க்கிற்கு எதிரான பேரணி பங்கேற்க வேண்டாம்- போலீஸ் அறிவுறுத்து

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கிற்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்புப் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
வரும் 24ஆம் தேதி பிரீக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பேரணி முழுமையான தகவல்களை பூர்த்தி செய்யவில்லை. அதில் இந்தியர்களுக்கான உரிமை, பிற சலுகைகளுக்கானது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிரீக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அரிஃபாய் தரவே தெரிவித்தார்.

இந்த எதிர்ப்புப் பேரணி 2012 பொது அமைதி பேரணி நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதால் அதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று அவர் மேலும் சொன்னார்.

Friday 23 August 2019

ஸாகீர் நாய்க்கை வெளியேற்ற முடியாது- மகாதீர் திட்டவட்டம்

புத்ராஜெயா-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவில் மாற்றமில்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
ஸாகீர் நாய்க்கை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்த போதிலும் தம் முடிவில் மாற்றமில்லை என்றுஅவர் சொன்னார்.

அண்மையில் கிளைந்தானில் உரையாற்றிய ஸாகீர் நாய்க், இந்தியர்கள், சீனர்கள் குறித்து பேசிய கருத்துகள் நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

Thursday 22 August 2019

இனி ‘எச்சரிக்கை இல்லை; உடனடி ‘கைது’ தான்- ஐஜிபி

கோலாலம்பூர்-

இனம், சமயம் சார்ந்த உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களை எழுப்புவோர் இனி எந்தவித அறிவிப்பும் இன்றி கைது செய்யப்படுவர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
இன விவகாரங்களை தூண்டும் தரப்பினர் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டப்படாது. அத்தகைய செயல்களை செய்வோர் மீது விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவர்.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கலாம் என்று அவர் சொன்னார்.

இன விவகாரங்கள் தொடர்பில் இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. உடனடியாக கைது 
நடவடிக்கைதான் மேற்கொள்ளப்படும் அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் மேலும் கூறினார்.


Wednesday 21 August 2019

முஸ்லீம் அல்லாதோரிடையே மன்னிப்பு கோருகிறேன்- ஸாகீர் நாய்க்

கோலாலம்பூர்
தாம் நிகழ்த்திய உரை முஸ்லீம் அல்லாதோரிடையே மன கசப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் கருத்து தெரிவித்திருந்தார்.
கிளந்தானில் தாம் ஆற்றிய உரை இஸ்லாம் சார்ந்த விவகாரம் ஆகும். ஆயினும் அந்த உரையில் முஸ்லீம் அல்லாதோர் குறித்து தெரிவித்த கருத்துகள் தம்முடைய சொந்த கருத்துகள் ஆகும்.

இந்த கருத்துகள் முஸ்லீம் அல்லாதோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது தொடர்பில் அதற்கு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஸாகீர் நாய்க் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அண்மையில் கிளந்தானில் உரை நிகழ்த்திய ஸாகீர் நாய்க், மலேசிய இந்தியர் இந்நாட்டு பிரதமரை காட்டிலும் இந்திய பிரதமருக்கு 100 விழுக்காடு விசுவாசம் மிகுந்தவர்களாக உள்ளனர் என்று கூறியதற்கு ஒட்டுமொத்த மலேசியர்களும் தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

அதோடு, தன்னை போல் இந்நாட்டிற்கு வந்துள்ள 'பழைய விருந்தாளிகளான' சீனர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஸாகீர் நாய்க் கூறியது சீனர்களின் கண்டனத்திற்கு ஆளானது.

ஜாவி மொழிக்கு பெ.ஆ.சங்கங்கள் எதிர்ப்பு காட்ட வேண்டும்- இந்திய சமூகத் தலைவர்கள் வலியுறுத்து

ஷா ஆலம்-
தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி ஓவிய எழுத்து அறிமுகப்படுத்துவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர்களும் முழுமையான கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்று சிலாங்கூர் இந்திய சமூகத் இயக்கத் தலைவர் இராசேந்திரன் இராசப்பன் தெரித்தார்.

