Sunday 17 September 2017

சுதந்திரப் போராட்டத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர் புகட்ட வேண்டும்- டத்தோ சம்பந்தன்

ரா.தங்கமணி

செமினி-
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தையும் அதிலுள்ள தியாகத்தையும் அர்ப்பணிப்பையும்  தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் அவசியம் உணர்த்த வேண்டும் என ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்து நிற்கும் வேளையில் நாட்டின் சுதந்திர வரலாற்றை பலர் அறியாமலே இருக்கின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்கான எத்தனையோ பேர் போராட்டம் நடத்தியுள்ளனர்; தங்களது இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
அத்தகைய வலராற்று போராட்டத்தை நம்மில் பலர் அறியாமலே உள்ளனர். இதற்கு காரணம் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சுதந்திரம் பற்றிய உணர்வை புகட்டுவதில்லை. சுதந்திரம் பற்றி பேசுவதில்லை.
இதனாலேயே பெரும்பாலானோர் நாட்டின்  மீது பற்றுதல் இல்லாமல் சுதந்திர உணர்வு இல்லாமல் கிடக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சுதந்திர உணர்வை புகட்ட வேண்டும்; நாட்டின் சுதந்திரம் பற்றி வீட்டில் பேச வேண்டும் என இங்கு செமினியில் ஸ்டோர் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற ஐபிஎப் உலு லங்காட் தொகுதியின் சுதந்திர தினம், மலேசிய தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது டத்தோ சம்பந்தன் இவ்வாறு கூறினார்.
இந்நாட்டில் வாழ்கின்ற பல இன மக்களிடையே ஒற்றுமை மேலோங்குவதற்கு சுதந்திர போராட்டத்தின் உணர்வுகளை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஏனெனில், அன்று நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள், மதம், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து நாட்டிற்காக ஒற்றுமையாக இருந்து போராடினர். அந்த ஒற்றுமையின் வெளிப்பாடு இன்று நாம் கொண்டாடும் சுதந்திர தினம் ஆகும் என்றார்.
மேலும் பேசிய அவர், சிலாங்கூர் மாநிலம் எதிர்க்கட்சி வசம் இருந்தாலும் வரும் பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இம்மாநிலம் எதிர்க்கட்சி வசமிருந்தாலும் இங்குள்ள மக்களுக்கான சேவையை தேசிய முன்னணி அரசாங்கம் நிறுத்திக் கொண்டது இல்லை. ஒவ்வொரு காலகட்டங்களிலும் மக்களுக்கான சேவைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றுவதற்கு ஐபிஎப் கட்சி ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது என டத்தோ சம்பந்தன் கூறினார்.

இந்நிகழ்வில் செமினி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ  ஜோகான் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மூன்று பொது இயக்கங்களுக்கு மானியம், சிறுநீரக நோயாளிக்கு நிதியுதவி, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி போன்றவை வழங்கப்பட்டன.

ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐபிஎப் கட்சியினரும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment