Wednesday 29 August 2018

குடியுரிமை அல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான ஹராப்பபான் தலைவர்கள் 'பொய்' சொல்லியுள்ளனர்- டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
குடியுரிமை இல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ' பொய்' மட்டுமே கூறி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றஞ்சாட்டினார்.

இந்நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

ஆனால், தற்போது குடியுரிமை இல்லாழ இந்தியர்கள் 3.853 மட்டுமே என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அஸிஸ் ஜமான், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்துரைத்துள்ள டத்தோஸ்ரீ நஜிப், இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் 'பொய்யையே' கூறி வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

குடியுரிமை அல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சியினர் குறை கூறிய போதிலும், அதை மறுத்த தேசிய முன்னணி அரசாங்கம் குடியுரிமை அல்லாத இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தது என டத்தோஸ்ரீ நஜிப் சொன்னார்.


Tuesday 28 August 2018

சீனி விலை 10 காசு குறைகிறது


புத்ராஜெயா-
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சீனியின் விலை 10 காசு குறைகிறது என்றுஉள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் டத்தோ சைபுடின் நசுத்தீன் இஸ்மாயில் அனிவித்தார்.

விலை குறைக்கப்படுவதை அடுத்து சந்தையில் சாதாரண சீனி ஒரு கிலோ வெ.2.85க்கும், தூள் சீனி ஒரு கிலோ வெ.2.95க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது என்றார் அவர்.


Monday 27 August 2018

குற்றங்களை துடைத்தொழிக்கிறோம் என்ற போர்வையில் நாமே குற்றமிழைக்கக்கூடாது- கணபதி ராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் தண்டனையை அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் "சோஸ்மா" சட்டத்தை அகற்ற பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

சோஸ்மா சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்ற தகவல் வேதனையளிக்கிறது.

சோஸ்மா சட்டத்தின் மூலம் ஒருவர் குற்றவாளி என உறுதிப்படுத்தப்படும் முன்பே சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது.
ஒரு குற்றவாளியை ஒடுக்குவதற்கு ஏற்கெனவே பல குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அச்சட்டத்தின் மூலம் ஒரு குற்றவாளியை களையெடுக்கலாமே தவிர அதற்கு
 'சோஸ்மா' சட்டம் ஆக்கப்பூர்வமாக அமையாது.

குற்றவாளி என உறுதிப்படுத்தும் முன்பே ஒருவரை தண்டிப்பது நியாயமாகாது. அதனை எந்தவொரு ஜனநாயக நாடும் ஏற்காது.

போலீசாரின் கடமையை எளிமையாக்குவதற்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்துவது ஏற்புடையதாகாது.

இதேபோன்றுதான் ஹிண்ட்ராஃப் காலத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ் தாம் உட்பட  ஹிண்ட்ராஃப்  போராட்ட வாதிகள் தடுத்து வைக்கப்பட்டோம்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கமுண்டிங் தடுப்பு காவலில் அடைக்கப்பட்ட எங்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனால் பல்வேறு இன்னல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.

அதேபோன்றதொரு நிலையைதான் தற்போது சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அவரது குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு "சோஸ்மா" சட்டம் அகற்றப்பட வேண்டும் எனவும் நடைமுறை குற்றவியல் சட்டங்களின் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குற்றம் இழைக்காதவர்கள் சிறையிலிருந்து விடுபட வேண்டும் எனவும் கணபதி  ராவ் வலியுறுத்தினார்.

குற்றங்களை துடைத்தொழிக்கிறோம் என்ற போர்வையில் நாமே (அரசாங்கம்) குற்றம் இழைக்கக்கூடாது என அவர் மேலும் சொன்னார்.

குறைந்த கட்டணத்திலேயே தீபாவளிச் சந்தை கடைகள்- சிவசுப்பிரமணியம் தகவல்

ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ லிட்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள தீபாவளிச் சந்தையில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கான கட்டணம் கடந்தாண்டை காட்டிலும் குறைவாக இருக்கும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்த தீபாவளிச் சந்தைக்காக பேரா மாநில அரசு, அரசு இலாகாக்கள், வணிகர்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய
ஒரு செயற்குழுவை அமைத்துள்ளது.

அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தீபாவளிச் சந்தை நடைபெறவுள்ள நிலையில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 4ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று நேற்றிரவு நடைபெற்ற செயலவைக் கூட்டத்திற்கு பின்னர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தீபாவளிச் சந்தைக்கான கடைகள் கடந்தாண்டை போலவே அமைக்கப்படும் எனவும் கடைகளுக்கான கட்டணத்தை ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்திடம் செலுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அந்நிய நாட்டவர்களுக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கே எடுப்பர் எனவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஈப்போ லிட்டில் இந்தியாவிலுள்ள வி.கே.கல்யாண சுந்தரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்தின் தலைவர் திருமதி கலா பாலசுப்பிரமணியம், அதன் செயலவையினர்,  வணிகர்கள், பொது இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
'பிரிம்' தொகையை நிறுத்துவது மக்களை தண்டிப்பது போலாகும்- டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
பிரிம் உதவித் தொகையை அகற்ற முனைவது ஏழ்மை நிலையில் உள்ளவர்களை தண்டிப்பது போலாகும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையிலே 'பிரிம்' உதவித் தொகை தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த உதவித் தொகையை வழங்குவதனால் மக்கள் 'சோம்பேறிகளாக' உருவெடுக்க வழிவகுக்கிறது என காரணம் காட்டி  அதனை அகற்ற நினைப்பது வறுமையிலுள்ள மக்களை தண்டிப்பது போலாகும்.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் 'பிரிம்' உதவித் தொகை தொடரும் என கூறிவிட்டு,  ஆட்சியை பிடித்த பின்னர் மக்களை ஏமாற்ற முனையக்கூடாது என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.

தமிழ்ப்பள்ளி தேசிய அமைப்பாளர் பதவி காலி? கல்வி அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்படும்- சிவகுமார்


ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்ட நிலையில் அப்பதவிக்கு புதியவரை நியமிப்பது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்தாலோசிப்பேன் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

இப்பதவியில் முன்பு இருந்த பாஸ்கரன் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்பதவிக்கு இன்னமும் வேறொருவர் நியமிக்கப்படாமலே உள்ளார்.

இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்ற நிலையில் இவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சரிடம் பேசுவேன் என்று சிவகுமார் கூறினார்.

இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கல்வி பிரிவுக்கு பொறுப்பேற்றிருக்கும் சிவகுமார், இந்தியர்களின் கல்வி விவகாரங்களில் ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

Sunday 26 August 2018

அகற்றப்படுவதற்கு முன்னர் பிரிம் தொகை குறைக்கப்படும்-- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரிம் உதவித் தொகை சிறிது சிறிதாக குறைக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறினார்.

பிரிம் உதவித் தொகை திட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு முன்னதாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எங்களது குறிக்கோளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரிம் உதவித் தொகை குறைக்கப்படும் என்றார் அவர்.

'நாம் எப்போதும் குச்சிகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் அந்த குச்சிகளை தூக்கியெறியுங்கள். அப்போதுதான் உங்களால் சொந்த காலில் நடக்க முடியும். அப்போதுதான் நீங்கள் பலமானவர் என்பதை உணர முடியும்."

'மக்களுக்கு நாம் இலவசத்தை அள்ளி கொடுத்திருந்தால் அவர்கள் பலவீனமாவர்களாகத் தான் இருப்பார்கள்.

ஆதலால், பிரிம் உதவித் தொகையை அகற்றுவதற்கு முன்னர் சிறிது சிறிதாக அது குறைக்கப்படும் என்று துன் மகாதீர்  சொன்னார்.

தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் உணர்வுகளை தூண்ட வேண்டாம்- குணசேகரன்


ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் கல்வித் தரமும் உயர்த்தப்பட தமிழ்ப்பள்ளிகள் மீதான உணர்விலிருந்து (Sentiment) விடுபட வேண்டும் என்று பேராக் மாநில தமிழ்ப்பள்ளி கல்வி, மேம்பாட்டு கருத்தரங்கின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகள் மீதான அதீத ஈர்ப்பினால் இன்று பல பள்ளிகள் முன்னேற்றமும் மேம்பாடும் காணாத நிலையில் எதிர்காலச் சூழலை கேள்விக்குறியாக்கிக் கொண்டுள்ளது.

இன்று பேரா மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளில் 70 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உள்ளன.

 ஆனால் இப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நடவடிக்கையை முன்னெடுத்தால் சில தரப்பினர் (பெற்றோர் உட்பட) அதற்கு முட்டுக்கட்டையாக திகழ்வதோடு இப்பள்ளி எங்கள் உணர்வோடு கலந்தது; அதனை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற விவாதத்தையும் கிளப்புகின்றனர்.

முன்பு தோட்டப் புறங்களில் அதிகமான இந்தியர்கள்  வாழ்ந்தனர்.  அதன் அடிப்படையில் தோட்டப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன.  

சில காலத்திற்கு பின்னர் தோட்டப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இந்தியர்கள் இடம்பெயர்ந்தபோது தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டது.

இன்று நாட்டில் 80,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். இன்னும் 45 விழுக்காடு இந்திய மாணவர்கள் பிற மொழி பள்ளிகளில் பயில்கின்றனர்.  இதற்கு காரணம் தோட்டப்புறத்திலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்கள் பட்டணத்திலுள்ள பிற மொழி பள்ளிகளில் தங்களது பிள்ளையை சேர்க்கின்றனர்.

அதோடு, அறிவியல், தொழில் நுட்பத் துறையில் மேம்பாடு காணாத சூழலும் இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

குறைந்த மாணவர்களால் ஆபத்தை எதிர்கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளை மீட்டெடுக்க அப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

இன்னும் உணர்வுபூர்வமான விவகாரங்களை கையாண்டு தமிழ்ப்பள்ளிகளில் எதிர்காலச் சூழலை கேள்விக்குறியாக்க வேண்டாம் என்று அவர் மேலும் சொன்னார்.

அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்திலும் கவனம் செலுத்துக- சிவநேசன் அறிவுறுத்து


ரா.தங்கமணி

ஈப்போ-
கல்வி தேர்ச்சி விகிதத்தில் 'ஏ' பெறுவதை காட்டிலும் அனைத்து மாணவர்களும் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக உருவாக வேண்டியதே தற்போதைய அவசியமாகும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கல்வித் தரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். 4, 5 மாணவர்கள் மட்டும் அனைத்து பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்று பிற மாணவர்கள் கல்வியில் பின் தங்குவது ஆக்ககரமானதாக கருத முடியாது.

அனைத்து மாணவர்களும் 'ஏ' தேர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். ஆனால் சில மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்று பிற மாணவர்கள் கல்வியில் பின்தங்குவது ஏற்புடையதல்ல.

இதனை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு அனைத்து மாணவர்க்ளின் கல்வித் தரமும் ஏற்றம் காண முயற்சிக்க வேண்டும் என்று இன்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற 'பேரா மாநில தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாட்டு கருத்தரங்கில் உரையாற்றியபோது சிவநேசன் இவ்வாறு கூறினார்.

'ஏ' மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாட போதனை மேற்கொள்ளப்படக் கூடாது, மாறாக அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்தையும்  கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மக்களவை துணை சபாநாயகர் ஙா கோர் மிங், பேரா மாநில கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஸிஸ் பாரி, மாநில கல்வி இலாகா இயக்குனர் ரஹிமா, இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணை தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ்எஸ்டி-க்கு உள்ளடக்கப்படும் பொருட்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்- சுப்பிரமணியம்

கோலாலம்பூர்- 
அடுத்த மாதம் அமலாக்கம் செய்யப்படவுள்ள விற்பனை, சேவை வரிக்கு (எஸ்எஸ்டி) உட்படுத்தப்படவுள்ள பொருட்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என சுங்கத்துறை தலைமை இயக்குனர் டத்தோ து. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் வரிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் அறிவிக்கப்படும். 

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் விற்பனை, சேவை வரி அமலாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சில விதிமுறைகள் காரணமாக இன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அவர் சொன்னார்.

இந்த விற்பனை, சேவை வரியின் மூலம் 5 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 25 August 2018

மாமன்னர் பிறந்தநாளில் உயரிய விருதுகள் கிடையாது

கோலாலம்பூர்-
இவ்வாண்டு மாமன்னர் சுல்தான் முகமட் வி- இன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது உயரிய விருதுகள் ஏதும் வழங்கப்படாது என கூறப்படுகிறது.

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாடப்படும்போது உயரிய விருதுகள் ஏதும் வழங்கப்படாது என பிரதமர் துறை இலாகாவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாமன்னரின் கட்டளைக்கு ஏற்ப இவ்வாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பிரதமரின் உரை மட்டுமே இடம்பெறும் என பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு மாமன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு 1,518 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் 48 பேருக்கு ' டான்ஸ்ரீ' எனும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, மசீசவின் முன்னாள் துணைத் தலைவர் மைக்கல் செங், நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் சாரிஃப் ஆகியோர் 'துன்' விருதை பெற்றனர்.இந்திய உறுப்பினர்கள் அதிகமென்றால் பிகேஆர் பெயரை மாற்ற முடியுமா?- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சவால்


கோலாலம்பூர்-
மஇகாவை விட பிகேஆர் கட்சியில் அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அக்கட்சியின் பெயரை மாற்றுங்கள் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.

பிகேஆர் கட்சியில் மஇகாவை விட அதிகமான இந்திய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறும் அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம், அக்கட்சியின் பெயரை இந்தியர் கட்சியாக மாற்றியமைக்க முடியுமா?

'நானும் கேள்வியுற்றேன். அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால், பெயரை மாற்றுமாறு பரிந்துரை செய்கிறேன் என டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் கூறினார்.

அதிகமாக உள்ள இந்திய உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் துணைத் தலைவர் பதவியை ஓர் இந்தியருக்கு வழங்குங்கள் என்று அவர்  வலியுறுத்தினார்.

மஇகா மாணவர்கள் இல்லாத 'பள்ளி' என்று டத்தோஸ்ரீ அனவார் இப்ராஹிம் கூறியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில்  வெளிவந்த செய்தி குறித்து கருத்துரைக்கையில் மேலவை சபாநாயகருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

வெ. 1 மில்லியனுக்கு விலை போனது 'MALAYSIA 1' வாகன எண் பட்டை

கோலாலம்பூர்-
'MALAYSIA 1' என்ற வாகன எண் பட்டை  1 மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.

இந்த 'MALAYSIA 1' என்ற வாகன எண் பட்டையை 1,111,111.00 வெள்ளிக்கு Aldi International Sdn.Bhd. நிறுவனம் வாங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதேபோன்று MALAYSIA 8 என்ற எண்பட்டையை Project concept  Sdn.Bhd. நிறுவனமும் (வெ.618,000.00), MALAYSIA 99 எண் பட்டையை 99 Speed Mart Sdn.Bhd நிறுவனமும் (வெ.501,500.00), MALAYSIA 2 எண் பட்டையை Aldi international Sdn.Bhd நிறுவனமும் (வெ.422,000) வாங்கியுள்ளன.

MALAYSIA 1-9999 ஆகி வாகன எண் பட்டை மூலம் 13,167,971.37 வெள்ளி வசூல் செய்யப்பட்டது எனவும் அந்நிதி அரசாங்க கருவூல மையத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஈராண்டுகள் போதாது- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தமக்கு ஈராண்டுகள் போதாது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

தம்முடைய பிரதமர் பதவிக் காலம் ஈராண்டுகள் மட்டுமே என்பது தொடக்ககட்ட முடிவாகும். தொடக்கத்தில் காணபட்ட முடிவுகளின்படி ஈராண்டுகளுக்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக இணக்கம் காணப்பட்டது.

ஆனால், ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றிய பின்னர் நாடு எதிர்நோக்கிய கடன் சுமை உட்பட நிர்வாக முறைகேடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைய வேண்டியுள்ளது.

நாட்டின் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் இருப்பதால் இந்த ஈராண்டு காலம் போதிய அவகாசமாக கருத முடியவில்லை. இந்த ஈராண்டுகளில் அதனை சாதிக்க முடியாது என்று தெ மலேசியன் ரிசர்வ் நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணலில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

ஜசெகவை விமர்சித்தவர்கள் இன்று பாஸ் கட்சியுடன் நட்பு கொண்டுள்ளனர் - கணபதி ராவ் தாக்கு


ரா.தங்கமணி

பாங்கி-
பாஸ் கட்சியுடன் கடந்த காலத்தில ஜசெக கொண்டிருந்த உறவை விமர்சனம் செய்தவர்கள் இன்று அக்கட்சியுடன் நட்பு கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சியுடன் ஜசெக நட்பு கொண்டிருந்தது.

ஆனால் கொள்கை முரண்பாடு காரணமாக பாஸ் கட்சியுடனான உறவை ஜசெக முறித்துக் கொண்ட பின்னர் மக்கள் கூட்டணி கலைக்கப்பட்டது.
பாஸ் கட்சியுடன் அன்று நாங்கள் கொண்டிருந்த நட்பை விமர்சனம் செய்த மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகள் இன்று அதே பாஸ் கட்சியுடன் நட்புறவை பாராட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நேற்று நடந்த பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையில் கணபதி ராவ் குறிப்பிட்டார்.

அன்று நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு இன்னல்களை அனுபவித்தோம். பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள் என பல வகையில் துன்புறுத்தப்பட்டோம்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் 495 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவத்தையும் தாம் எதிர் கொண்டிருந்தேன்.

ஆனால், இவை பொருட்படுத்தாமல் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததனால் இன்று நாம ஆட்சி அதிகாரமிக்க ஆளும் கட்சியாக திகழ்கிறோம்.

கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை நாம் மறந்திடாமல் பலாக்கோங் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ள நம்பிக்கைக் கூட்டணி (ஜசெக) வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கணபதி ராவ் வலியுறுத்தினார்.

மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்

கோலாலம்பூர்-
மலேசியத் தமிழ் பத்தரிகை உலகில் 'பிதாமகன்' என்று அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் அவர்கள் இன்று காலை காலமானார்.

தமிழ்ப் பத்திரிகை உலகம் நீண்ட அனுபவத்தையும் பல பத்திரகையாளர்களின் முன்னோடியாகவும் 'உதயம், இதயம்' மாத இதழ்களின் ஆசிரியராகவும் திகழ்ந்த எம்.துரைராஜ் அவர்களின் மறைவு தமிழ் பத்திரிகை துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் நல்லடக்கச் சடங்கு வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25 Jalan Udang Gantung Satu Taman Cuepacs Segambut 52000 Kuala Lumpur எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு 'மை பாரதம் மின்னியல் ஏடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Friday 24 August 2018

தீபாவளிக்கு மறுநாள் தேர்வா? ரத்து செய்தது கல்வி அமைச்சு

கோலாலம்பூர்-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நடத்தப்படவிருந்த இறுதியாண்டு தேர்வை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.

இந்நாட்டில் மூன்றாவது பெரிய இனமான  இந்துக்கள் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் 7ஆம் தேதி கெடா மாநிலத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் நான்காம் படிவ மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான அட்டவணை சமூக ஊடகங்களில் வைரலானது.

இவ்விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ஆம் தேதி நடத்தப்படவுள்ள தேர்வு விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் அத்தேதியில் நடத்தப்படவிருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இரு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா? டத்தோஶ்ரீ நஜிப் சவால்


கோலாலம்பூர்-
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட சீனாவின் இரு  திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் நடப்பு அரசாங்கம் அரச விசாரணை ஆணையம்  (ஐஆர்சி) அமைக்குமா? என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சவால் விடுத்தார்.

சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் துன் மகாதீர், கிழக்கு கடற்கரை ரயில் பயணம் (இசிஆர்எல்), இரு எரிவாய் குழாய் இணைப்பு திட்டம் போன்றவற்றை மலேசிய அரசாங்கம் ரத்து செய்வதாக அறிவித்தார்.

இவ்விரு திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மயான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது அவசியம் என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

Thursday 23 August 2018

மின்சார கார்கள் அடிப்படையில் 3ஆவது தேசிய கார் திட்டம்- சேவியர் ஜெயகுமார்


புத்ராஜெயா-
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்றாவது தேசிய கார் திட்டம், எரிபொருள் சேமிப்பு முறையை கையாளும் வகையில் மின்சார கார் திட்டத்தை கொண்டதாக இருக்கலாம் என நம்புவதாக நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

இப்போது நடைமுறையிலுள்ள கார்கள் எரிபொருளில் (பெட்ரோல்) இயங்குவதாக உள்ள நிலையில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தான் அவற்றின் பயன்பாடு இருக்கும் என்றும் அதற்கு பதிலாக ஆற்றல் சேமிப்பு முறைகள் தான் பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாய சூழல் என்றும்

அதன் அடிப்படையிலேயே  எரிபொருள் சேமிப்பு முறையை கொண்ட வாகனங்களை தயாரிப்பது ஆக்கரகமானதாகும் என்ற அவர், உலகளாவிய நிலையில் கார் ஜாம்பவன்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ், ஃபோக்ஸ், நிஸ்ஸான் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆற்றல் சேமிப்பு முறைக்கு தாவி விட்டன என்றார்.

மின்சார கார்கள் மீது இளைஞர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் சேமிப்பு ஆற்றல் கொண்ட கார்கள் உருவாக்கப்படுவது ஆக்ககரமானது என்றும் அதற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும்  அவர் மேலும் சொன்னார்.

மேலும் பெட்ரோலில் இயங்கும் கார்களை  விட மின்சார கார்களின் விலை சற்று குறைவு தான் என்று அவர் கூறினார்.

ஏஇஎஸ் அபராதத் தொகையினால் அரசாங்கத்திற்கு லாபம் இல்லை - அந்தோணி லோக்


சிரம்பான் -
தானியங்கி கண்காணிப்பு முறையினால் (ஏஇஎஸ்) விதிக்கப்படும் அபராதத் தொகையினால் அரசாங்கத்திற்கு எவ்வித லாபமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எவ்வித லாபமும் இல்லாத சூழலில் ஏஇஎஸ் அபராதத் தொகையை செலுத்திய வாகனமோட்டிகளுக்கு அதனை திருப்பிக் கொடுக்க முடியாது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது ஏஇஎஸ் அபராதத் தொகை அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் அதனால் எவ்வித லாபமும் இல்லை.

தற்போதைய ஏஇஎஸ் அபராதத் தொகையை அரசாங்கம் ரத்து செய்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அமலாக்க முறையை அரசாங்கம் அறிமுகம் செய்யும் என அவர் சொன்னார்.

வரும் 31ஆம் தேதியுடன் ஏஇஎஸ் கேமராவின் இரு நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் நிறைவு பெறுவதை முன்னிட்டு அதனை மீண்டும் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என சிரம்பானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அந்தோணி லோக் இவ்வாறு கூறினார்.


தேமு ஆட்சியில் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித பயனும் இல்லை- வேதமூர்த்தி குற்றச்சாட்டு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்திய சமூதாயத்திற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்திய சமுதாயம் எவ்வித பயனையும் அடையவில்லை என சமூக, ஒற்றுமை துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.

60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமுதாயம் எவ்வித மேம்பாட்டையும் காணவில்லை. இந்திய சமுதாயத்திற்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை முறையாக இந்திய சமுதாயத்தைச் சென்றடையாததே இந்த தோல்விக்கு காரணம் என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்திற்காக தேமு அரசாங்கம் அறிமுகப்படுத்திய 'செடிக்' திட்டம் அதில் ஒன்றாகும். ஆனால் அந்த அமைப்பின் மூலம் இந்திய சமுதாயம் முன்னேற்றம் கண்டது என சொல்ல முடியாது. பல அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்ட போதிலும் அது முறையாக இந்திய சமுதாயத்தைச் சென்றடையவில்லை என்றே சொல்லலாம்.

'செடிக்' அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மானியங்களை சில பொது இயக்கங்கள் முறையாக பயன்படுத்திய போதிலும் சில இயக்கங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன. இதனால் இந்திய சமுதாயத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

இந்திய மேம்பாட்டிற்காக தேமு அரசாங்கம் கொண்டி வந்த திட்டங்கள் நம் சமுதாயத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே உண்மையாகும் என இன்று  ஆஸ்ட்ரோ 'விழுதுகள்' நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நேர்காணலின்போது செனட்டர் வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்த தவறுகள் மீண்டும் அரங்கேறாத வண்ணம் தற்போதைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாக நிதி கையாளப்பட்டு இந்திய சமுதாயத்திற்கு பயனான வகையில் மானியம் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

Wednesday 22 August 2018

வெ.400 கோடி; 'செடிக்' அமைப்புக்கு பதிலாக நாடாளுமன்ற தேர்வுக் குழு மூலம் பகிர்ந்தளியுங்கள்- கணபதி ராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படவுள்ள 400 கோடி வெள்ளி நாடாளுமன்ற தேர்வு குழு மூலம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் வலியுறுத்தினார்.

இந்த நிதியை 'செடிக்' எனும் தனி அமைப்பின் கீழ் பகிர்ந்தளிக்காமல் நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களின் மூலம் நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் இந்த மானியம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே, 'செடிக்' அமைப்பி மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட மானியம் குறித்து பல்வேறான சர்ச்சைகள் நிலவுகின்ற நிலையில் தவறான முறையில் மானியங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அதோடு, 'செடிக்' மூலம் வழங்கப்படும் மானியத்திற்கான கணக்கறிக்கை அந்த அமைப்பிடமே இருக்கும் நிலையில் இதில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

இதுவே நாடாளுமன்ற தேர்வுக் குழு மூலம் பகிர்ந்தளிக்கப்படும்போது  அதற்கான கணக்கறிக்கையை வெளிப்படைத்தன்மையாக இருப்பதோடு இதில் மோசடி புரிவதற்கு வாய்ப்பு இருக்காது.

மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும்போது அதில் எவ்வித முறைகேடும் இல்லாததை உறுதி செய்யும் வகையில் 'செடிக்' அமைப்பை விட நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கணபதி ராவ் வலியுறுத்தினார்.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்- சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கோரிக்கை


ரா.தங்கமணி

ஈப்போ-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பேரா மாநில அரசு  தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி மகஜர் வழங்கியது.

இவ்வட்டாரத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சினை, குறைந்த வருமானம் பெறுவோருக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டம், பூர்வக்குடியினரி நிலங்கள் ஆக்கிரமிப்பு, 10 முதல் 40 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை வெளியேற்றுவது, உட்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கான வேலை வாய்ப்புகள் போன்ற 10 பிரச்சினைகளை உள்ளடக்கி இந்த மகஜர் வழங்கப்பட்டது.

இன்றுக் காலை மாநில அரசு செயலகத்தில் முன்னாள் சுங்கை சிப்புட்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பிஎஸ்எம் கட்சியினர் ஆகியோர் இந்த மகஜரை வழங்கினர்.

மக்களின் தேர்வாக அமைந்துள்ள மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என வலியுறுத்திய  டாக்டர் ஜெயகுமார், கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்தது போன்று தற்போதைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்  செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி கைருல் ஸஹாரி பின் அமினுடின் இந்த மகஜரை பெற்றுக் கொண்டார்.

சாலைக்கு பெயர் வைப்பதை காட்டிலும் மக்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துக- மணிமாறன் வலியுறுத்து


ரா. தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நகரில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமேயொழிய சாலைக்கு பெயர் மாற்றுவது முக்கியமான விவகாரம் அல்ல என சுங்கை ரேலா மஇகா கிளைத் தலைவர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

மறைந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் வீடு அமைந்துள்ள ஜாலான் லிந்தாங் சாலையின் பெயரை துன் சம்பந்தன் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.
சாலைக்கு பெயர் மாற்றம் செய்வதை காட்டிலும் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை திட்டங்களை மேற்கொள்வதே ஆக்கப்பூர்வமானதாகும்.

கடந்த 10 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி வசம் இத்தொகுதி சென்றதன் காரணமாக எத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக, மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, நகர முன்னோடிகள் பிரச்சினை, நிலப் பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண முற்படுவதே அத்தியாவசியமானதாகும்.

இங்கு வேலை வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால் மக்களின்
வாழ்வாதாரம் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை களைவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
மேலும், கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு கல்வி கழகங்கள், நிலப் பிரச்சினையை எதிர்நோக்குபவர்களுக்கு நிலம் ஏற்படுத்துவதற்கான அடிப்படை திட்டங்கள், நகர முன்னோடிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.

லிந்தாங் சாலைக்கும் துன் சம்பந்தன் பெயர் வைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் சாலைக்கு பெயர் வைப்பதை காட்டிலும்  மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவதே அத்தியாவசியமானதாகும்.

விஸ்மா துன் சம்பந்தன், துன் சம்பந்தன் எம்ஆர்டி நிலையம், பிரிக்பீல்ட்ஸ் துன் சம்பந்தன் சாலை உட்பட மண்படம், பள்ளிக்கூடங்கள் என துன் சம்பந்தனின் பெயர் ஏற்கெனவே பல இடங்களில் உள்ளது. மேலும் ஜாலாங் லிந்தாங் சாலையில் அமைந்துள்ள துன் சம்பந்தன் வீடு என்பதே வரலாறு. அந்த வரலாற்றை மாற்றியமைக்க வேண்டாம்.

தற்போது மத்திய, மாநில அரசு நம்பிக்கைக் கூட்டணி வசம் உள்ள நிலையில் அதனை சார்ந்துள்ள தலைவர்கள் ஆக்ககரமான திட்டங்களை வகுக்க முற்பட வேண்டும் என்று பொதுநலச் சேவையாளருமான மணிமாறன் குறிப்பிட்டார்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பா? சோதனை நடத்தப்படும்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
கம்பாரிலுள்ள போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் நிறுவனத்தில் அடுத்த வாரம் பரிசோதனை நடத்தப்படும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் லோரி ஓட்டுநராக  கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த ஏ.சுப்பிரமணியம் (வயது 48), ஈராண்டுகளாக பணியாற்றி வரும் லோகநாதன் (வயது 32) ஆகியோருக்கு கடந்த இரு மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் இதனால் இரு மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பதாகவும் சிவநேசனிடம் முறையிட்டனர்.

உள்ளூர் தொழிலாளர்களாக எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் அந்த அந்நியத் தொழிலாளர்களிடம் லோரி ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லை எனவும் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த சிவநேசன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்யப்படும் எனவும் ஜேபிஜே, தொழிலாளர் இலாகா ஆகிய தரப்பினருடன் இணைந்து சோதனை நடத்தப்படும் என அவர் சொன்னார்.

Tuesday 21 August 2018

தேமு அதிகாரத்தில் எஸ்எஸ்டி சட்ட மசோதா நிறைவேற்றம்


கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கொண்டு வந்த விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) சட்ட மசோதாவை இன்று மேலவை அங்கீகரித்தது.

கடந்த மக்களவை கூட்டத்தின்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை, சேவை வரி சட்ட மசோதா மேலவை அங்கீகாரத்திற்காக வாசிப்புக்கு கொண்டு வரப்பட்டது.

மேலவையில் தேசிய முன்னணி உறுப்பினர்களே அதிகம் உள்ள நிலையில் இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போதைய 55 மேலவை உறுப்பினர்களில் தேசிய முன்னணியைச் சேர்ந்த 32 உறுப்பினர்களும் 3 பாஸ்  உறுப்பினர்களும் உள்ளனர்.

அதோடு இன்றைய மேலவையில் 2018 சேவை வரி சட்ட மசோதா, பொருள், சேவை வரி ( அகற்றம்) சட்ட மசோதா, 2018 குடிநுழைவு சட்ட மசோதா ஆகிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

விறபனை, சேவை வரி சட்டம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

புரோட்டோன் -கீலி ஒப்பந்தத்திற்கு பக்காத்தான் அரசாங்கம் ஆதரவு- நஜிப் மகிழ்ச்சி


கோலாலம்பூர்-
சீனாவின் 'கீலி' நிறுவனம் புரோட்டோன் நிறுவனத்தின் 49.9% பங்குகளைக் கொண்டிருப்பதற்கு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு பிரதமர் துன் மகாதீர் முகமதுவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர்  டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

இதன் மூலம் 60,000 தொழில் வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் புரோட்டோன் நிறுவனத்தை புதிய வளர்ச்சிக்கு கொண்டுச் செல்ல வழிவகுக்கும் என அவர் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த தேமு ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட புரோட்டோன் - கீலி, ஃபோரெஸ்ட் சிட்டி ஆகிய திட்டங்களை விமர்சித்த துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இன்று அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது இவ்விவகாரங்களை துன் மகாதீர் பெரும் சர்ச்சைகளாக உருமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி'ஜென்ஸ் அழகு பயிற்சி நிலையம் ஏற்பாட்டில் முக ஒப்பனை பயிற்சி- 22 மகளிர் பங்கேற்பு


புனிதா சுகுமாறன்

பினாங்கு-
அண்மையில் டி' ஜென்ஸ் அகாடமியின் (D'janz beauty & bridal) ஏற்பாட்டில்  முக ஒப்பனை பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முக ஒப்பனை பயிற்சி பட்டறை இங்குள்ள லெபோ பந்தாய் MPPP  வாகன நிறுமித்துமிடத்தில் அமைந்துள்ள டிஜென்ஸ் அழகு பயிற்சி நிலையத்தில்  நடைப்பெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கெடுத்த 22 மகளிருக்கு  தங்களது முகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, சருமம் பொலிவாக இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  முறையான முகஒப்பனை, கூந்தல் அலங்காரம்,  சேலை கட்டும் பயிற்சி போன்றவை பயிற்சிகள் வழங்கப்பட்டன என்று டி' ஜென்ஸ் பியூட்டி நிர்வாகி ஜெனட் தார்மின் தெரிவித்தார்.

முக ஒப்பனைத் துறையில் தாம் கற்ற பயிற்சியை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பயிற்சி பட்டறையை நடத்தப்பட்டது.

இதன் மூலம்  வீட்டில் இருக்கும் பெண்கள் உபரி வருமானமாக இந்த துறையை மேற்கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் இப்பயிற்சியை வழங்கியதாக அவர் கூறினார்.

இந்த பயிற்சி  பட்டறையில் கலந்துக்கொண்ட 22 பெண்களுக்கும் பல்வேறான பயிற்சி நுணுக்கங்கள் வழங்கப்பட்டதாக கூறிய ஜெனட் தார்மின், இதே போன்ற முக ஒப்பனை பயிற்சியை  தொடர்ந்து நடத்தவிருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும்  அவர் வலியுறுத்தினார்.


Monday 20 August 2018

குற்றச்செயல்களை முறியடிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள் - பொது இயக்கங்கள் கோரிக்கை

ரா.தங்கமணி

காஜாங்-

சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கு ஏதுவாக ரகசிய கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி)  பொருத்தப்பட வேண்டும் என்று காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல், காஜாங் மண்ணின் மைந்தர் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வாகனம் திருடுதல், கொள்ளைச் சம்பவம், சிறார், இளம் பெண் கடத்தல் போன்ற சம்பவங்கள் காஜாங் வட்டாரம் மட்டுமின்றி பல இடங்களில் நிகழ்ந்து வருகின்றன.

இதுபோன்ற குற்றச்செயல்களை முறியடிக்க போலீசார் ஆக்ககரமான செயல்பட்டாலும் குற்றச்செயல் நடவடிக்கையை குறைக்க முடியவில்லை.

இந்த சம்பவங்களில் இங்குள்ள மக்கள் எப்போதும் அச்சத்துடனே வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இதனை களைய வேண்டுமானால் பாதுகாப்பற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என காஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைவர் சரவணன் கருப்பையா குறிப்பிட்டார்.

குற்றசெயல்களை துடைத்தொழிப்பதில் சிங்கப்பூரை நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அங்கு எந்தவொரு குற்றச்செயல் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் குற்றச்செயல் பதிவு செய்யப்பட்டு  குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்படுவர்.

அதே போன்றதொரு சூழல் இங்கும் உருவாக்கப்பட்டால் குற்றச் செயல்கள் குறைவதோடு காணாமல் போகின்றவர்களையும் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர ஆராய வேண்டும் என்றும் உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Sunday 19 August 2018

ஐநா முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃஃபி அனான் மறைவு

ஜெனிவா-

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃபி அனான் நேற்று காலமானார். அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான கோஃபி அனான் (வயது 80) சுவிர்சலாந்தில் உள்ள பெர்ன் மருத்துவனையில் காலமானார் என அறிவிக்கப்பட்டது.

கோஃபி அனான் மறைவுக்கு மலேசியாவின் பிரதமர் துன் மகாதீர் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

சுங்கை சிப்புட் மஇகா தேர்தலில் ராமகவுண்டர் வெற்றி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இன்று நடைபெற்ற சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தேர்தலில் ச.ராமகவுண்டர்  தொகுதித் தலைவராக வெற்றி பெற்றார்.

ராமகவுண்டருக்கு 40 வாக்குகளும்  இவரை எதிர்த்து போட்டியிட்ட நடப்பு தலைவர் இளங்கோவன் முத்து 30 வாக்குகளும் பெற்றனர்.
அதோடு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கி.சேகரன் 33 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மும்முனைப் போட்டி நிலவிய துணைத் தலைவர் பதவிக்கு இவரை எதிர்த்து போட்டியிட்ட லெட்சுமணன் 22 வாக்குகளும் அஜாட் கமாலுடின் 15  வாக்குகளும் பெற்றனர்.
கட்சியின் புதிய சட்டவிதிகளின்படி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மட்டுமே இம்முறை போட்டி நிலவியது. இன்று  நடைபெற்ற தொகுதி தேர்தலில் 70 பேர் வாக்களித்தனர்.குடியுரிமை சான்றிதழ் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து இனத்தவர்களுக்கும் வழங்கப்படும்- குலசேகரன்

கம்பார்-
60  வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமை, நீல நிற அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

குடியுரிமை அல்லாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடியுரிமையும் நீல நிற அடையாள அட்டையும் வழங்க அரசாங்கம் முடிவெடுத்தது.

ஆனால் அந்த முடிவு இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல, அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தும்.

குடியுரிமை அல்லாதவர்களின் பிரச்சினை இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல. இன்னும் அதிகமானோர் மலாய், சீனர், ஈபான், கடஸான் இனத்திலும் உள்ளனர். அவர்களது இனத்திலும் சிவப்பு அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் அதிகம் உள்ளனர்.

அண்மையில் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து இனத்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது என்று கம்பார் மார்க்கெட்டில் மனிதவள அமைச்சின் மக்கள் சேவை மைய நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

Saturday 18 August 2018

அனைத்து 'ஏஇஎஸ்' அபராதங்கள் ரத்து செய்யப்படுகின்றன- போக்குவரத்து அமைச்சர்


கோலாலம்பூர்-
இன்னமும் செலுத்தப்படாத 'ஏஇஎஸ்' எனப்படும் மின்னியல் தானியங்கி முறை சம்மன்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜேபிஜே) கீழ் விதிக்கப்பட்ட அபராதத் தொகைகள் மட்டுமின்றி கேமரா செயல்பாடும் முழுமையாக அகற்றப்படும் என அவர் சொன்னார்.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏஇஎஸ் சார்ந்த இரு நிறுவனங்களின்  ஒப்பந்தங்கள் நிறைவு பெறுகின்றன.

இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட அபராதங்களை அதிகமானோர் செலுத்தாததோடு அவற்றை ரத்து செய்வதாக அவர் சொன்னார்.

இதுவரை 3.1 மில்லியன் ஏஇஎஸ் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றின் மதிப்பு 435 மில்லியன் வெள்ளி மதிப்பு ஆகும் எனவும் அவர் சொன்னார்.

தீபாவளிச் சந்தையை லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கம் ஏற்று நடத்தும்- சிவசுப்பிரமணியம்

ரா.தங்கமணி

ஈப்போ-
இவ்வாண்டு ஈப்போ லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தையை ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கம் முழுமையாக ஏற்று நடத்தவுள்ளது புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பேரா மாநில அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தீபாவளிச் சந்தை நடத்தப்படவுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக விடுக்கப்பட்டு  வந்த இந்த கோரிக்கையை பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஏற்று கொண்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

இம்முறை 14 நாட்களுக்கு நடத்தப்படும் தீபாவளி வர்த்தகச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என கூறிய சிவசுப்பிரமணியம், வியாபாரிகளுக்கு நியாயமான விலையில் கடைகள் வழங்கப்படும் என்றார்.

ஈப்போ வட்டாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கடைகள் காலியாக இருந்தால் பிறருக்கு வழங்க பரிசீலிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்துடன் பேரா மாநில இந்து சங்கம், ஈப்போ கடலை வியாபாரிகள் சங்கம் உட்பட பல தரப்பினருடன் இணைந்து இந்நிகழ்வ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் தலைவர் திருமதி கலா குறிப்பிட்டார்.

கடைகளுக்கு முன்னர் அமைக்கப்படும் கூடாரங்களில் கடை உரிமையாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதனை அவர்கள் ஏற்காத சூழலில் வேறு யாருக்கு அதனை வழங்க வேண்டும் என்பதை வணிகர்கள் சங்கம் தீர்மானிக்கும் என அவர் சொன்னார்.

மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் இந்தியர்களின் கலாச்சார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் மாநில இந்து சங்கத்திற்கு 3 நாள் நிகழ்வு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனை சிறப்பான முறையில் இந்து சங்கம் ஏற்பாடு செய்யும் எனவும் அதன் தலைவர் பொன்.சந்திரன் சொன்னார்.

இச்சந்திப்பில் போலீஸ், ஈப்போ மாநகர் மன்றம், சுங்கத்துறை, வர்த்தகர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.