Wednesday 31 March 2021

சுங்கை சிப்புட் தொகுதியை கோருவதா? மணிமாறன் ஆவேசம்

ரா.தங்கமணி 

சுங்கை சிப்புட் -

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க வேணடும் என்ற. அம்னோ புத்ரி பிரிவின் கோரிக்கை அறிவிலித்தனமானது எனபதோடு அதனை சுங்கை சிப்புட் தொகுதி மஇகா கடுமையாக கருதுவதாகவும் அதன் செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகும். மஇகாவின் முன்னாள் தலைவர்களான துன் வீ.தி. சம்பந்தன், துன் ச. சாமிவேலு ஆகியோர் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பிர்களாக பதவி வகித்து உள்ளனர்.

தற்போது இத்தொகுதியை மஇகா மீண்டும் மீட்டெடுப்பதற்கு ஏதுவாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனே நேரடி களத்தில் இறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது இத்தொகுதியின் வேட்பாளர் நான் தான் என்பதை பலமுறை கூறியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க அமனோவின் கோரிக்கை தேமுவின் உறுப்புக் கட்சிகளான அம்னோ- மஇகா இடையேயான நல்லுறவை பாதிக்கச் செய்யலாம்.

இவ்விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் தேமு தலைவர் டத்தோ சூல்கிப்ளியிடம் விளக்கம் பெற்றதாக கூறிய சுங்கை சிப்புட் தேமு செயலவை உறுப்பினருமான மணிமாறன், தொகுதி தேமு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tuesday 30 March 2021

சுங்கை சிப்புட் தொகுதியை விட்டுக் கொடுங்கள் - அம்னோ புத்ரி கோரிக்கை

சுங்கை சிப்புட்-

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டுள்ள மஇகா, வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கும்படி சுங்கை சிப்புட்  அம்னோ புத்ரி  பிரிவுத் தலைவி நோராசுரா அப்துல் கரீம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த இத்தொகுதி 2008ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி வசமாகியுள்ளது.

2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை டாக்டர் மைக்கல் ஜெயகுமாரும் 2018 முதல் எஸ்.கேசவனும் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தனர்.

Sunday 28 March 2021

சித்திரையே தமிழ் புத்தாண்டு- மலேசிய இந்து இளைஞர் பேரவை உறுதி

கோலாலம்பூர்-

அண்மையில் நாட்டில் பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு, பள்ளிகளில் இறை மறுப்புக் கொள்கை திணிப்புக் குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் மிகவும் வருத்தமளிக்கின்றன என்று மலேசிய இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பலரால் ஊடகங்களில் செய்யப்பட்ட அறிவிப்புகளாலும் அவற்றால் எழுந்துள்ள கருத்து மோதல்களாலும் இந்த நாட்டில் உள்ள இந்தியர்கள் குழப்பமும் வருத்தமும் அடைந்துள்ளனர். இந்தச் சர்ச்சைகளைக் குறித்து மலேசிய இந்து இளைஞர் பேரவையின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.


தமிழர் மரபில் நல்ல விளைச்சலைத் தந்த இறை ஆற்றலுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் விழா சமயத்தோடு இரண்டறக் கலந்த  விழாவே ஆகும். நம் சமயத்தில் சாஸ்திரங்கள்படி ஒரு செயலைத் தொடங்கும் முன் நல்ல நேரத்தைப் பார்ப்பது வழக்கம். அதே போல், பொங்கல் நம் சமயம் சார்ந்த விழா என்பதால் பொங்கல் வைக்க தகுந்த நேரத்தைப் பார்த்துப் பொங்கல் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, பொங்கல் விழாவை 4 நாட்கள் விமரியாசையாகக் கொண்டாடும் நாம், பொங்களுக்கு முதல் நாளில் பழைய பொருட்களை எரித்துப் போகிப் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். 

ஆனால், தொடக்க காலத்தில் பயிர்கள் செழிக்க மழையைத் தந்த மருத நில தெய்வமான இந்திரனுக்கு நன்றி சொல்வதற்காகப் பூஜைகள் செய்து கொண்டாடப்பட்டது.  நாளடைவில் இப்பண்டிகை மக்களால் மறைக்கப்பட்டுப் பழைய பொருட்களை மட்டும் எரிக்கின்ற விழாவாக மாறியுள்ளது. தை முதல் நாளில் கொண்டாடப்படும் சூரிய பொங்கலில், பயிர்கள் செழித்து வளர ஒளியைத் தந்த சூரிய தேவனுக்கு மக்கள் தாங்கள் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து பெறப்பட்ட அரிசியைக் கொண்டு பொங்கலிட்டுப் படைப்பார். பொங்களின் இரண்டாம் நாள், உழவரோடு வயலை உழுவதோடு பாலையும் தந்து வாழ்வளிக்கும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோமாதா பூஜை செய்து மாட்டுப் பொங்கலைக் கொண்டடுகிறோம். 

தொடர்ந்து, பொங்கலின் 3வது நாளான கன்னிப் பொங்கலில் அல்லது காணும் பொங்கலில் தங்களுக்கு நல்ல கண்வன் அமைய வேண்டும் என பெண்கள் கார்த்தியாயணி தேவியை வேண்டி விரதமிருந்து பறவைகளுக்கு உணவைத் தானமாகக் தருவார்கள். இவ்வாறு பொங்கல் விழா நான்கு நாட்களாக இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்து பொங்கல் சமயம் சார்ந்த விழாதான் என்று தெளிவாகத் தெரிகிறது. எனவே, பொங்கல் சமய விழாவா அல்லது பண்பாட்டு விழாவா என்பதில் சந்தேகம் கொள்ளவேண்டாம். பொங்கல் சமய விழாதான் என்று மலேசிய இந்து இளைஞர் பேரவை திட்டவட்டமாகக் கூறிக்கொள்வதாக அதன் தலைவர் அருண்குமார் செங்கோடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்ப்புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா எனும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தமிழர்கள் பூமியின் மையக் கோட்டில் சூரிய ஒளி படும் நிலையிலிருந்து (equinox) வடக்கு நோக்கிச் செல்வதையும் பின்னர் தெற்கு நோக்கிச் செல்வதையும் வைத்தே ஆறு பருவங்களை நிர்ணயித்தனர்.  ஆறு பருவங்களுள் முதல் பருவமாகச் சித்திரையில் வரும் இளவேனில் பருவத்தில்தான் தான் இலைகள் துளிர் விடும், காய்கள் காய்க்கும் இதைப் புதிய தொடக்கத்தின் வெளிப்பாடாகப் பார்த்த அன்றைய தமிழர்கள் சித்திரை முதல் நாளேயே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். 

ஜோதிடத்திலும். சூரியன் மேஷ இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். சித்திரையில் பிறக்கின்ற மேஷம் தான் இராசிகளில் முதலாவதாக இருக்கிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் வரும் “திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாகவிண்ணூர்பு திரிதரும் வீங்குசெல்ல மண்டிலத்து” எனும் வரிகள் முதல் இராசியான மேஷ இரசியில்  சூரியன் நுழைவதே சித்திரை ஒன்று என்பதற்கான சான்றாகும். பாரதிதாசன் சொன்னதாகக் கூறப்படும் ‘நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு’ எனும் கவிதை வரிகள் அடங்கியுள்ள முழுப்பாடல் பாரதிதாசன் எந்தக் கவிதை தொகுதிகளிலும் காணக் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் பாரதிதாசன் கூறியதாகச் சொல்வது எவ்வாறு சாத்தியமாகும். 

ஆகவே, நம் முன்னோர்களான பழந்தமிழர் கணித்த வானியல் அடிப்படையிலான ஆண்டின் தொடக்கமான சித்திரை ஒன்று தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தெளிவாகிறது.

மேலும், நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்கு இறைமறுப்புக் கொள்கைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்புச் செய்து அக்கொள்கையை மாணவர்களிடையே திணிப்பது கண்டனத்துக்குரியது. இதன் வழி ஆரம்ப பள்ளிகளிலும் உயர்கல்விக்கூடங்களிலும் இறைமறுப்பு கொள்கைகள் பரவி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறான நடவடிக்கை மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான ஒரு செயலாகும். இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் தேசிய கோட்பாட்டை முன்னிறுத்தி நம் நாடு இயங்குகிறது. 

அதோடு தேசிய கல்வித் தத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல மலேசிய கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில்தான் செயல்படுகிறது. இந்த தேசிய கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் உருவாகும் மாணவர்கள், அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல் ஆகிய கூறுகளில் சமன்நிலையும் இயைபும் பெற்ற மாந்தனாகத் திகழ்வர் என்பதே திண்ணம். கல்விக்கூடகங்களில் மட்டுமல்லாது தற்போது சமூக ஊடகங்களும் இறைமறுப்புக் கொள்கையைப் பறைசாற்றி வருகின்றன. 

உலகின் மூத்த சமயங்களுள் முன்மாதிரியாக திகழ்வது இந்து சமயமே. இறை நம்பிக்கையிலும் வழிப்பாட்டு முறையிலும் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நம்மிடையே இறை நம்பிக்கையை இழிவு செய்யும் ஊடுருவல் ஆலமரத்தை விஷம் வைத்து கொல்வதற்குச் சமமாகும். எப்படி ஆலமரத்திற்கு வைக்கப்பட்ட விஷம் சிறுக சிறுக வேரிலிருந்து கிளை, பூ, பழம் என்று எல்லாப் பகுதிகளுக்கும் பரவி ஆலமரத்தைச் சாய்த்து விடுகிறதோ அதே போல் இந்த இறைமறுப்புக் கொள்கை சிறுக சிறுக இந்துக்களிடையே பரவி சமய அடையாளத்தையே அழித்துவிடும். இறைமறுப்புக் கொள்கை பரப்புரையாளர்கள் இவ்வாறான செயல்களைத் தவிர்த்துவிடுமாறு மலேசிய இந்து இளைஞர் பேரவை எச்சரிக்கிறது.

நம்மிடையே ஏற்படும் மொழி, சமயம், சமூகம் குறித்த கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றுகூடி தனித்து கலந்தாலோசிக்க வேண்டும் என மலேசிய இந்து இளைஞர் பேரவை வலியுறுத்துகிறது. முகநூலில் பதிவு செய்வதாலும் காணொலி வழி பொது ஊடகங்களில் கருத்துக்களைப் பரவச் செய்வதாலும் பிற இனத்தவரால் நாம் எள்ளி நகையாடப்படுவோம். நம்மிடையே ஒற்றுமை இல்லாத போது நம் இனத்தவரின் நலனுக்காகக் கேள்வி கேட்பதும் குரல் எழுப்புவதும் முயல் கொம்பே.

எனவே, இந்திய இளைஞர்களைச் சமூக வளச்சியாளர்களாக உருமாற்ற அனைவரும் ஒன்றாக செயல்படுவோம். நம் இனத்தவரின் ஒற்றுமையே… நம் பலம் என்று  அருண்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday 18 March 2021

பேரம் பேசப்பட்ட எம்பி-க்கள் வாய் மூடி கிடந்தது ஏன்?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும்படி நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது புத்ராஜெயாவை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் பெர்சத்து, தேசிய முன்னணி, பாஸ் ஆகியவற்றின் கூட்டணியிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு பெரிக்காத்தான் நேஷனல அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக சில அம்னோ தலைவர்கள் கூறியிருந்த நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெரும்பான்மை கேள்விக்குறியாக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசு, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் பேரம் பேசப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக பதவி வகித்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வந்த நிலையில் அண்மையில் பிகேஆரில் இருந்து விலகி பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான நிலையில் அந்த குற்றச்சாட்டுகளும் உண்மையாக இருக்கலாம் என்ற ஆருடமும் வலுத்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் சந்தித்த டத்தோஶ்ரீ அன்வார், 5,6 எதிர்க்கட்சி எம்பி-க்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க பேரம் பேசப்படுவதாகவும் நெருக்குதல் கொடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

உண்மையில் எதிர்க்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘பேரம்’ பேசப்பட்டார்கள் என்றால் ஏன் அது குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மற்றொருவர்தான் வாய் திறக்க வேண்டுமானால் இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்களா மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

தவறு நடப்பது தெரிந்தால் அதற்காக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே தங்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிக்கு குரல் கொடுக்காமல்ல் போனால் சாமானிய மக்களின் நிலை என்னவாவது?


