Friday 30 April 2021

கணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் தேவை- வீரன் வலியுறுத்து

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

சிறையில் தடுத்து வைக்கப்பட்ட போது  கடுமையான தாக்குதலுக்கு  இலக்கானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மஇகா உச்சமன்ற உறுப்பினர் மு.வீரன் வலியுறுத்தினார்.இந்தியர்கள் என்றாலே குண்டர்கள், குற்றவாளிகள் என முத்திரை குத்தி விசாரணை எனும் பெயரில் சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி மரணிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.

விசாரணை எனும் பெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டபோது உடல்நலம் குன்றியதால் மரணித்தனர் என்று கூறும் போலீசாரின் நடவடிக்கை இனியும் மக்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்ட வீரன், கால்கள் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதிக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் கால்கள் அகற்றப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி அவர் மரணமடைந்தது இந்திய சமுதாயத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் வரை உடல்நலத்துடன் இருந்த கணபதி, போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? என்ற கேள்வி மிக சாதாரணமாக எழுகிறது.

ஆகவே, கணபதியின் மரணத்தில் சூழந்துள்ள மர்மங்கள் விலகுவதற்கு ஏதுவாக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வீரன் வலியுறுத்தினார்.


மஇகா எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை காப்பாற்ற வந்தவர்கள் விக்னேஸ்வரன், சரவணன் - சின்னராஜு

லிங்கா-

சுங்கை சிப்புட்-

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கும் மஇகாவின் வளர்ச்சிக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்று மஇகா ஶ்ரீ தாமான் கிளைத் தலைவர் வீ.சின்னராஜு குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ம இகாவின் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ எம்.சரவணனும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேசிய முன்னணி ஆளும் அதிகாரத்தை இழந்து ஓர் எதிர்க்கட்சி எனும் நிலையில் இருந்த மஇகாவை வலுபடுத்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஶ்ரீ சரவணனும் துணிந்து களமிறங்கினர்.

அதற்கேற்ப மஇகாவை இன்று வலுவான கட்சியாக மாற்றியமைத்துள்ள டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்ற நிலையில் கட்சி தேர்தலில் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கிளைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

அதோடு, கிளை உறுப்பினர்களின் திருமணம், பிறந்தநாளின்போது அவர்களின் இல்லம் சென்று பரிசு, வாழ்த்து அட்டை வழங்குவது, கிளை உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது பிள்ளைகள் மரணித்தால் மரண சகாய நிதி வழங்குவது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மஇகா ஶ்ரீ தாமான் கிளையின் முதலாம் ஆண்டு கூட்டத்தை தொகுதி சார்பாக வின்சென்ட் டேவிட்,தேசிய மஇகா சார்பாக உச்சமன்ற உறுப்பினர் குணசீலன் ஆகியோர் வழிநடத்தினர்.


கணபதியின் மரண விவகாரம்- அமைச்சரவையில் விவாதிப்பேன் - டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

போலீசாரின் தடுப்புக் காவலின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரண விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரணமடைந்த கணபதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும்.

கணபதியின் மரண விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர்,  போலீஸ் படைத் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.

போலீஸ் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு அரங்கேறியுள்ள கணபதியின்  மரண விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லவிருப்பதாக கூறியுள்ள டத்தோஶ்ரீ சரவணன், கணபதியின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

போலீசாரின் விசாரணைக்கு உதவும் பொருட்டு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போலீஸ் காவலில் தடுத்து  வைக்கப்பட்ட கணபதி மார்ச் 8ஆம் தேதிவிடுதலை செய்யப்பட்டார்.

ஆயினும் செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணபதியின் கால்கள் துண்டிக்கப்படட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி மரணமடைந்தார்.


Sunday 25 April 2021

ஏப்.29இல் திரையீடு காண்கிறது 'பரமபதம்'

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய திரைப்பட ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த  ‘பரமபதம்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையீடு காணவுள்ளது.

 மலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களான  விக்னேஷ் பிரபு- தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘பரமபதம்’ திரைப்படம் எப்போது திரையீடு காணும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மலேசிய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பரமபதம்’ விளையாட்டை மையப்படுத்தி  பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், திரையீடு காண்பதற்கு முன்னரே உலகளாவிய நிலையில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.

