Monday 31 August 2020

மூவின மக்களின் அடையாளமே ‘மலேசியா' - சுதந்திர தின சிறப்பு கட்டுரை

கி.மணிமாறன்.சுங்கை சிப்புட்.பேரா

பல இன மக்கள், பல மொழி தேசம், பல கலாச்சார கூறுகளை கொண்ட நாடு என்று உலக அரங்கில் தனக்கென தனி செல்வாக்கில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது ‘மலேசியா’.

ஒரே இன மக்களாக இருந்தாலும் உள்நாட்டுச் சண்டை, கலவரம், இன குழுக்களின் மோதல் என பல நாடுகளில் இன்னமும் தங்களது வாழ்வாதாரத்திற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் பல மக்களுடன் சகோதரத்துவ மாண்போடு சகிப்புத்தன்மையை வளர்த்து ஒற்றுமையை நிலைநாட்டிக் கொண்டிருப்பதே மலேசியாவின் சிறப்பம்சமாகும்.

மலேசியாவின் அடையாளமே மூவின மக்கள் தான். பிரிட்டிஷாரின் காலனித்துவ ஆதிக்கத்தின்போது ‘மலாயா’ என்று அன்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திர பிரகனடத்தின்போது கையெழுத்திட்ட வலராற்றுக்குரியவர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக், துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோரே ஆவர்.

மூவின மக்கள் வாழும் இந்நாடு அனைத்து இனத்தவருக்குமே சொந்தமானதாகும். நாங்கள் தான் இம்மண்ணிற்கு சொந்தக்காரர்கள் என்று எந்தவொரு இனமும் சொந்தம் கொண்டாட முடியாது. மலாய்க்கார்ரகள், சீனர்கள், இந்தியர்கள் என்ற மூவின மக்களின் வரலாற்றில் யாருடைய அத்தியாயத்தையும் மறைத்து விட்டு மலேசியாவின் சரித்திரத்தை எழுதிவிட முடியாது.

காலனித்துவ ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்நாட்டை சுதந்திர பூமியாக பிரகடனப்படுத்த பல ஆன்மாக்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தியுள்ளன.   ரத்தமும் வியர்வையும் சிந்தி வாங்கிக் கொடுக்கப்பட்ட இந்நாட்டின் சுதந்திரத்தில் இனவாதமும் மதவாதமும் பூசப்படக்கூடாது.

அனைத்து இன மக்களின் வாழ்வாதாரமும் இந்நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து இன மக்களின் கலை, கலாச்சார மாண்புகளும் தாய்மொழி கல்வி உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர மாண்போடு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சில கேலிக்கூத்தாக்குவது நிறுத்தப்பட  வேண்டும்.

63ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் முதலில் தங்களை ‘மலேசியர்’களாக உணர்தல் வேண்டும். முதலில் தான் ம்லேசியன் என்ற உணர்வே 63 ஆண்டுகளை எவ்வித இன மோதலும் கலவரமும் இல்லாத நாடாக கண்டிருந்த மலேசியா இன்னும் நூறாண்டுகளுக்கு சிறப்பாக செல்லும்.

மூவின மக்களின் அடையாளமே மலேசியா. அந்த அடையாளத்தை தொலைத்து விட்டு வெறுமனே தேசியக் கொடிகளை அசைப்பதால் மட்டும் தேசப்பற்று மேலோங்கி விடாது.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் போராட்டம் நடத்திய புனித ஆன்மாக்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் மலேசியாவின் அடையாளத்தை என்றும் போற்றி காப்போம்.

63 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கொண்டாடும் மலேசியர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து காப்போம்.  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

Sunday 23 August 2020

GE 15- டத்தோஸ்ரீ தனேந்திரன் வேட்பாளராக களமிறங்குவார் - டத்தோஸ்ரீ ஸாயிட்

 ரா.தங்கமணி

தஞ்சோங் மாலிம்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வேட்பாளராக களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம். ஆனால் அது எப்போது என்பது தெரியவில்லை. இந்த சூழலில் தேமுவின் தோழமை கட்சியாக உள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அதன் தலைவர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

இது இக்கட்சி தேமுவுக்கு வழங்கி வரும் விசுவாசத்திற்கு காட்டப்படும் நடவடிக்கையாகும்.

சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வழங்கும் ஆதரவுக்கு உரிய அங்கீகாரமாக இது அமைந்திருக்கும்.

இந்த இடைத்தேர்தலில் தேமு வெற்றி பெறுவதற்கு மஇகா,ம.ம.ச.கட்சி, ஐபிஎப் போன்ற கட்சிகள் களப்பணி ஆற்றி வரும் நிலையில் இந்தியர்களின் ஆதரவு மீண்டும் தேமுவுக்கு திரும்ப வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலிம் இடைத்தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது டத்தோஸ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.

Friday 21 August 2020

மகாதீரின் போராட்டம் யாருக்கானது என்பதை இந்தியர்கள் உணர வேண்டும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

தஞ்சோங் மாலிம்-

''பெஜுவாங்'எனும் கட்சியை தொடங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடங்கியிருக்கும் போராட்டம் யாருக்கானது? என்பதை இந்தியர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

அம்னோவில் இருந்து 4ஆவது பிரதமராக பதவி வகித்தபோதும்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பிரதமராக பதவி வகித்த போதும் இந்திய சமுதாயத்திற்கு துன் மகாதீர் ஆற்றிய பங்கு என்ன? என்பதை இந்திய சமுதாயமே அறியும்.

துன் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் இந்திய சமுதாயம் இழந்தது பல. அதன் தாக்கத்தினாலேயே இன்றளவும் பின்தங்கிய சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துன் மகாதீர் தற்போது பெஜுவாங் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி யாருக்கான போராட்டத்தை உள்ளடக்கியது என்பதை சொல்ல வேண்டியதில்லை. தனது மகனின் அரசியல் நகர்வை மட்டுமே வைத்து தற்போதும் அரசியல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தேசிய முன்னணி அப்படியல்ல. இந்தியர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக பதவி வகித்தபோது தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், இந்தியர்களின் சமூகப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டது. இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திட்டவர் டத்தோஶ்ரீ நஜிப் ஆவார்.

ஆதலால் விரைவில் நடைபெறவுள்ள சிலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள முகமட் ஸைடி அஸிஸ் வெற்றி பெறுவதற்கு இந்தியர்கள் வற்றாத ஆதரவு வழங்க வேண்டும்.  

துன் மகாதீர் கட்சியை பிரதிநிதித்து களமிறங்கியுள்ள வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு ஒரு தவறான அத்தியாயத்திற்கு வித்திடும் என்று நேற்று நடைபெற்ற சிலிம்  சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பிரச்சார நிகழ்வின்போது டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் டத்தோஶ்ரீ நஜிப், ம.ம.ச.கட்சியின்  உதவித் தலைவர் டத்தோ சரவணன், ம.ம.ச.கட்சியின் தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் ராவ்,  மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தெலுக் இந்தானில் மஇகாவின் ஆதரவுக்கரம் நீள்கிறது- டத்தோ முருகையா

ரா.தங்கமணி

தெலுக் இந்தான் -

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணின் வாக்கு வங்கியாக மாற்றிட மஇகா களப்பணி ஆற்றி வருவதாக அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி கெராக்கான் வசமிருந்தது. 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியிலிருந்து கெராக்கான் கட்சி வெளியேறிய பின்னர் இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மஇகா களம் கண்டுள்ளது.

அவ்வகையில் மஇகா இத்தொகுதியில் முழு மூச்சாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மஇகா கிளைகள் உருவாக்கப்பட்டு இந்திய சமுதாயத்தில் தலைவர்கள் உருவாக்கப்படும் வேளையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இளைஞர்களும் விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கில் புதிய மஇகா கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இங்கு புதிய 70  மஇகா கிளைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக கூறிய டதோ முருகையா, இந்தியர்கள் நம்பிக்கைக்குரிய கட்சியாக மஇகா மீண்டும் உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் அதிகமான இளைஞர்கள் மஇகாவில் உறுப்பியம் பெற்று வருகின்றனர். அது மட்டுமல்லாது பிற கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் மஇகாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

இது தெலுக் இந்தான் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று 70 புதிய மஇகா கிளைகளின் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போது மஇகாவின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றி வரும் டத்தோ முருகையா இவ்வாறு குறிப்பிட்டார்.