Tuesday 16 March 2021

பிகேஆருடன் அம்னோ ஒத்துழைப்பு?- தகவலை வெளியிடுகிறாரா அன்வார்?

 கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவுடன் ஒத்துழைப்பது தொடர்பான தகவலை பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெர்சத்து கட்சியின் மீது அம்னோவும் பிகேஆரும் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் வரும் தேர்தலில் பெர்சத்து ஓரம்கட்ட இவ்விரு கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

அதன் அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஆயுத்தமாகி வருவதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

இன்று 4.30 மணியளவில் டத்தோஶ்ரீ அன்வார் வெளியிடும் தகவல் மலேசிய அரசியல் பிரளயத்தை ஏற்படுத்துமா?


அம்னோ தலைவருக்கு மஇகா நெருக்குதலா?; உண்மையில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

அம்னோ தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஜமிடி  பதவி விலக மஇகா நெருக்குதல் அளிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.


அம்னோவின் உட்கட்சி விவகாரங்களில் மஇகா என்றுமே தலையிட்டது கிடையாது. அம்னோவின் தலைவர் யார் என்பதை அக்கட்சியின் பேராளர்களும் உறுப்பினர்களுமே முடிவே செய்ய வேண்டுமே தவிர மஇகா அல்ல.

அம்னோவின் தலைவராக யார் வந்தாலும் மஇகா அவரை ஏற்றுக் கொள்ளும். அம்னோவுக்கும் மஇகாவுக்கும் 60 ஆண்டுகால நட்புறவு நீடித்து வருகிறது. அம்னோவுக்கு புதிய தலைவர் வேண்டுமா? வேண்டாமா? அக்கட்சியே முடிவு செய்யட்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

பெரிக்காதான் நேஷனலுக்கு ஆதரவு; தேமுவை கைவிட மாட்டோம்- மஇகா உறுதி

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்- 

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் தேசிய முன்னணியை ஒருபோதும் மஇகா கைவிடாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அம்னோ, வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சியை ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ள நிலையில் மஇகா நடப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.

நடப்பு அரசாங்கத்தில் மஇகா துணைத் தலைவர் அமைச்சராக பதவி வகிக்கிறார். அத்தகைய சூழலில் நடப்பு அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவு அளிக்காமல் இருக்க முடியும்?

பதவி மட்டும் வேண்டும். ஆனால் ஆதரவு அளிக்கக்கூடாதா? என்று நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவை உறுப்பினர் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளராக டத்தோ இளங்கோ நியமனம்

 ரா.தங்கமணி

ஈப்போ-

பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளராக பேரா மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பேரா மாநிலத்தில் ஆட்சி அமைத்தபோது இந்தியர்களுக்கான நியமனப் பதவி குறித்த எதிர்பார்ப்பு நிலவியது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் தேசிய முன்னணி அங்கம் வகிப்பதால் அதில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு ஏதேனும் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும் அனறைய மாநில மந்திரி பெசார் டத்தோ அஹ்மாட் பைசால் அஸுமு மஇகாவை  ஓரங்கட்டி வந்த நிலையில் இந்தியர்களுக்கு நானே பிரதிநிதி, அவர்களின் பிரச்சினையை நேரடியாக நானே கவனிப்பேன் என்று அறிக்கை விடுத்தார்.

இதனிடையே, டத்தோ பைசால் அஸுமு மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் பேரா மாநில அம்னோ தலைவர் டத்தோ சரானி முகமட் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றப் பின்னர் ம இகாவுக்கு நியமனப் பதவி வழங்கப்படும் என்று கணிக்கப்பட்டது.

அதன்படி, டத்தோ இளங்கோவை சிறப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார் டத்தோ சரானி.

இந்த நியமனப் பதவி பேரா  மஇகாவுக்கு  புது தெம்பை அளிப்பதாகவும் இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்ற  மஇகாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

Sunday 14 March 2021

தாமான் ஶ்ரீ மூடாவில் நவீன சந்தை- மந்திரி பெசார் திறந்து வைத்தார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தாமான் ஶ்ரீ மூடா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன சந்தையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

300 வர்த்தக இடங்களை கொண்டுள்ள இந்த புதிய சந்தையில் உலர், ஈரமான பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களும் விற்பனை செய்யப்படும்.

தற்போது தற்காலிகமாக சில வர்த்தக மையங்கள் செயலப்டுகின்றன. இன்னும் அதிகமான வர்த்தகங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொள்ளும் என்று அமிருடின் சாரி குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சந்தையில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியர்கள் முன்வர வேண்டும்  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பாதிப்பினால் பெரும்பாலானவர்கள் தங்களது தொழிலை இழந்து தவிக்கும் நிலையில் வர்த்தகத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Saturday 13 March 2021

பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார் சேவியர் ஜெயகுமார்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர், அக்கட்சியின் உறுப்பினர் பதவிகளிலிருந்து டாக்டர் சேவியர் ஜெயகுமார் விலகினார்.


கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் சேவியர் ஜெயகுமார் தன்னை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்துள்ளதோடு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு தரவிருப்பதாக சமூக வலைதளத்தில் உலா வரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நீர்,நில, இயற்கை வள அமைச்சராக சேவியர் ஜெயகுமார் பதவி வகித்தார்.

அமைச்சராக பதவி வகித்தபோது அவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு அணமைய காலமாக உலா வந்து கொண்டிருந்தது.

ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில் சேவியர் ஜெயகுமாரின் உதவியாளர் என கூறப்படும் பேரா பிகேஆரைச் சேர்ந்த தினகரன், சேவியரின் உதவியாளர்  உதயசூரியன் உட்பட சிலரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்தது.

சேவியர் ஜெயகுமார் இந்த பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Thursday 11 March 2021

சுமை ஏற்படுத்தாத வகையில் சொக்சோ சந்தா கட்டணம் உயர்த்தப்படலாம்- டத்தோஶ்ரீ சரவணன்

புத்ராஜெயா- 

மக்களுக்கு சுமை இல்லாத வகையில் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பான சொக்சோ சந்தா தொகை அதிகரிப்பதற்கு மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கடந்த 1971ஆம் ஆண்டில் சொக்சோ அமைப்பு நிறுவப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகையே இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சொக்சோ சந்தா தொகை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு  வருகிறது. இது அனைத்துத் துறைகளையும் சார்ந்த தொழிலாளர்களையும் உட்படுத்தியதாக அமைந்திருக்கும் என்று மனிதவள அமைச்சுக்கும் கூட்டுறவு, தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

Tuesday 9 March 2021

முறைகேடுகள் ஏதுமின்றி சேவையாற்றுங்கள்- இந்திய சமூகத் தலைவர்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு மாநில அரசு வழிவகுத்து வருகிறது என்பதற்கு அடையாளமாக 50 பேர் இந்திய சமூகத் தலைவர்களாக (Ketua Komuniti India) நியமனம் செய்யப்பட்டதற்கான நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக் கொண்டனர்.

மாநில அரசு செயலகத்திலுள்ள ஜுப்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக சமூகத் தலைவர்களை நியமனம் செய்துள்ள  முதல் மாநிலமாக சிலாங்கூர்  திகழ்கிறது. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இத்தகைய நியமனங்கள் செய்யப்படுகின்றன.

இந்திய சமூகத் தலைவர்களின் வாயிலாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகநலப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.

அதோடு, இந்திய சமூகத் தலைவர்களுக்காக ஒதுக்கப்படும் மானியங்களை முறையாக செலவழிக்க வேண்டும்  எனவும் எவ்வித முறைகேடுகளும் நிகழா வண்ணம் தங்களின் நடவடிக்கைகள் திகழ்ந்திட வேண்டும் என்று இந்திய சமூகத் தலைவர்களை கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளின் மூலம் 62 பேர் இந்திய சமூகத் தலைவர்களாக நியமனம் செய்யப்படவிருக்கின்றனர். அதன் முதற்கட்டமாக இன்று 50 பேர் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜும் உடன் கலந்து கொண்டார்.


Monday 8 March 2021

தூற்றப்பட்டவர்களாலேயே 'போற்றப்பட்ட' அரசியல் சாதுரியன் துன் சாமிவேலு

 எழுத்துரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய அரசியல் தடத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகும். மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி அமைச்சர்களாகவும் தங்களது சேவையை வழங்கியவர்கள்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் துன் சம்பந்தனுக்கு பிறகு  1974ஆம் ஆண்டு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தல் வரை நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையை தக்கவைத்துக் கொண்டார்.

மஇகாவின் தேசியத் தலைவராக 1979ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் 2010ஆம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலிடம் அப்பதவியை ஒப்படைக்கும் வரை மஇகாவின் தேசியத் தலைவராக பதவி வகித்த பெருமையும் துன் சாமிவேலுவுக்கு உண்டு.

'சிங்கத்தின் கர்ஜனையாக' துன் சாமிவேலுவின் கணீர் குரல் இந்திய சமுதாயத்தில் மட்டுமின்றி அமைச்சரவையிலும் எதிரொலித்தது; அவரது செயல்பாடுகளும் அவ்வாறே அமைந்திருந்தன. 

துன் மகாதீர் நாட்டின் 4ஆவது பிரதமராக பதவி வகித்தபோது அவரது அமைச்சரவையில் நீண்ட காலமாக பதவி வகித்த துன் சாமிவேலு, இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக குரல் கொடுக்க தயங்காதவராகவே திகழ்ந்தார்.

துன் மகாதீர் அமைச்சரவையில் அவர் எடுப்பதுதான்  முடிவு, அதை மீறி எதையும் செய்ய முடியாது என்ற நிதர்சனமான உண்மை நாட்டின் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் துன் மகாதீர் 7ஆவது பிரதமராக பதவி வகித்தபோது துன் சாமிவேலுவை தூற்றிய அன்றைய எதிர்க்கட்சியாக திகழ்ந்த, 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கப் பிரதிநிதியாக திகழ்ந்த அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் உணர்ந்து கொண்டனர்.

அத்தகைய சர்வதிகார போக்குடைய துன் மகாதீருடன் அமைச்சராக பணியாற்றி அதே சமயம் இந்திய சமுதாயத்தின் தேவைகளான தமிழ்ப்பள்ளிக்கூடம், வீட்டுடைமை, பொருளாதார மேம்பாடு, சமூகநலன் என பல நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட துன் சாமிவேலுவை 12ஆவது பொதுத் தேர்தலில் தோற்கடிக்கச் செய்தது சுங்கை சிப்புட் மக்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு பேரிழப்புதான். 

துன் சாமிவேலு மஇகாவின் தலைவராக பதவி காலத்தில் தோல்வியின்  அடையாளச் சின்னமாக கருதப்படுவது மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் மட்டுமே. ஆனால் அதையும் தாண்டி டேஃப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்ஐஇடி கல்வி கடனுதவி திட்டம், கேபிஜே கூட்டுறவு கழகம் போன்ற வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்துள்ளதை யாரும் மறக்க முடியாது.

'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி நம் வழக்கத்தில் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர்தான் துன் சாமிவேலு. 

தான் பதவியில் இருந்தபோது தூற்றப்பட்டவர்களாலேயே 'இவர் பதவியில் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்ல' என சொல்ல வைத்த அரசியல் சாதுரியனாக திகழ்ந்த துன் சாமிவேலுவின் புகழ் தலைமுறை தாண்டியும் வாழும்.

இன்று தனது 85ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் துன் சாமிவேலு அவர்கள் உடல் நல ஆரோக்கியத்துடன் என்றும் திகழ்ந்திட வேண்டும் என்று 'மைபாரதம்' இணைய ஊடகம் வாழ்த்தி வணங்குகிறது. வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம்.

