Thursday 15 July 2021

'புளூபிரிண்ட்' திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வணிகப் பொருட்கள் வழங்கப்பட்டன- KKI பாலசந்திரன்

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அரசின் 'புளுபிரிண்ட்' (Blueprint) உதவித் திட்டத்தின் கீழ் இந்தியக் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உலு சிலாங்கூர் கோலகுபுபாரு இந்திய கிராமத் தலைவர் (KKI) பாலசந்திரன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வரும் புளுபிரிண்ட் உதவித் திட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வகையில் சிறு, நடுத்தர வணிகங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இங்கு சிறு வணிகங்களை மேற்கொண்டு வரும் இந்தியர்களை அடையாளம் கண்டு அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட இலாகாவிடம்  சமர்ப்பிக்கப்பட்டன.

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட இவர்களுக்கு உதவிப் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அணமையில் நான்கு இந்தியர்களுக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டன என்று பாலசந்திரன் குறிப்பிட்டார். 

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சொன்னார்.


Wednesday 14 July 2021

சிம்பாங் லீமா மின்சுடலையின் தகன இயந்திரம் பழுதுபார்க்க நடவடிக்கை- கணபதிராவ்


 ஷா ஆலம்-

கிள்ளான் சிம்பாங் லீமா மின்சுடலையில் பழுதடைந்திருக்கும் தகன இயந்திரத்தை சரி செய்வதற்கு மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இருப்பதாக சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிள்ளான், ஷா ஆலம் மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுவதோடு அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக அதிரித்து காணப்படுகிறது.

சிம்பாங் லீமா மின்சுடலையில் ஒரு தகன இயந்திரம் பழுதடைந்து கிடப்பதால் சடலங்களை தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதோடு அது மரணமடைந்தோரின் குடும்பத்தினரையும் அசெளகரியத்திற்கு ஆளாக்குகிறது.

இவ்விவகாரம் இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதோடு இதற்கு உரிய தீர்வை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இதனிடையே, மாநில அரசாங்க செயலாளருடன் தொடர்பு கொண்ட மந்திரி பெசார் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிம்பாங் லீமா மின்சுடலை தகன இயந்திரத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கை எடுக்கப்படி கேட்டுக் கொண்டதாகவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

டான்ஶ்ரீ முஹிடினை ஆதரிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ வாபஸ் பெற்று ஒரு வாரம் நெருங்கும் நிலையில்  டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழாமல் இருப்பதற்கு அமைச்சரவை உட்பட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதுதான் காரணமாக உள்ளது.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில் இன்னும் பலர் அவர்களின் ஆதரவாளராக உள்ளனர்.

அதோடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அம்னோ ஆதரவாளர்கள் இருப்பதால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இன்னமும் வலுவாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Tuesday 13 July 2021

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமுதா மரணம்

புத்ராஜெயா- 

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமாரி குமுதா இராமன்  திடீர் மரணமடைந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இஸ்லாமிய கட்சி என வர்ணிக்கப்படும் பாஸ் கட்சியில் ஆதரவாளர் மன்றத்தின் பிரபல நபராக விளங்கிய குமுதா, தற்போது மகளிர், குடும்ப, சமூக நல துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்தார்.

12, 13ஆம் பொதுத் தேர்தல்களில் திராம் சட்டமன்றத் தொகுதியிலும் 14ஆவது பொதுத் தேர்தலில்ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் பாஸ் கட்சியின் வேட்பாளராக குமாரி குமுதா களம் கண்டார். 

குமுதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு பாஸ் கட்சி அனுதாபம் தெரிவித்துள்ளது.

வறுமையில் வாடுவோருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் - கோபி வலியுறுத்து

 

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வருமானம் இழந்து தவிக்கும் தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று சிலாங்கூர், அலாம் மெகா இந்திய சமூகத் தலைவர் மு.கோபி வலியுறுத்தினார்.

கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தகைய தரப்பினருக்கு நாடு முழுவதும் தற்போது உதவிப் பொருட்களை பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். அதே போன்று கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீ.கணபதிராவின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்பை இழந்துள்ள மக்களும் வருமான ரீதியில் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி கொள்ளும் வரை உதவிப் பொருட்கள் வழங்கப்படுவது தொடரப்பட வேண்டும்.

எம்சிஓ 3.0 முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்பது கேள்விக்குறியே. அதனை கருத்தில் கொண்டு மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடரப்படுவதை மத்திய, மாநில அரசுகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோபி குறிப்பிட்டார்.

Monday 12 July 2021

5,600க்கும் அதிகமான உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன- கணபதிராவ்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் அமலாக்கம் செய்யபட்டுள்ள எம்சிஓ 3.0 நடவடிக்கையினால் வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி. 

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்நாள் வரை இதுவரை 5, 600க்கும் அதிகமான உதவி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார். 


இன்றைய காலகட்டம் மக்களுக்கு சோதனையான காலகட்டம். பெரும்பாலானோர் வேலை,  வருமானம் இழந்து வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிப் பொட்டலங்கள் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மட்டுமல்லாது கிராமத் தலைவர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத் தலைவர்கள் என பலவேறு தரப்பினரும் இந்த உதவிகளை  வழங்கி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் சொன்னார். 

Sunday 11 July 2021

வெள்ளைக் கொடியின் அர்த்தம் மக்களுக்கு தெரியாதா? சந்தேகம் எழுப்பும் குலாவின் காணொளி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டை அண்மைய காலமாக உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று மக்களின் வாழ்வாதார சூழலை பாதித்துள்ளதோடு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்பட்டுத்த கடந்த ஜூன் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 (எம்சிஓ 3.0) அமல்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெள்ளை கொடி, கறுப்பு கொடி பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது.

எம்சிஓ 3.0 அமலாக்கத்தினால் வேலை இழந்து வருமானம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு உதவிகள் வேண்டும் எனும் நோக்கில் தங்களது வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டனர்.

வெள்ளைக் கொடி பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் பல குடும்பங்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. 'மக்களுக்காக மக்கள்' எனும் முழக்கத்துடன் இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரம் பல குடும்பங்களுக்கு கை கொடுத்துள்ளது.

அதே போன்று அரசியலை உள்ளடக்கி  கறுப்புக் கொடி பிரச்சாரம் சமூக ஊடகங்களில்  முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கறுப்புக் கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் வெள்ளைக் கொடி, கறுப்புக் கொடி பிரச்சாரம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டிக் டாக் காணொளியை வெளியிட்டுள்ள ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனின் செயல்தான் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்து தவிப்போரின் இன்னலை தீர்க்க தொடங்கப்பட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பயனாக மக்களுக்கான உதவித் திட்டங்களை பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது இயக்கங்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினர் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளைக் கொடியின் அர்த்தம் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை என கூறுவது நியாயமாகுமா? வெள்ளைக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று கூட தெரியாத  அளவுக்கு மக்கள் மடையர்களாகவா இருக்கிறார்கள்? என்ற சந்தேகத்தை  குலாவின் காணொளி எழுப்புகிறது.

குலாவின் காணொளி 

22 மாத கால ஆட்சியில் என்ன செய்தோம், எதை செய்யாமல் விட்டோம் என்ற குழப்பத்தில் நீங்கள் (குலசேகரன்) வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு இருந்த மக்கள்தானே.  நாம் என்ன சொன்னாலும் வாய் மூடி கேட்டுக் கொண்டிருப்பார்கள்? என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தோரணையில் காணொளி வெளியிட வேண்டாம் YB குலா.

அதேபோன்று மக்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளனர். யாரை நம்ப வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும். யாரை புறந்தள்ள வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளிடமே தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுக்கா வெள்ளைக் கொடியின் அர்த்தம் தெரியாது... விளக்குவீர்களா குலா.....? 

Saturday 10 July 2021

வாடகை வாகனத்தில் இரு பயணிகள்; அரசு அனுமதிக்க வேண்டும்

சுங்கை சிப்புட்-

வாடகை வாகனத்தில் இரு பயணிகள் பயணிக்க அரசு அனுமதி வழங்க வேண்டுமென நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை முன் வைப்பதாக அதன் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாடு விதிமுறைகளின்படி வாடகை வாகனத்தில் அவசர மருத்துவ பயணத்திற்கு இருவரும், இரத பயணத்திற்கு ஒருவர் மட்டுமே பயணிக்க முடியுமெனும்  நிலை இருக்கிறது

ஏற்கனவே போதிய வருமானத்தை இழந்த நிலையில், இந்த ஆணை மேலும் எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அல்லது ஒரே இடத்துக்கு செல்ல விரும்பும் இரு பயணிகள், இரு வாடகை வாகனத்தை பயன்படுத்த தவிர்க்கின்றனர். இது அவர்களுக்கும் சுமை ஓட்டுனர் எங்களுக்கும் இழப்பு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

எனவே குறைந்தபட்சம் வாடகை வாகனத்தில் இருவர் பயணிக்கவும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மூவர் பயணிக்கவும் அரசு அனுமதிக்க வேண்டுமென சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை வைப்பதாக  பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்னாள் பிரதமரே- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் பெரும்பான்மையாக இருந்த அம்னோ தனது ஆதரவை மீட்டுக் கொண்ட நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசு இனியும் சட்டப்பூர்வமானது அல்ல. எனவே அதன் தலைவரான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மலேசிய மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை இனி முன்னாள் பிரதமரே என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத ஓர் அரசு ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதை அரசியலமைப்பு சட்டம் கூறுகின்ற நிலையில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தை கூட்டி தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து இன்னும் நாங்கள் தான் அரசாங்கம் என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது.

ஜனநாயகம் இல்லாத ஓர் ஆட்சியில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்  நிலைதன்மையற்ற அரசியல் சூழலால் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் பொருளாதார பின்னடைவை நோக்கி நமது நாடு சென்றுக்  கொண்டிருக்கிறது.

இடைக்கால அரசு தேவையில்லை

அதோடு, பெரிக்காத்தான் நேஷனல் அரசு கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். 

ஆனால், நாட்டின் இன்றைய சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியம் இல்லாத நிலையில் இடைக்கால அரசு நியமனம் செய்யப்படுவதை காட்டிலும் நாட்டின் தலைமைச் செயலாளரையே நாட்டின் தலைவராக மாமன்னர் நியமிக்க வேண்டும். 

3 மாத காலகட்டத்தில் நாட்டின் தலைமைச் செயலாளர் சிறந்த முறையில் செயல்பட்டு கோவிட்-19 பாதிப்புகளை 80 விழுக்காடு கட்டுப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

 

இனம், மதங்களை கடந்து உதவி நலத்திட்டம்

ஈப்போ-

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வேலையிழந்து வருமானம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தம்புன் கிளை.

வருமானம் இழந்து தவிப்பவர்கள் பசியில் வாடி விடக்கூடாது எனும் நோக்கில் உணவுப் பொட்டலங்களை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அதன் தலைவர் தினேஸ் காளியப்பன் கூறினார்.

இனம், மதங்களை கடந்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு தமது குழு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

Thursday 8 July 2021

பிஎன் அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது அம்னோ

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற அம்னோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவித்தார். 

கோவிட்-19 வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விலக வேண்டும் எனவும் புதியவர் ஒருவர் பிரதமராக பதவியேற்க வழிவிட வேண்டும் எனவும் ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார். 

Wednesday 7 July 2021

துணைப் பிரதமர் ஆனார் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

கோலாலம்பூர்-

தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணை பிரதமராக நியமனம் செய்யப்படவிருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார். 

துணைப் பிரதமாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் தற்காப்பு அமைச்சர் பதவியை தொடரும் அதே வேளையில் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் முதன்மை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரித்துள்ளார்.