Thursday, 6 May 2021

கோவிட்-19 தொற்று தினசரி 5,000ஆக உயரலாம்- இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்-

விரைவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது SOP-களை மக்கள் கடைபிடிக்க தவறினால் கோவிட்-19 பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினசரி 5,000ஆக உயரும் அபாயம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கோவிட் தொற்று பரவலை தடுக்க தவறினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி 10,000ஆக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

அத்தகைய சூழல் ஏற்பட்டால் இந்தியா எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மலேசியாவும் எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியாவில் ஏற்படுவதை போன்று தெருக்களில் மக்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் இக்கட்டான சூழலை நாம் பார்க்க விரும்பவில்லை. ஆகவே கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது என்று சுகாதார அமைச்சுடனான சந்திப்பின்போது இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Wednesday, 5 May 2021

'உணர்ந்தேன் நான்' அம்மா பாடல் வெளியீடு

கோலாலம்பூர் -

மலேசியாவில் தவில் நாதஸ்வர கலைத்துறையில் ஒரு தவில் வாசிப்பாளராக வலம் வருபவர் ஜனனேஸ்வரி. ஏழு ஆண்டுகளுக்கு மேல் பெண் தவில் வாசிப்பாளராக திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்வுகள்,இசை நிகழ்ச்சிகள் என பல இடங்களில் தவில் வாசித்து வருகிறார். தற்போது ஒரு புதிய முயற்சியாக பாடல் துறைக்கும் தன் ஆர்வத்தை திருப்பியுள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கு சமர்ப்பணமாக அம்மா பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார். 

'உணர்ந்தேன் நான்’ தலைப்பில் இந்தப்  பாடல் இன்று 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அவரின் Youtube சேனல் J Music Productions அகப்பக்கத்தில் வெளியீடு காணவுள்ளது. இந்தப் பாடலை இவரே எழுதி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை மென்மையான குரலுக்குச் சொந்த்க்காரர் புவனேஸ்வரி பாடியுள்ளார். 

அதோடு, நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான கபில் ராஜ் இசையமைத்துள்ளார். இவர்களின் பாடல் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

யூ டியூப் லிங்க்:

https://youtu.be/9AjnBwQXUCc


சுயநல அரசியலுக்காக போலீஸ் சிறப்பு பிரிவை பயன்படுத்த முயன்றார் ஹம்சா ஸைனுடின்- முன்னாள் ஐஜிபி

கோலாலம்பூர்-

உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் பிரிவின் புதிய இயக்குனரை நியமனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் குற்றஞ்சாட்டினார்.தனது சொந்த அரசியல் நோக்கத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் சிறப்பு போலீஸ் பிரிவுக்கு நெருக்குதல் கொடுத்தார். எதற்காக அவர் நெருக்குதல் கொடுத்தார் என்பதை நான் வெளியிட முடியாது. ஆனால் அது தேசிய பாதுகாப்பு நடவடிக்கைக்கானது அல்ல என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இதற்கு சிறப்பு போலீஸ் பிரிவும் எதிர்ப்பு தெரிவித்தது.

தமக்கு வேண்டிய உயர் அதிகாரியை புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குனராக நியமிப்பதற்கு ஹம்சா விரும்பினார். அதற்கேற்ப பிப்ரவரி 16ஆம் தேதி நடப்பு இயக்குனரை உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அழைத்து சுயவிருப்பத்தின் பேரில் இப்பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதே இதற்கு ஆதாரமாகும். இல்லாவிட்டால் ஒரு மாத நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஹம்சா ஸைனுடின் நடவடிக்கை குறித்து பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த டான்ஶ்ரீ முஹிடின் யாசினிடமும் தெரிவிக்கப்பட்டது.சிறப்பு போலீஸ் பிரிவை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை முஹிடின் யாசின் ஏற்றுக் கொண்டதை அறிந்த ஹம்சா ஸைனுடின் ஆத்திரம் அடைந்தார். பின்னர் கடந்தாண்டு ஓய்வு பெற்ற சிறப்பு பிரிவின் முன்னாள்உயர் அதிகாரியுடன் மட்டுமே அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

ஜூன் மாதத்திற்குள் தமக்கு வேண்டிய அந்த அதிகாரியை எப்படியாவது சிறப்பு பிரிவு இயக்குனராக நியமனம் செய்து விட வேண்டும் என்று ஹம்சா முனைப்பு காட்டினார். முஹிடின் யாசின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அப்பிரிவின் நடப்பு இயக்குனர் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கிறார்.

ஹம்சா ஸைனுடினின் ஓராண்டுகால நடவடிக்கையில் ஒட்டுமொத்த போலீஸ் சிறப்பு பிரிவு அதிருப்தி அடைந்திருப்பதாக டான்ஶ்ரீ ஹமிட் படோர் குறிப்பிட்டார்.


சிலாங்கூரில் எம்சிஓ- குழப்பத்தில் மக்கள்?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

நாளை தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் எம்சிஓ எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கோம்பாக், உலு லங்காட்,பெட்டாலிங், கிள்ளான், கோல லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் நாளை 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை எம்சிஓ அமலில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஆனால் 6ஆம் தேதி அமல்படுத்தப்படும் எம்சிஓ-வுக்கான எஸ்ஓபி நடைமுறைகள் தெளிவாக விளக்கப்படாதது மக்களிடையே குழப்பத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட எம்சிஓ 1, எம்சிஓ 2 ஆகிவற்றுக்கு தெளிவான எஸ்ஓபி விதிமுறைகள் வழங்கப்பட்ட நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்காக எஸ்ஓபி விதிமுறைகள் என்ன? என்பது குறித்து மக்கள் குழம்பி போயுள்ளனர்.

Monday, 3 May 2021

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர்-

அண்மையில் நடந்துமுடிந்த தமிழக தேர்தலில் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதற்கும், தங்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கவிருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

வரும் மே 7-ஆம் தேதி தாங்கள் தமிழ் நாடு முதலமைச்சராகப் பதவியேற்கவிருப்பது குறித்து எனது நல்வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் இவ்வேளையில் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த முறை நானும் என் கட்சியினரும் சென்னை வந்தபோது தங்களைச் சந்தித்ததும் தாங்கள் வழங்கிய விருந்தோம்பலும், வரவேற்பும் இன்னும் என் நினைவுகளின் இனிமையான சம்பவங்களாக நிழலாடுகிறது.

தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் “வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்” என தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்திருந்தீர்கள்.

தங்களின் இந்த சிறப்பான வாக்குறுதியை வரவேற்கிறேன் என்பதோடு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு என்னால் இயன்ற ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கவும் தயாராக இருக்கின்றேன்.

மலேசியாவில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதிக்கும்  அரசியல் கட்சியாகத் திகழும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில், தங்களின் தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கும் எங்களின் மலேசிய நாட்டு அரசாங்கத்திற்கும் இடையில் நல்லுறவுகளும், சிறந்த தூதரக அணுகுமுறைகளும் பேணப்பட எல்லா வகையிலும் நாங்கள் பாடுபடவும் ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருக்கின்றோம்.

தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் திமுக சிறந்த முறையில் தமிழ் நாட்டிற்கு நல்லாட்சி வழங்கவும், தமிழ் நாடும் தமிழர்களும் வாழ்க்கைத் தரத்திலும், கல்வி, பொருளாதாரம், வணிகம் போன்ற துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியும் மேம்பாடும் காணவும் எனது தனிப்பட்ட சார்பிலும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பிலும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து மலேசியத் தமிழர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களான தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான நல்லுறவுகளும், பரிமாற்றங்களும் தங்களின் நல்லாட்சியின் கீழ் சிறப்புறத் தொடரும் எனவும் நம்புகிறேன் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, 2 May 2021

அடைமழையில் சூழ்ந்து வெள்ளம்- மஇகாவின் சாடல் ஏற்புடையதா?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

நேற்றிரவு 3 மணிநேரம் விடாது பெய்த அடைமழையில் இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக கம்போங் முஹிபா பாசா 2, சுங்கை ரேலா தோட்டம், எல்பில் தோட்டம் போன்ற இடங்களில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் பெரும் துயரத்துக்கு ஆளாகினர்.

இந்த வெள்ளப் பிரச்சினைக்கு மக்களின் குறை தீர்க்கும் பொழுதாக இன்றைய பொழுது விடியாமல் அரசியல் தாக்குதலாக நாளாக அமைந்திருக்கிறது.

நேற்றைய கடுமையான மழையின்போது இங்குள்ள மஇகா. பிஎஸ்எம், பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி விடிய விடிய மக்களுக்கு சேவையாற்றினர்.ஆனால் இந்த வெள்ளப்பிரச்சினை தொடர்பில் மஇகாவினர் வெளியிட்ட ஆடியோ, காணொளிகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் களமிறங்கி சேவை செய்ய முன்வராத போதிலும் மஇகா தங்களது சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கடந்த 13 ஆண்டுகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பிஎஸ்எம், பிகேஆர் பிரதிநிதிகள் பதவி வகித்த போதிலும் இன்னமும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படாதது ஏன்? என்று தொகுதி மஇகா  செயலாளர் கி.மணிமாறன், பேராக் தோழமை அமைப்பின் தலைவர் ரா.முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்களின் கேள்விக்கு நேரடி பதில் கொடுக்க முடியாமல் வெள்ளப் பிரச்சினையில் கூட மஇகா அரசியல் செய்கிறது என்று எதிர்தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக கேசவன் பதவி வகிக்கின்ற போதிலும் மஇகா  தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையே இங்கு நீடிக்கிறது.

இந்நிலையில் வெள்ளப் பிரச்சினையில் மஇகா அரசியல் செய்கிறது என்று இன்று சாடும் தரப்பினர் இதே வெள்ளம், வீடு, நிலப் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ததை மறந்து விடலாமா?

மஇகாவை சாடியே இங்கு அரசியல் செய்த கட்சிகள் இன்று மஇகாவை தாக்கி பேசுவது நியாயம்தானா?

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனிடமிருந்து உதவி கிடைக்குமா? என்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சேவையே செய்யாமல் வெறும் பதவியை மட்டுமே அலங்கரித்துக் கொண்டிருக்கும் கேசவனை மஇகாவினர் சாடுவதில் தவறேதும் கிடையாது.

Saturday, 1 May 2021

சுங்கை சிப்புட்டில் தமிழர் எழுச்சி விழா

லிங்கா-

சுங்கை சிப்புட்- 

உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் தொகுதி  மஇகா, பேராக் தோழமை அமைப்பு ஆகியவற்றின் ஆதரவில் தமிழர் எழுச்சி விழா  நடத்தப்படவுள்ளது.

நாளை 2ஆம் தேதி காலை 8.00 மணிமுதல் சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழர்கள் மொழி, இனம், சமயம், பண்பாடு, அரசியல் மைய கூறுகளுடன் தமிழர் பேரறிஞர்களின் எழுச்சி உரை, தமிழர் தற்காப்பு கலை, வீர விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமை வகிக்கவுள்ளார். 

இலவசமாக நடைபெறும் இவ்விழாவுக்கு பொதுமக்கள் அனைவரும் பண்பாட்டு உடையில் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக் குழு தலைவர் ரா,முருகன் கேட்டுக் கொண்டார்.

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனை நிச்சயம் ஆதரிப்போம்- தாமான் ராமசாமி மஇகா கிளை

லிங்கா-

சுங்கை சிப்புட்- 

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பல வகையில் மக்களுக்கு சேவையாற்றி கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர், டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரனுக்கு வற்றாத ஆதரவினை நாங்கள் என்றும் வழங்குவோம் என இங்குள்ள தாமான் இராமசாமி ம.இ.கா கிளையினர் தெரிவித்தனர்.

இங்குள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று இங்கு தேசிய முன்னணி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. பல பணியாளர்களையும் தொண்டர்களையும் கொண்டு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அதனை செயல்படுத்தி வருகிறார். அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால், நாங்கள் நிச்சயமாக வாக்களிப்போம் என தாமான் இராமசாமி ம.இ.கா கிளைத் தலைவர், பி.கணேசன் அக்கிளையின் முதலாம் ஆண்டுக் கூட்டத்தில் கூறினர்.

மேலும் தேர்தல் அதிகாரியாக வருகை புரிந்த ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர், குணாவிற்கு பி.கணேசன் சிறப்பு செய்தார்.

அதையடுத்து, டோவன்பி  கிளைத் தலைவர், பாலகிருஷ்ணன் தொகுதி பிரதிநிதியாகவும், சுங்கை சிப்புட் ம.இ.கா சேவை மையத்தின் மேலாளரான, அசோக் குமார் ஆகியோர் வருகை புரிந்தனர்.

தாமான் இராமசாமி கிளையின் தலைவராக பி.கணேசன், துணைத் தலைவராக, கிருஷ்ணன் லெட்சுமணன், செயலாளராக, தேவகி முனியாண்டி, உதவிச் செயலாளராக மோகன பிரியா, பொருளாளராக, பார்வதி சுப்ரமணியம், தகவல் அதிகாரியாக விமலா தேர்வு செய்யப்பட்டனர்

1974-ஆம் ஆண்டிலிருந்து பி.கணேசன் ம.இ.கா கிளைகளில் சேவையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Friday, 30 April 2021

கணபதியின் மரணத்தில் உள்ள மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் தேவை- வீரன் வலியுறுத்து

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

சிறையில் தடுத்து வைக்கப்பட்ட போது  கடுமையான தாக்குதலுக்கு  இலக்கானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மஇகா உச்சமன்ற உறுப்பினர் மு.வீரன் வலியுறுத்தினார்.இந்தியர்கள் என்றாலே குண்டர்கள், குற்றவாளிகள் என முத்திரை குத்தி விசாரணை எனும் பெயரில் சிறையில் தாக்குதலுக்கு இலக்காகி மரணிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.

