Monday 11 September 2017

கெடா சுல்தான் காலமானார்

கோலாலம்பூர்-
நாட்டின் பேரரசராக இருமுறை பதவி வகித்த பெருமைக்குரிய கெடா மாநில சுல்தான் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸம் ஷா இன்று பிற்பகல் 2.30 மணியளவில்  காலமானார்.

89 வயதான துவாங்கு அப்துல் ஹலிம்  முவாட்ஸம் ஷா 1970, 2012 ஆகிய இரு ஆண்டுகளில் நாட்டின் பேரரசராக  பதவி வகித்தவர் ஆவார்.
கெடா சுல்தான் காலமான தகவல் அறிந்த மாநில மந்திரி பெசார் டத்தோ படுக்கா அகமாட் பாஷா முகமட் ஹனிபா,  கோலாலம்பூரிலிருந்து அலோர் ஸ்டாருக்கு உடனே திரும்பியதாக தெரிவித்தார்.

துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸம் ஷா 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். தமது தந்தை சுல்தான் பாட்லிஷா இப்னி காலமானதைத் தொடர்ந்து 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி கெடா சுல்தானாக அரியணை அமர்ந்தார்.

தித்தி காஜா ஆரம்பப் பள்ளியில் கல்வியை தொடங்கி அவர், பின்னர் சுல்தான் அப்துல் ஹமிட் கல்லூரியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், 1952ஆம் ஆண்டு கெடா இளவரசராக இருந்த போது லண்டன் ஆக்ஸ்போர்ட் வாட்ஹாம் கல்லூரியில் சமூக அறிவியல், நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றார்.

1970 முதல் 1975ஆம் ஆண்டு வரையிலும் நாட்டின் 5ஆவது பேரரசராகவும் 2012 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலும் 14ஆவது பேரரசராகவும் பதவி வகித்த துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸம் ஷா கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை அப்பதவியை வகித்தார்.  அவருக்கு பிறகு கிளந்தான் சுல்தான் முகமட் வி நாட்டின் பேரரசராக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment