Wednesday 31 July 2019

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இளைஞர் மரணம்

ஜோர்ஜ்டவுன் -
போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சுங்கைப்பட்டாணி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய இளைஞர் கோபால் கிருஷ்ணன் த/பெ ராஜலிங்கம் மரணமடைந்தத சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த மே 12ஆம் தேதி பினாங்கில் கைது செய்யப்பட்ட கோபால் கிருஷ்ணன் பின்னர் சுங்கைப்பட்டாணி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்ட கோபால் கிருஷ்ணனை அவரது தாயார் திருமதி சக்தியும் காதலியும் சிறையில் சென்று சந்திக்கும்போதெல்லாம் பல்வேறு காரணங்களுக்காக சிறை வார்டன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் முறையிட்டுள்ளார் என்று செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் தேதி சிறைத்துறையினரிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்ற திருமதி சக்தி, உடல்நலக் குறைவு காரணமாக கோபால் கிருஷ்ணன் சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடையும் நாள் வரை (ஜூலை 30) நினைவு திரும்பாமலே இருந்த கோபால் கிருஷ்ணன் உடலில் காயங்களும் இரு கைகளும் வீக்கம் கண்டிருந்ததாகவும் அவரை பார்த்த தாயாரும் காதலியும் கூறினர். இது குறித்து கேட்டபோது நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னால் கோபால் கிருஷ்ணன் எவ்வித மருத்துவச் சிகிச்சைகளையும் கொண்டிருக்கவில்லை என்று தாயார் கூறியதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

கோபால் கிருஷ்ணன் மரணம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மலேசிய தமிழர் குரல் இயக்கமும் தாமும் உதவிகளை வழங்கவிருப்பதாகவும் இம்மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் டேவிட் மார்ஷல் கூறினார்.

Tuesday 30 July 2019

டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவை வழங்கியது மக்கள் பொதுநல செயல் கட்சி

கோலாலம்பூர்-
கடந்த சனிக்கிழமை தலைநகருக்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டிருந்த தஞ்சோங் மாலிம் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த முதலாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மக்கள் பொதுநல செயல் கட்சியினர் சத்துணவு, கையடக்க திருக்குறள் புத்தகம், தமிழ் நாளிதழ்கள் ஆகியவற்றை வழங்கு ஊக்கப்படுத்தினர்.
உலக நெறியான திருக்குறளை மாணவர்கள்  தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று மக்கள் பொதுநல செயல் கட்சியின் தலைவர் வி.எம்.கோபி  தெரிவித்தார்.

அதோடு நாட்டு நடப்புகளையும் உலக நிலவரங்களையும் தெரிந்து கொள்ள தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும்.  அப்போதுதான் பொதுநிலை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ள  முடியும் என்ற அவர், தமிழ்நாட்டு முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது சத்துணவுத் திட்டத்தை தொடங்கினார். அது இன்றளவும் நடப்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, லோட்டஸ் உணவகத்தில் இந்த மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் மேம்பட தமிழ் நாளிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்வி சுற்றுலாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சத்துணவை வழங்கி பேருதவி புரிந்த மலேசிய பொதுநல செயல் கட்சி,  மக்கள் எம்ஜிஆர் பொதுநல மன்றத்திற்கு பள்ளி துணை தலைமையாசிரியர் எடிசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மக்கள் பொதுநல கட்சியில் தலைமைச் செயலாளர் எஸ்.ஏ.மின்மினி, முன்னணி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் பதவியில் துன் மகாதீர்; ஒரு தவணைக்கு நீடிக்க வேண்டும்- அஸ்மின் அலி

புத்ராஜெயா-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் முழு தவணைக்கும் துன் மகாதீர் முகமட் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அறிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் நிலைத்தன்மையான ஆட்சியமைப்பை கட்டமைக்கவும் இந்த ஐந்தாண்டுகால தவணைக்கும் துன் மகாதீரே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, துன் மகாதீர் பதவி நீட்டிப்புக்கு பாஸ், அம்னோ கட்சிகள் வழங்கியுள்ள ஆதரவையும் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி வரவேற்றுள்ளார்.

பிரதமர் பதவியில்  துன் மகாதீர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிப்பார் எனவும் அதன் பிறகு 
பிரதமர் பதவி டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்கப்படும் என்று 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் மன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday 29 July 2019

சுங்கை சிப்புட் தோட்ட அம்மன் ஆலயத்தில் ம.ம.ச.கட்சியின் உபயம்

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது உபய பூசைகள் நிகழ்ந்து வருகின்றன.

அவ்வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் குடும்ப உபய பூசை அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ தனேந்திரன் கலந்து கொள்ள முடியாததால் சுங்கை சிப்புட் மக்கள் சக்தி கட்சித் தலைவரும் பேரா மாநில ம.ம.ச.கட்சி உதவித் தலைவருமான தாஸ் அந்தோணிசாமி தமது அணியிருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Sunday 28 July 2019

கூடுதலாக 2,000 ஏக்கர் நிலத்தை பெற்றுத்தர போராடுங்கள்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தாக்கு

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகா போராடி பெற்ற 2,000 ஏக்கர் நிலத்திற்காக போராடுவதை விடுத்து இன்றைய அரசாங்கத்தின் மூலம் 2,000 ஏக்கர் நிலத்தை இந்திய சமுதாயத்திற்கு பெற்று கொடுங்கள் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.

பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள், இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திடம்  போராடி பெற்று தந்தநு மஇகா.
ஆனால் இன்று ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அந்த 2,000 ஏக்கர் நிலத்திற்காக போராட்டம் நடத்துவோம் என கொக்கரிக்கின்றனர்.

உண்மையிலேயே இந்திய சமுதாயத்திற்கு நன்மை செய்ய நினைத்தால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதலாக 2,000 ஏக்கர் நிலத்தை பெற்று கொடுங்கள்.

'பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு'  என்பதுபோல மஇகா போராடி பெற்றதற்கெல்லாம் போராட்டம் நடத்தி நல்ல பெயரை எடுக்க வேண்டாம் என்று மஇகா மகளிர் பிரிவு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மித்ரா: தொலைபேசியில் அழைத்து பேசுங்கள்- ராமசாமியை சாடினார் வேதமூர்த்தி

சுபாங்ஜெயா-
மித்ரா தொடர்பான எவ்வித சந்தேகங்களுக்கும் தன்னை தொலைபேசியில் அழைத்து பேசுங்கள்; அதை விடுத்து பொது நிலையில் தன்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்று ஒற்றுமை துறை அமைச்சர் பொ. வேதமூர்த்தி பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமியை சாடினார்.

மலேசிய இந்தியர் உருமாற்ற மையம் (மித்ரா) வெளிப்படைத்தன்மையுடனே நடந்து கொள்கிறது. யாருக்கு, எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என்பதை அகப்பக்கத்தில் பதிவிடப்படுகிறது.

தன்னுடைய அமைச்சே இத்தகைய வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறது எனவும் பிற அமைச்சுகள் அதுபோன்று வெளிப்படையாக மானிய ஒதுக்கீட்டை அறிவிக்கின்றனவா? என்பது தமக்கு தெரியவில்லை.

இப்போது நாம் ஒரே அரசாங்கத்தில் இருக்கின்றோம். ஏதேனும் சந்தேகம் என்றால் தொலைபேசியில் அழையுங்கள். அதை விடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 மில்லியன் வெள்ளி நிலை என்ன? என்று பி.இராமசாமி இதற்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி இந்தியர்களின் கனவு; கலைத்து விட வேண்டாம்- முகமட் நசீர், டத்தோ புலவேந்திரன் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஜார்ஜ்டவுன்-
தமிழ் இடைநிலைப்பள்ளி மலேசிய இந்தியர்களின் கனவு; அந்த கனவு ஒருபோதும் கலைந்து விடக்கூடாது பினாங்கு தமிழ் தஞ்சோங் முஸ்லீம் சங்கத் தலைவர் முகமட் நசீர், மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ க.புலவேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
முகமட் நசீர்
தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு பட்டவொர்த், பாகான் தொகுதியில் பினாங்கு மாநில அரசாங்கம் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே அடையாளம் கண்டுள்ளது.

தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பது தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் தியோ நி சியோங் கூறிய கருத்துக்கு முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்ஸிர் காலிட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்திய சமுதாயத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதியான தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிப்பதற்கு யாரும் தடைகல்லாக அமையக்கூடாது.

அதோடு மலேசிய இந்தியர்களின் தாய்மொழியான தமிழ்மொழியில் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுவது மலேசிய இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சமமாகும்.

எத்தனை எதிர்ப்புகள் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்கும் திட்டத்திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பின்வாங்கிவிடக்கூடாது என்று அவரகள் வலியுறுத்தினர்.

Saturday 27 July 2019

கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சஞ்சீவ் ராஜ்

கோலாலம்பூர்-
அண்மையில் தாய்லாந்தில் ஆசியான் கராத்தே மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ஸ்தாப்பாக், தாமான் மெலாத்தியைச் சேர்ந்த சஞ்சீவ் ராஜ் (வயது 13) வெள்ளி பதக்கத்தை வென்றார்.
14 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான பிரிவில் பங்குக் கொண்ட சஞ்சீவ் ராஜ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதோடு இதற்கு முன்னர் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர் தித்திவங்சா அரங்கத்தில் நடைபெற்ற  மைலோ அனைத்துலக 
போட்டியிலும் பங்குக் கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ராஜசேகரன் – திருமதி யுவராணி தம்பதியரின் மூத்த மகனான சிஞ்சீவ் ராஜ் கராத்தே போட்டியில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்த நிலையை அடைந்துள்ளார். தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சஞ்சீவ் ராஜ், யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ பெற்றதோடு சிலாங்கூர் மாநில அரசின் விருதை வென்றுள்ளார்.