விசாரணை எனும் பெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டபோது உடல்நலம் குன்றியதால் மரணித்தனர் என்று கூறும் போலீசாரின் நடவடிக்கை இனியும் மக்களிடம் எடுபடாது என்று குறிப்பிட்ட வீரன், கால்கள் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதிக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் கால்கள் அகற்றப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி அவர் மரணமடைந்தது இந்திய சமுதாயத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்காக காவல் நிலையம் செல்லும் வரை உடல்நலத்துடன் இருந்த கணபதி, போலீசாரின் விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? என்ற கேள்வி மிக சாதாரணமாக எழுகிறது.

ஆகவே, கணபதியின் மரணத்தில் சூழந்துள்ள மர்மங்கள் விலகுவதற்கு ஏதுவாக சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வீரன் வலியுறுத்தினார்.


மஇகா எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை காப்பாற்ற வந்தவர்கள் விக்னேஸ்வரன், சரவணன் - சின்னராஜு

லிங்கா-

சுங்கை சிப்புட்-

இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கும் மஇகாவின் வளர்ச்சிக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்று மஇகா ஶ்ரீ தாமான் கிளைத் தலைவர் வீ.சின்னராஜு குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ம இகாவின் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ எம்.சரவணனும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேசிய முன்னணி ஆளும் அதிகாரத்தை இழந்து ஓர் எதிர்க்கட்சி எனும் நிலையில் இருந்த மஇகாவை வலுபடுத்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஶ்ரீ சரவணனும் துணிந்து களமிறங்கினர்.

அதற்கேற்ப மஇகாவை இன்று வலுவான கட்சியாக மாற்றியமைத்துள்ள டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தொடரப்பட வேண்டும் என்ற நிலையில் கட்சி தேர்தலில் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் துணைத் தலைவராக டத்தோஶ்ரீ சரவணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கிளைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

அதோடு, கிளை உறுப்பினர்களின் திருமணம், பிறந்தநாளின்போது அவர்களின் இல்லம் சென்று பரிசு, வாழ்த்து அட்டை வழங்குவது, கிளை உறுப்பினர்களின் பெற்றோர் அல்லது பிள்ளைகள் மரணித்தால் மரண சகாய நிதி வழங்குவது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மஇகா ஶ்ரீ தாமான் கிளையின் முதலாம் ஆண்டு கூட்டத்தை தொகுதி சார்பாக வின்சென்ட் டேவிட்,தேசிய மஇகா சார்பாக உச்சமன்ற உறுப்பினர் குணசீலன் ஆகியோர் வழிநடத்தினர்.


கணபதியின் மரண விவகாரம்- அமைச்சரவையில் விவாதிப்பேன் - டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

போலீசாரின் தடுப்புக் காவலின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்தாக நம்பப்படும் ஏ.கணபதியின் மரண விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரணமடைந்த கணபதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும்.

கணபதியின் மரண விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர்,  போலீஸ் படைத் தலைவர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.

போலீஸ் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு அரங்கேறியுள்ள கணபதியின்  மரண விவகாரத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லவிருப்பதாக கூறியுள்ள டத்தோஶ்ரீ சரவணன், கணபதியின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

போலீசாரின் விசாரணைக்கு உதவும் பொருட்டு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போலீஸ் காவலில் தடுத்து  வைக்கப்பட்ட கணபதி மார்ச் 8ஆம் தேதிவிடுதலை செய்யப்பட்டார்.

ஆயினும் செலாயாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணபதியின் கால்கள் துண்டிக்கப்படட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி மரணமடைந்தார்.


Sunday, 25 April 2021

ஏப்.29இல் திரையீடு காண்கிறது 'பரமபதம்'

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய திரைப்பட ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த  ‘பரமபதம்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையீடு காணவுள்ளது.

 மலேசிய கலைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களான  விக்னேஷ் பிரபு- தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘பரமபதம்’ திரைப்படம் எப்போது திரையீடு காணும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மலேசிய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ‘பரமபதம்’ விளையாட்டை மையப்படுத்தி  பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், திரையீடு காண்பதற்கு முன்னரே உலகளாவிய நிலையில் பல விருதுகளை வாரி குவித்துள்ளது.

வரும் 29ஆம் தேதி மலேசிய திரையரங்குகள் மட்டுமின்றி சிங்கப்பூரிலும் இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியீடு காண்கிறது என்று படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

பரமபதம் திரைப்படத்தில் தனேஷ் பிரபு, சசிவரூபன், ரிஷி, பவித்ரன் ஆகிய நான்கு இளைஞர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இயக்குனர் விக்னேஷ் பிரபு மிரட்டும் வில்லனாக தனது நடிப்பை வழங்கியுள்ளார். நாயகியாக கெளசல்யா எனும் புதுமுகம் அறிமுகம் ஆகிறார். துணை கதாபாத்திரத்தில் கே.எஸ்.மணியம், பென் ஜி, கவிமாறன், அகோதரன், விமல், விக்கி நடராஜா, சிங்கை ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கெடா, பினாங்கு, ஆகிய மாநிலங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சாய் நந்தினி மூவி வேல்ர்டு- டீரிம் சாய் ஹோம் புரொட்க்ஷன் சார்பில் டாக்டர் இலட்சப் பிரபு, டாக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர்.


பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகளை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது? கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) அதிகமான சீனர்களை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக திகழ்ந்தாலும் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் விரும்புகின்ற கட்சியக ஜசெக (DAP) திகழ்கிறது நிதர்சனமான உண்மை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

ஜசெகவை ஓர் இனவாத கட்சியாகவே சித்திரித்து பெர்சத்து, பாஸ், அம்னோ ஆகிய கட்சிகள்  தங்களது அரசியல் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இம்மூன்று கட்சிகளும் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலையில் ஜசெகவைஓர் இனவாத கட்சியாக சித்திரித்து வருகின்றனர்.

ஆனால், ஜசெக வெறும் சீனர்களை மட்டும் கொண்ட கட்சியல்ல. இந்திய்ரகளும் மலாய்க்காரர்களும் விரும்பும் கட்சியாக ஜசெக வளர்ச்சி கண்டு வருகிறது.  ஜசெகவை பிரதிநிதித்து இந்தியர்கள் அதிகமானோன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக ஒரு சீனரையும் ஓர் இந்தியரையும் நியமித்தது ஜசெக,நெகிரி செம்பிலானில் இரு ஆட்சிக்கழு உறுப்பினர்களை நியமித்தது ஜசெக, பேராவில் சட்டமன்ற சபாநாயகராக இந்தியரை முதன் முதலில் நியமனம் செய்தது ஜசெக, ஜோகூரில் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினரை  நியமனம் செய்தது ஜசெக. சிலாங்கூரில் கடந்த இரு தவணைகளாக ஆட்சிக்குழு உறுப்பினராக தம்மை நியமித்தது ஜசெக… இப்படி ஜசெக இன வேறுபாடுகளை கடந்து ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், ஜசெகவை இனவாத கட்சி என்று முத்திரை குத்தும் கட்சிகள்தான் இனவாத வேறுபாட்டில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வருகின்றன. பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகள் செய்யும் இனவாத நடவடிக்கையை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது?

குறிப்பாக ஓரங்கட்டிய அரசியல் செய்யும் இந்த கட்சிகளின் இனவாதப் போக்கினால் இந்தியர்கள் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் பின் தங்கியே கிடக்கின்றனர்.மலாய்க்காரர், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர், கடஸான், ஈபான் என்று எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து இன மக்களையும் சரிசமமான குடிமக்களாய் நடத்த தவறிய ஆளும் அதிகாரத்தில் இருந்த கட்சிகள்தான் இன்று ஜசெகவை ஓர் இனவாத கட்சி என்று முத்திரை குத்துகின்றன.

உண்மையில் ஜசெக அனைவருக்கும் பொதுவான கட்சிதான். சீனர்கள் அதிகமாக இருந்தாலும் இந்தியர்கள், மலாய்க்காரர்களின் நலனை காக்க இக்கட்சி ஒருபோதும் தவறியதில்லை.

தற்போது மலாய்க்காரர்களும் ஜசெகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்கின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றமே பிற்காலத்தில் இன வேறுபாடுகளற்ற மலேசிய சமூகத்தை கட்டி எழுப்பும் என்று தாம் நம்புவதாக கோத்தா ராஜா ஜசெக தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சிலாங்கூரமாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங், அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு, ஜசெகவின் மூத்தத் தலைவர் தான் கொக் வய் ஷா ஆலம் நகராண்மை கழக உறுப்பினர் பாப்பராய்டு, யுகராஜா, கிராமத் தலைவர்களும் ஊராட்சி  மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.