Sunday 30 June 2019

1எம்டிபி: வெ. 1 மில்லியனை திரும்ப ஒப்படைத்தது அப்கோ


1எம்டிபி நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 மில்லியன் வெள்ளியை திரும்ப ஒப்படைத்துள்ளதாக 'அப்கோ' தெரிவித்துள்ளது.

1எம்டிபி நிறுவனத்திடமிருந்து நிதி பெற்ற 41 அமைப்புகளின் பெயர் பட்டியலை  மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) அண்மையில் வெளியிட்டது.

சட்டவிரோத நிதி என நம்பப்படும் இந்த நிதியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின்  அம் வங்கி கணக்கிலிருந்து இந்த 41 பேரும் பெற்றதாக எம்ஏசிசி கூறியது.

தாங்கள் பெற்ற நிதி 1எம்டிபிக்கு சொந்தமானது என்பது தங்களுக்கு தெரியாது என்று அப்கோ தலைவர் மடியோஸ்  தங்காவ் தெரிவித்தார்.
1எம்டிபி நிறுவனம் 270 மில்லியன் வெள்ளி நிதி மோசடியில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது.

Saturday 29 June 2019

ஸாகீர் நாய்க்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது- வெளியுறவு அமைச்சர்


புத்ராஜெயா-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததை வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா உறுதிபடுத்தினார்.

ஆனாலும் ஸாகீர் நாய்க்கை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில்  அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கையை பெற்றோம். ஆனால் எப்போது என்பது நினைவில் இல்லை.

இவ்விவகாரத்தில் புதிய முடிவு எதுவும் இல்லை. பழைய முடிவிலேயே உறுதியாக இருக்கிறோம் என்று சைஃபுடின் அதுல்லா தெரிவித்தார்.

Thursday 27 June 2019

தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு; நால்வரின் உடல்கள் மீட்பு

ஜோர்ஜ்டவுன் -

பினாங்கு, தஞ்சோங் பூங்கா பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு மியன்மார் பிரஜைகள் கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் கட்டுமானத் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு மியன்மார் பிரஜைகளும் மண்ணில் புதையுண்டனர்.
நிலச்சரிவை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டினர்.

இரவு 11.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 12.00 மணியளவில் முதல் நபரின் உடலை மீட்டெடுத்தனர்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வழி மண்ணில் புதையுண்ட மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Wednesday 26 June 2019

மாணவிக்கு பிரம்படி; மாநில கல்வி இலாகா விசாரணை தொடங்கியது

ஜோகூர்பாரு-
இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவரை கை, கால்களில் வீக்கம் ஏற்படும் அளவுக்கு ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்த சம்பவம் தொடர்பில் மாநில கல்வி இலாகா விசாரணையை தொடங்கியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஜோகூர் மாநில கல்வி இலாகாவை தொடர்பு கொண்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்ட போதிலும் பலனில்லை என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.

பள்ளி மாணவியை பிரம்பால் அடித்தது காயம் விளைவித்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் பள்ளி ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

பிரதமர் பதவியில் மூன்றாண்டுகளா? மறுத்தார் பிரதமர்


கோலாலம்பூர்-
மூன்றாண்டுகளுக்கு தாம் பிரதமர் பதவியை வகிக்கப் போவதாக வந்த தகவலை துன் மகாதீர் மறுத்துள்ளார்.
நான் மூன்றாண்டுகளுக்கு பதவி வகிக்கப்போவதாக சொல்லவில்லை. நாட்டின் கடனை 80 விழுக்காடாக குறைப்பதற்கும் நாட்டின் மொத்த உற்பத்தியை 54 விழுக்காடு உயர்த்துவதற்கும் நடப்பு அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் அவசியமாகிறது என்று மட்டுமே குறிப்பிட்டதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் பிரதமர் பதவி ஒப்படைப்பு விவகாரம் பேசி  தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அது முடிந்து போன விவகாரம் என்றும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அதி முக்கிய சந்திப்பு; துன் மகாதீரை சந்தித்தீர்களா? மாட் சாபுவை சீண்டினார் நஜிப்


