Thursday 14 September 2017

மரணமடைந்தவர்களை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை - டத்தோஶ்ரீ சுப்பிரமணியம்

கோலாலம்பூர்-
சமயப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மரணமடைந்த 23 பேரை அடையாளம் காண்பதற்கு  மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) நடத்தப்படுவதால் சில நாட்கள் அவகாசம் ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மரணமடைந்த நபர்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் இந்த தீச்சம்பவத்தில் மரணமடைந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளது.

எனவே தடயவியல் பிரிவில் மரபணு பரிசோதனை நடைபெற்று  வருகின்றது
என கோலாலம்பூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

மரணமடைந்தவர்களின்  பெற்றோரிடமும் மரபணு மாதிரி பெறபட்டு சோதனை நடைபெற்று வருகிறது. மரணமடைந்தவர்கள் யார் என்பதை கண்டறிவதே இப்போது அவசியம் என அவர் மேலும் கூறினார்.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 21 மாணவர்கள் உட்பட இரு பயிற்சியாளர்களும் மரணமடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த மரணமடைந்த குடும்பத்தினருடன்  30 நிமிடங்களுக்கும் மேலாக உரையாடி தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment