Tuesday 26 September 2017

'வேலை வாய்ப்பு, கல்வி கடனுதவி, பொருளாதாரம், வீடு விலையேற்றம்'... 'TN50' கலந்துரையாடலில் எதிரொலித்த அதிருப்தி குரல்கள்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'தேசிய உருமாற்றம் 50'  எனப்படும் 'திஎன்50' (TN50) அமலாக்கத்தில் இந்திய இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய இளைஞர்கள் தங்களது மனக்குமுறலை வெளிபடுத்தினர்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி, சக்தி அறவாரியம்  ஏற்பாட்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய இளைஞர்களுடனான 'திஎன்50' கலந்துரையாடல் நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை துணிச்சலுடன் வெளிபடுத்தினர்.
இதில் இளைஞர்கள் அதிகம் எதிர்நோக்கும் பிரச்சினையானது நகர்ப்புற சூழலில் சந்திக்கும் சவால்களே ஆகும். குறிப்பாக தோட்டப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு வந்த இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டனர்.

அரசாங்க வேலை வாய்ப்பு என்பது இன்றைய இளைஞர்களுக்கு 'குதிரை கொம்பாக'வே உள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் லட்சிய எண்ணங்களை வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்த மதிப்பெண்களை பெற்று தகுதி வாய்ந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் அதை விடுத்து வேறு வேலைகளில் பணியமர்த்துவது எங்களின் கனவை சிதைப்பதற்கு சமமாகும் என ஓர் இளைஞர் கூறினார்.
அதோடு தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயில்வதற்கு ஓர் இக்கட்டான சூழ்லை எதிர்நோக்குகின்றோம். குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு பண வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் பிற இனத்தவர்களுக்கு உள்ளதைபோல் கல்வி கடனுதவி ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இப்போது உள்ள எம்ஐஇடி கல்வி கடனுதவி கழகம் ஒரு கட்சியின் கீழ் செயல்படுகிறது.

ஆனால் கல்வி கடனுதவி வேண்டுபவர்கள் பிற  கட்சிகளிலும் இருக்கலாம். ஆதலால் அனைத்து இனத்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில்  பொது நிலையிலான கல்வி கடனுதவி ஸ்தாபனம் வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒரு வீட்டைக்கூட வாங்க முடியாத அவல நிலையை இந்திய இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு வீட்டின் விலைகள் அதிகளவு உயர்ந்து கிடக்கின்றன. இந்நிலையை போக்கும் வகையில் வீட்டின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் சில சட்டத்திட்டங்கள் எளிதான முறையில் வகைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கல்வி, பொருளாதாரம், தற்கால வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கி  இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர்  டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன்,  இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஏற்பாடு செய்திடாத 'திஎன்50' கலந்துரையாடல் முதல் முறையாக தமிழில் நடைபெற்றது.
நாட்டின் மேம்பாட்டில் இந்திய இளைஞர்களின் கருத்துகளையும் உள்ளடக்க வேண்டும் எனும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த இளைஞர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவதோடு  இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிஜமாக ஆவன செய்யப்படும் எனவும் டத்தோ தனேந்திரன் குறிப்பிட்டார்.

திஎன்50-இன் இளையோர் தூதுவரான கணேஷ் முரேன், மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம்.இராஜேந்திரன் உட்பட மலேசிய மக்கள் சக்தி, சக்தி அறவாரியம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment