Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Friday, 26 June 2020

இந்தியர், சீனர் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்படாதது ஏன்? மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில அரசில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரதிநிதிக்கக்கூடிய பிரதிநிதிகள் இன்னமும் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு மஇகா இளைஞர் பிரிவு தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மஇகாவும் மசீசவும் ஓர் அங்கமாக வகித்துள்ளன.

ஆனால் பேரா மாநிலத்தில் கடந்த மார்ச்  ஆட்சி அமைத்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணயணி இந்தியர்,சீனர் பிரதிநிதிகளை இன்னமும் நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்துவது வேடிக்கையாக உள்ளது என்று மஇகா இளைஞர் பிரிவு மத்திய செயலவை உறுப்பினர் ஸ்ரீ முருகன் குறிப்பிட்டார்.

முந்தைய தேசிய முன்னணி அரசில் சிறப்பு ஆலோசகர் பதவி மஇகாவுக்கு வழங்கப்பட்டது.  ஆனால் இப்போது இந்தியர், சீனர் பிரதிநிதிகள்  இல்லாமல் இருப்பது மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது.

குறிப்பாக, மாநில அரசின் உதவிகளை பெற விரும்பும் இந்தியர்கள் இந்திய பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில் தங்களது தேவைகளுக்கு எவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறும்.

இந்தியர்களும் சீனர்களும் மாநில அரசில் பங்களிப்பை வழங்காத நிலையில் சிறப்பு நியமனங்களின் வழி இவ்விரு சமூகத்திற்கும் மாநில உதவித் திட்டங்கள் சென்றடைவதற்கு பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த நியமனத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் சீக்கிரமே அமல்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ முருகன் மேலும் சொன்னார்.

Wednesday, 3 June 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கு புதுமுகத்தை நிரப்புமா மஇகா?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் புதிதாக ஆட்சிமையத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பிரதிநிதி இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது மக்களிடையேயும் அதிருப்தியான சூழல் நிலவுகிறது.

பேரா மாநிலத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் யாரும் இல்லாத சூழலில் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் தேசிய முன்னணி ஆட்சியில்  கடந்த 2009ஆம் ஆண்டு முதல்  2018ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

2009இல் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கமும் 2013இல் டத்தோ வ.இளங்கோவும் இப்பதவியை அலங்கரித்து வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றார்.

அதேபோல் 2013ஆம் ஆண்டு பொதுத்  தேர்தலுக்குப் பின்னர் மஇகா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டத்தோ சி.சிவராஜுக்கு மந்திரி பெசாரின்  சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டது. அதுவும் தற்போது காலியாக கிடக்கிறது.
இப்போது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி புரியும் இம்மாநிலத்தில் இன்னுமும் இந்தியருக்கான பிரதிநிதி நியமிக்கப்படாதது பெரும் மர்மமாகவே இருக்கிறது.

இதனிடையே, இம்மர்மத்திற்கு விடை காணும் வகையில் இந்தியர் பிரதிநிதியாக புதுமுகத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு விரும்புவதாகவும் ஆனால் மஇகாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டவரில் பழைய முகமே இடம்பெற்றுள்ளதுதான் இந்திய பதவி நியமனத்திற்கு காலதாமதம் என்று அறியப்படுகிறது.

பேரா மஇகாவின் தலைவராக டத்தோ இளங்கோவே பதவி வகித்து வரும் சூழலில் மந்திரி பெசாரின் ஆலோசகர் பதவிக்கும் அவர் குறி வைத்துள்ளார் என்பதும் வெள்ளிடைமலை. ஆனால் பதவியில் இருந்தவர்களை காட்டிலும் புதுமுகத்தை மஇகா சிபாரிசு செய்ய வேண்டும் என்று மந்திரி பெசார் எதிர்பார்ப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
 
மஇகாவில் புதுமுகங்களே இல்லையா? என சில ஆய்வுகளை மேற்கொண்டதில் அரசியலும் கட்சிப் பணிகளிலும் சமூகச் சேவைகளும் திறம்பட சேவையாற்றி வருபவர்கள் பலர் உள்ளனர். 
ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் எஸ்.ஜெயகோபி, தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன்,புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு,கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமச்சந்திரன், தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன், பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷ் என புதுமுகங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகலாம்.

ஜெயகோபி ஈப்போ வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் ஆவார். கடந்த பொதுத் தேர்தலின்போது புந்தோங் தொகுதி தேமு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றினார். புந்தோங் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கக்கூடிய தகுதியும் அரசியலில் நிறைந்த முதிர்ச்சியும்  கொண்டவர் ஜெயகோபி.




மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரன், தைப்பிங் தொகுதியில் சிறந்த சேவைகளை ஆற்றி வருவதோடு தற்போது தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்பு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.




புக்கிட் கந்தாங் மஇகா தொகுதித் தலைவர் ஜி.சண்முகவேலு அத்தொகுதியில் நிறைவான சேவையை வழங்கி  வந்துள்ளதோடு பேரா மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.






கோலகங்சார் மஇகா தொகுதித் தலைவர் ராமசந்திரன் அத்தொகுதியில் நன்கு அறியப்பட்ட சமூகச் சேவராக திகழ்கிறார். கோலகங்சார் மாநகர் மன்ற உறுப்பினராகவும் பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் திறம்பட சேவையாற்றியுள்ளார்.





தாப்பா மஇகா தொகுதித் தலைவர் சந்தனசாமி, தன் தொகுதியில் பல சேவைகளை திறம்பட ஆற்றி வருகிறார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் இத்தொகுதியில் இந்தியர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கண்டு வரும் சந்தனசாமி தற்போது தாப்பா மாநகர் மன்ற உறுப்பினராகவும் சேவையாற்றி வருகின்றார்.



அரசியலின் அடையாளமாக திகழும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட கி.மணிமாறன், இங்குள்ள இந்தியர்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ளார். மஇகா தலைமைத்துவம், மாநில அரசு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என பலரின் நன்மதிப்பையும் பெற்று சிறந்த சேவையை இங்கு வழங்கி வருகின்றார். பேரா மஇகா இளைஞர் பிரிவிலும் இவர் சேவையாற்றியுள்ளார்.


சமூகச் சேவையில் இளைய ரத்தம் பாய்ச்சப்படும் வகையில் பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ஜெயகணேஷின் சேவையையும் நாம் புறக்கணிக்க முடியாது. தம்புன் தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான இவர், மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் பேரா மாநில முன்னாள் தலைவராகவும் பணியாற்றி சிறந்த சேவைகளை பதிவு செய்துள்ளார்.


மேலும், மஇகாவை தவிர்த்து மலேசிய தமிழ் இளைஞர் 
மணிமன்றத்தின் பேரா மாநிலத் தலைவராக பதவி வகித்து வரும் ஆனந்தனும் தற்போது வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். சமூகச் சேவையில் இவரின் ஈடுபாடும் பாராட்டும் வகையில்தான் உள்ளது.



பேரா மாநில மந்திரி பெசார் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய  பதவிகளுக்கு தகுதியானவர்கள் கட்சிக்குள்ளேயே இருக்கும் நிலையில்  மஇகா தலைமைத்துவம் புதுமுகத்தை அப்பதவியில் நிரப்புமா? அல்லது நான்தான் ராஜா நானே மந்திரி எனும் போக்கில் இருக்கும் வாய்ப்பை தவற விட்டு காலம் கடந்து சிந்திப்பார்களா? எனும் முடிவை மஇகாவிடமே விட்டு விடுவோம்.

Monday, 1 June 2020

முஹிடினுக்கு தேவை பெரும்பான்மை; நஜிப்புக்கு தேவை பொதுத் தேர்தல்- ஜோகூர் டிஏபி சாடல்

ஜோகூர்பாரு-
நாட்டின் இன்றைய நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு பொதுத் தேர்தலும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு நாடாளுமன்றத்ததில் பெரும்பான்மை தேவைபடுவதாகவும் ஜொகூர் மாநில டிஏபி தலைவர் லியூ சின் தொங் கூறினார்.

பொதுத் தேர்தலை தவிர்த்து விட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை முஹிடின் யாசின் முன்னெடுக்கின்றார்.


அதன் அங்கமாக பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பதில் அதி தீவிரமாக செயல்படுகிறார். ஆனால் நஜிப் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புகிறார்.

முஹிடின் யாசின் பிரதமராக பதவி வகிப்பதை அவர் (நஜிப்) விரும்பவில்லை எனும் தகவல் ஒன்று பரவும் நிலையில் இவ்வாண்டு பிற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு  அம்னோ நெருக்குதல் கொடுக்கலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

Thursday, 28 May 2020

இந்தியர் பிரதிநிதி நியமிக்கப்படாமல் இருப்பது ஏன்?

ரா.தங்கமணி

ஈப்போ-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பேராவிலும் ஆட்சி மாற்றம் கண்டுள்ள சூழலில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னமும் கேள்வியாக எழுந்து வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் பேரா மாநில அரசில் மஇகாவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ இராஜு ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

அதன் பின்னர் 2008இல் நடந்த தேர்தலில் நடந்த தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றப் பின்னர் இந்தியருக்கான பிரதிநிதியாகவும் இருந்து வந்தார்.

10 மாத ஆட்சிக்கு பின்னர் மீண்டும் தேசிய முன்னணி பேரா மாநிலத்தை கைப்பற்றியவுடன் இந்தியர் பிரதிநிதியாக டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்தார். 13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டத்தோ வ.இளங்கோ மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக பதவி வகித்து வந்தார்.

இதுபோதாதென்று மாநில சபாநாயகராக டத்தோ ஆர்.கணேசன், டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ எஸ்.தங்கேஸ்வரி ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தப் பின்னர் சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் இஸ்லாம் அல்லாதோர் விவகாரப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங்கின் சிறப்பு அதிகாரியாகவும் பொறுப்பு வகித்து வந்தனர்.

ஆனால் இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைத்துள்ள நிலையில் இந்தியர் விவகாரங்களுக்கான பொறுப்பாளாரை நியமனம் செய்யாதது இம்மாநில இந்தியர்களிடையே ஏமாற்றமாக உள்ளது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்  ஆதி.சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக  நியமிக்கப்பட்டு அவரின் கீழ் இந்தியர் விவகாரங்கள் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதேபோல் பேரா மஇகாவின் கோரிக்கைக்கு ஏற்ப மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் நியமனம் செய்யப்படலாம் என ஆவல் எழுந்த நிலையில் இப்போது இந்தியர் பிரதிநிதியாக யார் மாநில அரசில் யார் இடம்பெறவுள்ளனர்? என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியர் பிரதிநிதியை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ பைசால் அஸுமு நியமனம் செய்வதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பதற்கு விடை கிடைக்குமா?

Friday, 15 May 2020

மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் ஆகிறார் சிவசுப்பிரமணியம்?

ரா.தங்கமணி

ஈப்போ-
பக்காத்தான்  ஹரப்பான் ஆட்சி கலைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ள பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகராக நியமனம் செய்படலாம் என்று நம்பப்படுகிறது.

அங்கு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஜசெகவிலிருந்து விலகிய சிவசுப்பிரமணியம் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதோடு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலுக்கு  ஆதரவு தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்படுக்கூடும் என அறியப்படுகிறது.
சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படாததற்கு பேரா மஇகாவின் எதிர்ப்பும் ஒரு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லாத நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் மஇகாவைச் சேர்ந்த டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ வ.இளங்கோ ஆகியோரை சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 13 May 2020

முக்ரீஸுக்கான ஆதரவு வாபஸ்; கெடாவில் ஆட்சி கவிழ்ந்தது

அலோர் ஸ்டார்-
முக்ரீஸ் மகாதீரின் தலைமைத்துவத்திற்கான ஆதரவை இரு சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது.
சிடாம் சட்டமன்ற உறுப்புனர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ, லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் பிகேஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர்.

பிரதமர் முஹிடின் யாசினை ஆதரிக்கிறோம் என கூறிய இவர்களின் முடிவால் கெடாவில் நீடித்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

Thursday, 30 April 2020

ஆடு, புலி அல்ல; குள்ளநரிகளை வீழ்த்தியல் அரசியல் சாணக்கியர் டான்ஶ்ரீ கேவியஸ் #HBDTanSriKayveas

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அரசியலில் வீழ்ந்தவனை காட்டிலும் வீழ்த்தப்படுவனை சுற்றி நடக்கும் சதுரங்க ஆட்டம் என்பது எளிதில் அவிழ்க்கப்படாத முடிச்சாக நீடிக்கும். அத்தகையதொரு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தன்னை சுற்றி நடந்த பல்வேறு துரோகச் செயல்களுக்கு மத்தியிலும் தன் பின்னால் அனிவகுத்த உறுப்பினர்களுக்கும் தனியொரு தலைவனாய் உயிர்த்தெழுந்தார் பிபிபி 
கட்சியின் தேசியத் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்.

2013ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தனது ஆட்சி நிர்வாகத்தை நிலைபடுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது அன்றைய தேசிய முன்னணி அரசாங்கம், மக்கள் சேவை, ஆக்ககரமான திட்டங்களுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முற்பட்டார் அன்றைய பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்.

தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளாக திகழ்கின்ற அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், மைபிபிபி உட்பட பல கட்சிகள் தாங்கள் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் சேவையை முன்னெடுக்க ஆயுத்தமாகின.

அதன் அடிப்படையில் பகாங் மாநிலத்திலுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்து களத்தில் இறங்குகிறார் டான்ஶ்ரீ கேவியஸ்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தேர்ந்தெடுப்பதற்கு இரு காரணங்களே டான்ஶ்ரீ கேவியசுக்கு முக்கியமானதாக அமைந்தன

 1)  மஇகாவின் தேசியத் தலைவராகவும் கேமரன் மலை நாடாளுமன்றஉறுப்பினராக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுயேட்சை நாடாளுமன்றஉறுப்பினராக அறிவிக்கப்பட்ட பின்னர் அன்றைய மஇகாதலைமைத்துவம் அத்தொகுதியில் களப்பணி ஆற்ற தவறியது.. 


2)   பகாங் மாநிலத்தில் பிறந்த வளர்ந்ததினாலும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது (தேமு ஆட்சியில்) 2002இல் கேமரன் மலை தொகுதியை தனக்காக உருவாக்கிக் கொடுத்ததும் அதை அன்றைய மஇகாவின் முன்னாள் தலைவர் துன் ச.சாமிவேலு அபகரித்துக் கொண்டதும், தன் கையை விட்டுப் போன தொகுதியை தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறுமாப்புமே ஆகும்.

கேமரன் மலை தொகுதியின் மீது தீராத காதல் கொண்டதன் விளைவாக டான்ஶ்ரீ கேவியஸ் ஆற்றிய களப்பணி அளவிட முடியாதது ஆகும்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னரே தொடங்கிய மக்கள் சேவையில் அத்தொகுதியே தனக்கே உரியதாக்கப்படும் என எண்ணிக் கொண்டிருந்த டான்ஶ்ரீ கேவியசின் எண்ணத்தில் பேரிடியை இறக்கியது மஇகா.

தன் கட்சி பிரதிநிதி ஒருவரை அத்தொகுதியின் வேட்பாளராக களமிறக்க 
மஇகா எத்தனித்தபோது டான்ஶ்ரீ கேவியசுக்கும், மஇகாவுக்கும் இடையே பனிப்போர் மூண்டது. இந்த பனிப்போரின் உச்சக்கட்டமாக கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கே என தீர்மானித்த தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் அதிரடி முடிவால் உருகுலைந்த டான்ஶ்ரீ கேவியசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கட்சி தலைமைத்துவ ‘அன்பர்கள்’ நம்பிக்கை துரோகிகளாக உருவெடுக்க துணிந்த நாடகமும் ஒருசேர அரங்கேறியது.

கேமரன் மலை தொகுதி கைவிட்டுப் போன நிலையில் ‘கேவியஸ் இனி அவ்வளவுதான். அவர் பின்னால் இருப்பதை தேமுவுக்கு விசுவாசியாய் மாறுவதே நமக்கு சிறப்பு’ என்ற சுயநலப்போக்கு சட்டப் போராட்டம் நடத்தி பிபிபி கட்சியை மீட்டெடுத்து அதற்கொரு அங்கீகாரமும் செல்வாக்கும் பெற்றுத் தந்த டான்ஶ்ரீ கேவியசையே கட்சியை நீக்கும் படலமாக விரிந்தது.

கட்சியை விட்டு நீக்குவதை விட நானே விலகிக் கொள்கிறேன் என தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியும்  அதை ஏற்க மறுத்த துரோக அணியினர், டான்ஶ்ரீ கேவியசை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தனர்.

உனக்குள்ளே மிருகம் உறங்கிவிட நினைக்கும்; எழுந்து அது நடந்தால் எரிமலையே வெடிக்கும்’ என்ற பாடல் வரியை போல் தான் உருவாக்கிய கட்சியை தானே அவமதிக்க விரும்பவில்லை என்ற அவரின் அமைதியை பரிசோதிக்க நினைத்தவர்களுக்கு ‘புயல் காற்றாய்’ சுழன்று வீசினார்.

14ஆவது பொதுத் தேர்தலினால் போட்டியிடும் வாய்ப்பை இழந்து, பண மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்த போதிலும் ‘வீழ்ந்தாலும் மீண்டும் எழுவேன்’ என சொல்லி மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தி மைபிபிபி கட்சியை தன் வசமாக்கிக் கொண்டார்.
எந்து துரோகத்தில் வீழ்த்த நினைத்தார்களோ அந்த துரோகத்தையே தனது படிகற்களாக்கி  கட்சி உறுப்பினர்களின் பேராதரவோடு மீண்டும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவராக உயர்ந்தார். மைபிபிபியையும் பிபிபி என உருமாற்றினார்.

அரசியலில் எனும் ஆடுகளத்தில் ஆடும் புலியும் மோதிக் கொள்ளும். இதில் சில நேரங்களில் குள்ளநரிகளும் எட்டிப் பார்க்கும். ஆட்டை வேட்டையாடுபவன் வேட்டையன். புலியை துரத்தியடிப்பவன் சத்ரியன். குள்ளநரிகளை வீழ்த்துபவனே சாணக்கியன். அவ்வகையில்  ஆடு (மஇகா), புலியை (தேமு) காட்டிலும் தன்னை சுற்றியிருந்த குள்ளநரிகளை (துரோக அணியினர்) வீழ்த்தியதில்தான் உங்களின் அரசியல் சாணக்கியத்தனம் விடிவெள்ளியாய் போற்றப்படுகிறது.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் டான்ஶ்ரீ கேவியசுக்கு ‘பாரதம்’ இணைய ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. #HBDTanSriKayveas

Saturday, 14 March 2020

இரண்டாவது முறை; பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்டார் அஸுமு

கோலாகங்சார்-
பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து பேரா மாநில ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய கூட்டணியின் (பெரிக்காத்தான் நேஷனல்) கூட்டணியின் மந்திரி பெசாராக டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு பதவியேற்றுக் கொண்டார்.
ஒரு தவணை ஆட்சியில் இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் சுல்தான் நஸ்ரின் ஷா டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலை புதிய மந்திரி பெசாராக நியமனம் செய்தார்.