இன்றைய சிறுவர்கள் கல்வியில் மட்டும் முழு கவனம் செலுத்துவதை விட பிற விளையாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த வழிகாட்டலாகும் என்று தந்தை ராஜசேகரன் தெரிவித்தார்.
தாமான் மெலாவாத்ததியில் உள்ள ஒக்கினாவா கோஜு ரியோ கராத்தே கழகத்தின் வழி மாஸ்டர் மு.மணிவண்ணனிடம் சஞ்சீவ் ராஜ் கராத்தே கலையை பயின்று வருகிறார். இவர் மட்டுமல்லாது அவரின் சகோதரர் ஜெய் சுராஜ் (வயது 6), சகோதரி ஜெய் ஷீரா (வயது 9) கராத்தே கலையை பயின்று வருவதோடு நட்புமுறை ஆட்டத்தில் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Friday 26 July 2019

டத்தோ ஆர்.எஸ்.மணியம் மரணம்

ஷா ஆலம்-

மஇகா கோத்தா ராஜா தொகுதித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மணியம்  திடீர் மரணமடைந்தது  மஇகா தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக கோத்தா கெமுனிங்  கொலும்பியா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட அவர், இன்று பிற்பகலில் மரணமடைந்தார்.

66 வயதான டத்தோ மணியம் கடந்த  14ஆவது பொதுத் தேர்தலின்போது செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆயினும் 4,506 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

மெட்ரிக்குலேஷன் 1,212 இடங்கள்: இந்திய சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றம்- டத்தோ மோகன்

கோலாலம்பூர்-

அண்மையில் மெட்ரிக்குலேஷன் விவகாரம் இந்திய சமுதாயத்தில் விஸ்வரூபம் எடுத்த போதிலும் தற்போது இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் எண்ணிக்கை சமுதாயத்தின் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாண்டு மெட்ரிக்குலேஷன் இடங்களில் 1,212 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை செனட்டர் டத்தோ டி.மோகன் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய மேலவை கூட்டத் தொடரில் மெட்ரிக்குலேஷன் விவகாரம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு 1,212 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளர்.

முந்தைய தேசிய முன்னணி ஆட்சியின்போது 2,200 இடங்கள் வரை இந்திய மாணவர்களுக்காக ஒதுகீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 1,212 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு என்பதை சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றமாகும்.

அதுவும் தற்போதைய அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் சார்பில் 4 முழு அமைச்சர்கள், 1 துணை அமைச்சர் இருந்தும் மெட்ரிக்குலேஷன் இடங்கள் ஒதுக்கீட்டில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

மெட்ரிக்குலேஷன் இட ஒதுக்கிடு இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் 25,000 இடங்களை 40,000ஆக உயர்த்திய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதில் 10 விழுக்காடு (4,000 இடங்கள்) பூமிபுத்ரா அல்லாதோருக்கு  ஒதுக்கப்படும் என்று அறிவித்தது.

Thursday 25 July 2019

தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான ஆய்வுக்குழு அவசியமற்றது- முன்னாள் கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்-
தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் செயற்குழு அமைப்படும் என்ற புத்ராஜெயாவின் முடிவு அவசியமற்றது என முன்னாள் கல்வி அமைச்சர் மட்ஸீர் காலிட் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள தமிழ்ப்பள்ளி தொடக்க பள்ளிகளிலேயே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது தமிழ் இடைநிலைப்பள்ளி அவசியம் இல்லாத ஒன்று.

இன ரீதியிலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது அங்கு பிற இன மாணவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை எவ்வாறு மேம்படுத்த முடியும்?

இத்தகையை சூழல் படுமோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். இத்தகைய நடவடிக்கையினால் மலேசியாவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்? தற்போதுள்ள பள்ளிகளே போதுமானது ஆகும் என்று அவர் மேலும் சொன்னார்.

செனட்டர் டத்தோ டி.மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங், தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பது தொடர்பில் செயற்குழு ஒன்று அமைக்கப்படும் என கூறியிருந்ததற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்திய குடும்பத்தினரிடம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை

ஷா ஆலம்-
முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவர் ஓர் இந்திய குடும்பத்தினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்டுச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஷா ஆலம், தாமான் அலாம் மேகாவில் நேற்று 23ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் இந்திய குடும்பத்தினர் வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி ஓர் அறையில் அடைத்து கொள்ளையிட முயற்சிக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இன்று காலை தொடங்கி சமூக ஊடகங்களில் இந்த கொள்ளைச் சம்பவம்  வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Wednesday 24 July 2019

நீதிமன்ற வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடினார் டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
1எம்டிபி ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  இன்று தனது 66ஆவது பிறந்தநாளை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கொண்டாடினார்.