கோலாலம்பூர்-
மாஸ் விமானத்தின் தாமதத்தினால் பிரதமர் துன் மகாதீருடனான சந்திப்பை தவறவிட்ட பிறகு அந்த விவகாரம் தொடர்பில் கோலாலம்பூரில் பிரதமரை சந்தித்து பேசினீர்களா? என்று தற்காப்பு அமைச்சர் முகமட் மாட் சாபுவை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் சீண்டியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி லண்டனில் துன் மகாதீரை முக்கிய காரணத்திற்காக மாட் சாபு  சந்திக்க இருந்த வேளையில் 15ஆம் தேதி இரவு மாஸ் நிறுவனம் 2 மணி 30 நிமிட தாமதத்திற்கு பின்னர் புறப்பட்டதால் துன் மகாதீரை சந்திக்க முடியாமல் போனது என்று தற்காப்பு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பில் முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள டத்தோஶ்ரீ நஜிப், தோல்வி கண்ட அதி 
முக்கிய விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர்ல் துன் மகாதீரை சந்தித்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பியதோடு, இச்சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவர் வினவினார்.

மாஸ் நிறுவனத்தில் நிர்வாக மாற்றம் தேவை- துன் மகாதீர்

கோலாலம்பூர்-

நாட்டின் மேம்பாட்டிற்கு உறுதுணை அளிக்கும் வகையில்  மாஸ் நிறுவனத்திற்கு நிர்வாக மாற்றம் அவசியம் என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

இந்த விமான நிறுவனத்தில் நிகழ்ந்துள்ள பல தவறுகளை சரி செய்ய  இந்த நிர்வாக மாற்றம் அவசியமாகிறது என்றார் அவர்.

இந்நிறுவனத்தில் ஒவ்வொரு முறை மாற்றம் செய்யும்போதெல்லாம் நாம் தோல்வியே சந்திக்கிறோம். இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்போது மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்று 33ஆவது ஆசிய பசிபிக் வட்டமேசை கலந்தரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

Tuesday 25 June 2019

இன்னும் மூன்றாண்டுகளில் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் – துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா-

இன்னும் மூன்றாண்டுகளில் பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்ததுபோல பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன். நாட்டின் கடனை 80% குறைப்பதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 54%ஆக உயர்த்துவதற்கு இந்த மூன்றாண்டுகள் தேவைபடுகிறது.

பதவியை ஒப்படைப்பை இந்த மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக கொண்டுச் செல்ல மாட்டேன் என்று துன் மகாதீர் கூறினார்.

ஏற்றுமதி மட்டுமல்ல; மக்களின் பயன்பாடும் அவசியம்; ‘செம்பனையை நேசிப்போம்’ பிரச்சாரம் தொடங்கியது

ரா.தங்கமணி


ஷா ஆலம்-
நாட்டின் உற்பத்தி பொருளான செம்பனை எண்ணெயை மலேசியர்கள் உபயோகிப்பதன் மூலம் நாட்டின்  பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லக்கூடும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருப்பது செம்பனை எண்ணெய் துறையாகும். ஆனால் செம்பனை எண்ணெயை மலேசியர்கள் அதிகளவு பயன்படுத்துவதை பிற நாடுகளுக்கு அது அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் செம்பனை எண்ணெயின் பயன்பாடு உள்ளது. ஷாம்பு, சவர்க்காரம், உணவு பொருள், அழகு சாதனம் என பலவற்றில் செம்பனை எண்ணெய் பயன்பாடு உள்ளது. நாம் தாம் அதனை அறிந்து வைத்திருக்காமல் இருக்கிறோம் என்று ‘செம்பனையை நேசிப்போம்’ நிகழ்வில் உரையாற்றியபோது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான  கணபதிராவ் குறிப்பிட்டார்.

செம்பனை எண்ணெயை மலேசியர்கள் அதிகளவு பயன்படுத்தத் தொடங்கினால் அது செம்பனை துறை மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருக்கும் என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மை தொழில்துறை அமைச்சர் திரேசா கோக், செம்பனை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.

அமைச்சராவதற்கு முன்னர் செம்பனை எண்ணெயின் பயன்பாட்டை முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போதுதான் அதன் பயன்பாடு எந்தளவு நமக்கும் நாட்டுக்கும் அவசியமாகிறது என்பது புரிகிறது.

இன்று செம்பனை எண்ணெய் பிற நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியின் தேவை குறைந்து போனால் அது நாட்டின் பொருளாதாராத்தில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏற்றுமதியையே முழுமையாக நம்பிக் கொண்டிருக்காமல் மக்கள் அனைவரும் செம்பனை எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக ஆதரித்தால் அதுவே மிகப் பெரிய பலமாக மாறிவிடும் என கூறிய அவர், அதனாலேயே தற்போது ‘செம்பனையை நேசிப்போம்’ பிரச்சாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக சொன்னார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற செம்பனையை நேசிப்போம்’ பிரச்சார நிகழ்வு சமையல் போட்டியுடன் நடைபெற்றது.  அதோடு செம்பனை எண்ணெய் பற்றிய விளக்கமளிப்பு, புதிர்போட்டி, சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினர் யோகராஜா, இந்திய கிராமத் தலைவர்கள் கோபி, பத்மநாதன், சந்திரசேகர் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Monday 24 June 2019

17ஆவது தென்னிந்திய தமிழ் பத்திரிக்கையாளர் சங்க மாநாட்டை தொடக்கி வைத்தார் டத்தோஶ்ரீ தனேந்திரன்

சென்னை-

17ஆவது தென்னிந்திய தமிழ் பத்திரிக்கையாளர் சங்க மாநாட்டை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் சங்க கொடியேற்றி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து TSR சுபாஷ் ( தென்னிந்திய தமிழ் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் ) , முன்னாள் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் SN சின்ஹா , அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றியும் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார் டத்தோஶ்ரீ தனேந்திரன். 

தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு வருகை தந்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் C.விஜய பாஸ்கர் அவர்கள் பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்களுக்கு 1இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு பாலிசி பத்திரம் சமர்ப்பித்து , அரசாங்க மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கவும் ஒப்புதல் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னிந்திய பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை, கேரளா, ஆந்திரா, டெல்லி அனைத்து மாநில பத்திரிக்கை சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Saturday 22 June 2019

சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மரபு கவிதைப் போட்டி 2019

தஞ்சோங் மாலிம்-
சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின்  தொடர்முயற்சியாகத்  தேசிய  அளவிலான  மரபு கவிதைப்  போட்டி இரண்டாம் முறையாக மலேசியத் திருநாட்டில் மரபு கவிதையானது மீண்டும் தழைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மலேசிய நாட்டில் தமிழ்மொழி  செழித்திருக்கப் பெரும் பங்காற்றிய இறையருட்கவிஞர் செ. சீனி நைனா முகம்மது  அவர்களின்  புனைப்பெயரான நல்லார்க்கினியன்  பெயரில் 
இப்போட்டி நடத்தப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 

இளையோர் பிரிவு (வயது வரம்பு: 16 வயதிற்கு மேல் 29). இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள்:  

   
   1. இளையோரும் கவிதையும்
               2. இளையோரும் தமிழ்த்திரைப்படமும்
               3. இளையோரும் இணைய உலகமும்
               4. இளையோரும் இன்றைய காதலும்

இவற்றுள் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதை அமைந்திருக்கவேண்டும். கவிதைகளுக்கு முறையே முதல்நிலைக்கு வெ.1000.00இரண்டாம் நிலைக்கு வெ.750.00, மூன்றாம்நிலைக்கு வெ.500.00 மற்றும் ஆறுதல் பரிசகளாக எழுவருக்கு மட்டும் வெ.200.00 வழங்கப்படும்.

பொதுப்பிரிவுக்கான (வயது வரம்பு: முப்பதுக்கு மேல்). அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள்.
               
               1. மலேசியாவில் தமிழ்க்கல்வி
               2. மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு மாற்றம்
               3. மலேசிய இலக்கியத்தின் தரம்
               4. மலேசியாவில் தமிழர் கலைகள்

இவற்றுள் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதை அமைந்திருக்கவேண்டும். கவிதைகளுக்கு முறையே முதல்நிலைக்கு வெ.1500.00இரண்டாம் நிலைக்கு வெ.1000.00மூன்றாம் நிலைக்கு வெ.750.00 ஆறுதல் பரிசுகளாக எழுவருக்கு மட்டும் வெ.200.00 வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள இறுதி நாள் 30.6.2019.

வீடியோ இணைப்பு:

Friday 21 June 2019

துணைப் பிரதமர் பதவியில் மாற்றமில்லை- அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்-

துணைப் பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் தற்போது மாற்றமில்லை என்பதை பிரதமர் துன் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அன்வார் இப்ராஹிம் துணைப் பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டத்தோஶ்ரீ வான் அஸிஸா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிபிபிஎம் கட்சியின் ஜெராம் 
சட்டமன்ற உறுப்பினர் முகமர் சைட் ரோஸ்லி கோரிக்கை விடுத்திருந்தார்.

சில நாட்களாக சர்ச்சையாக வெடித்திருந்த இவ்விவகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் துணைப் பிரதமர் பதவிக்கு தற்போது மாற்றம் இல்லை என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

புதிய மலேசியர்களை உருவாக்குவோம்- டத்தோஶ்ரீ ஏண்டி வேண்டுகோள்

கோலாலம்பூர்-
'புதிய மலேசியா' மலர்ந்துள்ள மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அதேவேளையில், 'புதிய மலேசியர்'களை உருவாக்கும் பயணத்திற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என 'எவரெஸ்ட்' குழுமத்தின் தோற்றுநரும் தலைமை நிர்வாகியுமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். ஏண்டி வேண்டுகோள் விடுத்தார்.

மறுமலர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் உன்னதம் அறிந்துதான் பேசுகிறோமா எனத் தெரியவில்லை. தேசிய அரசியல் நீரோட்டத்தின் சரித்திரத்தில் தற்போது மிகப் பெரிய  மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தைப் பயன்படுத்தி இந்திய சமுதாயம் மேன்மேலும் வளர்ச்சிக் காண வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தையும் உள்ளடக்கியதுதான். இதற்கு நாம் எத்தகைய  முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம் என்ற இமாலய கேள்விகள் பல எழுகின்றன என்பதை மறுப்பவர் இலர் என்றார் அவர்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் 'வணிகப் பகிர்வாடல் வலையம் (பிஎஸ்என் - Business Sharing Network) எனப்படும் புலனக் குழுவைத் தோற்றுவித்து, அக்குழுவில் முழுக்க முழுக்க தொழில்முனைவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே காணப்படும் சமுதாய அக்கறையும் விடாமுயற்சியும் கண்டிப்பாக 'புதிய மலேசியர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை டத்தோஶ்ரீ ஏண்டி பகிர்ந்து கொண்டார்.

பிஎஸ்என் புலனக் குழு கடந்த 2015ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் ஏறக்குறைய 134 தொழில்முனைவர்களைக் கொண்டு சமூக வலைத்தள தொழில்முனைவர் இரவுடன் முதலாவது ஆண்டுக் கூட்டத்தையும் நடத்தினோம்.

அதன்பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு 375 தொழில்முனைவர்களைக் கொண்டு 'மஜெஸ்திக்' ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் மற்றுமொரு பிரமாண்டமான விழா நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்முனைவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.

அதுமட்டுமின்றி, வரும் செப்டம்பர் மாதம் அதே மஜெஸ்திக் தங்கும் விடுதில் 1,500 தொழில்முனைவர்களை உட்படுத்தி மேலும் ஒரு சாதனை விழா நடைபெறவுள்ளது என்பதையும் டத்தோஶ்ரீ ஏண்டி கூறினார். 
காலம் அதன் பயணத்திற்கேற்ப மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனை நாம் நினைவில் கொள்ள தவறிவிடுகின்றோம் என்பதுதான் நிதர்சன உண்மை. சவால்கள் நிறைந்த இப்பயணத்தில் நாமும் கைகோர்த்துப் பயணிக்க 'பொருளாதார பலம்' மிக முக்கியம் என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் இப்புலனக் குழு தொடங்கப்பட்டது.

நம்மிடையே வணிக ரீதியிலான பகிர்வும் ஒற்றுமையும் காணப்படவில்லையே என்ற கோபத்தில்கூட இக்குழு உருவான என்றும் சொல்லலாம். இந்நாட்டில் பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள சீன சமூகம் கடைபிடிக்கும் ஒற்றுமையும் தகவல் பகிர்வும்தாம் அவர்களை இந்நிலைக்குக் கொண்டு செல்லது.

நாமும் அதனைக் கடைபிடித்து பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு பிஎஸ்என் வணிக வலையத்துடன் இணைந்துள்ளவர்களை ஒரே குடையின் கொண்டு வர வேண்டும் என்ற பயணத்தில் வெற்றியும் பெற்றுள்ளோம் என்ற அவர், இவ்வெற்றியானது 'பிஎஸ்என்' புலனக் குழுவில் இணைந்து பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரும் அனைவருக்கும் சமர்ப்பணம் என்றார்.

பிஎஸ்என் புலனக்குழுவில் முஸ்லிம் அன்பர்களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் மதிக்கும் வகையில் அவர்களுடன் நோன்புத் துறக்கும் நிகழ்ச்சியொன்று அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ ஏண்டி இவ்வாறு கூறினார்.

சமுதாயத்தை அரசியல் மட்டுமே வழிநடத்திக் கொண்டிருந்த காலகட்டம் மாறி, தற்போது சமூக வலைத்தளங்களைச் சார்ந்த சில குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகின்றன. நாமும் அதற்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை 'பிஎஸ்என்' புலனக் குழு நிரூபித்து வருகின்றது. முதல் குழு, இரண்டாவது குழு என கட்டம் கட்டமாக வளர்ச்சி கண்டுவரும் இக்குழு, சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு தொழில்முனைவர் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய இலக்காகும். இது வெறும் வார்த்தைக்காக மட்டுமே சொல்லப்படுவதில்லை. கண்டிப்பாக நிகழ்த்தியும் காட்டுவோம் எனவும் டத்தோஶ்ரீ ஏண்டி தெரிவித்தார்.

Thursday 20 June 2019

எம்எச்17; நால்வர் மீது குற்றச்சாட்டு

நெதர்லாந்து-

298 பயணிகள், விமான சிப்பந்திகளுடன் பயணித்த எம்எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பில் நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எம்எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பில் ரஷ்யாவைச் சேர்ந்த மூவர், உக்ரெய்னைச் சேர்ந்த் ஒருவர் என நான்கு பேர் மீது நெதர்லாந்து போலீஸ் தலைவர் வில்பெர்த் பவுலிசென் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு  ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த எம் எச் 17 விமானம்  உக்ரெய்ன் வான் பகுதியில் சுட்டு  வீழ்த்தப்பட்டது.

இதில் ரஷ்யாவைச் சேர்ந்த இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கெய், ஒலெக் 
புலாதொவ்தஆகியோரும் லியோனிட் கெர்சென்கோ என்ற உக்ரெய்ன் நாட்டவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 பேரும் மரணமடைந்தனர். இச்சம்பவம் மலேசியர்கள் மட்டுமின்றி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூலை 31-இல் ஆஜராகுக- ஸாகீர் நாய்க்கிற்கு நீதிமன்றம் உத்தரவு

மும்பை-
சர்ச்சைகுரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் ஜூலை 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத நிதி கையாடல் தொடர்பில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் ஜாமீன் இல்லாத கைது ஆணை பிறப்பிக்கப்படும் என்று நேற்று உத்தரவிட்டது.

அன்வார் பிரதமராகும் வரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் – வான் அஸிஸா

கோலாலம்பூர்-

நாட்டின் பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவியேற்கும் வரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கு ஏதுவாக டத்தோஶ்ரீ அன்வார் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வழிவிடும் வகையில் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக வெளிவந்த தகவலை அவர் மறுத்தார்.

முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப பிரதமராக துன் மகாதீரும் துணைப் பிரதமராக நானும் பதவி வகிக்கிறோம்.
அன்வார் எப்போது பிரதமராக பதவியேற்கிறாரோ அப்போது துணைப் பிரதமர் பதவியிலிருந்து நானும் விலகுவேன். அதில் எவ்வித பிரச்ச்னையும் இல்லை என்று டத்தோஶ்ரீ வான் அஸிஸா தெரிவித்தார்.

Wednesday 19 June 2019

உடல் உறுப்புகளுக்காக சிறார் கடத்தலா? மறுத்தார் துணை ஐஜிபி

கோலாலம்பூர்-

உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதற்காக சிறார்கள் கடத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பு தர்ப்பினர் மீது  தேசிய போலீஸ் படை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று துணை ஐஜிபி டத்தோ மஸ்லான் மன்சோர் குறிப்பிட்டார்
மீண்டும் சமூக ஊடகங்களில் இந்த பொய் தகவல் பகிரப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகளுக்காக சிறார்கள் கடத்தப்படுவதாக பரப்பப்படும் தகவலை மிக கடுமையாக கருதுகிறோம்.

நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்பதை போலீஸ் படை பலமுறை அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபோன்ற பொய் தகவல்கள் பகிரப்பட்டுதான் வருகின்றன.