வரும் 29ஆம் தேதி மலேசிய திரையரங்குகள் மட்டுமின்றி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியீடு காண்கிறது என்று படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

பரமபதம் திரைப்படத்தில் தனேஷ் பிரபு, சசிவரூபன், ரிஷி, பவித்ரன் ஆகிய நான்கு இளைஞர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இயக்குனர் விக்னேஷ் பிரபு மிரட்டும் வில்லனாக தனது நடிப்பை வழங்கியுள்ளார். நாயகியாக கெளசல்யா எனும் புதுமுகம் அறிமுகம் ஆகிறார். துணை கதாபாத்திரத்தில் கே.எஸ்.மணியம், பென் ஜி, கவிமாறன், அகோதரன், விமல், விக்கி நடராஜா, சிங்கை ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கெடா, பினாங்கு, ஆகிய மாநிலங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சாய் நந்தினி மூவி வேல்ர்டு- டீரிம் சாய் ஹோம் புரொட்க்ஷன் சார்பில் டாக்டர் இலட்சப் பிரபு, டாக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர்.


பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகளை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது? கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) அதிகமான சீனர்களை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக திகழ்ந்தாலும் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் விரும்புகின்ற கட்சியக ஜசெக (DAP) திகழ்கிறது நிதர்சனமான உண்மை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

ஜசெகவை ஓர் இனவாத கட்சியாகவே சித்திரித்து பெர்சத்து, பாஸ், அம்னோ ஆகிய கட்சிகள்  தங்களது அரசியல் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இம்மூன்று கட்சிகளும் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலையில் ஜசெகவைஓர் இனவாத கட்சியாக சித்திரித்து வருகின்றனர்.

ஆனால், ஜசெக வெறும் சீனர்களை மட்டும் கொண்ட கட்சியல்ல. இந்திய்ரகளும் மலாய்க்காரர்களும் விரும்பும் கட்சியாக ஜசெக வளர்ச்சி கண்டு வருகிறது.  ஜசெகவை பிரதிநிதித்து இந்தியர்கள் அதிகமானோன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக ஒரு சீனரையும் ஓர் இந்தியரையும் நியமித்தது ஜசெக,நெகிரி செம்பிலானில் இரு ஆட்சிக்கழு உறுப்பினர்களை நியமித்தது ஜசெக, பேராவில் சட்டமன்ற சபாநாயகராக இந்தியரை முதன் முதலில் நியமனம் செய்தது ஜசெக, ஜோகூரில் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினரை  நியமனம் செய்தது ஜசெக. சிலாங்கூரில் கடந்த இரு தவணைகளாக ஆட்சிக்குழு உறுப்பினராக தம்மை நியமித்தது ஜசெக… இப்படி ஜசெக இன வேறுபாடுகளை கடந்து ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், ஜசெகவை இனவாத கட்சி என்று முத்திரை குத்தும் கட்சிகள்தான் இனவாத வேறுபாட்டில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வருகின்றன. பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகள் செய்யும் இனவாத நடவடிக்கையை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது?

குறிப்பாக ஓரங்கட்டிய அரசியல் செய்யும் இந்த கட்சிகளின் இனவாதப் போக்கினால் இந்தியர்கள் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் பின் தங்கியே கிடக்கின்றனர்.மலாய்க்காரர், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர், கடஸான், ஈபான் என்று எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து இன மக்களையும் சரிசமமான குடிமக்களாய் நடத்த தவறிய ஆளும் அதிகாரத்தில் இருந்த கட்சிகள்தான் இன்று ஜசெகவை ஓர் இனவாத கட்சி என்று முத்திரை குத்துகின்றன.

உண்மையில் ஜசெக அனைவருக்கும் பொதுவான கட்சிதான். சீனர்கள் அதிகமாக இருந்தாலும் இந்தியர்கள், மலாய்க்காரர்களின் நலனை காக்க இக்கட்சி ஒருபோதும் தவறியதில்லை.

தற்போது மலாய்க்காரர்களும் ஜசெகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்கின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றமே பிற்காலத்தில் இன வேறுபாடுகளற்ற மலேசிய சமூகத்தை கட்டி எழுப்பும் என்று தாம் நம்புவதாக கோத்தா ராஜா ஜசெக தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சிலாங்கூரமாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங், அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு, ஜசெகவின் மூத்தத் தலைவர் தான் கொக் வய் ஷா ஆலம் நகராண்மை கழக உறுப்பினர் பாப்பராய்டு, யுகராஜா, கிராமத் தலைவர்களும் ஊராட்சி  மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


திருமதி மோகனசெல்வி குடும்பத்திற்கு 'யெஸ்' அறவாரியம் உதவிக்கரம் நீட்டியது

ரா.தங்கமணி

செராஸ்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் வேலை இழந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த செராஸ், அம்பாங் பகுதியைச் சேர்ந்த திருமதி மோகனசெல்வி குடும்பத்தினருக்கு 'யெஸ்' எனப்படும் ஏரா சூரியா அறவாரியம் (Yayasan Era Suria) உதவிக்கரம் நீட்டியது.

இப்பகுதியிலுள்ள துரித உணவகம் ஒன்றில் திருமதி மோகனசெல்வி, கோவிட்-19 பாதிப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பினால் வேலையை இழந்தார்.

பின்னர் இங்குள்ள பள்ளி ஒன்றில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் அந்த தொழிலும் நிரந்தரம் இல்லாமல் அல்லாடி கொண்டிருந்தார்.

5 பிள்ளைகளுடன் உடல் நலம் குன்றிய கணவரையும் கவனித்து வரும் திருமதி மோகனசெல்வியின் நிலையை அறிந்த யெஸ் அறவாரிய தலைவர் நந்தகுமார், அவர்தம் குழுவினர் இக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர்.

அவ்வகையில் அண்மையில் திருமதி மோகனசெல்வியின் வீட்டிற்கு வந்த நந்தகுமார், அறவாரியத்தின் இயக்குனர்கள் டோனி கிளிஃபர்ட், எஸ்.மகாலிங்கம், செயலாளர் ஃபரிடா, வாரிய உறுப்பினர்கள், மளிகைப்பொருட்கள், சிறார்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள், கட்டில், மெத்தை போன்றவற்றை வழங்கியதோடு, மின்சார கம்பிகளை பழுதுபார்க்கவும் உதவினர்.

மேலும், சிறு வணிகத்தில் ஈடுபட ஆர்வம் உள்ள திருமதி மோகனசெல்விக்கு வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக உதவித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் நந்தகுமார் குறிப்பிட்டார்.

இதனிடையே 'யெஸ்' அறவாரியத்தினர் வழங்கிய உதவியில் நெகிழ்ந்த திருமதி மோகனசெல்வி அவர்களுக்கு நன்றி கூறினார்.

Sunday 18 April 2021

நடிப்பின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்-

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பின் வழி நம்மையெல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக், அகால மரணமடைந்த செய்தி உலகம் எங்கும் உள்ள தமிழர்களைப் போன்று எனக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கும் மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவேக், வெறும் நடிகராக மட்டும் இருந்திருந்தால் நாம் அந்த இழப்பால் பெரிய அளவில் வருத்தமடைந்திருக்க மாட்டோம்.

ஆனால், தனது நடிப்புத் தொழிலை விட பல விதங்களில் தனது இரசிகர்களையும் உலகத் தமிழர்களையும் பாதித்தவர் விவேக்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.இராதா போன்ற மாபெரும் கலைஞர்களுக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்போடு சேர்த்து, நமது சமுதாயத்தைப் பாதித்திருக்கும் பல மூட நம்பிக்கைகளையும், காலத்துக்கு ஒத்து வராத வழக்கங்களையும் சாடியவர் விவேக்.

தொடர்ச்சியாக அவரின் அந்த அணுகுமுறையை இரசிகர்கள் கொண்டாடினர். பாராட்டினர். “சின்னக் கலைவாணர்” என பட்டமளித்து மகிழ்ந்தனர்.

அதுமட்டுமல்ல! மறைந்த இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்களை விவேக் சந்தித்தபோது அவர் மிகச் சாதாரணமாக “ஒரு மில்லியன் மரங்களை நடுங்கள்” என இட்ட வேண்டுகோளை, தலைமேல் ஏற்று காலமெல்லாம் அதற்கெல்லாம் பாடுபட்டார் விவேக். 

