Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Monday, 6 July 2020

அடையாள அட்டை, குடியுரிமை விண்ணப்பத்தின் நடைமுறையை எளிமையாக்குக- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
குடியுரிமை, அடையாள அட்டை, சிவப்பு அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களின் இன்னல்களை களைவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள  சட்டவிதிகளை தளர்த்தாவிட்டாலும் அதனை எளிமையாக்க உள்துறை அமைச்சு முன்வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில அரசின் வழி மைசெல் பிரிவின் கீழ் இம்மாநிலத்திலுள்ளவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு ஆவண அட்டை பிரச்சிகளைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மைசெல் பிரிவின் வழி 2018 செப்டம்பர் முதல் மார்ச் 2020 வரை 1,660 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் 324 விண்ணப்பங்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 1,336 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

மக்களின் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளை தளர்த்த முடியாவிட்டாலும் அதன் நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் எளிமையாக்க உள்துறை அமைச்சு முனைய வேண்டும்.

அப்போதுதான் அடையாள அட்டை, குடியுரிமை போன்ற பிரச்சினைகளுக்கு சில மாதங்களிலேயே தீர்வு காண முடியும். இல்லையென்றால் பல்வேறு காரணங்களை காட்டி இழுத்தடிப்பு செய்யும் போக்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மைசெல் மூலம் அடையாள அட்டை, குடியுரிமை கிடைக்கப்பெற்றவர்களை சந்தித்த கணபதிராவ், மைசெல் அதிகாரிகளான திருமதி சாந்தா, ரகுபதி ஆகியோர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.

இந்த நிகழ்வில் அடையாள அட்டை, குடியுரிமை கிடைக்கப்பெற்றவர்களுடன் இந்திய கிராமத் தலைவர்கள் வின் சென்ட், கிறிஸ்டி ஆகியோரும் உடனிருந்தனர்.

Friday, 19 June 2020

பாரதம் செய்தி- 18/6/2020 சமய விழா, திருமணங்களை நடத்துவதற்கு தடை இல்லை- ...

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சமய விழாக்களையும் திருமணங்களையும் நடத்துவதற்கு தடையில்லை. ஆனால்....
 
முழுமையான செய்திக்கு வீடியோவை பார்க்கவும்



Wednesday, 3 June 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு புதிய SOP வரையப்பட்டுள்ளது

கோலாலம்பூர்-
கோவிட்-19 தொற்றால் மூடபட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு ஏதுவா புதிய நடைமுறை வழிகாட்டல் (SOP) வரையப்பட்டுள்ளது.

பள்ளி தினம் குறைப்பு, வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு, மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முககவசம் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை உள்ளடக்கி இந்த புதிய நடைமுறை வழிகாட்டல் வரையப்பட்டுள்ளது.

மேலும், பாட நேரங்கள், குறைப்பது, பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றுக்கு புதிய நடைமுறை வழிகாட்டலை NUTP எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் வரைந்துள்ளது.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் நலன், கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு வரையப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை வழிகாட்டி கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்  என்ற அச்சங்கத்தின் தலைவர் அமிருடின் அவோங் கூறினார்.

Monday, 1 June 2020

முடி திருத்தும் சேவைக்கு தடை நீடிக்கிறது

கோலாலம்பூர்-
முடி திருத்தும் சேவைக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது என்று முதன்மை பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முடி வெட்டும் கடைகள் திறப்பது உட்பட வீட்டுக்கு அழைத்து முடி வெட்டுவதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த சேவைக்கான தர நிர்ணய செயல்பாடு (SOP) இன்னும் வரையறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் அப்பணி நிறைவடைந்த பின்னர் தேசிய பாதுகாப்பு மன்றம் அதனை தாக்கல் செய்யும்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து வரையப்படும் தர நிர்ணய செயல்பாட்டுக்கு பின்னர் முடி திருத்தும் கடைகளை திறப்பது குறித்த முடிவெடுக்கப்படும். SOP வரைதிட்டத்திற்கு  பின்னரே முடிவெடுக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறூ கூறினார்.

Sunday, 31 May 2020

9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார்- மலேசிய இந்தியர் குரல் ஆதரவு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 
சுயநலவாதிகளிடமிருந்து மலேசியாவை காப்பாற்றிடவும் சிறந்த முறையில் நாட்டை  வழிநடத்திடவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 9ஆவது பிரதமராக பதவியேற்பதை ஆதரிப்பதாக  இந்தியர்களின் பேரெழுச்சி பேரியக்கம் ஹிண்ட்ராஃப்பின் மறு அவதாரமான மலேசிய இந்தியர் குரல் (Malaiysia Indian Voice -MIV)  வலியுறுத்தியுள்ளது.

உருமாற்றப் பாதையில் நாட்டை  வழிநடத்திச் செல்லும் பக்காத்தான் ஹராப்பானின் முதன்மை நோக்கங்களை பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செயல்படுத்துவார் என்பதன் அடிப்படையில் ஆதரவு தெரிவிப்பதாக அதன் பொதுச் செயலாளர் ஆனந்தன் ராமையா வலியிறுத்தினார்.

அன்வார் இப்ராஹிம்  அரசியல் அடிச்சுவற்றில் தனியொரு அடையாளத்தை கொண்ட தலைவராக திகழ்கின்றார். உலக அரங்கில் நன்கு அறியப்பட்ட தலைவராக திகழும் இவர்,  அதிகார மீறலுக்கு நடுவே துணைப் பிரதமர் உட்பட பல்வேறு உயரிய் பதவிகளை வகித்த போதிலும் சிறையில் தள்ளப்பட்டு அடி, உதை என அவமானப்படுத்தப்பட்டு பல்வேறு  கொடுமைகளையும் அனுபவித்துள்ளார்.  அவர் பட்ட வேதனைகளுக்கும் வலிகளுக்கும் அளவுகோல் கிடையாது. அவர் சிந்திய கண்ணீர், வியர்வை, ரத்தம் ஆகியவற்றை சிந்தியே இன்னமும் அரசியல் களத்தில் போராடி கொண்டிருக்கிறார்.
ராய்டு

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் ஒப்புக் கொண்டதை போல நாட்டின் பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பதையே தாங்கள் விரும்புவதாக  ஆனந்தன் தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக சித்தாந்த்தில் நாட்டை சிறப்பாக ஆட்சி புரிந்திட டத்தோஸ்ரீ அன்வாரே தகுதி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை கொள்வதாக அதன் ஆலோசகர் ராய்டு தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராஃப் போராட்டவாதிகள் 5 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கைது செய்யப்பட்டபோது அதற்கெதிராக மனித உரிமை நசுக்கப்படுவதாக முதல் குரல் எழுப்பியவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான்.

இந்நிலையில்  சீர்திருத்தப் போராட்டத்தின் இலட்சியவாதத்தைத் தொடரவும், பக்காத்தான் ஹராப்பனின் (பி.எச்) தூணாகவும் இருக்க அன்வாருக்கு  வலுவான ஆதரவை வெளீபடுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

பெரும் சவாலாக அமைந்துள்ள நாட்டின் அரசியல் போர்க்களம்  ஒரு போராளியாக நிற்கின்ற அவரின் போராட்டத்திற்கு நமது கரங்களை ஒன்றிணைப்போம் என்று அவர்ர் சொன்னார்.

அதோடு,  14ஆவது பொதுத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் விரும்பியது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதான்.  அதனால்தான் துன் மகாதீருக்கு பிறகு அன்வார்தான் பிரதமர்  என்ற கூட்டணி ஒப்பந்தத்தை மக்கள் நம்பி பக்காத்தான் ஹராப்பானை வெற்றி பெறச் செய்தனர் என்று மலேசிய இந்தியர் குரலின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.

ஈராண்டுகால ஒப்பந்தம் முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்றிருப்பார். ஆனால் அரசியல் சதிராட்டத்தில் இப்போது வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

போராட்டக் களம் அவருக்கு புதியதல்ல. துரோகிகளின் சூழச்சியை வென்று 9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் பதவியேற்பதற்கு சிலாங்கூர் மாநில மலேசிய இந்தியர் குரல் உறுதுணையாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

Friday, 29 May 2020

பள்ளிகள் மீண்டும் திறப்பதில் பல்வேறு விவகாரங்கள் ஆராயப்பட வேண்டும்- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படுவதில் பல்வேறு விவகாரங்கள் ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசியர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல் நடைமுறை (SOP), மாணவர் எண்ணிக்கை, வகுப்புகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இடைவெளி, மாணவர் பாதுகாப்பு, உடல் வெப்பப் பரிசோதனை ஆகிய விவகாரங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் தற்போது கல்வி கற்கும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது இதே நடைமுறை கடைபிடிக்கப்படாது. 15க்கும் குறைவான மாணவர்களே  ஒரு வகுப்பில் இருக்க முடியும் என்ற புதிய விதிமுறை அமலாக்கம் செய்யப்படும்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

வகுப்புகளில் மாணவர்கள் குறைக்கப்படும்போது ஒரு நேர வகுப்பாக இருந்த கல்வி முறை இனி காலை, மாலை நேர வகுப்புகளாக செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

பள்ளி கல்வி முறை தொடங்கப்படுவதில் அவசரம் காட்டப்படாமல் பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து தீவிர முடிவு எடுக்கப்படுவது அவசியமாகும் என்று சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு அவர் வலியுறுத்தினார்.

Thursday, 28 May 2020

குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதா? சட்டங்களை கடுமையாக்குக- வீரன்

ரா.தங்கமணி

தைப்பிங்-
குடிபோதையில் வாகனங்களை செலுத்தி விபத்துகளை ஏற்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு நடப்பிலுள்ள சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டு என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் வலியுறுத்தினார்.
குடிபோதையில் வாகனங்களை செலுத்தி விபத்தை ஏற்படுத்துவதோடு அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அண்மைய காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இத்தகைய போக்கு மலேசியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை பெரும்பாலான வாகனமோட்டிகள் தவிர்க்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இப்போது அமலில் இருக்கும் சட்டத்தை வாகனமோட்டிகள் பெரிதாக கருதாததாலேயே இவ்விபத்துகள் நிகழ்கின்றன.

அதனை தவிர்ப்பதற்கு நடப்பிலுள்ள சட்டம் திருத்தம் செய்யப்பட்டு கடுமையான விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான வீரன் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19: நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் மரணம்

உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் உயிரிழந்துள்ளதாக மலேசியா அமெரிக்கா சங்கம் தெரிவித்துள்ளது.
அதில் இருவர் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர் என்று அதன் தலைவர் கிம் போங் தெரிவித்தார்.

ஓர் உணவக உரிமையாளர், ரயில் நிலையத்தில் தொற்றுக்கு ஆளான ஒருவர் மட்டுமல்லாது புரூக்ளினில் வசித்து வந்த ஒரு மலேசிய தம்பதியர் மரணமடைந்துள்ளனர். இந்த தகவல் யாவும் கடந்த வாரம் கிடைக்கப்பெற்றது என்று அவர் சொன்னார்.

நியூயார்க் நகரில் 30 மலேசியர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

நியூயார்க் நகரில் மட்டும் கோவிட்-19க்கு 360,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23,282 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த கொடிய நோய்க்கு அமெரிக்காவில் இதுவரை 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

Wednesday, 27 May 2020

மக்களா? பொருளாதாரமா?- அரசின் நிலைப்பாடு என்ன?

