Tuesday 12 September 2017

பக்காத்தானில் இணைவதற்கு ஹிண்ட்ராஃப் விண்ணப்பிக்கவில்லை - துன் மகாதீர்

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பானில் இணைவதற்கு ஹிண்ட்ராஃப்  அமைப்பு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என அதன் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இந்தியர்களின் ஆதரவை திரட்டுவதற்கு ஏதுவாக எதிர்க்கட்சியுடன் இணைவதற்கு ஹிண்ட்ராஃப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஆனால், அவர்கள் இன்னமும் விண்ணப்பிக்கவில்லை. அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதத்தை பெறவில்லை என பக்காத்தான் ஹராப்பானின் கூட்டத்திற்குப் பின்னர் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் கூட்டணியில் ஐந்தாவது கட்சியாக இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி துன் மகாதீரும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பொ.வேதமூர்த்தியும் சந்தித்தனர்.

பக்காத்தான்  ஹராப்பானில் இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லாததை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியர்களை சார்ந்த கட்சி இல்லாவிட்டாலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் பல இன மக்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இதில் ஹிண்ட்ராஃப் அமைப்பு பக்காத்தான் கூட்டணியுடன் இணைக்கப்பட்டால் மருத்துவர், வழக்கறிஞரை தவிர்த்து தோட்டப்புறங்களில் உள்ள மக்களை ஈர்க்கக்கூடிய வாய்ப்பு கிட்டும்.

ஹிண்ட்ராஃப் எங்களுடன் இணைவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். ஒரு பங்காளி கட்சியாக இணைக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக ஒருங்கிணைக்கப்படும் என துன் மகாதீர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு, தேமுவின் வெற்றிக்காக பாடுபட்டது ஹிண்ட்ராஃப்.

அத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததும் செனட்டர், துணை அமைச்சராக பொ.வேதமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். ஆயினும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேமு அமலாக்க தவறியதன் விளைவாக செனட்டர், துணை அமைச்சர் பதவியை வேதமூர்த்தி ராஜினாமா செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment