Wednesday 28 October 2020

10 ஆண்டுகளை கடந்த வரலாற்று சிறப்புமிக்க பிரீக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா

கோலாலம்பூர்-

கோலாலம்பூரில் உள்ள பழைய இந்திய குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கி வந்த பிரிக்பீல்ட்ஸின், நகர்புற அந்தஸ்தை அங்கீகரிக்கும் விதமாக 2009-இல் லிட்டில் இந்தியா மஸ்ஜிட் இந்தியாவிலிருந்து பிரிக்பீல்ட்ஸ்-க்கு மாற்றம் கண்டது.

அன்றைய கூட்டரசு பிரதேச மற்றும் நகர்புற நல்வாழ்வு துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் எண்ணத்தில் உதித்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின் பிரமாண்ட தோற்றம் அக்டோபர் 27, 2010- இல் ஒரு புதிய லிட்டில் இந்தியாவாக திறப்பு விழா கண்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு, அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் மிக கோலாகலமாக அரங்கேற்றம் கண்டது.

புதிய நுழைவாயில், கலை நயத்தோடு வளைவுகள்,  பரந்த தெருக்கள், யானை நீரூற்று, அலங்கார தூண்கள், வர்ண அலங்கார விளக்குகள் என பார்த்ததும் ஒரு கம்பீரம், மிடுக்கு, கலை நயம் நிறைந்த லிட்டில் இந்தியாவின் திறப்பு விழாவைக் காண 5000-யிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும், சுற்று வட்டார மக்களும், முக்கியப் பிரமுகர்களும் அலையென திரண்டனர்.

நகரத்தின் நடுவில் இந்திய பாரம்பரியம், கலை கலாச்சாரம் நிறைந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. என்றென்றும் நிலைத்திருக்கும் அந்த பெருமையை நமக்கு வழங்கிய டத்தோஸ்ரீ எம்.சரவணனின் இந்த திட்டம் பாராட்டுக்குரியது.



சுற்றுலாத் தளமாகவும், இந்தியர்களின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் ஒரே இடமாகவும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா அமைந்திருப்பதில் மகிழ்ச்சியே. அதுவும் விழாக்காலங்களில் மக்கள் கூட்டமும், தோரணங்களும், விளக்குகளும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

பிரபல சமையல்காரர், ஷெர்சன் லியானுடன் பிரத்தியேக, ஆக்கப்பூர்வமான மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பு

கோலாலம்பூர்-

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் மலேசியாவின் சமையல் நிபுணரும் பிரபல சமையல்காரருமான ஷெர்சன் லியனுடன் Level Up! On The Table with Chef Sherson Lian’ எனும் நேரலை மெய்நிகர் சமையல் மாஸ்டர் வகுப்பில் பங்கேற்று பயன் பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களின் இடங்களை முன்பதிவு செய்ய 2020 நவம்பர் 14 வரை ஆஸ்ட்ரோ ரிவார்ட்ஸ் வலைத்தளம் வழியாக பதிவு செய்யலாம்.

‘5 Rencah 5 Rasa’ மற்றும் ‘Family Kitchen with Sherson’ போன்ற பிரபல சமையல் நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற சமையல்காரரிடமிருந்து ஒரு வகை பிரதான உணவு மற்றும் ஒரு இனிப்பு வகை உணவு உள்ளிட பிரபலமான சுவையான இரு உணவுகளை தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்வதோடு வாடிக்கையாளர்கள் தங்கள் சமையல் அறிவையும் ஆழப்படுத்தலாம்

இவ்வாக்கப்பூர்வமான வாய்ப்பில் பங்கேற்க முடியாத வாடிக்கையாளர்கள் Level Up! On The Table with Chef Sherson Lian’-ஐ முகநூல் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்லாத அனைத்து மலேசியர்களுக்கும் கிடைக்கப் பெரும் இந்நிகழச்சியை The Jiffies’, எனும் உள்ளூர் செய்தி, வாழ்க்கை முறை மற்றும் பொழுதுபோக்கு போர்டலிலும் கண்டு மகிழலாம்.

Friday 23 October 2020

அவசரகால நிலையை பிரகடனப்படுத்துகிறதா மலேசியா?

 கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அவசர கால நிலையை பிரகடப்படுத்த மலேசியா தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 800க்கும் மேலாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் மாமன்னரின் சந்திப்புக்கு பின்னர் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கவுள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்துள்ள அமைச்சர் ஒருவர், ‘அறிவிப்புக்கு காத்திருங்கள்’ என கூறியதாக அத்தகவல்கள் கூறுகின்றன.


Thursday 22 October 2020

இந்தியர்களுக்கான உதவித் திட்டங்களில் சிலாங்கூர் மாநில அரசு என்றுமே முன்னோடி - கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்திய சமூகத்திற்கு அதிகமான ஒதுக்கீடுகளையும் மானியங்களையும் வழங்கி வருவதில் சிலாங்கூர் மாநில அரசு எப்போது முன்னோடியாக விளங்கி வருகிறது. ஆலயங்களுக்கு மட்டுமல்லாது  தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்கள் என பல்வேறு வகையில் இந்த உதவித் திட்டம் படர்ந்து கிடக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

வீ.கணபதிராவ்

இம்மாநிலத்திலுள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்காக இவ்வாண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 121 ஆலயங்களுக்கு 13 லட்சம் வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் மானிய கோரிக்கை விடுத்த 41 ஆலயங்களுக்கான 2 லட்சத்து 54 ஆயிரம் வெள்ளிக்கான காசோலை தமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆலய தரப்பினர் பெற்றுக் கொள்ளலாம்.  பிகேபிபி நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் சம்பந்தப்பட்ட ஆலயங்களுக்கான மானியம் அலுவலகத்திலேயே வழங்கப்படுகிறது. எஞ்சிய ஆலயங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் கூடிய விரைவில் அந்த மானியங்களும் விநியோகிக்கப்படும். 

ஆலயங்களுக்கு செய்யும்  உதவி தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களுக்கும் செய்யலாமே? என சில தரப்பினர் கேள்வி எழுப்பலாம். தமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர் மாநில அரசு ஒருபோதும் கைவிட்டதில்லை.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு நட வடிக்கைகளுக்காக 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது. இந்நிதி பள்ளி நிர்வாகங்கள்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவையறிந்து வழங்கப்படுகிறது. 

கோப்புப் படம்

அதோடு தோட்டப் பாட்டாளி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் வெ.2,000க்கும் குறைவான குடும்ப வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி பேருந்து கட்டணமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் இவ்வாண்டு இந்நிதியை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 3,500ஐ எட்டியுள்ளது.

அதுமட்டுல்லாது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்கின்ற 600க்கு அதிகமான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு நிதியுதவி வழங்கப்பட்ட சூழலில் இன்னும் சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதுவும் கூடிய விரைவில் வழங்கப்படும். 

மேலும், ஆண்டுதோறும் யூபிஎஸ்ஆர் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழா இவ்வாண்டு கோவிட்-19 தொற்று காரணமாக நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனை அடுத்தாண்டு நடத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்திய சமுதாயத்திற்கு ஆக்ககரமான நடவடிக்கைகளை சிலாங்கூர் மாநிலா அரசு முன்னெடுத்து வரும் நிலையில் இந்த உதவிகளை பெற விரும்பும் தரப்பினர் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உதவிகள் கிடைக்கப்பெறும். அதில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பின்போது மக்கள் வீட்டுக்குள் முடங்கியபோது ஆலயங்களின் பங்களிப்பு இந்திய சமுதாயத்தைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் மாநில அரசு அறிமுகப்படுத்திய 'அட்சயப் பாத்திரம்' திட்டத்தில் பங்கேற்று இந்திய மக்களுக்கு பல்வேறு வகையில் பொருளுதவிகள் வழங்கி உதவிய ஆலய நிர்வாங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக  கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.

உடல் செயலிழந்த பவித்ரனுக்கு உதவிக்கரம் நீட்டியது சுங்கை சிப்புட் புளூ பிரதர்ஸ் சமூகநல இயக்கம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

விபத்தொன்றில் சிக்கி கடந்த ஈராண்டுகளாக உடல் செயலற்ற நிலையில் தவிக்கும் இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது சுங்கை சிப்புட் புளூ பிரதர்ஸ் சமூகநல இயக்கம்.

சுங்கை சிப்புட், கம்போங் முஹிபாவைச் சேர்ந்த 25 வயதான பவித்ரன் விபத்தொன்றில் சிக்கி உடல் செயலிழந்த நிலையில் படுக்கையிலேயே தனது வாழ்நாளை கடத்தி வருகிறார். அவரை அவரது சகோதரியும் மாமாவும் பராமரித்து வந்த நிலையில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்ததால் பவித்ரனுக்கு வேண்டிய பால் மாவு, உணவுப் பொருட்கள், உலர் துணிகள் (PAMPERS) ஆகியவற்றை வாங்குவதற்கு பண நெருக்கடியை எதிர்கொண்டனர்.

பவித்ரனின் நிலையை அறிந்த சுங்கை சிப்புட் புளூ பிரதர்ஸ் சமூகநல இயக்கத்தின் தலைவர் முருகேசன் சுப்பிரமணியம், அவர்தம் குழுவினர் 2,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை வழங்கி உதவினர்.

கோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக பலர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பவித்ரனின் சூழ்நிலையை உணர்ந்து அவருக்கு உதவிக்கரம் நீட்டியதாக முருகேசன் குறிப்பிட்டார்.

பவித்ரனின் வீட்டுக்குச் சென்ற முருகேசன், இயக்கத்தின் உதவித் தலைவர் பாலன், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் பவித்ரனின் மாமா, சகோதரியிடம் உதவிப் பொருட்களை வழங்கினர்.

Thursday 15 October 2020

அரசியல் சர்ச்சைகளை தவிர்த்து மக்கள் நலனில் அக்கறை கொள்க- மலேசிய இந்தியர் குரல்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

மனுகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கோவிட்-19 பாதிப்பு நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் சர்ச்சைகளை கைவிட்டு மக்கள் நலனில் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் ரா.ஆனந்தன் வலியுறுத்தினார்.

கோவிட் -19 பாதிப்பு நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும் என்பதே அனைவரின்  எண்ணமாகும். இந்த வைரஸ் பரவினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு பலர் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவதை அரசாங்கம் மட்டுமல்லாது பிற அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.

எப்போதும் அரசியல் சர்ச்சைகளுக்கு மதியில் மக்களை பீதிக்குள்ளாவதை தவிர்த்து விட்டு இக்கட்டான கோவிட் காலத்தில் மக்கள் நலனின் அக்கறை செலுத்த வேண்டும்.

அதேபோன்று வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு கூடுதல் உதவித் திட்டங்களை அமல்படுத்துவதன் வழி அவர்களின் குடும்பச் சுமையும் அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கும் ஒரு தீர்வு காணப்படும் என்று ஆனந்தன் குறிப்பிட்டார்.

Monday 12 October 2020

முஹிடினுக்கே ஆதரவு; அன்வாருக்கு இல்லை- மஇகா விளக்கம்

கோலாலம்பூர்-

புதியதொரு அரசாங்கம் அமைப்பதாக அறிவித்துக் கொண்ட பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூட்டணியில் மஇகா இடம்பெற்றிருக்கவில்லை என்று அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தாம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் பெரும்பான்மை இழந்து விட்டதால் புதிய அரசாங்கத்தை அமைக்க மாமன்னரை சந்திக்கவிருப்பதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

ஆனால், தேசிய முன்னணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கே முழுமையான ஆதரவை வழங்குவதால் மஇகா அதே முடிவை பின்பற்றவிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முடிவெடுத்துள்ளார்.

டத்தோஶ்ரீ  அன்வாரை ஆதரிப்பதற்கான  எந்தவொரு பரிந்துரையையும் மஇகா பெறவில்லை எனவும் டான்ஶ்ரீ முஹிடினுக்கே மஇகா தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday 6 October 2020

தெலுக் இந்தான் ஜசெகவின் சொத்து கிடையாது- ஸ்ரீ முருகன்

ரா.தங்கமணி

தெலுக் இந்தான் -

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை ஜசெகவிடமிருந்து  தேசிய முன்னனி மீட்டெடுக்கும். அதற்கான களப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மஇகா இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் ஶ்ரீ முருகன் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் ஜசெகவின் கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் அது 2018 பொதுத் தேர்தலோடு முடிந்து  விட்டது. இனி இத்தொகுதியில் புதிய அத்தியாயம் எழுதப்படும்.

கடந்த பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியை குறை கூறியே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை பிடித்தது. தேசிய  முன்னணியை பலவீனமான அரசாங்கமாக சுட்டி காட்டி மக்களிடம் விஷமத்தனமான பிரச்சாரங்களை ஜசெக உட்பட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் மேற்கொண்டனர்.

தெலும் இந்தான் தொகுதி என்றும் ஜசெகவுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து அல்ல. 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜசெக இத்தொகுதியை வென்றிருந்தாலும் 2014ஆம் ஆண்டு இத்தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜசெக மண்ணைக் கவ்வி தேசிய முன்னணி வெற்றி கொடி நாட்டியதை சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் மறந்து விடக்கூடாது.

கடந்த தேர்தலில் தேமுவை குறை சொல்லி ஆட்சியை பிடித்த பக்காத்தான் கூட்டணி ஒரு படுமோசமான ஆட்சி வழங்கியதை மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை. கடந்த தேர்தலில் தேமுவை குறை சொல்லி ஆட்சியை பிடித்தவர்கள் இனி வரும் தேர்தலில் என்ன குறை சொல்லி வாக்குகளை சேகரிக்கப் போகிறார்கள்? அங்குள்ள வாக்காளர்களும் நடப்பு அரசியலை உணர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

தேமுவின் ஆட்சியை குறை கூறினால் உங்களில் (பக்காத்தான் ஹராப்பான்) 22 மாத கால ஆட்சியின் பலவீனம் குறித்து கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.

மஇகாவை இந்தியர்களுக்கு எதிரான கட்சியை சித்திரித்து வாக்கு சேகரித்த காலம் மலையேறி விட்டது. பக்காத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்களை காட்டிலும் மஇகா தலைவர்களே மேலானவர்கள் என்பதை இந்த 22 மாத கால ஆட்சியில் இந்தியர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும் ஜசெக பல இன மக்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சி.. அதனால் இந்தியர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆனால் மஇகா இந்தியர்களின் பிரதிநிதி கட்சி. தேசிய அரசியல் நீரோட்டத்தில் இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி என்பதையும் இந்தியர் உணர்ந்து விட்டனர்.

வரும். பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான. தொகுதியில் மஇகா போட்டியிடிவதற்கி ஆயுத்தமாக உள்ளது.

அதன் அடிப்படையில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்படும் என்று ஶ்ரீமுருகன் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை நிச்சயம் தற்காப்போம் என்று பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசனின் நாளிதழ் அறிக்கைக்கு பதிலடியாக ஶ்ரீமுருகன் இவ்வாறு கூறினார்.

Sunday 4 October 2020

பெட்பேர்ட் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகளியர் குழு உதயம்

தஞ்சோங் சிப்பாட்-

பெட்போர்ட் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகளியர் குழு புதியதாக உதயமானது.

ஆலய நிர்வாகத்திற்க்கு பக்க பலமாக செயல்ப்படவிருக்கும் இக்குழு ஆலய நிர்வாகத்தின் நேரடி பார்வையின் கீழ் திறன் கொண்டு செயல்படும் என்று ஆலயத்தலைவர் கு.வாசுதேவன் தெரிவித்தார்.

சமயம் சார்ந்த விவகாரங்கள்,கல்வி வகுப்புகள்,தேவார வகுப்புகள்,மகளியர் நல்வாழ்வு திட்டங்கள் என்று இந்த மகளியர் குழு குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகாரங்களை கையாளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூடியவிரைவில் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் ஆலய திருப்பணிக்கும் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் தோட்டத்தை விட்டு சென்றவர்களை மீண்டும் தோட்ட ஆலய விழாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியிலும் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தாம் அதிகமாக நம்புவதாக ஆலய ஆலோசகர்களில் ஒருவரான பத்மாநாபன் அய்யனார் தெரிவித்தார்.

பிகேபி-ஐ காட்டிலும் கூடுதல் கவனம் தேவை - கணபதிராவ்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

நாட்டில் தற்போது அதிகரித்து வரும்  கோவிட்-19 பாதிப்புகளால்  மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு (பிகேபி) மீண்டும் அமல்படுத்தப்படுவதை காட்டிலும் மக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதே சிறந்ததாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கம் கோவிட்-19 வைரஸ் தொற்று மலேசியாவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை பிகேபி-ஐ அமல்படுத்தியது.

இந்நடவடிக்கையினால் பல தொழிற்சாலைகளும் வணிக மையங்களும் மூடப்பட்டு பலர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டதோடு பல தொழிற்கூடங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு பலர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இப்போதுதான் தொழிற்கூடங்களும் வணிக மையங்களும் திறக்கப்பட்டு மீண்டும் மக்கள் வேலைக்குச் சென்று தங்களின் பொருளாதார நிலையை  வலுபடுத்திக் கொள்ளும் சூழலில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மீண்டும் மூன்று இலக்காக உயர்வு கண்டு வருகிறது.

இத்தகைய சூழலில் மீண்டும் பிகேபி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி மலேசியர்களிடையே எழுந்துள்ளது. மீண்டும் பிகேபி அமல்படுத்தி அதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியும் வேலை வாய்ப்பின்மையும் உருவெடுத்து விடக்கூடாது.

இதனால் நாடும் மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும் என்பதால் மக்கள் தங்களின் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கும் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், கோவிட்-19க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது, சமூக இடைவெளி, முகக் கவரி அணிதல் போன்றவற்றை மேற்கொண்டு கோவிட்-19 பாதிப்பிலிருந்து விலகி நிற்க மக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.


கோவிட்-19: சபா, கெடாவில் பிகேபி மீண்டும் அமல்படுத்த வேண்டும்- டத்தோ முருகையா

ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

கோவிட் 19  வைரஸ் தொற்று அதிகமாக காணப்படும் சபா, கெடா மாநிலங்களை சிவப்பு மண்டல பகுதியாக அறிவித்து அங்கு முழு மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) அமல்படுத்தப்பட வேண்டும் என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ தோ. முருகையா தெரிவித்தார்.

நாட்டில் 2ஆம் கட்ட அலையாக மீண்டும் உருவெடுக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து  உயர்வு கண்டு வருகிறது.

சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மக்கள், வணிகர்களால் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தொற்று தீபகற்ப மலேசியாவிலும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பிகேபி மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பை குறைப்பதற்கு ஏதுவாக நாடு முழுவதும் பிகேபி அமல்படுத்துவதை விட அந்த பாதிப்பு அதிகமாக உள்ள சபா, கெடா மாநிலங்களில் முழு அளவிலான பிகேபி-ஐ இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்தி பாதிப்பை  கண்காணிக்க வேண்டும்.

அதன் பின்னர் நாடு முழுவதும் பிகேபி அமல்படுத்தலாமா? அல்லது மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று  முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ முருகையா குறிப்பிட்டார்.


தனிமைப்படுத்திக் கொள்ள தவறியவர் அரசியல்வாதியானாலும் சட்டம் பாய வேண்டும்- கணபதிராவ்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சபா மாநிலத்தில் சென்று வந்தவர்களால்  தீகற்ப மலேசியாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலுக்கு காரணமானவர்கள் என்று கண்டறியப்படுபவர்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை பாய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்திற்குச் சென்று திரும்பிய ஆடவரால் கெடாவில் கோவிட்- 19 வைரஸ் தொற்று பரவியதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

‘சிவகங்கா திரள்’ என அடையாளமிடப்பட்ட அந்த வைரஸ் பரவலுக்கு காரணமான ஆடவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனது உணவகத்திற்குச் சென்றதால் அங்கு பலருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியதாக குற்றஞ்சாட்டி அவருக்கு கூடுதலான அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோன்று தற்போது சபா மாநில தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் கெடாவுக்கு வந்த அரசியல் பிரமுகர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் அவரின் துணையரின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பரவல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சத்தில் 600க்கும் அதிகமான மாண்வர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

இவ்விவகாரத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாய்ந்ததுபோல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள தவறிய அரசியல் பிரமுகருக்கு எதிராகவும் சட்டம் பாய வேண்டும்.

சட்டம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதை விடுத்து அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் மக்களுக்கு ஒன்றுமாக இருக்கக்கூடாது என்று கணபதிராவ் வலியுறுத்தினார்,


Saturday 3 October 2020

மக்கள் பிரச்சினையில் அதிரடி காட்டிய நாயகன் டத்தோ முருகையா/ #HBDDatoMurugiah

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

ஒரு பொதுத் தேர்தல் நடக்கிறது. அதில் கட்சித் தலைவர் தோல்வி காண்கிறார். ஆட்சி அமைக்கின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சியின் சார்பாக துணை அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். ஓர் பிரிவிக்கு தலைமையேற்கும் அந்த தனி மனிதரின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் அதுவரை அறிந்திராத ஓர் அரசு பிரிவு நாடு முழுவதும் அறியப்பட்ட துறையாக மாற்றம் காண்கிறது.  

ஆம்... பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்படும் பொது புகார் பிரிவில் அதிரடியை நிகழ்த்திய நாயக அந்தஸ்துக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல... பிரதமர் துறை அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ தோ. முருகையாதான்.

2008ஆம் ஆண்டு அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருந்த நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் அங்கம் அங்கம் வகித்திருந்த பல்வேறு அம்னோ, மஇகா, மசீச, கெராக்கான் உட்பட பல கட்சிகள் பெருமளவு தோல்வியைச் சந்தித்தன. அதில் பிபிபி எனப்படும் மக்கள் முற்போக்கு கட்சியும் தோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பின்னர் கூட்டணி அரசாங்கம் அமைத்த தேசிய முன்னணி அமைச்சரவையில் தனது பிபிபி கட்சியின் பிரதிநிதியாக டத்தோ முருகையாவை நியமித்தார் டான்ஸ்ரீ கேவியஸ்.

செனட்டர் பொறுப்பேற்று பிரதமர் துறை அமைச்சின் துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட டத்தோ முருகையாவுக்கு பொதுப் புகார் பிரிவு ஒதுக்கப்பட்டது.

பொதுப் புகார் பிரிவில் என்ன சாதிக்க முடியும்? என்ற ஏளனக் கேள்விகளுக்கு மத்தியில் வேலைக்காரனுக்கு வேலையை சொல்லி கொடுக்க வேண்டியதில்லை என்பதை உண்மையாக்கினார் டத்தோ முருகையா.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது எளிதல்ல. பலவிதமான பிரச்சினைகள், பலவாறான ரூபங்களில் தினம் தினம் அலுவலக வாயிலை தட்டின.

பிரச்சினைகளை கண்டு சளிக்கவில்லை... சளைக்கவில்லை.. வந்து குவிந்த புகார்களுக்கு தீர்வு காண களமிறங்கினார்.

சுகாதாரம், தூய்மைக்கேடு, வசிப்பிடப் பாதிப்பு, சமூகநலன், வாழ்வாதாரப் பிரச்சினை, அரசு துறைகளின் தீர்வு காணப்படாத கோப்புகள் என்று தனது அலுவலகக் கதவினை தட்டிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தானே களமிறங்கினார். பிரச்சினைகளுக்கு தீர்வும் கண்டார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண காட்டிய அதிரடி நடவடிக்கையினால் 'மக்கள் நாயகனாக' உயர்ந்தார்.

'உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? கவலைபடாதீங்க.. டத்தோ முருகையா அலுவலகத்துக்கு போங்க.. பிரச்சினை தீர்ந்திடும்' என மக்களே கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு பொதுப் புகார் பிரிவில் சாட்டையை சுழற்றினார் டத்தோ முருகையா.

மற்றவர்களின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கண்ட டத்தோ முருகையா ஒருவருக்கு பிரச்சினையாகவும் மாறினார்.

பிபிபி கட்சிக்கு நானே தேசியத் தலைவர் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் பதவியில் இருக்கும்போதே அதிரடியாக அறிவித்த டத்தோ முருகையாவின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியது.

தலைமைத்துவப் போராட்டம், சட்ட மோதல் என்று டான்ஸ்ரீ கேவியசுக்கும் டத்தோ முருகையாவுக்கும் மூண்ட அரசியல் போராட்டத்தின் விளைவாக 2009இல் பிபிபி கட்சியிலிருந்து டத்தோ முருகையா  நீக்கப்பட்டார்.

பிபிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் டத்தோ முருகையா புதிய கட்சியை தொடங்கலாம் என ஆருடம் வலுத்த சூழலில் 2010 ஆகஸ்ட் 5இல் அப்போதைய மஇகாவின் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவின் ஆலோசனையில்  தன்னை மஇகாவில் ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

10 ஆண்டுகாலமாக தன்னை மஇகாவில் இணைத்துக் கொண்டுள்ள டத்தோ முருகையா கட்சியின் உதவித் தலைவராக உயர்வு கண்டுள்ளதோடு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக இப்போதும் பம்பரம் போல் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.

துணை அமைச்சராக தன்னை மஇகாவில. இணைத்துக் கொண்ட டத்தோ முருகையாவின் ஒரு தவணைக்கான செனட்டர் பதவிக் காலம் நீட்டிக்கப்படாததால் துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவரோடு பொதுப் புகார் பிரிவும் செயலிழந்தது... மக்கள் சிந்தனையிலிருந்தும் மறைந்தே போனது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் டத்தோ முருகாயாவுக்கு 'பாரதம்' இணைய ஊடகம் பிறந்தநாள்  வாழ்த்துகளை. தெரிவித்துக் கொள்கிறது.

Tribute to SPB / Special Poem to SPB / எஸ்பிபி-க்கு கவிதை வரிகளில் நினை...

Tribute to SPB / Special Poem to SPB / எஸ்பிபி-க்கு கவிதை வரிகளில் நினை...