Saturday 30 September 2017

தோட்டம் திரைப்படம் மக்களுக்கு மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும்! – இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ


தோட்டம் திரைப்படம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுடைய தோட்டபுற வாழ்க்கையே மீண்டும் நினைவு கூறும் திரை வாசமாகவும் மண் வாசனையே கண் முண் நிறுத்தும் என்று தோட்டம் திரைப்படத்தின் இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ தோட்டம் இசை வெளியீடு விழாவில் தெரிவித்தார்.

தோட்டப்புற வாழ்க்கையே மைய்யமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட சம்பவங்களையும் பிரச்சினைகளையும் கருவாகக் கொண்டு உருவான திரைப்படம் தோட்டம்.


இத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை உள்ளூர் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் தமிழகத்தில் செய்தியாளர்கள், முன்னணி இயக்குனர்கள் முன்னிலையில் சிறப்பு காட்சி வெளியீடு கண்டது.தோட்டப்புற வாழ்க்கையே பார்க்காத இன்றைய இளைஞர்களுக்கு இத்திரைப்படம் புதுப்படமாக இருந்தாலும் அதிகமான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் 19ஆம் நூற்றாண்டு தமிழகத்திலிருந்து இலங்கை, மலேசிய போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைக்காக தமிழர்கள் தான் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 200 ஆண்டு நிகழ்வை நினைவு கூறுவதற்கும் அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும் வகயிலும் இத்திரைப்படத்தை இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.

தோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூவின் தந்தையாரும் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சாய் இத்திரைப்படத்தின் பாடல்களை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மறைந்த பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், அண்ணாமலை ஆகியோர் எழுதியுள்ளனர்.

இத்திரைப்படம் விரைவில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் தலைநகரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ரிவாய்ன் புரோடக்‌ஷன் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளூர் இயக்குனர் எஸ்.டி. பாலா, டி.எச்.ஆர். ராகா கவிமாறன், மூத்தக் கலைஞர் எம்.எஸ்.மணியம், எம்.எஸ்.கே.செல்வமேரி, இளங்கோ அண்ணாமலை, டத்தோ சுபாஷ் என முக்கிய பிரமுகர்கள் கலந்து இந்நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.

இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கியவர் டத்தோஶ்ரீ நஜிப் – சிவராஜ்

கோலாலம்பூர்-
தம்மை 'மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை' என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது, எந்த வகையிலும் தவறாகாது. காரணம் முன்னாள் பிரதமர்களை காட்டிலும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் டத்தோஸ்ரீ நஜிப் தான் என ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு தொடங்கி, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அவர் பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்கான மானியம், மைக்ரோ கடனுதவி திட்டம், தெக்குன், உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான இடங்கள், 10 ஆண்டுக்கான இந்திய மேம்பாட்டு வரைவு திட்டத்தை உருவாக்கியவரும் அவர்தான். இந்தியர்கள் அதிகமாக வாழும் எந்த நாட்டிலும் இம்மாதிரியான திட்டங்கள் இல்லை. அதில் இந்தியாவும் அடங்குமென  சிவராஜ் கூறியுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்தை ஜசெகவின் பேராசிரியர் இராமசாமி உடனடியாக சாடியுள்ளார். அதற்கு முன்னதாக ஜசெக இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக என்ன செய்தது என்பதை அவர் முதலில் கேட்க வேண்டும். குறிப்பாக கேலாங் பாத்தா தொகுதி உட்பட சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களில் இந்திய சமுதாயத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதை கூற முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான 90 கோடி வெள்ளி, இந்தியர்களின் உயர்கல்விக்காக 2 கோடி வெள்ளி, இந்தியர்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக 130 கோடி வெள்ளி, பிரதமர் துறையின் கீழ் இந்தியர் பொருளாதார திட்டவரைவுக் குழு என டத்தோஸ்ரீ நஜிப் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இன்னும் இருக்கின்றது என டத்தோ சிவராஜ் கூறியுள்ளார்.

டத்தோஸ்ரீ நஜிப்பின் அணுகுமுறைகளையும் செயல்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வந்தாலும், பி40 கீழ் இருக்கக்கூடியவர்கள், அதன் மூலம் பல்வேறு பலன்களை அடைந்துள்ளார்கள். இதுவரையில் பக்காத்தான் ஹராப்பான் இந்தியர்களுக்கான பிரச்சினைகளை அல்லது செயல்திட்டங்களை கூட கவனிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் நஜிப் இந்திய சமுதாயத்திற்கு செய்ததை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகின்றது.

