Friday 30 June 2017

தண்டவாளத்திலிருந்து விலகியது ரயில்

ஜோகூர்பாரு-
31 பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு ஜோகூர் துறைமுகத்திலிருந்து ஸ்கூடாய் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கேடிஎம் கார்கோ ரயில் ஒன்று தண்டவாளத்திலிருந்து விலகி நடுசாலையில் வந்து நின்றது.

இன்று ஜோகூர் துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்கூடாய் நோக்கி சென்று கொண்டிருந்தபோது காலை 11.55 மணியளவில் ரயிலின் இயந்திரப் பகுதி தண்டவாளத்திலிருந்து விலகி சாலையில் ஓடியது.

இச்சம்பவத்தின்போது கேடிஎம் பணியாளர்கள் இருவர் மட்டுமே ரயிலில் இருந்துள்ளனர். காயம் ஏதுமின்றி அவர் உயிர் பிழைத்ததாக மாநில சுற்றுச்சூழல், தகவல் குழுவின் தலைவர் டத்தோ அயூப் ரஹ்மாட் குறிப்பிட்டார்.


நடுசாலையில் ரயில் நின்றதால் ஜோகூரிலிருந்து தஞ்சோங் லங்சாட் நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

வகுப்பு மட்டம் போடும் வெளிநாட்டு மாணவர்கள் -புகார் அளியுங்கள்!புத்ராஜெயா-
யர்கல்விக்கூடங்களில் பயில்கின்ற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புக்கு நீண்ட நாட்கள் வராமல் இருந்தால் உயர்கல்வி அமைச்சுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி நிர்வாகங்கள் புகார் அளிக்க வேண்டும் என குடிநுழைவுத் துறையில் இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தபார் அலி தெரிவித்தார்.

இங்கு மாணவர் விசாவில் படிக்க வந்து போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டு மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கருத்துகள் தெரிவிப்பதை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

காணாமல் போகும் மாணவர்கள் பற்றி சில உயர்கல்விக்கூடங்கள் மட்டுமே புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படிக்கத்தான் வருகின்றனர் என்பதை உறுதி செய்ய உயர்கல்வி அமைச்சுடன் குடிநுழைவுத்துறை  இணைந்து செயலாற்றி வருகிறது என்றார்.

கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் 358 வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காகவும் கடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர் என புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இயக்குனர் டத்தோஶ்ரீ முகமட் மொக்தார் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


24 மணிநேரத்திற்கு முன்னர் தொலைபேசி மிரட்டல் - சக்திவேல் பாட்டி தகவல்

ஜோர்ஜ்டவுன் -
ஹோட்டல் பணியாளர் எம்.சக்திவேல் கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தனக்கு தொலைபேசி வழி மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவரின் பாட்டி தேவி (வயது 60) தெரிவித்தார்.

நேற்று முன்தினம் தனது அறையில் நைலோன் கயிற்றால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சக்திவேல் இறந்து கிடந்தார். ஐவர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு சக்திவேல் இறந்ததாக நம்பப்படுகிறது.

இதனிடையே, சக்திவேல் கொல்லப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் மறுமுனையில் பேசியவன், 'சக்திவேல் இறந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்களா? என கேட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டதாகவும் அந்த பாட்டி கூறினார்.

'நான் உடனடியாக சக்திக்கு தொடர்பு கொண்டேன். தான் பத்திரமாக இருப்பதாக அவன் கூறினான். அடுத்த நாளே அவன் இறப்பான் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை' என்றார்.

சக்திவேல் கொலை தொடர்பில் 30 வயது பெண்ணும் 15 முதல் 22 வயது வரையிலான மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


'ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்' முற்றாக துடைத்தொழிக்கப்படும் - லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அனைத்துலக அரங்கில் தற்போது மலேசியாவிலும் நிலவும் 'ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்' என்ற தோற்றம் முற்றாக துடைத்தொழிக்கப்படும் என ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் அனைவரிடத்திலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தல் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மே மாதத்திற்குள் நடைபெறலாம்.

