Showing posts with label Crime. Show all posts
Showing posts with label Crime. Show all posts

Monday, 1 June 2020

குடிபோதையில் மற்றொரு விபத்து; ஆடவர் பலி

கோலாலம்பூர்-
மது அருந்தியதாக நம்பப்படும் 21 வயது இளைஞர் செலுத்திய வாகனத்தால்  மோதி தள்ளப்பட்ட 44 வயது மதிக்கத்தக்க உணவு விநியோகிப்பாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, கண்காணிப்புப் பிரிவின் தலைவர் ஏசிபி சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.

குத்தகைத் தொழிலாளியான  44 வயது முகமட் ஸைலி முகமட் மனைவிக்கு உணவை கொடுத்து விட்டு புக்கிட் அந்தாராபங்சாவிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் நிஸ்ஸான் கிராண்ட் லிவினா ரகக் காரினால் மோதப்பட்டு சாலையில் தூக்கியெறியப்பட்டார். கடுமையான காயங்களுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்துக்கு காரணமான வாகனமோட்டி மது அருந்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 44 (1) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.

Tuesday, 6 August 2019

கூடாரம் அமைப்பதில் மோதல், போலீஸ் உட்பட இருவருக்கு பாராங் வெட்டு

கோலசிலாங்கூர்-
கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா காளியம்மன் ஆலயத்தில் இரு கும்பல்களுக்கிடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் சந்தேகத்திகுரிய 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள்
நேற்றிரவு 9.15 மணியளவில் நிகழ்ந்த இந்த கைகலப்பை நிறுத்த முற்பட்டபோது போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.

சம்பந்தப்பட்ட ஆலயத்தில் இடம்பெறவுள்ள ரத ஊர்வலத்திற்கு கூடாரம் அமைப்பது தொடர்பில்  இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது எனவும் இறுதியில் பாராங் கத்தி வீச்சில் முடிந்தது எனவும் சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு துறை தலைவர் பட்ஸில் அஹ்மாட் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பாராங் கத்திகள்
இந்த கைகலப்பை  தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்தனர் எனவும் இதில் பொது மக்களில் ஒருவருக்கு இடது கையில் வெட்டுப்பட்ட நிலையில் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கைகலப்பில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் தற்போது 28 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்க கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக பேர்வழிகளுக்கு போலீஸ் வலை வீசி வருகிறது என்று அவர் சொன்னார்.

Thursday, 25 July 2019

இந்திய குடும்பத்தினரிடம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை

ஷா ஆலம்-
முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவர் ஓர் இந்திய குடும்பத்தினரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்டுச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஷா ஆலம், தாமான் அலாம் மேகாவில் நேற்று 23ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் இந்திய குடும்பத்தினர் வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவர்களை மிரட்டி ஓர் அறையில் அடைத்து கொள்ளையிட முயற்சிக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இன்று காலை தொடங்கி சமூக ஊடகங்களில் இந்த கொள்ளைச் சம்பவம்  வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Tuesday, 23 July 2019

கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் இந்திய மூதாட்டியிடம் கொள்ளை

ரவாங்-
இந்திய மூதாட்டி ஒருவரின் கண்கள், கைகளை கட்டி போட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
ரவாங், டெம்ப்ளர் பார்க்கில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கண்கள், கைகள் கட்டப்பட்ட அந்த மூதாட்டிக்கு பொதுமக்கள் உதவி புரிந்தனர்.

கறுப்பு நிறக் காரில் வந்த கொள்ளையர்கள் தன்னிடம் நகைகளை கொள்ளையடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தன்னை இறக்கி விட்டுச் சென்றனர். அவர்கள் யாரென்று தெரியவில்லை என்று அந்த மூதாட்டி கூறுவது காணொளியில் இடம்பெற்றுள்ளது.

கண்கள் இறுக கட்டப்பட்ட நிலையிலும் சிறு துவாரத்தின் வழியாக சாலை கடந்து வந்ததாக அவர் கூறினார்.


Thursday, 11 July 2019

இடைநிலைப்பள்ளி மாணவன் கொலை; மேலும் மூவர் தடுத்து வைப்பு

தைப்பிங்-

4ஆம் படிவ இடைநிலைப்பள்ளி மாணவன் கொலையுண்ட சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட மூவர் 6  நாட்களுக்கு (ஜூலை 10 தொடங்கி) தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
15,16 வயதுடைய அம்மூவரும் நேற்றுக் காலை தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அம்மாணவனின் கொலை சம்பவம் தொடர்பில்  அவனது சகோதரி, சகோதரியின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 6 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் கிளென்வியூ குடியிருப்புப் பகுதியின் காலி வீட்டில் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட நிலையில் அம்மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

காதலியின் வீட்டில் விடப்பட்ட கைப்பேசியை மீண்டும் எடுப்பதற்காக சென்றபோது சகோதரனுக்கும் காதலனுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இக்கொலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

12 வயது சிறுமியுடன் பாலியல் உறவு; ஆசாமி கைது

சிரம்பான் -
வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஆடவனை போலீசார் கைது செய்தனர்  .

வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் பேரா, கோப்பெங் அருகே 65 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுனரான அவ்வாடவனை போலீசார் கைது செய்ததாக சிரம்பான் மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர் வான் ருக்மான் தெரிவித்தார்.

12 வயதே நிரம்பிய சிறுமியை காரில் பாலியல் வல்லுறவில் அவ்வாடவன் ஈடுபடச் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் செய்த புகாரின் அடிப்படையில் அவ்வாடவன் கைது செய்யப்பட்டான்.

சம்பந்தப்பட்ட ஆடவன் அச்சிறுமியி குடும்பத்தினருகு சில மாதங்களுக்கு முன்புதான் அறிமுகம் ஆனவர் என்றும் சிறுமியின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில்  எழுதுகோல், உணவு வாங்கி தருவதாக கூறி சிறுமியுடன் பாலியல் வல்லுறவில் அவ்வாடவன் ஈடுபட்டுள்ளான்.

அச்சிறுமியுடன் மூன்று அவ்வாடவன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்றும் ஆக கடைசியாக ஜூன் மாதத்தில் அச்சிறுமியை பட்டணத்திற்கு அழைத்துச் சென்று வாகன நிறுத்துமிடத்தில் அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளான் என்றும் அவர் சொன்னார்.

இவ்விவகாரம் செக்‌ஷன் 10, 2017 சிறார் பாலியல் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, 10 July 2019

அண்ணன் கொலை; 6 நாட்கள் தடுப்புக் காவலில் தங்கையும் காதலனும்

தைப்பிங்-
16 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள அம்மாணவனின் 14 வயது சகோதரி, அவளின் காதலன் ஆகியோரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு தாமான் கிளென்வியூ குடியுருப்புப் பகுதியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆடவனின் சடலத்தை பொதுமக்கள் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ஜூலை 5ஆம் தேதி காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட இளைஞனின் உடல்தான் அது என சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உறுதிப்படுத்திய நிலையில்,  அவ்வாடவனின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சகோதரியும் 15 வயதுடைய அவளது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ளும் வகையில் வரும் சனிக்கிழமை தடுப்புக் காவலில் வைக்க தைப்பிங் மாஜிஸ்திரேன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Monday, 8 July 2019

16 வயது இளைஞன் கொலை- சகோதரி- காதலன் கைது

தைப்பிங்-
பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இந்திய ஆடவரின் சடலம் ஒன்று  தாமான் கிரின்வியூ குடியிருப்புப் பகுதியின் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.
16 வயது மதிக்கத்தக்க அவ்விளைஞன் காணாமல் போனதாக கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்திருந்த நிலையில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் அவ்வாடவனின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் தெரிவித்தார்.

இச்சம்பவன் தொடர்பில் முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போலீசார், மரணமடைந்த இளைஞரின் 14 வயது சகோதரியையும் அவரின் காதலனையும் கைது செய்துள்ளனர்.

அவ்விளைஞனை கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கொலைக்கான காரணம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Tuesday, 28 May 2019

தூக்கில் தொங்கினார் மியன்மார் பெண்; ஈப்போவில் சம்பவம்

ஈப்போ-
தூக்கில் தொங்கிய நிலையில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மேடான் ஈப்போ கடை  வீடொன்றில் நிகழ்ந்தது.

அப்பெண்ணின் அடையாள ஆவணம் எதுவும் காணப்படவில்லை என்றும் அப்பெண்ணின் கணவர் என  சந்தேகிக்கப்படும் ஆடவரை கைது செய்துள்ளதாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அலி தம்பி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக பெய்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

Wednesday, 13 March 2019

இந்து சமயத்தை இழிவுப்படுத்திய ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா-
இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றிருந்த பேஸ்புக் பயனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“Zamri Bin Abd Razak” எனும் இந்த பேஸ்புக் அகப்பக்கத்தின் உரிமையாளர் இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவேற்றம் செய்ததால் இன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 23இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு   52 வயதான அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் படைத் தலைவர் முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் சமயம் சார்ந்த உணர்வை தூண்டக்கூடிய கருத்துகளை பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Wednesday, 19 December 2018

முகமட் அடிப் மீதான தாக்குதல் கொலை வழக்காக மாறியது

ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளான தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் வழக்கை கொலை வழக்காக மாற்றியது காவல்துறை.