சுங்கத்துறை தலைமை இயக்குநராக டத்தோ சுப்பிரமணியத்தை நியமிக்கும் போது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அது அனைத்தையும் நிராகரித்து, அந்த பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தார் டத்தோஸ்ரீ நஜிப். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ஹராப்பான், ஜசெக இந்திய வாக்காளர்களை கவர வெற்று வாக்குறுதிகளை வழங்குவது வாடிக்கையாக நடக்கும் என்றார் அவர்.

2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு தேசிய முன்னணிக்கு திரும்பியது. அதற்கு பிரதமர் முன்னெடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். ஆனால் அதற்கு பிறகும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பிரதமர் நிறுத்திக் கொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தேசிய செயல்திட்டத்தில் இந்தியர்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் பிரதமருக்கு ம.இ.கா. இளைஞர் பிரிவு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

சுங்கை குருடா இளைஞர் இயக்கத்தின் 'சுதந்திர தினம், மலேசிய தினக் கொண்டாட்டம்'

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினம், மலேசியா தினத்தை முன்னிட்டு சுங்கை குருடா இளைஞர் இயக்கம் 'தேசிய தினம், மலேசியா தினத்தை' சிறப்பாக கொண்டாடியது.

அண்மையில் சுங்கை சிப்புட் தேசிய முன்னணி அலுவலகத்தில் தேசிய தினக் கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி ஹாஜி ஹருண் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மருத்துவப் பரிசோதனை, ரத்த தான முகாம், மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, ,மரக்கன்றுகள் நடவு செய்தல், சிறந்த சேவையாளர்களுக்கு அங்கீகாரம் என நடைபெற்ற இந்த விழா சுதந்திர தினத்தின் தாக்கத்தை வெளிபடுத்தியது.
இதன் தொடர்ச்சியாக மலேசியா தினத்தை முன்னிட்டு சுங்கை குருடா இளைஞர் இயக்கம் பள்ளி மாணவர்களுக்கு தேவாரப் போட்டி, இளைஞர்களுக்கு கால்பந்து போட்டி, சேவையாளர்களுக்கு சிறப்பு செய்தல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது. சுங்கை குருடா, மீனாட்சி சுந்தரம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்கத்தின் ஆலோசகர் கி.மணிமாறன், மக்களிடையே தேசப்பற்று மேலோங்க வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்வதாகவும் பல ஆண்டுகளாக கட்சி, பொது இயக்கங்களின் வாயிலாக சேவையாற்றி வரும் சேவகர்களை சிறப்பிக்கும் நிகழ்வாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து உரையாற்றுகையில், நாட்டின் சுதந்திரம் எளிதாக கிடைத்து விடவில்லை. பல்வேறு போராட்டங்கள், இன்னல்களுக்கு மத்தியில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் கிடைத்த சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்தும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். இந்த ஜனநாயக நாட்டில் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டுமே தவிர குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
அதோடு, இந்நிகழ்வில் சிறப்பாளராக கலந்து கொண்ட சுங்கை சிப்புட் போலீஸ் படை துணைத் தலைவர் டிஎஸ்பி பரமேஸ்வரன், போலீஸ் என்றுமே மக்களுக்கு நண்பனாக இருந்து சேவையாற்றி வருகிறது. பல்வேறு சமூகச் சீர்கேடுகளை தவிர்க்க மக்கள் போலீசுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில்  சுங்கை குருடா தோட்டத்தில் தேசிய மொழி பயிற்றுவித்தவரும் தற்போது சுங்கை சிப்புட் தேசிய முன்னணி செயலாளருமான ஸம்ரி, தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிய ஸப்ரி  ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
தோட்ட துண்டாடலின்போது சுங்கை குருடா தோட்டத்தை தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் வாங்குவதற்கு அரும்பாடு பட்ட  கிருஷ்ணன் தண்டல், சுப்பிரமணியம் தன்டல், ஜோசப் ராயப்பன் ஆகியோரை சிறப்பு சான்றிதழை அவர்களது பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.   மேலும் இந்த தோட்டத்தில் வசித்து பல பொதுச் சேவைகள் ஆற்றியவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே. சக்திவேல், சுங்கை சிப்புட் மைபிபிபி  தலைவர் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியர்  ஆலயத் தலைவர் ஆர்.டி.அருணாசலம், மசீச லோ, கவுன்சிலர் லெட்சுமணன், மஇகா கிளைத் தலைவர்கள் கி.சேகரன், ஆர்.அண்ணாமலை, எஸ்,கவிமன்னன், ஆலயத் தலைவர் கி.பாண்டியன், வட்டார மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க தயார்- டத்தோ நடராஜா

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதாக தொழிலதிபர் டத்தோ நடராஜா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கில்  பல சேவைகளை செய்து வருகின்ற நிலையில் அச்சேவைக்கு ஓர் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தேர்தலை குறி வைத்துள்ளேன்.