அக்டோபரில் சீன அதிபர் சீ ஜின் பிங் மலேசியாவுக்கு வருகை புரியவுள்ளார்சிறையிலிருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2018 ஜூன் மாதத்திற்குள் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதலால் அக்டோபர் மாதத்திற்கு முன்பும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு பின்னரும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழல் இல்லாததால்  குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

'அன்வாருக்கு மாமன்னரிடமிருந்து மன்னிப்பு கிடைத்து அதன் மூலம் முழு விடுதலை கிடைத்து அவரால் மீண்டும் போட்டியிட முடியுமாஎன்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் அவர் சிறையிலிருந்து வெளியாகி, அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தேசிய  முன்னணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் ஜசெக சார்ந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுவது மக்களின் கைகளில்தான் உள்ளது. பக்காத்தான் ஹராப்பான் வெற்றியடைந்தால் மலேசியாவில் மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும் என லிம் கிட் சியாங் கூறினார்.


கடப்பிதழை தொலைத்தால் அபராதம் - குடிநுழைவுதுறை கோரிக்கைபுத்ராஜெயா-
கடப்பிதழை (பாஸ்போர்ட்) தொலைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு வெ.200 முதல் வெ.1000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என குடிநுழைவுதுறை இலாகா கோரிக்கை விடுத்துள்ளது.

மை கார்ட்டை தொலைத்தால் அதனை புதுப்பிப்பதற்கு அபராதம் செலுத்துவதை போல கடப்பிதழை தொலைத்தால் அதனை புதுப்பிப்பதற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அதன் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தஃபார் அலி தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை 31,287 பேர் தங்களது கடப்பிதழை தொலைத்துள்ளனர்ஆனால் கடப்பிதழை தொலைப்போருக்கு எதிராக எவ்வித அபராதமும் இதுவரை விதிக்கப்படவில்லை. இந்த கோரிக்கையின் வழி புதிய சட்டமான முதல் முறையாக கடப்பிதழை தொலைபோருக்கு 200 வெள்ளியும், இரண்டாவது முறையாக தொலைபோருக்கு 500 வெள்ளியும் மூன்று முறைக்கு மேல் தொலைபோருக்கு 1000 வெள்ளியும்  அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தண்டனை அல்ல; மாறாக கடப்பிதழ் உரிமையாளர்களிடையே பொறுப்புணர்வை மேலோங்க செய்வதற்கான நடவடிக்கையாகும் என் அவர் குறிப்பிட்டார்.

31,287 மலேசிய கடப்பிதழ்கள் காணாமல் போயுள்ளதாக செய்யப்பட்டுள்ள புகாரில் 22,475 புகார்களில் 'எங்கே வைத்தேன் என்பது நினைவில்லை' எனவும் 2,852 புகார்களில் 'வீடு மாறும்போது தொலைந்து விட்டது' எனவும் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும் பொது வாகனங்களில் வைத்து விட்டேன், கைப்பை, பாக்கெட்டிலிருந்து விழுந்து விட்டது, திருடப்பட்டது, கொள்ளையிடப்பட்டது, வீடு மாறும்போது- தீச்சம்பவத்தின்போது தொலைந்து விட்டது, இயற்கை பேரிடர் போன்றவற்றையும் காரணங்களாக கூறுகின்றனர்.

மை கார்ட்டை தொலைத்து விட்டால் முதல் முறையக 100 வெள்ளியும் இரண்டாவது முறையாக 300 வெள்ளியும் மூன்று முறைக்கு மேல் 1000 வெள்ளியும் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday 29 June 2017

'பகடிவதைக்கு தேவை புதிய சட்டம்'?


கோலாலம்பூர்-
பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் வேளையில் அக்கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.

5 பேரால் பகடிவதை செய்யப்பட்டு  கடுமையாக தாக்கப்பட்ட 18 வயதான இளைஞர் தி.நவீன் சிசிச்சை பலனின்றி மரணமுற்ற சம்பவம் மலேசியர்கள் மட்டுமின்றி அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

பள்ளிகளில் தொடக்கமாகும் பகடிவதை பள்ளி முடிந்த பின்னரும் தொடர்கதையாகி மரணத்தை விளைவிக்கும் சம்பவமாக உருவெடுப்பது  நவீனின் மரணத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள அத்தாட்சியாகும்.

பள்ளிகளில் ஆரம்பமாகும் பகடிவதை சம்பவங்களை ஆசிரியர்கள் களைய  வேண்டும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக்கு வெளியே நடக்கும் மாணவர்கள் சார்ந்த சம்பவங்களுக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் சில சமயங்களில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் தேசிய ஆசிரியர் நிபுணத்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டான் ஹுவாட் ஹோக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதை சம்பவங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என மலாக்கா பெற்றோர் கல்வி நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பகடிவதைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலன் பாதுகாக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டிக்கும்போது அவர்கள் ஆசிரியர்களின் வாகனங்களை எரிப்பது, வீடுகளில் கல் எறிவது, அவர்களின் பிள்ளைகளுக்கு  மிரட்டல் விடுப்பது, தொலைபேசி மிரட்டல் விடுப்பது என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவறிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது.

பிரிட்டன் பள்ளிகளில் இத்தகைய பகடிவதை சம்பவங்களை தடுக்க சட்டம் இருப்பதை போல் மலேசியாவிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஸ்தூரி பட்டு, ராம் கர்ப்பால் சிங், ஸ்டிபன் சிம் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய இளைஞர் கொலை? சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

ஜோர்ஜ்டவுன்-
நைலோன் கயிற்றால் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இங்கு ரிப்பல் ரேஞ்ச் அருகே இருக்கும்  ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் எம்.சக்திவேல் எனும் 30 வயது இளைஞரே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

காலை 9.30 மணியளவில் வீட்டின் உரிமையாளர் சக்திவேலின் சடலத்தை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போர்வையால் சுற்றப்பட்டிருந்த  சடலத்தை மீட்டு சவப்பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது ஒரு கொலை சம்பவம் என வகைபடுத்திய ஜோர்ஜ்டவுன் துணை ஓசிபிடி சரவணன், இதன்  தொடர்பில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

சக்திவேலின் உடலில ஏற்பட்டுள்ள காயங்களையும் அவர் முகத்தில் காணப்படும் வீக்கத்தையும் வைத்து பார்க்கும்போது, அவர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு பலமுறை தாக்கப்பட்டிருக்கக்கூடும் எம முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை  வைத்து சக்திவேலை தாக்கிய நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்

சந்தேகத்தின் பேரில் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட 15 வயது சிறுவனும் 30 வயது மதிக்கத்தக்க வேலையில்லா இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் மேல் இதற்கு முன்னரே கொலை, கொள்ளை, சண்டை போன்ற புகார்கள் இருக்கின்றன என அவர் சொன்னார்.

இதனிடையே, சக்திவேலை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதை பார்த்ததாக அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.பேருந்து விபத்து: இருவர் பலி


உலு சிலாங்கூர்-
26 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

பெர்லிஸ் மாநிலத்திலிருந்து ஜோகூர் நோக்கி வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது புக்கிட் பெருந்தோங் அருகில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஓட்டுனர் எம்.அரசு (வயது 47),  மசீனா (வயது 46) ஆகியோர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த ஒரு பயணி சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உலு சிலாங்கூர் ஓசிபிடி ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தெரு விளக்கு இல்லாத பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது இவ்விபத்து நடந்ததாகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டி மரணம் விளைவித்த காரணத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987இன் கீழ் இவ்விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை செய்ய சொன்ன விமானி செயலில் தவறில்லை

பெட்டாலிங் ஜெயா-
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து பயணிகளை பிரார்த்தனை மேற்கொள்ள சொன்ன விமானியின் செயலை ஏர் ஆசியா பெர்ஹாட் தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன் தற்காத்து பேசியுள்ளார்.