கோலாலம்பூர்-
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட பரவலுக்கி மலேசியா தன்னை எவ்வாறு தயார்படுத்தி கொள்ளப் போகிறது எனும் கேள்வி எழுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் பரவத் தொடங்கிய  கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக க மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ஓரளவு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மே மாதம் முதல் இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்துறைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்வழி வீட்டுக்குள் முடங்கி கிடந்த பலர் தங்களது வேலை காரணமாக வெளியே வர தொடங்கினர்.

கோவிட்-19 பரவலை முற்றிலுமாக துடைத்தொழிக்கப்படாத நிலையில் மக்களை வெளியே நடமாட்ட விட்டதன் விளைவு தற்போது குறைந்து வந்த பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சில நாட்களாக இரு இலக்காக இருந்த இவ்வெண்ணிக்கை தற்போது மூன்று இலக்காக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனும் அச்சத்தில் மக்களின் உயிரா? நாட்டின் பொருளாதாரமா? எனும் கேள்வி அரசாங்கத்தை நோக்கி எழலாம்.

இந்த வைரஸ் தொற்றினால் பல தொழில்கூடங்கள் முடக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டதை அனைவரும் அறிவோம்.

இன்னும் பொருளாதாரச் சரிவை சந்தித்தால் அது நாட்டுக்கு உகந்ததல்ல எனும் நிலையிலே தொழில்துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

இப்போது மீண்டும் இரண்டாம் கட்ட வைரஸ் பரவல் தொடங்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் பங்களிப்பு துரிதமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மக்களா? பொருளாதாரமா? எனும் கேள்விக்கு அரசாங்கம் எடுக்கவிருக்கும் ஆக்ககரமான முடிவு என்னவாக இருக்கும்?

டிரெய்லர் லோரி- வேன் விபத்து- ஒரு கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நிலைகுத்தியது

பெராங்-
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் பெராங் அருகே  டிரெய்லர் லோரியும் பாதுகாவலர் வேனும்  மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் டிரெய்லர் லோரி வேனை மோதி எதிர்திசை சாலையில் நுழைந்தது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ், தீயணைப்பு படையினர் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி உதவினர். 

இணையம் வழி இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்- லிம் சாடல்

பெட்டாலிங் ஜெயா-
ஜசெகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இணையம் வழி பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்ட சம்பவத்தை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடுமையாக சாடியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் வழங்கப்படுவது ஒரு குற்றச்செயல் என கூறியுள்ள அவர், சமூகவியல் பிரச்சினையான இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய் ஆகியோருக்கு இணையம் வழி நிகழ்த்தப்பட்ட  பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக இணையம் வழி பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்படுபது தொடர்பில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சும் காவல் துறையும் பெண்கள் பாதுகாக்கப்பட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் பாதுகாப்பு கழகம் (அவாம்) வலியுறுத்தியுள்ளது.

ஜமாலியா, லிம் ஆகியோருக்கு பேஸ்புக் வழி மத விவகாரம், பாலியல் அச்சுறுத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற அநாகரீகமான மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அண்மையில் பேஸ்புக் வழி பகடிவதைக்கு ஆளான பினாங்கைச் சேர்ந்த 20 வயதான திவ்யநாயகி ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது மலேசியர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.



மதுவை தடை செய்வதை காட்டிலும் சட்டங்களை கடுமையாக்குக- வர்த்தகக் குழுமம் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா-

குடிபோதையில் வாகனமோட்டி விபத்துகள் ஏற்படும் சம்பவங்களை களைவதற்கு தீர்வாக மது உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்துவதற்கு பதிலாக நடப்பில் உள்ள சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வர்த்தக குழுமம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.


மது விற்பனையை தடை செய்வதை காட்டிலும் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதே சிறந்த தீர்வாகும் என்று மலேசியா- சிங்கப்பூருக்கான காஃப்பி கடை உரிமையாளர்கள் பொதுச் சங்கத்தின்  தலைவர் ஹு சு மோங் தெரிவித்தார்.

கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தால் அச்சட்டத்தை மீறுவதற்கு மது அருந்துபவர்கள் யோசிக்கக்கூடும். அண்டை நாட்டில் மது அருந்துபவர்களிடம்  இதுபோன்ற பிரச்சினைகள் காண முடிவதில்லை. ஏனெனில் அங்கு சட்டம் கடுமையாக உள்ளது.

இங்கு குடிபோதையில் வாகனம் செலுத்தினால் அதற்கான அபராதம் குறைவாக உள்ளது. பிறருக்கு ஆபத்தை விளைவிப்பது கடுமையான குற்றமாக வகைப்படுத்த வேண்டும்..

முதன் முறையாக தவறு இழைப்பவர்களுக்கு  100,000 வெள்ளி அபராதமும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டால் , அதுவொரு குற்றச்செயலென வகைப்படுத்தினால் தவறிழைப்பவர்கள் அச்சம் கொள்ளக்கூடும் என்று அவர் மேலும் சொன்னார்.


கோவிட் -19: நேற்று 172- இன்று 187

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 187 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று 172 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 187 ஆக உயர்ந்துள்ளது .

கடந்த 24 மணிநேரத்தில் யாரும் மரணமடையாத நிலையில் மரண எண்ணிக்கை 115 ஆக உள்ளது.

Tuesday, 26 May 2020

மீண்டும் மூன்று இலக்காக உயர்ந்த கோவிட்-19 பாதிப்பு

கோலாலம்பூர்-
உயர் கொல்லி நோயான கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் மூன்று இலக்காக உயர்ந்துள்ளது.
கடந்த  சில நாட்களாக இரு இலக்காக மட்டுமே இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 172 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று 60ஆக மட்டுமே இருந்த இந்த எண்ணிக்கை இன்று மூன்று இலக்காக உயர்ந்துள்ளது மலேசியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இன்று புதிய மரணம் எதும் நிகழாத நிலையில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,417ஆக உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் கார்த்திக் மரணம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் தொகுதி மஇகா இளைஞர் பிரிவிலும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் துடிப்புடன் செயல்பட்டு வந்த ஆசிரியர் கார்த்திக் சந்திரன் (வயது 33) அகால மரணமடைந்தது இவ்வட்டார பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்றிரவு கம்போங் கமுனிங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த்தில் பலத்த காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார் என அறியப்படுகிறது.

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் பயிற்சி ஆசிரியராக பணியை தொடங்கிய கார்த்திக், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு பின்னர் பந்திங்கில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்தார்.

சுங்கை சிப்புட் சுங்கை ரேலா மஇகா கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொது இயக்கங்களின் வாயிலாகவும் கார்த்திக் பல சேவைகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அவரின் இழப்பு சுங்கை சிப்புட் மஇகாவுக்கு பேரிழப்பு என்று அதன் தலைவர் இராமகவுண்டர், செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் கார்த்திக்கின் மரணச் செய்தியை அறிந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் இராஜகோபால், பேரா மஇகா தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

Sunday, 24 May 2020

பேரா ஆட்சிக்குழு உறுப்பினரிடம் இரு கோரிக்கைகளை முன்வைத்தது சுங்கை சிப்புட் மஇகா

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி சூல்கிப்ளியை சுங்கை சிப்புட் மஇகாவினர் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

முதன்முறை லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளது வரலாற்றுப்பூர்வமானதாகும்.

இந்த சந்திப்பில் இரு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் நிலையில் இங்குள்ள ஓர் இந்தியரை அதிகாரியாக  நியமிக்க வேண்டும்.  சுங்கை சிப்புட்டில் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் வகையில் இந்த நியமனம் அமைய வேண்டும்.

அதோடு, சுங்கை சிப்புட்டில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

நில விவகாரங்கள் அனைத்தும் மாநில ஆட்சிக்குழுவை சார்ந்த நிலையில் இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மஇகா முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.

சுங்கை சிப்புட்டில் பல நிலப் பிரச்சினைகள் உள்ளன. விவசாயம், குடியிருப்பு, கால்நடை வளர்ப்பு என பல பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மஇகா பல காலமாக போராடி வருகிறது.

அவற்றுக்கு உரிய தீர்வு காண்பதற்கு டத.தோ சூல்கிப்ளி ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மஇகா கோரிக்கை விடுத்தது என்று அவர் சொன்னார்.
கோரிக்கையை டத்தோ சூல்கில்ளியிடம்
வழங்கும் ராமகவுண்டர்

இந்த சந்திப்பில் சுங்கை சிப்புட் மஇகா தலைவர் ராமகவுண்டர், துணைத் தலைவர் கி.சேகரன், உதவித் தலைவர் அண்ணாமலை உட்பட நிர்வாகக் குழுவினர் இடம்பெற்றனர்.

Saturday, 23 May 2020

கோவிட்-19: தனிமைபடுத்தப்பட்டார் பிரதமர்

புத்ராஜெயா-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார் என்று பிரதமர் துறை இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று தொடங்கி 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆயினும் இன்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓர் உயிரை பறிப்பதுதான் உங்களின் இலக்கா? டத்தோஶ்ரீ தனேந்திரன் காட்டம்

ரா.தங்கமணி 

பட்டர்வொர்த்-

தன்னுடன் பணிபுரியும் சக பணியாளருடன் ‘டிக் டாக்’ காணொளி செய்தற்காக 20 வயது இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகடிவதையின் பலனாக இன்று சமூக ஊடகப் போராளிகள் தங்களது இலக்கில் வெற்றி கண்டுள்ளனரா? என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
போலி முகநூல் பக்கத்தில் திவ்யநாயகி எனும் பெண்ணின் டிக் டாக் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொரட்ந்து அங்கு பதிவு செய்யப்பட்ட காரசாரமான  கருத்துகளால் மனவேதனை அடைந்த அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனும் செய்தி மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்திய சமுதாயத்தின் தவறான வழிகாட்டல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியின் உண்மைதன்மையை அறியாமல் பகிரப்பட்ட கருத்துகள் அந்த பெண்ணை மனமுடையச் செய்துள்ளதே அவரின் இந்த முடிவுக்கு காரணமாகும்.

ஒரு பெண் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைதான் சமூக ஊடகப் போராளிகள் விரும்புகின்றனரா? அவ்வாறாயினும் அந்த பெண் இழைத்துள்ள குற்றம் தான் என்ன?

தன்னுடன் பணிபுரியும் அந்நிய நாட்டவருடன் டிக் டாக் காணொளி செய்தது அப்பெண்ணின் தனிபட்ட உரிமை. அதனை கேள்வி எழுப்பும் அதிகாரம் அப்பெண்ணின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது.
இத்தகைய சூழலில் அப்பெண்ணின் நடத்தை குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டு அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது சமூக ஊடக பயன்பாட்டின் கீழ் குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

அதோடு போலி முகநூல்  பக்கத்தின் வழி அப்பெண்னை களங்கப்படுத்திய சம்பந்தப்பட்ட ஆடவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய டத்தோஶ்ரீ தனேந்திரன், மனவலிமை இல்லாதோரை பகடிவதை செய்வது அவர்களை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டுச் செல்லலாம் என்பதை சமூக ஊடகப் போராளிகள் இனியாவது புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கோவிட்-19; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78ஆக உயர்வு

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 78ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,137ஆக பதிவாகியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ள வேளையில் 63 பேர் இந்நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.