இங்கு தேர்தலில் களமிறங்குவதற்கு ஏதுவாக சுங்கை சிப்புட் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவை நாடியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இங்கு வேட்பாளராக களமிறங்கினால் மக்களுக்கான சேவைகள் அதிகமான முன்னெடுக்கப்படும் என டத்தோ நடராஜா சொன்னார்.
சுங்கை சிப்புட் மமச கட்சி தலைவர் தாஸ் அந்தோணிசாமியை சந்தித்த டத்தோ நடராஜா, தனக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என கூறினார்.

இதனிடையே, தேசிய முன்னணியில் தோழமைக் கட்சியாக உள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி தேமு வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் களமிறங்கும் நிலையில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனின் முடிவை பொறுத்தது.
ஆதலால், டத்தோஶ்ரீ தனேந்திரனிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என தாஸ் குறிப்பிட்டார்.

டத்தோஶ்ரீ தனேந்திரன், தாஸ் அந்தோணிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுபடுவதாக டத்தோ நடராஜா மேலும் கூறினார்.

ஜோகூரை அடுத்து பெர்லீஸ்- 'முஸ்லீம்களுக்கு மட்டுமே சலவை சேவை'

கங்கார்-
ஜோகூர் மாநிலம் விஸ்வரூபம் எடுத்த 'முஸ்லீம்களுக்கு மட்டுமே சலவை சேவை' சர்ச்சை தற்போது பெர்லிஸ் மாநிலத்தில் உருவெடுத்துள்ளது.

கங்கார், கம்போங் பக்காவில் கே-பார்க் வர்த்தக தளத்தில்  புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த துணி சலவை கடை, இங்கு முஸ்லீம்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படும் என அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.

இது குறித்து கடையில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அதன் உரிமையாளர் என்று கூறி கொண்ட நபர், அந்த சலவை மையம் முஸ்லீம்களுக்காகவே திறக்கப்பட்டதாகவும் இதனைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இச்செயல் குறித்து புலனம் வழி கருத்து தெரிவித்த பெர்லீஸ் மாநில முப்தி டத்தோ டாக்டர் முகம்ட் அஸ்ரி, தனக்கு பெர்லீஸ் இளவரசரிடமிருந்து உத்தரவு வந்ததாகவும் சலவை மையம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி கூறியதாகவும் அவர் சொன்னார்.

அண்மையில் மூவார், ஜோகூரில் நடைபெற்ற இச்சம்பவத்தை ஜோகூர் மாநில சுல்தான் வன்மையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு மீட்டுக் கொண்டதோடு அதன் உரிமையாளர் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 29 September 2017

நவீன் கொலை வழக்கு: டிசம்பர் 6க்கு ஒத்திவைப்பு


ஜோர்ஜ்டவுன் -
பகடிவதைக்கு உள்ளாகி சித்திரவதை செய்து மரணத்தைத் தழுவிய மாணவர் டி.நவீனின் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் மீதான விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவிமடுப்புக்கு வந்த இவ்வழக்கி சவப்பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைக்காததால் டிசம்பர் 6ஆம் தேதிக்கு அடுத்த செவிமடுப்பை ஒத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட் நூர் ஃபாட்ரினா சுல்கைரி உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு மேல் உணவு வாங்கச் சென்ற நவீனை ஐவர் கொண்ட கும்பல் சித்திரவதை செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இது தொடர்பில் 18 வயதான ஜே.ராகசுதன், கோகுலன் உட்பட 16,17 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும்செக்ஷன் 302இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

வடகொரியா செல்ல மலேசியர்களுக்கு தடை- வெளியுறவு அமைச்சு

புத்ராஜெயா-
மலேசியர்கள் வடகொரியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

மறு அறிக்கை வெளியிடப்படும் வரை மலேசியர்கள் அந்நாட்டுக்கு  பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மேற்கொண்டு வரும் எறிகணை சோதனை நடவடிக்கையால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையயில் ஒன்றுகூடிய உலக நாடுகளின் தலைவர்கள் பியாங்யோங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை சோதனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளனர்.

அந்நாட்டில் சகஜமான நிலை திரும்பும் வரையிலும் இந்த பயண தடை அமல்படுத்தப்படும் என வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வடகொரியாவின் வான் எல்லைப்பகுதிகளில் அமெரிக்காவின் போர் விமானங்கள் பறந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து மேலும் விவரங்கள் பெற வேண்டுவோர் வெளியுறவு அமைச்சை +603-8008000 (அலுவலக நேரம்) அல்லது +603-88874570 (அலுவலக நேரத்திற்கு பின்) தொடர்பு கொள்ளலாம்.