இதுநாள் வரை 307 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இச்சம்பவம் இனி 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளது. இதில் குற்றஞ்சாட்டப்படுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலை அப்துல் ரஷீட் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலின்போது தீ வைக்கப்பட்ட கார்களின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமட் அடிப்பை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

ஐஜேஎன் -இல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த முகமட் அடிப்பின்
உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானதைத் தொடர்ந்து நேற்றிரவு 9.41 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

Wednesday, 5 December 2018

ஜோ லோவ் உட்பட மேலும் 4 பேருக்கு பிடியாணை வெளியிட்டது நீதிமன்றம்


கோலாலம்பூர்-
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழல் விவகாரம் தொடர்பில் தொழிலதிபர் ஜோ லோ என்றழைக்கப்படு லோவ் டெக் ஜோ உட்பட 5 பேருக்கு பிடியாணையை வெளியிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.

1எம்டிபியின் பண மோசடி தொடர்பிலான 7 குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்திற்கு வர தவறியதால் இந்த பிடியாணை வெளியிடப்பட்டது.

ஜோ லோவ் உட்பட மேலும் நால்வரில் ஒரு வழக்கறிஞரும் அடங்குவார்.

1எம்டிபி வழக்கறிஞர் ஜாஸ்மின் லோ அய் ஸ்வான், முன்னாள் தலைமை
இயக்குனர் கெசே தாங் கெங் சே, முன்னாள் அதிகாரிகள் கெ சோ ஹெங், எரிக் டான் கிம் லோங் ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

Wednesday, 21 November 2018

நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் பலி



கோலாலம்பூர்-
இங்கு ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள பேராங்காடில் ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற ஐந்து கொள்ளையர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இன்று மதியம் 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நகைகளை கொள்ளையிட்டு தப்ப முயன்ற போது போலீசார் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்தனர்.

நான்கு பேர் சம்பவ இடத்திலேயே சுடப்பட்ட  வேளையில் ஓர் ஆடவர் மட்டும் காரில் தப்பிச் செல்ல முற்பட்டபோது 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார் அவரை சுட்டனர்.

கொள்ளையர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

Tuesday, 20 November 2018

கூர்மையான ஆயுதத்தால் மனைவி கொலை; ஆடவர் கைது


ஜோர்ஜ்டவுன் -
தன் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கி மனைவிக்கு மரணம் விளைவித்த கட்டொழுங்கு ஆசிரியர் ஒருவர் போலீசிடம் சரணடைந்தார்.

நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் 39 வயதுடைய திருமதி சாந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஆயர் ஹீத்தாம் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.

நேற்றிரவு 10.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தலையில் கடுமையான காயங்களுக்கு இலக்கானதால் திருமதி சாந்தி மரணமடைந்தார் என்று தென் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சே ஸைமானி சே அவாங் கூறினார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் இரவு 11.00 மணியளவில் வீட்டை விட்டு
வெளியேறி சொந்த கிராமத்திற்குச் சென்ற அவ்வாடவர், இன்று காலை 11.00 மணியளவில் வீட்டுக்கு திரும்பியபோது மனைவில் அசைவின்றி கிடப்பதை கண்டுள்ளார்.

அதன் பின்னர் இதனை குடும்பத்தினரிடம் தெரிவித்த அவர், பிறகு கெடா,கூலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 42 வயதான சந்தேக நபர் கூலிம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மாலை 6.00 மணியளவில் இப்புகார் ஜோர்ஜ்டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், படுக்கையறையில்  ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
தலையிலும், நெற்றியிலும் இடதுப்புற காதிலும் கூர்மையான ஆயுதம் கொண்டு திருமதி சாந்தி தாக்கப்பட்டுள்ளதாக சே ஸைமானி கூறினார்.

10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் புரிந்த இவ்விருவருக்கும் பிள்ளைகள் கிடையாது எனவும் நாளை காலை 10.00 மணிக்கு பினாங்கு மருத்துவமனையில் சவப்பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

இச்சம்பவம் செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாகும் வரை தூக்கிலிடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.