Thursday, 12 March 2020

நிழலானது பிரதமர் பதவி; நிஜமாகிறது எதிரணித் தலைவர்- அன்வாருக்கு வந்த சோதனை

ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கக்கூடும் என்ற பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவு தகர்க்கப்பட்ட நிலையில் இப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் வலம் வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் துன் மகாதீருக்கு அடுத்து அன்வாரே பிரதமராக வர வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் கடந்த மாதம் நிலவிய அரசியல் நெருக்கடில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் டான்ஶ்ரீ முஹிடினை பிரதமராக ஏற்றுக் கொண்ட தேசிய கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதனிடையே, மே 18ஆம் தேதி கூடவுள்ள மக்களவை கூட்டத் தொடரின்போது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு கலைந்து தற்போது எதிரணித் தலைவராய் மக்களவையில் டத்தோஶ்ரீ அன்வாரின் குரல் எதிரொலிக்கலாம்.

Wednesday, 11 March 2020

துரோகிகளை களையெடுக்குமா ப.கூட்டணி தலைமைத்துவம்?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மக்களின் அதிகாரத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 'துரோகிகளின்' சதிராட்டத்தாலேயே வீழ்த்தப்பட்டுள்ளது.

2018 மே 18ஆம் பெருவாரியான வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு நாட்டை ஆளும் அதிகாரத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்திடம் ஒப்படைத்தனர்,

ஆனால் பதவி மோகம், கட்சி தாவல், துரோகச் செயல் போன்ற நன்றி கெட்ட குணங்களாலேயே 21 மாத கால ஆட்சியில் பக்காத்தான் கூட்டணி வீழ்த்தப்பட்டது.

'அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது' எதிரியும் கிடையாது' என்பதற்கு தற்போதைய அரசியல் குளறுபடிகளே சான்றாக உள்ளன. யாரை தூற்றி, அவமானப்படுத்தி மக்களிடம் நஞ்சை விதைப்பதை போல் எதிரணியினரை தரம் தாழ்ந்து விமர்சித்து விட்டு இன்று பதவி சுகத்திற்காக அதே தரப்பினருடன் கைகோர்த்துள்ள இன்றைய தலைமைத்துவாதிகளை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பா கூட்டணி தற்போது இடம்பெற்றுள்ள கெ அடிலான், ஜசெக, அமானா ஆகிய கட்சிகள் தங்களுக்கு மத்தியிலே உலாவி கொண்டிருக்கும் 'கறுப்பு ஆடுகளை' களையெடுக்க வேண்டிய கட்டாய சூழலில் தள்ளப்பட்டுள்ளன.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டு கிடப்பது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல; மலேசியர்கள் காண துடித்த பெரும் கனவும் தான்.

தற்போது அமைந்துள்ள தேசிய கூட்டணியை வீழ்த்த முற்படும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் முதலில் தங்களை சுற்றியுள்ள துரோகிகளை களியெடுக்க வேண்டியது அவசியமாகும்.

துரோகிகளை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராடினாலும் வீழ்ச்சி அடைவது அவர்களாகவே தான் இருப்பார்கள்.
அடிமட்டம் வரை பாய்ந்துள்ள துரோகிகளை களையெடுக்கப்படாத வரை பிகேஆர் கட்சிக்கு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, ஜசெகவுக்கு ஆதி.சிவசுப்பிரமணியம், அமானாவுக்கு ஹஸ்னுல் ஸுல்கர்னைன் போன்றோர் உருவெடுத்துக் கொண்டுதான் இருப்பர்.

துரோகிகளை ஒழிக்காதவரை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடம் ஆட்சியை தூக்கிக் கொடுத்தாலும் அதனை கவிழ்க்க சில புல்லுருவிகள் வந்துக் கொண்டுதான் இருப்பர்.

