கைத்தொலைபேசி களவு போனது தொடர்பில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று நினைவு திரும்பாமலேயே மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவுக்கு 500க்கு மேற்பட்ட உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நிபோங் தெபாலில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வசந்தபிரியாவின் நல்லுடலுக்கு குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி பள்ளியில் பயிலும் நண்பர்களும் சக மாணவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மகளை பறிகொடுத்த நிலையில் மிகுந்த கவலையில் வசந்தபிரியாவின் பெற்றோர் ஆர்.முனியாண்டி, ஏ.மலர்விழி ஆகியோர் மூழ்கினர்.
தன் மகள் மீது குற்றச்சாட்டு சுமத்திய ஆசிரியர் மீது மிகவும் அதிருப்தி அடைந்த நிலையில் முனியாண்டி காணப்பட்டார்.
'என் மகளின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியையே முழு பொறுப்பேற்க வேண்டும். அந்த ஆசிரியரை பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் முயன்றேன். ஆனால் அது இயலாமல் போய்விட்டது.
என் மகளின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் மட்டுமல்ல என் குடும்பமே அவளின் மரணத்தின் ஏற்க முடியாமல் தவிக்கிறது' என கண்ணீர் மல்கக் கூறினார் முனியாண்டி.
No comments:
Post a Comment