Thursday 28 September 2017

கட்சியை போன்று இந்தியர்களுக்கான திட்டங்களில் உருமாற்றமும் அமலாக்கமும் தேவை- எஸ்.பி.மணிவாசகம்கோலாலம்பூர்-
மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள  மாற்றங்கள் ஆக்ககரமானது ஆகும். டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல வழிவகுக்கும் என முன்னாள் மஇகா  மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.பி.மணிவாசகம் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மஇகா பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் மேம்பாட்டை உறுதி செய்வது மஇகா மட்டுமே.

அவ்வகையில் மஇகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களின் மூலம் கிளை மட்டத்தில் உள்ள தலைவர்களும் செயலவையினரும் துடிப்பாற்றலுடன் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.ஆனாலும், இந்திய சமுதாயத்திற்காக மஇகா முன்னெடுக்கும் திட்டங்களை விரைந்து அமலாக்கம் செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும். ஏனெனில், இந்திய சமுதாயத்திற்காக பல திட்டங்களை வகுத்துள்ள மஇகா, இன்னமும் அதனை திட்டமாகவே அறிவித்துக் கொண்டிருக்காமல் அதனை அமல்படுத்தி  அதன் மூலம் நிறைவு  செய்துள்ள அடைவுநிலையை மக்களிடத்தில் அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்திய சமுதாயத்தில் இழந்துள்ள செல்வாக்கை மஇகா மீண்டும் பெற முடியும் என்பதோடு, வகுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அடைந்துள்ள அடைவு நிலையே நம்முடைய வெற்றியை இந்தியர்களிடத்தில் கொண்டுச் செல்லும்.


மேலும், கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டு இப்போது இளைய தலைமுறையினர் அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை வழிநடத்திச் செல்வதற்கான தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்த வேண்டும்.

ம இகாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உருமாற்றத்தை போன்று இந்திய சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உருமாற்றங்களை விரைந்து மேற்கொண்டால் இழந்து நிற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என மணிவாசகம் குறிப்பிட்டார்.காலத்திற்கேற்ற உருமாற்றமே மஇகாவின் சீர்திருத்தம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்கோலாலம்பூர்-
மஇகாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் கிளை அளவிலான மஇகாவினர் ஆக்கப்பூர்வ்மாக செயல்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது என மஇகா உதவித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்..விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகா, இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெறுவது அவசியமான ஒன்றாகும். மிக நெருக்கடியான காலகட்டத்தில் உள்ள மஇகா  இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்கு ஒரே வழி ஒவ்வொரு கிளைகளையும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பதாகும்.

மஇகாவின் அமைப்பு சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் வழி இனி கிளைகள் யாவும் புத்துயிர் பெற்று செயல்படும். முன்பு கிளை அளவில் செயலற்று கிடந்த செயலவையினர் ஓர் அதிகாரம் படைத்தவர்களாக உருமாற்றம் காண்கின்றனர்.தேசிய, மாநில, தொகுதி அளவிலான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்  கிளை செயலவையினருக்கு  வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் துடிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.


கிளை அளவில் அவர்கள் செய்யும் சேவைகள் இந்திய சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்திடும். ஆகவே, மஇகா தேசியத் தலைவர்  டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள ஆக்கப்பூர்வ சீர்திருத்தம் காலத்திற்கேற்ற ஒன்று என மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு உயரிய பதவி வழங்குக- தாஸ் அந்தோணிசாமி கோரிக்கை

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தேசிய முன்னணியில் தோழமைக் கட்சியாக இடம்பெற்றுள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஓர் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கட்சியின் மக்கள் பணி தீவிரப்படுத்தப்படும் என சுங்கை சிப்புட் தொகுதி மமச கட்சித் தலைவர் தாஸ் அந்தோணிசாமி வலியுறுத்தினார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தேவையான சேவையை மலேசிய மக்கள் சக்தி கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆலயம், பள்ளிக்கூடம், சமூகநல உதவி, மாணவர்களுக்கு கல்விநிதி உதவி என பல சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆயினும் இக்கட்சிக்கு இன்னமும் ஓர் உரிய பதவிகள் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனுக்கு உயரிய பதவி வழங்கப்பட வேண்டும்.

செனட்டர், துணை அமைச்சர் போன்ற பதவிகளை வழங்குவதன் மூலம் கட்சி இன்னும் துடிப்புடன் செயல்படுவதோடு இன்னும் இந்தியர்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த முடியும் என தாஸ் அந்தோணிசாமி கூறினார்.

