Saturday 27 February 2021

மஇகாவுக்கு யாரும் 'பாடம்' புகட்ட வேண்டாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

 எஸ்.லிங்கேஸ்

சுங்கை சிப்புட்-

ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றுபவர்கள் யார்? என்ற பாடத்தை மக்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்கள் தோல்வி கண்டதால் ' மஇகாவுக்கு பாடம் புகட்டி விட்டோம்' என சில தரப்பினர் மார்தட்டி கூறுகின்றனர்.

பொதுத் தேர்தல்களில் மஇகா தோல்வி கண்டாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் மஇகா ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

இவ்வளவு ஏன், கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியே ஆட்சி அதிகாரத்தை இழந்தது. மஇகாவும் 22 மாதங்கள் எதிர்க்கட்சியாகித்தான் திகழ்ந்தது.

ஆனால் இந்த 22 மாதங்களில் மஇகா தனது சேவையை ஒருபோதும் நிறுத்திக் கொண்டது இல்லை.  தன்னை நாடி வந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வந்தோம்.

மஇகாவை குறை சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள் இந்திய சமுதாயத்திற்கு இந்த 22 மாதங்களில் எத்தகைய சேவையை வழங்கினர் என்பதை இந்திய சமுதாயமே உணரும்.

தோல்வியில் மஇகா பாடம் கற்றுக் கொள்வதை விட யார் உண்மையான சேவையாளர்கள்? என்பதை மக்கள்தான் படிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சேவையாளர்களை அங்கீகரிக்க முடியும், இந்திய சமுதாயம் பயனடையும் என்று சுங்கை சிப்புட் மஇகா தலைவர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இராமகவுண்டர், பேரா மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ தொகுதி மஇகா பொறுப்பாளர்களும் மஇகா கிளை பொறுப்பாளர்களோம் கலந்து கொண்டனர்.

Friday 26 February 2021

ISMP பாடத்திட்டத்திற்கான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பது யார்? கணபதிராவ் கேள்வி

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உபகாரச் சம்பளத்துடன் கூடிய கல்வித்துறையில்  இளங்கலை பட்டப்படிப்பில் (ISMP)  தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டிருப்பதற்கு பொருத்தமற்ற காரணங்களை கல்வி அமைச்சு அடுக்க வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்நாட்டில் மூன்றாவது இனமான இந்தியர்களில்  பெரும்பாலானோர் தமிழ்மொழி பேசுபவர்களே ஆவர்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது இடைநிலைப்பள்ளகளில் அதிகமான தமிழாசிரியர்கள்  இருப்பதால் இவ்வாண்டு இத்திட்டத்தில் தமிழ் மொழி இணைக்கப்படவில்லை என்பது ஏற்க முடியாத ஒன்றாகும்.

சீனம், கடஸான்,ஈபான்  போன்ற பிற தாய்மொழிகளுக்கு முன்னிலை  அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழிக்கு வழங்கப்படாதது ஏன்?

உபகாரச் சம்பளத்துடனான கல்வியியல் இளங்கலை பட்டப்படிப்புக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக இந்த பட்டப்படிப்புக்கு  பாடத்திட்டங்களை தெரிவு செய்யும் குழுவில் யார்? உள்ளனர் என்ற கேள்வி இந்திய சமுதாயத்தில் எழுகிறது.

அண்மைய காலமாகவே இந்தியர்களின் உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதில் புதிதாக இளங்கலை பட்டப்படிப்பு விவகாரமும் இணைந்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை


குறிப்பாக, பெர்சத்து, பாஸ், தேசிய முன்னணி கூட்டணியில் அமைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசு அமைந்ததிலிருந்து இந்தியர்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

நமக்கெதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை முறியடிக்க இந்திய சமுதாயம் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்று கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.

Wednesday 24 February 2021

கோவிட்-19 தடுப்பூசி பிரதமருக்கு செலுத்தப்பட்டது

 புத்ராஜெயா-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட PFIZER தடுப்பூசி மருந்து பிரதமர் முஹிடின் யாசினுக்கு இன்று செலுத்தப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்த கோவிட்-19 தடுப்பூசி முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

PFizer தடுப்பூசி மருந்தின் மீது மலேசியர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் சுகாதார தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ நீர் ஹிஷாம் ஆகியோரும் இன்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

புத்ராஜெயா சுகாதார மையத்தில் இவ்விருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Saturday 20 February 2021

அம்னோவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளை மஇகா கோரும்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

 லிங்கா

சுங்கை சிப்புட்-

தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக கடந்த காலங்களில் அம்னோவிடம் தாரை வார்க்கப்பட்ட தொகுதிகள் மீண்டும் கோரப்படும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த கால பொதுத் தேர்தல்களில் சில தொகுதிகளை மஇகா அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது. அத்தகைய தொகுதிகளை அம்னோ வெற்றி கொள்ளாத சூழலில் மஇகா அத்தொகுதிகளை மீண்டும் கோரும்.

அம்னோ வெற்றியடைந்தால் தேமு வலுபெறும் எனும் நிலையில் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்பட்டன.  

ஆனால் இனிவரும் தேர்தலில் விட்டுக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள சூழலில் அத்தொகுதிகளில் மஇகா மீண்டும் போட்டியிட தேமு உச்சமன்றக் கூட்டத்தில் பேசுவோம்.

இதன் மூலம் மஇகாவின் பிரதிநிதிகள் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெறுவது சாத்தியமாகும் என்று சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Tuesday 16 February 2021

இரு ஆலயங்களுக்கு மானியம் வழங்கியது எம்ஆர்சிபி ஜிகே நிறுவனம்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கிள்ளானில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார ரயில் திட்ட (எல்ஆர்டி) கட்டுமானப் பணியினால் பாதிப்பை எதிர்நோக்கிய இரு ஆலயங்களுக்கு எம்ஆர்சிபி ஜிகே (MRCB GK) நிறுவனம் மானயங்களை வழங்கியது.

கடந்த மூன்றாண்டுகளுக்குமுன்பு மேற்கொள்ளப்பட்ட எல்ஆர்டி கட்டுமானத் திட்டத்தினால் கிள்ளான், மேரு சித்தி விநாயகர் ஆலயம், கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ் தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம் ஆகியவை பாதிப்பை எதிர்நோக்கின.

இந்த கட்டுமானத் திட்டத்தினால் ஆலயத்திற்கும் பக்தர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகங்கள் முன்வந்ததன் விளைவாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எம்ஆர்சிபி ஜிகே நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்க முன்வந்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

வழங்கப்பட்ட தொகையில் கருமாரியம்மன் ஆலயம் சமயலறையை இடமாற்றம் செய்வதோடு சித்தி விநாயகர் ஆலயம் சில மாற்றங்களை செய்யவும் இந்த தொகை வழங்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட இரு ஆலயங்களுக்கும் கணபதிராவ் முன்னிலையில் எம்ஆர்சிபி ஜிகே நிறுவன அதிகாரிகள் காசோலேயை வழங்கினர்.

கடந்த மூன்றாண்டுகளாக நீடித்து வந்த ஆலயப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட கணபதிராவுக்கு ஆலயத் தலைவர்கள் ராமசந்திரன், மு.ஆறுமுகம் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஆலங்களுக்கு தொகையை வழங்கி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய எம்ஆர்சிபி ஜிகே நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கணபதிராவ் மேலும் சொன்னார்.

Wednesday 10 February 2021

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் கோவிட்-19 பரிசோதனை

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் வாய்ப்பை கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீ.கணபதிராவ் ஏற்படுத்தியுள்ளார்.

இச்சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 4 கிளினிக்குகளில் இந்த கோவிட்-19 பரிசோதனை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன. மேலும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் வகையில்தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிளினிக்குகளுடன் இணைந்து இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.

இப்பரிசோதனையில் பங்கேற்பவர்கள் வெ.70.00 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டம் நடத்தப்படுகிறது.

பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனையில் கோத்தா கெமுனிங் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பரிசோதித்து கோவிட்-19 தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் வலியுறுத்தினார்.

கிளினிக் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


 *POLIKLINIK SHAIK*

 36-1, No, 8, Jln Anggerik Vanilla BE 31/BE, Kota Kemuning, 

40460 Shah Alam, Selangor

03-5122 9030


*KLINIK METRO*

No 31, Jalan Anggerik Vanilla, Kota Kemuning, 

40460 Shah Alam, Selangor 

03-5131 3459 


 *KLINIK DAN SURGERI BERJAYA PARK*

No 39-G, Jalan Sungai Rasau,

F 32/F Berjaya Park, Seksyen 32,

40460 Shah Alam, Selangor.

03-5888 9938


*KLINIK PRO MEDIC*

40, Jala Anggerik Vanilla M 31/M, Kota Kemuning, 

40460 Shah Alam, Selangor 

03-5131 1101