அது மட்டுமல்லாமல்
நமது தமிழ்ப்பள்ளி, நமது தாய் மொழி, நமது பிள்ளைகளுக்கு நாம் தான் பொருப்பானவர்கள் என்று நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதோடு அந்தந்தப் பள்ளி வளாகத்தில் எதிர்ப்புப் பதாகைகளை  தொங்க விட வேண்டும்
என்பதனை இந்திய சமூக இயக்கத்தின் துணைத் தலைவரான குமரவேல் கூறினார்.

பெற்றோர்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் தாண்டி ஜாவி ஓவிய எழுத்து தமிழ்ப்பள்ளிகளில் ஒருபோதும் நுழையாது என்பதனை ஆணித்தரமாகக் கூறினார் இந்திய சமூக இயக்கச் செயலாளர் கண்மனி.

மேலும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
உடனே ஓர்  அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றும்,
அக்கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் ஜாவி ஓவிய எழுத்து தங்கள் பள்ளிக்கு வேண்டாம் என்ற ஒட்டு மொத்த குரலைத் தீர்மானமாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மேலும் ஒவ்வொரு வருடமும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக்கூட்டத்தில் ஒட்டுமொத்தக் குரலுடன் தீர்க்கமான முடிவாக ,
எந்தக் காலகட்டத்திலும் எந்த நிலையிலும்
எங்கள் தமிழ்ப்பள்ளிக்கு ஜாவி ஓவிய எழுத்து வேண்டாம் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முதல் தீர்மானமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் அறம் இயக்கத் தலைவரும் இந்திய சமூக இயக்க தகவல் பிரிவு தலைவருமான நடேசன் வரதன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஜாவி ஓவிய எழுத்தை தமிழ்ப்பள்ளிகளில் முற்றாக
ஒழிக்கும் வரையில் இந்த நகர்வை மலேசியாவில் உள்ள அனைத்து 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் உடனடியாக
அமல்படுத்த வேண்டும் என்று இந்திய சமூக இயக்க மகளிர் தலைவி தேவி உட்பட அனைத்து இந்திய சமூக தலைவர்களும் வலியுறுத்தினர்.

Tuesday 20 August 2019

முன்பு குலா- இப்போது இராமசாமி; வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார் ஸாகீர் நாய்க்

கோலாலம்பூர்-

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கு விதித்த காலக்கெடு விதித்த மூன்று நாட்களுக்கு பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி உடபட நான்கு பேர் மன்னிப்பு கோருமாறு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்.


பேராசியர் இராமசாமி, கனடாவுக்கான மலேசிய தூதர் டத்தோ டென்னிஸ் இக்னோதியோஸ், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சதீஸ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

சம்பந்தப்பட்ட நால்வருக்கு ஸாகீர் நாய்க்கின் வழக்கறிஞர் அலுவலகம் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளது.

தம்மீது சுமத்தப்பட்ட அவதூறான கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு சட்ட நடவடிக்கைகளுக்கான செலவீனத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் தேதி குலசேகரன் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஸாகீர் நாய்க் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுகாதார இலாகாவின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ ஜெயந்திரன் மரணம்

கோலாலம்பூர்-

சுகாதார இலாகாவின் முன்னாள் துணை இயக்குனர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.ஜெயந்திரன் இன்று காலை மரணமடைந்தார்.
சுகாதார இலாகா இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூலில் பதிவிட்டுள்ள இரங்கலில், 2013 மார்ச் முதல் கடந்தாண்டு மே மாதம் வரை டத்தோஶ்ரீ ஜெயந்திரன் சுகாதார இலாகாவின் துணை இயக்குனராக பணியாற்றினார்.

இன்று காலை மரணமடைந்த அன்னாரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், நாங்கள் அனைவரும் மிகவும் நேசித்த ஒருவரை இழந்து விட்டோம். அமைச்சின் பணியாளர்கள், நண்பர்கள் அனைவரும் மிகுந்த துயரம் கொண்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

சுகாராத இலாகாவின் துணை இயக்குனர் உட்பட 38 ஆண்டுகள் டத்தோஶ்ரீ ஜெயந்திரன் பணியாற்றியதோடு கோலாலம்பூர் மருத்துவமனையின்  நிபுணத்துவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.