இவ்வழக்குகளின் 42ஆவது நாள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த நஜிப்பிற்கு ஆதரவாளர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இதற்கு முன்பு பல பிறந்தநாளை டத்தோஸ்ரீ நஜிப் கொண்டாடி இருந்தாலும் நீதிமன்ற வளாகத்தில் பிறந்நநாள் கொண்டாடியது  அவருக்கு மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களுக்கும் புதுமையாக இருந்திருக்கும்.

இந்தியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் பக்காத்தான் கூட்டணி- தனேந்திரன் சாடல்

நீலாய்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளி வீசிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதனை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.
இந்தியர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகள் அள்ளி தெளிக்கப்பட்டன. ஒன்று, இரண்டு அல்ல; 25 வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டன.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டை கடந்து விட்ட போதிலும் இன்னமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட நிறைவேற்றாமல் தடுமாறி கொண்டிருக்கிறது.

வழங்கிய வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த இந்தியர்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும் ஏமாற்றத்தை மட்டுமே வழங்கியுள்ளது. பக்காத்தான் அரசின் செயல் நடவடிக்கைகள் இந்த ஓராண்டு காலமாக திருப்தியளிக்கும் வகையில் அமையாததால் இந்தியர்கள் இந்த அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்தியர்களுக்கு நம்பிக்கை துரோகமே இழைத்துள்ளது.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை விட விலகியிருப்பதே மேலானது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 11ஆவது மாநாட்டில் உரையாற்றியபோது டத்தோஶ்ரீ தனேந்திரன் இவ்வாறு கூறினார்.

ஓரினப் புணர்ச்சி காணொளி; அஸ்மின் அலியை தற்காக்கவில்லை- பிரதமர்

கோலாலம்பூர்-

ஓரினப் புணர்ச்சி காணொளி விவகாரம் தொடர்பில் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை தாம் தற்காக்கவில்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தங்கள் இலக்குகளை அடைய அதைப் பயன்படுத்த முயற்சிப்பதால் ஒரு மோசமான அரசியல் வலையில் சிக்க விரும்பவில்லை.

"இது  முற்றிலும் வடிவமைக்கப்ப்பட்டது, மேலும் பொய்யை நிஜமாக்க நான் ஒரு முகவராக மாற்றப்பட்டேன்.

"நான்  அஸ்மின் அலியை தற்காக்கவில்லை.  இதுபோன்ற மோசமான அரசியல் என்னை சிக்க வைக்காது என்று அவர் சொன்னார்.

ஆற்று தூய்மைக்கேடு; சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது ‘சொஸ்மா’ பாயும்- ஐஜிபி

கோலாலம்பூர்-

சிலாங்கூர் ஆற்றில் தூய்மைக்கேட்டை உண்டாக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபடும் தரப்பினர் ‘சொஸ்மா’ சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று போலீஸ் படை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் ஆற்றை தூய்மைக்கேடாக்கும் நடவடிக்கையை போலீஸ் படை கடுமையாக கருதுவதாக கூறிய அதன் தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர், முன்பு அமலில் இருந்த  உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (இசா) பொது உடைமைகள், மின்சாரம், நீர் நிலை ஆகியவற்றை சீர்குலைக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.

அதேபோன்று தற்போது சிலாங்கூர் ஆற்றை தூய்மைக்கேடாக்கும் தரப்பினர் மீது சொஸ்மா சட்டம் பாயக்கூடும். ஏனெனில், பொறுப்பற்ற சில தரப்பினரின் நடவடிக்கையினால் 4,5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகையை நடவடிக்கையில் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் ஆற்றில் டீசல் கொட்டப்பட்டதால் அதன் 4 சுத்திகரிப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால்  மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டது.

சிலாங்கூர் ஆற்றில் டீசல் கொட்டப்பட்ட விவகாரத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

பராமரிப்பு இல்லத்திலிருந்து வெளியேற 30 நாட்கள் கால அவகாசம்? சமூகத் தலைவர்கள் உதவுவார்களா? விஜயலெட்சுமி ஏக்கம்

காஜாங்-
காஜாங், தாமான் ஆசா ஜெயாவைச் சேர்ந்த தனித்து வாழும் மாது விஜயலெட்சுமி செல்லதுரை, ஆதரவற்ற முதியோரையும் குழந்தைகளையும்  பராமரிக்கும் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.  

அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்து பராமரிக்கப்படும் இந்த இல்லத்தை சொந்த வருமானத்திலும் பொதுமக்களின் நன்கொடையிலும் வழிநடத்தி வருவதாக கூறும் அவர், இந்த இல்லத்தை நடத்துவதற்கு அனுமதி இல்லை,  30 நாட்களுக்குள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

முறையான பதவி சான்றிதழை வைத்துள்ளேன், ஏன் இந்த இல்லத்தை நடத்தக்கூடாது  என கேள்வி எழுப்பிய அவர், 25க்கும் மேற்பட்ட முதியோரும் குழந்தைகளும்  உள்ள நிலையில் திடீரென வெளியேறச் சொன்னால் எங்கோ போவோம்?

இந்த இல்லத்திற்கான வெ.1,000 கூட சொந்த செலவிலேயே  செலுத்துகிறேன். அரசாங்க உதவிகள் ஏதுமின்றி நல்லுள்ளங்களின் உதவியாலும் இந்த இல்லத்தை நடத்தி வருகிறேன்.

முறையாக பதிவு பெற்று செயல்படும் என்னுடைய முதியோர் பராமரிப்பு இல்லத்தை அனுமதி இல்லையா? 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உதவ சமூகத் தலைவர்கள் முன்வருவார்களா? என்று விஜயலெட்சுமி வினவினார்.

அரசியல் விழிப்புணர்வுமிக்கவர்களாக இந்தியர்கள் உருமாற வேண்டும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய அமைச்சர்களையே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் ஒவ்வோர் அமைச்சுகளிலும் உள்ள வாய்ப்புகளை மலேசிய இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இந்திய சமுதாயம் மாறும்போதுதான் நமது பொருளாதார பலமும் மாற்றம் காணும்.

இன்றைய சூழலில் நமது சமூகத்தினர் கல்விக்கும் ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மட்டுமே போராடி கொண்டிருக்கிறோம். எந்த அரசாங்கம் அமைந்தாலும் பிரித்தாளும் கொள்கை கடைபிடிக்கப்படும்போது அதனால் நமக்கான சில உரிமைகள் பறிக்கப்படும்போது அதனை எதிர்த்து போராடுவதில் தவறில்லை.

ஆனால் உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில் நமது வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலையையும் மேம்படுத்திக் கொள்கின்ற நிலைக்கு இந்திய சமுதாயம் மாற வேண்டும்.

வாய்ப்புகள் மறுக்கப்படும்போதும் பறிக்கப்படும்போதும் இந்திய அமைச்சர்களையும் தலைவர்களையும் சாடுகிறோம். ஆனால் இந்திய அமைச்சர்களை தவிர்த்து பிற இனத்தவர்கள் பதவி வகிக்கும் எத்தனை அமைச்சுகளின் கீழ் இயங்கும் துறைகளிலுள்ள வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்?

குறிப்பாக விவசாய அமைச்சில் பல வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதில் உள்ள வாய்ப்புகளை எத்தனை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்?

பிற இனத்தவர்கள் பதவி வகிக்கும் அமைச்சு என்பதால் அங்குள்ள வாய்ப்புகளை பெறுவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம். ஆனால் அதுதான் நமது சமுதாயத்தின் மிகப் பெரிய பொருளாதார பின்னடைவு என்பதை உணர மறுக்கிறோம்.

இந்திய அமைச்சர்களை மட்டும் குறை கூறிக் கொண்டிருக்காமல் நமக்கான வாய்ப்புகளை தட்டி பெறுவதில் அரசியல் விழிப்புணர்வுமிக்க சமுதாயமாக இந்தியர்கள் உருமாற வேண்டும் என்று மின்னல் பண்பலையில் நேரலை நிகழ்ச்சியின்போது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

Tuesday 23 July 2019

கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் இந்திய மூதாட்டியிடம் கொள்ளை

ரவாங்-
இந்திய மூதாட்டி ஒருவரின் கண்கள், கைகளை கட்டி போட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
ரவாங், டெம்ப்ளர் பார்க்கில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கண்கள், கைகள் கட்டப்பட்ட அந்த மூதாட்டிக்கு பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

கறுப்பு நிறக் காரில் வந்த கொள்ளையர்கள் தன்னிடம் நகைகளை கொள்ளையடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தன்னை இறக்கி விட்டுச் சென்றனர். அவர்கள் யாரென்று தெரியவில்லை என்று அந்த மூதாட்டி கூறுவது காணொளியில் இடம்பெற்றுள்ளது.

கண்கள் இறுக கட்டப்பட்ட நிலையிலும் சிறு துவாரத்தின் வழியாக சாலை கடந்து வந்ததாக அவர் கூறினார்.