குறைகளை சொல்லிக் கொண்டிருக்காமல் செயல்பட வாய்ப்பளிப்போம்- மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்  தலைமையிலான அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது அன்றைய மஇகாவின் தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் முழு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் பல தலைவர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் பதவி வகித்து வந்த நிலையில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகா இடம்பெற்றிருந்த தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

21 மாத கால ஆட்சியில் அங்கம் வகித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் பிளவுபட்டதன் விளைவாக புதிதாக தொடங்கப்பட்ட தேசிய கூட்டணியில் தேசிய  முன்னணி, பாஸ், பெர்சத்து போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவைப் பட்டியலில் டத்தோஶ்ரீ சரவணன் மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இந்த புதிய அமைச்சரவையில் ஒரு முழு அமைச்சர், ஒரு துணை அமைச்சர் பதவி மட்டுமே இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ம இகாவை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தின் பலனாக பெரும்பாலான ம இகா வேட்பாளர்கள் தோல்வி தழுவினர். அதில் தப்பித்தது சரவணனும்  டத்தோ எஸ்.சிவராஜ் மட்டுமே. பின்னர் கேமரன் மலையில் வெற்றி பெற்ற சிவராஜின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது.

மஇகாவின் சார்பில் ஒரேயொரு இந்தியர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் நிலையில் அந்த ஒருவருக்கு முழு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது சந்தோஷமான ஒன்றுதான்.

வீணே குறைகளை மட்டும் சுட்டி காட்டி கொண்டிருக்காமல் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பதவியில் டத்தோஶ்ரீ சரவணனின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது துன் வீ.தி.சம்பந்தன் அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத் தொகுதி சீராய்வு பணிகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீரமைப்பில் டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் மற்றொரு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ம இகாவுக்கு இரு அமைச்சர்கள் என்பது அப்போதே கிடைத்தது.

பின்னர் ஆதி.நாகப்பனும், துன் ச.சாமிவேலு ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமைத்துவத்தில் துன் சாமிவேலு மட்டும் ஒரே அமைச்சராகவும் இரு துணை அமைச்சர்களும் பதவி வகித்தனர். துன் மகாதீர் காலத்தில் இரு அமைச்சர்கள் பதவிக்கு கோரிக்கைக்கு விடுத்தும் பலனில்லை.

பின்னர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல், டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் முழு அமைச்சர்களாக பதவி வகித்தனர் என்பதெல்லாம் மஇகாவின் வரலாறு.

மஇகாவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் போது ஜசெகவுக்கு இரு முழு அமைச்சர்கள், பிகேஆர் கட்சிக்கு ஒருவர், துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் பிகேஆருக்கு ஏன் இரு முழு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை? என யாரும் கேள்வி எழுப்பவில்லை.

பொன்.வேதமூர்த்தி வழங்கப்பட்ட அமைச்சர் பதவிக்கூட இந்தியர்களின் ஆதரவை திரட்டியதாலும் ஹிண்ட்ராஃப் அமைப்பை வழிநடத்தியதாலும் மட்டுமே வழங்கப்பட்டது.


டத்தோஶ்ரீ சரவணன் அரசியலில் பரந்த அனுபவம் கொண்டவர். பல்வேறு அமைச்சுகளில் திறம்பட சேவையாற்றியுள்ளார். அவரின் பரந்த அரசியல் அனுபவம் நிச்சயம் புதிய கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்களுக்கு சாதகமான பலனை ஏற்படுத்தும்.

அதே வேளையில் புதிய கூட்டணி ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா விடுபட்டு போய்விடக்கூடாது எனும் நோக்கில் ம இகா சார்பில் டத்தோஶ்ரீ சரவணனை முன்மொழிந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கும் இவ்வேளையில் பாராட்டுகிறேன்.  தெரிவித்துக் கொள்வதாக மணிமாறன் குறிப்பிட்டார்.

ஓர் அமைச்சர் என்பது மட்டும் மஇகாவின் இலக்காக இருக்காது. துணை அமைச்சர் பதவிகளையும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கோரியிருப்பார். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒருவரை மட்டுமே பிரதிநிதியாய் கொண்டுள்ள நிலையில் பதவிக்கு அழுத்தம் கொடுப்பதை காட்டிலும் அந்த பதவியின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு ஆக்ககரமான திட்டங்களை செயல்படுத்த வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கலாம். எண்ணிக்கையை காட்டிலும் தரமான சேவையே மஇகாவின் இலக்காக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழிநடத்தலாம் என்று அவர் சொன்னார்.

ஒரேயொரு அமைச்சர் பதவி: மஇகாவுக்கு பலமா? பலவீனமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ள அமைச்சரவை பட்டியலில் மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது இந்திய சமுதாயத்தின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.

மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என மார்தட்டி கொள்ளும் மஇகாவுக்கு ஒரு முழு அமைச்சர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது நியாயமான ஒன்றா? எனும் கேள்வி எழுகிறது.

முந்தைய காலங்களில் ஒரு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும் இரு துணை அமைச்சர் பதவிகளாவது மஇகாவுக்கு வழங்கப்படும்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் கூட மஇகா இரு முழு அமைச்சர்களையும் இரு துணை அமைச்சர்களையும் பெற்றிருந்தது.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசில் இந்தியர்களை பிரதிநிதித்து 4 முழு அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் பதவி வகித்தனர்.