மொழி உரிமையை காக்க அணி திரள்வோம்- மலேசிய இந்தியர் குரல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தமிழ், சீனப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழியை திணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்படவுள்ள 'புரட்சி' பேரணிக்கு மலேசிய இந்தியர் குரல் முழுமையான ஆதரவு வழங்குவதாக அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மு.மணிமாறன் தெரிவித்தார்.

தாய்மொழி என்பது நமது உரிமையாகும். அதனை விட்டுக் கொடுக்கும் போக்கை நாம் ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ‘ஜாவி’ அரபு மொழியை கட்டாயமாக தமிழ்,சீனப்பள்ளிகளில் திணிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அரசாங்கத்திற்கு நமது எதிர்ப்பின் பலத்தை காட்ட வேண்டியுள்ளது.

அவ்வகையில் வரும் 23ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் நீரூற்று வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு பொதுமக்கள் திரளாக வர வேண்டும்.
இந்த பேரணி நமது உரிமை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் பேரணியாகும். இதில் அரசியல் வேறுபாடுகளை களைந்து இந்தியர் என்ற உண்ரவுடன் மட்டும் பங்கேற்போம். 
அரசியலில் முரண்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உரிமையை காப்பதில் ஓர் அணியில் திரள்வோம் என்பதை புலப்படுத்துவோம் என்று மணிமாறன் மேலும் கூறினார்.

'புரட்சி' பேரணி மொழியை காப்பதற்காக நடத்தப்படுகின்ற பேரணியாகும். இதில் அரசியல் லாபம் தேட வேண்டாம். இந்தியர் என்ற உணர்வுடன் நாம் செயல்பட்டாலே போதுமானது என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தேசியச் செயலாளர் ஆனந்த், இளைஞர் பகுதித் தலைவர் தேவன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த பேரணி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான உமாகாந்தன் கூறுகையில், பங்கேற்பாளர் அனைவரும் கறுப்பு நிற உடையணிந்து வர வேண்டும் எனவும் அதுவே நமது எதிர்ப்பின் முதல் அடையாளம் என்று கூறினார்.

தாய்மொழிப்பள்ளிகளில் ‘ஜாவி’ மொழி; 'புரட்சி' பேரணிக்கு முழு ஆதரவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
தாய்மொழிப் பள்ளிகளான தமிழ், சீனப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழியை கட்டாயப்படுத்தி திணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுப்பட்ட அரசு சாரா அமைப்புகள் நடத்தும் 'புரட்சி' பேரணிக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
வரும் 23ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் நீருற்று வளாகத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பேரணி தாய்மொழியை கட்டி காப்பதற்காக நடத்தப்படுகின்ற ஓர் அமைதி பேரணியாகும்.

அரசு சார்பற்ற தமிழ், சீன அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் இப்பேரணிக்கு போலீஸ் அனுமதி பெறப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளில் ‘ஜாவி’ அரபு மொழி திணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடாது என்பதை அரசாங்கத்திற்கு உணர்த்தும் வகையில் இவ்வாறான பேரணி நடத்தப்படுகிறது.

இவ்விவகாரத்தில்ஆரம்பம் முதலே மக்களின் கருத்துகளை கேட்காமல் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கையால் இந்திய, சீன சமூகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. தாய்மொழி பள்ளிகளில் பிற மொழிகள் போதிப்பதை எதிர்க்கவில்லை.

மாறாக, கட்டாயமாக திணிப்பதைதான் எதிர்க்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக நடத்தப்படும் இந்த பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு மிக அமைதியான முறையில், யாருக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்துவதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக செயல்படுவதோடு பங்கேற்பாளர்களும் எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடமளிக்காமல் மிக பொறுமையோடு செயல்பட வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

Monday 19 August 2019

ஆலய கோபுரத்தை காட்டிலும் சமுதாய மேம்பாட்டில் கவனம் செலுத்துக- கணபதிராவ்

கோ.பத்மஜோதி

ஷா ஆலம்-
இன்றைய காலகட்டத்தில் ஆலயங்கள் தனிநபருக்காகவும் சுயகெளரவத்திற்காகவும் இருப்பதை காட்டிலும் அவை சமுதாயத்தின் பிம்பமாக திகழ்ந்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.
ஆலயங்கள் எப்போதும் சமுதாயத்தை பிரதிபலிப்பதாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக ஆலயங்கள் களம் காணும்போது அங்கே சமுதாயப் பற்று மேலோங்குகிறது.

அதை விடுத்து ஆலயங்களை சுயகெளரவத்திற்காகவும் தனிநபர் அடையாளத்திற்காகவும் நிர்மாணிப்பதில் எவ்வித பயனும் இல்லை. உயரமான கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுவதில் காட்டும் அக்கறையை நமது சமூகத்தின் மேம்பாட்டிலும் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு சமயத்தின் மேம்பாட்டிற்கான அடித்தளம் ஆகும் என்று சிலாங்கூர் மாநில ஆலய மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.
ஆலயங்களை ஒருங்கிணைத்து செயலாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் போதெல்லாம் அது பலனளிக்காமலே போய்விடுகிறது. சிறு சிறு கோயில்களை ஒன்றிணைத்து பெரிய கோயிலாக நிர்மாணிக்க முனைந்தால் பல காரணங்களை காட்டி அதை தடுத்து விடுகின்றனர்.
சமய பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்ற வேறுபாடுகள் போதாதென்று தெய்வங்களின்  வேறுபாட்டையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்து செயல்படுவதை சாத்தியமற்றதாக உருவாக்கி விட்டனர்.

ஆலயங்கள் சமயத்தை கட்டிக் காக்கும் அதே வேளையில் சமூக மேம்பாட்டையும் ஒரு கொள்கையாக கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆலயங்கள் திகழ முடியும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம் உட்பட ஆலய பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

குலசேகரன் உட்பட 5 பேருக்கு சம்மன் நோட்டீஸ் அனுப்பப்படும்- ஸாகீர் வழக்கறிஞர்

கோலாலம்பூர்-
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உட்பட ஐவருக்கு எதிராக சம்மன் நோட்டீஸ் நாளை அனுப்பப்படும் என்று ஸாகூர் நாய்க்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் மீது அவதூறான அறிக்கைகள் விடுத்த ஐவர் மீது நாளை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காடிர் தெரிவித்தார்.

தம்மீது அவதூறான அறிக்கை விடுத்ததன் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு இந்த ஐவருக்கும் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து சம்மன் அனுப்பப்படவுள்ளது.

மனுதவள அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ், கனடாவுக்கான மலேசிய முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இன்திதஸ் ஆகியோர் மீதே ஸாகீர் நாய்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Sunday 18 August 2019

குலசேகரன் மன்னிப்பு கேட்க வேண்டுமா? கோமாளித்தனமானது- கணபதிராவ்

கோ.பத்மஜோதி

ஷா ஆலம்-
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் விடுத்துள்ள கோரிக்கை 'கோமாளித்தனமானது' என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் விசுவாசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தது ஸாகீர் நாய்க் தான். அவர்தான் இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கோர வேன்டும்.

மாறாக, ஸாகீர் நாய்க்கிடம் குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டியதில்லை. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் குலசேகரன் அஞ்சப்போவதில்லை. அவர் இதற்கெல்லாம் அடிபணியப் போவதும் இல்லை.

குலசேகரன் எங்கேயும் ஓடி ஒளியப்போவதில்லை. இந்திய சமுதாயத்தை இழிவுபடுத்திய ஸாகீர் நாய்க் தான் எங்கேயாவது ஓடி ஒளிய வேண்டியிருக்கும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்; நீதிமன்றத்தில் சந்திக்கலாம்

ஷா ஆலம்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கிடம் தாம் மன்னிப்பு கோரப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.
தமக்கெதிராக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஸாகீர் நாய்க் தனக்கு காலக்கெடு விதித்துள்ளார். 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் விதித்துள்ள கோரிக்கையை நிராகரிக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் அதனை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்
என்று ஸாகீர் நாய்க்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குலசேகரன் தெரிவித்தார்.

தம்மீது குறித்து அவதூறான கருத்து வெளியிட்டதாக குலசேகரனுக்கு எதிராக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஸாகீர் நாய்க் 48 மன்னிப்பு கோர வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார்.