தம்பி விஜய்... நல்ல படங்களில் கவனம் செலுத்தலாம்- கமல் கருத்து

சென்னை-
நடிகர் விஜய் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தலாம் என நடிகர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நடிகர் கமல்ஹாசனிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்தி நடிகர் அமீர்கான் போன்று தம்பி விஜயும் நல்ல படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தலாம். வெற்றி பெற்ற நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். அமீர்கானை போன்று விஜயும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என கூறினார்.

'விஜய் மக்கள் மன்றம்' என்ற பெயரில் நற்பணி மூலம் அரசியலில் காலூன்ற முயன்று வருகின்றார் விஜய். கமலுக்கு முன்பே அரசியலுக்கான அஸ்திவாரத்தை தொடங்கியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 27 September 2017

மஇகா பொதுப் பேரவையில் சீர்திருத்தம்: 'தேர்தல் முதல் மாலை வரை...'

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகா 71ஆவது பொதுப் பேரவை பல்வேறு சீர்த்திருத்தங்களை உள்ளடக்கியதாகவே தெரிகிறது. டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையிலான தற்போதைய மஇகா பல உருமாற்றங்களை கண்டு வருகிறது. அவ்வகையில்  இந்த 71ஆவது பேராளர் மாநாட்டில் நமது கண்களுக்கு தெரிந்த சில சீர்திருத்தங்களை கொஞ்சம் அலசுவோம்.
சீர்திருத்தம் 1: அமைப்பு சட்ட விதி மாற்றம்
* மஇகா அமைப்பு சட்ட விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களின் மூலம் கிளைத் தலைவர்களுக்கும் செயலவையினருக்கும் முக்கியத்துவம் அளிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மாநில செயலவையினர் 10 பேரையும் தொகுதி ரீதியில் தலைவர், துணைத் தலைவர், இரு கணக்காய்வாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் உச்ச அதிகாரம் கிளைத் தலைவர்கள் செயலவையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தம் 2: கம்பீரம் இல்லை... ஆனால் எளிமை!
* மஇகா பேராளர் மாநாடு என்றாலே ஒரு கம்பீரம் தலைதூக்கியிருக்கும். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ச.சாமிவேலு தலைமையில் நடைபெற்ற பல மாநாடுகளில் அந்த கம்பீரம் மிளிர்ந்தது. மண்டப அரங்கம் மட்டுமல்லாது பேராளர்கள் தங்கி செல்லும் ஹோட்டல் வரை அனைத்திலும் ஒரு ஆடம்பரம் தெரியும்.

ஆனால் டத்தோஶ்ரீ சுப்ரா தலைமையிலான இந்த 71ஆவது பேராளர் மாநாடு மிக எளிமையான தோற்றத்தை பிரதிபலித்தது. மாநாடு நடைபெற்ற மண்டபம் முதல் ஹோட்டல்கள், உணவு என பலவற்றில் இந்த எளிமை 'பிரதிபலித்தது'. இந்த எளிமை கூட மஇகா உருமாற்றத்தின் பிம்பமே ஆகும்.

சீர்திருத்தம் 3: தேசிய மொழியில் உரை; காணொளியில் தமிழ்மொழி
* மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் ஆற்றிய கொள்கைவுரை முழுக்க முழுக்க தேசிய மொழியில் மட்டுமே இடம்பெற்றது. நாட்டின் தேசிய மொழி என்பதாலும் பிரதமர் வந்திருப்பதாலும் தேசிய மொழியில் உரையாற்றிய அவர், தமிழில் உரையாற்ற மறக்கவில்லை; மாறாக நேரம் குறைவு கருதி எல்இடி திரையில் தேசியத் தலைவரின் உரை காணொளி காட்சியாக இடம்பெற்றது.
சீர்திருத்தம் 4: சிறிய மாலை; பொன்னாடை இல்லை
* மஇகா மாநாட்டுக்கு வருகை புரியும் பிரதமருக்கு ஆளுயர மாலையும் பொன்னாடையும் செய்யும் கலாச்சாரம் நீடித்திருந்தது. ஆனால் இந்த 71ஆவது பேராளர் மாநாட்டில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இலகுவான, சிறிய மாலை அணிவித்த டத்தோஶ்ரீ சுப்ரா, நினைவுச் சின்னம் ஒன்றை மட்டுமே பரிசளித்தார்.

இத்தகைய சீர்த்திருந்தங்களை முன்னெடுத்த மஇகா 71ஆவது பேராளர் மாநாடு உண்மையிலேயே ஓர் உருமாற்றத்திற்கு வித்திட்டுள்ளது எனலாம்.

