Friday 8 September 2017

இந்திய சமுதாயத்திற்கு தேவை 'புதிய உருமாற்றம்'

- புனிதா சுகுமாறன்
பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்த காலம் கடந்து அவர்களும் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு நிகரானவர்களாக உருவெடுத்து வருகின்றனர். பெண்களிடையேயான இந்த ஆக்கசக்தி நாட்டை வல்லமை பெற்றதாக உருவாக்க வழிவகுக்கும்.

அவ்வகையில் மஇகா தேசிய மகளிர் பிரிவின் துணைத் தலைவியும் பேராக் மஇகா மகளிர் பிரிவுத் தலைவியுமான திருமதி தங்கராணி தியாகராஜனின் சேவையும் ஆக்ககரமான நடவடிக்கையும் ஒரு சிறந்த தலைமைத்துவ ஆற்றலை புலப்படுத்துகிறது.

அண்மையில் நடைபெற்ற பேராக் மாநில மகளிர் பிரிவின் பேராளர் மாநாட்டில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மாநில தேமு செயலாளர் டத்தோ அமாட் ஷாலிமின் பாராட்டும் புகழ்ச்சியுமே இதற்கு தக்க சான்று.

மகளிர் அமைப்பு என்றாலே அவர்கள் சார்ந்துள்ள பிரச்சினைகளுக்கும் சமூக அவலங்களுக்கும் மட்டுமே போராடுவது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அதை தவிர்த்து சமூகத்தை சார்ந்து நிற்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முற்படுவதே தற்போதைய மிக அத்தியாவசியமான தேவையாகிறது என்கிறார் திருமதி தங்கராணி தியாகராஜன்.
மஇகா எனும் அரசியல் நீரோட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகின்றேன். இதில் பல்வேறு நிலைகளை கடந்து இன்று உயர் நிலை பதவியில் இருந்து கொண்டு சேவையாற்றுகின்றேன்.

இந்த சேவைகளுக்கு அச்சாரமாக தற்போது இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக கருதப்படும் புந்தோங் சட்டமன்றத்தில் பல ஆக்ககரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த பொதுத் தேர்தலின்போது மஇகாவுக்கு ஒதுக்கப்பட்ட இத்தொகுதியில்  மஇகா  வேட்பாளர் தோல்வி கண்ட போதிலும் மஇகாவின் சேவைகள் நின்று விடவில்லை என்பதை புலப்படுத்தும் வகையில் மகளிர் பிரிவு களமிறங்கி வருகிறது.
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் பல பிரச்சினைகள் நிலவுகின்ற. வேலை வாய்ப்பு, கல்வியை பாதியிலேயே கைவிடும் சிறார்கள், வீடு, நிலம் உட்பட அடிப்படை பிரச்சினைகள் பல இருக்கின்றன.

இங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை எனலாம். குறிப்பாக வேலை வாய்ப்பு திட்டங்கள் இங்கு குறைவாகவே இருக்கின்றன. போக்குவரத்து, தொலை தூர பணியிடம் போன்றவையே இதற்கு காரணமாக இருக்கின்றன.

மேலும் 20 விழுக்காட்டு சிறார்கள் தங்களின் குடும்ப சூழல் காரணமாக கல்வியை பாதியிலேயே கைவிட வேண்டிய சூழல் நிலவுகிறது. குடும்ப வறுமை, ஆவணங்கள் இல்லாமை, தாய்/ தந்தையருக்கு துணையாக வேலைக்கு செல்லுதல் போன்ற காரணங்களே இதற்கு முதன்மையாக இருக்கின்றன.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகின்றது. பல்வேறு பெரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு புந்தோங்கிற்கு அருகேயுள்ள அதன் கிளை நிறுவனங்களில் சிலரை பணியமர்த்துவது, கல்வியை கைவிட்ட சிறார்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, அல்லது தொழில் கல்வி பயிற்சி வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூகச் சீர்கேடுகள் உட்பட பல அடிப்படை பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது உரிய தீர்வு காணப்பட்டு வரும் வேளையில் இந்த மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இங்கு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோரின் தேவைகளை பூர்த்தி செய்வதை காட்டிலும் உருமாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதே ஆக்கப்பூர்வமாக இருக்கும். ஏனெனில் அந்த உருமாற்றத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்படுவதோடு அனைத்து நிலை மக்களுக்கான தீர்வை முன்னெடுப்பதே சால சிறந்ததாகும்.

சமூக கட்டமைப்பு புதிய பரிணாமத்தில் பரிணமிக்கும்போதுதான் ஆற்றல் வாய்ந்த ஒரு புதிய சமுதாயம் உருவாக்கம் காணும்.  அந்த புதிய பரிணாமத்தை நோக்கியே இன்றைய பேராக் மஇகா மகளிர் பிரிவு பயணிக்கிறது.

இவ்வேளையில் எனது அரசியல், சமூகச் சேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ச.சுப்பிரமணியம், பேராக் மாநில  மஇகா  தலைவர் டத்தோ வ.இளங்கோ, பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி, மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி  மோகனா முனியாண்டி, பேராக் மஇகா மகளிர் பிரிவினர், பேராக் மஇகா தலைவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் திருமதி தங்கராணி.

No comments:

Post a Comment