Friday, 22 May 2020

Fake Profile: இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர் ஒருவன்'

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'வறுமை கோட்டில் வாழும் குடும்பம். கணவரின் மாதச் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. உடனே தனது சமையல் கலையை மலாய் மொழியில் விவரிக்கும் காணொளியை யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்கிறார். அது மக்களின் அமோக வரவேற்பை பெற்று நாடே அறியும் பெண்ணாக மாற்றியதோடு பிரதமர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மீடியாக்கள் என பாராட்டுகள் குவிந்த்தோடு யூ டியூப் சேனலின் வழி முதல் வருமானத்தையும் பெறுகிறார்". இது திருமதி பவித்ராவின் கதை.

"20 வயது நிரம்பிய குமரி பெண் தன்னுடன் பணிபுரியும் சகப் பணியாளருடன் 'டிக் டாக்' செயலியின் வழி எடுத்த காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட அதை கண்ட சமூகவாதிகளின் கொந்தளிப்பான வார்த்தைகள் அந்த இளம் பெண்ணின் இதயத்தை கீற, ரணகணமான இதயத்துடன் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் துயர முடிவை எடுக்கிறாள். மரணம் தழுவிக் கொள்ள தாயின் கரங்களில் சவமாய் விழுகிறாள்". இது குமாரி திவ்யநாயகியின் கதை

இவ்விரு சம்பவங்களும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் மலேசியாவில் அண்மையில் அரங்கேற்றப்பட்ட சம்பவங்களாகும்.

வறுமையில் வாழும் ஒரு பெண்ணை வாழ்த்தி வாழ வைத்த சமூக ஊடக பயனர்கள்தான் 20 வயதே நிரம்பிய ஒரு பெண்ணை சவக்குழியில் தள்ளியதற்கும் காரணியாக அமைந்துள்ளனர்.
அந்நிய நாட்டவரான சக பணியாளருடன் டிக் டாக் காணொளியில் இருந்த ஒரே காரணத்திற்காக சமூகத்தின் பார்வையில் தவறான கண்ணோட்டத்தில் ஆவேசமான வார்த்தைகளால் அரச்சிக்கப்பட்டதன் விளைவே திவ்யநாயகி மரணத்தை தழுவி கொண்டார்.

சமூக ஊடகம் இரு பக்கமும்  கூர்மையை கொண்ட கத்தியை போன்றது. நல்லதும் தீயதும் உடனே அரங்கேற்றப்படும் நிலையில் தலையும் தெரியாமல் வாலும் புரியாமல் அதிமேதாவிகளாக செயல்படும் அரைவேக்காடுகளின் செயலால் ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

'ஜோக்கர் ஒருவன்' எனும் பொய்யான ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த பெண்ணின் காணொளியின் உண்மைத்தன்மை எதுவென அறியாத மந்தைகூட்டம் அர்ச்சனை மழைகளை பொழிந்துள்ளது.

வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணை சவக்குழியில் தள்ளிய 'ஜோக்கர் ஒருவன்' மட்டும் இங்கே குற்றவாளி அல்ல.. உண்மை நிலவரம் எதுவென தெரியாமல் அலைமோதும் கீ போர்ட் போராளிகளும் குற்றவாளிகளே அவரவர் மனசாட்சியின் முன்பு.

தனது உண்மை முகத்தை கூட வெளியே காட்ட துணிவில்லாமல் பொய்யின் பின்னால் ஒளிந்து கொண்டு இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர் ஒருவன்' கோழையே ஆவான்.

ஆண்மையில்லாத ஒரு கோழையின் செயலுக்கு அஞ்சி திவ்யநாயகி தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டது பெண்ணியத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மருட்டலாகும்

அதை இப்போதே களையெடுக்க தவறிவிட்டால் நம் வீட்டிலும் ஒரு 'திவ்யநாயகி' வீழ்த்தப்படலாம். 

ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறதென்றால. அதன் உண்மைத்தன்மையை அறிய போராடுங்கள். அதை விடுத்து வெறும் கீ போர்ட் போராளிகளாக மட்டும் விளங்க வேண்டாம். பின்னாளில் களையெடுக்கப்பட வேண்டியவர்களாக நீங்களே உருவாகலாம்.