Thursday 20 August 2020

இந்திய தொழில் முனைவர்களை அடையாளம் காணும் மைக்கியின் 'ராக்கான் மைக்ரோ' திட்டம்

ரா.தங்கமணி


கோலாலம்பூர்
மலேசிய இந்திய சமூகத்தில் இளம் வர்த்தகர்களை அடையாளம் காணும் நோக்கில் மலேசிய இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்கங்கள் சம்மேளனத்தின் (மைக்கி) 'ராக்கான் மைக்ரோ' எனும் திட்டத்ததின் கீழ் 2,400 இளம் வர்த்தகர்களை உருவாக்கும் முயற்சியில் களம் கண்டுள்ளது.

இந்திய சமுதாயத்தின் வர்த்தகத்தின் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் முறையான வழிகாட்டுதல்கள், அணுகுமுறைகள் இல்லாத காரணத்தினாலேயே பெரும்பாலானோர் அதில் பின் தங்கி விடுகின்றனர் அல்லது தோல்வி அடைகின்றனர்.

இத்தகைய இளைஞர்களை உருவாக்கும் பொருட்டு ராக்கான் மைக்ரோ திட்டத்தின்  கீழ் 2,400  இளைஞர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று மைக்கி தலைவர்  டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த 2,400 இளைஞர்கள் வர்த்தகத் துறையில் சிறந்தவர்களாக உருவாக்கும் நடவடிக்கை துரிதப்படுத்துவதோடு இது நகர்ப்புறம் மட்டுமல்லாது உட்புறப்பகுதிகளில் உள்ள இளம் வர்த்தகர்களை உருவாக்கும் முயற்சியாக 60 இடங்களில் இந்நிகழ்வு தொடரப்படும்  என்று ராக்கான் மைக்ரோ திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்நடவடிக்கை மித்ரா, தெக்குன் உட்பட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களின் பங்களிப்புடன் நடத்தப்படும் நிலையில் இது இந்திய இளைஞர்களுக்கு வர்த்தகத் துறையில் ஈடுபவதற்கு  தூண்டுகோலாக அமைந்திடும் என்று அவர் சொன்னார்.
சிறு, நடுத்தர நிறுவனத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் ஹுசேய்ன் கலந்து கொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தெக்குன், ஏகேபிகே உட்பட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

Wednesday 12 August 2020

தமிழ்த் திரையுலகின் நவீனத்துவவாதி கமல்

61 ஆன்டுகளை கடந்த தமிழ்த் திரையுலகின் நவீனத்துவவாதி கமல்.


Tuesday 11 August 2020

இந்தியர்களுக்கான உரிமையை நிலைநிறுத்தவே பாஸ் ஆதரவு மன்றத்தில் இணைந்தோம்- அருள்லோகா

ரா.தங்கமணி

ஈப்போ-
பாஸ் ஆதரவு மன்றத்தில் (டிஎச்பிபி) இணைந்துள்ளது அது இந்தியர்களுக்கு எதிர்ப்பான ஒரஉ நடவடிக்கை அல்ல. மாறாக இஸ்லாமிய கட்சிகளிடமிருந்து இந்தியர்களுக்கு எத்தகைய அனுகூலங்கள், சலுகைகள் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்திலேயே பாஸ் ஆதரவு மன்றத்தில் இணைந்துள்ளதாக பேரா மாநில டிஎச்பிபி இளைஞர் பிரிவு துணைத் தலைவர் அருள்லோகா தெரிவித்தார்.

இன்று மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அம்னோ, பெர்சத்துக்கு அடுத்து பாஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.

பாஸ் கட்சி இஸ்லாமியர்களை சார்ந்த கட்சியாக இருந்தாலும் இஸ்லாம் அல்லோதோரின் நிலைப்பாட்டை உணர்வதற்கு பாஸ் ஆதரவு மன்றம் தோற்றுவிக்கப்பட்டு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமியர் கட்சி என்பதற்காக பாஸ் கட்சியை ஒதுக்குவதால் அதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற அனுகூலங்களும் சலுகைகளும் நாம் இழக்க நேரிடலாம்.

இன்று மத்திய அரசாங்கத்திலும் பல மாநில அரசாங்கங்களிலும் பாஸ் கட்சி அங்கத்துவம் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இஸ்லாம் அல்லாதோருக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு இக்கட்சியின்  மூலம் எவ்வாறு சலுகைகளை பெற்று கொடுப்பது என்பதை நோக்கமாகக் கொண்டே பாஸ் ஆதரவு மன்றத்தில் இணைந்து சேவையாற்றி வருவதாக அருள்லோகா தெரிவித்தார்.

வரும் தேர்தலில் பாஸ் ஆதரவு மன்றத்தின் மூலம் சில சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் இஸ்லாம் அல்லாதோருக்கு ஒதுக்கப்படும் நிலையில்  அதன் வழி இஸ்லாம் அல்லாதோரும் பயனடையும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம். அதனாலேயே பாஸ் ஆதரவு மன்றத்தில் ஈடுபட்டு செயலாற்றி கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னார்.

Monday 10 August 2020

39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு மூன்றாம், நான்காம் கட்ட மானியங்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இன்று வழங்கினார்.

வெ.345,000 மதிப்புடைய காசோலைகள் 39 ஆலய பிரதிநிதிகளிடம் வழங்கிய கணபதிராவ், ஆலய கோபுரங்கள் எவ்வளவு உயரமாக உள்ளது என்பதற்கு போட்டியிடுவதை காட்டிலும் இறை நம்பிக்கையை வளர்ப்பதிலும் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் ஆலயங்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின்போது பல்வேறு ஆலயங்கள் வேலையின்றி தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முதன்மையாக இருந்தன. இத்தகைய நடவடிக்கைகள் ஆலயங்களில்  தொடரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் ஆலயங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சிலாங்கூரில் உள்ள ஆலயங்களுக்கு வழங்கப்பட வேண்டியது எனது கடமையாகும்.  எந்தவொரு ஆலயமும் அதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது எனும் அடிப்படையில் சில ஆலயங்களுக்கு நிதி கூடுதலாகவும் சில ஆலயங்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டிருக்கலாம்.

அதற்காக கூடுதலாக நிதி வழங்கப்பட்ட ஆலயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிற ஆலயங்களை புறந்தள்ளுகிறோம் என்று அர்த்தம் ஆகாது.

அனைத்து ஆலயங்களுக்கு மானியம் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் ஆண்டுக்கு ஒதுக்கப்படும் 1.7 மில்லியன் வெள்ளி தொகையை முறையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று இன்று சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.


Thursday 6 August 2020

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கைது

கோலாலம்பூர்-
பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்ததில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) இன்று கைது செய்யப்பட்டார்.

இன்றிரவு 9.10 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்த லிம் குவான் எங் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

வெ.6.3 பில்லியன் மதிப்புடைய பினாங்கு கடலடி சுரங்கம் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி அண்மைய காலமாக விசாரணையை முடுக்கி விட்டிருந்தது.

எம்ஏசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பினாங்கு முன்னாள் முதல்வருமான லிம், நாளை (ஆக.7) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday 3 August 2020

தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவர் நானா? டத்தோ அம்பிகா மறுப்பு

கோலாலம்பூர்-
தேர்தல் ஆணையத்தின் புதியத் தலைவராக தாம் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் வதந்தி என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.அம்பிகா தெரிவித்தார்.
இத்தகைய கூற்றில் உண்மையில்லை என்றார் அவர்.

எஸ்பிஆர்-இன் புதிய தலைவராக டத்தோ அம்பிகா பதவியேற்கவுள்ளதாக பெர்காசா அமைப்பின் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எஸ்பிஆர்-இன் தலைவராக பதவி வகித்த டத்தோ அஸிஸான் அஸார் ஹருண் அப்பதவியிலிருந்து விலகி ஜூலை 13ஆம் தேதி மக்களவை சபாநாகராக பதவியேற்றுக் கொண்டார்.