Sunday 11 February 2018

'புது பார்வையில் புதிய புந்தோங்'; அதுவே எனது இலக்கு - டத்தோ நரான் சிங்- பகுதி- 2


நேர்காணல்: ரா.தங்கமணி, புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒரு தொகுதியில் மக்களுக்கான சேவையை செய்து கொண்டிருக்கிறேன். அதை விடுத்து மற்றொரு தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவதில் எவ்வித பலனும் இல்லை என புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

மக்களின் சேவையை முன்னிறுத்தி ஒரு தொகுதியில் சேவையை மேற்கொள்ளும் வேளையில் மற்றொரு தொகுதியில் வேட்பாளர் என்பது துளியளவும் ஏற்க முடியாது. அதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

டத்தோ நரான் சிங்குடன் 'மைபாரதம்' மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

கே: உங்கள் பார்வையில் புந்தோங் பகுதியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ப: புந்தோங் பகுதியை இந்தியர்களின் கலாச்சார நகரமாக பார்க்கிறேன். அதிகமான இந்தியர்கள் உள்ள இப்பகுதி 'லிட்டில் இந்தியா'வாக உருமாற வேண்டும்.

சுத்தமும் சுகாதாரமும் நிறைந்ததாக இத்தொகுதி உருமாற வேண்டும். 'கச்சான் பூத்தே' வியாபாரம்  துரித வளர்ச்சி காணும் வகையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெரு வர்த்தகமாக மேம்பாடு காணப்பட வேண்டும்.

இங்குள்ள இளையோரின் வாழ்வாதாரம் மேம்பாடு காணும் வகையில் அவர்களுக்கான வர்த்தக, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகச் சீர்கேடுகளில் சிக்கியுள்ள இளைஞர்களின் வாழ்க்கை நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

'புது பார்வையில் புதிய புந்தோங்' என்பதை இலக்காகக் கொண்டே எனது சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 'லிட்டில் இந்தியா' எனும் பெயரில் கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஈப்போ என பல இடங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஆனால் உண்மையிலேயே 'லிட்டில் இந்தியா' என்பது புந்தோங் பகுதிதான். அதை உருவாக்குவதுதான் எனது லட்சியம். இம்முறை இளைஞர்களின் மனதில்  மாற்றம் ஏற்பட வேண்டும். இத்தொகுதியில் ஒரு மாற்றம் ஏற்பட மக்கள் பிரதிநிதி என்ற பதவியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கே: பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி?

ப: தேசிய முன்னணி போன்ற சிறப்பான ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் வழங்கிட முடியாது. முன்னாள் பிரதமர்  துன் மகாதீர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித மேம்பாடுக் கொண்டு வரவில்லை.

தன்னுடைய பதவி காலத்தில் இந்திய சமுதாயத்தை ஏமாற்றியவர் துன் மகாதீர். தனக்கு பிறகு பிரதமராக பதவியேற்க வேண்டிய முன்னாள் துணைப் பிரதமர்கள் மூசா ஹீத்தா, கபார் பாபா, அன்வார் இப்ராஹிம் போன்றோரை பதவியிலிருந்து வீழ்த்தியதோடு முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவியையும் அப்பதவியிலிருந்து வீழ்த்த பாடுபட்டார்.  தற்போது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பையும் பதவியிலிருந்து வீழ்த்த முயற்சிக்கிறார்

எவர் ஒருவர் பிரதமராக வந்தாலும் அதில் தலையீடும் அதிகாரமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய பிரதமருக்கும் அவர் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்.

வாக்காளர்கள் தெளிவான சிந்தனையில் தங்களுக்கான அடுத்த அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கே: வரும் தேர்தலில் புந்தோங் தொகுதியில் வாய்ப்பு வழங்காமல் மற்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கினால்?

ப: நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  எனது சேவை முழுவதையும் புந்தோங் தொகுதியில் வழங்கி விட்டேன். ஆனால் இங்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்காமல் சேவையே செய்யாத ஒரு தொகுதியில் 'பொம்மையாக' களமிறங்க விரும்பவில்லை.

தமிழ்ப்பள்ளி, ஆலயம் உட்பட பொது இயக்கங்கள் என்று எனது சேவையை பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு பல சமூகச் சேவைகளை மேற்கொண்டுள்ளேன்.

ஆனால் இங்கு வாய்ப்பளிக்காமல் பிற தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டால் நிச்சயம் ஏற்க முடியாது. வாய்ப்பு வழங்கப்படும் தொகுதியில் மக்களுக்கான எவ்வித சேவையும் செய்யாமல் வாக்குகளை கேட்பது எவ்வாறு நியாயமாகும்?

சேவை செய்பவரையே மக்கள் தற்போது அதிகம் விரும்பும் சூழலில்  சேவையே செய்யாத தொகுதியில் மக்களிடம் எவ்வாறு ஆதரவை பெற முடியும்?

அதனால் தான் புந்தோங் தொகுதியிலேயே வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பை கேட்கிறேன்.  தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் ஆதரவு வழங்கினால் நிச்சயம் இத்தொகுய்தியில் வேட்பாளராக களமிறங்க முடியும். வேட்பாளராக களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

- முற்றும் -

No comments:

Post a Comment