உறுதிபடுத்தப்படாத தகவல் எதனையும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், பொய் தகவலை பரப்பும் தரப்பினர் மீது 1998 தகவல் தொடர்பு, பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் சொன்னார்.

Saturday 15 June 2019

ஓரினச் சேர்க்கை காணொளி; அது என் மகன் அல்ல- தந்தை

கோலாலம்பூர்-

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது என் மகன் அல்ல என்று  ஹஷிக் அப்துல்லாவின் தந்தை அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
இந்த ஆபாச காணொளியை நான் பார்த்தேன். ஆனால் அதில் இருப்பது என் மகன் என்பதை என்னால் உணர முடியவில்லை.
பலமுறை பார்த்தபோதிலும் அது என் மகன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, அந்த காணொளியில் உள்ள ஆடவரின் உடலமைப்பு, அசைவுகள், குரல் போன்றவை ஆராய்ந்தேன். அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன் என அப்துல் அஸிஸ் கூறினார்.

Friday 14 June 2019

ஒருநாள் என்னுடைய ஆபாச காணொளிகூட வரலாம்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை தொடர்புபடுத்தியுள்ள ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மட் தெரிவித்தார்.
அரசியல் சதி வேலையாக கருதப்படும் இந்த காணொளி தொடர்பில் நமக்கு அஸ்மின் அலி மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் எந்தவொரு தவறான காரியங்களிலும் ஈடுபட்டிருக்க முடியாது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எதையுமே சாத்தியமாக்க முடியும்.  தொழில்நுட்பத் துறையில் திறமை வாய்ந்தவர்களாக பலர் உள்ளனர்.

ஒரு நாள் பொறுத்திருங்கள். என்னை சம்பந்தப்படுத்திய ஆபாச காணொளி கூட ஒருநாள் இதுபோன்று வரலாம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.


Thursday 13 June 2019

ஓரினச் சேர்க்கை காணொளி; கட்சிக்குள் குழப்பம் இல்லை- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை உள்ளடக்கியதாக கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளியால் பிகேஆர் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கட்சியின் வாராந்திர கூட்டம் நடைபெற்ற போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இது ஓர் அரசியல் சதிராட்டத்தின் நடவடிக்கையாக இருக்கலாம் என்று நாங்களும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் நம்புவதால் இதனை நாங்கல் ஒதுக்கியுள்ளோம்.

ஆயினும் இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ், எம்ஏசிசி விசாரணைக்கு விட்டு விடுவதாக அவர் சொன்னார்.

என்னுடைய அரசியலை முடிப்பதற்கு நடத்தப்படும் சதி- அஸ்மின் அலி சாடல்

புத்ராஜெயா-

என்னுடைய அரசியல் வாழ்க்கையை முடிப்பதற்காக ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தம்மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அஸ்மின் அலி, இது ஓர் அரசியல் சதிராட்டம் எனவும் தம்முடைய அரசியல் பயணத்தை முடிப்பதற்கு நடத்தப்படும் கீழ்த்தரமானச் செயல் எனவும் அவர் சொன்னார்.

அமைச்சருடன் இருப்பது நான்தான்- துணை அமைச்சரின் உதவியாளர் வாக்குமூலம்

கோலாலம்பூர்-

வாட்ஸ் அப் புலனத்தில் வெளியான ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது தாம் தான் எனவும் தன்னுடம் இருந்த மத்திய அமைச்சர் பிகேஆர் கட்சியின் தலைவர் எனவும் துணை அமைச்சர் ஒருவரின் உதவியாளர் முகநூல் பதிவு ஒன்றில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்ட இவ்விவகாரம் தொடர்பில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வாக்குமூலம் அளித்த  முகம்மட் ஹஷீக் அஸீஸ் , சபாவில் நடந்த இடைத் தேர்தலின்போது மே 11ஆம் தேதி ஃபோர் போய்ன்ட் தங்கும் விடுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தன்னுடைய அனுமதி இன்றி இக்காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர் ஒரு தகுதியான தலைவராவதற்கு தகுதியற்றவர் என ஹஷீக்  அஸீஸ் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் மீது குற்றஞ்சாட்டியுள்ள முகமட் ஹஷீக் அஸீஸ் மூலப் பொருள் தொழில்துறை துணை அமைச்சர் ஷம்சூல் இஸ்கண்டார் முகம்மட் அக்கினியின் 
உதவியாளர் ஆவார்.

30 வினாடிகள் ஓடக்கூடிய ஒப்புதல் வாக்குமூல காணொளியில் ஹஷீக் அஸீஸ், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Wednesday 12 June 2019

வைரலாகும் ஓரினச் சேர்ச்சை வீடியோ; எனக்கு தெரியாது- துன் மகாதீர்


புத்ராஜெயா-
அமைச்சரவைச் சேர்ந்த ஒருவரின் ஆபாச காணொளி வாட்ஸ் அப் சமூக ஊடகத்தில் வைரலாவது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் துன் மகாதீர் முகம்மது கூறினார்.

‘தமக்கு ஏதும் தெரியாது. இப்போதுதான் கேள்வி பட்டேன். அது குறித்து நான் ஆராய வேண்டும்’.

உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எனக்கு விளக்குங்கள் என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

‘Jemputan Hari Raya’ எனும் பெயர் கொண்ட புலனக்குழுவிலிருந்து இன்று காலை முதல் சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் இந்த ஆபாச வீடியோ தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

லத்தீபா கோயா நியமனம்; பிரதமரின் முடிவை ஏற்போம்- அன்வார்

கோலாலம்பூர்-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவராக லத்தீபா கோயா நியமனம் செய்யப்பட்டிருப்பதை அனைத்துத் தரப்பினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத்  தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
லத்தீபா கோயாவின் நியமனம் தனது தனிப்பட்ட முடிவு என பிரதமர் துன் மகாதீர் கூறியிருந்த கருத்தை அடுத்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளும் அரசு சாரா பொது இயக்கங்களும் கடுமையான விமர்சித்து வருவது அரசாங்கத்திற்கு பலவீனமாக மாறி விடும்.

எம்ஏசிசி தலைவராக லத்தீபா கோயா நியமனம் செய்யப்பட்டதற்கான நியாயமான காரணத்தை அமைச்சரவைக்கும் பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்திற்கும் துன் மகாதீர் விளக்கமளிப்பார் என நம்புவதாக டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

Monday 10 June 2019

‘மித்ரா’ எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் என்ன? வேதமூர்த்தி விளக்குவாரா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டமான ‘செடிக்’இன் மறு உருவாக்கமான மித்ரா எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் என்ன? என்பதை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விவரிப்பாரா? எனும் கேள்வி பலரிடத்தில் எழுந்துள்ளது.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின்போதும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தொடங்கி வைத்த ‘செடிக்’ அமைப்பு பொது அமைப்புகளின் வழி இந்திய சமுதாயத்தைச் சென்றடையக்கூடிய பல திட்டங்களை மேற்கொண்டது.

ஆனால், செடிக் மேற்கொண்ட திட்டங்களில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக கூறி, அதை உருமாற்றும் நடவடிக்கையாகவே ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது.

மித்ராவின் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்ட  லெட்சுமணன் தனிபட்ட காரணங்களுக்காக அண்மையில் அப்பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
லெட்சுமணனின் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்ட அமைச்சர் வேதமூர்த்தி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பின் காரணமாக மித்ரா மிகப் பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி வந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மிகப் பெரிய அழுத்தத்திற்கு மித்ரா தள்ளப்பட இந்திய சமுதாயம் வைத்த எதிர்பார்ப்பு என்ன என்பதை வேதமூர்த்தி விவரிப்பாரா?, இந்திய சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தானே மித்ரா உருமாற்றம் கண்டது. அத்தகைய சூழலில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு ‘மித்ரா’  அழுத்தத்திற்கு ஆளாக்கும் நிலை ஏற்பட என்ன நடந்தது?
டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் தலைமை இயக்குனராக ‘செடிக்’இல் பதவி வகித்தபோது வராத அழுத்தம் மித்ராவுக்கு ஏற்பட காரணம் என்ன?

மித்ராவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓர் அபாயகரமான சூழலுக்கு இந்திய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளதா? அல்லது இந்திய சமுதாயத்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திறமையும் செயலாக்காமும் ‘மித்ரா’வுக்கு போதவில்லையா? என்பதை  அமைச்சர் வேதமூர்த்தி இந்திய சமுதாயத்திடம் விவரிக்க முற்படுவாரா?

பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி; சோதனை கடுமையாக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா-
இந்நாட்டுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து துறைமுகங்களிலும் கடுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிராக தேசிய திடக் கழிவு மேலாண்மை துறை (NSWMD), சுற்றுச்சூழல் இலாகா (DOE) ஆகியவை இணைந்து நடவடிகை மேற்கொள்கின்றன என்று அதன் இணை இயக்குனர் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அனைத்து கொள்கலன்களும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. குறிப்பாக கிள்ளான் துறைமுகம் மேற்கொள்ளப்படுகிறது.

சட்டவிரோத நடவடிக்கையின் வழி பிளாஸ்டிக் கழிவுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதை தடுக்க அரசாங்கம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்றார் அவர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வழி கிள்ளான் துறைமுகத்தில் பிளாஸ்டி கழிவுகளை கொண்ட நூற்றுக்கணக்கான கொள்கலன்கல் கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைகளில் மெதுவாக நகரும் வாகனங்கள்

கோலாலம்பூர்-
நோன்புப் பெருநாள் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்து விட்டு தலைநகருக்கு நிரும்ப பலர் முற்பட்டுள்ள நிலையில் முதன்மை நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளன.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கி செல்லும் தங்காக் - ஜாசின் சாலை மெதுவாக நகர்கின்றன.

பேராவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வரும் சிம்பாங் பூலாய், தாப்பா ஓய்வு இடம், பீடோரிலிருந்து சுங்காய் நோக்கி செல்லும் சாலை, புக்கிட் தாகாரிலிருந்து புக்கிட் பெருந்தோங் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

புக்கிட் மேராவிலிருந்து தைப்பிங் (வடக்கு) செல்லும் சாலையின் 204.2ஆவது கிலோ மீட்டரில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

காராக்கிலிருந்து பெந்தோங் டோல் சாவடியிலும்,  லெந்தாங்கிலிருந்து  புக்கிட் திங்கி வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்வதாக சாலை போக்குவரத்து தகவல்கள் கூறுகின்றன.

Thursday 6 June 2019

மித்ரா தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து இலெட்சுமணன் விலகல்

புத்ராஜெயா-
மித்ரா தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து இலெட்சுமணன் சண்முகம் விலகுயுள்ளதை பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக மித்ரா மிகப் பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுமார் அரை ஆண்டு காலமாக மித்ராவை வழிநடத்தி வந்த ச.இலெட்சுமணன், தனிப்பட்ட காரணத்திற்காகவும் சொந்த வாழ்க்கைச் சூழ்நிலையைக் கருதியும் மித்ராவின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அவரின் இந்த முடிவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அதை ஏற்றுக் கொள்வதாகவும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஒற்றுமை, சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை மித்ராவுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில், இலெட்சுமணன் பல வகையாலும் எனக்கு உதவிகரமாகத் திகழ்ந்துள்ளார். குறிப்பாக, நம்பிக்கைக் கூட்டணி அரசு, மலேசிய இந்திய சமுதாயத்திற்கான கடப்பாட்டை ஈடேற்றுவதில் அதிகபட்சமாக கடமை ஆற்றியுள்ளார்.

இந்த வேளையில், லெட்சுமணனின் கடப்பாடு, கடமை உணர்வு, சமுதாய சேவையில் அவர் காட்டிய ஈடுபாட்டை யெல்லாம் நினைவுகூர்கிறேன் என்று அவ்வறிக்கையில் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Saturday 1 June 2019

நாட்டின் கடனை குறைக்க 3 ஆண்டுகள் தேவை- துன் மகாதீர்


டோக்கியோ-
நாடு எதிர்கொண்டுள்ள தேசிய கடனை குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு 3 ஆண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 விழுக்காடு உச்சவரம்புக்கு தேசிய கடனை குறைக்க இந்த அவகாசம் தேவைபடுகிறது.

முந்தைய அரசாங்கம் முன்னெடுத்த தவறான நடவடிக்கையினால் கடுமையான விளைவை எதிர்கொண்டுள்ளோம். அரசின் உச்சவரம்புக்கு மீறி அதிகமான கடனை  அவர்கள் வாங்கியுள்ளனர்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் கடன் 1 டிரில்லியன் தொகையை தற்போது குறைத்துள்ளோம்.

மூன்று ஆண்டு கால அவகாசம் நாட்டை நிர்வகிப்பதில் நாம் பெறும் அனைத்து வருமானத்தையும் செலவிடாது என டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பானிய  வெளியுறவுகூட்டுக் கிளப் கூட்டத்தில் உரையாற்றியபோது துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.