  1. இந்நிலையில் நேற்று  பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் அறிவித்துள்ள அமைச்சரவையில் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.


ஆக்ககரமான நடவடிக்கைகளின் வழி கட்சியை வலுபடுத்தி இழந்த இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற துடிக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்திலான மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி பலம் சேர்க்குமா? என்ற கேள்வி எழுகிறது.

புதிய கூட்டணி அரசாங்கத்தில் மஇகாவுக்கு குறைந்தது ஒரு முழு அமைச்சர், இரு துணை அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிரதமரின் அறிவிப்பு இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 3 ஆண்டுகளில் பொதுத் தேர்தலில் களமிறங்கி இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற வேண்டிய மஇகாவுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி பலமா? பலவீனமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, 10 March 2020

பக்காத்தான் கூட்டணிக்கு 'ராசியில்லாத' பேரா மாநிலம்

ரா.தங்கமணி


ஈப்போ-
பேரா மாநிலத்தை ஆட்சி புரிய பக்காத்தான்  கூட்டணிக்கு 'அதிர்ஷ்டம்' இல்லை என்ற நிலையே தற்போது மீண்டும் நிலவியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சுனாமியில் பக்காத்தான் ராக்யாட் (மக்கள் கூட்டணி) கூட்டணியிடம் வீழ்ந்த பேரா மாநில அரசு 9 மாத ஆட்சிக்கு பின்னர் மீண்டும் தேசிய முன்னணி வசமானது.

தொடர்ந்து 2013ஆம் ஆண்டு தேர்தலில் மாநில அரசை தேமு தக்கவைத்துக் கொண்ட நிலையில் 2018ஆம் ஆண்டு தேர்தலில்  பேரா மாநில அரசு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசமானது.

தற்போது 21 மாத கால ஆட்சிக்கு பின்னர் பக்காத்தான் ஹராப்பான் (நம்பிக்கைக் கூட்டணி) கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு தற்போது பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

இருமுறை மக்கள் பலத்தால் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைத்த போதிலும்  அரசியல் சூழல் காரணமாக அக்கூட்டணி ஒரு தவணை முழுவதும் ஆட்சி அமைக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Monday, 9 March 2020

மஇகாவுக்கு ஒரு அமைச்சர், இரு துணை அமைச்சர் பதவிகள்?

கோலாலம்பூர்-
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கவுள்ள அமைச்சரவை பட்டியலில் மஇகாவை பிரதிநிதித்து மூவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

புதிய அமைச்சரவையில் ஒரு முழு அமைச்சர், இரு துணை அமைச்சர் பதவிகள் மஇகாவுக்கு வழங்கப்படவுள்ளன.

தாப்பா நாடளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், செனட்டர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ ஆனந்தன் ஆகியோர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் மூலம் புதிய கூட்டணியாக அமைந்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் மஇகாவும் பிரதிநிதித்துவம் பெறுவதை இது உறுதிப்படுத்துகிறது.

Friday, 28 February 2020

புதிய பிரதமரா? பொதுத் தேர்தலா?- மார்ச் 2இல் முடிவு

கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து புதிய பிரதமர்? யார் என்ற கேள்விக்கு மார்ச் 2இல் விடை கிடைத்து விடும்.

ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையை நிரூபிக்க எந்த கட்சிக்கும் போதிய ஆதரவு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

யாருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க மார்ச் 3இல் சிறப்பு மக்களவை கூட்டத்தை நடத்துவதற்கு இடைக்கால பிரதமர் துன் மகாதீர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமராக முன்மொழியப்படுபவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைப்பதை விட வேறு வழி இல்லை.


Wednesday, 26 February 2020

மலேசிய அரசியல் நெருக்கடியில் வைரலாகும் நடிகர் சீமான்?

கோலாலம்பூர்-
நெருக்கடி சூழலை நொடி பொழுதில் சந்தித்துக் கொண்டிருக்கும் மலேசியாவின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்றவ் கவலை மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
நாட்டை ஆளக்கூடிய தலைவர்களின் இன்றைய 'கையாலாகத்தனத்தின்' மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் நாட்டின் பொதுத் தேர்தலில் எடுத்த முடிவு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தங்களை அதிருப்தியை வெளிகாட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் மலேசிய இந்தியகளின் சமூக ஊடகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்.
இந்தியாவின் அரசியல் போக்கை கண்டித்து அவர் பேசிய காணொளி ஒன்று இன்று மலேசிய இந்தியர்களின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

'பைத்தியக்கார பயலுங்ககிட்ட மாட்டி இந்த நாடும் மக்களும் படுற பாடு..'  என தொடங்கும் சீமானின் காணொளியை இன்றைய இளையோர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

தங்களின் ஆதங்கத்தை இப்படியாவது வெளிபடுத்துகிறார்களே?