‘Visit Malaysia 2020’: புதிய முத்திரை அறிமுகம்

சிப்பாங்-

‘2020 மலேசியாவுக்கு வருகை தாருங்கள்’ (Visit Malaysia 2020) திட்டத்திற்கான  புதிய முத்திரையை பிரதமர் துன் மகாதீர் அறிமுகம் செய்து வைத்தார்.
மலேசிய சுற்றுலா துறை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில்  இத்திட்டத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட முத்திரைக்கு பதிலாக புதிய முத்திரையை பிரதமர் அறிமுகம் செய்தார்.

தேசிய பிரச்சாரமான இதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் புதிய முத்திரையை உருவாக்க சுற்றுலா அமைச்சு அனைத்து மலேசியர்களுக்கும் அழைப்பு விடுத்தது.

மார்ச் 11 முதல் மர்ச் 24 வரை  நடத்தப்பட்ட முத்திரை உருவாக்கும் போட்டியில் 586 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் அல்ப்ரெட் புவா ஹோக் புங் (வயது 23) உருவாக்கிய முத்திரை தேர்வு செய்யப்பட்டது.

இந்த முத்திரை அறிமுக நிகழ்வின்போது சுற்றுலா அமைச்சர் டத்தோ முஹமடின் கெதாபியும் உடனிருந்தார்.

தேமுவின் பங்காளி கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- தனேந்திரன் பரிந்துரை

நீலாய்-
தேசிய முண்ணனியின் உருமாற்ற நடவடிக்கையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி அதன் பங்காளி கட்சியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேமுவில் தற்போது 3 கட்சிகள் மட்டுமே அங்கத்துவம் பெற்றுள்ளன.

தற்போது தேமுவில் பாஸ் கட்சியை இணைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியையும் தேமுவின் பங்காளி கட்சியாக இணைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளோம்.
தேர்தலுக்கு  முன்னரும் பின்னரும் தேமுவுடனே நாங்கள் பயணிக்கிறோம். தேமுவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது மக்கள் சக்தி கட்சி.

முன்பு எதிரியாக கருதப்பட்ட பாஸ் கட்சியே கூட்டணியில் இடம்பெறும்போது மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாய்ப்பு வழங்குவது ஒன்றும் தவறாகி விடாது.

இக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான், இது குறித்து தேமு தலைமைத்துவ மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நம்பிக்கை தெரிவித்தார் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.
நீலாயில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 11ஆவது மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி; அரசு ஆராய்கிறது- கல்வி துணை அமைச்சர்

கோலாலம்பூர்-

இந்திய சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆய்வு மேற்கொண்டு வருவதாக கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக இந்திய சமுதாய கல்வி நிபுணர்களைக் கொண்ட செயற்குழு அமைக்கப்படும் என்ற அவர், இந்த பரிந்துரைக்கு முழுமையான ஆய்வு தேவைபடுகிறது. அதன் அடிப்படையிலேயே நீண்ட கால தீர்வுகளை பெற முடியும்.

இந்த ஆய்வில், நிலையான அளவுகோல், மாணவர் திட்டம், சட்டவிதிகள், அரசாங்க நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படும் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பானின் இந்திய சமுதாயத்திற்கான தேர்தல் கொள்கை அறிக்கையில் முழு உதவி பெறும் தமிழ்ப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என்ற வாக்குறுதியின் நிலை என்னவென்று செனட்டர் டி.மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Monday 22 July 2019

அமைச்சரவையில் மாற்றமில்லை- துன் மகாதீர்

கோலாலம்பூர்- 

அமைச்சரவையில் மாற்றம் ஏதும் இல்லை என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அமைச்சர்களுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது அமைச்சரவை மாற்றம் வியூகத்திற்கு வழிவகுத்தது.

இது குறித்து கருத்துரைத்த துன் மகாதீர், அமைச்சரவை மாற்றம் ஏதும் இப்போது இல்லை.  மக்களின் கருத்துகளுக்கு ஏற்பவே அமைச்சரவை மாற்றம் நிகழும்.

அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாலேயே புகைப்படம் எடுக்கப்பட்டது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார். 

நாட்டின் கடன்; 1எம்டிபியை குறைகூறுவதிலே அரசு குறியாக உள்ளது- நஜிப்

கோலாலம்பூர்-

நாட்டை 15 மாதகாலமாக பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி செய்து வந்தாலும் கூட 1எம்டிபி மீது குறை காண்பதிலேயே குறியாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் கடன் வெ.3,220 கோடி  அதிகரித்திருப்பதற்கு 1எம்டிபி  தான் காரணம் என அரசு கூறுவது ஏற்புடையதல்ல.