Friday 5 March 2021

வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஆதி.சிவசுப்பிரமணியம்

 ரா.தங்கமணி

ஈப்போ-

பேரா ஜசெகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தற்போது பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் துரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பவுல் யோங்கும் பெர்சத்து கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார்.

கடந்தாண்டு பேரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது ஜசெகவிலிருந்து விலகி சுயேட்சை வேட்பாளராக இவ்விருவரும் அறிவித்துக் கொண்டனர்.

இதனிடையே கடந்த மாதம் கெராக்கான் கட்சியின் இணையவிருப்பதாக சிவசுப்பிரமணியம்  அறிவித்தார். ஆனால் தற்போது இவ்விருவரும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளதாக பேரா பெர்சத்து கட்சியின் செயலாளர் ஸைனால் ஃபவ்ஸி பஹாருடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிவசுப்பிரமணியம் ஈப்போ பாராட் பெர்சத்து உறுப்பினராகவும் பவுல் யோங் பத்துகாஜா பெர்சத்து உறுப்பினராகவும் இருந்து வருவார்கள் என்று அவர் சொன்னார்.

மேலும், சிவசுப்பிரமணியமும் பவுல் யோங்கும் கூட்டு உறுப்பினர்கள் எனும் அடிப்படையில் பெர்சத்து கட்சியில் வாக்களிக்கும் உரிமை இல்லை என அக்கட்சியின்  விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஜசெகவில் இருந்தபோது  பலரின் வாக்குகளை பெற்று பேரா ஜசெகவில் சக்தி வாய்ந்தவராக திகழ்ந்த சிவசுப்பிரமணியம் இன்று பெர்சத்து கட்சியில் இணைந்து வாக்களிக்கும் உரிமையை கூட இழந்திருப்பது காலக்கொடுமைதான்...!

Thursday 4 March 2021

பாலத்தை மோதிய லோரி ஓட்டுனர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்- போலீஸ்

பெட்டாலிங் ஜெயா- 

சுங்கை பீசி உலு கிளாங் நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்ட சம்பவம் தொடர்பில் அந்த பாலத்தை மோதி விபத்தை ஏற்படுத்திய லோரி ஓட்டுனர் ஷாபு வகை போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்து விசாரணை பிரிவுத் தலைவர் சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் விபத்துக்குள்ளான மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு நிலையில்  எவ்வித காயங்களும் ஏற்படாத லோரி ஓட்டுனர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

டாங் வாங்கி காவல் நிலையத்தில் லோரி ஓட்டுனர் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

அம்பாங்கிலிருந்து டிபிஎஸ் நோக்கி செல்லும் எம்ஆர்ஆர்2 நெடுஞ்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் ஒன்றை லோரி மோதியதில் அதில் தொழிற்சாலை வேன் சிக்கிக் கொண்டது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதோடு மூவர் படுகாயம் அடைந்தனர்.



Wednesday 3 March 2021

15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்ற முடியுமா? ஜுலாவ் எம்பி

கோலாலம்பூர்- 

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவினால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்ற முடியாது என்று பிகேஆர்-இல் இருந்து விலகிய ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லெர்ரி  தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என உணர்வீர்களானால் நான் மீண்டும் பிகேஆரிலேயே இருந்திருப்பேன்? ஆனால் பக்காத்தான் ஹராப்பானிலிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு புத்ராஜெயாவை கைப்பற்ற முடியாது.

எதிர்க்கட்சி கூட்டணி இப்போது பிளவுப்பட்டிருப்பதே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், பெஜுவாங் தலைவர் துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலே இந்த பிளவுக்கு காரணம் ஆகும் என்று அவர் சொன்னார்.

தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணத்திலேயே கடந்த 28ஆம் தேதி  தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்குடன் பிகேஆரில் இருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக லெர்ரி தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ சரவணனை சந்தித்தார் கணபதிராவ்

ரா.தங்கமணி

புத்ராஜெயா-

சிலாங்கூர் மாநில அரசின் மனதவளப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள கணபதிராவ் வீரமன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

ஆளபலத் துறையில் சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து ஓர் அணுக்கமான சூழலில் இணைந்து பணியாற்றும் வகையில் இந்த சந்திப்பு நேற்று புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சில் நடைபெற்றது.