பத்து இலட்சம் மரக் கன்றுகள் நடும் இலக்கை அடைந்த பின்னரும் “தொடர்ந்து இந்தப் பணியைச் செய்யுங்கள்” என அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்காக, அப்துல் கலாம் மறைந்த பின்னரும் தனது மரம் நடும் பணியைத் தொடர்ந்தார் விவேக்.

59-வது வயதில் மறைந்து விட்டாலும் தன் வாழ்நாளில் 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்கணமாகத் திகழ்ந்தவர் விவேக். வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என மற்ற மனிதர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் விவேக்.

இன்று அவர் மறைவை முன்னிட்டு அனுதாபம் தெரிவிப்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களில் மரங்களை நட்டு அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் வெளிவருகின்றன. அதைவைத்து அவர் மற்ற மனிதர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது.

அடிக்கடி மலேசியா வந்து சென்ற விவேக் இங்கும் பல நண்பர்களைக் கொண்டிருந்தார். எண்ணற்ற இரசிகர்கள் அவருக்கு மலேசியாவிலும் இருக்கின்றனர்.

அத்தகைய இரசிகர்களில் நானும் ஒருவன், எனது குடும்பத்தினரும் அவரின் இரசிகர்கள்தான் என்ற முறையில், அவரின் மறைவு எங்களையும் மிகவும் பாதித்திருக்கிறது.

இருந்தாலும், அவர் நமக்காக அடையாளம் காட்டிச் சென்றிருக்கும் மனித நேயம், மூட நம்பிக்கை ஒழிப்பு, இன, மத பேதமின்றி அப்துல் கலாம் போன்ற மாமனிதரை தனது குருவாக அவர் ஏற்றுக் கொண்டு செயல்பட்டது,  சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முழுவதும் மரங்களை நட்டது, என்பது போன்ற நற்பணிகளால் அவர் நம்மால் எப்போதும் நினைவு கூரப்படுவார்.

அதுமட்டுமின்றி, சினிமா என்ற ஊடகம் வெறும் நகைச்சுவைக்கானது மட்டுமல்ல, பணம் சம்பாதிக்கும் தொழில் மட்டுமல்ல, அதையும் மீறி பல நல்ல கருத்துகளை தனது நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லமுடியும், சமுதாயத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என தனது பல நகைச்சுவைக் காட்சிகளால் நிரூபித்துச் சென்றிருக்கிறார் விவேக்.

மற்ற திரைப்படக் கலைஞர்களும் இதே போன்று விவேக் பாணியில் தங்களின் திரைப்படத் தொழிலோடு, மனித சமுதாயத்திற்கு பயன் விளைவிக்கும் நற்பணிகளையும் செய்ய முன்வர வேண்டும். அதன் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை நமது சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும்.

விவேக் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் அதே வேளையில், அவரின் சமுதாய சேவைகளை மலேசியத் தமிழர்கள் என்றும் நினைவு கூர்ந்து போற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அனுதாபச் செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்தெரிவித்தார்.

ஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி

ரா.தங்கமணி 

உலு சிலாங்கூர்-

ஏரா சூரியா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டன. 

புக்கிட் தாகார், 2ஆவது டிவிஷனில் வசித்து வரும் மூன்று குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் உட்பட அக்குடும்பத்தில் உள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களும் புத்தாடைகளும் வழங்கப்பட்டன. 

இது குறித்து பேசிய ஏரா சூரியா அறவாரியத்தின் தலைவர் நந்தகுமார், அறவாரியம் தோற்றுவிக்கப்பட்டு 4 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பல இன மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம். 

இனம், சமயம் சார்ந்திடாமல் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் நோக்கில் அறவாரியம் முழு மூச்சாக செயல்படுகிறது. 

இங்கு புக்கிட் தாகரில் உள்ள மூன்று குடும்பத்தினருக்கு உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. 

அதன் அடிப்படையில் இந்த மூன்று குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார். 

இந்நிகழ்வின் போது உதவிப் பொருட்களை மட்டும் வழங்கிடாமல் அவர்களின் குறைகளையும் பிற பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டதாக அவர் சொன்னார். 

உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் நந்தகுமாருடன் அறவாரியத்தின் இயக்குனர் தோனி கிளிஃபர்ட்,  செயலாளர் ஃபரிடா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

Saturday 17 April 2021

நடிகர் விவேக் ஓர் உன்னத கலைஞர்- டத்தோஸ்ரீ சரவணன் இரங்கல்

கோலாலம்பூர்-

நகைச்சுவை வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் சேர்த்த உன்னத கலைஞர் நடிகர் விவேக் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக சின்ன கலைவாணர் என்று புகழப்படும் நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அன்னாரின் மறைவுக்கு தமிழக அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் மஇகாவின் துணைத் தலைவராகவும் விளங்குகின்ற டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ள இரங்கலில், நகைச்சுவையின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் சேர்த்த உன்னத கலைஞன், காலம் போற்றும் உம் புகழும் சிந்தனைகளும் நிலைத்திருப்பது திண்ணம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்' என்று தமது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு சூர்யா, கார்த்தி நேரில் அஞ்சலி

சென்னை-

நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில் நடிகர் விவேக்கின் நல்லுடலுக்கு திரைபிரபலங்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு துன் மகாதீரே முதன்மை காரணம்- பேராசிரியர் இராமசாமி

 

கோலாலம்பூர்-

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பின்னாள் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் பதவியிலிந்து துன் மகாதீர் விலகியதே பக்காத்தான் ஹராப்பான் வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாகும் என்றமவர் குறிப்பிட்டார்.

மகாதீர் அதை ஒரு உள்நோக்கத்துடன் தான் செய்தார். பிரதமர் பதவியை அன்வாருக்கு வழங்கக்கூடாது என்ற எண்ணம் மகாதீருக்கு இருந்தது. பதவி நெருக்கடியின்போதும் மகாதீர் பதவி விலகி அன்வாருக்கு வழி வகுத்திருந்தால் பக்காத்தான் ஹராப்பான் இன்னமும் ஆளூம் அரசாங்கமாக இருந்திருக்கும்.

காணொளியாக பார்க்க:

22 மாதங்கள் மட்டுமே ஆளும் அரசாங்கமாக இருந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு அதற்கு பதிலாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாஙம் அமைந்தது. 

பிரதமர் பதவி அதிகார பரிமாற்றம் விவகாரம் பக்காத்தான் ஹராப்பானில் வெளிப்படையான ஒரு மோதலை ஏற்படுத்தியது. இது அன்வார் ஆதரவாளர்களுக்கும் அப்போது பெர்சத்து கட்சியின் தலைவராக இருந்த மகாதீர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதலாக உருவெடுத்தது. 

அன்வாரின் ஆதரவாளர்கள் அதிகார மாற்றத்தை விரைவுப்படுத்த விரும்பினர். மேலும் மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை வழங்குமாறு மகாதீருக்கு அழுத்தம் கொடுத்தனர்.அதே வேளையில் லங்காவி எம்.பி.யுமான மகாதீரின் ஆதரவாளர்கள் அவர் தனது பதவிக் காலம் வரை பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினர்.  

இறுதியாக புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்னோ, பாஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற பெர்சத்து பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகிய மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பக்காத்தான் ஹராப்பான் கவிழ்ந்தது.

இதற்கிடையே, பிஎச் கூட்டணி வீழ்ச்சிக்கு அன்வாரே காரணம் என சொல்லப்படுவதை நிராகரித்த இராமசாமி, அஸ்மின் அலி பிகேஆரை விட்டு விலகியது போன்ற பல காரணங்களும் உள்ளன. முஹிடின் மகாதீரை முதுகில் குத்தினார். மற்றவர்கள் இதை பற்றி விவாதிக்க துணியவில்லை.

 ஆனால், PH இன் வீழ்ச்சிக்கு மகாதீர் இன்னும் முக்கிய காரணம் என்று என்னால் சொல்ல முடியும். "மற்றவர்கள் அல்ல, அன்வார் அல்ல, குவான் எங் அல்லது மாட் சாபு அல்ல. காரணம் மகாதீர். "நாங்கள் அவரை நம்பி ஏமாந்தோம், மகாதீர் எங்களுக்கு துரோகம் இழைத்தார்," என்று 2020இல் நிகழ்ந்த நாட்டின் அரசியல் நெருக்கடி குறித்த கலந்துரையாடல் ஒன்றில் பிறை சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் இராமசாமி இவ்வாறு கூறினார். 

நடிகர் விவேக் காலமானார்

 சென்னை -

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்.

மாரடைப்பு காரணமாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார் என்று தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

நேற்று காலை நெஞ்சுவலி காரணமாக வீட்டில் மயங்கி விழுந்த நடிகர் விவேக்கை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் 1987ஆம் ஆண்டு வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைபடத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விவேக், தனது நகைச்சுவையின் மூலம் பல சமூக கருத்துகளை கூறி வந்தார்.

இதனால் 'சின்ன கலைவாணர்' என்று நடிகர் விவேக் அழைக்கப்பட்டு வந்தார்.

Monday 12 April 2021

மித்ராவின் வழி மலேசிய இந்தியர் திட்டவரைவு மேம்படுத்தப்படும்- டத்தோ ஹலிமா

கோலாலம்பூர்-

மலேசிய இந்தியர்கள் சமூக- பொருளாதார மேம்படுத்தும் வகையில் ‘மலேசிய இந்தியர் திட்டவரைவு’ (Malaysian Indian Blueprint) மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சித்திக் தெரிவித்தார்.

பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களை உள்ளடக்கி மனித மூலதனம், தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன் திட்டங்கள் ஆகிய மூன்று கூறுகளை உள்ளடக்கி இத்திட்டம் மேம்படுத்தப்படும்,

மலேசிய இந்தியர் திட்டவரைவு 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அதன் இலக்கை முழுமையாக அடையவில்லை. மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ மூலம் அதனை மேம்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்.

மித்ராவுக்கென ஆண்டுதோறும் 100 மில்லியன் வெள்ளி நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது. அதன் மூலம் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாம் 2017இல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களில் அஸ்மின் அலி திறமை வாய்ந்தவர்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

ஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி திறமை வாய்ந்தவர் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்புடைய ஆடியோ பதிவு குறித்து கருத்துரைத்த அஸ்மின் அலி அது அன்வாரின் குரல்தான் என்று கூறினார்.

இதன் தொடர்பில் கருத்து கூறிய அன்வார், அது அவருடைய கருத்து, ஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களின் அவர் திறமை வாய்ந்தவர் என்று அன்வார் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை உட்படுத்தி ஓரினப் புணர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,.


Sunday 11 April 2021

துரோகிகள் சூழ்ந்துள்ள கூட்டணியில் எவ்வாறு இணைய முடியும்?- டத்தோஶ்ரீ அன்வார்

 காஜாங்-

துரோகிகளின் கூட்டம் நிறைந்திருப்பதாலேயே பதவிகள் வழங்கப்பட்டும் தேசிய கூட்டணியில் பக்காத்தான் ஹராப்பான் இணையவில்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சொந்த கட்சிக்குள்ளேயே இருந்த தரோகிகளின் நடவடிக்கையாலேயே புதிய அரசாங்கம் அமைந்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட ‘ஷெராட்டான் நடவடிக்கை’யால்  பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி 22 மாதத்தில் கவிழந்தது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து விலகிய பின்னர் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, அவரது அணியினர் அம்னோ , பாஸ் கட்சியுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் எனும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்தனர்.

சொந்த கட்சியைச் சேர்ந்த துரோகிகளாலேயே நாங்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் துரோகிகள் அங்கம் வகிக்கும் அரசில் வெறும் பதவிக்காக எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்? என்று டத்தோஶ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் விடுமுறை வழங்க வேண்டும்- டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு ஏதுவாக தொழிலாளர்களுக்கு அந்நாளில் சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் விடுமுறை வழங்குவதற்கு மனிதவள அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மலேசியர்கள் விடுபடுவதற்கு ஏதுவாக தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொழிலாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முதலாளிமார்கள் எவ்வித பாரபட்சமுமின்றி விடுமுறை வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

தடுப்பூசியை ஒரே நாளில் அனைவரும் செலுத்திக் கொள்ள முடியாது என்பதால் அதற்காக சிறப்பு விடுமுறை அரசாங்கம் அறிவிக்க முடியாது. அதனாலேயே தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்

வெ.11 லட்சம் மதிப்பில் சுங்கை சிப்புட் மஇகாவுக்கு புதிய கட்டடம்

லிங்கா

சுங்கை சிப்புட்-

மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத்தை சுங்கை சிப்புட் மஇகா சொந்தமாக்கியுள்ளது.


மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் இங்குள்ள எம்எச் ஹோட்டல் வளாகத்தில் உள்ள மூன்று மாடி கட்டடம் வெ.11 லட்சம் வெள்ளி செலவில் வாங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்,சுங்கை சிப்புட் மஇகா  தற்போதுள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இது தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பில் முதன்மை சாலையிலிருந்து சற்று உள்ளே இருப்பதால் அது மக்களுக்கு சிரமமாக இருப்பதை உணர்ந்துள்ளோம்.

அதன் அடிப்படையிலேயே மக்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதால் இந்த கட்டடம் மஇகாவுக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தின் மதிப்பு வெ.15 லட்சம் ஆகும். டான்ஶ்ரீ கோ.இராஜு மேற்கொண்ட நடவடிக்கையில் 11 லட்சம் வெள்ளி மதிப்பில் இக்கட்டடம் சொந்தமாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

கூடிய விரைவில் இந்த புதிய கட்டடத்தில் சுங்கை சிப்புட் மஇகா செயல்படும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இன்று இந்த புதிய கட்டடத்தின் சாவியை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டார். இந்நிகவில் டான்ஶ்ரீ இராஜு, டிஎன்பி வாரிய இயக்குனர் டத்தோ ரவிசந்திரன், கோலகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர் நேருஜி, கெடா மாநில மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Saturday 10 April 2021

மஇகா தேமுவில் தான் உள்ளது- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

லிங்கா 

சுங்கை சிப்புட்-

மஇகா  இன்னமும் தேசிய முன்னணியில் தான் தொடர்ந்து இருக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

நேற்று சுங்கை சிப்புட் ம.இ.கா. தொகுதி அலுவலகத்தில் பேறு குறைந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் நிதியுதவிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

ம.இ.கா. மாநாட்டை  மலேசியப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் திறந்துவைத்தது தொடர்பில் பல ஊகங்கள் எழுந்துள்ளன.  பொதுவாக ம.இ.கா. பேராளர் மாநாட்டுக்கு பிரதமரை அழைப்பது வழக்கம். மேலும், இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாகவும்  அமையும்.

தவிர, ம.இ.கா. வுக்கு ஓர் அமைச்சர் பதவியும் பிரதமர் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவரை மாநாட்டுக்கு அழைத்தோம். எனவே, தேசிய முன்னணியில் ம.இ.கா. தொடர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

நேற்று பாடாங் ரெங்காஸில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நாஸ்ரி அஜிஸ், ம.இ.கா. தேசிய முன்னணியில் தொடர்ந்து இருப்பதில் மகிழ்ச்சியே. எனினும், அவர்கள் வெளியேற முடிவு செய்தாலும் அம்னோ தனித்து நின்று வெற்றிபெறும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

Friday 9 April 2021

இந்திய பாலர் பள்ளி ஆசிரியர்களின் 4 மாத சம்பளம் தேக்கம்- மித்ரா கவனிக்குமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்தியர் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கும் பொது இயக்கங்களுக்கும் மானியத்தை வாரி வழங்கி கொண்டிருக்கும் மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு, நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய பாலர் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 4 மாத கால சம்பளத்தை வழங்காமல் இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் விதமாக 215 பாலர் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் 400க்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர சம்பளத்தை கொடுப்பதில் ‘மித்ரா’  இழுபறியை நிலையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாலர் கல்வியை  போதிக்கும் இந்த பாலர் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ‘செடிக்’ அமைப்பின்  வழி மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாலர்கள் பள்ளிகளை 5 அரசு சார்பற்ற இயக்கங்கள் வழி நடத்தி வருகின்ற நிலையில் அவற்றின் மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அந்த இயக்கங்களின் வழியே ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

2018இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் செடிக் அமைப்பு ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டதோடு முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மித்ராவை ஒரு பிரிவாக மாற்றியமைத்தார்.

முன்பு ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தலை தூக்கியபோது பல மாதப் போராட்ட்திற்கு பின்னர் சுமூக தீர்வு காணப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தலை எடுத்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட ஒருவர் ‘பாரதம்’ இணைய ஊடகத்திடம் வேதனையை பகிர்ந்துக் கொண்டார்.

பொது இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கும் பொது இயக்கங்களுக்கும் மானியத்தை வாரி வழங்கும் ‘மித்ரா’ இந்திய பலர் பள்ளி விவகாத்தில் மட்டும் மெளனம் காப்பது?

4 மாத கால சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒரு குடும்பமும் வயிறும் உண்டு என்பதை ‘மித்ரா’  அறிந்து வைத்துள்ளதா?

சம்பளம் இல்லாமலும் இந்திய சமுதாயத்தின் விருட்சங்களான சிறார்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பணியாற்றும் ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு எப்போது கிடைக்கும்?


பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார்

 கோலாலம்பூர் 

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கப்பட்டுள்ளார். 

பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் டத்தோஸ்ரீ அன்வாரை ஏகமனதாக பிரதமர் வேட்பாளராக அங்கீகாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதோடு, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைந்து பணியாற்ற பிற தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்க முடிவெடுக்கபட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்

Thursday 8 April 2021

தமிழ்மொழி பண்பாட்டு விவகாரங்களில் எங்களுக்கும் பங்களிப்பு உண்டு- தமிழ் முசுலிம் அமைப்பு

ஷா ஆலாம்-

தமிழர்கள் பல சமயங்களில் இருக்கிறார்கள். தமிழர்கள் தழுவிய சமயங்களில் ஒன்று தான் இசுலாம். இசுலாம் சமயத்தைத் தழுவினாலும் தாய்மொழியால் நாங்களும் தமிழர்கள் தான். தமிழ் மொழி, பண்பாட்டு விவகாரங்களில் எங்களின் பங்களிப்பு உண்டு எனத் தமிழ் முசுலிம் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


பல்வேறு சமயத்தால் வேறுபட்டிருப்பதால் ஒரு சிலரால் சில பண்பாட்டுக் கூறுகளை முழுதாகக் கடைபிடிக்க முடியாமல் போனது வேதனைக்குரிய ஒன்றாகும். 

இருந்த போதிலும், தமிழ் நாட்டிலும் மலேசியாவிலும் பெரும்பான்மையானத் தமிழ் முசுலிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மொழி பண்பாட்டு விவகாரங்களை முறையாகவும் சரியாகவும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது என தமிழ் முசுலிம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த ஹாஜி பஷிர் அகமது தெரிவித்தார். 

தொடக்கக் காலம் தொட்டே பல இலக்கியங்களையும் தமிழ் முசுலிம் சமூகத்தினர் படைத்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், பேச்சு வழக்கில், “நீங்கள் தமிழர்கள்” என மற்றச் சமயத் தமிழர்களைக் குறிக்கும்போது “அப்படியென்றால் நாம் யார்?” என்ற கேள்வியும் எழுகிறது. இப்படி பேசுவதைத் தமிழ் முசுலிம் சமூகத்தினர் முதலில் குறைக்க வேண்டும் என்பது தமது கருத்தாகிறது என ஹாஜி பஷிர் அகமது குறிப்பிட்டார். 

மேலும், தமிழ் மொழி, பண்பாட்டு விவகாரங்கள் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் முசுலிம் பாரம்பரிய கலாச்சார மொழி மேம்பாட்டுச் சங்கம் எனும் தளத்தில் இருந்து சேவையாற்ற இருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

மஇகாவுக்கு மாற்றாக மலேசிய மக்கள் சக்தி கட்சி- டத்தோஶ்ரீ தனேந்திரன் நம்பிக்கை

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியில் இந்திய சமுதாயத்தின் குரலாக மலேசிய மக்கள் சக்தி கட்சி விளங்க முடியும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்,தனேந்திரன் தெரிவித்தார்.

60 ஆண்டுகால தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக விளங்கி வரும் மஇகாவின் இடத்தை எங்களால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணையும் மஇகாவின்  முடிவை  நாங்கள் தடுக்க முடியாது. அதே வேளையில் இதில் எங்களுக்கு பொறாமை ஏதும் இல்லை.

தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சி, எந்தவொரு சூழலிலும் விலகிட மாட்டோம் என்று கூறிய டத்தோஶ்ரீ தனேந்திரன், மஇகாவின் இடத்தை முழுமையாக பூர்த்தி செய்து விடுவோமா என்பது தெரியவில்லை, ஆனால் இந்திய சமுதாயத்தின் குரலாக தேமு கூட்டணியில் நிச்சயம் விளங்கும்வோம் எனறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.