நாட்டின் கடன் 2017இல் 68,680 கோடி வெள்ளியாகவும் 2018இல் அது 74,100 கோடி வெள்ளியாக அதிகரித்ததற்கு 1எம்டிபியின் திட்டமிடப்படாத முதலீடுகளும் நிதிமுறைகேடும் தான் காரணம் என்று தொழில்துறை முன்னாள் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறிய கருத்துக்கு பதிலளித்த டத்தோஶ்ரீ நஜிப், 2016இல் நாட்டின் கடன் அதிகரித்திருக்கவில்லை என்று கூறினார்.

நாட்டின் கடன்  மீது மட்டுமே கவனம் செலுத்தும் அரசாங்கம், 1எம்டிபி முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை மறந்து விடக்கூடாது  என டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.


Friday 19 July 2019

ஆவணப் பிரச்சினைகள்; ‘மைசெல்’ வழி 94 புகார்களுக்கு தீர்வு- கணபதிராவ்

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
நாடற்ற பிரஜைகள் உட்பட பல்வேறு அடையாள ஆவணப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட ‘மைசெல்’ பிரிவின் கீழ் இதுவரை 94 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘மைசெல்’ பிரிவின் கீழ் இதுவரை 1,686 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 457 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதில் மலாய்க்காரர்களின் 97 விண்ணப்பங்களும், சீனர்களின் 81 விண்ணப்பங்களும், இந்தியர்களின் 279 விண்ணப்பங்களும் அடங்கும். இதில் குடியுரிமை (101), பிள்ளை தத்தெடுப்பு (66), சிவப்பு அடையாள அட்டை (115), நீல அடையாள அட்டை ( 15), பிறப்புப் பத்திரம்  (116), குடிநுழைவு (28), அடையாள அட்டை (16) ஆகிய விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் குடியுரிமை (26), பிள்ளை தத்தெடுப்பு (7), சிவப்பு அடையாள அட்டை (16), நீல அடையாள அட்டை (15), பிறப்புப் பத்திரம்  (33), குடிநுழைவு (7), அடையாள அட்டை (1) ஆகிய விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

‘பரிவுமிக்க அரசாங்கம்’ எனும் கோட்பாட்டின் கீழ் ‘மைசெல்’ திட்டம் தொடங்கப்பட்டு ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

ஆனால்,  முறையாக பதிவு பெறாத திருமணங்களாலேயே பெரும்பாலானோர் ஆவணப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அதில் பலர் அந்நிய நாட்டவர்களை திருமணம் செய்வதாலும் திருமணத்தை முறையாக பதிவு செய்யாததாலுமே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

‘மைசெல்’ பிரிவின் கீழ் தற்போது இரு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதே வேளையில் உள்துறை அமைச்சு, தேசிய பதிவு இலாகா போன்றவை சிறந்த ஒத்துழைப்பை வழங்கி விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலிக்கின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி கூறி கொள்வதாக கணபதிராவ் குறிப்பிட்டார்.

Thursday 18 July 2019

இந்திய சமுதாயத்திற்கான 25 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்- மலேசிய இந்தியர் குரல் வலியுறுத்து

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட 25 வாக்குறுதிகளை நினைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பு வலியுறுத்தியது.

கல்வி, சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 25 வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டன.
ஆனால் ஆட்சியமைத்து ஓராண்டை கடந்து விட்ட நிலையில் இந்த 25 வாக்குறுதிகள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு பெரும் கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது என்று மலேசிய இந்தியர் குரல் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம், தேசிய செயலாளர் ஆனந்த், ஆலோசகர் ராயுடு ஆகியோர் தெரிவித்தனர்.

இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாமல் அத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அவை புனித நூல் அல்ல என்று காரணம் சொன்னாலும் வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

2008ஆம் ஆண்டு முதல்  பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் மலேசிய இந்தியர் குரல்  இயக்கம், இந்த 25 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் வெகு விரைவில் பிரதமர் துன் மகாதீரை சந்திக்கவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம் காண்பதற்கு மலேசிய இந்தியர் குரல் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் துணைத் தலைவர்  யோகராஜா, இதர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பணி நீக்க நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை; தமிழ் நேசனுக்கு எதிராக முன்னாள் பணியாளர்கள் போலீஸ் புகார்


கோலாலம்பூர்-
பணி நீக்கம் செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப நஷ்ட ஈட்டை வழங்காத தமிழ் நேசன் நாளிதழ் நிர்வாகத்திற்கு எதிராக அதன் முன்னாள் பணியாளர்கள் இன்று கோம்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதியோடு தனது சேவையை நிறுத்திக் கொண்ட தமிழ் நேசன், அதன் பணியாளர்கள் 40 பேருக்கு மார்ச் மாதத்திற்குள் நஷ்ட ஈட்டை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.

ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிபடி இந்நாள் வரையிலும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என்று அந்நாளிதழின் முன்னாள் தலைமையாசிரியர்  கே.பத்மநாபன் தெரிவித்தார்.

பணியாளர்கள் அனைவருக்கும் ஜனவரி 28ஆம் தேதி வேலை நிறுத்தக் கடிதம் வழங்கப்பட்டது. அதில் மார்ச் 31ஆம் தேதி வரைக்குமான சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் பிப்ரவரி மாதச் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை.

அதோடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் இபிஎஃப், சொக்சோ சந்தா சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட போதிலும் அந்த தொகை சம்பந்தப்பட்ட இலாகாவில் கடந்த 5 மாதமாக செலுத்தப்படவில்லை.

இது ஒரு வர்த்தக குற்றம் என்பதால் இது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.


Wednesday 17 July 2019

வாக்காளர் வயது வரம்பு 18- மக்களவையில் நிறைவேற்றம்

கோலாலம்பூர்-

வாக்காளர் வயது வரம்பு 21இல் இருந்து 18ஆக குறைக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட  நிலையில் 2/3 பெரும்பான்மையில் அந்த சட்ட மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புதிய வாக்காளர் வயது வரம்பு 18ஆக குறைக்கும் சட்ட மசோதாவை பிரதமர் துன் மகாதீர் முகம்மது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக வாசிப்புக்கு வந்த அந்த சட்ட மசோதா ஏற்றுக் கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 3இல் 2 பெரும்பான்மை பெற்று இச்சட்ட மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதன்படி இனி 18 வயது நிரம்பும் மலேசியர்கல் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்ளப்படுவர்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது 14.9 மில்லியன் பேர் வாக்களித்த நிலையில் இந்த புதிய சட்ட மசோதாவினால் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலி 22.7 மில்லியன் பேர் வாக்காளர்களாக உருவெடுப்பர்.

வேதமூர்த்தியின் புதிய கட்சியால் மஇகா கலக்கமடையவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-

அமைச்சர் வேதமூர்த்தி தொடங்கியுள்ள புதிய கட்சியால் தங்களுக்கு எந்த கலக்கமும் இல்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வேதமூர்த்தி தொடங்கியுள்ள  மலேசிய முன்னேற்றக் கட்சி  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஜசெக, பிகேஆர் போன்ற ஒரு கட்சியாகவே திகழ முடியும். இக்கட்சியில் யார் இணைந்துக் கொண்டாலும் கவலையில்லை.

மஇகா உறுப்பினர்கள் யாரேனும் இக்கட்சியில் சேர நினைத்தால் தாராளமாக இணைந்து கொள்ளலாம் என்றார் அவர்.

இந்நாட்டில் பழைமை வாய்ந்த கட்சியான மஇகா கடந்த பொதுத் தேர்தலில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஹிண்ட்ராஃப் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் வேதமூர்த்தி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மலேசிய இந்தியர்களின் உரிமை போராட்டக் குரலாக அமைந்த ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.
தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இந்தியர் பிரதிநிதிவம் இடம்பெறும் வகையில் மலேசிய  முன்னேற்றக் கட்சிக்கான விண்ணப்பத்தை தேசிய சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) அங்கீகரித்துள்ளதால் இனி மலேசிய இந்தியர்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஆளும் அரசாங்கத்தின் இக்கட்சி செயல்படும்.

புதிய அரசியல் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்கவிருப்பதால் ஹிண்ட்ராஃப் இயக்கத்தில் தலைவர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாகவும் இதன் தொடர்பில் அவசர பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செடிக்கின் பலவீனம்; இந்தியர்களுக்கான மில்லியன் கணக்கான நிதியில் முறைகேடு

கோத்தா கினாபாலு-

இந்திய சமூகத்திற்கான ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான நிதி கடந்த கால அரசாங்கத்தின்போது தவறாக நிர்வகிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை இந்தியர் சமூக- பொருளாதார மேம்பாட்டு பிரிவு (செடிக்) நிர்வாகத்திடம் வெ.203.89 மில்லியன் நிதி  வழங்கப்பட்டதாக  தலைமை கணக்காய்வாளரின் 2018ஆம் ஆண்டுக்கான முதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் துறை அமைச்சர், துணை அமைச்சர், செடிக்கின் நிர்வாகம் ஆகியவற்றின் பலவீனத்தால் அந்நிதி தவறாக கையாளப்பட்டுள்ளது.

இந்நிதிக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தெளிவான செயல்முறை தரநிலையை கொண்டிருக்கவில்லை.

செடிக்கிடம் வழங்கப்பட்ட இந்த நிதி பலவீனமாக பொது இயக்கங்களுக்கு சிலரது சுயநலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு முறையான தகவல்களை செடிக் கொண்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.