ஆள்பலத் துறையில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் மனிதவள அமைச்சருடன் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு நிகழ்வில் கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் ஸதிரி பின் மன்சோர், சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் (UPEN) துணை இயக்குனர் முகமட் ஹேஸா, கணபதிராவின் கொள்கை ஆலோசனை அதிகாரி ரா.ஆனந்த், கணபதிராவின் முதன்மை செயலாளர் குமாரி லோகேஸ்வரி, UPEN துணை உதவி இயக்குனர் ஷஃபிக், அமைச்சரின் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

சமூகச் சேவைகளில் மக்களை கவரும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

 எஸ்.லிங்கா

சுங்கை சிப்புட்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான கருமேகம் எப்போது வேண்டுமானாலும் சூழலாம் என்ற நிலையில் சுங்கை மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மீதான விமர்சன பார்வையை ஒருபோதும் புறந்தள்ள முடியாது.

மஇகாவின் தேசியத் தலைவர்களாக திகழ்ந்த துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் போட்டியிட்ட இத்தொகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி வசமாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் அப்போதைய மஇகாவின் தேசியத் தலைவராக இருந்த துன் சாமிவேலும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமாரிடம் வீழந்தார்.

தொடர்ந்து 2013, 2018ஆம்  ஆண்டு பொதுத் தேர்தல்களிலும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியிடம் இழந்து வரும் மஇகா, இம்முறை அத்தொகுதியை தன்வசப்படுத்த களம் கண்டுள்ளது.

இத்தொகுதியை மீட்டெடுப்பதற்காக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனே நேரடியாக களமிறங்கியுள்ள நிலையில் தீவிர செயல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை காட்டிலும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் சுங்கை சிப்புட் மக்களை கவர்ந்த வண்ணம் உள்ளன.

நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனை காட்டிலும் மக்களை அணுகும் முறையிலும் சமூகச் சேவைகளிலும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் மக்களிடையே பிரபலமடைவதால் அங்கு தேமுவிற்கான வெற்றி உறுதி செய்யப்படுவதாகவே கருதப்படுகிறது.

எது எப்படி இருப்பினும் 15ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் மனங்களை வெல்பவரே தேர்தல் களத்திலும் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வெற்றி பெறுவாரா? அல்லது பிகேஆர் சின்னத்தை காட்டினாலே போதும் மக்கள்  வாக்களித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் கோதாவில் களமிறங்கி கேசவன் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவு- ஆய்வில் அதிர்ச்சி

 கோலாலம்பூர்-

நாட்டின் 9ஆவது பிரதராக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்க வேண்டும் என்பதே பெரும்பாலான மலேசியர்களின் தேர்வாக உள்ளது ஓர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

வட மலேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட மலேசிய அரசியலை உட்படுத்திய ஆய்வில் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் யார் பிரதமராக பதவியேற்க வேண்டும்? என்ற் ஆய்வில் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கே பெரும்பாலானோரின் ஆதரவு கிட்டியுள்ளது.

சமூக ஊடகத்தின் வழி கடந்தாண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கு 51.5 விழுக்காட்டினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அவருக்கு அடுத்த நிலையில் அம்னோவின் துணைத் தலைவர் முகமட்  ஹசானுக்கு 14.8 விழுக்காட்டினரும் நடப்பு பிரதமர் டான்ஶ்ரீ  முஹிடின் யாசினுக்கு 10.2 விழுக்காட்டினரும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு 9.6 விழுக்காட்டினரும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு 9.1 விழுக்காட்டினரும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

அதோடு வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனுக்கு 2.4 விழுக்காடும் தற்காப்பு அமைச்சர்டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு 0.5 விடுக்காடும்,அம்னோ தலைவர் ஸாயிட் ஹமிடிக்கு 0.3 விழுக்காடும், பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலிக்கு 0.2 விழுக்காடும் ஆதரவு கிட்டியுள்ளனர்.

\அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பதிவிட்டு வரும் டத்தோஶ்ரீ நஜிப், பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.