ஓர் இக்கட்டான சூழலில் 'இறை நம்பிக்கையாளர்' அனைவரையும் பிரார்த்தனை செய்யுங்கள் என கூறுவது இயல்பான ஒன்றுதான். ஆயினும் விமானி சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான சூழலில் அவரவர் மத ரீதியில் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள் என கூறுவதில் என்ன தவறு உள்ளது? அத்தகைய சூழலில் இறைவனை வேண்டிக் கொள்வது தனக்குள்ளேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையுமல்லவா? என   முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

'நாம் தரையில் இருந்து கொண்டு அறிக்கை விடுவது சுலபம். ஆனால் அத்தகைய சூழலை கையாள்வது சுலபமானது அல்ல' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம், 'பயணிகளை பிராத்தனை செய்ய சொன்ன விமானியின் செயலை கண்டித்திருந்தார்' என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் 'சலவை இயந்திரம்' போல் குலுங்கியதை அடுத்து விமானம் மீண்டும் பெர்த் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


2018இல் 100 ஏஇஎஸ் கேமராக்கள்

கோலாலம்பூர்-
சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் நாடெங்கிலும் 100 ஏஇஎஸ் கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ அப்துல் அஸிஸ் கப்ராவி தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு தொடக்கம் இத்திட்டம் அமலாக்கம் காணவுள்ளது என குறிப்பிட்ட அவர், 2020ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 விழுக்காடாக குறைக்கும் அனைத்துலக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏஇஎஸ் கேமராக்கள் பொருத்தப்படும்.

நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகள், கூட்டரசு சாலைகளில் இந்த கண்காணிப்பு  கேமரா பொருத்தப்படும். தற்போது நாடெங்கிலும் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என பாரிட் ராஜாவில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அஸிஸ் கப்ராவி தெரிவித்தார்.

அட்டகாசமான பயண வாய்ப்புகளுடன் மீண்டும் வருகிறது 'மாட்டா கண்காட்சி'மலேசியாவின் மிகப் பெரிய சுற்றுலாப் பெருவிழாவான 'மாட்டா கண்காட்சி' இவ்வாண்டு இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரையில் நடைபெறும் இக்கண்காட்சியில் 1,000க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன. உள்நாட்டுச் சுற்றுலா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருக்கும் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களுக்கும் நியாயமான விலையில் பயணிக்கும் வாய்ப்பினை இக்கண்காட்சி ஏற்படுத்தித் தரவுள்ளது.சுற்றுலா விரும்பிகளுக்கு கொண்டாட்டமளிக்கும் இந்தக் கண்காட்சி நிகழ்வின் சிறப்பே அட்டகாசமான விலை கழிவில் கிடைக்கும் சுற்றுப் பயண வாய்ப்புகள்தாம்.

பிரமாண்டமான இந்த வாணிப மையத்தில் இம்முறை 4 முக்கிய அரங்கங்கள் சுற்றுலாத் தளங்களின் தகவல்களைப் பெறவும் சுற்றுப்பயணங்களின் விற்பனைகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளன.

உதாரணத்திற்கு, ஓர் அரங்கில் மலேசியா முழுவதிலும் உள்ள அனைத்து ரக சுற்றுப்பயணங்களின் விற்பனை, மற்றோர் அரங்கில் ஆசியான் நாடுகளின் சுற்றுலா, இஸ்லாமியர்களுக்கேற்ற ஆன்மிக சுற்றுலா, ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா என அவை பிரிக்கப்பட்டுள்ளன.


மலேசிய சுற்றுலாவுக்கான அரங்கில் உள்நாட்டில் அமைந்துள்ளடீம் பார்க்ஸ்’ (நீர், கேளிக்கை விளையாட்டுப் பூங்காக்கள்) பங்கேற்கவிருக்கின்றன. எனவே, அவற்றின் முழு சுற்றுலா சலுகைகளுடன் கூடிய நுழைவுச்சீட்டுகளை சுற்றுலா விரும்பிகள் சிறப்பான விலையில் பெற முடியும்.

'2017 ஆசியான் வருகை ஆண்டு' என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, புருணை, மியான்மார், வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பிரத்தியேக சுற்றுலா முகவர்களிடமிருந்து பொன்னான பல பயண வாய்ப்புகளும் இக்கண்காட்சியில் கலந்துகொள்பவர்களுக்காக காத்திருக்கின்றன.

அதனைத் தவிர்த்து, ஆடம்பர சொகுசு கப்பல்களின் நிறுவனங்களும் கற்பனைக்கும் எட்டாத அளவில் அருமையான விலை கழிவில் சுற்றுப்பயண வாய்ப்புகளைத் தரவிருக்கின்றன. மேலும், அடிக்கடி வெளிநாடு செல்வோருக்காக புகழ்பெற்ற பல விமான நிறுவனங்கள் சிறப்பு விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யவிருக்கின்றன.

பொதுவாகவே பலர் ஆண்டு இறுதியில் அல்லது விடுமுறை காலங்களில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பர். அத்தகையோர் இந்த 'மாட்டா கண்காட்சி'க்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


முதலில் தாங்கள் விரும்பும் சுற்றுப்பயணங்களைப் பற்றி கண்காட்சியில் பங்கேற்கும் பல முகவர்களிடம் கேட்டறிந்து, பின் சிறந்த சுற்றுலா வாய்ப்பினை தேர்ந்தெடுக்க ஏதுவாக இது அமைந்துள்ளது. ஓரிரு சுற்றுலா முகவர்கள் அன்றி, இங்கு நூற்றுக்கணக்கான முகவர்கள் கூடாரம் அமைக்கவிருப்பதால், பயணிகளுக்கான தேர்வு இங்கே ஏராளம்.

ஒவ்வோர் ஆண்டும் மாபெரும் அளவில் விரிவாக்கம் கண்டு வரும் 'மாட்டா கண்காட்சி' உள்நாட்டினர் மட்டுமல்லாது, நம் நாட்டுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர் மத்தியிலும் மகத்தான வரவேற்பை பெற்று வருகிறது.உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள சுற்றுப்பயணத்தைவிட சிறந்ததொரு மருந்து இல்லை எனலாம். அதேவேளையில், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதிலும் விவேகத்துடன் செயல்படுவதே நல்லது. இதே சிந்தனையில் நீங்கள் ஆழ்ந்திருந்தால், உங்கள் அன்பிற்குரியவர்களுடன் 'மாட்டா கண்காட்சி'யை வலம் வர மறவாதீர்கள்.

Wednesday 28 June 2017

பயணிகளை பிரார்த்திக்கச் சொல்வதா? விமானியின் செயல் கண்டிக்கத்தக்கது


கோலாலம்பூர்-
இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகளை 'இறுதியாக பிராத்திக்கும்படி' கேட்டுக் கொண்ட விமானியின் செயலை முன்னாள் அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராஹிம் வன்மையாக கண்டித்தார்.

நேற்று ஆஸ்திரேலியா, பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம் இயந்திர கோளாறு ஏற்பட்டு சலவை இயந்திரம் போல் குலுங்கியது. இதனால் அவ்விமானம் மீண்டும் பெர்த் நகருக்கே திரும்பி பத்திரமாக தரையிக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்த விமானியின் செயலை விமானம் நிறுவனம் ஏற்கக்கூடாது எனவும் மரணம் நெருங்கி விட்டது போன்ற தோற்றத்தை அந்த விமானி ஏற்படுத்தியிருக்கக்கூடாது எனவும்  டத்தோ ஸைட் கூறினார்.


Tuesday 27 June 2017

வானொலி வாசகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மின்னல் எப்.எம்


கோலாலம்பூர் ஜூன்-
ஒவ்வோரு ஆண்டும் தந்தையர் தினத்தன்று நாட்டின் முன்னணி வானொலிகளில் ஒன்றான மின்னல் பண்பலையில் வித்தியாசமான நிகழ்வு நடத்துவர். இம்முறை சற்று மாறுபட்டு பல நிகழ்ச்சிகளும் போட்டிகளும் படைத்தனர்.

அதில் தந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஆச்சரிய தொலைப்பேசி அழைப்பும் ஒன்றாகும். இப்போட்டியின் தொடக்கத்தில் சுமார் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆச்சரிய அழைப்புகள் கொடுக்கப்பட்டன.

நிகழ்வின் சில காட்சிகள்

பூச்சோங்கை சேர்ந்த நந்தினி பாரதிதாசன் சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தந்தையர் தினத்தன்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின்னல் அறிவிப்பாளர்கள் மோகன் மற்றும் தியா அவருடைய வீட்டிற்கு சென்று தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.


அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் மின்னல் எப்.எம் சிறப்பு அன்பளிப்பை அவர்களுக்கு மின்னல் எப்.எம் அறிவிப்பாளர்கள் மோகன் தியா அவர்களுக்கு வழங்கினர். சற்றும் எதிர்பாராமல் மின்னலோடு கொண்டாடப்பட்ட இந்த வருட தந்தையர் தினத்தை தனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது என நந்தினியின் தந்தை பாரதிதாசன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டர்.

தனுஷுடன் அதிரடி நடனமாடிய காஜோல்?


வொண்டார்பார், விகீரெஸன் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியீடு காணவுள்ள 'வேலையில்லா பட்டதாரி-2' (விஐபி2-) படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்கும் ஹிந்தி நடிகை காஜோல்? இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவர் இப்படத்தில் வசுந்துரா கன்ட்ரெக்ஷனின் உரிமையாளராக நடித்துள்ளார். இவர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவரது பங்களிப்பை கதைக்கு ஏற்ப சிறப்பாக வழங்கியுள்ளராம்.


 'வேலையில்லா பட்டதாரி-2' திரைப்படத்தின் 'தூரம் நில்லு' எனும் பாடலுக்கு தனுஷுடன் அதிரடியாக நடனமாடியும் உள்ளார் காஜோல். இத்திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியீடு காணவுள்ளதால் மூன்று மொழி ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளதால் இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வொண்டர்பார் வலையொலியின் அலைவரிசையில் நேற்று வெளியீடு கண்டது.


மேலும், இத்திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் பாகத்தை தொடந்து வருவதால் முதல் பாகத்தில் நடித்தக் கலைஞர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கணி, அமலா பால் என முக்கிய கதாபத்திரங்கள் நடித்துள்ளனர். இதற்கிடையில்,  இப்படத்தின் கதையையும் திரைக்கதையையும் தனுஷ் அமைத்துள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த் 'வேலையில்லா பட்டதாரி-2' திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நோன்பு பெருநாளில் அனைவரையும் அரவணைப்போம்!


சுங்கை பாக்காப்-
நோன்புப் பெருநாளில் இனம், மதம் பாராமல் அனைவரையும் அரவணைத்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும், துயரங்கள் போக்கி கொண்டாடும் பண்டிகை காலங்களில் பிறரின் துயரங்கள் போக்கி அவர்களையும் உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தருவது நம்முடைய கடமையாகும் என பிரதமரின் பிரத்தியேக ஆலோசகரும்பினாங்கு மாநில அம்மோ கட்சியின் தொடர்புக்குழுத் தலைவருமான  டத்தோஶ்ரீ ஜைசால் அபிடின் ஒஸ்மான் தெரிவித்தார்.

செபெராங் பிறை வட்டாரத்தில் அமைந்துள்ள சுங்கை பாக்கப் மருத்துவ மனைக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேரடியாக நோயாளிகளை நலம் விசாரித்து அன்பளிப்பு வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெருநாள் காலங்களில் நாம் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது. வசதி குறைந்தவர்கள்,நோயாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்டவர்கள் முதியோர்கள் என  அனைவரையும் மனிதாபிமானத்தோடு அரவணைக்க வேண்டும்.

அது நம்முடையக்  கடமையாகும். அவர்களை நாம் புறக்கணிக்காமல் அவர்களுக்கு இதுபோன்ற அன்பளிப்புகளை வழங்கும்போது அவர்கள் புத்துணர்ச்சி அடைகின்றனர் .மகிழ்ச்சியில் ஆழ்த்தப்படுகின்றனர் என்றார் அந்த நோக்கத்தில் இந்த அன்பளிப்புகளை வழங்கியதாக கூ மேலும் கூறினார்.
மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த அவர், நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறியது மட்டுமல்லாமல்  நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.