மஇகாவின் சீர்திருத்தங்கள் வெற்றியை தேடி தரும்- டத்தோ டி.மோகன்


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவை பெறுவதற்கு  மஇகா முன்னெடுக்கும் திட்டங்கள் நிச்சயம் வெற்றியை தேடி தரும் என மஇகா உதவித் தலைவரான டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.

இந்தியர்களிடையே வலுவான ஆதரவை பெறுவதற்கு மஇகா பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கிளை அளவில் மேற்கொள்ளப்படுகின்ற சீர்திருத்தங்களின் வழி மஇகா இந்தியர்களிடையே வலுவான கட்சியாக நிலைபெறுவதற்கு வழிவகுக்கும்.

கிளை அளவில் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்களின் மூலமாக இந்தியர்களின் ஆதரவு பெற்ற கட்சியாக மஇகா உருவெடுப்பது திண்ணமாகும்.அதேவேளயில், வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும்  மஇகா வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவசியம் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் (பிரதமர்) சுட்டிக் காட்டியுள்ளதை போல் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை மஇகா களமிறக்கும். வேட்பாளர் யார் என்பதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முடிவு செய்வார்.


மஇகா  வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்வதற்கு ஏதுவாக தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு போட்டியிடுவர் என டத்தோ மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

அரசியலில் குதித்தால் சினிமாவுக்கு முழுக்கு- நடிகர் கமல்


சென்னை-
தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன். ஆதலால் அரசியலுக்கு நுழைந்தால் சினிமாவுக்கு முழுக்கு போட வேண்டி வரும்.

அதோடு, நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்.

அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோக்க தயாராக உள்ளேன்.


தேர்தலில் நான் எங்கே போட்டியிடுவது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளைத்தான் தேர்வு செய்வேன் என்றார்.
அண்மைய காலமாக தமிழக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகர் கமல், சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவது உறுதி என பகிரங்கமாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை- டான்ஶ்ரீ நோ ஒமார்

ஷா ஆலம்-
முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு  அரசாங்கம் தடை விதிக்கவில்லை. ஆயினும் அதனை ஒரு விழாவாக கொண்டாடுவதன் அவசியம் என்ன? என்று சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஶ்ரீ நோ ஒமார் வினவினார்.

இதற்கு முன்னர் மது அருந்தும் விழாவை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்த அவர், முஸ்லீம் அல்லாதவர்களின் இதுபோன்ற விழாவினால் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

முன்பு பண்டாமாரானில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள் மதுபானங்களை அருந்தி கொண்டிருந்தனர். இது தவறான ஒன்றல்ல. ஏனெனில் அங்கு முஸ்லீம் அல்லாதவர்களே பெரும்பான்மையாக இருந்தனர்.

ஆனாலும், மதுபானம் அருந்துவதை  ஒரு விழாவாக நடத்துவது ஏன்?, இங்கு அதனை விளம்பரப்படுத்த நாம் அவற்றை (மதுபானங்களை) ஏற்றுமதி செய்கிறோமா?, இருந்தாலும் அதனை ஓர் அரசியல் சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் 'பெட்டர் பீர் 2017' விழா ரத்து செய்யப்பட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.

முன்னாள் மந்திரி பெசார்களின் ஒருங்கிணைப்பு 'தோல்வி காணும் வியூகம்'

ஷா ஆலம்-
முன்னாள் மந்திரி பெசார் மூவர் மீண்டும் அம்னோவுக்கு திரும்பியுள்ளதால் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய மீட்டெடுக்கலாம் என்ற வியூகம் பழைமையானது என்பதோடு இது தோல்வியையே தழுவும் என பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.

டான்ஶ்ரீ முகம்மட் முகம்மட் தாய்ப், டான்ஶ்ரீ அபு ஹசான் ஒமார், டாக்டர் முகமட் கிர் தோயோ ஆகிய மூவரை சுட்டி காட்டி, இம்மூவர் மட்டுமே சிலாங்கூர் மாநில அரசில் இடம்பெறவில்லை, மாறாக வாக்காளர்களும் சிலாங்கூர் மக்களும் உள்ளனர் என பக்காத்தான் ஹராப்பானின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

மக்கள் இப்போது தெளிவான சிந்தனையில் உள்ளனர், நம்பிக்கைக்குரிய வாக்காளர்களை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
இரு தவணைகளாக இம்மாநிலத்தை வெற்றி பெற முடியாத தேசிய முன்னணி, குறுக்கு வழியில் மாநில அரசை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றார் அவர்.

