Thursday 21 September 2017

அமெரிக்காவில் 'இபிஎப்' முதலீடு; பிரதமரின் அறிவிப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளதா?- அ.சிவநேசன் கேள்வி

ரா.தங்கமணி

ஈப்போ-
அமெரிக்காவில் முதலீடு செய்யவுள்ள ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎப்)  திட்டம் மற்றொரு பெல்டா குளோபல் வென்சர்ஸ் ( எஃப்ஜிவி) திட்டம் உருவாகி விடக்கூடாது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின்  பணத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள இவ்வாரியம் அப்பணத்தை தவறான முறையில் கையாளக்கூடாது. ஏற்கெனவே பெல்டா குளோபல் வெஞ்சர்ஸில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது இபிஎப் வாரியம்.
இது ஒரு தவறான முதலீடு என அறிவித்துள்ள இபிஎப்  வாரியம். அதேபோன்ற ஒரு தோல்வி திட்டமாக அமெரிக்காவின் முதலீடு அமைந்து விடக்கூடாது என அவர் சொன்னார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதற்காக ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) அமெரிக்காவில் முதலீடு செய்யும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளது தொடர்பில் எழும் சந்தேகங்களுக்கு இபிஎப் வாரியம் உரிய விளக்கங்களை வழங்க வேண்டும் என அவர்  வலியுறுத்தினார்.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இபிஎப் வாரியம் 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் சிவநேசன் எழுப்பும் கேள்விகள்:

கேள்வி 1: பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் அறிவிப்பு இபிஎப் வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்றதா?

கேள்வி  2:  இபிஎப் வாரியத்தின் முதலீட்டு இயக்குனர் பிரிவு இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளதா? அமெரிக்காவில் இந்த அறிவிப்பை பிரதமர் செய்யும்போது முதலீட்டு இயக்குனர் பிரிவைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தார்களா?

கேள்வி 3: அமெரிக்காவிலான முதலீட்டுத் திட்டம் நம்பகமானது, நிலைத்தன்மையானது என்ற உத்தரவாதம் வழங்கப்படுமா?

கேள்வி 4: இபிஎப் வாரியத்தின் மொத்த தொகையில் 30 விழுக்காடு தொகையை மட்டுமே அந்நிய நாடுகளில் முதலீடு செய்ய முடியும் என அதன் சட்டவிதி கூறும் வேளையில், அமெரிக்காவிலான முதலீட்டுத் திட்டம் இந்த சட்டவிதிக்குள் அடங்கியுள்ளதா?

என்னுடைய இந்த கேள்விகளுக்கு இபிஎப் வாரியம் உரிய விளக்கத்தை வழங்க வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்லாமல் இந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஊழியர் சேமநிதி வாரியத்தின் உறுப்பினர்கள் சார்பில் முன்வைக்கப்படும் கேள்வியாகும்.

மேலும், இபிஎப் வாரியத்தின் அந்நிய நாடுகளில் செய்துள்ள முதலீட்டுத் திட்டம் 29 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது என கருதப்படுகின்ற வேளையில் அமெரிக்கா நாட்டில் செய்யப்படவுள்ள முதலீடு அதன் சட்டவிதிகளுக்கு அடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

அவ்வாறு சட்டவிதிகளை மீறி இந்த முதலீட்டுத் திட்டம் அரங்கேற்றப்படுமானால் அதனை எதிர்த்து ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டாது என சிவநேசன் கூறினார்.

No comments:

Post a Comment