மக்களின் ஜனநாயக நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது- டான்ஶ்ரீ கேவியஸ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டின் அரசியல் பரபரப்பான அரசியல் நெருக்கடியில் ஜனநாயகத்தின்  மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது மிகப் பெரிய நம்பிக்கையுடன் 'நம்பிக்கைக் கூட்டணியை' மக்கள் ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால் இன்று பதவி சுகம், சுயநல அரசியல் காரணங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமை அத்துமீறப்பட்டுள்ளது.

நிலையான ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாமல் தடுமாறும் இன்றைய இக்கட்டான சூழல் மக்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைத்து விடும்.

ஆனால் அரசியல் நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள சூழல் நாட்டின்
பொருளாதாரத்தை பாதிப்புறச் செய்வதோடு அதன் தாக்கம் எளிய மக்களையே வெகுவாக பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உரிய தீர்வு கண்டு மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கச் செய்யாத வகையிலான அரசாங்கம் மீண்டும் அமைய வேண்டும் என்று டான்ஶ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்த வழி- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானை கவிழ்த்து  விட்டு புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் நடவடிக்கையினால் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் படுமோசமான சூழலை எட்டியுள்ளது.

இந்த சூழலை தவிர்க்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்து வழியாகும் என்று அவர் சொன்னார்.

மக்கள் விரும்பும் அணியே ஆட்சியமைக்க வேண்டும்

ஈப்போ-
நாட்டின் அரசியல் பரபரப்பான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்கள் விரும்பும் அணியே மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் குறிப்பிட்டார்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஈராண்டுகளுக்குள்ளாகவே சிதறி விட்டது.

இப்போது மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள்? எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் கட்சி தாவி கூட்டணியில் இடம்பெறுவதை காட்டிலும் மக்களிடமே தீர்ப்பு வழங்கப்படுவது சிறந்ததாகும்.

தங்களை ஆளக்கூடிய அரசாங்கம் யார்? என்ற முடிவை மக்கள் தீர்மானிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும்.

பொதுத் தேர்தலே சிறந்த வழி என்று மஇகாவின் தேசியத் தலைவர் கூறியுள்ள கருத்தே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வாகும். இல்லையேல் இந்த நெருக்கடி தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கும் என்று வீரன் மேலும் சொன்னார்.

Tuesday, 25 February 2020

'ஒரு விரல் புரட்சி' கேலிக்கூத்தானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
ஜனநாயக கடமையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரி தூண்டுதலில் ஒட்டுமொத்த மலேசியர்களின் மனதிலும் கொளுந்து விட்டெரிந்த 'மாற்றம்' எனும் தீ இன்று யாரை சுட்டெரிக்க போகிறது என்ற கேள்வியே அனைவரின் மனதிலும் நிழலாடி கொண்டிருக்கிறது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து 60 ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முடிவு கட்டி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை அரியணையில் ஏற்றினர்.

மக்கள் நலன், நாட்டின் வளப்பம், பொருளாதார மேம்பாடு என சரியான பாதையில் பயணிக்க வேண்டிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், பதவி சுகத்துக்கு அடிமையானதன் விளைவே இன்றைய அரசியல் அதிரடி திருப்பங்கள் ஆகும்.
மக்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே காற்றில் பறக்கவிட்ட போது மெளனம் காத்ததன் பலனை தான் இன்று அன்வார் & கோ அணியினர் (பிகேஆர், ஜசெக, அமானா) அறுவடை செய்கின்றனர்.

புத்தகமாக அச்சிடப்பட்டு மக்களிடம் பகிரங்கமாக கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளையை 'அது புனிதநூல் அல்ல' என்று துன் மகாதீர்  கூறியபோதே பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வாக்குறுதியை அள்ளி தெளிக்கும்போது  சுதாரித்துக கொள்ள வேண்டாமா?
அன்று வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கும்போதே கண்டனத்தை பதிவு செய்திருந்தால் இன்று துணிச்சலாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டிருக்க மாட்டார்.

ஆனால், பிரதமர் பதவியை மட்டுமே குறிக்கோளகக் கொண்டு வாயை மூடி மெளனம் காத்ததன் விளைவு ஆட்சியை இழந்நு  நிற்கும் பரிதாப சூழலுக்கு அன்வார் & கோ தள்ளப்பட்டுள்ளது.
மக்களை மடையர்களாக நினைத்து தான் போடுவதுதான் 'சரியான கணக்கு' என நினைத்தவர்களுக்கு 'உங்களுக்கு எல்லாம் அப்பன் நான் இருக்கேன்டா' என சொல்லி அடித்திருக்கும் துன் மகாதீரின் அரசியல் சாணக்கியத்தன(துரோக)த்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டது மக்களின் 'ஒரு விரல் புரட்சியும் ஜனநாயக கடப்பாடும்' தான்.