இதற்கு முன்னர் கருத்துரைத்த சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டான்ஶ்ரீ நோ ஒமார், இம்மூவரும் அம்னோவுக்கு மீண்டும் திரும்பியுள்ளது வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்ற வழிவகுக்கும் என கூறியிருந்தார்.

இந்தியர்கள் ஓரங்கட்டப்படகூடாது -பேராசிரியர் பி.இராமசாமி


சுகுணா முனியாண்டி 
பட்டர்வொர்த்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் இந்நாட்டின் சட்டப்பூர்வ பிரஜைகள் என்ற நிலையில் மதிப்பளிக்கப்படவேண்டும். இனம் அல்லது மத ரீதியில் ஓரங்கட்டபடக்கூடாது என்பதை தேசிய முண்ணி அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நினைவுறுத்தினார் .

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  நடந்த மஇகாவின் பேராளர் மாநாட்டில் தாம் 'இந்தியர்களின் மேம்பாட்டு தந்தை' என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கூறிருப்பது தமக்கு வியப்பை தருவதாக கூறிய அவர் , இந்நாட்டு இந்தியர்கள் பொருளாதார ரீதியில் கண்டுள்ள வளர்ச்சி என்னவென்பதை இந்தியர்களை ப் பரதிநிதிப்பதாக கூறும் மஇகா விளக்கம் கொடுக்க முடியுமா?  என ஜசெ க துணைப் பொதுச் செயளாளருமான அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டின 14ஆவது  பொதுத் தேர்தல்  நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தேசிய முன்ணனி அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் .

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வரும் அம்னோ தலைமையிலான தேசிய முன்ணணி அரசாங்கம் இந்திய சமூக பொருளாதார நிலை மாற்றப்படவும் இல்லை; உயர்த்தப்படவும் இல்லை என்பதுதான் உண்மை என மேலும் கூறினார் .

அம்னோ ஆதிக்கத்தில் இருப்பதனால் மஇகாவினால் இந்திய சமூகத்திற்கு எந்தவோர் ஆக்கப்பூர்வ மேம்பாடு, பொருளாதாரத் திட்டங்களை அமலுக்கு கொண்டுவர இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday 26 September 2017

தீ விபத்து: 9 லோரிகள் எரிந்து நாசமாகின

ஷா ஆலம்-
தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த கோர தீச்சம்பவத்தில் 9 லோரிகள் தீயில் எரிந்து நாசமாகின.

இங்கு புக்கிட் கெமுனிங்கில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 12.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 7 லோரிகளும் 2 டிரெய்லர் லோரிகளும் தீக்கிரையாயின.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் காலை 5.00 மணியளவவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என அதன் நிர்வாக அதிகாரி அலி மட்டியா புக்ரி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ கொளுந்து விட்டு எரிந்தது எனவும் தொழிற்சாலைக்கு வெளியே சில லோரிகள் எரிந்து கொண்டிருந்தாகவும் தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் சொன்னார்.

இந்த தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெட்கோ நில விவகாரம்: லோட்டஸ் உரிமையாளர்கள் இருவர் கைது

புத்ராஜெயா-
கெட்கோ நில விவகாரம் தொடர்பில் லோட்டஸ் குழுமத்தைச் சேர்ந்த அதன் இரு உரிமையாளர்கள் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டனர்.

சிரம்பானில் உள்ள கெட்கோ நிலத்தை கொள்முதல் செய்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அங்குள்ள மக்கள் ஏம்ஏசிசியிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரை தொடர்ந்து அதிரடி களத்தில் இறங்கிய எம்ஏசிசி இதற்கு முன்னர் நிலம் கொள்முதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என அதன் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த  நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் இவ்விரு உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட இவ்விருவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். நாளை புத்ராஜெயாவிலுள்ள உயர்நீதிமன்றத்தில் இவ்விருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அந்நபர் இந்த நில கொள்முதல் விவகாரத்தில் இடைதரகராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செனட்டராக உறுதிமொழி ஏற்றார் டத்தோ சம்பந்தன்

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் இன்று செனட்டராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
இன்று மேலவை சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னிலையில் டத்தோ சம்பந்தன் செனட்டராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணி விசுவாசமான ஆதரவை புலபடுத்தி வரும் ஐபிஎப் கட்சிக்கு செனட்டர் பதவி வழங்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

தற்போது டத்தோ சம்பந்தன்  செனட்டராக பதவியேற்றுக் கொண்டதன் வழி ஐபிஎப் கட்சியின் பலநாள் 'கனவு' நிறைவேறியுள்ளது.
அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎப் கட்சியின் தோற்றுனர்  அமரர் டான்ஶ்ரீ எம்.ஜி.பண்டிதனுக்கு பிறகு செனட்டர் பதவியை ஏற்று புதிய வரலாறு படைத்துள்ள டத்தோ சம்பந்தனுக்கு 'பாரதம்' மின்னியல் ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

'ஏஎம்என்' விருது பெற்ற இளங்கோவுக்கு சிறப்பு

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்
நாட்டின் மாமன்னர் சுல்தான் முகமட் வி பிறந்தநாளில் 'ஏஎம்என்' விருது பெற்ற சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்துவுக்கு  பிரபல தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் சிறப்பு செய்தார்.

அண்மையில் இங்கு நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்வில் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல் இந்த சிறப்பு செய்தார்.

தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோவன் பல்வேறு பொது அமைப்புகளிலும் செம்பிறை சங்கத்திலும் இணைந்து பல சமூகச் சேவைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறம், கிளைத் தலைவர்கள்  பெரியண்ணன்,கணேசன், கவிமன்னன், சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எஸ்/லிங்கேஸ்வரன்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

'வேலை வாய்ப்பு, கல்வி கடனுதவி, பொருளாதாரம், வீடு விலையேற்றம்'... 'TN50' கலந்துரையாடலில் எதிரொலித்த அதிருப்தி குரல்கள்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
'தேசிய உருமாற்றம் 50'  எனப்படும் 'திஎன்50' (TN50) அமலாக்கத்தில் இந்திய இளைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சந்திக்கும் சவால்களுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய இளைஞர்கள் தங்களது மனக்குமுறலை வெளிபடுத்தினர்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி, சக்தி அறவாரியம்  ஏற்பாட்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய இளைஞர்களுடனான 'திஎன்50' கலந்துரையாடல் நடத்தப்பட்டது. முதல் முறையாக தமிழில் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் பல்வேறு பகுதியிலிருந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை துணிச்சலுடன் வெளிபடுத்தினர்.
இதில் இளைஞர்கள் அதிகம் எதிர்நோக்கும் பிரச்சினையானது நகர்ப்புற சூழலில் சந்திக்கும் சவால்களே ஆகும். குறிப்பாக தோட்டப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு வந்த இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டனர்.

அரசாங்க வேலை வாய்ப்பு என்பது இன்றைய இளைஞர்களுக்கு 'குதிரை கொம்பாக'வே உள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் லட்சிய எண்ணங்களை வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்த மதிப்பெண்களை பெற்று தகுதி வாய்ந்த வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் அதை விடுத்து வேறு வேலைகளில் பணியமர்த்துவது எங்களின் கனவை சிதைப்பதற்கு சமமாகும் என ஓர் இளைஞர் கூறினார்.
அதோடு தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயில்வதற்கு ஓர் இக்கட்டான சூழ்லை எதிர்நோக்குகின்றோம். குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு பண வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் பிற இனத்தவர்களுக்கு உள்ளதைபோல் கல்வி கடனுதவி ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இப்போது உள்ள எம்ஐஇடி கல்வி கடனுதவி கழகம் ஒரு கட்சியின் கீழ் செயல்படுகிறது.

ஆனால் கல்வி கடனுதவி வேண்டுபவர்கள் பிற  கட்சிகளிலும் இருக்கலாம். ஆதலால் அனைத்து இனத்தவர்களுக்கும் பயனளிக்கும் வகையில்  பொது நிலையிலான கல்வி கடனுதவி ஸ்தாபனம் வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒரு வீட்டைக்கூட வாங்க முடியாத அவல நிலையை இந்திய இளைஞர்கள் எதிர்நோக்கியுள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு வீட்டின் விலைகள் அதிகளவு உயர்ந்து கிடக்கின்றன. இந்நிலையை போக்கும் வகையில் வீட்டின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் சில சட்டத்திட்டங்கள் எளிதான முறையில் வகைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கல்வி, பொருளாதாரம், தற்கால வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கி  இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர்  டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன்,  இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஏற்பாடு செய்திடாத 'திஎன்50' கலந்துரையாடல் முதல் முறையாக தமிழில் நடைபெற்றது.
நாட்டின் மேம்பாட்டில் இந்திய இளைஞர்களின் கருத்துகளையும் உள்ளடக்க வேண்டும் எனும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த இளைஞர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவதோடு  இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிஜமாக ஆவன செய்யப்படும் எனவும் டத்தோ தனேந்திரன் குறிப்பிட்டார்.

திஎன்50-இன் இளையோர் தூதுவரான கணேஷ் முரேன், மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் எம்.இராஜேந்திரன் உட்பட மலேசிய மக்கள் சக்தி, சக்தி அறவாரியம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.